Loading

அத்தியாயம் 19

 

செல்லும் வழியிலேயே,  காவல் துறையில் பணிபுரியும் தனது நண்பனுக்கு அழைத்து தகவலைக் கூறி விட்டதால், அவனும் அங்கு தனது குழுவுடன் கிளம்பி விட்டான்.

வைஷ்ணவியின் அலைபேசி எண்ணை அவனுக்கும் பகிர்ந்து கொண்டதால், அவர்களும் அவளை பின் தொடர்ந்து சென்றனர்.

ஆனால் இது எதுவும் தெரியாத பெண்ணவளோ வேதனையில் செய்வதறியாது அந்த கயவர்களுடன் தப்பிக்க போராடிக் கொண்டிருந்தாள்.

ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்த ஒருவன், அவர்கள் இடத்தை அடைந்ததும் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, அவளை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஆட்டோவில் வரும் போதே, அவள் சத்தம் போடாமல் இருப்பதற்கு அவளின் கைகளை கட்டி வாயையும் அடைத்து விட்டனர்.

இப்பொழுது, அவள் தப்பித்து ஓடாமல் இருக்க, அவளை இருவர் இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அந்த இடமோ ஒரு குடவுன் போல இருந்தது.

ஆங்காங்கே இருந்த காலி மது பாட்டில்கள், சிகரெட் அட்டைப் பெட்டிகள், சாப்பிட்டு விட்டு அப்படியே வீசி எறிந்த சாப்பாடு கவர் என்று இருந்ததைப் பார்த்து இவர்கள் இங்கு அடிக்கடி வந்து போகும் இடம் என்று உணர்ந்து கொண்டாள்.

அவளது அலைபேசி, ஆட்டோவில் கீழே விழுந்து கிடந்தது. அது சிறுது நேரம் மட்டுமே மின் இணைப்பு மூலம் சார்ஜ் போட்டு இருந்ததால், அவளை ஆட்டோவில் இருந்து வெளியே இழுக்கும் போது அவளது மடியில் இருந்து கீழே விழுந்து அதிர்வில் மீண்டும் அணைந்து விட்டது.

அவளது அலைபேசி அணைந்து விட்டதால் எந்த வித சமிக்ஞைகளும் காட்டாததால் இனியன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு, தனது காவல் துறை நண்பனுக்கு விஷயத்தைக் கூறினான்.

அவனும் இறுதியாக அவளது அலைபேசியின் சமிக்ஞை எந்த இடத்தில் நின்று இருந்தது என்று பார்த்து, அதை இனியனிடம் கூறி வரச் சொன்னான்.

போலீஸ் நண்பன் கூறிய அந்த இடத்திற்கு விரைந்து செல்ல, அதே சமயத்தில் காவலனும் தனது குழுவுடன் வந்து சேர்ந்தான்.

“இனியா.. இங்க தான் லாஸ்ட்டா அவ போன் சிக்னல் கட் ஆகி இருக்கு. ” என்று அவனிடம் கூறி விட்டு சுற்றும் முற்றும் பார்வையை இருவரும் விளாசினர்.

காவலன், அவனின் உடன் வந்த இருவரை தேடிப் பார்க்க அனுப்பி வைத்தான்.

சற்று கொஞ்சம் தள்ளிப் போய் தேடிப் பார்க்க, அங்கு ஒரு ஆட்டோ நிற்பது தெரிந்தது..

“டேய். இங்க ஒரு ஆட்டோ நிக்குது பாரு ..” என்று இனியன் காவலனிடம் கூற, அவனும் அருகில் சென்றுப் பார்த்தான்.

ஆட்டோவின் இன்ஜின் இருக்கும் பகுதியை தொட்டுப் பார்க்க, சூடாக இருப்பதை அறிந்து “இப்போதான் கொஞ்ச நேரம் முன்ன நிப்பாட்டுன போல இருக்கு. சூடா இருக்கு இன்ஜின்..” என்றான் காவலன்.

இனியனும் தலை அசைத்து, மெல்ல ஆட்டோவின் உள்ளே எட்டிப் பார்த்து எதுவும் இருக்கிறதா என்று சோதனைப் போட, அப்பொழுது தான் கீழே கிடந்த அலைபேசி ஒன்று கண்ணில் பட்டது.

அதனை எடுத்துப் பார்க்க,வைஷுவின் அலைபேசி என்பதை உறுதி செய்தவன், “மச்சான்.. இது வைஷ்ணவி ஓட போன். அப்போ அவளை இங்க தான் எங்கேயோ பக்கத்துல கூட்டிட்டு வந்து இருக்கனும்..” என்றான் வைஷுவை நெருங்கி விட்டான் என்ற எண்ணத்தில்.

காவலனும் பார்த்து விட்டு, “இருக்கலாம்..” என்றவன், சற்றுத் தள்ளி உள்ளே போய் சென்று, தங்குவதற்கு இடம் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான்.

அவன் பின்னாலேயே இனியனும் சென்று பார்த்தான்.

ஆள் நடமாட்டம் இல்லாத பழைய குடவுன் ஒன்று கண்ணில் பட்டது.

இருவரும் அதனைப் பார்த்து நின்று கொண்டிருக்க, தேடிச் சென்ற மற்ற இரு காவலர்களும் வந்து சேர்ந்தனர்.

அதன் வாசலில் இனியனின் காவலன் நண்பன் மெல்ல வந்து எட்டிப் பார்க்க, உள்ளே நான்கு பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவன், “டேய்.. முதல்ல நான் போறேன். அப்புறம் நீங்க ஒவ்வொருத்தவங்களா வாங்க..” என்று தலைவன் மற்ற மூவரிடமும் சொல்லிவிட்டுச் செல்ல, அவர்களோ, “அண்ணே.. என்ஜாய்..” என்று கிறக்கமாகக் கூறினார்.

வெளியில் இதை கேட்ட காவலன் நண்பனுக்கும், அவன் பின்னால் நின்ற இனியனுக்கும் புரிந்து விட்டது.

அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்குள் உள்ளே செல்ல வேண்டும் என்று எண்ணி, அவனிடம் இருந்த துப்பாக்கியை தயாராக கையில் எடுத்துக் கொண்டு தடாலடியாக  உள்ளே சென்றனர் மூவரும்.

முன்னால் இருந்த மூவரை காவலர்கள் பார்த்துக் கொள்ள, இனியன் அந்த தலைவனை நோக்கி ஓடினான்.

அவனோ வைஷுவின் அருகில் நெருங்கி அவள் ஆடையின் மீது கையை வைக்க, பேதையவளோ, கண்ணீர் மல்க வேண்டாம் வேண்டாம் என்று தலையை அசைத்து கதறிக் கொண்டிருந்தாள்.

அதை எல்லாம் பொருட்படுத்தாது, ஆடையை விளக்க முயல, ஓங்கி அவனின் முதுகில் ஒரு குத்து..

“அம்மா.. ” என்று கதறியபடி பின்னால் திரும்பிப் பார்க்க, ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் இனியன்.

அவன் என்னவென்று சுதாரிப்பதற்குள் அடுத்த அடி அவன் முகத்தில்.

அதில் நிலை குழைந்து விட்டான் கும்பளின் தலைவன்.

மற்ற மூவரையும் கைது செய்த பிறகு, கூட்டத்தின் தலைவனைத் தேடி வர, இனியன் அடிப்பதைக் கண்டு, “இனியா.. நிறுத்து.. போதும். இனி நாங்க பார்த்துகிறோம். ” என்று அவன் அடுத்து அடிப்பதை தடுத்து விட்டு, தலைவனை இழுத்துச் சென்றான்.

இங்கே, இருவர் மட்டுமே இருக்க, எதுவும் பேச முடியாமல் இனியனைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள் பாவையவள்.

அவளின் அருகில் வந்து, அவளது கையை அவிழ்த்து விட்டு, அவளது வாயில் போடப் பட்டிருந்த டேப்பையும் பிரித்து எடுத்தான்.

எடுத்தது தான் தாமதம்.. இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக தழுவி கொண்டனர்.

அவளோ,ஓவென்று கதற ஆரம்பித்து விட்டாள்.

“இனியா.. இனியா.. நீ மட்டும் வரலைனா என்ன ஆகி இருக்கும்.. நல்ல வேளை நீ வந்துட்ட..” என்று அவன் சட்டை நனையும் அளவிற்கு தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.

“நான் இருக்குறப்போ அப்படி உன்ன விட்டுருவேனா டி.. எவ்ளோ பதறிப் போய்ட்டேன் தெரியுமா.. ” என்று அவனும் கண்கள் கலங்க கூறினான்.

அவளை விலக்கி, அவளின் முகத்தில் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தான்.

அவளும் அதனை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு ஈடு கொடுத்தாள்.

அவர்களே அறியாமல் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருந்த அவர்களின் ஆழ் மனதில் இருந்த காதல் இப்பொழுது வெளிப்பட்டது.

“இனியா..” என்று வெளியில் இருந்து, நண்பன் அழைக்க, அப்பொழுது தான் நிதானம் வந்த இருவரும் விலகி தன்னிலை அடைந்தனர்..

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, வெட்கப்பட்டுக் கொண்டு முதுகை காட்டி நின்று கொண்டிருந்தனர்.

“ஐயோ.. இனியா.. என்ன டா இது..” என்று அவன் நொந்து கொள்ள,

“போச்சி.. போச்சி.. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். இனி இதைப் பத்தி பேசிப் பேசி கொல்லுவானே..” என்று புலம்பினாள் அவள்.

மீண்டும் இனியனின் நண்பன் அழைக்க, இதற்கு மேல் செல்லாமல் இருந்தால் நன்றாக இராது என்று கருதி, ஒரு பெருமூச்சுடன் இருவரும் வெளியே வந்தனர்.

“இனியா..நான் இவனுங்களை ஸ்டேஷன் கூட்டிட்டுப் போறேன். நீ வைஷுவை வீட்டுக்கு கூட்டிட்டுப் போ. நான் என்ன ஏதுனு விசாரிச்சிட்டு உனக்கு மார்னிங் கால் பண்றேன்..” என்று அவர்களிடம் கூறி விட்டு, இவர்களை தாங்கள் வந்த காரில் ஏற்றி கிளம்பி விட்டனர்.

இனியன் அமைதியாக காரை நோக்கிச் செல்ல, பின்னாலேயே வைஷு நடந்து வந்தாள்.

வைஷ்ணவி நடந்து வரும் போது, கல் தடுக்கி கால் இடற, “ஆ ஆ..” என்று சத்தம் போட்டு தன்னை சமன் படுத்திக் கொள்ள முயலும் போது, இனியனோ,

“ஹே.. என்னடி ஆச்சு..” என்று அவன் பதறிக் கொண்டு வர, “ஒன்னும் இல்லை..” என்றாள்.

அவளைப் பார்த்தவன், அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் காருக்கு.

அவளும் எதுவும் பேசாமல், அமைதியாக அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.

முன் புரம் காரின் கதவை திறந்து விட்டு அவளை அமர வைத்தவன், அவனும் சுற்றி வந்து காரினில் அமர்ந்து, வண்டியைக் கிளப்பினான்.

இனியன் வரும் போதே, பரிதி இரண்டு மூன்று முறை அழைப்பு விடுவித்து இருந்தான்.

இனியன் தான் அது இது என்று சமாளித்துக் கொண்டு இருந்தான்.

இப்பொழுது அண்ணனுக்கு அழைத்து, “அண்ணா.. நானும் வைஷுவும் வந்துட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்..” என்று கூறி விட்டு வைத்தான்.

சிறிது நேரம் கழித்து, “வீட்டுல எதுவும் சொல்லிக்க வேண்டாம். பயந்துருவாங்க. நான் அண்ணாகிட்ட மட்டும் நேரம் பார்த்து சொல்லிக்கிறேன்..” என்றான் அவளிடம்.

அவளும் “ம்ம்ம்..” என்றதோடு முடித்துக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்ததும், மங்களத்தை தவிர மற்ற மூவரும் தான் எதிர் கொண்டனர்.

மங்களமோ மருந்தின் விளைவால் துயில் கொண்டிருந்தார்.

“என்னமா இவ்ளோ நேரம்..” என்று மல்லிகா கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வர,

“ஃப்ரண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தா நான் போகும் போது. நான் கூட இருந்து வெயிட் பண்ணி கூட்டிட்டு வரேன். அதான் லேட் ஆகிருச்சு..” என்று அவள் வாயை திறப்பதற்கு முன்பு, அவன் பதில் கூறினான்.

மல்லிகா மகளைப் பார்க்க, அவளோ “ஆமாம் ம்மா..” என்றாள்.

“அவளுக்கு ரொம்ப டையார்டா இருக்கு.. போய் தூங்கட்டும் அத்தை..” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தான்.

விநாயகமும் மல்லிகாவும் போகும் அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்து விட்டு, “இந்த காலத்துல பொம்பளை பிள்ளைங்க வீட்டுக்கு வர லேட் ஆகுதுனா பயமா தான இருக்கு.. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ னு..” என்று இனியனிடம் சொல்லி விட்டு, அவர்கள் இருவரும் அவர்களது அறை நோக்கிச் சென்றனர்.

இங்கு பரிதியோ, இனியனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்பொழுது தம்பிக்காரன் திரும்பி அண்ணனைப் பார்த்தான்.

“என்ன ஆச்சு.. ஏன் வைஷு ஒரு மாதிரி இருக்கா. எதுவும் பிரச்சனையா..” என்று சரியாக கணித்துக் கேட்டான்.

அவனின் அருகில் வந்த இனியன், “உக்காரு ண்ணா..” என்றவன்  தானும் ஷோபாவில் அமர்ந்து கொண்டான்.

நெற்றியை நீவிய இனியனிடம், “உங்கிட்ட தான் கேக்குறேன். என்ன ஆச்சு.. ” என்று மறுபடியும் கேட்க,

அவனோ நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

“மை காட்.. இவ்ளோ விஷயம் நடந்து இருக்கு. ஏன் எதுவும் சொல்லல அப்போ. ” இன்று இனியனை கடிந்து கொண்டான் அண்ணன்.

“எனக்கு ஹோப் இருந்தது ண்ணா. எப்படியும் வைஷுவை கண்டு பிடிச்சிரலாம்னு. அதான் வீட்டுக்கு வந்து உங்கிட்ட சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன். ” என்றான் இனியன்.

“ம்ம்ம். அந்த நேரத்துல சமயோஜிதமா யோசிச்சு நல்ல காரியம் பண்ண இனியா. இனி வைஷுவை எங்கேயும் தனியா அனுப்பி வைக்கக் கூடாது..” என்று இனியனிடம் கூற,

தம்பியும் ஆமாம் என்று தான் கூறினான்.

“சரி.. போய்த் தூங்கு ” என்று தம்பியை அனுப்பி வைத்தவனின் மனதில் இப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.

“அவளுக்கும் இந்த மாதிரி எந்த ஆபத்தும் வந்துர கூடாது. என்கிட்ட அவ வர்ற வரைக்கும் நீதான் பார்த்துக்கணும்..” என்று மனமார அந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு, அவனது அறையை நோக்கிச் சென்றான் பரிதி.

இங்கு இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிரஞ்சனாவின் கனவில், மென் புன்னகையை சிந்தி, அவளை கைகளில் ஏந்தி சுற்றுவது போலவும், அவளின் கையை பிடித்து மோதிரம் அணிவித்து அவன் காதலை வெளிப்படுத்துவது போலவும், அவளுக்கு மாலையிடுவது போலவும், இறுதியாக அவளின் இதழை அவன் இதழ் கொண்டு அணைப்பது போலவும் காட்சிகள் வர, திட்டுகிட்டு எழுந்து அமர்ந்தாள் பெண்ணவள்.

 

நித்தமும் வருவாள்…

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்