Loading

அத்தியாயம் – 7

 

மூன்று வாரங்கள் கடந்துவிட்டன.

 

அமுதினி இப்போது பேராசிரியர் சரண்யாவின் வகுப்பறைக்கு சென்றுக் கொண்டிருந்தாள். 

 

சரண்யா மேம் ஒரு அன்பான, ஊக்கமளிக்கும் பேராசிரியர். அவர் மாணவர்களுக்கு நேரம் ஒதுக்குவார், அவர்களது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி, புன்னகையுடன் இருப்பார்.

 

ஆனாலும், அமுதினியின் மனதில் கவலை வேரூன்றியிருந்தது.

 

அவள் வகுப்புகளை கவனமாக கேட்டு, குறிப்பெடுத்து வகுப்பீடுகளை சமர்ப்பிப்பாள், இருந்தும், மனமோ ஆரவ் கிருஷ்ணாவின் வகுப்பறைக்கு, அவனது குரலுக்கு, கடுமையான பார்வைக்கென்று எப்போதும் அலைந்து திரிந்தது.

 

‘இது பைத்தியக்காரத்தனம்…’ என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள். 

 

‘அவர் என்னை எண்ணத்தை புரிந்துகொள்ளாமல், முட்டாள் எனப் பட்டம் கட்டினார்… ஆனாலும், நான் ஏன் இன்னும் அவரைப் பத்தி நினைக்கிறேன்?’ என்றாலும்கூட மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. 

 

சுருதி அவளது செயல்களை கவனித்து, “அமுது, நீ இன்னும் எதையும் மறக்கலயா? நீ எல்லா நேரமும் யோசிச்சுட்டே இருக்கீயே…”

 

“எனக்கு ஒண்ணும் இல்ல சுருதி…” அமுதினி பொய் சொல்ல முயன்றாள்.

 

“பொய் சொல்லாதே. நீ அவரை மறக்கலையா இன்னும்?” என்று அதையே கேட்க, அமுதினி பெருமூச்சு விட்டாள். 

 

“முடியல சுருதி. நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும், அவரை மறக்க முடியல. அவர் காரிடாரில் நடக்கும்போது, நான் மறைஞ்சிருவேன்… அவரை பார்க்க விரும்புறேன்… ஆனா, அவர் என்னை பார்க்க விரும்பல… எனக்கு இது சித்திரவதை மாதிரி இருக்கு.”

 

சுருதி அவளை அணைத்து, “அமுது, நீ உன்னை ஹர்ட் பண்ணிக்கிட்டு இருக்க… நீ எல்லாத்தையும் கடந்துதான் ஆகணும்…”

 

“எனக்குத் தெரியும் சுருதி… நான் முயற்சி பண்றேன்… அதுக்கு டைம் வேணும்…”

 

*****

 

அதே நேரம், ஆரவும் அமைதியின்றி போராடிக் கொண்டிருந்தான்.

 

எப்பொழுதும் போல அவன் தன் வகுப்புகளை எடுத்தான், வகுப்பீடுகளை பார்த்தான், ஆய்வு கட்டுரைகளை எழுதினான். 

 

வெளியில் இருந்து பார்த்தால், அவன் வழக்கம்போல் கடுமையான தோற்றத்தில் இருந்தான்.

 

ஆனால், அவனுள் மனநிம்மதி இல்லாமல் இருந்தான்.

 

அவனுக்கு அமுதினி பற்றிய நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளது கண்களில் இருந்த வலி, அவளது கடைசி வார்த்தைகள், அவளது பாசமெல்லாம் அவனை விட்டு விலகவில்லை.

 

அவன் வளாகத்தில் நடக்கும்போது, தன்னையறியாமல், அவளைத் தேடிக் கொண்டிருந்தான். அவன் நூலகத்திற்கு சென்றால், அமுதினி இருக்கிறாளா என்று பார்ப்பான். அவன் துறை வராண்டாவில் நடந்தால், அவளது குரலை எதிர்பார்ப்பான்.

 

ஆனால், அவளோ அவனை தவிர்த்தாள். அவனைப் கண்டதும், வேறு திசையில் திரும்பிவிடுவாள். அவள் அவனுடைய வகுப்பறையை கடக்கும்போது, திரும்பாமல் வேகமாக நடப்பாள்.

 

இது ஆரவுக்கு… ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. 

 

இது அவனுக்கு நிவாரணமா? இல்லை… வெற்றிடமா? அவனுக்கே தெரியவில்லை!

 

‘நான் தான் இதை வேண்டுமென்றே பண்ணினேன்,’ அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். 

 

‘நான் அவளை என் வாழ்க்கையிலிருந்து விலக்க நினைத்தேன்… இப்போ அவள் என்னை விட்டு விலகிவிட்டாள். இதுதான் நான் விரும்பினேன், நடந்தும் விட்டது! இருந்தும் மகிழ்வில்லையே ஏன்?’ என்று பலமுறை கேட்டுக் கொண்டான் ஆரவ் கிருஷ்ணா.

 

******

 

ஒரு நாள், அமுதினிக்கு பயிற்சி வகுப்பீடு செய்ய வாய்ப்பு கிடைத்தது. 

 

அவளுடைய கல்லூரி வளாகத்தில் இருக்கும் ஆலோசனை மையத்தில், ஒரு வாரம் பார்வையாளராக இருந்து, அறிக்கைகள் எழுத வேண்டும்.

 

அமுதினி ஆலோசனை மையத்திற்கு சென்றாள். அது உளவியல் துறையின் அடித்தளத்தில் இருந்தது. சத்தங்கள் இல்லாத அமைதியான இடம். சுவர்களில் பசுமையான வண்ணங்கள், பின்னணியில் மெல்லிய பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

 

ஒருங்கிணைப்பாளர் ரேகா மேடம் அவளை, “அமுதினி, வெல்கம். நீ இங்க ஒரு வாரம் அப்சர்வ் பண்ணுவ. நாங்க ஆன்சைட்டி, ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங், கேரியர் கவுன்சிலிங்-னு எல்லாமே செய்றோம். நீ செஷனில் உட்கார்ந்து, நோட்ஸ் எடுக்கலாம்…”

 

“தேங்க் யூ மேம்,” அமுதினி சொன்னாள்.

 

முதல் நாள், அவள் இரண்டு அமர்வுகளில் பார்வையாளராக இருந்தாள். ஒன்று மனச்சோர்வு ஆலோசனை, மற்றொன்று உறவு ஆலோசனை. அவள் கவனமாகக் கேட்டாள்.

 

சிகிச்சையாளர் எப்படி கருணை காட்டுகிறார், எப்படி கேள்விகளை ஆய்வு செய்து கேட்கிறார், எப்படி அவரை வழிநடத்துகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்தாள்.

 

அன்று மாலை, அவள் மையத்தின் சிறிய நூலகத்தில் அமர்ந்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தாள். அது ஒரு தனிமையான சிறு அறை. 

 

அமுதினி வேலையில் கவனமாக இருக்க, திடீரென்று, கதவு திறந்தது.

 

அங்கே, ஆரவ் கிருஷ்ணா உள்ளே நுழைந்தான்.

 

அமுதினி திடுக்கிட்டு உறைந்து போக, அவனும் பார்த்து அமைதியாக நின்றான்.

 

ஒரு நிமிடம், அவர்கள் இருவரும் மௌனமாக நின்றார்கள். காற்று கூட நின்றுவிட்டது போலொரு தோற்றம்.

 

ஆரவின் முகம் உடனே கடினமாகி, “இங்க என்ன பண்ற?” என்று கேட்க,

 

அமுதினி எழுந்து நின்று, “சார், என்… என்னோட பிராக்டிகம் அசைன்மென்ட் (practicum assignment)… சோ, நான் இங்க அப்சர்வ் பண்ணுறேன்.”

 

“இது என் ஸ்பேஸ்,” என்று அழுத்தமாக சொல்லி, 

 

“நான் இங்க என் தனிப்பட்ட ஆலோசனை தரேன்… அதனால, நீ வேற எங்காவது போ…”

 

“சார், நான் ரேகா மேம்-கிட்ட பெர்மிஷன் வாங்கி வந்திருக்கேன்…”

 

“எனக்கு அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியாது. ஆனா, நான் சொல்றேன், நீ இங்க வேண்டாம்… கெட் அவுட்.”

 

அமுதினியின் கண்களில் கண்ணீர் சுரக்க, “சார், ப்ளீஸ்… நான் உங்களை disturb பண்ண மாட்டேன். நான் அமைதியா—”

 

“நான் சொன்னது கேட்டியா இல்லையா?” ஆரவ் உறுமி, “கெட் அவுட் நவ்…” என்று விட்டான்.

 

அமுதினி தன் பொருட்களை எடுத்துக்கொண்டு, கதவை நோக்கி நடந்தாள். ஆனால் கதவருகே நின்று, அவள் திரும்பிப் பார்த்தாள்.

 

“சார், நான் ஒண்ணு சொல்றேன்… நீங்க எவ்வளவு தான் என்னை விரட்டினாலும், நீங்க ஹர்ட்டாகி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க தனிமையில் தவிக்கறீங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க எல்லாரையும் வெறுக்கிறீங்க… ஆனா, உண்மையில நீங்க உங்களையே வெறுக்கறீங்க…” என்று பட்டென்று சொன்னாள்.

 

ஆரவின் கண்கள் ஆத்திரத்தால் பிரகாசித்து, “நீ என்னைப் பற்றி என்ன தெரியும்? நீ ஒரு ஸ்டுபிட் ஸ்டூடண்ட்… உனக்கு என்ன பத்தி ஒன்னும் தெரியாது… சோ, என்னைப் பற்றி அனலைஸ் பண்ணாதே… என்னை ஜட்ஜ் பண்ணாதே…” என்று கோபத்தில் பேச,

 

“நான் உங்களை ஜட்ஜ் பண்ணல சார்… நான் உங்களை புரிஞ்சிக்க ட்ரை பண்றேன்… அவ்ளோதான்… ஆனா, நீங்கதான் ஏதேதோ கற்பனை பண்றீங்க..”

 

“எனக்கு உன் புரிதல் வேண்டாம்…” என்று கத்தி,

 

“எனக்கு யாரோட புரிதலும் வேண்டாம்… நான் தனியாதான் இருக்க விரும்பறேன்… இதை உன் மண்டையில ஏற்றிக்கோ… எனக்கும் யாரும் வேண்டாம்… யாருக்காகவும் நான் இருக்க விரும்பல…”

 

அமுதினி ஒரு கணம் அவனையே பார்த்தாள். அவனது கண்களில், கோபத்திற்கு பின்னால், அவள் பார்த்தது – பயம், வலி, தனிமை.

 

“சார், நீங்க ஒருநாள் உங்களை மன்னிச்சிக்க கத்துக்கிடுவீங்க. அப்போ உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்…” என்று அவள் மெதுவாகச் சொல்லி வெளியேறினாள்.

 

ஆரவ் அங்கேயே நின்றான். அவன் கைகள் நடுங்கி, இதயம் வேகமாகத் துடித்தது. அவள் வார்த்தைகள் அவனை நெருஞ்சி முள்ளாய் துளைத்தெடுத்தன.

 

“நீங்க உங்களையே வெறுக்கிறீங்க.” என்ற வரிகள் அவனை தாக்கின.

 

‘எப்படி அவளுக்குத் தெரியும்? எப்படி அவள் என்னை இவ்வளவு தெளிவாக நோட் பண்ண முடியும்?’

 

அவன் கோபமாக இருந்தான். அதே சமயம், மனதின் ஓரத்தில், அவளுடைய வார்த்தைகளை ஒப்புக்கொண்டது.

 

ஆரவ் தலையைக் கைகளில் பிடித்து நீண்ட நேரம் அமர்ந்திருந்தான்.

 

பிறகு, வழக்கம்போல கடுமையான முகத்துடன் எழுந்து வெளியேறினான். அவன் மனம் என்ன உணர்கிறது என்று மற்றவருக்கு தெரியக்கூடாது என்பதில் ஊர்ஜிதமாக இருந்தான்.

 

******

 

அன்று இரவு, அமுதினி தன் அறையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். 

 

பாவம்! அவள் எவ்வளவுதான் எழுந்துகொள்ள முயன்றாலும், ஆரவ் அவளை தள்ளிவிட்டுக் கொண்டே‌ இருந்து, மீண்டும் மீண்டும் அவளை காயப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

‘நான் ஏன் இன்னும் அவரைப் பற்றி கவலைப்படுகிறேன்? அவர் என்னை எவ்வளவு திட்டி தெளிவா சொல்லிட்டார்… ஆனாலும், நான் ஏன் விடுவதில்லை?’ என்று இயலாமையுடன் யோசித்தாள்.

 

ஆனால் அவளுக்குப் பதில் தெரிந்திருந்தது. அவள் அவனுக்குள் இருக்கும் வலியைப் பார்த்துவிட்டாள். அவன் தன்னை எப்படி தண்டித்துக் கொள்கிறான் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளால், அவனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிட முடியவில்லை.

 

அமுதினி அவளுடைய நாட்குறிப்பில் எழுதினாள்:

 

“ஆரவ் சார், நீங்கள் என்னை எவ்வளவு தான் விரட்டினாலும், நான் உங்கள் வலியை மறக்க முடியாது… நீங்க தனியாக இருக்க விரும்பறீங்க… ‌ஆனால், அந்த தனிமை உங்களை காப்பாற்றாது… அது உங்களை மொத்தமா தின்னுடும்… சீக்கிரமே உங்களை யாராவது புரிந்துகொள்ள அனுமதிப்பீங்க என்று நம்பறேன்… அது நான்னு இல்ல… வேற யாரோ ஒருத்தவங்க கூட உங்களுக்கு பக்கபலமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன்…”

 

அவள் நாட்குறிப்பை மூடி வைக்க, மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்ததும், அவள் சாராளத்தின் பக்கம் சென்று வெறித்துப் பார்த்தாள்.

 

***

 

அதே நேரம், ஆரவ் தன் வீட்டில், மதுபானத்தை குடித்துக் கொண்டிருந்தான். அவன் குடிக்கும்போது, அவனுக்கு ஒரு சின்ன நிம்மதி கிடைக்கும். ஆனால், அது தற்காலிகமானது, அவனுடைய வலிகள் மீண்டும் திரும்பிவந்து ஒட்டிக்கொள்ளும்.

 

அவன் அமுதினியைப் பற்றி நினைத்தான். அவளது கடைசி வார்த்தைகள்.

 

“நீங்க ஒருநாள் உங்களை மன்னிச்சிக்க கத்துக்கிடுவீங்க…”

 

‘என்னை மன்னிக்கவா?’ அவன் கசப்பாகச் சிரித்தான். 

 

‘நான் என்ன பண்ணினேன்? நான் எதற்காக என்னை மன்னிக்க வேண்டும்?’ என்று அவனுக்கு கத்த தோன்றியது.

 

ஆனால், ஒன்றை ஆழமாக அறிந்திருந்தான், அவனால், கடந்தகால நினைவுகள் சிலவற்றால், தன்னை மன்னிக்க முடியவில்லை.

 

அவன் தன் படுக்கையில் விழுந்தான். அவன் கண்களை இறுக மூடினான்.

 

ஆனால், அவனது கனவுகளில், இரண்டு முகங்கள் தோன்றின – ரியா மற்றும் அமுதினி. 

 

இரண்டு பெண்கள், வெவ்வேறு காலகட்டங்கள், ஆனால் இருவருக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பது ஆரவுக்கு தெரியும்.

 

அவன் தன்னுள்‌ நிரம்பி இருக்கும் இருளை மறைக்கும் கடுமையான கோபத்தை, தன் பாதுகாப்பாகக் கருதினான்.

 

மற்றவர்களுக்கு, ஆரவ் கிருஷ்ணா ஒரு திமிர்பிடித்த, கொடூரமான பேராசிரியர். ஆனால் அமுதினிக்கு, அவன் ஒரு உடைந்த ஆன்மா, சிகிச்சையை மறுக்கும் ஒரு காயமடைந்த போர்வீரன்.

 

அவள் அவனை காப்பாற்ற முடியுமா? அல்லது அவன் எப்போதும் தனிமையிலேயே தொலைந்துபோவானா?

 

காலம் தான் பதில் சொல்லும்.

 

 

********

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்