
காதல் – 4
தமக்கையின் மூலம் விசயமதை அறிந்த விமலன் அதிர்ந்து விட்டான். “என்னக்கா சொல்ற.?” என்றவனுக்கு உண்டு கொண்டிருந்த உணவும் உள்ளே செல்ல மறுத்து அப்படியே தொண்டையில் நின்று விட்டது.
“உண்மையா தான்டா சொல்றேன்.. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.. இந்த அம்மா கேட்கவே இல்ல.. இந்த சம்பந்தத்தை விட்டா தமயந்திக்குக் கல்யாணமே ஆகாதுனு அவங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிருச்சு.. அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா எனக்கும் சந்தோசம் தான்..
ஆனா அளவுக்கு மீறி ஆசைப்பட கூடாதுல.? நம்ம இருக்கற நிலைமைக்கு இதெல்லாம் ரொம்பவே அதிகபட்சம்டா” என்று அப்போதே தம்பியிடம் விசயத்தைக் கூறினாள் தாமரை.
இவளுக்கு மனது கேட்கவில்லை. ஒவ்வொரு முறையும் உடன்பிறந்தவன் கஷ்டப்படுவதைக் கண்ணார கண்டு கண்ணீர் சிந்துவது மட்டும் இவளுக்கு வழக்கமாக போயிற்று. கணவனையும் மாமியாரையும் மீறி தம்பிக்கு உதவிட இவளால் முடியவில்லை.
அவர்களை எதிர்த்து ஏதாவது செய்தால் இவள் வாழா வெட்டியாக பிறந்தகத்திற்கு தான் வந்து விடுவாள். இதற்கு புகுந்தகத்தில் இருப்பதே உடன்பிறந்தவனுக்கு நான் செய்யும் நல்ல காரியம் என்பதை உணர்ந்து அமைதியாக இருக்கிறாள்.
“அக்கா என்னால முடியல.. முதல்லயே பாப்பா காது குத்துக்கு வாங்குன பணத்துல பாதியை உடனே குடுக்கணும்னு நான் நாயாபேயா அலைஞ்சுட்டு இருக்கேன்.. இதுல அம்மா இப்படியொரு குண்டைத் தூக்கி என் தலைல போட பார்க்குது.. உண்மையா என்னால முடியலக்கா” என்றான் வருத்தத்துடன்.
தாமரையும் “எனக்கும் என்ன சொல்றதுனு தெரியல தம்பி.. உனக்கு உதவணும்னு தான் நான் நினைக்கறேன்.. ஆனா அது முடியாது.. அம்மாவும் உன்னைய புரிஞ்சுக்காம இப்படி பண்ணிட்டு இருக்குது.. எனக்கு என்ன பண்றதுனு தெரியல.. ஆனா இன்னைக்கு வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லவங்களா தான் இருக்காங்க..
நம்ம தமயந்தி கிட்டயும் குறை இருக்கு.. அதனால அவங்க கேட்கற வரதட்சணையும் எனக்கு தப்பா தெரியலடா.. அப்படியும் யோசிக்க தோணுது.. இப்படியும் யோசிக்க தோணுது.. எனக்கே மண்டை குழம்பி போய் கிடக்கு” என்று அவளின் குழப்பத்தை அவனின் தலையிலும் ஏற்றினாள்.
“நான் வீட்டுக்கு வர்றேன்.. அப்பறம் என்ன ஏதுனு பேசிக்கலாம்..” என்று விட்டு போனை வைத்தவன் அப்படியே உணவையும் மூடி வைத்தான். அதீத வேலைக் காரணமாக மதியம் உணவு உண்ண நேரமில்லாமல் இப்போது தான் உணவுண்ண அமர்ந்தான். சரியாக தாமரையிடம் இருந்து அழைப்பும் வந்து அவனின் பசியை மறக்கடித்து விட்டது.
பிரச்சினை என்றால் முதலில் உணவைத் தான் உண்பான். இன்று ஏனோ அந்த உணவும் அவனுக்கு கசப்பாக மாறி விட்டிருந்தது. இந்த உணவை உண்பதால் தான் இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணமும் அவனுள் எழுந்து அந்த உணவை வெறுக்கவும் வைத்தது. அவனுள் ஆழிப்பேரலையாக சுழன்றடித்த அலைகள் ஏராளம். இந்த அலைகள் அனைத்தும் எப்போதும் அடங்கும் என்றே புரியவில்லை.
தலையில் கை வைத்து அமர்ந்தவன் அப்படியே இருக்க, இருவருக்குமான காஃபியை வாங்கிக் கொண்டு அவனைத் தேடி வந்தாள் தேனு.
“விமலன் இந்தாங்க” என்று அவனின் முன்பு காஃபியை நீட்டியவள் அவனுக்கு எதிர்திசையில் அமர்ந்தாள். “இது எதுக்கு தேனு.?” என்று அவன் சலித்துக் கொண்டாலும் மறுக்காமல் கையில் எடுத்துக் கொண்டாள். அவனின் தலைப் பாரத்திற்கு அந்த சூடான காஃபி இதமாக அவனின் தொண்டையை நனைத்து உள்ளே இறங்கியது.
பாரமாக இருந்த தலையும் கொஞ்சம் இலகுவாக மாறிட, “இப்ப ஓக்கேவா.?” என்ற வினவிய பெண்ணவளிடம் சிரிப்பையே பதிலாக தந்தான் ஆடவன்.
“என்ன விமலன் என்ன ஆச்சு.? மறுபடியும் ஏதாவது பிரச்சனையா.? இந்தளவுக்கு சோர்ந்து போய் உட்கார மாட்டிங்களே.?” என்று கேட்டிட, இவளிடம் சொல்லலாமா.? வேணாமா.? என்ற யோசனையே அவனின் தலைக்குள் ஓடியது.
அவளே தன்னிடம் பணத்தைத் தந்து விட்டு பெற்றவர்களிடம் திட்டுக்களை வாங்கிக் கொண்டு இருக்கிறாள். இதில் என் பிரச்சனையையும் அவளின் தலையில் ஏற்ற வேண்டுமா.? என்று நினைத்தான்.
அவனின் முகத்தையே பார்த்தவள் “இவகிட்ட ஏன் சொல்லணும்னு நினைக்கறீங்களா.?” என்று வினவிட, “ஹேய் தேனு நான் ஏன் அப்படி நினைக்க போறேன்.. என் பிரச்சனையையும் உன் தலைல ஏத்தி விடணுமானு தான் யோசிச்சேன்.. மத்தபடி எதுவும் இல்ல.. இப்படி நினைச்சா நான் எப்படி மனுசனா இருக்க முடியும்.?” என்றான்.
“அப்பறம் என்னனு சொல்றதுக்கு என்னங்க.?” என்று விடாமல் அவனின் கவலைக்கான காரணத்தைக் கேட்டறிய முயன்றாள். அவனை அப்படியே விட்டுச் செல்ல இவளுக்கு மனது வரவில்லை. எப்போதும் அவனின் கவலைகளை அவனுள்ளே புதைத்துக் கொண்டு இறுகி போய் விடுவான்.
இப்போதாவது என்னால முடியலக்கா என்று வாய்விட்டு அவனின் கவலைகளைக் கூறி விடுகிறான். முதலில் எல்லாம் இவன் இப்படி இல்லை.. அதனால் தான் அவனைத் தனியே விடாமல் தேனுவும் அவனைத் தேடி வந்து கேள்விகளால் துளைத்தெடுப்பதும்.
“சின்ன அக்காக்கு கல்யாணம் முடிவாகிருச்சு தேனு” என்றிட, “ஹேய் ரொம்ப சந்தோஷமான விசயம் தானேங்க.? இதுக்குப் போய் ஏன் இவ்ளோ சோகமா இருக்கீங்க.?” என்று கேட்டாள் புரியாமல்.
அன்னை செய்து வைத்திருக்கும் காரியத்தைத் திக்கி திணறி எப்படியோ அவளிடம் உரைத்து விட்டாள். அவள் என்ன நினைப்பாள்.? என்ற பயமும் அவனை ஆட்டிப் படைத்தது.
அவளிடம் வாங்கிய பணத்தை எப்படியாவது திருப்பி தருவதாக கூறி விட்டு இப்போது இப்படி கூறினால் அவளின் பதில் மொழி எவ்வாறு இருக்கும்.? என்று பயந்து போனான்.
சிறிது நேரம் அமைதியைக் கடைபிடித்து தேனு அமர்ந்திருக்க, “சாரி தேனு.. எனக்கே என்ன பண்றதுனு தெரியல.. அதுக்குத் தான் இப்படி உட்கார்ந்துட்டேன்.. எப்படியாவது உன்கிட்ட வாங்குன பணத்தைக் குடுத்தருவேன்” என்று வேகமாக கூறினான்.
ஆனால் தேனுவோ “அது இருக்கட்டும் விமலன்.. என் அக்கா கல்யாணத்துக்கு இரண்டு லட்சம் மட்டும் தான் பத்தல.. எப்படியாவது புரட்டிக்கலாம்.. நம்ம கூட வேலைச் செய்யற லதா அக்கா கிட்ட கேட்டுருக்கேன்.. அந்த அக்கா கடன் வாங்கித் தர்றேனு சொல்லிருக்காங்க..
நான் அந்த பணத்தை வாங்கி அப்பாகிட்ட குடுத்துக்கறேன்.. அதுல ஒன்னும் பிரச்சனை இல்லை.. ஆனா நீங்க என்ன பண்ண போறீங்க.? முதல்லயே நிறையா பக்கம் கடன் வாங்கி வெச்சுருக்கீங்க.. இதுல இதுவுமா.?” என்று தன் திருப்தியின்மையை வெளியிட்டாள்.
இவன் இப்படியே அன்னைக்காக கடன் வாங்கிக் கொண்டு இருந்தால் இவளின் வீட்டில் எப்படி திருமணத்திற்குச் சம்மதிப்பார்கள்.? எதிர்காலத்திற்காக இவனிடம் சிறிது சேமிப்பு வேண்டாமா.?
பெண்ணவளின் வார்த்தையில் இருந்த திருப்தியின்மையை உணர்ந்துக் கொண்டு விமலனும் “ஏதாவது பண்ணித் தான் ஆகணும் தேனு.. ஆனா உனக்கு பணம் தர முடியலனு ரொம்ப சங்கடமா இருக்கு.. ஒரு பக்கம் பிரச்சனை இருந்தா பரவால்ல நாலுபக்கமும் பிரச்சனை இருந்தா என்னால என்ன பண்ண முடியும்.?” என்று அவனின் இயலாமையைக் கூறினான்.
“உங்க நிலைமை புரியுது விமலன்.. நீங்க இப்படியே கடன் வாங்கிட்டு இருந்தா கண்டிப்பா என் வீட்டுல கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டாங்க.. இப்பவே என் வீட்டுல எல்லாரும் கேட்கறாங்க உனக்காக அவன் என்ன சேமிச்சு வெச்சுருக்காங்கனு.. என்னால எப்படி பதில் சொல்ல முடியும்.?
உங்க அக்காகளுக்குத் தாராளமா எல்லாமும் செய்யுங்க.. உங்க அம்மாவையும் பாருங்க.. ஆனா அளவுக்கு மீறி கடன் வாங்கி எதுவும் செய்ய வேண்டாம்னு தான் சொல்றேன்.. நம்ம இளமையை இப்படி கடன் கட்டறதுலயே கழிச்சுட்டா கடைசில நமக்கும் நம்ம குழந்தைகளுக்கும் என்ன மிஞ்சி கிடக்கும்.? அதையை யோசிச்சீங்களா.? என் அக்கா கேள்வி மேல கேள்வியா கேட்கறா.. என்னால எந்த பதிலும் சொல்ல முடியல.. எனக்கு நம்ம கல்யாணம் நடக்கணும் அவ்ளோதான்..
சும்மா எல்லாம் கல்யாணம் பண்ணி தந்து விட மாட்டாங்க.. நீங்க உங்க அக்காக்கு பார்க்கற மாதிரி தானே என் வீட்டுலயும் என்ன இருக்குனு பார்ப்பாங்க.. இன்னும் அம்மா பையனா இருக்காம கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கங்க” என்று சொல்ல வேண்டியதை மறைக்காமல் நேரடியாகவே கூறி விட்டாள்.
இனி அவன் தான் யோசிக்க வேண்டும். இவனின் செயலில் இவர்களின் காதல் கை கூடுமா.? இல்லையா.? என்பதே கேள்விக்குறியாக மாறி விடும் என்ற பயத்தில் குரலை உயர்த்தி விட்டாள் பெண்ணவள்.
காதலியின் கோவத்தையும் இவன் பெரியதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
“தேனு புரிஞ்சுக்கம்மா.. முதல்ல என் அக்காவைக் கல்யாணம் பண்ணி தரணும்.. உன் கிட்ட வாங்குன பணத்தையும் திருப்பி தரணும்.. நான் வாங்கி வெச்சுருக்கற கடனையும் அடைக்கணும்.. இப்படி ஏகப்பட்ட வேலை எனக்கு இருக்கறப்ப நீயும் இப்படி பேசுனா எப்படி.?
அப்பா இல்லாத வீடு.. நான் தானே எல்லாமும் செய்யணும்.. என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுட்டு பேசுமா.. நான் என்ன உன்னைய வேணாம்னு சொன்னனா.? இல்ல ஏமாத்திட்டு தான் போக போறனா.? நீயும் இப்படி பேசறது எனக்கு கஷ்டமா இருக்குடா” என்றான் வருத்தமாக.
இவன் இப்படி பேசுவதைக் கேட்டு தேனுவுக்கு அய்யோவென்று இருந்தது. நான் என்ன கூறுகிறேன்.? இவன் என்ற பேசுகிறான்.? இவனின் பிரச்சனைகளை மட்டும் பார்க்கிறான்.. என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் நான் கூறுவதும் இவனுக்கு புரியும்.. இவன் இப்படியே இருந்தால் திருமணத்திற்கு எங்கள் வீட்டிலும் சம்மதிப்பதும் கஷ்டமே..
இதை எங்ஙனம் புரிய வைப்பது.? என்று புரியாமல் முழித்தாள்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
+1
