
அத்தியாயம் 23
மறுநாள், இனியன் வைஷுவை அலுவலகத்தில் விட்டு விட்டு, அவன் பரிதி கொடுத்த விலாசத்தில் தங்கராஜ் என்பவனை தேடிச் சென்றான்.
பரிதியோ, அவனுக்கு விபத்து ஏற்படும் போது, முதன் முதலில் சேர்த்த மருத்துவமனைக்குச் சென்றான்.
எப்படியும் தன்னை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவளைப் பற்றிய தகவலை தெரிவித்து இருப்பாள் என்ற ஒரு அனுமானத்துடன் அங்கே சென்றான்.
மருத்துவமனையை அடைந்ததும், சில நினைவுகள் அவன் கண் முன் வந்து போயின..
அதை எல்லாம் எப்பொழுதும் போல தன் நெஞ்சுக்குள் பொதித்துக் கொண்டு, உள்ளே வரவேற்பு பெண்ணிடன் சென்று விசாரிக்க, அவரோ, ” சார் அந்த டீடெயில்ஸ் எல்லாம் அட்மினிஸ்டேரேஷன் ஆபீஸ்ல தான் போய் கேக்கணும்..” என்றாள்.
“எப்படி போகணும்..” என்று அவன் அங்கு செல்வதற்கான வழியைக் கேட்க,
“கீழ அண்டர் கிரௌண்ட் ஃப்ளோர்ல இருக்கு சார்..” என்றாள்.
அவனும் அட்மினிஸ்டேரேஷன் பிரிவுக்கு சென்று விசாரிக்க, “எப்போ நடந்தது..” என்று கேட்டார்கள்.
“அது ஒரு த்ரீ மன்த்ஸ் பேக்..” என்றான்.
“சார்.. நீங்க MRD(Medical Record Department) டிபார்ட்மென்ட் போங்க சார்.. அங்க தான் நீங்க கேக்குற டீடெயில்ஸ் கிடைக்கும்..” என்று கூறிட,
“எங்க இருக்கு..” என்று கேட்க,
“நேரா போய் லெப்ட்ல பாருங்க. MRD டிபார்ட்மென்ட்னு போர்டு வச்சி இருப்பாங்க..” என்று கூறிட,
“ஓகே. தேங்க்யூ .” கூறி விட்டு அவர் சொன்ன அந்த பிரிவுக்குச் சென்றிட,
அங்கு இருக்கும் மருத்துவப் பதிவாளர் பரிதியிடம்,”உக்காருங்க சார்..” என்று தன் எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னவர், “சொல்லுங்க சார்.. என்ன டீடெயில்ஸ் வேணும் உங்களுக்கு.. ” என்று கேட்டார்.
“சார்.. இங்க ஆக்சிடண்ட் ஆகி கூட்டிட்டு வரவங்க டீடெயில்ஸை உங்க ரெபரென்ஸ்க்கு நீங்க வாங்கி வச்சிப்பீங்களா??” என்று முதலில் தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொண்ட பிறகு தன்னைப் பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்து இந்த கேள்வியைக் கேட்டான்.
“ஆமா சார்.. ஆக்சிடண்ட் ஆனவங்கள யாரு கூட்டிட்டு வந்தாலும், அது அவங்களுக்கு தொடர்பு இல்லாத பெர்சனா கூட இருக்கலாம். முதல்ல நாங்க அட்மிட் பண்றதுக்காக அவங்க டீடெயில்ஸ் தான் வாங்கிப்போம். அதுக்கு அப்புறம் பேசன்ட் ஓட ரிலேஷன் வந்த பிறகு அவங்களோட நேம் அண்ட் ஒரிஜினல் அட்ரஸ் எல்லாம் நாங்க சேவ் பண்ணிப்போம்” என்றார் அவர்.
“ஓகே சார்.. அப்போ ஒரு மூணு மாசம் முன்னாடி எனக்கு ஆக்சிடண்ட் நடந்தது. அப்போ இங்க தான் என்னை அட்மிட் பண்ணி இருந்தாங்க. என்னை அட்மிட் பண்ணவங்களோட நேம் அண்ட் அட்ரஸ் கிடைக்குமா சார்..” என்று கேட்டான்.
“அதை எதுக்கு நீங்க தெரிஞ்சிக்கனும். நீங்க யாரு..” என்று அவர் சந்தேகத்துடன் மறு கேள்வி கேட்டார்.
பெயர் மற்றும் முகவரி கேட்டவுடன் அவ்வளவு சீக்கிரம் யாரும் எடுத்துக் கொடுப்பதில்லை.
அதன் மூலம் அவர்களுக்கு எதுவும் பிரச்சனை வந்து விடக் கூடாது என்று தான் நினைப்பர்.
பரிதியோ, ” சார்.. அவங்க என்னோட உயிரை காப்பாத்தி இருக்காங்க. அதுக்காக நான் அவங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன். அதான் சார்.” என்றான்.
“ஓகே.. நீங்க என்னவா இருக்கீங்க..” என்று மீண்டும் அடுத்த கேள்வியை கேட்டார் தனக்கு திருப்தி ஏற்படும் வரை.
அவன் தனது வாலட்டில் இருந்து அவனது விசிட்டிங் கார்டு எடுத்து அவரிடம் காண்பித்து, “இது என்னோட கம்பெனி கார்டு. இங்க இருக்குற நம்பருக்கு கால் பண்ணி கேட்டுப்பாருங்க. உங்க டவுட்ஸ் கிளியர் ஆகிடும்..” என்றான்.
“ஓ.. அப்போ இளா லெதர் கம்பெனி உங்களோடது தானா..” என்று அந்த ஆபீசர் கேட்க,
“ஆமா..” என்றான் பரிதி.
“சார்.. உங்க சந்தேகம் கிளியர் ஆகிடுச்சா.. இல்லை இன்னும் இருக்கா..” என்று அவன் சலிப்புடன் கேட்டிட,
“அதுகில்லை சார். கேட்டவுடனே நாங்க அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் கொடுத்துற கூடாது. யாரு என்னனு விசாரிச்சிட்டு தான் கொடுக்கணும். அது தான் ஹாஸ்பிடல் ரூல்ஸ்..” என்றார் அந்த மெடிக்கல் ஆபீசர்.
“ஓகே சார்.. இப்போ எனக்கு பார்த்து சொல்லுங்க..” என்று மீண்டும். அவரிடம் தனக்குறியதை கேட்க,
அவரும், ” கரெக்ட் ஆன டேட் தெரியுமா.. ” என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்தவன், “ஜூலை 5th சார்..” என்றான்.
கணினியில் அந்த தேதி மற்றும் மாதத்தை கொடுக்க, அதுவோ சில நொடிகள் எடுத்துக் கொண்டது.
அன்றைய தேதியில் நான்கு ஆக்சிடண்ட் வழக்குகள் வந்து இருக்க, “அன்னைக்கு தேதிக்கு நாலு கேஸ் காட்டுது.. நீங்க எப்போ அட்மிட் ஆனீங்கனு டைம் நியாபகம் இருக்கா..” என்று கேட்டார்.
“ஈவினிங் நாலு மணிக்கு மேல தான் சார்..” என்றான்.
“நாலு மணிக்கு மேல ரெண்டு கேஸ் இருக்கு. ஒன்னு லேடீஸ் நேம் இருக்கு. இன்னொன்னு இளம்பரிதினு இருக்கு.” என்று அவர் கணினியை பார்த்துக் கொண்டே அவனின் பெயரை வாசித்திட,
“ஆமா சார்.. அது நான் தான்..” என்றான் அவன்.
“ஓகே.. இருங்க ஒரு நிமிஷம்..” என்றவர் அவனது பெயரை கிளக் செய்ய அவனது விவரகளை காட்ட சில வினாடிகள் எடுத்துக் கொண்டு, பின் திரையில் காட்டியது.
“உங்க டீடெயில்ஸ் எல்லாம் வந்துருச்சு. ” என்றவர், அவனது தற்போதைய முகவரியை கூறி சரியா என்று கேட்டுக் கொண்டார்.
“ஆமா சார்.. இது இப்போ எங்களோட கரண்ட் அட்ரஸ் தான்..” என்றான்.
கணினியின் திரையில் நகர்த்திக் கொண்டு கீழே பார்த்துக் கொண்டே வர, அவனை அங்கு அனுமதித்த நபரின் விவரங்கள் வந்து சேர்ந்தது.
“ம்ம்ம்.. உங்கள அட்மிட் பண்ணவங்க பொண்ணா..” என்று தெளிவு படுத்துக் கொள்ள கேட்க,
“ஆமா சார்.. ” என்றான் ஆர்வம் மிகுதியில்.
“அவங்க பேரு நிரஞ்சனா.. அவங்க அட்ரஸ் அண்ட் போன் நம்பர்..” என்று ஒரு வெற்றுத் தாளில் எழுதிக் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்தவனின் முகத்தில் எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சி..
“ரொம்ப தேங்க்ஸ் சார்.. தேங்க்யூ சோ மச். ” என்று முகம் முழுக்க புன்னகையுடன் அவரிடம் தன் நன்றியை கூறி விட்டு, வெளியில் வந்தவனுக்கோ சத்தம் போட்டு கத்த வேண்டும் போல இருந்தது.
இடம் கருதி தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன், அவளது பெயர் மற்றும் முகவரியை தாங்கிய காகிதத்தை எடுத்துப் பார்க்க, அதில் அவளின் பெயரை, தன் நாவால் உச்சரித்து, தன் கையால் தடவிக் கொடுத்தான்.
ஏனோ அவளையே தொட்டது போல அவனின் உடலில் மெல்லிய சிலிர்ப்பு.
அதில் இருந்த முகவரியைப் பார்த்தவன், நேராக அங்கு தான் தனது காரைச் செலுத்தினான்.
கிட்ட தட்ட ஒரு மணி நேர பயணம்.
அவள் இருக்கும் பகுதி, சாதாரண நடுத்தர மக்கள் வாழும் பகுதி.
இப்பொழுது தான் இது போன்ற இடத்திற்கு முதன் முதலாக வருகின்றான்.
பெரும்பாலும் ஓட்டு வீடுகளே இருக்க, ஒரு சில வீடுகள் மட்டும் காரை வீடுகளாக இருந்தன.
நிரஞ்சனாவின் வீட்டு எண் மற்றும் தெருப் பெயரை எங்கு இருக்கின்றது என்று கேட்டறிந்து, காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு அங்கு நடந்தே சென்றான்.
உள்ளுக்குள் ஏற்படும் ஆர்வத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை.
அவள் தன்னைப் பார்த்தால் , அவளின் எதிர்வினை எப்படி இருக்கும்.
அவளுக்கு தன்னை நியாபகம் இருக்குமா..
அவர்கள் வீட்டில் அவள் மட்டும் தான் இருப்பாளா.. அல்லது அவர்களின் பெற்றோர்களும் இருப்பார்களா..
இப்படி பல வித யோசனையுடன் நடந்து வர, அவளின் வீடும் வந்து சேர்ந்தது.
ஆனால் வீட்டை அடைந்ததும், அவனின் எண்ணங்களுக்கு எல்லாம் வெடி வைப்பது போல, அவளின் வீடு வெளியே பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்து.
மிகுந்த ஆர்வத்துடன் வந்த பரிதிக்கு சற்று ஏமாற்றம் தான் என்றாலும் அவளின் விலாசத்தை கண்டு பிடித்ததே பெரிய சாதனை தான் என்று அப்படி நினைத்துக்கொண்டு தன்னை தேற்றிக் கொண்டான்.
நிரஞ்சனாவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி, இவன் நிற்பதைப் பார்த்து, ” என்ன தம்பி.. யாரு வேணும்?? ” என்று கேட்டிட,
“அக்கா…இங்க நிரஞ்சனா னு..” என்று இழுத்திட,
“ஆமா.. இது நிரஞ்சனா வீடு தான்..” என்றார்.
“அவங்க இல்லையா.. எங்க போய் இருக்காங்க. ” என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்க,
“அந்தப் பொண்ணு வேலைக்கு போய் இருக்கு ப்பா.. அவ தம்பி காலேஜ் போய் இருக்கான். ரெண்டு பேரும் சாய்ந்திரம் தான் வருவாங்க..” என்று கூறினார்.
“சரிக்கா.. அப்புறம் வீட்டுல பெரியவங்க யாரும் இல்லையா..” என்று தயக்கத்துடன் தான் கேட்டான்.
அந்தப் பெண்ணோ, ” நீங்க யாரு.. எதுக்கு இது எல்லாம் கேக்குறீங்க. ” என்று அதட்டும் தொணியில் கேட்டார்.
“ஐயோ அக்கா. நாங்க அவங்களுக்கு தூரத்து சொந்தம்.. எங்களுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை. ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து. அதான் அவங்கள பத்திக் கேட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..” என்று சொல்லிட,
அவரோ பாதி நம்பியும் பாதி நம்பாமலும் இருந்தார்.
“ஐயோ.. அக்கா நம்புங்க..” என்று மீண்டும் சொல்லிட,
“ம்ம்ம் சரிப்பா..” என்றவர், ” அந்த பொண்ணும் அவ தம்பியும் மட்டும் தான். அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் காலமாகிட்டாங்க. ” என்றார்.
“ஓ.. ” என்று சுரத்தே இல்லாமல் சொல்லியவனின் நினைவில் வந்து போனது, அவளின் தாய் தந்தையின் நினைவாக தான் அவள் இந்த சங்கிலியை அணிந்து இருக்க வேண்டுமென்று.
நெற்றியை நீவியவன், “சரிங்க க்கா.. அப்போ நான் கிளம்புறேன். நிரஞ்சனா வந்தா, நான் வந்துட்டு போனதா சொல்லுங்க. அப்புறம் இந்த கார்டு கொடுத்து, இந்த நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க..” என்று
தன் நம்பரை மட்டும் மார்க் செய்து காண்பித்து கொடுத்து விட்டு கிளம்பும் தருவாயில், “ஹான்.. தம்பி.. உங்க பேரு சொல்லவே இல்லையே..” என்று அந்த பெண்மணி கேட்க,
புன்னகையுடன், “இளம்பரிதி னு சொல்லுங்க..” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
அவளது அலைபேசி எண் தன்னிடம் இருந்தாலும, அவளது பொருள் தன்னிடம் இருப்பதால், அவள் கண்டிப்பாக தனக்கு, அவளாகவே அழைப்பாள் என்று அவளின் அழைப்பிற்காக காத்து இருக்க ஆரம்பித்தான்.
அவளது அலைபேசி என்னை தனது அலைபேசியில் “மை சோல்(my soul) 💗” என்று பதிவு செய்து அதன் ஓரத்தில் ஒரு இதயத்தையும் சேர்த்து இருந்தான்.
அங்கிருந்து கிளம்பி அலுவலகம் புறப்பட, இனியனுக்கு அழைத்து, “என்னடா ஆச்சு.. ஆள பிடிச்சிட்டியா..” என்று பரிதி கேட்டிட,
“பிடிச்சாச்சு. ஆளு என்னை பார்த்ததும் எஸ்கேப் ஆக ஆரம்பிச்சான். பிடிச்சி நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்து இருக்கேன்..” என்று கூறிட,
“ம்ம். நான் அங்க வரேன்..” என்று வைத்து விட்டான்.
அது ஒரு பழைய பேக்டரி. மங்களம் அவரின் கணவர், முதன் முதலில் இங்கு தான் சிறியதாக தொடங்கினார்.
அதன் பின் தொழில் பெருக பெருக, போதிய இடமின்மை காரணமாக இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றினார்.
அதன் பிறகு இந்த இடத்தில் எதுவும் செய்யவில்லை எனினும் அவ்வப்போது பராமரிப்பு மட்டும் பார்த்துக் கொண்டனர்.
இப்பொழுது அங்கு தான் அவனை இழுத்து வந்திருந்தான் இனியன்.
சிறிது நேரத்தில் பரிதியும் வந்து சேர, இனியனின் அருகில் அமர்ந்தவன், தங்கராஜைப் பார்த்து, “சொல்லு.. யாரு உன்ன இங்க அனுப்பி வச்சது. ” என்று மிரட்டும் தொணியில் கேட்க,
“இல்லை சார்.. யாரும் என்னை அனுப்பி வைக்கல..” என்று பயந்தவாரு சொன்னான்.
“ஹான்.. அப்புறம்..” என்று கதை கேட்பது போல அவன் கேட்க,
“சார்..” என்று திக்கித் திணறி சொல்ல,
“ம்ம். அடுத்து என்ன கதை சொல்லணுமோ சொல்லு. நான் கேக்குறேன். ஆனால் எல்லாம் சொல்லி முடிச்சிட்டு கடைசியா யாரு அனுப்பி வச்சதுனு சொல்லிரு. சரியா..” என்று சாதாரணமாக கூறினாலும் நீ கூறியே ஆக வேண்டும் என்ற கட்டளையும் சேர்ந்தே இருந்தது.
தங்கராஜ் என்பவனோ, எச்சிலைக் கூட்டி விழுங்கினான் அதிக பயத்தில்.
“இனியா..”என்றிட, அண்ணன் சொல்லை தட்டாத தம்பியோ, தங்கராஜ் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.
அவன் குத்திய குத்தலில், மூக்கில் இருந்தும் வாயில இருந்தும் ரத்தம் வழிந்தது.
“சார்.. சொல்லிடுறேன் சார்.. ஒன்னும் பண்ணாதீங்க..” என்று வாயில ரத்தம் வடியக் கூறினான்.
இனியனைப் பார்த்து தலை அசைக்க, அவனோ தனது அலைபேசியில் காணொளி பதிவு செய்வதற்கான பொத்தானை அழுத்தினான்.
“சார்.. உங்க கம்பெனில ஆளு எடுக்கிறாங்கனு தெரிஞ்சி என்ன கூப்பிட்டு பேசுனாங்க சார்.. நான் முதல்ல ஒதுக்கல. அதுக்கு அப்புறம் பணம் அதிகமா கொடுக்கிறேன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் தான் நான் ஒத்துக்கிட்டேன். உங்க ப்ரோடக்ட்ல சேர்க்க வேண்டிய பொருளையும் அவங்க தான் கொடுத்தாங்க. அது என்னனு கூட தெரியாது. ” என்றான்.
“சரி யாரு உன்ன கூப்பிட்டு வச்சி பேசுனது. ” என்று பரிதி கேட்க,
“அவங்க பேரு எனக்கு தெரியாது சார். ரெண்டு பேரு இருந்தாங்க.. ஒருத்தர் உங்கள போல வயசு கம்மி. இன்னொருத்தர் வயசானவர்..” என்றான் அவன்.
“ஓஹோ..” என்ற பரிதி இனியனிடம், “ஒரு வேளை அப்பாவும் பையனும் சேந்து பண்ணிருப்பாங்களோ..” என்று சந்தேகமாய் கேட்டிட,
“தெரியலையே..” என்றான் இனியன்.
பரிதி அவனுடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து “இவங்களா..” என்று தங்கராஜ்ஜிடம் கேட்டிட,
“ஆமா. ஆனா இவரு யாருனு தெரியலயே..” என்றான் வயதான ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து.
“நல்லா பார்த்து சொல்லு.. இவரு தானா னு. ” என்று பரிதி மீண்டும் அழுத்திக் கேட்டிட,
“நல்லா தெரியும் சார். இவரு இல்லை.” என்றான் தங்கராஜ்.
“ம்ம்ம்..” என்று கூறிய பரிதியும் சரி இனியனும் சரி மிகுந்த யோசனைக்குச் சென்றனர்.
“இனியா.. இவனை அனுப்பி வச்சிரு..” என்று கூறிட, இனியனோ, “அண்ணா.. இவனை போலீஸ்ல பிடிச்சி கொடுக்க வேண்டாமா..” என்று கேட்டான்.
“அது எல்லாம் வேண்டாம்.” என்று இனியனிடம் கூறி விட்டு, தங்கராஜ்ஜிடம், “இங்க பாரு, நீ பேசுன வீடியோ எங்ககிட்ட தான் இருக்கு. இனிமே நீ ஏதாவது தப்பு பண்ண, இதை வச்சி உன்ன உள்ள தூக்கி போட்டுருவேன். உன் குடும்பத்தை பத்தி விசாரிச்சேன். ரெண்டு பொம்பள பிள்ளைங்களாமே உனக்கு..” என்று அவனிடம் கேட்டிட,
“ஆ.. ஆமா சார்..” என்றான் தங்கராஜ்.
“அவங்களுக்காக தான் உன்ன சும்மா விடுறேன். இல்லை நடக்குறதே வேற..” என்று அவனை எச்சரித்து அனுப்பி வைத்தான் பரிதி.
அவன் சென்றதும் அண்ணனும் தம்பியும் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகினர்.
“அண்ணா.. அந்த சஞ்சய் கூட இருந்தது யாருனு தெரியலையே.. யாரா இருக்கும்..” என்று அவன் யோசனையுடன் கேட்க,
“நம்ம கண்ணுக்கு தெரியாத யாரோ ஒரு எதிரி அவன் கூட கூட்டு சேந்து இருக்காங்க.. ரெண்டு பேரும் சேந்து தான் இது எல்லாம் பண்றாங்க..” என்றான் பரிதி தீர்க்கமாக..
நித்தமும் வருவாள்…
