Loading

அத்தியாயம் – 6

 

மழை இன்னும் பெய்துக்கொண்டே இருந்தது. அமுதினி தன் அறைக்குள் நுழைந்ததும், கதவை மூடி பூட்டினாள். அவளது கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆரவின் வார்த்தைகள் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

 

அவள் படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள். அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவள் சத்தமாக அழவில்லை. அவள் அமைதியாக, தனியாக, தன் வலியை உள்ளுக்குள் அடக்கினாள்.

 

அறை சிறியதாக இருந்தது. ஆனால், அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சுவர்களில் சில புகைப்படங்கள் தொடங்கியிருந்தன. அவளது அம்மா அப்பாவின் புகைப்படங்கள்.

 

அமுதினி மெதுவாக எழுந்து அந்தப் புகைப்படத்தை நெருங்கினாள். அவளது விரல்கள் புகைப்படத்தினை மெதுவாகத் தொட்டன. அந்தப் புகைப்படத்தில், அவளது அம்மா அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் உயிருடன் இருந்தார்கள்.

 

அது நான்கு வருடங்களுக்கு முன், அதாவது கொரோனா காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

 

“அம்மா… அப்பா…” அமுதினி மெதுவாக முணுமுணுத்தாள். அவளது குரல் முற்றிலும் உடைந்தது.

 

அவளுக்கு அவர்கள் நினைவு வந்தது. அந்த பயங்கரமான நாட்கள். 2021-ன் இரண்டாவது அலை. கொரோனா பெருந்தொற்று எல்லா இடத்திலும் பரவிக்கொண்டிருந்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. மக்கள் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் இறந்துகொண்டிருந்தார்கள்.

 

அமுதினியின் அப்பா குமரன், அவர் ஒரு வங்கி மேலாளர். முதலில் அவளது அப்பாவுக்கு தொற்று ஏற்பட்டது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்க முயன்றார்கள். ஆனால், எங்குமே இடம் இல்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

 

அமுதினியின் அம்மா லீலா மகளை அருகே விடாமல் அவரே கணவனை பார்த்துக்கொண்டார். அமுதினி மாஸ்க் அணிந்து, தூரத்திலிருந்து உதவினாள். ஆனால், அவளது அப்பாவின் நிலைமை மோசமடைந்தது. மூச்சு விடுவதே கஷ்டமானது.

 

ஒருநாள் இரவு, அவரால் மூச்சு விட முடியவில்லை. அவசர ஊர்தி வரும் முன்னே, அவர் போய்விட்டார்.

 

அமுதினி அன்று எப்படி அழுதாள் என்பது அவளுக்கு நினைவில்லை. எல்லாமே ஒரு மங்கலான கனவு போல இருந்தது.

 

கொரோனா நெறிமுறைகளால் அவளுடைய அப்பாவிற்கு ஒழுங்கான இறுதி ஊர்வலம் கூட செய்ய முடியவில்லை. 

 

அவளது அம்மாவால் கணவனின் இழப்பை தாங்க முடியவில்லை. அவருக்கும் தொற்று ஏற்பட்டது. ஆனால், அவர் உடல் நலம் மட்டுமல்ல, மனதும் உடைந்துவிட்டது. அவள் அப்பாவை இழந்த ஒரு வாரத்தில், அவளது அம்மாவும் மகளை தனியே விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்.

 

இருபத்தியோராம் வயதில், அமுதினி அனாதையானாள்.

 

அவளுக்கு எந்த உறவினர்களும் இல்லை. அவளது அப்பா ஒரே மகன். அவளது அம்மாவுக்கும் சகோதரர்கள் இல்லை. அமுதினி தனியாக விடப்பட்டாள்.

 

அந்த நாட்களில், அமுதினிக்கு எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. அவள் உண்ணவில்லை, தூங்கவில்லை. அவள் வெறும் ஒரு நடமாடும் உடல் போல இருந்தாள்.

 

அவள் இளங்கலை உளவியல் முடித்திருந்தாள். முதுகலை படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால், அந்த உயிர்க்கொல்லி நோயால் எல்லாமே மாறிவிட்டது.

 

அவளுக்கு சொந்தமாக சொத்துக்கள் இருந்தது – ஒரு சிறிய வீடு, அப்பாவின் சேமிப்பு, காப்பீட்டு பணம் என்று வசதிக்கு குறைவில்லை. ஆனால், அவளுக்கு படிக்கும் மனமில்லை. அவள் மனதால் உடைந்து போயிருந்தாள். பெற்றோர் இல்லாத தனிமை அவளுக்கு மூச்சு முட்டியது.

 

அவள் ஒரு முடிவு எடுத்தாள். அவர்களது வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அவள் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்தாள். படிப்பு, கனவுகள், மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் போய்விட்டன. ஏதாவது செய்து, தன்னிலையை மறக்க வேண்டுமென்பதால், அவள் வேலை தேட ஆரம்பித்தாள்.

 

அவள் ஒரு ஆலோசனை மையத்தில் பயிற்சியாளராக சேர்ந்தாள். சம்பளம் குறைவு. ஆனால் அது அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் உண்ண வேண்டும், வாடகை கட்ட வேண்டும். 

 

அவளுக்கு சொந்தபந்தம் தானே இல்லயே தவிர்த்து வசதிக்கு குறைவு இல்லை – அவளது அப்பா மகளுக்காக நல்ல சேமிப்பை விட்டுச் சென்றிருந்தார். நிலையான வைப்புத்தொகை, முதலீடுகள், காப்பீட்டு பணம் எல்லாம் இருந்தன. ஆனால் அமுதினி அதைத் தொட விரும்பவில்லை. அவள் தன் சொந்த காலில் நிற்க விரும்பினாள்.

 

அந்த மையத்தினால் அவளுக்கு மனித மனங்களின் வலியைப் பற்றி உண்மையாகத் தெரிந்தது. மன அழுத்தம், பதட்டம், அதிர்ச்சி, துக்கம் என்று இன்னும் பலவற்றை நேரில் பார்த்தாள்.

 

அவர்களது வலிகளைப் பார்த்தபோது, அவளுக்கு ஒன்று புரிந்தது.

 

“எல்லோருக்கும் வலி இருக்கிறது. எல்லோரும் போராடுகிறார்கள். நான் மட்டும் அல்ல… நான் இப்படியே வாழ்ந்துட்டு இருக்க முடியாது. நான் என் கனவுகளை கைவிடமாட்டேன்… அம்மா அப்பா என்னை இப்படி பார்த்தா, அவங்களுக்கு வருத்தமா இருக்கும்… நான் சந்தோஷமா இருந்தா தான் அவங்களுக்கு நிம்மதி…” என்ற உண்மை அமுதினியின் மனதிற்கு உரைத்தது.

 

அவளுக்கு அன்பும் கருணையும் இயல்பாகவே இருந்தது – ஏனென்றால் அவளே வலியை அனுபவித்திருந்தாள் அல்லவா!

 

அந்த மூன்று வருடங்களில், அமுதினி தன் வலியை மெதுவாக ஏற்றுக்கொண்டாள். அவள் தன் பெற்றோரின் நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு படிப்படியாக முன்னேறினாள்.

 

பிறகு, ஒருநாள், “நான் மேற்கொண்டு படிக்க வேண்டும். நான் ஒரு நல்ல சிகிச்சையாளராக வேண்டும்… என்னை போன்று மனவேதனையில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும்…” என்று அவளுக்கு ஒரு எண்ணம் வந்தது.

 

அவள் முதுகலை உளவியலுக்கு விண்ணப்பித்தாள். அவளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. இப்போது அவள் இறுதியாண்டு மாணவி.

 

இத்தனையும் கடந்துவந்த அமுதினியால், ஆரவ் கிருஷ்ணாவின் வலியை நன்கு உணர முடிந்தது. அவனது கண்களில் இருந்த அந்த வெற்றிடம், அந்த பாதுகாப்பு வழிமுறைகள் எல்லாம் அவளுக்கு பரிச்சயமானது. ஏனென்றால், அவளும் அதையெல்லாம் கடந்துதான் வந்திருந்தாள்.

 

ஆனால், இப்போது… அவன் அவளை வகுப்பில் வேண்டாமென்று தூக்கி எறிந்துவிட்டான்.

 

அமுதினி அதனை தாங்கமுடியாமல் அழுது கரைந்தாள். 

 

‘நான் ஏன் அவரைப் பற்றி இவ்வளவு யோசிக்கிறேன்? இது காதலா? இல்ல… நிச்சயம் காதலா இருக்க முடியாது… நான் அவரை இரண்டு வாரம் தான் பார்த்திருக்கேன். இது ஒரு ஈர்ப்பு, ஒரு ஆர்வம்… அவருக்குள் இருக்கும் வலியை நான் புரிஞ்சிக்க விரும்புகிறேன்…‌ ஏன்னா, நானும் அந்த வலிகளை கடந்து வந்திருக்கேன்… அதான் காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

 

ஆனால், அவளது இதயமோ வேறு மாதிரி சொல்லிற்று. அவள் அவனை நினைக்கும்போது, அவளுக்கு ஏதோ ஒரு சொல்லமுடியாத உணர்வும் தோன்றியது. அவனது குரல், பார்வை, என்று எல்லாமே அவளை பாதித்தது. என்னை போல ஒருவன் என்ற எண்ணமும் காரணம்.

 

‘இது தவறு,’ அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். 

 

‘நான் அவரை பற்றி நினைக்கவே கூடாது… என்னை எவ்வளவு கீழ்த்தரமா பேசி இருக்கார்… ப்ச்… இதைவிட பெரிய கஷ்டத்தை எல்லாம் நான் பார்த்திருக்கேன்… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… நான் இன்னொரு ஸ்டாஃப் கிட்ட மாறி, என் படிப்பை முடிச்சி, என் வாழ்க்கையை நான் நினைச்ச மாதிரி வாழுவேன்…’ என்று நம்பிக்கை அளித்துக் கொண்டாள் அமுதினி.

 

என்னதான் இவ்வளவு சொல்லிக் கொண்டாலும், அவளுடைய மனம் அந்த முடிவை ஏற்க முரண்டுப்பிடித்தது.

 

அவளது கைப்பேசியில் அழைப்பு வரும் ஓசையில் யாரென்று பார்க்க, சுருதி அழைத்திருந்தாள்.

 

“ஹலோ?”

 

“அமுது, நீ எங்க இருக்க? எனக்கு உன்னை பார்க்கணும்.”

 

“நான் என் ரூம்ல இருக்கேன் சுருதி.”

 

“நீ வெளிய வா, பத்து நிமிஷத்துல நான் வர்றேன்…” எனக் கூறி அழைப்பை துண்டித்து விட்டாள் சுருதி.

 

அமுதினி எழுந்து தன் முகத்தை கழுவினாள். அவளது கண்கள் சிவந்திருந்தன. ஆனாலும், தன்னை சமாளித்துக்கொள்ள முயன்றாள்.

 

பத்து நிமிடங்களில் கதவை தட்டும் ஓசையில், தன்னை சமன்படுத்திக்கொண்டு, கதவை திறந்தாள் அமுதினி.

 

சுருதி உள்ளே வந்து, தோழியை பார்த்ததும், “நீ அழுதியா அமுது?” என்று கேட்க,

 

“இல்ல… கண்ணுல ஏதோ விழுந்துச்சு…” அமுதினி பொய் சொல்ல முயன்றாள்.

 

“பொய்னு அப்பட்டமா தெரியுது அமுது.. நீ இன்னும் ஆரவ் சார் பத்தியே யோசிக்கிற… அவர் உன்னை எவ்வளவு மோசமா ட்ரீட் பண்ணினாரு, இன்னும் நீ அவரை மறக்கலயா?”

 

“சுருதி, எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. நான் அவரை மறக்க ட்ரை பண்றேன்… ஆனா, முடியல… அவர் என்னை கொடூரமா நடத்தினார், என்னை முட்டாள்னு சொல்லி, கிளாஸுக்கு வர வேண்டாம்னு சொன்னாரு… இதெல்லாம் எனக்கு தெரியுது… ஆனாலும், என் மனசு கேட்காம, அவருடைய கஷ்டத்தை நினைச்சு வருத்தமா இருக்கு!”

 

சுருதி அவள் பக்கத்தில் அமர்ந்து, “அமுது, உன்னோட இந்த மனிதாபிமானம் உன்னோட வீக்னெஸ் இல்ல, ஸ்ட்ரென்த்… ஆனா, நீ அதை தப்பான நபருக்கு செலவழிக்கிற… ஆரவ் சார் உன்னை பாராட்ட மாட்டார்… உன்னை ஹர்ட் பண்ண மட்டுமே செய்வார்…”

 

“எனக்குத் தெரியும் சுருதி,” என்று அமுதினி மெதுவாகச் சொன்னாள். 

 

“ஆனா நான் ஒண்ணு சொல்றேன். நான் என் பெத்தவங்களை இழந்தப்போ, நான் எவ்வளவு வலியில் இருந்தேன்னு உனக்குத் தெரியும். அப்போ யாராவது என்னை புரிஞ்சிக்கிட்டாங்களா? இல்லல… எல்லாரும் எனக்காக அனுதாபப்பட்டாங்க… பட், யாரும் பாசம் காட்ட முன்வரல… எல்லாரும் ‘பீ ஸ்ட்ராங்’னு சொன்னாங்க, ஆனா என் வலியை யாரும் அக்னாலெட்ஜ் பண்ணல… அதனால, என் வலிகளை மறைச்சு, மற்றவர்களிடம் அழாம இருக்க ட்ரை பண்ணினேன்… சந்தோஷமெல்லாம் போய் ரொம்ப அமைதி ஆகிட்டேன்… நான் மூன்று வருஷம் என்னை மறந்து வேலை பார்த்தேன்…” என்று மனதின் ஆழத்திலிருந்த வலிகளை கொட்டினாள் அமுதினி.

 

சுருதியும் குறுக்கே பேசாமல் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“இப்போ ஆரவ் சார் அதே மாதிரி இருக்காரு சுருதி… அவர் தன் வலியை மறைச்சிட்டு இருக்காரு. அவர் எல்லாரையும் தள்ளி வைக்கிறாரு… ஏன்னா, அவருக்கு யாராவது தன்னை சரியா புரிஞ்சிக்குவாங்கன்னு நம்பிக்கை இல்ல. ‘நீங்க தனியில்ல’ன்னு நான் அவருக்கு அதை சொல்ல விரும்பினேன்.. ஆனா, அவரு காதுகொடுத்து கூட கேட்க விரும்பல.”

 

சுருதி அமுதினியின் கைகளைப் பிடித்து, “அமுது, நீ ஒரு அழகான மனசு கொண்டவ… உன் அன்பும், பாசமும் தான் உன்னோட பெரிய ஸ்ட்ரென்த்… ஆனா, நீ உன்னையே காப்பாத்திக்க மறந்துடாதே… நீ உன்னோட பெத்தவங்களை இழந்து, அதிலிருந்து மீண்டு வந்து, படிக்க ஆரம்பிச்சி இருக்க… இந்த ஃபைனல் இயர் உனக்கு ரொம்ப முக்கியம்… ஆரவ் சார் மாதிரி ஒருத்தர் உன்னை டிஸ்ராக்ட் பண்ணட்டும்னு நீ விட்டுடாத…” என்று அக்கறையுடன் சொல்லவும், தோழியும் கேட்டுக்கொண்டாள்.

 

“நீ சொல்றது சரிதான் சுருதி… நான் விட்டுடுறேன்… நாளைக்கு டீன் மீனாட்சி மேம் எனக்கு இன்னொரு புரொஃபசரை அரேஞ்ச் பண்ணிடுவாங்க… நான் என் லைஃப்ப பார்த்துகிட்டு போறேன்… எனக்கு ஒன்னுமில்ல சுருதி… நீ கவலைப்படாதே… அமுதினிக்கு எதையும் தாங்கும் இதயம்…” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

ஆனால் அவள்‌ இதயமோ கனமாக இருந்தது. அவளால் ஆரவை நினையாமல் இருக்க முடியவில்லை.

 

***

 

அதே நேரம், ஆரவ் கிருஷ்ணா தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைதியற்று நடந்துகொண்டிருந்தான். 

 

அவனால் நிம்மதியாக அமர்ந்திருக்க முடியவில்லை! படிக்க முடியவில்லை! தூங்க முடியவில்லை!

 

அமுதினியின் முகம் அவனை விட்டு விலகவில்லை. அவளது கண்களில் இருந்த வலி, அவளது கடைசி வார்த்தைகள் – எல்லாம் அவனை வேட்டையாடின.

 

“நீங்க நல்லவர்னு நீங்களே மறந்துட்டீங்க.”

 

அவனுக்கு கோபமாய் வந்தது. அவள் எப்படி அவனைப் பற்றி எடைபோட முடியும்? அவளுக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்?

 

ஆனால் அதே மனமோ, ‘அவள் உன்னை ஜட்ஜ் பண்ணல. அவள் உன்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணினா… அவள் உன் வலியை பார்த்தா… அதனால்தான், நீ பயந்துப்போய் அவளை தள்ளி வைக்கிற…’ என்று கூக்குரலிட்டது.

 

அவன் அந்த குரலை அடக்க முயன்று, ‘இல்ல. நான் சரியானதைத்தான் பண்ணினேன்… இனியும் அவள் என் கிட்ட வந்தா, நான் அவளை ஹர்ட் பண்ண தான் செய்வேன்… அதனால், அவளை தள்ளி வைச்சதுதான் நல்லது…’ என்று விவாதம் புரிய, அதில் அவனுக்கு தான் நிம்மதி இல்லை. 

 

அவன் தன் பால்கனியில் நின்றிருக்க, மழை நின்று விட்டிருந்தது. வானம் மெதுவாக தெளிவு பெற, முழுமதி மேகங்களுக்கு நடுவே ஜொலித்தது.

 

அவன் அமுதினியைப் பற்றி நினைத்தான். அவளது நேர்மையான பார்வை, அவளது மென்மையான குரல், அவளது பாசம் – எல்லாம் அவனை தொந்தரவு செய்தன.‌ ஏனென்றால், இவனது பாதுகாப்பு கலசத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதனை அவள் பார்த்துவிட்டாள்.

 

‘நான் அவளை மறந்திடுவேன்… நாளையிலிருந்து அவள் இன்னொரு புரொஃபசர் கிட்ட மாறிடுவா… நான் அவளை மீண்டும் பார்க்கும் சூழ்நிலை வராது… அப்படியே வந்தாலும் நான் விலகிடுவேன்… அவ்வளவுதான், எல்லாம் முடிஞ்சிடுச்சு…’ என்று ஆறுதல் போல சொல்லிக் கொண்டான் ஆரவ்.

 

ஆனால், அவன் இதயத்தின் ஒரு சிறிய பகுதி, அமுதினியை பார்க்காமல் போவதைப் பற்றி வருத்தப்பட்டதை என்று அறியவில்லை பாவம்!

 

இவற்றை சிந்தித்துவிட்டு அவன் தன் படுக்கையில் விழுந்து, கண்களை மூடினான்.

 

ஆனால், அவனது கனவுகளிலும், அமுதினியின் முகம் தோன்றியது. அவளது வார்த்தைகள் தான் எதிரொலித்தது.

 

“நீங்க காயப்பட்டு இருக்கீங்க… நீங்க வலியை அனுபவிச்சிட்டு தவிக்கறீங்க… நீங்க ரொம்ப பயப்படுறீங்க…”

 

அவன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான்… முத்துக்களாய் வியர்வைத் துளிகள் அவனுடைய நெற்றியில் இருந்தது.

 

‘என்ன நடக்குது எனக்கு? ஏன் என்னால் அந்த பொண்ணை மறக்க முடியல?’

 

அவனுக்கு பதில் தெரியாமல், கடுமையான இருளில் தவித்துக் கொண்டிருந்தான்.

 

******

 

மறுநாள் காலை, அமுதினி மீனாட்சியிடம் போனாள். 

 

அவர் அவளிடம், “அமுதினி, நான் உனக்கு சரண்யா மேம்-கிட்ட அரேஞ்ஜ் பண்ணிருக்கேன்… அவங்க நல்ல புரொஃபசர்… நீ எதுனாலும் அவங்க கிட்ட கேட்டுக்கோ…” என்று தன்மையாக சொன்னார்.

 

அமுதினியும், “தேங்க் யூ மேம்…” என்று மென்னகையுடன் சொன்னாள்.

 

ஆனால், அவள் மனதில், ஒரு வெற்றிடம் இருந்தது. 

 

‘நான் ஆரவ் சாரை மீண்டும் பார்க்க மாட்டேனா? இது தான் முடிவா?’

 

ஆனால், விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது என்று அவளுக்கு தெரியாது. 

 

இது ஆரம்பம் மட்டுமே!

 

அவர்களது கதை இன்னும் முடியவில்லை! 

 

********

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்