அத்தியாயம் – 8
மூன்று வாரங்கள் கடந்துவிட்டன.
அமுதினி தன் வாழ்க்கையை தடையின்றி தொடர முயன்றாள். கல்லூரியில் பேராசிரியர் சரண்யாவிடம் வகுப்புகள் நன்றாக போய்க்கொண்டிருந்தன.
அவளது வகுப்பீடுகளுக்கு நல்ல மதிப்பெண்கள் வந்தன. பயிற்சி பணியை ஆலோசனை மையத்தில் சிறப்பாய் முடித்திருந்தாள். இப்படி எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
ஆனால் அவளது இதயம்… அது இன்னும் ஆறவுமில்லை! மாறவுமில்லை!
ஆரவை கல்லூரியில் பார்க்கும்போதெல்லாம், அவள் வேறு திசையில் திரும்பிவிடுவாள். அவன் வராண்டாவில் நடக்கும் சத்தம் கேட்டாலே, அவள் நூலகத்திற்குள் மறைந்துகொள்வாள். அவனது குரல் எங்காவது கேட்டால், அவள் இதயம் நின்றுவிடும்.
சுருதி அவளது நடவடிக்கையைப் பார்த்து, “அமுது, இன்னும் அவரை முழுசா மறக்கலையா?” என்று கேட்கவும்,
“இன்னும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சுருதி,” என்று அமுதினி பெருமூச்சு விட்டாள்.
“உன் முயற்சி பத்தி கேள்வி கேட்டேன், அவரை மறந்தியா இல்லையா?”
அமுதினி மௌனமாக இருந்தாள். அது தான் பதில்.
சுருதி அவள் தோளைத் தட்டி, “அமுது, இன்னைக்கு ஒரு அறிவிப்பு வந்திருக்கு. டிபார்ட்மென்ட் ஒரு இண்டர்-டிபாரட்மெண்டல் செமினார் கண்டக்ட் பண்றாங்க. ‘மருத்துவப் பயிற்சியில் அதிர்ச்சி-தகவல் பராமரிப்பு’னு டாபிக்… நாம கம்பல்சரி அட்டெண்ட் பண்ணணும்…”
அமுதினி தலையசைத்து, “எப்போ?”
“இந்த வெள்ளிக்கிழமை… மார்னிங் 10 மணிக்கு ஆடிடோரியத்துல!”
“ஓகே…” என்னவளின் மனதில் எந்த உற்சாகமும் இல்லை.
*******
வெள்ளிக்கிழமை காலை.
உளவியல் துறையின் அரங்கம் முழுவதுமாக நிறைந்திருந்தது. M.Sc. மாணவர்கள் அனைவரும், PhD மாணவர்கள் சிலர், பேராசிரியர்கள் – எல்லோரும் வந்திருந்தார்கள்.
மேடை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அதில், “மருத்துவப் பயிற்சியில் அதிர்ச்சி-தகவல் பராமரிப்பு…” என்ற தலைப்பு பெரிதாக இடம்பெற்றிருந்தன.
அமுதினி சுருதியுடன் பின்வரிசையில் அமர்ந்தாள். அவள் குறிப்பெடுக்க குறிப்பேடை திறந்து வைத்தாள்.
துறைத்தலைவர் மீனாட்சி மேடைக்கு வந்து, “குட் மார்னிங் எவ்ரிவன். இன்னைக்கு நாம ரொம்ப முக்கியமான டாபிக் பத்தி பேசப் போறோம். ட்ராமா இன்ஃபார்ம்டு கேர் என்பது மார்டன் சைக்காலஜியில் முக்கியமானது… இன்னைக்கு இரண்டு ஸ்பீக்கர்ஸ் இருக்காங்க. முதல்ல, Dr.ராமகிருஷ்ணன் சார், அவர் சைல்ட் ட்ராமா ஸ்பெசலிஸ்ட்… அடுத்தது, நம்ம Dr. ஆரவ் கிருஷ்ணா சார், அவர் அடல்ட் ட்ராமா மற்றும் PTSD-ல் எக்ஸ்பர்ட்…”
‘ஆரவ் சார் இங்க பேசப் போறாரா?’ என்று அமுதினி திடுக்கிட்டாள்.
அவள் இதயம் வேகமாகத் துடித்து, அவள் தோழியைப் பார்த்தாள்.
சுருதி அவளது கையைப் பிடித்து, “அமுது, ரிலாக்ஸ். நீ சும்மா கேட்டுட்டு இரு… அவர் உன்னை பார்க்க மாட்டார்… கூட்டம் இவ்வளவு இருக்கு பாரு!”
அமுதினி சரியென்றாலும், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
Dr. ராமகிருஷ்ணன் முதலில் பேசினார். குழந்தை துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் இணைப்பு பிரச்சினைகள் பற்றி அவர் விளக்கினார். அந்த விளக்கக்காட்சியை மாணவர்கள் கவனமாகக் கேட்டார்கள்.
பிறகு,
மீனாட்சி,”நவ், டிக்ஸ்ட் ஸ்பீக்கர் – Dr. ஆரவ் கிருஷ்ணா…” என்று சொல்லவும், ஆரவ் கிருஷ்ணா மேடைக்கு வந்தான்.
அவன் இன்றைக்கு கருப்பு நிற ஃபார்மல் சூட் அணிந்திருநதான். அவன் மேடையை நோக்கி நடந்தபோது, அரங்கம் முழுவதும் அமைதியானது. மாணவர்கள் அனைவரும் நேராக உட்கார்ந்தார்கள்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, அமுதினி அவனைப் பார்த்தாள். அவனது முகம் வழக்கம்போல் உணர்வின்றி இருந்து. அவனது கண்களில் சீற்றம்.
ஆனால், அவளுக்கு அவனைப் பார்த்ததும், இதயம் ஒரு விசித்திரமான வலியுடன் துடித்தது.
ஆரவ் மேடையில் நின்று, ஒலிவாங்கியை எடுத்ததும், முழுவதுமாக அரங்கத்தை ஸ்கேன் செய்தவனின் பார்வை ஒரு நொடி அமுதினியின் மீது பதிந்தது.
அந்த ஒரு நொடியில்.. அவளுக்கு காலம் நின்றுபோனது போல் இருந்தது.
அமுதினி அவனை நேராகப் பார்த்தாள். அவள் பார்வையை திருப்பவில்லை. அவனும் அவளை ஒரு நொடி பார்த்தான். அவனது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவனது கண்களில்… ஏதோ ஒன்று தெரிந்தது. கோபமா? குழப்பமா? அல்லது வேறு ஏதோ?
அவன் உடனே பார்வையை திருப்பிக்கொண்டான்.
அவன் பேச ஆரம்பித்தான்.
“குட் மார்னிங்… இன்னைக்கு நான் பேசப் போறது அதிர்ச்சி தகவலறிந்த பராமரிப்பு பத்தி! இது ஒரு நாகரீக சொல் போல உபயோகிக்கப்படுது. ஆனா, உண்மையில் இதன் அர்த்தம் என்னன்னு பலருக்கும் தெரியாது…”
அவனது குரல் நிலையாக இருக்க, அதில் எந்த உணர்வும் இல்லை. அவன் ஒரு தகவல்களை கடத்தும் இயந்திரம் மாதிரி பேசினான்.
“ட்ராமா அப்படிங்கிறது வெறும் ஒரு எவென்ட் இல்ல. அது ஒருத்தரோட உணர்வு… ஒருத்தருக்கு அதிர்ச்சியாய் இருக்கும் விஷயம், இன்னொருத்தருக்கு சாதாரணமா இருக்கலாம். சோ, அதுல நாம தனிப்பட்ட நபருடைய சப்ஜெக்டிவ் எக்ஸ்பிரியன்-ஐ மதிக்கணும்…” என்றவன் தொடர்ந்து,
“ட்ராமா சர்வைவர்ஸ் பொதுவாக ரொம்ப எச்சரிக்கையா இருப்பாங்க… அவங்க எப்பவும் தங்களை ப்ரொடெக்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு ட்ரஸ்ட் இஸ்யூஸ் இருக்கும். அவங்க மற்றவங்களை சீக்கிரம் கிட்ட வர விடமாட்டாங்க. இது ஒரு பாதுகாப்பு வழிமுறையா நினைப்பாங்க…”
அமுதினி கவனமாகக் கேட்டாள். அவன் வார்த்தைகள் அவளுக்கு பழக்கப்பட்டதாக இருந்தன. அவன் தன்னைப் பற்றியே பேசுகிறான் என்பது அவளுக்குத் தெரிந்தது.
“ஒரு தெரபிஸ்ட்டான நீங்க, பாதிக்கப்பட்டவங்களை ஜட்ஜ் பண்ணக்கூடாது… அவங்க தற்காப்பு நடத்தை, ஆக்கிரமிப்பு, பின்வாங்குதல் – இதெல்லாம் அவங்க வாழக்கூடிய உத்திகள்… நீங்க அவங்களுக்கு ஒரு சேஃப் ப்ளேஸ்-ஐ உருவாக்கணும்…” என்றவன்,
“ஆனா, பச்சாதாபத்துக்கும் உதவுவதற்கும் வித்தியாசம் இருக்கு… நீங்க பாதிக்கப்பட்டவங்களுக்கு அனுதாபப்பட்டு, அவங்க நெகடிவ் பேட்டன்ஸை ஊக்கப்படுக்க கூடாது… நீங்க அவங்களை சேலன்ஜ் பண்ணணும். அது வலிக்கும் தான்… ஆனாலும், அது ரொஅவசியம்…” என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னான் ஆரவ் கிருஷ்ணா.
பின்னர், அவன் காட்சிப்பக்கங்களை காட்டினான். அதில் வழக்கு ஆய்வுகள், ஆராய்ச்சி ஆவணங்கள், புள்ளிவிவரங்கள் – எல்லாம் சரியாகவும் புரியும்படியும் விளக்கினான் .
கிளாஸில் ஒரு மாணவி கை உயர்த்தி, “சார், ட்ராமா சர்வைவர்ஸ் எப்படி தங்களை ஃபார்கிவ் பண்றாங்க? அவங்களை ஹர்ட் பண்ணினவங்களை எப்படி மன்னிக்கிறாங்க?” என்று சந்தேகம் கேட்கவும்,
ஆரவ் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க, முகமோ கடினமானது.
“ஃபார்கிவ்னஸ் எனும் வார்த்தை ரொம்ப ஓவர் ரேட்டட்,” என்றவனின் குரலில் கசப்பு தெரிந்தது.
“எல்லாரும் சொல்வாங்க – ‘ஃபார்கிவ் அண்ட் மூவ் ஆன்!’… ஆனா, அது அவ்வளவு சுலபம் இல்ல. சில காயங்கள் என்ன பண்ணாலும் குணமாகாது… சில வடுக்கள் எப்பவும் நமக்குள்ள இருக்கும்… ஃபார்கிவ்னஸ் வந்து ஒருத்தரோட தனிப்பட்ட விருப்பம் தானே தவிர, அது கட்டாயம் எல்லாம் இல்ல…” ஆரவ் வார்த்தைகளில் இருந்த தீவிரம் மொத்த அரங்கத்தையும் அமைதிப்படுத்தியது.
அமுதினி அவனை உற்றுப் பார்த்து, ‘அவர் தன்னைப் பற்றியே பேசுகிறார். அவர் யாரையோ மன்னிக்க முடியவில்லை… அல்லது தன்னையே மன்னிக்க முடியவில்லையா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
ஆரவ் தொடர்ந்தான். “ட்ராமா – இன்ஃபார்ம்டு கேரில், நீங்க பேஷண்ட் உடைய செயலை ரெஸ்பெக்ட் பண்ணணும். அவங்க என்ன செய்யணும்னு நீங்க ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. ஹீலிங் அவங்க ஏத்த வேகத்துல நடக்கும். சிலருக்கு அது ஒரு வருஷம் ஆகும். சிலருக்கு பத்து வருஷம். சிலருக்கு ஒரு வாழ்க்கை முழுக்க தேவைப்படும்… அவங்கவங்க அதிர்ச்சியை பொறுத்து எல்லாமே மாறுபடும்…” எனக் கூறி அரங்கத்தை பார்த்தான்.
பிறகு, கடைசியாக, “அண்ட், இன்னும் சில பேர் எப்பவுமே குணமாக மாட்டாங்க… அவங்க தன்னுடைய வலிகளுடன் வாழ கத்துக்கிறாங்க. அவங்களுக்கும் அது ஒரு வேலிட் சாய்ஸ்-ஆ இருக்கும்…” என்று வெளிப்படையாக சொன்னான் ஆரவ்.
அவனது வார்த்தைகள் கனமாக இருந்தாலும், அவனுடைய பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது. ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் மேடையில் இருந்து இறங்கி அரங்கத்தை விட்டு வெளியேறினான்.
அமுதினிக்கு மனம் கனத்தது. அவள் எழுந்து வெளியேற முயன்றாள்.
Dean மீனாட்சி அறிவித்தார், “ஒரு முக்கியமான அறிவிப்பு… அடுத்த மாசம் நாம ஒரு ஃபீல்ட் விசிட்-க்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். மகாபலிபுரத்துல ஒரு அதிர்ச்சி மறுவாழ்வு மையம் இருக்கு… நாம அங்க போய், பிராக்டிகல் அப்சர்வேஷன் பண்ணுவோம். இது கம்பல்சரி… எல்லா ஃபைனல் இயர் மாணவர்களும் அட்டெண்ட் பண்ணணும்…. மிஸ்டர். ஆரவ் கிருஷ்ணா சார் இந்த ட்ரிப்பை லீட் பண்ணுவார்… இது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்… நன்றி!”
அதைக் கேட்டு, ‘நான் ஆரவ் சார் கூட ஒரு ஃபீல்ட் விசிட்-க்கு போகணுமா? இது இம்பாஸிபள்!’ என்று அமுதினி அதிர்ந்தாள்.
அவளோ தோழியை பார்த்து, “என்ன டி இது இப்படி சொல்றாங்க?” என்கவும்,
“அமுது, இது கம்பல்சரி… நாம போய் தான் ஆகணும்… இதுக்கும் நமக்கு மார்க்ஸ் இருக்கு டி..” என்றாள் சுருதி.
அமுதினி ஆழமாக சுவாசித்து, ‘நான் விலகிப் போக நினைச்சாலும், விதி என்னை மீண்டும் அவருக்கு நெருக்கமா கொண்டு போகுது… ஏன்?’ என்று நொந்து போனாள்.
***
அன்று மாலை, அமுதினி தனியாக நூலகத்தில் அமர்ந்து இருந்தாள். அவள் அதிர்ச்சி தகவலறிந்த பராமரிப்பு பற்றிய புத்தகங்களை படித்துக்கொண்டிருந்தாள். ஆரவின் வார்த்தைகள் அவளை விட்டு விலகவில்லை.
“இன்னும் சில பேர் எப்பவுமே குணமாக மாட்டாங்க…”
திடீரென்று, யாரோ அவள் மேசைக்கு அருகே வந்தார்கள். அவள் மேலே பார்த்தாள்.
ஆரவ் கிருஷ்ணா.
அவள் மூச்சு நின்றது. அவன் அவளை நேராகப் பார்த்தான். அவனது முகம் உணர்வற்று காணப்பட்டது.
“நாம பேசணும்,” என்றவனின் குரல் மெல்லமாக இருந்தாலும், கட்டளை தொனி நிரம்பியிருந்தது.
அமுதினி எழுந்து நின்று, “என்ன பேசணும் சார்?” என்று கேட்கவும்,
“அடுத்த மாசம் ஃபீல்ட் ட்ரிப்… நீயும் வரப் போற… நான் தான் லீட் பண்றேன்… இதுல ஒரு பிராப்ளமா உனக்கு?” என்று அவன் பேசவும்,
அமுதினியின் மனதிற்குள், ‘இது தான் எனக்கே தெரியுமே… இவர் வேற ஏன் தனியா விளக்கம் தந்துட்டு இருக்கார்..’ என்று சலித்து கொண்டாள்.
ஆனாலும், நேரில் அவனிடம், “சார், நான்—” என்று வார்த்தை வராமல் தயங்க,
“நான் கேள்வி கேட்டேன்… பிராப்ளமா இல்லையா?”
“இல்ல சார். எனக்கு பிராப்ளம் இல்ல.”
ஆரவ் அவளை உற்றுப் பார்த்து, “நீ என்னை அவாய்ட் பண்றது எனக்குத் தெரியும்… கடந்த மூன்று வாரமா, நீ என்னை பார்த்தா வேற திசையில போற… நீ என்னை பார்க்க விரும்பல. ஆனா இந்த ட்ரிப்ல, அது முடியாது… அங்க நீ சின்ன குழந்தை போல நடந்துக்க கூடாது… அங்க நாம ரெண்டு பேரும் புரோபஷனல் மாதிரி நடந்துக்கணும்… புரிஞ்சுதா?”
அமுதினி தலையசைத்து, “புரிஞ்சுது சார்…” என்று பவ்வியமாக சொன்னாள்.
ஆரவ் திரும்ப போக ஆரம்பித்தவன், அங்கேயே நின்று, திரும்பாமலே, “இன்னொரு விஷயம் கேட்டுக்க… இன்னைக்கு செமினாரில் நான் பேசினது… அதை நீ பர்சனலா எடுத்துக்காதே… அது ஒரு ஜெனரல் இன்ஃபர்மேஷன்… அவ்வளவுதான்…” என்று சொல்லி அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.
அமுதினி அங்கேயே நின்றாள். அவளது இதயமோ நின்று துடித்தது.
‘அவர் ஏன் என்னிடம் வந்து பேசினார்? இதெல்லாம் எதுக்காக என்கிட்ட சொல்லிட்டு போகணும்? அப்போ அவர் நான் அவாய்ட் பண்றதை நோட்டீஸ் பண்ணியிருக்கார்… அது.. அது.. அவரை ஆப்பெக்ட் பண்ணுதா?’ என்று பல்வேறு எண்ணங்களில் அவளுள் தோன்றியது.
அவள் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். ஆனால், ஒரு விஷயம் தெளிவாக புரிந்திருந்தது – அடுத்த மாதம், அவர்கள் இருவரும் ஒன்றாக பயணம் மேற்கொள்ள போகிறார்கள்.
இரண்டு நாட்கள், இருவரும் ஒரே இடத்தில்!
விதி என்ன திட்டமிட்டிருக்கிறது என்று அமுதினிக்குத் தெரியவில்லை. அதை உணரும் நிலையிலும் இல்லை.
அவர்களது கதை இன்னும் முடியவில்லை..! அது இப்போது தான் ஆரம்பிக்கப்போகிறது..!
********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
+1