Loading

தூவானம் 39 :

பாரி வேந்தன்…

பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தான். தன்னவளை காண.

ஆணையரிடம் தனக்கு இட்ட பணியை முழுதாக முடித்து வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்தும் ஒப்படைத்து வெளியில் வந்த பாரி அழைத்தது பரிதிக்குத்தான்.

“இங்க எல்லாம் ஓகே ஆகிடுச்சு” என்று பாரி சொல்லிய பிறகே அங்கு பரிதிக்கு அதுவரை இருந்த படபடப்பு நீங்கி சுவாசம் சீரானது.

அவனின் மொத்த குடும்பமும் அவன் பொறுப்பில் அல்லவா இருந்தது. அதற்கே உண்டான பயம் பரிதியிடம் இருக்கத்தான் செய்தது.

“அங்க உனக்கு ஒன்னுமில்லையே பாரி.” ராயப்பனை பற்றி அறிந்திருந்த பரிதிக்கு தன்னுடைய தம்பியின் நலம் தெரிய வேண்டியிருந்தது.

கட்டிட்டிருந்த கையை உயர்த்தி பார்த்தவன்…

“அம் ஓகே பரிதிண்ணா” என்றவன் தான் அங்கு வருவதை சொல்லாது வைத்திட்டான்.

உடனே மீண்டும் அழைத்த பரிதி…

“தமிழ்கிட்ட பேசு பாரி. உன்னை நினைச்சு வருத்துப்பட்டுட்டு இருக்காள்” என்றான்.

“கொஞ்சம் வேலை இருக்கு பரிதிண்ணா” என்று பொய் சொல்லியவன், “அப்புறம் பேசுறேன்” என்றான்.

“அப்புறம் பாரி…”

அவனது பின்னால் ஒலித்த ஜென்னின் குரலுக்கு,

“என் பொண்டாட்டியை பார்க்கணும் ஜென்” என்றான்.

“என்னடா ஏதோ புதுசா?” என்ற ஜென் பாரியின் முகத்தை சுட்டு விரல் கொண்டு வட்டமிட்டு கேட்க…

அவள் எதை குறிக்கிறாள் என்பது புரிந்து, பாரி அசடு வழிந்தான்.

“உனக்கும் நல்லாத்தான் இருக்கு பாரி, இந்த வெட்கம்.”

ஜென்னின் வார்த்தையில் பாரியின் இதழ் நன்கு விரிந்தது. அவனது முகமே மலர்ந்து சிரித்தது. கண்கள் உட்பட.

அதனை சரியாக புகைப்படம் எடுத்த ஜென் உடனடியாக பூவிற்கும் அனுப்பி வைத்தாள்.

“ஹேய் ஜென் என்ன செய்யுற?” என்றவன், “நான் அவளை பார்க்க போறதை சொல்லிடாத” என்றான்.

“சர்ப்ரைஸாக்கும்” என்று ஜென் சொல்லும்போதே பூவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

அலைபேசியின் திரையை பாரியிடம் காண்பிக்க… அவன் வாயில் விரல் வைத்து எதுவும் சொல்லிடாதே என்று செய்கை செய்தான். அவனே ஆன் செய்து, லவுட்ஸ்பீக்கரில் போட்டவன் பேசு என்றான்.

“சொல்லு பூ?”

“எங்க அந்த காக்கிச்சட்டை. எப்போ பாரு இரும்பை முழுங்குன அயர்ன் மேன் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கிறது. பொண்டாட்டி ஞாபகம் இருக்கா? இல்லையா? தொரத்தி விட்டோமே, வேலை முடிஞ்சதும் ஒரு கால் பண்ண முடியாதாமா? பொண்டாட்டி பக்கத்தில் இல்லைன்னா தான் முகத்தில் இப்படியொரு சிரிப்பு வருமாமா அந்த காக்கிக்கு. இப்போ என்ன பன்றான். அநியாயத்துக்கு போலீஸா இருக்க வேணாம் சொல்லு” என்று பொரிந்து தள்ளினாள்.

பூவின் பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்த பாரிக்கு முகத்தில் அப்படியொரு புன்னகை. அவனது விரிந்த புன்னகை தனியொரு அழகுடன் அவனைக் காட்டியது.

“சில் மலரே…” என்ற பாரியின் குரலில் அமைதியானவள்,

சில நொடிகளுக்கு பின்…

“எப்போ வர வேந்தா? உன்னை பார்க்கணும் போல இருக்கு” என்றாள் சுரத்தே இல்லாமல்.

“வீடியோ கால் வரவா பூ?” அவளின் உணர்வுகள் புரிந்தும் வேண்டுமென்று சீண்டவே அவ்வாறு கேட்டான். சிரிப்பினை மறைத்தவனாக.

“அப்போ அந்த ஃபோனையே கட்டிக்கிட்டு உன் போலீஸ் பொண்டாட்டியோட கேஸ் கேஸுன்னு சுத்திட்டே இரு” என உடனே எண்ணெய்யில் இட்ட கடுகாய் வெடித்தவள் அவனிடம் பீறிட்டு கிளம்பிய சத்தமான சிரிப்பை கேட்கக்கூட இல்லாது அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

“ஏண்டா அவளை வெறுப்பேத்துற?” ஜென் பாரியின் தோளில் தட்டினாள்.

“எனக்கு பிடிச்சிருக்கு ஜென்” என்றவன் வண்டியை கிளப்பி ஜென்னுடன் வீடு நோக்கி பயணித்தான்.

“இந்த கேஸ் இவ்வளவு சீக்கிரம் முடிய நீதான் காரணம்… மீடியா முன் கெத்தா நிக்க உனக்கு விருப்பமில்லையா பாரி?”

“இப்போ நான்தான்னு தெரிந்தால் மட்டும் என்ன ஜென் நடக்கும். மேக்சிமம் ஒரு டூ டேஸ் என்னைப்பற்றி பேசுவாங்கலா… நான் அதுக்காக இந்த யூனிஃபார்ம் போடல ஜென். ஒரு கேஸ் எடுத்தா முடிக்கணும். திரும்ப அதே தப்பு நடக்காத அளவுக்கு மொத்தமா முடிக்கணும். அதில் கிடைக்கிற ஜாப் சேட்டிஸ்ஃபை போதும்” என்றான்.

பாரிக்கு இந்த வேலையில் இருக்கும் பற்று… அவன் பார்க்கும் கோணம் எல்லாமே ஜென்னிற்கு வியப்பாக இருந்தது.

வீட்டிற்கு வந்ததும்…

“எப்போடா கிளம்புற?”

“இப்போ!”

சொல்லியவன் அடுத்த சில நிமிடங்களில் உடை மாற்றி கிளம்பியிருந்தான்.

ஜென்னை அவியின் வீட்டில் அவியுடன் விட்டவன்,

“ராயப்பனுடைய ஆளுங்க சும்மா இருக்கமாட்டங்க அவி, ஜென் இங்க உன்னோடவே இருக்கட்டும். நான் திரீ டேசில் வந்துடுறேன்” என்று அவியிடம் சொல்லியவன், அங்கிருந்த செக்ரியிடம் தலையசையுப்புடன் அவியின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.

அவியுடன் இருக்கும் தம்பதியை யாரென ஜென் பார்வையாலேயே அவியிடம் வினவ, அவனும் அதே பார்வையால் தெரியாதெனக் கூறினான்.

*****

பாரியிடம் பேசிக் கொண்டிருந்தவள் அணைத்துவிட்டு சற்று நேரத்திற்கு முன் ஜென் அனுப்பிய புகைப்படத்தைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அவனது சீண்டல் பேச்சு, சிரிப்பு இதெல்லாம் அவனுக்கு ஒன்றுமில்லையென பூவை தெளிவாக்கியிருந்தது.

“ரொம்பத்தான் பயப்பட வச்சுட்டான்” என்று அலைபேசியில் நிழல் படமாக இருந்தவனை குத்தினாள்.

“என்னடா பாரி பேசினானா?”

கேட்டபடி பரிதி அவளின் அருகில் அமர்ந்தான்.

“அப்போ உங்ககிட்ட பேசினானா?” அவளின் கோபத்தை உணராது பரிதி ஆமாம் என்றிட,

“அப்போ மிஸ்டர்.காக்கிக்கு எனக்கு கால் பண்ண தான் நேரமில்லையாக்கும்” என்று இடக்காகக் கூறினாள்.

‘அச்சச்சோ தெரியாம சொல்லிட்டோமோ!’ பரிதியின் மனம் அலறியது.

“ரொம்ப பயமிருக்க மாதிரி நடிக்காதீங்க மாமா. உங்க தம்பியை நான் ஒன்னும் கடிச்சு சாப்பிட்டுட மாட்டேன்” என்றவள், வெளி திண்ணையிலிருந்து எழுந்து வீட்டிற்குள் சென்றாள்.

உள்ளே அனைவரும் தொலைக்காட்சியின் முன்பு தான் அமர்ந்திருந்தனர்.

ஆணையர் சிவகுமார் பிரெஸ் முன்பு அனைத்தையும் விளக்கிக்கூறியிருந்த காட்சி காணொளியாக செய்தி சேனல்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

ராயப்பன், ரித்தேஷ் என அவர் ஒருத்தர் பெயரையும் விடவில்லை.

துணை ஆணையர் பாரிவேந்தன் என்று அவனது பெயரையும் சொல்லி… “இந்த வழக்கின் ஹீரோ அவர் தான். அவரில்லைன்னா இத்தனை எளிதா இந்த கடத்தல் கூட்டத்தை பிடித்திருக்க முடியாது” என்று சொல்லியிருந்தார்.

பார்த்த குடும்பத்தினருக்கு பாரியை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது.

பாரி நேரில் அவர்களுக்கு முகம் காட்டாததால் அவனது புகைப்படம் திரையில் ஒளிபரப்பப்பட்டு, இந்த வழக்கை கண்டுபிடித்து முடித்து வைத்ததற்காக பல அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்ததும் காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது.

பாரியின் படத்தை தொலைக்காட்சி திரையில் பார்த்த சின்னு சித்தா சித்தா என்று கைத்தட்டி குதுகளித்தாள்.

“யாரும் எதிர்பாராத முக்கிய பொறுப்பில் இருக்கும் இரண்டு அரசியல் தலைவர்களே இத்தனை பெரும் குற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் சார் எடுக்கப்போறீங்க?”

நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு,

“எங்களுடைய வேலையை சரியா நாங்க முடிச்சிட்டோம். இனி நீதிமன்றத்திற்குத்தான் வேலை. அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டிய இடம் அங்குதான்” என்று செக்ரி தன் பேச்சினை ஊடகவியலாளர்கள் முன் முடித்திருந்தார்.

“எப்படியும் இவனுங்களுக்கு ஏற்ற தண்டனை கிடைக்கப்போறதில்லை.” தில்லை கூறிட, அரசு ஆமோதித்தார்.

“நம் நட்டோட சட்டம் அப்படி.” பரிதி கூறினான்.

“போலீஸ் கஷ்டப்பட்டு பிடிக்குற குற்றவாளிகளை எளிதா தப்பிக்க வச்சுடுது நம் சட்டம்” என்ற பூவிற்கு பாரியுடன் இருந்ததால் ஓரளவிற்கு இந்த வழக்கிற்காக அவன் எடுத்த முயற்சிகள் தெரிந்திருந்தமையால் ஆற்றாமையாகக் கூறினாள்.

“அப்படி மொத்தமா சொல்லிட முடியாது. பல பெரும் வழக்குகளுக்கு நியாயமான தீர்ப்பும் கிடைச்சிருக்கு” என்று தில்லை கூற, அதனை மறுத்து கருத்து சொல்லிட முடியவில்லை.

“என்னாட்டி வா தொறக்கல… உன் புருஷன் கண்டுபிடிச்சிட்டான்னு ரொம்பத்தான்” என்று தங்கம் பூவை வழக்கம்போல் வம்பிற்கு இழுக்க…

“இதோபார் கெழவி சும்மா என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே கிடந்தன்னு வைய்யீ… உன் வாவுலே நாலு போடுவேன் பார்த்துக்கிடு” என்று பதில் வழங்கினாள் பூ.

“உன் வீராப்பெல்லாம் இந்த கெழவிக்கிட்டதேன்” என்ற தங்கம், “புருஷனை முடிஞ்சிக்க தெரியல, இதுல வாவ பாரு… அம்புட்டு நீளத்துக்கு” என்று பேச…

“என் புருஷன் வந்ததும் காட்டுதேன். என் முந்தானையில் முடிஞ்சிகிட்டதை” என்று பூவும் தன்னுடைய துப்பட்டாவின் முனையை திருகி பதில் வழங்கிட,

“மொத சேலையை கட்டிட்டு அப்புறம் முந்தியை ஆட்டுடி என் சித்தராங்கி” என்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்த தங்கம் தன் சேலை தலைப்பை உதறி தோளில் போட்டுக்கொண்டு நகர்ந்தார்.

அவரின் செயலில்…

“அப்பத்தா” என்று பூ பற்களுக்கிடையில் வார்த்தையை கடித்தாள்.

தங்கத்திற்கு பூ பதில் பேச தொடங்கியதுமே அவர்களின் வம்பு பேச்சினை வீடியோ எடுக்கத் தொடங்கிய பரிதி அதனை பாரிக்கு அனுப்பி வைத்தான்.

அந்த வீடியோவிற்கு கீழவே,

“உண்மையாவாட தம்பி… பூ உன்னை முடிஞ்சிக்கிட்டாளா?” என்று கேட்டு கூடவே சிரிக்கும் பலவகை எமோஜியை பரிதி அனுப்பி வைத்தான்.

“இப்போத்தான் என் மவள பார்க்க நல்லாயிருக்காட்டி” என்று, அதுவரை மகளின் வாய் துடுக்கை பல வருடங்களுக்கு பின்னர் பார்த்த மணி பூவின் முகம் வருடினார்.

“இனி எல்லாமே சந்தோஷம் தான் அண்ணி” என்ற பார்வதி பரிதியிடம் திரும்பி,

“வேலையெல்லாம் முடிஞ்சிருந்தா அவனை உடனே கிளம்பி வரசொல்லு” என்றார்.

தாயின் பேச்சினை கேட்பவனாக பரிதி பாரிக்கு அழைக்க… காரினை சாலையோரம் நிறுத்திவிட்டு பாரி அலைபேசியை காதில் வைத்தான்.

பார்வதி சொல்லியதைக் கூறிய பரிதி, “வீடியோ பார்த்தியாடா?” என்றான்.

பரிதி கேட்டது புரியாததால் “என்ன வீடியோ பரிதிண்ணா?” என பாரி திருப்பிக் கேட்டான்.

“இன்னும் பார்க்கலையா?” என்றவன், “உனக்கு அனுப்பியிருக்கேன் பாரு” எனசொல்லி வைத்துவிட்டான்.

இப்போதும் பரிதி வாவென்று கூறினானேத் தவிர எப்போது வருகிறாய் என்று கேட்கவில்லை. பாரியும், தான் வந்து கொண்டிருப்பதை சொல்லவில்லை.

*****

இரவோடு இரவாக ராயப்பன் மற்றும் ரித்தேஷின் பதவிகள் பறிக்கப்பட்டு, நேரடியாக நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலில் பங்கு இருந்த அனைவருக்கும், ஒருவரை விடாது… பாரியை கண்காணித்த மற்றும் கொலை செய்திட ராயப்பன் பணித்த அத்தனை அடியாட்களுக்கும் அவர்களின் தவறுகளுக்கேற்ப தண்டனை அளிக்கப்பட்டது. ஒருவரும் தப்பவில்லை. அவர்களின் குற்றங்களுக்கான ஆதாரங்களாக பாரி சமர்ப்பித்த யாவும் அவர்களை தப்ப விடவில்லை.

ராயப்பன் மற்றும் ரித்தேஷ் கட்சியை வைத்து தப்பிப்பதற்கு முயன்றும் தோல்வியே. அவர்களின் கட்சியே கைவிட்டுவிட்டது. ஆளுங்கட்சியாக இருப்பதால், கட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடக் கூடாது என்பது தானே கட்சியிலிருப்பவர்களின் எண்ணமாக இருக்கும். அவர்களின் அத்தகைய எண்ணத்தில் பலமாக அடிவாங்கினர் இருவரும்.

இது நாட்டுக்கு புறம்பான செயல் என்பதால் ஜாமீனில் வெளிவரவும் வாய்ப்பின்றிப் போனது.

ராயப்பன் தன்னுடைய மக்களையாவது தப்பிக்க வைத்திட முயற்சித்து… அனைத்தையும் தான் தான் செய்ததாக சொல்லியும்… இருந்த ஆதாரங்களும்… சாட்சியங்களும் அதற்கும் தடையாக அமைந்தது.

இதன் விளைவுகள் அனைத்தும் கோபமாக பாரியின் மீது உருவகம் கொண்டது. ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தண்டனையை அனுபவிக்கத் தயாராகினர்.

அப்போதுதான் பாரி அன்று சொல்லிய…

“என் வேகத்திலிருக்கும் விவேகம் உங்களுக்கு இந்த வழக்கு முடிந்ததும் தெரியும்” என்றதன் பொருள் விளங்கியது.

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும்… தனக்கு பதில் குற்றம் செய்தது இவன் தான் என்று பொய் சொல்லி தப்பிக்க அவர்களுக்கென சில ஓட்டைகள் இருக்கும். அத்தகையை வழியுமில்லாமல் செய்திருந்தானே பாரி. இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும், குரல் பதிவு, புகைப்படங்கள் உட்பட எல்லாவற்றிலும் அது ராயப்பன் தான் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் இருந்தன.

அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட ஆணையர் குமார் எடுத்துக்கொண்ட நேரத்தில் எல்லாம் அவ்வளவு வேகம் காட்டினார்.

பல வருடங்களாக காவல்துறை வேலையில் இருப்பவருக்கு தெரியாதா என்ன… கொஞ்சம் அசந்தாலும் பாரியின் இத்தனை நாள் உழைப்பு வீணாக்கிவிடுவார்களே! குற்றம் செய்வதற்கு முன்பு அதிலிருந்து தப்பிக்கும் வழியைத்தானே முதலில் கண்டறிந்து தவறு செய்கின்றனர். அதற்கு வழியின்ரி முற்றிலும் அவர்கள் பக்கம் உள்ள கதவுகளையெல்லாம் அடைத்திருந்தானே பாரி வேந்தன்.

இரவே அவர்களை சிறையில் அடைக்கும் பணியை கட்சிதாமாக முடித்த குமார்…

உள்ளுக்குள் பாரியை மெட்சிக்கொண்டார்.

“சபாஷ் யங் மேன்” என வாய்விட்டுக் கூறினார்.

*****

பரிதி அனுப்பிய வீடியோவை பார்த்த பாரியின் முகம் புன்னகையை தத்தெடுத்துக்கொண்டது.

அவள் பேசியிருக்கும் வார்த்தைகள் அவனை என்னவோ செய்தது. எல்லாம் காதலின் மாயம் என சொல்லவைக்கும் நிலையில் பாரி.

மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தான்.

அவள் உதறி காட்டும் துப்பட்டாவில் அவள் சொல்லியது போல கட்டுண்டு கிடக்க பேராவல் கொண்டான்.

‘பாட்டி சொன்னதுபோல சாரி(saree) ஆப்ட்டா இருக்கும்.’ அவனின் மனம் தன்னைப்போல் நினைத்தது.

“மொத்தமா கட்டிவச்சிக்கிட்டாள் பரிதிண்ணா” என்று பரிதி கேட்டிருந்த வினாவிற்கு பதில் அனுப்பியவனுக்கு பூவை தனக்குள் பொத்தி வைக்கும் வேட்கை அதிகரிக்க… வண்டியை சாலையில் பறக்க வைத்தான். வேகமென்றால் அப்படியொரு வேகம். ஆளரவமின்றி காணப்பட்ட இரவு நேர சாலை அவனின் வேகத்திற்கு வசதியாகிப்போனது.

பாரியின் பதிலோடு தன்னுடைய கேள்வியையும் சேர்த்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்தவன் அதனை பூவிற்கு அனுப்பி வைத்தான் பரிதி.

என்ன தான் பூ இயல்பாக இருப்பதைப்போல் அனைவரிடமும் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருக்கும் அவளின் பயம் பாரியை பார்க்கும் வரை விலகாது. அத்தோடு அவன்மீது அவளுக்கு இருக்கும் கோபம் கொஞ்சமேனும் குறையட்டுமென்றே அதனை அனுப்பி வைத்தான்.

பரிதி அனுப்பி வைத்ததை பார்த்துவிட்டு மனம் முழுக்க உவகை கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாது வேகமாக பரிதியிடம் சென்றவள்,

“உங்க தம்பிக்கு சப்போர்ட் பண்ணாம படுத்து தூங்குங்க மாமா. சும்மா கடுப்பேத்திகிட்டு, இவ்வளவு நேரமாகியும் அவனுக்கா என்கிட்ட பேசணும் தோணவேயில்லை” என்று கத்தியவள் பரிதி பதில் பேசுமுன்னே வேக அடிகள் வைத்து சென்றிருந்தாள். வந்த வேகத்துடனே!

“என்னாச்சுங்க?”

பூ வந்து சத்தமிட்டுச் சென்றதும் இளா பரிதியிடம் புரியாது வினவினாள்.

“சின்னு தூங்கியாச்சா?”

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே?” ஒருபக்க இடையில் கை குற்றி புருவம் உயர்த்தி பார்த்தவாறு இளா கேட்க,

அவளின் பின்னால் இடையோடு கையிட்டு தன்னிடம் நெருக்கியவன், காலாலே கதவினை தள்ளி சாத்தியிருந்தான்.

“என்ன பாஸ், திடீர்னு பார்வை மாறுது… பொண்டாட்டி ஞாபகம் வருதோ?” அவனின் பிடியில் மிதப்பாக நின்று கேட்டாள்.

“ஹோ… இளா பேபி இலக மாட்டிங்களோ!” அவனும் அவளது தொனியிலேயே கேட்டான்.

“இப்போ என்னவாம் உங்களுக்கு?”

“என்ன? ஒன்னுமில்லையே…” என்றவன் இளாவின் முகம் நோக்கி தன் முகம் கொண்டு செல்ல… கணவனின் நோக்கம் புரிந்தவள், தன் இதழை அவன் அதரங்கள் தொடும் நிலையில் சுதாரித்து கையை குறுக்கே வைத்து அவனின் ஆசைக்கு தடை விதித்தாள்.

“ம்ப்ச்… என்னடி?” சலிப்பாக வினவினான்.

“நான் கேட்டதுக்கு பதில்?”

“அவங்க ஏதோ லவ் பன்றாங்க. அதை விடேன். இப்போ என்னை லவ் பண்ண விடுடி” என்றவன் மீண்டும் தன் செயலைத் தொடர…

“ப்பா.. ப்பா…” என மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த சின்னு உறக்கத்தில் சிணுங்கிட,

“போடி… உன் பொண்ணு உனக்கு மேல” என இளாவை விலக்கி விட்டு காலை உதைத்து தன்னுடைய மகளின் அருகில் ஓடினான். அள்ளி அணைத்து தன்னுடைய நெஞ்சில் போட்டுக்கொண்டவன், தட்டிக்கொடுக்க… மீண்டும் சின்னு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

அதுவரை தந்தை மகளையே பார்த்திருந்த இளா… பரிதி சின்னுவின் உறக்கத்தை உறுதி செய்து… மெத்தையில் நேராக படுக்க வைத்து நெற்றியில் இதழ் ஒற்றி, கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர, ஓடிச்சென்று அவனின் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டாள்.

“என் பொண்ணை கொஞ்சினாத்தாண்டி உனக்கு என்மேல் ஆசை பொங்குது” என்று சிரித்த பரிதி… “அவள் உனக்கு போட்டியா?” என்றான்.

“ஆமாம்… அவளை பார்த்துக்க நானிருக்கேன். நீங்க என்னை மட்டும் பார்த்துக்கிட்டா போதும்” என்றவள் மேலும் அவனை தன் கை கொண்டு இறுக்கி, அவனின் மார்பில் தன் தலையை வைத்து அழுத்தினாள்.

“ஹா… ஹா… ஹா… இனி நீயா என்கிட்ட வரணுன்னா சின்னுவை நான் கொஞ்சினால் போதும்” என்றவனின் சத்தமான சிரிப்பு இளாவின் மென்னிதழ்களில் வன்மையாக மறைந்தது.

அங்கே காதலா? ஊடலா? கூடலா? என பிரித்தறிய முடியா நிலையில் இருவரும் வேறொரு உலகம் சென்றனர்.

படுக்கையில் விழுந்திருந்த பூவிற்கு உறக்கம் வருவனா என்று சதிராடியது. இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று உருண்டு படுத்தவள்… பரிதி அனுப்பிய பாரியின் புலனத்தின் பக்கத்தையே பார்த்து பார்த்து ரசித்தாள். தானாக சிரித்தாள். நாணம் கொண்டாள். அலைபேசியை இரு கைகளாலும் கோர்த்து பிடித்து நெற்றியில் முட்டினாள். மனம் முழுக்க அவனது வார்த்தைகள் பெரும் பிரவாகத்தை உருவாக்கியிருந்தது.

“மொத்தமா கட்டிவச்சிக்கிட்டாள்.”

அதனை பார்க்க பார்க்க உறைந்திருந்த பெரும் நீர்வீழ்ச்சி உருகி கரைந்து ஓடுவது போல் அவனின் காதலில் கரைந்து போனாள்.

‘உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா… உனக்கு காக்கிச்சட்டை வேலை மட்டும் தான் தெரியும் நினைச்சேன்!’ எதிரில் பாரி இருப்பதாக அவள் பேசிட… அவளின் பேச்சும் செய்கிற செயலும் அவளுக்கே புதிதாக இருந்தது.

மெத்தையிலிருந்து இறங்கியவள் அறை முழுக்க நிரம்பியிருந்த சின்ன சின்ன புகைப்படச் சட்டங்களில் அவளுடன் பல விதத்தில் காட்சியளித்த பாரியின் முகத்தை கையில் அள்ளி எடுக்க முனைந்தாள்.

நிழலுருவம் அகப்படுமா என்ன… தழுவலோடு நிறுத்திக்கொண்டாள்.

பால்கனிக்கு சென்றவள் கம்பியை பிடித்துக்கொண்டு இருட்டுக்குள் அவளது வெய்யோனை தேடினாள்.

‘ரொம்பத்தான் தேட வைக்கிறான்.’ இன்பமாக சலித்துக்கொண்டாள்.

‘நாலு வருஷம் அவன் இல்லாம இருந்தேன்… நாலு நாளில் அவனோட காதலுக்கு அடிமையாக்கி பித்துப்பிடிக்க வச்சிட்டான். அயர்ன்மேன்.’

கலங்களாகத் தெரிந்த நிலவில் அவனின் தெளிவான முகம் கண்டு பிதற்றினாள்.

படுக்கைக்கு ஓடி வந்தவள் குப்புற கவிழ்ந்து படுத்தவள் மீண்டும் அலைபேசியை எடுத்து பரிதி அனுப்பியதை பார்த்து… பொங்கும் நாணத்தை தலையணையில் முகம் புதைத்து மறைத்தாள்.

“வேண்டாம் பூ அவனோட வார்த்தையில தலைகுப்புற விழுந்திடாத… அதுக்காகத்தான் பரிதி மாமா வேணுன்னே அனுப்பி வச்சிருக்கார். உஷாராகிடு. உன்னை போன்னு துரத்தி விட்டான்ல. கொஞ்சமாவது அதை நினைச்சு அவன் பீல் பண்ணனும். அப்படி உடனே அவனை மன்னிச்சிடாதே. வந்து கெஞ்சட்டும். அப்போதான் டெல்லிக்கு துரத்தி விடுறதைப்பற்றி நினைக்க மாட்டான். அவ்வளவு ஈஸியா… அவனுக்கு, நீயும் உன் காதலும்? அவனை கொஞ்சம் சுத்தவிடு பூ” என்று பாரியிடமிருந்து விலகி ஓடும் கோபத்தை இழுத்து பிடித்தவளாக தனக்குத்தானே பல அறிவுரைகள் சொல்லிக்கொண்டவளாக அவளவனின் நினைவுகளோடு உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

நடுநிசி கடந்து பாரி பாபநாசம் வந்து சேர்ந்தான்.

பூவின் வீட்டிற்கு முன் காரினை நிறுத்தினான். இப்போது அவர்கள் பண்ணை வீட்டில் இருக்க வேண்டுமென்று நினைத்தவன் பரிதிக்கு அழைக்கச்சென்று நேரத்தை பார்த்துவிட்டு அரசுவிற்கு அழைத்தான்.

அவர் ஏற்றதும், “கண்ணா இந்நேரத்தில் ஃபோனு உங்களுக்கு ஒன்னுமில்லையே?” என்று பதற்றமாக வினவினான்.

‘அர்த்த ராத்திரியில் இப்படியா பயமுறுத்துவ’ என மனதிற்குள் தன்னை கடிந்துகொண்டவன் சிறிது தயக்கத்துடன் முதலில் மன்னிப்பை வேண்டினான்.

“சாரி மாமா. எனக்கு எதுவுமில்ல, பயம் காட்டிட்டனா?”

“மணி ஒண்ணுக்கு மேல ஆவுதுங்களே அதேன் செத்த பதறிப்போச்சு. அத்தோட நீங்க பார்த்த கேசு பேச்சுதேன் படுக்கும் முன்ன இங்க போச்சு, அந்த நினைப்புத்தேன்” என்றவர் பாரியின் நலன் அறிந்த பின்னர் ஆசுவாசம் கொண்டார்.

“பரிதிண்ணாவுக்கே கூப்பிட்டிருப்பேன், மொபைல் சவுண்ட் சின்னு முழிச்சிப்பாளேன்னு உங்களுக்கு…” அவன் தயக்கமாக இழுத்தான்.

“அதனால் என்ன கண்ணா?” என்றவர், “எதாவது விஷயமா?” எனக் கேட்டார்.

“நான் இங்க நம்ம வீட்டு வாசலில் தான் மாமா இருக்கேன். பண்ணை வீட்டுக்கு எப்படி வழி?” என்றான்.

பாரி வெளியில் தான் இருக்கிறேன் என்றதுமே அவன் சொல்லுவதை கேட்டபடி கதவை திறந்து வேகமாக வெளியில் சென்றார் அரசு.

அவர் வருவதை பார்த்து காரிலிருந்து இறங்கியிருந்தான்.

“நீங்க பரிதி மாப்பிள்ளைகிட்ட எல்லாம் முடிஞ்சுதுன்னு சொன்னதுமே நாங்க இங்க வந்துட்டோம் பாரி” என்றவர் அவனை வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.

“மாமா கார்?”

வீட்டு வாசலில் தெருவிலேயே நின்றிருந்தது. அதனை எங்கே நிறுத்துவதென்ற அர்த்தத்தில் வினவினான்.

“வீட்டுக்கு பின்னால இடமிருக்கு பாரி. காலையில் நிறுத்திக்கலாம். இப்போ நடமாட்டம் இருக்காதே” என்றவர், தன்னுடைய அறைக்குள் மனைவியின் பெயரை விளித்தபடி செல்ல…

“அச்சோ மாமா, அத்தையை எழுப்ப வேண்டாம். நான் வழியில சாப்பிட்டுதான் வந்தேன்” என்று தடுத்தான்.

“அப்போ இருங்க” என்றவர் மற்றொரு பக்கம் செல்ல…

பாரி வெளியில் சென்று காரை வீட்டிற்கு பின்னால் நிறுத்திவிட்டு, கையில் தன் உடைகள் அடங்கிய பையோடு வந்தான்.

அவன் வந்த போது அவனுக்கான பாலுடன் அரசு நின்றிருந்தார்.

தனக்காக அவரே சிரமம் பார்க்காமல் கொண்டு வந்திருக்கிறார் என்பதால் மறுக்காது வாங்கி பருகினான்.

பாரியிடமிருந்து காலி தம்பளரை வாங்கியவர், முதல் தளத்திற்கு செல்லும் படியின் திசையிருக்கும் பக்கம் கை காண்பித்து…

“ரெண்டாவது அறை பாரி” என்றார்.

அவர் தன்னை அந்த அறையில் தங்க சொல்கிறார் என்பது புரிய அவருக்கு தலையசைத்து விட்டு மாடியேறினான்.

‘இந்த மலரு பொண்ணு எந்த ரூமில் இருக்காள் தெரியலயே! கால் பண்ணுவோமா’ என அலைபேசியை எடுத்தவன் அவள் உறங்குவாளென்று வைத்திட்டான்.

‘அவளை பார்க்கத்தான் இத்தனை வேகமா நீ வந்த, அதுவும் பேயோடு அலைந்து பிசாசு உலவும் நேரம்.’ பாரியின் மனம் இடித்துரைத்தது.

‘இட்ஸ் ஓகே. தூங்கிட்டு இருப்பவங்களை எழுப்புறது பாவம்’ என்று மனதிற்கு பதில் கொடுத்தான்.

‘அம்புட்டு நல்லவனாடா நீ?’ என்ற மனதை அடக்கியவன் அரசு சொல்லிய அறையை கண்டுபிடித்து கதவில் கை வைக்க திறக்கவில்லை.

“உள்ள வேற யாராவது இருக்காங்களோ” என்றபடி சற்று அழுத்தமாக கதவினை தள்ள திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்த பாரி கண்களில் பொங்கிய ரசனையோடு அப்படியே நின்றுவிட்டான்.

முதல்முறை தன்னவளின் அறையில் அவளவன்.

‘இதென்ன பூ ரூம்க்கு என்னை அனுப்பி வச்சிருக்கார்?’ யோசித்தவனுக்கு ‘புருஷன் பொண்டாட்டி ஒன்றாக ஒரே அறையில் தங்குவது தான் வழக்கம்’ என அவனது மூளையும் மனமும் ஒன்றாக கவுண்டர் கொடுத்தன.

‘யா யூ ஆர் ஆல்வேஸ் ரைட்’ என்றவனின் கண்கள் அழுத்தமாக மலரவளிடம் நிலைத்துவிட்டது.

ஒளிரும் இரவு விளக்கின் வெளிச்சத்தை தோற்கடிக்கும் விதமாக,

அறைக்கு அந்தப்பக்கமிருந்த பால்கனி கதவு திறந்திருக்க… திரைசீலையை கிழித்துக்கொண்டு பால் நிலவின் பளீரென்ற ஒளி அறைக்குள் ஊடுருவியது. மெத்தையில் ஒரு பக்கமாக படுத்திருந்த அவனவளின் உருவத்தை இரவில் உலா வரும் வான் தேவதையென அவனது கண்களுக்கு மின்ன செய்தது.

அவளின் முகத்தில் உறைந்திருக்கும் சிறு புன்னகை உறக்கத்தில் அவளை அழகாகக் காட்டிட… அப்புன்னகையை தனது முரட்டு அதரங்களுக்குள் அடக்கிடும் வேட்கை பாரியை தடுமாறச் செய்தது.

சன்னல் வழி இரவு நேர குளிர் காற்று அறையை நிறைக்க… அவனின் மனம் கொய்தவளின் அழகில் அவனது தேகம் நொடிக்கு நொடி சிலிர்த்து அடங்கியது.

அவனை மீறி அவனது மனம் முணுமுணுத்தது…

‘அனைத்து பிரகாசமான வண்ணங்களும் மெழுகு போன்றது.
அழகான கனவுகள் எல்லாம் உன்னோடு சேர்ந்தது போல
ஆன்மாவின் ஆழத்தில் உள்ளது. அதிலுள்ள ஓலங்கள் யாருக்கும் தெரியாது. மறைந்திருக்கும்
தாளங்கள் ராகங்கள்
ஒன்று அல்ல ஒவ்வொன்றும் பல வண்ணங்கள் என்னுள் உறைந்திருக்கும் உனதாய். மொத்தமும் நீயாகிப்போனபின்பு உனது முகம் சித்தம் கலங்கிட ஆட்டி வைக்குதடி!’

பூவின் முகம் தீண்ட சென்ற கையை மடக்கி கட்டுப்படுத்தினான்.

“மனுஷனை உயிரோடு கொல்லுறாளே!” தலையை அழுந்த கோதியவன், கையிலிருக்கும் பையை அறையின் ஓரத்திலிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு அறையை நோட்டமிட்டான்.

“ரெஸ்ட் ரூம் எங்கிருக்கு?”

திரைக்கு பின்னால் தெரிந்த கதவினை திறந்தவன் குளியலறை என்பதை உறுதி செய்துகொண்டு, சட்டை பையிலிருந்த கைபேசியை அவனது பைக்கு பக்கத்தில் வைத்துவிட்டு உள் சென்றான். நேற்றிலிருந்து ஓடிய ஓட்டம், அதன் தொடர்ச்சியாக நீண்ட பயணம் அவனுக்கு அலுப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. அதனோடு மனைவியை நெருங்க மனமில்லை.

சில நிமிடங்களில்…

“பூவே முதல் பூவே
இந்த பனிதுளி உனக்காக
போகும் வழி எங்கும்
ஒரு புல் வெளி உனக்காக
காக்கை சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமை ஓரம்
துளி கண்ணீர் உனக்காக

பூவே முதல் பூவே
இந்த பனிதுளி உனக்காக
போகும் வழி எங்கும்
ஒரு புல் வெளி உனக்காக!”

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பூவிற்கு தூரத்தில் பாடல் ஒலிக்கும் ஓசை செவியை நிறைத்தது. மெல்ல உறக்கம் களைய எழுந்தமர்ந்தவள் சத்தம் எங்கிருந்து வருகிறதென்று ஆராய… சற்று தள்ளியிருந்த மேசையில் பாரி வைத்துச்சென்ற அவனது அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது.

‘யாரோடாது இது?’

எழுந்து சென்று அவள் எடுப்பதற்குள் கட்டாகி மீண்டும் ஒலித்தது. அப்போது தான் ஒலிக்கும் பாடல் வரிகளை கவனித்தவள், அருகிலிருந்த பையையும் பார்த்து,  வேந்தனுடையதா என்ற சந்தேகத்தோடு அழைப்பை ஏற்றாள்.

‘இந்த சாங் எப்போ வச்சான்?’ அவனது மொபைல் ரிங்டோனை உடனிருந்த நாட்களில் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.

“என்னடா ஊருக்கு போயிட்டியா?” என்று எடுத்ததும் அவி கேட்ட கேள்வி பாரியின் வரவை உறுதி செய்தது.

‘அவனுடைய மொபைல் கையிலிருக்கும் போதே சந்தேகமா?’ என்ற மனதிடம், ‘அவனை நம்பவே முடியாது’ என்று பதில் வழங்கினாள்.

பூ பேசாதிருக்க… அவி ஹலோ என்று பலமுறை அழைத்து விட்டான்.

“வந்துட்டான் அவி” என்ற பூவின் குரலில்…

“ஓகே தமிழ்… குட் நைட்” என வைத்துவிட்டான்.

“எங்க போயிருப்பான்?” என்று கேட்டுக்கொண்டவளுக்கு குளியலறைக்குள் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு, பால்கனியில் சென்று மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

இரவிற்கு ஏற்றதுபோல் இலகுவான ஆடைக்கு மாறியிருந்தான்.

மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த பூ காணவில்லை என்றதும் அறையின் கதவை நோட்டமிட்டான். அது உட்பக்கமாகவே தாழிட்டிருக்க, தானாக அவனது கால்கள் பால்கனி பக்கம் நகர்ந்தது.

தூரத்தை துரத்தும் கருமையில் அவளது பார்வை பதிந்திருக்க பின்னிருந்து அணைத்திருந்தான்.

“எப்போ வந்த?”

“அரை மணிநேரம் இருக்கும்.”

“எழுப்பியிருக்கலாமே!”

“ஃபிரெஷ்ஷா வந்து எழுப்பலாம் நினைச்சேன். அதுக்குள்ள மேடமே எழுந்துட்டிங்க?” பாரியின் கைகள் பூவின் வயிற்று பகுதியில் இணைந்திருக்க அழுத்தத்தை கூட்டினான்.

“உனக்கு அவி கால் பண்ணான்.”

“ஹ்ம்ம்…”

“சாங்’லாம் பயங்கிரமா இருக்கு?”

“ரிங்க்டோன்? நல்லாயிருக்கு தான அந்த சாங். என் பொண்டாட்டிக்காக வச்சேன்” என்றவன் அவளின் கன்னத்தோடு கன்னம் உரசினான்.

“அப்படியா… யாரந்த பொண்டாட்டி?” அவனுடைய பதிலை தெரிந்து கொள்வதற்காகவே கேட்டாள்.

“என்னை கண்ட்ரோல் பண்ணவும், என் கண்ட்ரோலை லாஸ் பண்ண வைக்கவும், இப்படி என்னை அவளோட கட்டி இழுத்து ஒட்டி கொள்ளவும், அவளால மட்டும் தான் முடியும்” என்றவனின் கிசுகிசுப்பான மூச்சுக்காற்று மோதும் குரல் அவளை கிறங்க வைத்தது.

அவனது நெருக்கத்தில் பெண்ணவள் கூசி சிலிர்த்தாள்.

“வேந்தா…” அவளறியாது அவளவனின் நாமத்தை உச்சரித்திருந்தாள் மென்குரலில். அந்த குரல் அவனை வசியம் செய்ததோ.

பேதையின் தோளில் நாடி பதித்தவன், அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

இருவருக்குமே நடப்பது முற்றிலும் புதிது. தொட்டு, அடித்து, உருண்டு விளையாடியிருக்கிறார்கள்… ஆனால், இப்போது இருவருக்குள்ளும் ஏற்படும் தொடுதலில் பல மாற்றம். உடலை இறக்கையாக பறக்க வைத்தது.

‘பூ அவன் மேல நீ கோபம இருக்க’ மனம் எடுத்து சொல்ல… ‘என் கோபம் அவனிடம் நிலைக்காது’ என பட்டென மொழிந்தாள்.

குளித்திருப்பான் போலும் சோப்பின் மணம் அவனது பிரத்யேக வாசனையோடு கலந்து அவளின் நாசி நுழைய பெண் மொத்தமாக வீழ்ந்தாள்.

“என் சோப் போட்டு குளிச்சியா?” அவளின் கிறக்கமான குரலில் அவனுக்கு போதை ஏற்றினாள்.

“பூ என்னை என்ன செய்ற நீ?” எனக் கேட்டவன், அவன் முகம் புதைந்த அவளது கழுத்து வளைவில் உதட்டினால் கடித்து வைத்தான்.

அந்த வலியும் இன்பத்தோடு நாணத்தையும் கொடுத்தது, அவனுக்கு பின்னுடல் சாய்த்து நின்றிருந்தவள், வேகமாக முன்பக்கம் திரும்பி கட்டிக்கொண்டாள்.

இப்போது இன்னும் வசதியாகிப்போனது அவனுக்கு.

முத்தம் கொடுத்திருந்தாலும் இத்தனை தவித்திருக்க மாட்டாளோ… உணர்வுகள் துடிக்கும் அவஸ்தையை சுகமாய் உணர்ந்தாள்.

“செம கிக்கா இருக்கு மலரே”

அவளின் எண்ணம் தான் போலும் அவனுக்கும்.

விட மனமே இன்றி தன் செயலை தொடர்ந்து கொண்டிருந்தான். அவளின் கழுத்து பகுதி கன்றி சிவந்து போனது அவனது இதழ் தீட்டலில். தொய்ந்து அவன்மீதே சரிந்தாள். தனக்குள் தாங்கிக்கொண்டான்.

“மலரே…”

அவளிடம் மென் முனகல்.

“வேந்தா…”

“மொத்த கண்ட்ரோலும் போச்சுடி!” அவளின் காது மடல் சிவக்க உதடு உரசி கூறினான்.

அவளின் நெருக்கம் இன்னும் கூடியது. அவனது மார்பில் தன்னுடைய கன்னம் அழுந்த முகத்தை தேய்த்தாள்.

“என்னவோ பண்றடி!” பிதற்றினான். அவள் மேல் பித்தாகினான்.

கணவனின் மார்பு பகுதியில் பற்களால் வலி கொடுத்தாள்.

கண் மூடி கிறக்கம் கொண்டான்.

“புதுசா… ரொம்ப புதுசா… என்னவோ செய்ற மலரே!” மனைவியின் முன்னெற்றி முட்டினான்.

“நீ… நீதான் என்னவோ பண்ற வேந்தா.” அவனுள்… அவனது அணைப்பில்… அவனது பேச்சில் அவனில் மையல் கொண்டாள்.

உணர்வுகள் இங்கு அனைவருக்கும் ஒன்று தானே. இதில் ஆண் பெண் வேறுபாடில்லையே. இருவரும் ஒருவருக்கொருவர் இணையாக உணர்வு சுழலில் சிக்கிக் கொண்டிருந்தனர். ஜுவாலையாய் பற்றி எரிந்திட முனையும் காதலினை அணைக்கும் வழியைத்தேடி அடுத்த அத்தியாத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர்.

அவர்களின் வாழ்வின் துவக்கத்தை ஆசீர்வதிக்க இயற்கையும் வருகை தந்ததோ! கரிய மேகமவள் வான் சூழ்ந்து வலுவானதாக இல்லாமல் மென் சாரலாய் தன் பூமி காதலனை காதலாக நனைத்தாள். துவானச் சாரல் இருவரின் நெஞ்சத்தில்.

ஈரக்காற்று இருவரின் தேகத்தையும் தழுவி சில்லிட வைக்க… அவர்களுக்குள் தூவானம் சிந்தி சிதறியது.

“சத்தியமா முடியலடி” என்றவன் அவனின் பூவை கைகளில் மலர் கொத்தென ஏந்தியிருந்தான்.

தன்னிரு கைகளை கணவனின் கழுத்தை சுற்றி மாலையாக்கியவள், மார்போடு ஒண்டினாள்.

மலரவளுக்கு நோகா வண்ணம் மெத்தையில் கிடத்தியவன் தானும் அவளோடு சரிந்தான்.

தன்னவனின் காதல் கொட்டும் முகத்தை காண தவம் கிடந்தவள் அல்லவா அவள். இப்போது அதனை நழுவ மனமின்றி, தன் நாணத்தை ஒதுக்கி வைத்து அவனின் கண்களை நேருக்கு நேர் குத்தி கிழித்தாள் தன் விழிகளால்.

ஒருவரின் சுவாசம் மற்றவருக்கு சுவாசமாக மாற, இரு முகமும் அத்தனை நெருக்கமாய்.

“உனக்கான என் காதல் தெரியுதா மலரே?” என அவளின் விழிகளை தன் அதரங்கள் தீண்டி வினவினான்.

அவள் பார்வையால் பதில் வழங்கிட… புரிய வேண்டியவனுக்கு நன்கு புரிந்தது.

“அத்தனை காதலா மலரே?”

அவனது இரு கன்னம் பற்றி தன்னுடைய உள்ளங்கை வழி தன் சூட்டை அவனிற்கு கடத்தியவள், தன் மென் இதழ் கொண்டு அவனது உதடுகளை மூடியிருந்தாள்.

பார்வை பார்வையோடு உரசி நிற்க… முத்த யுத்தம் சத்தமின்றி நீண்டது. உதடுவழி ஆன்மாவை கடத்த முயன்றனர்.

இருவரும் காதல் கொண்டு மற்றவரை வீழ்த்திட நினைத்தனர்.

சுவாசத்தடை அவளுக்கு சிரமம் அளிக்குமோ என்று உணர்ந்தவன், மெல்ல அவள் இதழை விடுத்து கழுத்தில் முகம் புதைத்து தன் மீசை நுனி கொண்டு குறுகுறுப்பு காட்டினான்.

உடல் அதிர உருகி கூசியவள் அவனுள் இறுகிட…

“கொய்திடவா மலரே” என்றான். அவளின் காதில் ரகசியமாய். மெல்லொலியில்.

கவனமாக வார்த்தை கோர்த்து சம்மதம் வேண்டியவன் அந்நொடி அவளுள் இன்னும் காதலாய் மேலேறி நின்றான்.

“பத்திரமா.” சத்தமின்றி வெளிவந்த அவளின் சம்மதம் அவனை அடுத்த கணம் தடைகளை தகர்க்க வைத்தது.

நிலவவளை ரசித்திட தடையாகிய மேகங்களை கரங்கள் கொண்டு களைந்தவன், தன் தேகம் கொண்டு அரண் அமைத்தான்.

“உன்னால மட்டும் தான் என்னை சுருட்டிக்கொள்ள முடியும் மலரே!” உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் பிதற்றினான்.

அவனது பிதற்றல்கள் யாவும் அவளின் இதயத்தில் ஆழப்பதிந்து, அவளின் காதலை கரை கடக்க வைத்தது.

இரு மின்னல்களின் உரசிலில் இடி முழக்கமாக இதயங்களில் சத்தம் மத்தளமிட… மழையென சடசடத்தது வியர்வை துளிகள்.

இருவர் ஒருவராய் வாரிக்கொண்டாட… பூவை வருடும் மென்மை அவனது முரட்டு கைகளில். வரிவடிவங்களில் வஞ்சனையின்றி ஊர்வலம் நடத்தினான். பூவுக்கே தெரியாது வண்டாய் தேனை உறிஞ்சி தன்னவளுக்குள் கடத்தியிருந்தான்.

தன்னவனின் மொத்தத்தையும் மிட்சமின்றி தனக்குள் சேமித்தவள் அவனுள் அடங்கிட அவனை மிட்சமின்றி மொத்தமாய் தனக்குள் அடக்கினாள்.

கொய்தவன் கொய்யப்பட்ட மலர் மீதே சரிந்து இதழில் தேன் அருந்தி விலக… பூச்செண்டு அவனின் பரந்த மார்பில் ஒய்யாரமாக ஒண்டியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
44
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்