அத்தியாயம் – 5
அங்கு மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. சென்னை வானம் கார்மேகத்தால் மூடப்பட்டு, பகல் பொழுதே இரவு போல் இருந்தது. உளவியல் துறையின் வராண்டாவில் மாணவர்கள் சிலர் மழையைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். யாரும் வெளியே போக விரும்பவில்லை.
அமுதினி நூலகத்தின் ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்திருக்க, கைகளில் ஒரு புத்தகம் இருந்தது, ஆனால், அதனை படிக்கவில்லை. அவளது பார்வை வெளியே மழையைப் பார்த்துக்கொண்டிருந்தது.
அவளுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்ததோ வேறு.
நேற்றைய விளக்கக்காட்சிக்கு பிறகு, ஆரவ் அவளை ஒரு முறை கூட சரியாகப் பார்க்கவில்லை. அவன் அவளை வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
வகுப்பில், அவன் மற்ற மாணவர்களிடம் கேள்வி கேட்பான், ஆனால் அமுதினியை புறக்கணித்திடுவான். அவன் வகுப்பீடுகளை வாங்கும்போது, அவளுடையதை பார்க்காமல் கூட மேஜையில் வைத்துவிடுவான்.
இது அமுதினியை காயப்படுத்தியது. ஆனால், அதே சமயம், அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது.
‘அவர் என்னைத் தள்ளி வைக்கிறார் என்றால், அவர் என் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நான் அவன் பாதுகாப்பு கவசத்தை தொட்டுவிட்டேன்.’
“அமுது!” சுருதியின் குரல் கேட்டது. அவள் மழையிலேயே ஓடி வந்திருக்க,
“என்னடி, லைஃப்ரரிலயே உட்கார்ந்திருக்க? இன்னைக்கு கிளாஸ் இல்லையே…”
“தெரியும்… ஜஸ்ட் கொஞ்சம் படிச்சிட்டு இருந்தேன்…” என்று அமுதினி புன்னகைத்தாள்.
சுருதி அவளைக் கூர்ந்து கவனித்து, “நீ இன்னும் ஆரவ் சார் பத்தியே யோசிக்கிறியா?” என்கவும்,
அமுதினி மெதுவாகத் தலையசைத்து, “அவர் என்னை முழுசா இக்னோர் பண்றாரு சுருதி… நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்?” என்று கேட்க,
“நீதான் அவர் பர்சனல் லைஃப் பத்தி மறைமுகமா கேள்வி கேட்டே… அவருக்கு அது பிடிக்கலன்னு நினைக்கிறேன்…”
அமுதினியோ, “நான் அவரை ஹர்ட் பண்ண விரும்பல சுருதி… நான் சும்மா… ப்ச்… இங்க அவர் தனியில்லைன்னு சொல்ல நினைச்சேன்… என்னால நான் அவரை விட முடியல…” என்று வேதனையுடன் சொல்ல,
சுருதி பதட்டமாகப் பார்த்து, “அமுது, நீ அவர் மேல… காதலா?” என்று கேட்டுவிட,
அதில் அமுதினி திடுக்கிட்டாள்.
“இல்ல! அது இல்ல சுருதி… இது… இது வேறு… நான் அவரை ஒரு புதிர் மாதிரிதான் பார்க்கிறேன்… அவருக்குள் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு… அவ்வளவுதான்…” என்று தெளிவுடனே சொன்னாள்.
“ஜாக்கிரதை அமுது… சில புதிர்களை சால்வ் பண்ணும்போது, நம்மளே ஹர்ட்டாகி போய்டுவோம்…” என்ற சுருதியின் வார்த்தைகள் பெண்ணவளை யோசிக்க செய்தது.
அமுதினி எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் மீண்டும் மழையைப் பார்த்தாள்.
***
அதே நேரம், ஆரவ் தன் கேபினில் இருக்க, மேஜையில் பல வகுப்பீடு தாள்கள் குவிந்திருந்தன. ஆனால், அவன் அவற்றை பார்க்கவில்லை. அவன் சாராளத்தின் வெளியே, மழையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அமுதினியின் வார்த்தைகள் அவனை விட்டு விலகவில்லை.
“அவங்களுக்கு பரிவும் பாசமும் தான் தேவையே தவிர தீர்ப்பு இல்ல…”
“ட்ராமா சர்வைவர்ஸ் தன்னைத்தானே ப்ரோட்டெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க…”
இவற்றை நினைக்க நினைக்க, அவன் கைகள் முஷ்டிகள் இறுகி, ‘அவள் என்னைப் பற்றி என்ன தெரிஞ்சிக்க விரும்புகிறாள்? அவள் ஏன் என்னை அனலைஸ் பண்ணுகிறாள்? நான் அவளுக்கு ஒரு case study-யா?’ என்று ஏகப்பட்ட கேள்விகள்.
அவன் கோபமாக இருந்தாலும், அவளது வார்த்தைகளால் கொஞ்சம் அசைக்கப்பட்டிருந்தது. அவள் அவனுக்கு தீர்ப்பு சொல்ல நினைக்கவில்லை. அவள் அவனை புரிந்துகொள்ள முயன்றாள். அது அவனுக்கு சங்கடமாக இருந்தது.
‘இல்லை… நான் அவளை என் வாழ்க்கையில் வர விடக்கூடாது. நான் திரும்பவும் யாரையும் நம்ப மாட்டேன். அவளுக்கு என் பலவீனத்தை காண்பிக்க மாட்டேன்…’
அவன் திடீரென்று எழுந்து, தன் மேல் சட்டையை எடுத்துக்கொண்டு, கேபினிலிருந்து வெளியேறினான்.
மழை பெய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை, இப்பொழுது அவனுக்கு வெளியே செல்ல வேண்டும்! யோசிக்க வேண்டும்! தனிமை வேண்டும்!
அவன் நடைபாதை வழியாக நடக்க, மாணவர்கள் சிலர் அவனைப் பார்த்ததும் வழி விட்டார்கள். அவர்கள் அவனைப் பயத்துடன் பார்த்தார்கள். அவன் யாரிடமும் பேசவில்லை, யாரையும் பார்க்கவில்லை.
அவன் பிரதான நுழைவாயிலை நெருங்கும்போது, திடீரென்று யாரோ அவனுடன் மோதினார்கள்.
அமுதினி.
அவள் நூலக்த்திலிருந்து வெளியேறி, நுழைவாயிலை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவள் தன் கையில் இருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டு நடக்கவும், கவனக்குறைவாக ஆரவுடன் மோதியதும், அவளது புத்தகங்கள் கீழே விழுந்தன.
அவள் யாரை இடித்தால் என கவனிக்காமல், “சாரி!” என்று அவசரமாக சொல்லி குனிந்து புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தாள்.
ஆரவ் நின்று அவளை பார்க்க, முகத்தினில் கோபம் மட்டுமே அப்பிக்கிடந்தது.
“நீ கண்ணுக்கு முன்னாடி யார் வராங்கன்னு பார்க்க மாட்டீயா?” அவன் குரல் கத்தி போல் கூர்மையாக இருந்தது.
அக்குரலில் அமுதினி சட்டென்று நிமிர, மனமோ ‘இவனையா இடித்து தொலைத்தாய்!’ என்று நொந்துக் கொண்டது.
“சார், சாரி… நிஜமா நான் கவனிக்கல…”
“உன் கவனக்குறைவால நான்தான் பாதிக்கப்பட வேண்டியிருக்கு… உன்னால பார்த்து ஒழுங்கா நடக்கக்கூட முடியலையே… நீயெல்லாம் எப்படி ஒரு தெரபிஸ்ட் ஆகப் போறே?”
அவன் வார்த்தைகள் கடுமையாக இருந்தன. சுற்றிலும் இருந்த மாணவர்கள் சிலர் நின்று வேடிக்கை பார்க்கவும், அமுதினிக்கு சங்கடமாக இருந்தது.
“சார், அதுக்கு நான் மன்னிப்பு கேட்டேன்…”
“மன்னிப்பு போதாது” என்ற ஆரவ்,
“நீ எப்பவும் இப்படித்தான். கவனக்குறைவு, எமோஷனல், தேவையில்லாம மற்றவங்க விஷயத்துல நுழைஞ்சு…” அவன் நிறுத்தினான்.
மேலும் வார்த்தைகளை விடாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான்.
அமுதினி நமிர்ந்து பார்க்க, கண்களில் அப்பட்டமான வலி தெரிந்தது. ஆனால், அவன் முன்னால் உறுதியுடன் நின்றிருந்தாள்.
“சார், நான் தேவையில்லாம உங்க விஷயத்துல நுழையல… நான் சும்மா… புரிஞ்சிக்க ட்ரை பண்ணினேன் அவ்ளோதான்.”
“என்னை யாரும் புரிஞ்சிக்க வேண்டாம்” ஆரவின் குரலில் சீற்றம்.
“குறிப்பா நீ புரிஞ்சுக்கவே தேவையில்ல… உனக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது… நீ ஒரு இடியட் ஸ்டூடண்ட், அவ்ளோதான். உன்னோட தியரடிகல் நாலேஜை என் மேல ப்ராஜெக்ட் பண்ண நினைக்காதே…”
அமுதினி அதிர்ந்தாள். அவன் அவளை ‘முட்டாள் மாணவி’ என்று சொன்னதும், அவளுக்கு கண்ணீர் சுரந்தது. ஆனால் அவள் அழவில்லை. அவள் வலியை கூட்டி விழுங்கினாள்.
“சார், நீங்க என்ன நினைச்சாலும் பரவாயில்ல… ஆனா நான் ஒண்ணு சொல்றேன் – நீங்க எவ்வளவு தான் கொடூரமா நடந்துக்கிட்டாலும், நீங்க காயப்பட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்… நீங்க மற்றவங்களை தள்ளி வைக்கறீங்க… ஏன்னா, நீங்க பயப்படுறீங்க…”
ஆரவின் முகம் கல்லாகி, ஒரு அடி நெருங்கியவனின் பார்வை அவளை ஊடுருவியது.
“நான் பயப்படுறேனா?” அவன் கேலியாகச் கூறி,
“நீ என்ன நினைக்கிற? நீ என்னை சேவ் பண்ணப் போறியா? நீ என் ஹீலர்-ஆ? நீ என்னை ஃபிக்ஸ் பண்ணப் போறியா? நீ ஒரு ஏஞ்சல்னு நினைப்பா?” என்று திமிருடன் கேட்டான்.
“இல்ல சார். நான் யாரையும் ஃபிக்ஸ் பண்ண முடியாது… ஏன்னா, நான் ஒன்னும் ஏஞ்சல் இல்ல பாருங்க… நானே சாதாரண மனுஷி… நீங்க தனியில்லைன்னு சொல்ல விரும்பினேன்… மத்தபடி ஒன்னுமில்ல…” என்று அவளும் கோபமாக பேச,
“நான் தனிதான்… அதுதான் எனக்கு விருப்பம்… எனக்கு யாரும் வேண்டாம்… குறிப்பா, உன்னை போன்ற அப்பாவி, எமோஷனல், அறிவில்லாத பெண்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்…” என்று மனசாட்சியின்றி பேசினான் ஆரவ் கிருஷ்ணா.
அவன் வார்த்தைகள் கத்தியாக அமுதினியின் இதயத்தில் பாய்ந்தன. அவளது கண்களில் கண்ணீர் தளும்பியது.
“சார்… நீங்க ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?”
“ஏன்னு உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்ல… இனிமேல் என்னை அப்ரோச் பண்ணாதே… என்னை அனலைஸ் பண்ண நினைக்காதே… என்னைப் பத்தி யோசிக்காதே… அந்த சில்லி தாட்ஸை மறந்துடு… கிளியரா?”
அமுதினி ஒரு கணம் அவனையே பார்த்தாள். அந்த கண்களில் அவள் பார்த்தது, கோபம் மட்டுமல்ல. அதில் வலி, பயம், மறுக்கப்பட்ட பாதிப்பு என்று பலதும் அடங்கிருந்தது.
அவள் வலியுடன் சிரித்து, “சார், நீங்க எவ்வளவு தான் என்னை தள்ளி வைச்சாலும், உங்க வலியை நான் பார்த்துட்டேன்… நீங்க ஏன் எல்லாரையும் வெறுக்கிறீங்கன்னு எனக்கு தெரியாது… பட், ஒரு விஷயம் தெரியுது – நீங்க நல்லவர்னு நீங்களே மறந்துட்டீங்க…”
ஆரவ் அதிர்ந்திருக்க, அவள் இப்படிச் சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் கோபம் உச்சத்தை எட்டியது.
“கெட் லாஸ்ட்,” அவன் உறுமினான்.
“இன்ஃபெக்ட், நீ இன்னைக்கு முதல் என் கிளாஸ்க்கு வரவே வேண்டாம். நீ டீன் மீனாட்சி மேம்-கிட்ட போயி, இன்னொரு புரொஃபசர் கிட்ட மாத்திக்கோ… நான் உன்னை என் கிளாஸ்ல சேர்க்கவே மாட்டேன்…” என்று வெறுப்புடன் சொன்னான் ஆரவ்.
அமுதினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன சார்?”
“நான் சொன்னது கேட்டியா இல்லையா? நீ என் கிளாஸ்ல வரவே வேண்டாம்… நீ என்னை இர்ரிடேட் பண்ற… நீ என் நேரத்தை வேஸ்ட் பண்ற… உன்ன பார்த்தாலே எனக்கு கடுப்பாகுது… கெட் அவுட் ஆஃப் மை சைட்…” என்று எரிச்சலும் ஆத்திரமுமாகச் சொல்லி, அந்த தூறலில் திரும்பி நடக்க ஆரம்பித்தவன் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அமுதினி அங்கேயே நின்றாள். அவளது கைகளில் புத்தகங்கள் இருக்க, அவமானத்தில் உடல் நடுங்கியது. அவளது கண்களிலோ கண்ணீர் வழிந்தது. சுற்றிலும் இருந்த மாணவர்கள் அவளைப் பார்த்தார்கள். ஆனால், யாரும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அங்கிருந்து அமைதியாக விலகினார்கள்.
அங்கு சுருதி ஓடி வந்து, “அமுது! என்னாச்சு? நான் பார்த்தேன், அவர் உன்னோட என்ன பேசினார்?” என்று தவிப்புடன் கேட்க,
நண்பியை கட்டிக் கொண்டு அமுதினி அழுதாள். முதல்முறையாக, அவள் தன் தோழியின் தோளில் சாய்ந்து அழுதாள்.
“அவர் என்னை அவரோட கிளாஸ்லிருந்து போகச் சொன்னார் சுருதி… அவர் என்னை… idiot-னு சொன்னார்… அவர் என்னை வேண்டாம்னு சொன்னார்… என்னால கடுப்பாகுதாம்… நான் என்னடி தப்பு பண்ணேன்? என்னை எப்படி இப்படியெல்லாம் பேசலாம்? அதுக்கு அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று அரற்றிக் கொண்டிருந்தாள்.
சுருதி அவளை ஆறுதலாக தழுவி, “அவர் ரொம்ப மோசம் அமுது… நீ என்ன தப்பு பண்ணின? நீ அவரை புரிஞ்சிக்க ட்ரை பண்ணினே, அவ்ளோதான்… விடுடி…”
“ஆனா, அவருக்கு வேண்டாம் போல இருக்கு சுருதி… அவர் எல்லாரையும் தள்ளி வைக்கறார்… அவர் தனியா இருக்க விரும்புறார்… அவரை கேர் பண்றதை விரும்பல… நல்ல செய்ய நினைச்சது தப்பா இப்போ?”
“தப்புன்னே வச்சிக்கிட்டு, நீ அவர் நினைப்படியே விட்டுடு அமுது… நீ போயி டீன்-கிட்ட பேசு, இன்னொரு புரொஃபசர்-கிட்ட மாத்திக்கோ… இனி அவரோட வாக்குவாதம் பண்ணாதே…” என்று மேலும் சமாதானம் சொல்லி தோழியின் அழுகையை நிறுத்தினாள் சுருதி.
அமுதினி அழுகையை நிறுத்திருந்தாலும், அவனால் அவள் இதயம் சிதைந்திருந்தது. அவள் ஆரவைப் புரிந்துகொள்ள முயன்றாள். ஆனால், அவன் அவளை வலிக்க வைத்தான்.
***
அன்று மாலை, அமுதினி துறை தலைவர் மீனாட்சியின் அறைக்கு சென்று மனமில்லாமல் கதவை தட்டினாள்.
“கம் இன்…” உள்ளே குரல் கேட்டது.
அமுதினி உள்ளே நுழைந்தாள்.
டீன் மீனாட்சி ஒரு கம்பீரமான, அதே சமயம் அன்பான பெண்மணி. அவர் அமுதினியைப் பார்த்ததும், “என்ன அமுதினி? ஏதாவது பிராப்ளமா?” என்று அக்கறையுடன் கேட்டார்.
அமுதினி தயங்கி, “மேம், எனக்கு… ஆரவ் சார் கிளாஸ்லிருந்து இன்னொரு புரொஃபசர் கிட்ட மாத்த வேண்டும்…”
“ஏன்? என்ன பிராப்ளம்?” என்று டீன் மீனாட்சி கேட்க,
“மேம், அவர்… அவர் என்னை அவர் கிளாஸ்க்கு வர வேண்டாம்னு சொன்னார்.”
அவரது முகம் தீவிரமாகி, “என்ன? அவர் ஏன் அப்படிச் சொன்னார்? நீ எதாவது தப்பு பண்ணினியா?”
“இல்ல மேம். நான்… நான் அவரை கொஞ்சம் கேள்வி கேட்டேன். அதனால அவருக்கு கோபம் வந்துருச்சு…”
மீனாட்சி சற்று யோசித்து, “ஆரவ் சார் யாரோடவும் ரொம்ப பேசாத மனிதர் அமுதினி… அவர் யாரோடயும் பழகமாட்டார்… அவர் எப்பவும் தனியா இருப்பார்… ஆனா, அவர் பிரில்லியன்ட்… சரி ஓகே, நான் உனக்கு வேற புரொஃபசர் அரேஞ்ச் பண்றேன்… கவலைப்படாதே…” என்று சொல்ல,
“தேங்க் யூ மேம்,” அமுதினி மெதுவாகச் சொன்னாள்.
அவள் வெளியே வர, இதயம் கனமாகி இருந்தது.
‘நான் தோற்றுவிட்டேனா? நான் அவரை விட்டுவிட வேண்டுமா? அவர் என்னை மறக்கச் சொன்னார். நான் அவரை மறக்க முடியுமா?’ என்று அவளுக்குள்ளே ஏதோதோ எண்ணங்களில் வீட்டிற்கு சென்றாள்.
*******
அதே நேரம், ஆரவ் தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் மழையை பார்த்துக்கொண்டு நின்றான்.
அவன் கைகளில் ஒரு கிளாஸ் விஸ்கியை மெது மெதுவாக குடித்தான். ஆனால், அது அவனுக்கு எந்த நிம்மதியும் தரவில்லை.
அமுதினியின் கடைசி வார்த்தைகள் அவனை வேட்டையாடின.
“நீங்க நல்லவர்னு நீங்களே மறந்துட்டீங்க…”
அவன் கிளாஸை தூக்கி சுவரில் எறிய, அது உடைந்து சிதறியது.
“நான் நல்லவன் இல்ல! நான் ஒரு நல்லவன் இல்ல! நல்லவனா இருந்து பட்டதெல்லாம் போதும்… எல்லாரும் என்னை விட்டு விலகியிருந்தா மட்டும்தான் எனக்கு நல்லது!” என்று ஆரவ் உறுமினான்.
ஆனால் அவனது இதயத்தின் ஆழத்தில், ‘நீ பயப்படுகிற ஆரவ்… நீ அவளை தள்ளி வைக்கிற… ஏன்னா, அவள் உன் வலிகளை நோட் பண்றா… அவள் உன் பாதுகாப்பு வேலியை உடைக்க ஆரம்பித்துவிட்டாள்…’ என்றொரு சிறிய குரல் கேட்டது.
ஆரவ் அந்த குரலை
அடக்கி, தன் படுக்கையில் விழுந்து, கண்களை இறுக்கி மூடினான். ஆனால், அவனால் தூங்க முடியவில்லை.
காரணம், அமுதினியின் முகம் அவனை விட்டு விலகாமலிருக்க நித்திரையும் தொலைந்திருந்தது.
*********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
1
+1