அத்தியாயம் 26
அத்தனை தெளிவான பதிலை அஷ்வினியிடம் எதிர்பார்க்கவில்லை தேவதர்ஷினி.
இன்னும் இந்த திருமணத்தில் அவள் விருப்பம் எப்படியோ என நினைத்து தான் கேட்காமல் விட முடியாதே என்ற எண்ணத்தோடு ஒரு சகோதரியாய் அக்கறையாய் தேவதர்ஷினி அஷ்வினியிடம் கேட்க,
“வேலைக்கு போகணும்னு தான் நினைச்சேன் தேவாக்கா. ஆனா அம்மாக்கும் அப்பாக்கும் அவ்வளவு இஷ்டம் இந்த சம்மந்தத்துல. வேற நல்ல வரன் பின்னாடி கிடைக்கலாம் தான். ஆனாலும் இப்போ அவங்க எதிர்பார்ப்பை பார்க்கும் போது வேற என்ன வேணும்னு தோணுச்சு. சரினு சொல்லிட்டேன்!” என்ற அஷ்வினி,
“உங்களை மாதிரினு கூட வச்சுக்கலாம் க்கா. அம்மா அப்பா நமக்கு கெட்டது செஞ்சிடுவாங்களா என்ன?” என்றவளை பார்த்து தேவதர்ஷினி புன்னகைக்க,
“அவங்ககிட்ட கூட தனியா பேசினேன். அப்புறம் தான் ஓகே சொன்னேன்!” என அஷ்வினி சொல்ல, தேவதர்ஷினிக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை.
“எல்லாம் நல்லதா தான் நடக்கும் அஷ்!” என்று கூறி இருந்தாள்.
அன்று மாலையே பூவைக்கும் படலம் அத்தனை சிறப்பாய் வீட்டில் நடைபெற, மாப்பிள்ளை வீட்டினர் செயல்களும் அனைவர்க்கும் திருப்தியாய் தான் அமைந்தது.
நல்லபடியாய் வைபவம் நடந்து முடிந்திருக்க, அடுத்து பெரியவர்கள் ஒரு வாரத்தில் நிச்சயமும் இரண்டு மாதங்களில் திருமணமும் என பேசி விழாவை முடித்திருந்தனர்.
*****************************************
தலையை குனிந்து கொண்டு அடிக் கண்ணால் கணவனை பார்ப்பதும் அவன் பார்க்கும் நேரம் குனிந்து கொள்வதும் என நல்ல பிள்ளையாய் அமைதியாய் தேவதர்ஷினி சோஃபாவில் அமர்ந்திருக்க, கபோர்டுக்கும் கட்டிலுக்கும் என தன்னுடைய ஒவ்வொரு துணியாய் அங்கும் இங்குமாய் நடந்து எடுத்து வைத்து இடை இடையே மனைவியை முறைத்துக் கொண்டிருந்தான் கார்த்திகைசெல்வன்.
அவன் பேசினாலோ திட்டினாலோ கூட கேட்டுவிட்டு எழுந்து கீழே சென்றிருப்பாள் போல. இப்படி அமைதியாய் இருக்கிறானே என அது தான் தேவாவையும் அமைதியாய் இருக்க வைத்தது.
அவன் பேசாதது ஒரு பக்கம் இருக்க, மணி இரண்டு! இன்னும் இரண்டு மணி நேரத்தில் கிளம்பிவிடுவானே எனும் எண்ணமும் கவலையும் வேறு ஒரு பக்கம்.
எத்தனை மெதுவாய் ஒவ்வொரு துணியாய் என எடுத்து வைத்தும் ஊருக்கு வரும் பொழுது எடுத்து வந்த நான்கு சட்டைகளை எடுத்து வைத்து கிளம்பும் வேலை முடிந்திருக்க, அடுத்து என்ன என்பதாய் அறையை சுற்றிலும் பார்த்தான் கார்த்திகைசெல்வன்.
அறைக்குள் அவன் வேண்டாம் என ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபா மீண்டும் அவன் அறைக்குள்ளேயே வந்திருந்தது.
“ஏன் மறுபடியும் சோஃபாவை ரூம்க்குள்ள கொண்டு வந்திங்க?“ என வந்ததும் அன்னையிடம் கேட்டதற்கு,
“இங்க ஹால்ல இடமில்ல. நீ தானே என் ரூம்க்கு வேணும்னா வேணும். அதுல இருந்து தான் எனக்கு வேலை செய்ய முடியும்னு வாங்கிப் போட்ட? இப்ப ஹால்ல போட்டா ஹால்ல ஏற்கனவே இருக்குற சோஃபாவை நான் தலையில தூக்கி வச்சுக்கவா முடியும்?” என கண்ணகியும் பதில் சொல்லி இருந்தார்.
இப்போது தேவா அதில் அமர்ந்திருக்க, துணிகள் அடங்கிய தோள்பையை அவன் கையில் எடுக்கவும் இப்பொழுதே அவன் கிளம்பிவிட்டதை போல பதறி எழுந்தாள் தேவதர்ஷினி.
“பாக் இங்கேயே இருக்கட்டுமே த்தான். போகும் போது எடுத்துக்கலாம்ல?” என அவள் கேட்க,
“போகும் போது ரூம்க்கு வர மாட்டேன்!” என்றான் முறைத்தப்படியே!