
பிறை -11
பேசியதெல்லாம் தலைக்குள் ஓடியது. எல்லாம் இந்த சுஷ்மியால் வந்தது என மனதிற்குள் அவளை கடிந்து கொண்டாள்.
” என்ன பதிலை காணோம்..” இருக்கையில் இருந்து எழுந்தவன்.. அவளருகில் வந்து டேபிளில் அமர்ந்து, அவளது முகத்தை கூர்ந்து பார்த்தவனது இதழ்கள் நக்கலாக சிரித்தது.
” படம் பார்க்கலாமா மேடம்” அவனது கிசு கிசுப்பான குரலில் .. அதிர்ந்து அவனை பார்த்தாள் பிறைநிலா.
கைகளை சுவற்றின் பக்கமாக அவன் காட்டியதும்.. விழிகளை அத்திசையில் திருப்பியவளுக்கு படமாக காட்சி அளித்தது அந்த அற்புதக் காட்சி.
” ஏன் டி என்கிட்ட கூட நீ சொல்லல பார்த்தியா ” சுஷ்மிதா கேட்டதும்.. புருவத்தை சுருக்கியவாரு .. ” என்ன சொல்லல..” பிறை பதில் கேள்வி கேட்டாள்.
” கோவில்ல அந்த கமிஷனர் தான் உன்ன காப்பாத்தி இருக்காரு சரி.. ரூம் குள்ள என்ன நடந்துச்சு.. ஹான்.. “
” நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல.. அவரு காப்பாத்திட்டு போயிட்டாரு “
” ஓஹோ… அப்போ உன் தாவணி எங்க “
” ஹே அதுல தான் தீப்பிடிச்சது.. அதைத்தான் அவரு … அது.. கழட்டி.. வீசிட்டாரு ” குரல் சற்றே தயங்கியது.
” அப்பறம் மேடம் என்ன பண்ணீங்க “
” என்ன பண்ணேன்.. திரும்பி நின்னேன்.. அவரு அம்மன் சேலையை எடுத்து கொடுத்தாரு “
” ஓ அப்பறம் ” என்றதும் பிறைக்கு கடுப்பாகி விட..
” இங்க பாரு டி.. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் நடக்கல.. நல்ல இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வச்சுட்டு, அறிவில்லையா இடியட்டுன்னு கேட்டான்.. சினிமால வர மாதிரி சட்டையை
கழட்டியா கொடுக்க முடியும்னு கேட்டுட்டு, அம்மன் சேலையை கொடுத்துட்டு வெளிய போயிட்டான் ” என்றதும் சுஷ்மிதாவிற்கு சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை.
” நான் கூட ஏதாவது ரொமான்டிக் சீன் நடந்திருக்குமோன்னு நினைச்சேன். ஆனால் கமிஷனர் வச்சாரு பாரு ஆப்பு ” வாயை பொத்தி சிரித்தாள் சுஷ்மிதா.
” வாயை மூடு.. இதுல சிரிக்க என்ன இருக்கு.. அந்த ஆளு கூட ரொமான்ஸ் பண்ணிட்டாலும்.. மூஞ்சியை எப்போ பாரு மூஞ்சூறு மாதிரி வச்சிருக்கான். அவன் பொண்டாட்டிலாம் பாவம்.. ” என சலித்து கொண்டே பிறை வெளியேறி இருக்க.. அவளை தொடர்ந்து சுஷ்மிதாவும் வெளியேறி இருந்தாள்.
காணொளியை பார்த்த பிறைக்கு அதிர்ச்சியில் மயக்கம் வருவதை போல இருந்தது. இருவர் பேசியதும் தெளிவாக கேட்டிருந்தது.
காணொளியில் இருந்து விழிகளை திருப்பி நேராக அவளைத்தான் பார்த்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.
அவனது முகத்தை கூட பார்க்க முடியாமல், கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது பிறைக்கு.
அவளை பார்க்க பார்க்க கொஞ்சம் சுவாரசியமாக தான் இருந்தது. ” முழுப் படமும் பார்த்தாச்சா.. ” அவன் நிறுத்தியதும்..
” அது ஏதோ.. சும்மா.. விளையாட்டுக்கு.. சுஷ்மிதா தான்.. ” வார்த்தைகள் தந்தியடிக்க..
” எனக்கு ரொமான்ஸ் வருமா இல்லையான்னு என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா போதும்.. இல்லையா.. ” ஒற்றை புருவம் ஏற்றி அவன் கேட்டதில் .. மூச்சு விடவும் மறந்து போனாள் பிறைநிலா.
” என் மூஞ்சி எப்படி இருந்தாலும் அதை பார்க்க போறது என் பொண்டாட்டி தான்.. பட் அதுல உனக்கென்ன கவலை.. ?” அடுத்தடுத்து கேள்வியில் அவளுக்கு ஆட்டங்கண்டது.
எச்சிலை விழுங்கி அவனுக்கு பதில் கூற முடியாமல் திகைத்து போனவள்.. ” அது.. சார் தெரியாம பேசிட்டோம்.. ” மெல்லிய குரலில் கேட்டாள்.
” மூஞ்சூறு எப்படி இருக்குன்னு நான் பார்த்தது இல்ல .. நீ சோவ் பண்ணேன் ” அவளது ஒவ்வொரு வார்த்தைகளையும் பிடித்து வைத்து பேசினான் ஆதி.
” சார்.. நேரம் ஆகிடுச்சு சார் “
” உன் பிரெண்ட் வீடியோ எதுவும் அந்த ரெக்கார்டிங்ல இல்ல.. நான் செக் பண்ணிட்டேன்.. நேத்து ஷட்டவுன் அதுனால எதுவும் ரெகார்ட் ஆகல.. தென் அதுல இந்த வீடியோவை தவிர்த்து வேற எதுவும் இல்ல. ஐ டெஸ்ட்ராய்ட் எவரிதிங்க் ” என்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
” தாங்க்ஸ் சார் ” என அவள் கிளம்ப பார்க்க..
” வெயிட் மிஸ் பிறைநிலா.. ” என்றதும் நின்று அவனை திரும்பிப் பார்த்தாள் பிறை.
அவளையே அழுத்தமாக பார்த்தவன்.. ” இன்னொரு முறை நீ என் கண்ணுல படக்கூடாது.. மீறி பட்டா.. ” என சற்று இடைவெளி விட்டவன்.. ” நான் பொறுப்பில்லை.. பீ கேர்ஃபுல் ” என எச்சரித்தே அவளை அனுப்பி வைத்தான்.
மனதில் தோன்றிய பயத்தை மறைத்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு, அதிர்ச்சியாக அவளது தந்தை வந்திருக்கும் செய்தி காத்திருக்க.. அடித்து பிடித்து ஓடி இருந்தாள் பிறை.
***
காலையிலேயே சிவானந்தம் வீட்டு வாசலில் வந்து நின்றார் அவரது மூத்த தங்கை மயில்.
” என்ன மா இத்தனை காலையில.. எதுவும் விஷயமா என்னாச்சு.. எல்லாரும் சுகந்தானே.. ”
” அதெல்லாம் சுகந்தேன் .. வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியோனே ” மயில் கேட்டு கொண்டே செருப்பை வாசலில் விட்டுவிட்டு உள்ளே வந்தார்.
” சிவகாமி.. யாரு வந்துருக்கானு பாரு.. நீ உள்ள வா மா ” என தங்கையை அழைத்து கொண்டு உள்ளே வந்தார் சிவானந்தம்.
வீட்டிற்குள் வந்ததும் முதல் வேலையாக, வீட்டில் புதிதாக என்ன இருக்கிறது, என்ன பொருட்களை வாங்கி இருக்கிறார்கள்.. என்னென்ன வித்தியாசங்கள் என சிறுவர்மலரில் ஏழு வித்தியாசங்களை கண்டு பிடிப்பதை போல நுணுக்கமாக அனைத்தையும் ஆராய்ந்தார் மயில்.
” வாங்க வாங்க அண்ணி.. ” என முகத்தில் சிரிப்போடு வரவேற்றார் சிவகாமி.
” ஹான்.. வரதுலாம் இருக்கட்டும்.. இதென்ன ” வந்ததும் வராததுமாக கேட்டு வைத்தார் மயில்
அவர் காட்டிய திசையில் இருந்த பொருளை பார்த்தவர்.. ” பாப்பா ஆசை பட்டு வாங்குச்சு அண்ணி.. அவ தான் வளர்க்குறா” என மீன் தொட்டியை பார்த்து கூற..
” இப்படி தண்ட செலவு செய்ய உங்க கிட்ட காசு இருக்கும், ஆனால் என் அம்மாக்கு சோறு போட காசு இருக்காதா.. சோறு போட முடியாதுன்னு என் வீட்டுக்கு துரத்தி விட்டியாம் ” இடக்காக கேட்ட தங்கையை பார்த்தவர்.. ” மயிலு கொஞ்சம் பொறுமையா பேசு.. நடந்தது என்னனு தெரிஞ்சுகிட்டு பேசனும். சும்மா எல்லாரும் அவளையே குத்தம் சொல்லக் கூடாது. அவ மேல எந்த தப்பும் இல்ல ” சிவானந்தம் தங்கையிடம் சற்றே கடினமாக பேசினார்.
” அடேங்கப்பா.. அம்மா சொல்லும் போது கூட நான் நம்பல .. இப்போதான் கண்கூட பார்க்குறேன்.. என்ன திடீர்னு பொண்டாட்டி மேல பாசம் .. “
” தேவையில்லாத பேச்சு எதுக்கு மயிலு.. பிள்ளைங்க எப்படி இருக்காங்க.. “
” இங்க பாருணே நான் சமரசம் பேச வரல.. அம்மாவை எதுக்கு உன் பொண்டாட்டி துரத்தி விட்டா.. அதுக்கு பதிலை சொல்லு “
கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டவர்.. ” அப்போ கடைசி வரைக்கும் என்ன உண்மைன்னு தெரியாம பேசிட்டே இருப்ப.. அப்படித்தானே.. அம்மாவை இங்க யாரும் துரத்தி விடல.. அவங்களே தான் போனாங்க.. ”
” அதெப்படி போவாங்க.. உங்களால வச்சுக்க முடியாம தானே அனுப்பிவிட்டு இருக்கீங்க.. பொம்பளை பிள்ளைங்க வீட்ல உக்கார்ந்து அவங்க சாப்பிட முடியுமா.. அவங்களுக்கு மரியாதை இருக்குமா ”
நிதானமாக அனைத்தையும் கேட்ட சிவானந்தம்.. “அப்போ நல்லா கேட்டுக்கோ.. சொத்துல எப்படி பொண்ணுங்களுக்கும் பங்கு இருக்குன்னு வாங்கிட்டு போனீங்களோ.. அதே மாதிரி பெத்த தாயை நான் மட்டுமே வச்சு பார்க்கனும்னு இல்ல.. அதுல உங்களுக்கும் பங்கு இருக்கு. அம்மா உன் வீட்ல இருந்தா நீதான் பார்க்கனும் ” தெளிவாக பேசினார் சிவானந்தம்.
உடன் பிறந்தவரின் பேச்சில் வாயடைத்து போனார் மயில். ” இதெல்லாம் நீ பேசவே இல்ல.. இதோ உன் பக்கத்துல நிக்கிறா தானே.. உன் பொண்டாட்டி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் அமைதியா இருந்துட்டு.. சம்மந்தம் பண்ண போற நேரத்துல அவ புத்தியை காட்டிட்டா பார்த்தியா… நான் கூட உன்னை என்னவோன்னு நினைச்சேன் டி.. ஆனால் நீ கில்லாடி தான். அமைதியாவே இருந்து என் அண்ணனை கைக்குள்ள போட்டுகிட்டு காரியத்தை சாதிக்க நினைக்கிற ” ஆத்திரத்தில் கத்தினார் மயில்.
” போதும் மயிலு.. சண்டை போட தான் வீட்டுக்கு வந்தியா “
” ஏன் இல்லைனா வரக்கூடாதுன்னு சொல்லுவியோ.. ” இடக்காக கேட்டார்.
” இப்போ என்ன உன் பிரச்சனை ” சலித்து போனார் சிவானந்தம். இத்தனை வருடங்களுக்கு பிறகு தெரிந்த, உறவுகளின் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துப் போனார்.
“அம்மா பழைய படி இங்க வரனும்”
” தாராளமா வரட்டும்.. யார் வேண்டாம்னு சொன்னா.. நாங்க போக சொல்லலையே “
” சண்டை போட்டு தானே அனுப்பி வச்சீங்க “
” குடும்பம்னா சண்டை வரத்தான் செய்யும் மயிலு.. “
” நீங்க ரெண்டு பேரும்.. முக்கியமா உன் பொண்டாட்டி வந்து எங்க அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான், அம்மா இங்க வருவாங்க ” திமிராக பதில் அளித்தார் மயில்.
அனைத்தையும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தவள்… ” நான் அத்தை கிட்ட வந்து மன்னிப்பு கேட்குறேன் அண்ணி.. ” சிவகாமி வழக்கமாக செய்யும் விட்டுக் கொடுத்து போகும் எண்ணத்திற்கு வர..
” தேவையில்ல சிவகாமி.. நீ கொஞ்சம் அமைதியா இரு. நான்தான் பேசிட்டு இருக்கேன்ல .. ” மனைவியை அடக்கியவர்.. ” என் பொண்டாட்டி எந்த தப்பும் பண்ணல.. அதுனால யார் காலையும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்ல.. அவங்களுக்கே எப்போ வரத் தோணுதோ அப்போ வரட்டும்.. நாங்க போக சொல்லவும் இல்ல.. வரச் சொல்லவும் இல்ல.. எல்லாமே அம்மா முடிவு தான்.. ” அண்ணன் பேசியதில் திகைத்து போனார் மயில்.
ஏற்கனவே மகன் மாறிவிட்டதை அகிலாண்டேஸ்வரி மூலமாக அறிந்திருந்தார் மயில். ஆனால் நேரில் பார்க்கும் பொழுது பற்றிக் கொண்டு வந்தது.
” அதுசரி.. அம்மாவை காலம் முழுக்க என் வீட்லையே வைக்க திட்டம் போடுறீங்களா.. அது மட்டும் நடக்காது சொல்லிட்டேன். என் வீட்ல என் வீட்டுக்காரர் இருக்காரு. அவரு என்ன நினைப்பாரு.. ஆம்பளை பிள்ளை இருந்தும் இவங்களை நம்ம சுமக்கனுமான்னு யோசிப்பாங்க.. அது வேற எனக்கு கேவலமா இருக்கு ” இஷ்டத்திற்கு பேசும் தங்கையை வெறித்து பார்த்தவர்..
” அவ்வளவு யோசிச்சு பேசுற… ரோசம் உள்ள உன் புருஷன் சொத்தை கேட்டு வரும் போது மட்டும் கேவலமா தெரியலையா ” நறுக்கென்று கேட்டே விட்டார் சிவானந்தம்.
” ஏங்க.. எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க ” பிரச்சனை பெரிதாவதை உணர்ந்தவர் கணவனை நிறுத்த போராடினார்.
” உனக்கு ஒன்னும் தெரியாது சிவகாமி.. இங்க இருக்குற சொத்துக்கு பங்கு கேட்கும் போது.. பெத்த தாயையும் பங்கு போட்டு பார்த்துக்கிறதுல என்ன இருக்கு. வருஷம் முழுக்க நம்ம வீட்ல தான் அம்மா இருந்தாங்க.. இப்போ அங்க போய் ரெண்டு நாள் கூட முழுசா ஆகல.. ஆனால் அதுக்குள்ள பிரச்சனை. சொத்து வேணும்.. வயசுல வேலைக்கு அம்மா வேணும். ஆனால் வயசு ஆனதும் பார்க்க யாருக்கும் மனசு இல்ல.. இதான் மனுச தனமா.. ” வெறுத்து போனார்.
” இப்பவும் நான் வச்சு பார்த்துக்க தயாரா தான் இருக்கேன். ஆனால் என் புருஷன் விடனும்ல ”
மயிலின் கணவர் கறார் பேர்வழி தான். அதனால் தான் தங்கைகளை இந்த வீட்டிற்கு அழைத்து வந்து வேண்டியதை வாங்கி கொடுத்து, சுகமாக பார்த்து அனுப்பி வைப்பார் சிவானந்தம்.
ஆனால் இன்று அவர் வீட்டை விட்டு துரத்தி, அவரால் மயிலின் வாழ்க்கைக்கு பிரச்சனை வருவது போல அவர் பேசியதை தான் அவரால் இன்னும் தாங்க இயலவில்லை.
” உன்னால வச்சுக்க முடியாதுல.. அப்போ வரும் போது அம்மாவை கையோட கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதான”
” உன் பொண்டாட்டியை மன்னிப்பு கேட்க சொல்லு.. நான் கூட்டியாந்து விடறேன் ” பிடித்த பிடியில் நின்றாள் மயில்.
சிவகாமி என்றால் அமைதி, சொல்வதை கேட்டு அப்படியே வேலை செய்யும் சம்பளம் இல்லாத வேலைக்காரி. மொத்தத்தில் அடிமை. இப்படியே அவர்களது மனதில் குடியிருந்து விட்டாள்.
தற்போது புதிதாக அவளுக்காக பேசும் தனது அண்ணனை பார்க்கும் பொழுது அவர்களால் அதை துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
” இஷ்டம் இருந்தா வரட்டும்.. இல்லைன்னா உன் புருஷன் கூட தினமும் சண்டை கட்டிட்டு இரு. வேலை முடிஞ்சதுனா கிளம்பு” கறாராக பேசும் அண்ணனை விழி அகல பார்த்து வைத்தார் மயில்.
” வீட்டை விட்டு போன்னு சொல்லுறியாண்ணே.. “
” இந்த வீட்டுக்கு நீ எப்போ வேணாலும் வரலாம் போகலாம்.. அதுக்கான உரிமை உனக்கு இருக்கு. ஆனால் அந்த உரிமை எந்த விதத்துலையும் சிவகாமியை பாதிக்கக் கூடாது ” திட்டவட்டமாக கூறும் கணவனை கண்ணீர் மல்க பார்த்து வைத்தார் சிவகாமி.
காலம் கடந்த பாசம், காதல், நேசம், உரிமை என அனைத்தும் அவருக்கு கிடைத்திருக்கிறது. அனுபவிக்க முடியாமல் மகிழ்ச்சியில் திண்டாடி போகிறார் சிவகாமி.
” பொண்டாட்டி கிறுக்கு பிடிச்சு இருக்கு உனக்கு.. தெளியவும் வந்து பேசிக்கிறேன்.. அப்போ இருக்கு ” என சிவகாமியை முறைத்து விட்டு கிளம்பி இருந்தார் மயில்.
” என்ன சிவகாமி வீட்ல வேலை இல்லையா.. எதுக்கு என்னைய பார்த்துட்டே நிக்கிற..போய் வேலையை முடி.. கருவாட்டு குழம்பு வை ரொம்ப நாள் ஆச்சு.. நான் போய் தென்னைக்கு தண்ணி காட்டிட்டு வரேன் ” என சென்றிருந்தார் சிவானந்தம்.
அதற்கு மேலும் அங்கு நிற்பாரா என்ன.. இதழ்களில் உறைந்த புன்னகையுடன்.. கரங்கள் கருவாட்டை கழுவ தொடங்கியது.. முழுமையான தாம்பத்தியத்தின் காதல் அங்கு அரங்கேறியது.
சனா💖
