Loading

 

காதல் – 1

 

 

 

 

“தம்பி இந்த தடவையாவது இந்த சம்பந்தம் அமைஞ்சுருமா.?” என்ற அன்னையிடம் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் விமலன்.

 

ஓரத்தில் அமர்ந்து சமையலுக்குத் தேவையான காய்களை வெட்டிக் கொண்டிருந்த தமயந்தியிடமும் எந்த வித பாவனைகளும் இல்லை. இது முதல் தடவை என்றால் சரி.. இவளும் கணக்கில்லாமல் பலரின் முன்பு அலங்கார பொம்மையாக நின்றதன் விளைவு திருமணம் என்ற வார்த்தையையே வெறுத்துப் போய் இருக்கிறாள்.

 

அவர்களின் அன்னையான தேவகியே மீண்டும் “இந்த தடவை அவங்க கேஅடகற சீர்செனத்தியைச் செஞ்சரலாம் தம்பி.. இவளுக்கும் வயசாகிட்டே போகுது.. பணத்தைப் பார்த்தா இவ கல்யாணம் நடந்த மாதிரி தான்.. வர்றவங்ககிட்ட பார்த்து பக்குவமா பேசு” என்றார்.

 

அன்னையின் பேச்சில் அதிர்ந்த விமல் “வர்றவங்க குறைஞ்சபட்சம் முப்பது பவுனுக்கு மேல கேட்பாங்களேமா.? அம்புட்டு நகைக்கு எங்க போறது.? அதோட கல்யாண செலவும் இருக்கு.. நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி தான்மா எல்லாமும் பண்ண முடியும்” என்று நியாயமான கூற்றையே மொழிந்தான்.

 

இதில் அவனின் அன்னை திருப்தியடையவில்லை. 

 

“காசு, பணம்னு பார்த்துட்டு இருந்தா எப்படிப்பா.? கூட பொறந்தவளுக்கு இது கூட செய்ய முடியாதா.? இவ நல்லா இருந்தா தானே உனக்கும் பிற்காலத்துல எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கும்..” என்று அவனைச் சமாதானப்படுத்தவே முயற்சித்தார்.

 

அவர் முடிவு செய்து விட்டார். இனி எத்தனை சமாதானங்களை உரைத்தாலும் அவர் ஏற்றுக் கொள்ள போவதும் இல்லை. அவரிடம் பேசுவது வீண் என்று அமைதியாக எழுந்து சென்றவனுக்கு மனதில் சொல்ல முடியாத பாரங்கள் சுமையாக மாறியது.

 

உடன்பிறந்தவளுக்கு செய்வதில் இவனுக்கு எந்த ஆட்பேசனையும் இல்லை. ஆனால் வரைமுறை என்று ஒன்று இருக்கிறதல்லவா.? மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குபவனின் தலையில் இப்படியொரு பாரத்தை இறக்கி வைத்தால் இவனும் என்ன தான் செய்வான்.?

 

இப்போது தான் பெரிய தமக்கையின் மகளுக்குக் காது குத்த வேண்டும் என்றும் குறைந்தபட்சம் மூன்று பவுனாவது போட வேண்டும் என்ற தமக்கையின் கூற்றையும் செவிமடுத்து தாய்மாமனாக முடிந்த வரையிலும் நன்றாகவே செய்து முடித்து இருந்தான்.

 

அதற்கே அவன் வாங்கிய கடன்களை இன்னும் அடைத்தபாடில்லை. அதற்குள் அவனின் அன்னை இப்படியொரு சுமையைத் தலையில் ஏற்றினால் எப்படி.?

 

அவனின் மனது ஓயாமல் புலம்பினாலும அவனின் உடன்பிறந்தவளுக்கு எப்படியாவது திருமணம் கைகூடி வந்தால் போதுமென்ற நினைப்பும் கூடவே வந்தது. 

 

முப்பது வயது கடந்தும் திருமணம் என்னும் சந்தையில் விலைபோகாமல் கிடக்கிறாள் இந்த மங்கை. இவளைப் பெண் பார்க்க வருபவர்கள் அனைவரும் கூறும் ஒரே காரணம் பெண் கருப்பாக இருக்கிறாள். யோசித்து விட்டு சொல்கிறோம் என்பது தான். 

 

இல்லையென்றால் இருபது பவுனுக்கு மேல் போடுங்கள்.. உங்கள் பெண்ணை எங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்கிறோம் என்று போனால் போகுதென்று இவளுக்கு வாழ்க்கைக் குடுப்பதைப் போல் கூறிச் செல்கிறார்கள்.

 

அவள் கருப்பு தான். ஆனால் அந்த நிறமே அவளைச் சற்று எடுப்பாக காட்டும். கடவுள் சிலையே கருப்பாக இருக்கும்போது பெண்ணாக பிறந்த இவள் மட்டும் சிவப்பாகவே இருக்க வேண்டுமா.? ஏன் கருமை நிறம் என்றால் திருமணத்திற்கு ஆகாதா.? சிவப்பு நிறம் சந்தையில் விற்கப்பட்டு கருப்பு நிறம் ஒதுக்கப்படுமா.?

 

இவர்களிடம் பணம் என்னும் காகிதம் இருந்திருந்தால் இந்த கருமையும் காணாமல் போய் அவளின் வாழ்வில் ஒளி வீசி இருக்கும்.. இந்த பெண்ணின் வாழ்வு இருளாக மாறி கிடக்க காரணமே காகிதமும் நிறமும் என்ற உயிரற்ற பொருட்களால் தான்.

 

தன் பேச்சில் தமக்கையின் மனம் வாடி கிடக்கும் என்று அவளைத் தேடி சென்ற விமல் “அக்கா என் மேல கோவமா.?” என்று கேட்க, நிமிர்ந்த அவளும் மெலிதாக புன்னகைத்து “உன்மேல எதுக்குடா கோவம் வர போகுது.? அம்மா தான் ரொம்ப பேராசைபடுது.. நானும் இது தப்புன்னு சொல்லிப் பார்த்துட்டேன்.. ஆனா கேட்க மாட்டிங்குது” என்றாள்.

 

இவர்களின் சக்திக்கு மீறிய இடத்தில் தான் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று தேவகியிடம் ஒரே பிடிவாதம். காரணம் அவர்களின் சொந்த பந்தங்கள் அனைவரும் பெரிய இடத்தில் தங்கள் மகன், மகள்களுக்குத் திருமணம் முடித்திருக்கிறார்கள்.

 

தேவகியின் பெரிய மகளான தாமரை காதல் திருமணம். அதுவும் அவளின் கணவன் வீட்டிற்கு ஒரே பையன் வேறு. சொத்துபத்துக்களும் அளவிற்கு மீறியே அவர்களிடம் இருந்தது. முதலில் மகளின் மேல் கோவம் கொண்ட தேவகி கூட பின்னாளில் மகளை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் இதுவே.

 

குடித்து விட்டு ஊதாரியாக சுற்றுபவனைத் திருமணம் செய்திருந்தால் மகளின் மேல் கோவம் கொள்ளலாம்.. படித்து நல்ல அந்தஸ்தில் இருப்பவனைத் திருமணம் செய்து கவுரவமாக வாழ்பவளிடம் ஏன் கோவத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம்.

 

அதனால் மருமகன் வேற்றுச்சாதியாக இருந்தபோதும் சொந்தங்களின் எதிர்ப்பை மீறியும் மனதார ஏற்றுக் கொண்டார். 

 

இரண்டாவது மகளான தமயந்திக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் ஒன்பது வருடங்களாக பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பெண் கருப்பு என்பதால் வருபவர்கள் அனைவரும் இவர்களின் சக்திக்கு மீறியே வரதட்சணை கேட்க, அது முடியாமல் இவர்கள் வேறு பையனைப் பார்க்க தொடங்க என்று தான் ஓயாமல் செல்கிறது இவளின் வாழ்க்கை.

 

கல்யாண சந்தையில் எளிதாக விற்கப்படுவதற்கு ஒன்று பணம் தேவை.. மற்றொன்று நிறம் தேவை.. இரண்டும் இல்லாத இவள் எங்ஙனம் ஏற்கப்படுவாள்.? மனம் என்னும் குணம் குப்பையில் கிடக்கும் போது மற்றதெல்லாம் எவ்வாறு கிடைத்திடும்.?

 

மூன்றாவது விமலன். இரு தமக்கைகளுடன் பிறந்து விட்டு இவன் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை. இவனின் ஆசைகளைத் துறந்து விட்டு குடும்பத்திற்காக ஓடுகிறான் ஓடுகிறான் ஓடிக் கொண்டே இருக்கிறான். இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி ஓட வேண்டும் என்பது காலம் மட்டுமே அறிந்த ஒன்று.

 

இவனைப் பல வகையில் காலம் சோதித்துப் பார்த்தாலும் அதை திடமாக ஏற்று நிற்பவனிடம் ஒருநாள் இந்த காலமும் மண்டியிடாமல் போய் விடுமா என்ன.?

 

அமைதியாக வெளியில் வந்து அமர்ந்திருந்தவனிடம் மீண்டும் வந்த தேவகி “தம்பி இந்த வீட்டு ஓனருக்குப் போன் பண்ணுப்பா.. முன்னாடி தண்ணீ போகாம அடைச்சுக் கிடக்கு.. அது வேற நாத்தம் அடிக்குது.. வீட்டுக்குள்ள இருக்கவே முடியல.. இதுல வர்றவங்க என்ன நினைப்பாங்க.? 

 

அந்த ஆளு வாடகை மட்டும் சரியா வாங்க வந்தறான்.. மத்த நேரம் போன் பண்ணுனாலும் எடுக்க மாட்டிங்கறான்.. அடுத்த மாசத்துல இருந்து நாலாயிரம் குடுக்கணும்னு சொல்லிட்டு போய்ருக்கான்.. என்ன பண்றதுனே தெரியலப்பா” என்று ஒரு மூச்சாக புலம்பி ஓய்ந்தார்.

 

‘இந்த தலைவலி இன்னும் ஓயவில்லையா.?’ என்று நினைத்தவனுக்கு வீட்டு ஓனரிடம் பேசவே கடுப்பாக இருந்தது. அவருக்கு வயது தான் உயர்ந்ததே தவிர கொஞ்சங்கூட அறிவு வளரவே இல்லை. ஒரு மாதம் காலமாக இவர்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள் வீட்டின் முன்பு இருக்கும் குழாயில் தண்ணீர் போகாமல் வெளியில் வந்து தேங்கி நிற்கிறது என்று.!

 

வாடகையை வாங்கி விட்டு பார்த்து விடுகிறேன் என்று சென்றவர் தான் இந்த மாதம் வாடகை பணத்தை வாங்கவே வந்து விடுவார். ஆனால் சொன்னதைச் சரி செய்து தரும் எண்ணமே இல்லை போலும்.

 

வாடகை வீட்டில் இருந்தால் இதுவொரு பெரிய தொல்லை. பக்கத்தில் இருக்கும் வீட்டிலும் பெரிய இம்சை. இவர்களிடம் போராடி போராடியே என் வாழ்க்கை சென்று விடுமா.? என்று இவன் நொந்துக் கிடப்பது தான் மிச்சம். 

 

சொந்த வீடு கனவு இருந்த போதிலும் அது சாத்தியமே இல்லாத ஒன்று என்று அந்த ஆசையை மனதினோரத்தில் ஒதுக்கி வைத்திருக்கிறான். அவ்வளவு எளிதில் சொந்த வீடு அமைந்து விடுமா என்ன.?

 

“என்னப்பா அமைதியா இருக்கற.? நீ போன் பண்ணுப்பா” என்று அவனின் சிந்தனையைக் கலைத்தது தேவகியின் குரல். இவர் இன்னும் செல்லவில்லையா.? என்று பெருமூச்சுடன் போன் செய்திட, அழைப்பு சென்றதே தவிர அவர் எடுப்பதாக இல்லை. இவனும் ஓயாமல் அழைத்துப் பார்த்தான். இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

 

வருத்தத்துடன் “அவங்க எடுக்க மாட்டிங்கறாங்க..” என்றிட, “இந்த ஆளு ஒருத்தன் நேரங்கெட்ட நேரத்துல தான் நம்ம உயிரை வாங்குவான்.. வீடு தான் இப்படி இருக்குனு இருந்தா இப்ப வீட்டுக்கு வெளியிலும் ஒரு தொல்லை.. ஒன்னுமே இங்க சரியில்லை.. ஆனா வாடகை மட்டும் ஐநூறு ஏத்தி விட்டுட்டு நான் வந்தா சரியா பணம் குடுக்கணும்னு திமிரா சொல்லிட்டு போறான்.. என்ன ஏத்தம் இருக்கணும் இவனுக்கு.?

 

நம்ம இந்த வீட்டை விட்டு போனா வேற யாராவது வருவாங்களா என்ன.? நிச்சயமா மாட்டாங்க.. நம்மளைய மாதிரி இப்படி ஏமாந்து இங்கனயே கிடக்க மாட்டாங்க.. நம்ம முதல்ல வேற நல்ல வீடா பார்க்கணும்..” என்று மீண்டும் ஓயாத புலம்பல் அவரிடம்.

 

விமலனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். விடுமுறை என்று ஒரு நாள் வீட்டில் இருப்பவனுக்கு ஏன்டா இந்த லீவு வருகிறது.? என்ற நினைப்பே வந்து விட்டது.

 

வெளியிலும் செல்ல முடியாது.. அப்படி சென்றாலும் ஆயிரம் கேள்விக்கணைகளைத் தொடுத்த பின்னரே தேவகி இவனைச் செல்ல அனுமதிப்பார். அதற்கு வீட்டிலே இருந்து விடலாம் என்று தான் நினைப்பான்.

 

இப்போதும் இவ்வெண்ணத்தை ஒதுக்கி விட்டு அமைதியாக படுத்தவனின் நிம்மதியைக் குலைக்கவே மீண்டும் ஒரு அலைப்பேசி அழைப்பு வந்தது. அழைத்தது அவனின் காதலி தேன்மொழி தான்.

 

பெயரைப் போலவே தான் அவளின் குணமும். அதனால் தான் ஆடவனை எளிதாக கவர்ந்து விட்டாள் போலும். அவள் ஒன்றும் பேரழகி எல்லாம் கிடையாது. நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்ப்பது போன்ற தோற்றம். அவளும் இவனுடன் தான் பணிபுரிகிறாள்.

 

இருவரும் பணிபுரிவது பெஸ்ட் மில் ஒன்றில். கல்லூரி வரை விமலன் படித்திருந்தாலும் அவனுக்கு வேலை ஒன்றும் அமையவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு வரை தான் தேன்மொழி படித்திருக்கிறாள். 

 

அவளின் வீட்டில் இவள் கடைக்குட்டி. முதல் தமக்கை கல்யாண வயதில் நிற்கிறாள். இரண்டாவது தேன்மொழி. படிக்க வசதி இருந்தும் இவளுக்குப் படிப்பு ஏறாததால் பள்ளிப்படிப்புடன் இவளை நிறுத்தியும் விட்டார்கள். 

 

அதன் பின்பு மில்லுக்கு வர தொடங்கியவள் தான் இப்போது வரை ஓயாமல் வேலை செய்துக் கொண்டும் இருக்கிறாள். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் அங்கு பணிபுரிகிறாள். ஆனால் விமலன் வேலையில் சேர்ந்து நான்கு வருடங்கள் தான் ஆகின்றது. 

 

அப்படியே இருவருக்கும் பழக்கமும் ஏற்பட, நாளைடைவில் அது காதலாகவும் மாறியது. அவளின் ஆர்பாட்டமில்லாத அழகு ஆடவனைக் கவர்ந்தது. அவளின் அமைதியான சிறு புன்னகை இவனின் உள்ளத்தை உருக்கியது. அவளுண்டு அவள் வேலையுண்டு இருக்கும் அவளின் குணம் மொத்தமாக அவளின் புறமே இவனைச் சாய்த்து நின்றது.

 

முதலில் காதலைக் கூறியதும் இவன் தான். அவள் சம்மதிக்கவில்லை. வீட்டில் பேசுங்கள் என்றாள். அவனும் விடவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழி இவர்களின் வாழ்க்கையில் உண்மையாகிற்று.

 

அவன் கரைத்ததில் இவளின் மனமும் கரைந்து போனது. அவனின் காதலையும் முழுமனதுடன் ஏற்றாள். இரு வருடங்களாக காதலர்களாக வலமும் வருகிறார்கள். அவனின் பிரச்சனை அனைத்திலும் அவனுக்கு தோள் குடுத்து நிற்பதும் இவளே.

 

வீட்டில் இருக்கும் சமயங்களில் அவள் இவனுக்கு அழைக்கவே மாட்டாள். அதிசயமாக இன்று அழைத்திருக்க, அதிலே ஏதோ பிரச்சனை என்று புரிந்தும் கொண்டான்.

 

“ஹலோ தேனு சொல்லும்மா” என்றவனிடம் எந்த பதிலையும் உரைக்காமல் பெண்ணவள் மௌனம் காத்திட, “ஹலோ தேனு இருக்கீயா.? ஏதாவது பேசும்மா.. என்ன ஆச்சும்மா.? ஏதாவது சொல்லு.. இப்ப அமைதியா இருந்தா எப்படி.? எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்குடா” என்று இவனின் தவிப்பை அப்பாட்டமாக அவளிடம் வெளிக்காட்டினான்.

 

இவனின் தவிப்பை அவள் உணர்ந்தாலும் எப்படி கூறுவது என்று தெரியாமல் “விமலன் எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.. ஆனா சொல்லித்தான் ஆகணும்.. உங்களுக்கு பணம் குடுத்தது வீட்டுல தெரிஞ்சுருச்சு..” என்றாள் திக்கி திணறி.

 

இவனின் முதல் தமக்கையின் மகளுக்குக் காது குத்த பணம் பத்தவில்லை என்று இவன் நாயாக அலைந்து திரிந்த சமயம் தேனு தான் பணம் குடுத்து அவனுக்கு உதவினாள். பத்தாயிரம் இருபதாயிரம் இல்லை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம். அந்த பணம் இவள் சம்பாத்தியத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்தது. விமலனின் மேலிருக்கும் நம்பிக்கையில் எதையும் யோசிக்காமல் தூக்கி அவனின் கையில் திணித்திருந்தாள்.

 

இவன் மறுக்கத் தான் செய்தான். ஆனால் அவள் விடவில்லை. உனக்கொரு கஷ்டம் என்றால் அது எனக்கும் தான் என்று அவனின் கஷ்டத்தில் பங்கேற்று அவனின் அலைச்சலைக் குறைத்திருந்தாள்.

 

இவ்விசயம் அவளின் வீட்டினருக்குத் தெரியும் முன்னரே அந்த பணத்தைக் குடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தான். அதற்குள் என்ன என்னமோ நடந்து விட்டிருந்தது.

 

திருமணத்திற்கு முன்பே மனைவியின் வீட்டாரின் முன்பு கூனி குறுகி நிற்க வேண்டிய சூழ்நிலை வந்து விடுமோ என்று அஞ்சினான். 

 

“என்ன தேனு சொல்ற.? நான் தான் அப்பவே வேணாம் வேணாம்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. நீ கேட்டீயா.? இப்ப பாரு உங்க வீட்டுல என்ன நினைப்பாங்க.? அவங்க என்கிட்ட கேட்டா என்னால என்ன பதில் சொல்ல முடியும்.? இப்பவே அவ்ளோ பணத்தைத் திருப்பி தரவும் எனக்கு வழியில்லை.. என்னைய ஏன் இக்கட்டான சூழ்நிலைல மாட்டி விட்ட.? 

 

உன்கிட்ட என் பிரச்சனையைத் தான் சொன்னேன்.. பணம் வேணும்னு கேட்டனா.? இப்ப பாரு மறுபடியும் ஒரு பிரச்சனை..” என்று படபடவென்று பொரிந்தான்.

 

அன்னையிடம் காட்ட முடியாத ஆதங்கத்தைப் பெண்ணவளிடம் காட்டுகிறான். அவனின் அன்னை தான் இவனைப் பாடாய்படுத்துகிறார் என்றால் இப்போது இவளுமா.? என்ற எண்ணமே அவனை ஆக்கிரமிப்பு செய்தது. அதன் விளைவு அவளைத் தான் சாடினான்.

 

அவளும் விடாமல் “என்ன விமலன் பேசறீங்க.? உங்களுக்கொரு பிரச்சனைனா பார்த்துட்டு என்னால அமைதியா இருக்க முடியுமா.? நீங்க அவ்ளோ கஷ்டப்படறதைப் பார்த்தும் கண்டும் காணாததுமாக நான் இருந்தா நம்ம காதலுக்கு என்ன மதிப்பு.? என் கஷ்டத்துல நீங்க பங்கெடுக்கற மாதிரி தான் உங்க கஷ்டத்துலயும் நான் பங்கெடுப்பேன்.. எப்படியோ என்னமோ பண்ணுங்கனு விட்டு விட முடியுமா.?

 

இப்ப வீட்டுல தெரிஞ்சது எல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை.. பயமும் இல்லை.. நான் நேரடியாகவே உண்மை இதுதானு சொல்லிட்டேன்.. இப்ப உங்ககிட்ட பணமும் கேட்டுப் போன் பண்ணல.. உங்களால கடன் வாங்கித் தர முடியுமானு தான் நான் கேட்க வந்தேன்.. அதுவும் என் பேருல தான்.. என்னால அந்த கடனை அடைச்சுக்க முடியும்.. 

 

இப்பத்தான் என் அக்காக்கு கல்யாணம் கூடி வந்துருக்கு.. என்னால முடிஞ்ச உதவியையும் நான் செய்யணும்ல.? இதைய கேட்க தான் நான் போன் பண்ணுனேன்.. என்னால தனியா போய் கடன் வாங்க முடியாது.. அப்படி வாங்கவும் தெரியாது.. என் அப்பாவைக் கூப்பிட்டா அதுக்கும் திட்டுவாரு.. வேற வழியில்லாம தான் உங்களைய கூப்பிட்டேன்” என்று தன்னிலையை விளக்கிக் கூறினாள்.

 

அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோம் என்று காலந்தாழ்த்தி விமலன் யோசித்திட, அவனை யோசிக்க விடாமல் தேனுவே “முடியாதுனா நேரடியாகவே முடியாதுனு சொல்லிருங்க விமலன்.. நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்றாள்.

 

“சாரி தேனு.. நான் ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டேன்.. அம்மா மேல இருந்த ஆதங்கத்தை உன்கிட்ட காட்டிட்டேன்.. சாரிடா..” என்று இறங்கி வந்தவன் “நான் பணத்துக்கு எப்படியாவது ஏற்பாடு பண்றேன்.. நீ கவலைப்படாம இரு” என்றவனுக்கே தெரியும் அது அவ்வளவு எளிதில் நடக்காத காரியம் என்று.

 

ஆனாலும் தன்னை நம்பி பணத்தைக் குடுத்து இப்போது குடும்பத்தாரிடம் திட்டு வாங்கி நிற்கும் தன்னவளை எப்படி அவனால் விட்டுக் குடுக்க முடியும்.? தன் உடன்பிறந்தவளுக்கு அவள் ஏன் செய்ய வேண்டும்.? ஆனாலும் செய்தாள். 

 

அதே போல் தான் அவளுடன் பிறந்தவளுக்கும் நல்லது நடக்க போகிறது.. இவனும் இவனால் முடிந்ததைச் செய்ய வேண்டுமே.. அப்படி எதுவும் செய்ய விட்டாலும் குறைந்தபட்சம் அவளிடம் வாங்கிய பணத்தையாவது திருப்பித் தந்திட வேண்டும்.. இல்லையென்றால் இவனின் மனதே இவனைக் குத்திக் காயப்படுத்தி ரணமாக்கி விடும்.

 

அவனை அதிகம் வற்புறுத்தவில்லை பெண்ணவள். “உங்களால முடியலனா விட்டுருங்க விமலன்.. உங்க சூழ்நிலை என்னனு எனக்கும் தெரியும்.. கஷ்டப்படுத்த மாட்டேன்.. உங்களால முடியுமானு கேட்க தான் கூப்பிட்டேன்.. உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க.. நானே போய் பேசி பார்க்கறேன்..

 

ரொம்ப வருசத்துக்கு அப்பறம் அக்காக்கு இப்பத்தான் கல்யாணம் கூடி வந்துருக்கு.. அது அஞ்சு பவுன் நகையால நிற்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மாப்பிள்ளை வீடும் நல்லா தான் இருக்காங்க.. ஒன்னும் குறை சொல்ற மாதிரியில்லை.. அக்காக்கும் அவங்கள புடிச்சுருக்கு.. எல்லாம் சரியா இருக்கறப்ப பணத்தால வேணாம்னு சொல்லணுமா.?

 

கடன் வாங்கியாவது கல்யாணத்தை முடிச்சரணும்னு தான் அப்பா புலம்பிட்டு இருக்காங்க.. என்னால முடிஞ்சதை நானும் பண்ணனும்ல.?” என்று நியாயமான கூற்றையே கூறி அவளின் சூழ்நிலை இதுவென்று உரைத்தாள்.

 

“ஏதாவது பண்ணலாம் தேனு.. எப்படியாவது பணத்தைக் குடுக்க பார்க்கறேன்” என்று தன்னவளுக்கு நம்பிக்கையளித்தவன் போனை வைத்தான்.

 

எப்படி அவனால் இவ்வளவு பணத்தைப் புரட்ட முடியும்.? இதில் இவனின் அன்னை வேறு இரண்டாவது தமக்கைக்கு திருமணத்தை முடித்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதற்கும் இவனின் தலை தான் உருள போகின்றது.

 

காதலியின் தமக்கையின் வாழ்க்கையில் ஒளியேற்றுவானா.? இல்லை உடன் பிறந்தவளின் வாழ்க்கையை மலர செய்வானா.? என்பதை காலம் தான் தெரிவிக்கும்.

 

தலைவலி விடாமல் தொடர்ந்ததில் அவனின் நண்பனான கபிலனுக்கு அழைத்து “டேய் மச்சான் வாடா சாப்பிட போகலாம்” என்றிட, தூக்க கலக்கத்தில் இருந்த அவனோ “ஏன்டா வீட்டுல சோறு போடலயா.?” என்று கேட்டான்.

 

“ரொம்ப டென்சன்ல இருக்கேன்.. வந்து தொலைடா” என்

று இவன் கத்த, “அந்த வியாதி ஆரம்பிச்சுருச்சா.?” என்று நொந்துப் போய் எழுந்தவன் வேறு வழியின்றி கிளம்பவும் செய்தான்.

 

 

 

காதல் தொடரும்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்