Loading

தூவானம் 40 :

மழைச்சாரல் நின்று குளிர் காற்று இரவை குளுமையாக்கிக் கொண்டிருந்தது.

காதலை காதலாய் கடத்தி களைத்து சுகமாய் ஒருவருக்குள் ஒருவர் புதைந்திருந்தனர்.

“சொக்கிட்ட மலரே!” தன் மார்பின் மீது தலை வைத்து படுத்திருந்த மனைவியின் உச்சியில் இதழ் பதித்தபடியே இருந்தான்.

“சொக்க வச்சிட்ட வேந்தா” என்றவள், வேகமாக அவனிலிருந்து பிரிந்து அமர்ந்து, அருகிலிருந்த தலையணையை எடுத்து அவனை சரமாரியாகத் தாக்கினாள்.

“ஹேய் பூ…” என்றவன் தலையணையை இடது கையால் பிடுங்கி எரிந்து, “சொல்லிட்டு அடிடி” என்றான்.

மீண்டும் இரு கைகளால் மாற்றி மாற்றி அடித்தவள், “என்னை போன்னு தொரத்தி விட்டுட்டு இப்போ வந்து என்னடா பண்ணியிருக்க?” எனக் கேட்டு அடித்துக் கொண்டே இருந்தாள்.

மறுக்காது சுகமாய் வாங்கியவன்… “இப்போ நாமிருக்கும் நிலை பார்த்தும் என்ன பண்ணன்னு தெரியலையா… மலரே!” மயக்கும் குரலில் வினவினான்.

பொருள் புரிந்து சட்டென்று அடியை நிறுத்தியவள்…

“நான் உன்மேல் கோபமா இருக்கேன். போடா” என்று அவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்தாள்.

“பார்த்தா அப்படி தெரியலையே!” தாடையை நீவியவாறு அவன் சிரியாது கூறிட…

“அதான் சொன்னனே… நீ என்னை மயங்க வச்சிட்ட” என்றவள் “இப்போ உன்மேல கோபமே வரமாட்டேங்குது போடா” என்று அவனின் வயிற்றில் குத்தினாள்.

“நான் என்ன பண்ணேன் மலரே…”

“என்ன செய்யல” என்றவள் போர்வைக்குள் சுருண்டிருந்த தங்கள் இருவரையும் பார்வையால் சுட்டிக்காட்டினாள்.

பாரியிடம் வாய் கொள்ளா சிரிப்பு.

சற்றும் எதிர்பாராது அவர்களுக்குள் இருந்த ஆழமான உயிர் உருக்கும் நேசம் இயல்பாக வெளிப்பட்டு நிகழ வேண்டியவை தித்திப்பாய் நிகழ்ந்து முடிந்திருந்தது. புதிதாய் முதலாய் துவங்கியிருந்த அவர்களின் தாம்பத்தியம்.

“உன்னை பார்க்கணும் வேகமா வந்ததுக்கும் நல்ல பலன் தான்…” என்று அவன் விஷமமாகக் கூறிட, அவள் விட்ட அடியை தொடர்ந்தாள்.

“எல்லாமே டபுள் மீனிங்…”

“ஹேய்… நான் பேசுறதெல்லாம் சிங்கிள் மீனிங் தான். நீயா வேறொன்னு நினைச்சா நான் பொறுப்பாக முடியாது” என்றவனின் இதழ் சிரிப்பில் துடித்தது. ஒற்றை விரல் புருவத்தை கீறியது.

“உன்னை” என்றவள் அவனின் இடது புஜத்தில் கடித்து வைத்தாள்.

அவள் கடித்த இடத்தை தேய்க்க தானாக உயர்ந்த அவனின் வலது கை உள்ளங்கையை அப்போது தான் கவனித்தவள்…

“என்னடா இது கட்டு?” என்று கேட்ட கணம் கண்கள் நீரை கொட்டியிருந்தது.  தன்னவனுக்காக நொடியில் கிரகித்த அவளின் வலி… தன்மீது அவனவள் கொண்ட காதலின் அளவை பறைசாற்றியது.

“இவ்ளோ நேரம் இதையெப்படி நான் கவனிக்காம விட்டேன்.”

“உன்னை நான் எங்க கவனிக்க விட்டேன்” என்று குறும்பு பேசியவன், “நேத்து நைட் கம்பியில் கை கிழிச்சிடுச்சு. சின்ன காயம் தான் பூ” என்று அவளை ஆறுதல் படுத்தினான்.

“நீ பொய் சொல்ற… அப்போ இதை சொல்லக்கூடாதுன்னு தான் ஜென்னை என்கிட்ட நீ பேசவிடலையா? அதுக்குத்தான் கோபமா பேசுனியா?” சரியாக கண்டறிந்து கேட்டாள். கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

“ம்ப்ச்… நான் இங்க வரவரை அழுதிட்டு இருந்திருப்ப. அதான் சொல்லல” என்றவன் அவளின் கண்ணீர் துடைத்து தன்மேல் சாய்த்துக்கொண்டான்.

“இந்த கையோட ட்ரைவ் பண்ணியிருக்க. அந்த அவி எப்படி உன்னை தனியா விட்டான். அவனுக்கு இருக்கு” என்றவள்… “இப்போ இந்த வலியோட இது வேற” என்று அவள் பேச்சில் வாக்கில் சொல்ல…

“எது மலரே” என்றவனின் பார்வையில் சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வை எண்ணி ரசனை குடிகொண்டது.

பூ பாரியை நன்கு முறைத்து வைத்தாள்.

“அப்படி பார்க்காத மலரே! திரும்ப என்னென்னவோ தோணுது” என்றான் கண்களில் ஆர்ப்பரிக்கும் காதலோடு.

“தோணும் தோணும்” என்றவள் “பெயின் இருக்கா?” எனக் கேட்டாள். அவனின் அடிபட்ட கையை பிடித்துக்கொண்டு.

“லைட்டா…” என்று சொல்லியவனுக்கு இத்தனை நேரம் தெரியாத வலி இப்போது தெரிந்தது. அது பாரியின் முகத்திலும் பிரதிபலித்தது.

“பொய் சொல்லாதடா” என்றவள், “பெயின் கில்லர் கொடுக்கலையா?” என்று வினவினாள்.

“கொடுத்தாங்க நான் தான் போடல” என்று சர்வசாதாரணமாகக் கூறியவன் தோளை குலுக்கியபடி முதுகுக்கு தலையணை வைத்து சரிந்து சாய்ந்தமர்ந்தான்.

ஏன் எனும் கேள்வி அவளின் பார்வையில் தொக்கி நின்றது.

“நேத்து நைட் சாப்பிட்டது பூ. அவனுங்க தப்பிடக்கூடாதுன்னு எல்லாம் ஒரு வேகத்தில் முடிச்சிட்டு நிமிர்ந்தால் மதியம் ஆகிடுச்சு. அப்போ தான் நீ ஜென்னுக்கு கால் பண்ண. உடனே உன்னை பார்க்கணும் தோணுச்சு கிளம்பிட்டேன். வர வழியில் ஹோட்டல் போகணும் நினைச்சேன். அப்புறம் இந்த கை வச்சிக்கிட்டு  எங்க சாப்பிடறது? வீட்டுக்கு வந்து பொண்டாட்டி கையால சாப்பிடலான்னு வந்தா, என் மாமனார் பால் கொண்டு வந்து கொடுக்கிறார்!” என மொத்தமாக எல்லாவற்றையும் கூறிய பின்னரே வாய் மூடினான்.

“சாரிடா… நீ சாப்பிட்டியான்னு நான் கேட்டிருக்கணும்” என்றவள் தலையில் தட்டிக்கொண்டாள்.

“எக்ஸ்ட்ரீம்லி சாரி… சாரிடா…

அப்பா உன்னை சாப்பிட சொல்லலையா?”

“அவர் அத்தையை எழுப்ப போனார். நான்தான் தூங்கிறவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு, சாப்பிட்டு வந்துட்டேன் பொய் சொன்னேன். நல்லவேளை மாமா என் கையை பார்க்கல” என்றான்.

“ம்ப்ச் என் தப்பு தான் நான் வந்ததும் உன்னை கேட்டிருக்கணும். உன் கையையும் நான் பார்க்கல, உன்னையும் சரியா கவனிக்கல” என்றவளின் முகம் கசங்கி சுருங்கியது.

அவள் முகம் வாடினால் தாங்குவானோ!

“ஹேய் பூ, நான் எங்க உன்னை அதெல்லாம் பார்க்க விட்டேன்” என்று வேகமாகக் கூறியதோடு, “நீயென்னை கவனிக்கலன்னு சொல்லிட முடியாது” என்று குறும்பு பார்வையுடன், இதழில் ஒளிந்த புன்னகையுடன் அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான்.

“விடுடா” என்றவள் திமிறி விலகினாள்.

“சரி சாப்பிடுறியா?”

“இந்த நேரத்திலா? டைம் என்னன்னு பாரு பூ. வேண்டாம்” என்றவன், “குடிச்ச பால் வேற, பண்ண வேலையில் அவுட் பஸ்ட் ஆகிடுச்சு. லைட்டா பசிக்குது தான்” என்று சொல்ல… அவனின் தலையிலேயே வலிக்கக் கொட்டினாள்.

“வலிக்குதுடி…” தலையை பரபரவென தேய்த்தான்.

“வலிக்கட்டும்… ரொம்ப தப்பு தப்பா பேசற நீ.”

“நான் தப்பாவே பேசல… நான் பேசுறத நீ தப்பா புரிஞ்சிக்கிற பூ.” அவன் எப்படி எந்த அர்த்தத்தில் பேசுகிறான் என்பது அவளுக்கா தெரியாது.

“நல்லாவே சமாளிக்கிறடா” என்றவள், “உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என அவனின் முகம் பார்த்து கேட்டாள்.

தன்னிரு கைகளிலும் பூவின் முகத்தை தாங்கியவன்… “இப்போகூடவா உனக்கு இந்த கேள்வி கேட்கணும் தோணுது” என்றான்.

“உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும் தெரியும். அந்த பிடித்தம் ஒரு ஃபிரண்டா… ஆனால், மனைவியா…?” வாக்கியத்தை முழுமையாக்க முடியாது இழுத்தாள்.

அவளின் தவிப்பு அவளது அலைபாயும் கண்களில் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. எதனால் என்பதும் புரிந்தது.

தாலி கட்டியதும் விட்டுச் சென்றிருந்தான். தாலி கட்டுவதற்கு முன்பும் மணக்க முடியாதென அத்தனை பேசினான். அவளின் முகம் காண வெறுத்தான். பிரிந்திருந்த நான்கு வருடங்களில் அவனாக ஒருநாள் கூட அவளை நெருங்க முயற்சிக்கவில்லை. மீண்டும் இங்கு வராமல் இருந்திருந்தாலும் இல்லாத கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு இப்பவும் தூரமாகவே தான் இருந்திருப்பான். அவளுக்கு ஒன்றென்றதும் தான் அவளிடத்திலிருந்து யோசித்து பார்த்தான். இப்போது அவனுக்கு அவள்மீது அவன் கொண்டுள்ள காதலை உணர்ந்ததற்கு அடிப்படையாக அமைந்தது கூட அவளோட காதல் தான். அதனை அவளுக்கு அவன் ஐ லவ் யூ என்ற வார்த்தைகளாக சொல்லாவிட்டாலும், தன்னுடைய உணர்வுகளால்… அதனால் உண்டாக்கும் தாக்கம் நிறைந்த பேச்சுக்களால் காட்டியிருக்கிறான். இதோ இப்போதும் கூட அவளால் அவனை அவனது காதலை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவனின் இந்த காதலில் தான் மனைவியாக இடம் பிடித்திருக்கிறோமா என்ற சந்தேகம் அவளுள். அதை அப்படியே கேட்டும் விட்டாள்.

இவை யாவற்றையும் அவன் நினைத்திருக்க… அவனின் அமைதி அவளை என்னவோ செய்தது.

“நீ… நீ… ஃபிரஷ் ஆகிட்டு வா வேந்தா. நான் சாப்பாடு கொண்டு வரேன்” என்றவள் “உனக்கு இந்த நேரத்தில் தோசை ஓகே தான?” எனக் கேட்டபடி கணவனின் பிடியிலிருந்து தன் முகத்தை விலக்கிட… அவளால் முடியவில்லை.

அத்தனை மென்மையான பிடியிலும் ஓர் அழுத்தம். உன்னை விடமாட்டேன் என்கிற உறுதி.

“எது உன்னை போட்டு வாட்டுது?” என்றவன் அவளின் நெற்றி முட்டி… “எனக்கே தெரியுது, இத்தனை நாள் கோபமா இருந்துட்டு திடீர்னு லவ்வுன்னு… உன்னை இப்போ முன்னவிட அதிகமா பிடிக்குதுடி. ரொம்ப அதிகமா. என்னோட பொண்டாட்டியா இன்னும் இன்னும் நிறைய பிடிக்குது. உன்னை திரும்ப பார்க்குற வரை என் ஃபிரண்ட் பூவா மட்டும் தான் மனசுல இருந்த. ஆனால், எப்போ ஜென் வீட்டு சன்னலில் உன்னை பார்த்தனோ அப்போ தெரிஞ்சுது, ஃபிரண்ட் அப்படின்னு சொல்லிக்கிட்டு உன்னை மட்டுமே லவ் பண்ணுறேன்னு. அப்போலாம் ஃபிரண்டா பார்த்த உன்னை இப்போ என் பொண்டாட்டியா பார்க்கத்தாண்டி தோணுது. பிடிக்குது. நான் உன்னை லவ் பன்றேன்னு அந்த மூணு வார்த்தை சொல்லிட்டா உன் மண்டைக்குள்ள ஓடுற ட்ரெயின் ஸ்டாப்பாகிடுமா மலரே? நான் வேணுன்னா உனக்காக சொல்றேன்” என்றான்.

இப்போ அவன் சொல்லியதை விடவா அந்த மூன்று வார்த்தை அவனது காதலை அவளுக்கு பறைசாற்றி விடப்போகிறது. வேண்டாமென்று இடவலமாக தலையசைத்தாள்.

“அந்த மூணு வார்த்தை ஒரு எல்லை தானே மலரே. என்னோட காதலுக்கு எல்லையே இருக்கக்கூடாது நினைக்கிறேன். நான் உன்மேல கொண்டிருக்கும் காதல் இந்த வார்த்தைகளில் எல்லாம் அடங்கிடாதுடி” என்றவனின் கைகள் ஈரத்தை உணர்ந்தன.

அவளின் மூக்கோடு மூக்கு உரசி நெற்றி முட்டியிருந்த தன் முகத்தை நகர்த்தி, கண்ணீர் வழியும் அவளின் கன்னத்தை அழுந்த துடைத்து நெற்றியில் முத்தம் பதித்தான்.

அவனை இடையோடு கையிட்டு அணைத்தவள், மார்பிலே முகம் பதித்து அவன் உணர்த்திய காதலின் கனம் தாங்காது மீண்டும் விசும்பினாள்.

“நான் அப்படி கேட்டிருக்கக்கூடாது. சாரி… சாரிடா” என்றவளின் அழுகை நிற்பதாக இல்லை என்பதை உணர்ந்தவன், அவளை மாற்ற… “பசிக்குதுடி” என்றான்.

“அச்சோ சாரி வேந்தா…” என்று பதறி விலகியவள் “அப்பவே பசிக்குது சொன்ன, நான் தான்” என தன் தலையில் தட்டிக்கொண்டு மெத்தையின் ஓரத்தில் கிடந்த ஆடையை அவசரமாக மாட்டிக்கொண்டு, அவிழ்ந்து விரிந்திருந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டவாறு வேகமாக கீழே ஓடினாள்.

“பார்த்து போ மலரே” என்றவன் எழுந்து தன்னுடைய ஆடையை அணிய நினைக்கையில் தான் ஒன்றை கவனித்தான். அக்கணம் முகம் கனிந்து வந்த மகிழ்வை மனதோடு சேர்த்தான்.

பாரி கீழே வந்த போது பூ மூன்றாவது தோசை வார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீயே வந்துட்டியா? நானே கொண்டு வந்திருப்பேன்.”

“ரெண்டே போதும் பூ” என்றவன் மனைவியை பின்னிருந்து அணைத்து, அவளின் வலது கையோடு தன் கையை சேர்த்து தோசையை திருப்பினான்.

“மூவில இப்படிலாம் சீன் பார்க்கும் போது காமெடியா இருக்கும். இப்போ, இது வேற மாதிரி ஒரு பீல்” என்றவனின் குரலில் அவளுக்குத்தான் இருக்கும் இடம் நினைத்து பயம் வந்தது.

“பர்ஸ்ட் சாப்பிடு” என்று அவனை இழுத்துக்கொண்டு வந்து உணவு மேசையில் அமர வைத்தவள், “உனக்கு பொடி பிடிக்காதே… ஜாம் ஓகேவா” என்றாள். அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஜாம் வைத்து தோசையையும் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

“எதுக்கு இவ்வளவு பதட்டம்?” என்று கேட்டவன் மிகவும் பொறுமையாக மென்று விழுங்கினான்.

“சீக்கிரம் சாப்பிடுடா. யாரவது வரபோறங்க.”

“இந்த டைமில் யார் வருவாங்க பூ” என்றவன் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டினான். அவர்களிருக்கும் இடம் தவிர்த்து எல்லா இடமும் இருளில் மூழ்கியிருந்தது.

அப்போது தண்ணீர் எடுக்கவென அறை கதவை திறந்த பார்வதிக்கு வெளிச்சத்தில் அவர்கள் இருக்கும் நிலை கண்டு உள்ளம் நிறைந்த மகிழ்வோடு தில்லையையும் எழுப்பி அக்காட்சியை பார்க்கச் செய்தார்.

“இது அவங்களுக்குள்ள எப்பவும் இப்படித்தானே பாரு” என்று பூ பாரிக்கு ஊட்டிவிடுவதில் அப்படியென்ன ஆச்சரியம் இருக்கு எனும் வகையில் தில்லை சொல்லிட, அவரின் வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு மற்றொரு கையால் கிள்ளி வைத்தார் பார்வதி.

“தமிழை நல்லா பாருங்க” என்று பார்வதி சொல்ல… அப்போதுதான் தில்லை ஊன்றி கவனித்தார்.

“அவங்க சந்தோஷமா இருந்தால் நமக்கும் சந்தோஷம் தானேம்மா” என்ற தில்லை புன்னகையோடு அறைக்குள் செல்ல, சத்தமின்றி கதவை மூடிவிட்டு கணவரிடம் சென்ற பார்வதி, “அவங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சு தோணுதுங்க. இப்போ தான் நிறைவா இருக்கு. இவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு நான் பட்டப்பாடு இருக்கே” என்றவருக்கு இப்போது அந்த கவலையெல்லாம் எங்கோ தூரம் சென்ற நிம்மதி.

“எவ்வளவு நேரம்டா. தூங்க வேண்டாமா. வேகமா சாப்பிடுடா” என்றவளிடம்… “உன் கையால சாப்பிடுறது பிடிச்சிருக்கே” என்றான்.

“போதும் போதும்… இனி காலத்துக்கும் என் கையாலதான் சாப்பாடு. பொறுமையா அனுபவிக்கலாம். இப்போ கொஞ்சம் சீக்கிரம் சாப்பிட்டால் நல்லாயிருக்கும்” என்றாள்.

“உனக்கு அந்தளவுக்கு சமைக்கத் தெரியுமா?” எனக் கேட்டு, “யாரும் வரமாட்டங்க, வந்தாலும் என்னயிருக்கு” என்றவன் சாப்பிடும் முறையை மாற்றிக்கொள்ளவே இல்லை.

“அதானே என்னயிருக்கு? உன் புருஷனுக்கு நீ ஊட்டிவிடுற” என்று கேட்ட குரலில் பாரிக்கு அடுத்த வாய் வைக்கச் சென்ற பூவின் கை அப்படியே நின்றது.

யாரென பார்த்தால் பரிதி.

“மாமா நீங்க” என்ற பூவை பார்த்தவன் பாரியிடம் பார்வையை சடுதியில் திருப்பிக்கொண்டான்.

“சின்னு எழுந்துட்டாள். பசிக்குது போல, இளாவை விடமாட்டேங்கிறாள். அதான் நான் பால் கொண்டு போகலாம் வந்தேன்” என்று பூவை பார்க்காது கூறினான்.

தட்டும் காலியாகிட… “நான் காய்ச்சி தரேன் மாமா” என்று பூ கிச்சனிற்குள் சென்றாள்.

பரிதியின் நிலை அறிந்த பாரி…

“அவள் உங்க குட்டிம்மா பரிதிண்ணா” என்றான்.

“ஐ க்னோவ்… ஷீ இஸ் மை ஃபர்ஸ்ட் டாட்டர்” என்றவனின் சொல் வெறும் வாய் வார்த்தைக்காக சொன்னதில்லை என்பது பாரிக்கு நன்றாகவே தெரியும்.

“அப்புறம் என்ன… ஜஸ்ட் ரிலாக்ஸ். இன்னும் அவளுக்கே தெரியல. அவளுக்கு தெரிஞ்ச பிறகு என்ன புலம்ப போறா(ள்)ன்னு நினைக்க இப்போவே சிரிப்பு வருது” என்றான்.

தன் தம்பியின் முகத்தில் பரவி கிடந்த மகிழ்வை பரிதிக்கு காண தெகிட்டவில்லை.

பாரியை அணைத்து விடுத்தவன், “ரொம்ப சந்தோஷம்டா” என்றான். பரிதியின் கண்கள் கலங்கியிருந்ததோ.

“அவளை நான் விட்டுடமாட்டேன் பரிதிண்ணா” என்றான்.

“தெரியும்” என்ற பரிதி… “நீ போன பிறகு தமிழ் என்கிட்ட கூட பேசறதை விட்டுட்டாள். ரொம்ப முடியிலங்கிற அப்போதான் எனக்கு கால் பண்ணுவாள். அப்போகூட எதுவும் பேசமாட்டாள். அழணும் போல இருக்கு மாமா சொல்லிட்டு வச்சிடுவாள். இப்போ இப்படி பார்க்க நல்லாயிருக்குடா” என்றான்.

“நான் மிஸ் பண்ணியிருப்பேன் பரிதிண்ணா. அப்படி மிஸ் பண்ணியிருந்தா, நான் என் வாழ்க்கையையே இழந்திருப்பேன்” என்ற பாரியை நின்றிருந்த பரிதி தோளோடு கையிட்டு தட்டி கொடுத்தான்.

“அம்மாக்குத்தான் தேன்க்ஸ் சொல்லணும். முக்கியமா நம்ம தாய் கிழவிக்கு சொல்லணும். அன்னைக்கு என்னம்மா நடிச்சிருக்கு அது” என்றான்.

“ஹா.. ஹா… உனக்கும் தெரிஞ்சிடுச்சா அது. தமிழ் சொன்னாளா?” பரிதி சத்தமாக சிரித்து வினவ, பாரியும் அவனோடு சேர்ந்து சிரித்து ஆமென்றான்.

“அச்சோ மெதுவா சிரிங்க… எல்லோரும் எழுந்துக்க போறாங்க” என்றபடி வந்த பூ, “பால் ஆறிடுச்சு மாமா. அப்படியே கொடுக்கலாம்” என்று பெரிய தம்ளர் நிறைய பாலினை பரிதியிடம் கொடுத்தாள்.

தம்பளரில் மட்டும் கண் பதித்தவனாக வாங்கிய பரிதி எதுவும் சொல்லாது வாங்கிச் சென்றிட… செல்லும் பரிதியையே பூ பார்த்திருந்தாள்.

“போலாமா பூ. விடிய இன்னும் இரண்டரை மணி நேரமிருக்கே நாமும் தூங்கலாம்” என்றபடி இருக்கையிலிருந்து எழுந்தான் பாரி.

அப்படியே பூ நின்றிருக்க…

“என்னாச்சு?” என வினவினான்.

“மாமா என்னை பார்த்தே பேசல” என்றாள் யோசனையாக.

“அதுவா…” என்று இழுத்த பாரி… “உன்னை எம்பாரஸிங்கா ஃபீல் பண்ண வைக்க வேண்டான்னு நினைச்சிருப்பாங்க” என்றான்.

“ஏன்?”

அப்படி கேட்ட பூவை மேலிருந்து கீழ் பார்த்த பாரி…

“மேடம் போட்டிருக்கிறது, என்னோட ஆர்ம் கட் டீஷர்ட் அண்ட் ஷார்ட்ஸ்” என்றான்.

பாரி சொல்லிய பின்பே தான் அணிந்திருக்கும் உடையை கவனித்தவள், கீழுதட்டை கடித்து நாணம் மேலிட, பாரியின் நெஞ்சிலேயே தன் முகம் மறைத்தாள்.

“மாமா என்ன நினைச்சாங்களோ! போச்சு… போச்சு…” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் நினைக்கல” என்ற பாரிக்கு பூவின் வெட்கம் அத்தனை பிடித்தது.

“நீ பசிக்குது சொன்னியா… அவசரத்தில் கவனிக்கல.”

“தெரியுது… நீ தெரிஞ்சேக்கூட போடலாம்” என்றவனின் தோள் குலுங்கியது அவனது சிரிப்பில்.

“போடா கிண்டல் பண்ற” என்றவள் மேலும் அவனுள் தன் முகத்தை மறைத்துக்கொள்ள… அவளை கட்டிக்கொண்டான்.

“எனக்கும் இப்படியே இருக்க ஓகே தான். ஆனால் இது ஹால்” என்றவன் அவனது மலரை கைகளில் அள்ளிக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான்.

_______________________________

“பூவே முதல் பூவே
ஒரு பனி துளி உனக்காக…”

பாரி பாடலை ஹம் செய்தபடி கட்டிலில் கால்நீட்டி அமர்ந்திருந்தான்.

தலையின் ஈரத்தை துவட்டிக்கொண்டிருந்த பூ, நனைந்த துண்டை அவன்மீதே விட்டெறிந்தாள்.

சரியாக துண்டினை பிடித்தவன் அதில் அவளின் வாசம் நுகர்ந்தான்.

“மலரே… இந்த துண்டை நீ கட்டியிருந்ததால் உன் வாசனையா? அல்லது இந்த துண்டால் உனக்கு வாசனையா?” சிரிக்காது படு தீவிரமாக வினவினான்.

“ஆமாம் இவரு அப்படியே பாண்டிய மன்னன். வாசனையை வைத்து கவிதை வடிக்கப்போறாரு” என்றவள்…

“பாருடா நீ செய்து வச்சிருக்கிறதை” என்று தன் கழுத்து வளைவை அவனிடம் சுட்டிக்காட்டினாள். இரவில் அவன் தீட்டிய ஓவியத்தின் தடம். சிவந்து பளிச்சென்று தெரிந்தது.

“இப்படியே எப்படிடா வெளியில போறது” என்றவள் தன்னுடைய ஒருபக்க குழலை அவனது பல்தடம் தெரியும் பக்கம் மொத்தமாக வழிய விட்டாள்.

“நீ மட்டுமென்ன” என்றவன் தன் முதுகு மற்றும் புஜத்தை காண்பித்து “பூனைக்குட்டி மாதிரி பிராண்டி வச்சிருக்க” என கேலி செய்தான்.

“யாருடா பூனைக்குட்டி” என்றவள் அவனருகில் வந்து “உன்னால தான்” என்றாள்.

“இதெல்லாம் வீரத்தழும்புகள் மலரே” என்றவன் அவளுக்கு பின்னால் கையிட்டு தன்னோடு சேர்த்தணைத்தான்.

“விடுடா” என்று அவனின் நோக்கம் அறிந்தவள் அவனிடமிருந்து திமிறினாள்.

“முடிஞ்சா விலகி போடி” என்றவன் அவளின் இதழில் இதழ் பதிக்க முற்பட… முகத்தை திருப்பி தடை செய்தாள்.

அதில் கோபம் கொண்டவன் அவளை சட்டென்று விட்டு “போடி” என்றான்.

“எனக்கு தரமாட்டேன்னு நகர்ந்துட்டல. இனி நீயா வராம உன் லிப்சை தொட மாட்டேன் போடி” என்றவன் கவிழ்ந்து படுத்தான்.

“அப்புறம் சவால் போட்டுக்கலாம். இப்போ இதுக்கு ஒருவழி சொல்லுடா” என்று தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தாள் பூ.

“என்னடி பண்ணனும் இப்போ. அப்படி அப்படி இருந்தால் இப்படி இப்படி ஆகத்தான் செய்யும். எனக்கு கூடத்தான் முதுகெல்லாம், கையெல்லாம் உன் நகக் கீறல். பத்தாததுக்கு காலெல்லாம் உன் கொலுசு கீறி வச்சிருக்கு” என்று உதட்டில் நெளிந்த விஷம சிரிப்புடன் கூறினான்.

“அது… அது வந்து…” என்ன பதில் சொல்வதென்று தெரியாது திணறினாள்.

“வேணுன்னா இப்படி பண்ணலாமா?”

பாரி அவ்வாறு கேட்டதும் ஏதேனும் ஐடியா கொடுப்பானென்று பூ ஆர்வமாகக் கேட்டாள்.

“எப்படி?”

“முள்ளை முள்ளால் எடுக்கணும் சொல்லுற மாதிரி… இது எப்படி வந்துச்சோ அப்படியே போகுதான்னு பார்ப்போம்” என்று அவன் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு சொல்ல…

புரியாது யோசித்தவள் அவன் சொல்லியதன் உட்பொருள் புரிந்ததும்,

“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்” என்று தலைக்குமேல் இரு கரம் குவித்து கூறினாள்.

“அதான் ஹேர் முன்னடி விட்டிருக்கியே அப்புறம் என்ன மலரே?”

“அந்த கெழவி லூஸ் ஹேர் விடவிடாது வேந்தா. பின்னல் போடுன்னு போடுற வரை கத்திக்கிட்டே இருக்கும். பொம்பள பிள்ளை தலைவிரிகோலமா இருக்கக்கூடாதுன்னு ஒரு சொற்பொழிவை ஆத்து ஆத்துன்னு ஆத்தும்” என்றவள் யோசனை வந்தவளாக பவுண்டேஷன் க்ரீமை எடுத்து சிவந்திருக்கும் இடங்களில் தடவினாள்.

“இப்போ தெரியுதாடா?”

“ம்ப்ச்… இல்லை” என்றவன், “பேசாமல் என்னோட நெக் டீஷர்ட் போட்டுக்கோடா” என்றான் அக்கறையாக.

அவனை முறைத்தவள்…

“போதும் சாமி… போதும். நைட் பண்ணி  வச்ச வேலைக்கே என்ன ரியாக்ட் வரும் தெரியல” என்று பரிதி முன் தானிருந்த நிலையை நினைவில் கொண்டு பூ சொல்ல… அவள் முகம் சட்டென்று சுருங்கியது.

“திரும்ப ஆரம்பிக்காதே மலரே! நைட்டே சொன்னேன் பரிதிண்ணா எதுவும் நினைக்கலன்னு. நீயேன் இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்க?” என்றவனுக்கு இரவு அத்தனை சொல்லியும் மீண்டும் அதையே போட்டு உருட்டி கொண்டிருக்கிறாளே என கடுப்பாக வந்தது.

“இப்போ என்னடி… நான் உன் புருஷன் தான! என்னோட ட்ரெஸ் நீ போட்ட. அதிலென்ன தப்பு இருக்கு. இதுக்கு முன்னால என் ட்ரெஸ்ஸை மேடம் போட்டுக்கிட்டு தூங்கினதே இல்லையா?” என்றான் கோபமாக. பூ அப்படியே நின்றிருக்க, அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல் பாரி கீழே சென்றிருந்தான்.

“ரொம்பத்தான் கோபம் வருது காக்கிக்கு… போடா” என்றவளுக்கு பாரியின் கணவனென்கிற கோபமும் பிடித்துதான் இருந்தது. நண்பனான பாரிக்கு பூவின் மீது கோபமே வராது. அவன் கோபம் கொண்டது மாதேஷ் விடயத்தில் மட்டும் தான். அதுவும் அவளின் நலன்மீது அக்கறை கொண்டே. ஆனால் இப்போ… இந்த இரண்டு நாட்களில் எத்தனை முறை கோபம் கொண்டு கடிந்திருக்கிறான்.

“காக்கி நீ டிப்பிகள் கணவன் மெட்டீரியலா மாறிட்டடா!” வாய்விட்டு சொல்லிக்கொண்டவளின் இதழில் தானாக புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

பூ கீழே வந்தபோது பாரி அரசுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

பூவை பார்த்தவன் சடுதியில் அரசுவிடம் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“மக்கும்.”  தோளில் கன்னம் இடித்தவள் உதட்டை சுளித்து அளவம் காட்டிவிட்டு சென்றாள்.

பார்வதி இரவு நடந்ததை மகிழ்வோடு மணியிடம் அடுக்கலைக்குள் சொல்லிக்கொண்டிருந்தார். கேட்ட தங்கத்துக்கு அந்த வயதிலும் துள்ளி குதிக்க வேண்டும் போலிருந்தது.

“யாத்தே… நீயி சொல்லுறது நெசந்தானா? நான் பார்க்காம விட்டுப்புட்டேனே!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு சென்ற பூ…

“ரூமுக்கு வா தனியா போட்டுகாட்டுதேன்” என்று தங்கத்தின் தலையில் கொட்டினாள்.

“எம்புட்டு வேணாலும் கொட்டிக்கத்தா. நீயி சந்தோஷமா வாழ்ந்தாக்கா அதுவே இந்த கெழவிக்கு போதுமத்தா” என்று கண்களில் பனித்த நீரை அடக்கிக்கொண்டு பூவின் கன்னம் வழித்தவர், தன் மகனைத் தேடி உற்சாகமாக ஓடினார்.

பார்வதி மருமகளை அணைத்து உச்சி முகர்ந்தார். மணிக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. பேச்சு வரவில்லை. மகளின் கன்னம் வழித்து நெட்டி எடுத்தார்.

தன்னுடைய சந்தோஷம் தன் குடும்பத்தாருக்கு எத்தனை மகிழ்வை கொடுக்கிறது என்பதை மனதால் உணர்ந்தாள். ஆனந்தத்தில் கண்ணீர் வரும் போலிருக்க அங்கிருந்து நகர்ந்து முற்றம் வந்தவள் எதிரே வந்த பரிதியின் மீது மோதிக்கொள்ள… அவளை பிடித்து நிற்க வைத்தான்.

இரவு நடந்த நிகழ்வாள் பூ பரிதியின் முகம் காணாது தலை கவிழ்ந்து நின்றாள்.

இரட்டை ஜடையில் பள்ளி சீருடையில் அவளை பார்த்தது முதல் அவள்மீது இன்னதென்று வார்த்தையால் வடிக்க முடியாத பாசம் அவனுள். நாளடைவில் அவளின் பொறுப்பு தன்வசம் என்று வந்தது முதல் அவனறியாமல் தன்னைப்போல் அவளை தன் மகளென்ற கண்ணோட்டத்தில் தான் பார்த்திருக்கிறான். இன்று அவளின் இந்த தயக்கம் எதனால் என்று அறிந்தவன்… அவளின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்து, தோளோடு அணைத்து, “ரிலாக்ஸ்டா… யூ ஆர் மை லிட்டில் பிரின்சஸ்” என்றான்.

மொத்தமாக நெகிழ்ந்து உணர்வின் பிடியில் தத்தளித்தாள்.

“மாமா…”

அவளின் முகம் துடைத்தவன்,

“இனி உனக்கு சந்தோஷம் மட்டும் தாண்டா” என்றான்.

“என்ன பாசமலர் படம் ஓடுது போலிருக்கே” என்று அவர்களிடம் வந்த பாரி பரிதியின் மற்ற பக்கம் நின்று அவனின் தோளில் கை போட்டான்.

“என்னோட மாமா, போடா” என்று பாரியை கை வைத்து தள்ளிய பூ பரிதியின் தோளில் உரிமையாய் சாய்ந்து கொண்டாள்.

“நானில்லாம மாமா எங்கிருந்து வந்தாராம்” என்று பூவை சீண்டியவன் பரிதியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்திட…

பூ முகம் சுருக்கி பரிதியை பார்த்தாள்.

பாரி அட்டகாசமாக சிரிக்க…

பூவின் வாடிய முகம் பிடிக்காது… அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான் பரிதி.

இப்போது பூ பாரியை பார்த்து நாக்கை துருத்தி காண்பித்து சிரித்தாள்.

“போடா…” என்றவள், “மாமாக்கு நான்தான் பர்ஸ்ட்” என்றிட…

“அப்போ எங்களுக்கு ஒரு ஓரத்திலாவது இடமிருக்கா” என கேட்டபடி சின்னுவுடன் வந்தாள் இளா.

“அதெல்லாம் கொஞ்சமா இருக்கு” என்ற பூ இளாவிடம் கூட பரிதியை விட்டுத்தரவில்லை.

பரிதியின் பாசம் தான் ஒரு காலத்தில் அவளை உயிர்ப்போடு வைத்திருந்ததே. அதனை எந்நிலையிலும் இழக்க அவளால் முடியாது. அது சின்னுவிடமாக இருந்தாலும் கூட.

“சரித்தேன்” என்ற இளா, “அப்படியாங்க கொஞ்சமாத்தேன் இருக்குதாக்கும்?”  என பரிதியிடம் வினவினாள்.

இப்போது பாரியின் சிரிப்பு சத்தம் வீட்டை நிறைத்தது.

இளாவின் கேள்விக்கு பரிதி யார் பக்கம் பதில் சொன்னாலும் மற்றவரிடமிருந்து கண்டிப்பாக அடி உண்டு… அதனை எண்ணி பரிதி விழிக்க, அவனின் இந்நிலை பாரிக்கு சிரிப்பை வரவழைத்திருந்தது.

“டேய் எதாவது ஐடியா கொடுடா.” பரிதி பாரியின் காதில் கிசுகிசுத்தான்.

பூ தன் அக்காவின் முகத்தை பார்த்து பார்வையால் ப்ளீஸ் என்றிட…

“சரி சரி உங்க குட்டிம்மாவையே ஃபர்ஸ்ட்டா வச்சிக்கோங்க” என்று இளா விட்டுக்கொடுத்தாள்.

பூ இளாவை கட்டிப்பிடித்து நன்றி உரைத்து செல்லம் கொஞ்சிட, பாரி மற்றும் பரிதி அரசுவின் அழைப்பில் அங்கிருந்து நகர்ந்தனர்.

“நீ தப்பா நினைக்கலையேக்கா?”

“எதுக்கு” என்ற இளா, “அவர்கிட்ட உனக்கான இடம் எதுன்னு தெரியும். அதைவிட எனக்கான இடம் எதுன்னு ரொம்ப நல்லாவே தெரியும். அவரு அவரோட மச்சினியையே பொண்ணா நினைக்குறப்போ, எனக்கு என் தங்கச்சியை பொண்ணா பார்க்கத் தெரியாத என்ன?” என்றாள்.

“அக்கா…”

“ச்சூ… என்னதிது சின்னபிள்ளையாட்டம். பரிதியை எனக்கு பிடிச்சு கல்யாணத்துக்கு ஓகே சொன்னாலும், அந்த பிடித்தத்தில் ஒரு காரணம் நீயும் தான். நீயில்லாம அவங்க எனக்கு எப்படி கிடைச்சாங்களாக்கும். புதுசா பார்க்குறவங்க கூட உங்க பாசத்தை தப்பா நினைக்கமாட்டங்க, நான் மட்டும் விட்டுக்கொடுத்துடுவேனா” என்ற இளாவை தன் மனதில் உயரத்தில் வைத்தாள் பூ.

“லவ் யூக்கா.” இளாவின் கன்னத்தில் அழுந்த இதழ் ஒற்றினாள்.

“போதும் போடி. உன் வீட்டுக்காரருக்கு கொடு” என்று அவளை சகஜநிலைக்கு மீட்டாள் இளா.

“அவனுக்கா… அவன் என் மேல கோபமா இருக்கானாம். அதனால் அவனுக்கு கிடையாது” என்று பூ சொல்லும்போதே அங்கு வந்த தங்கம்,

“என்னட்டி இது… புருஷனை அவன் இவன்னு மரியாதையில்லாம விளிக்கிறது. ஒழுங்கா லட்சணமா மாமான்னு கூப்புடு. இல்லை கொமட்டுலே நாலு இடி இடிப்பேன்” என்று இடித்தும் வைத்தார்.

“ஆ… அப்பத்தா வலிக்குது. அவனுக்கென்ன மரியாதை” என்ற பூவை மேலும் ஆவென்று கத்த வைத்தார்.

“இதென்ன பழக்கம் தமிழு. முன்ன எப்படியிருந்தாலும் இப்போ அவரு உன் புருஷன். மரியாதையாத்தேன் கூப்பிடனும். நாளபின்ன வெளியிலும் இதே பழக்கந்தேன் வரும். இனி மாமான்னு கூப்பிடுற அம்புட்டுதேன்” என்று கட்டளையாக மொழிந்தவர் வழக்கம்போல் சேலை தலைப்பை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு நகர்ந்தார்.

“அத்த சொல்லுறது சரிதேன் தமிழு” என்று அவர்களின் பேச்சினை கவனித்த மணியும் சொல்ல…

“உனக்கு என்ன இஷ்டமோ அதை சொன்னாலே போதும்” என்று அவளுக்கு பரிந்து வந்தார் பார்வதி.

“ரொம்ப செல்லம் கொடுக்காதீக அண்ணி. நம்ம பக்க சொந்தத்துல எல்லாம் கட்டிகிட்டவகள மாமா சொல்லுறது வழக்கந்தேன். அப்படியே கூப்பிடட்டும். பேர் சொல்லி டா போட்டு பேசினா பாக்குறவங்க என்ன நினைப்பாக” என்று மணி மூச்சுவாங்க பேசிட…

“நீ அண்ணி அப்பத்தா சொல்லுறதையே கேளு தமிழு” என்றுவிட்டார் பார்வதி.

பூவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலிருக்க…

“பரிதியை மாமா தான சொல்லுற தமிழ். பாரியை சொல்லுறதில் என்ன தயக்கம். உனக்கு உடனே வரலைன்னா  வாங்க போங்கன்னு கூப்பிடு. தனியா இருக்கும்போது எப்படி வேணாலும் சொல்லிக்கோ” என்று தான் செய்யும் அதே முறையை தங்கைக்கும் கற்றுக்கொடுத்தாள்.

“வாங்க… போங்கன்னா!” என்று இழுத்த பூ பாரியை “என்னங்க” என்று விளிப்பது போல் கற்பனை செய்து பார்க்க… வேகமாக உடலை உதறினாள்.

“இதுக்கு அதுவே பெட்டர் போலக்கா” என்று சிணுங்கிய தங்கையிடம், “நான் அவரை தனியா இருக்கும்போது டா போட்டுக்கூட கூப்பிடுவேன். ஆனால் பெரியவங்க முன்னால் மரியாதைதான். உனக்கே அவரை நான் டா போடுவேங்கிறது இப்போ நான் சொல்லுறவரை தெரியாது தான?” என்றாள் இளா.

ஆமென்று வேகமாக தலையாட்டினாள் தமிழ்.

“நம்ம அப்பத்தா, அம்மாயெல்லாம் கிராமத்திலேயே இருந்தவங்க தமிழ், அவங்கெல்லாம் புருஷனை பெயர் சொல்லி கூப்பிடுவதையே பெரிய குற்றம் செய்த மாதிரி நினைப்பாங்க… அவங்க முன்னால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

நான் பரிதின்னு சொல்லுறதையே அப்பா என்னை கூப்பிட்டு கண்டிச்சார். உன்னை அவரின்னும் கவனிக்கலன்னு நினைக்குறேன்” என்றவள் பரிதியின் அழைப்பில் பூவிடமிருந்து ஓடினாள்.

“ஹேய் மெதுவா வா இளா” என்ற பரிதி தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டான்.

“இப்போ உன் பொண்டாட்டியை நீ கூப்பிடு ராசா” என்று தங்கம் பாரியை கோர்த்துவிட்டார்.

அப்போதுதான் தாங்கள் இருக்கும் கூடத்தையே இளா கவனித்தாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

“தாய் கெழவி…”

பாரியின் உதட்டசைவில் வார்த்தையை கிரகித்த தங்கம்…

“என் பெரிய பேரன் என்னம்மா கூப்பிட்டு பக்கத்துல உட்கார வச்சிகிட்டான். நீயென்னவோ கூப்புட சொன்னதுக்கே மொறைக்குத” என்றார்.

அனைவரும் பாரியைத்தான் ஆர்வமாக பார்த்திருந்தனர்.

அவர்களுகிடையேயான பிரிவு, அவர்களின் ஒவ்வொரு செய்கையையும் கவனிக்க வைத்தது.

“பூ…” அவனின் உதடு மட்டும் தான் அசைந்தது. முற்றம் கடந்து வீட்டின் கடை கோடியில் நின்று இளா சொல்லிச்சென்றதையே எண்ணியபடி இருந்த பூவிற்கு அவனின் மௌன அழைப்பும் செவி நுழைந்ததோ…

“ஆங்… வரேன் பாரி” என்று குரல் கொடுத்தாள் அவள்.

தங்கத்தை மிதப்பாக ஒரு பார்வை பார்த்தான் பாரி.

“எப்புடி…!”

“நீங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தா எங்களுக்கு வேறென்ன வேணுமாட்டிக்கு ராசா. நாங்க ஆசைபட்டதும் இதைத்தேன்” என்றார் தங்கம்.

“என்னடா…”

தங்கம் முறைத்த பின்னரே அவர் அத்தனை சொல்லியும், தான் ‘டா’ என்று சொல்லிவிட்டோம் என்பதை உணர்ந்தாள் அங்கு வந்து பாரியிடம் வினவிய பூ…

“பழக்கத்தில் வந்திருச்சு” என்றாள்.

“இந்த பழக்கந்தேன் வெளி ஆளுங்க முன்னுக்கவும் வரும்” என்ற தங்கம் அவளை விடுவதாகயில்லை. இத்தகைய அழைக்கும் முறையை பூ மாற்றிக்கொண்டே ஆக வேண்டுமெனக் கூறி கண்டித்தார்.

“அப்பத்தா…!”

“பெரியவங்க சொல்றது நம்ம நல்லத்துக்குத்தேன் தமிழு.” அரசுவின் வார்த்தையில் பூ அமைதியாகினாள்.

பாரிக்கு என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனால், பூ செய்யும் ஏதோவொன்றை தவறென்று சொல்கின்றனர் என்று யூகித்தான்.

“என்ன?”

பாரி பூவை பார்வையால் வினவினான்.

ஒன்றுமில்லையென தலையசைத்தவள்…

“முயற்சி பண்ணுதேன் ப்பா” என்று அரசுவிடம் சுரத்தேயின்றிக் கூறினாள்.

“சரி இப்போ எதுக்கு வரசொன்னோமுன்னு சொல்லுவோம்” என பார்வதி தான் தன் மருமகளை காப்பாற்றுவதற்காக பேச்சை மாற்றினார்.

‘தேன்க்ஸ் அத்தை’ என்று முணுமுணுத்தவளின் கையை பிடித்து தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.

“எப்போ கெளம்புறதா இருக்கீக?” தங்கம் பரிதி மற்றும் பாரியிடம் ஒன்றாக வினவினார்.

“ஏன் பாட்டி… எங்களுக்கு ஆக்கி போட்டு உங்க கை உடைஞ்சு போச்சா?” பாரி விளையாட்டாக பட்டென்று கேட்டான்.

“என்ன வார்த்தை கேட்டுபுட்ட ராசா… ஏதோ அங்கன சூழ்நிலை சரியில்லைன்னு வந்தீக. ரெண்டு பேருமே வேலை வேலைன்னு இருக்கற ஆளுவளாச்சே… அவசரமா கெளம்பிடுவீகளோன்னு தெரிஞ்சிக்க கேட்டா… இப்புடி கேட்டுபுட்டியே?”

“அவன் சும்மா உங்களை வம்பிழுக்கிறான் பாட்டி. எனக்கு இன்னும் ரெண்டு நாள் இங்கிருந்தாலும் பிரச்சனையில்லை” என்றான் பரிதி.

“என்ன விஷயம் சொல்லுங்க பாட்டி… நான் கிளம்புறதைப்பற்றி சொல்றேன். கமிஷ்னர் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். பட், ஏதாவது எமெர்ஜென்சி அப்படின்னா உடனே போகிற மாதிரி இருக்கும்” என்று தன்னுடைய நிலையை விளக்கிக் கூறினான்.

“குடும்பத்தோட குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலாமுன்னு அம்மா நினைக்குறாக” என்று அரசு சொல்ல…

“உங்க கல்யாணம் முடிஞ்சி இன்னும் ரெண்டு பேரும் ஒட்டுக்கா கோவிலுக்கு போய் சாமி கும்பிடலையே ராசா. அதேன் இப்போ எல்லாம் சரியாப்போச்சுதே. உங்களுக்கான வேண்டுதல் வேற இருக்கே. போய் ஒரு பொங்கல் வச்சிட்டு வந்திபுடுவோமே! நீயில்லாம தாலி சரடு மாத்திக்கமாட்டேன்னு உம் பொண்டாட்டியும் வம்படியா இன்னும் கயிறையே போட்டிருக்கா. அப்படியே அதையும் மாத்திபோட்டுக்கலாம்” என்று தன் மனதில் உள்ளதை தங்கம் கூறினார்.

அப்போதுதான் பாரி பூவின் கழுத்தை கவனித்தான்…

அதுநாள் வரை சாதாரணமாக பார்த்த கயிறு… இன்று தான் அதை பிரித்து மாற்றி போடும் முறை ஒன்றிருப்பதையே அவனிற்கு நினைவூட்டியது.

அதன் பின்னர் நாளையே நாள் நன்றாக இருப்பதால் கோவிலுக்கு செல்லலாம் என்று அனைவரும் பேசி முடிவெடுத்த ஏதும் பாரியின் கருத்தில் பதியவில்லை.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
45
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்