Loading

காதல்-2

தனது வகுப்பை முடித்துவிட்டு தம்பிக்கு அழைப்பு விடுத்தபடி அமர்ந்தாள் மீரா.

“சொல்லு மீரா”

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ப்ரெசன்ட் வாங்கணும். நான் மதியம் லீவ் சொல்லிட்டு வரேன், போலாமா?”

“ரொம்ப ஹெக்டிக் மீரா. நீ போய் பாரு, நான் மூணு மணிக்கு பர்மிசன் போட்டு வந்துடுறேன். ஓ.பி பாக்கணும்.”

“சரி, நந்தா வந்து இருக்காரா?”

“அவரு எமர்ஜன்சி வார்டுல இருக்காரு. அவர கேட்கத்தான் எனக்கு கால் பண்ணியா?”

“மார்னிங்க்ல இருந்து கால் பன்றேன்டா, எடுக்கல. மெசஜ்க்கும் பதில் இல்ல. அதான் கொஞ்சம் காண்டு ஆகிட்டேன்”

“பாவம் அவரு. உட்கார நேரம் இல்லாம அலையுறாரு. அவரோட வொர்க்கயும் புரிஞ்சிக்கோ மீரா.”

“எங்களுக்கு தெரியும். உடனே உன் மாமாவுக்கு வக்காளத்து வாங்கிட்டு வராத. இன்னைக்கு ஈவ்னிங்க் அவரையும் கையோட கூட்டிட்டு வந்துடு. அப்புறம், உன் ஜூலியட் என்ன சொல்றா? பேசிட்டியா?”

மித்ரனின் கண்கள் சட்டென தன் எதிரில் அமர்ந்து இருப்பவளை நோக்கியது. புருவங்கள் இடுங்கக் கருத்தாக நோயாளியின் மருத்துவக் கோப்பை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

பெருமூச்சொன்றை உதிர்த்தவன், “பேசணும்.” என்றான் சுரத்தே இல்லாமல்.

“இன்னைக்கு ஈவ்னிங்க் அவள எப்டியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு. தள்ளிப் போடுறது சரியில்ல தம்பி”

“சரி மீரா. நான் முயற்சி பன்றேன். நீ கிளம்பு, நான் மாம்ஸ்சயும் அவளையும் கிஃப்ட் வாங்க அழச்சிட்டு வந்துடுறேன்.”

“சரிடா” என்றபடி இருவரும் இணைப்பைத் துண்டித்தனர்.

காலையில் புறப்படும்பொழுது இருந்த உச்சிவெயில் வெப்பம், இப்போது இல்லை புறத்தில். காற்று குளிர்ந்து வீசியது. அதற்கு மாறாக உள்ளம் தகித்தபடி அவளை எண்ணிக்கொண்டிருந்தான் மித்ரன். எதற்கு கோபித்துக் கொண்டிருக்கிறாள் அவள்? என்றே அறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். இந்தக் காதல்தான் ஒரு மனிதனை எத்தனைப்பாடுபடுத்துகிறது?

நெருங்கிப் போனால் விலகி விட்டுச் செல்லத் துடிக்கிறது. சரி, விலகித் தொலைவோம் என்று நினைத்தால் நெருங்கி வந்து இம்சை செய்கிறது. மித்ரனின் தேவி அவள். நாமமும் அதுதான் தேவிகா.

கல்லூரிக்கால நட்பு காதலாக மலர்ந்த தருணம், இருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் அவள்தான் மொழிந்தாள். பின், அவன் முன்மொழிந்தான்.

நன்றாக சென்றுக் கொண்டிருந்த காதல் நிமிடங்களில், சில நாட்களாக மௌனங்கள் மணிக்கணக்காய் நீண்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பெருமூச்சைவிட்டு அடுத்த நோயாளியை கவனிக்கச் சென்றுவிட்டான். காலம் யாருக்கும் நிற்பதில்லையே.

….

கருத்த மேகங்கள் மாரியைப் பொழிய தயாராகியிருந்தன. சொன்னதுபோலவே மனையாளை அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வைத்துவிட்டார் நித்திலன். கோவிலில் இருந்து நேராக திரைப்படத்திற்கு சென்றது அவர்களின் இருசக்கர வாகனம். திருமணமான புதிதில் நித்திலனின் முதல் பிறந்தநாளுக்கு அவரின் சுமி செய்தததெல்லாம் நினைவில் ஊஞ்சலாடியது.

‘நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் நித்திலன். அப்போது சுமித்ரா அரசு அலுவலக பயிற்சிக்காக வேலூர் சென்றிருந்த நேரம். நள்ளிரவில் திடீரென மின்சாரம் பழுதாகிவிட, சட்டென்று எழுந்து அமர்ந்தான் நித்திலன். நாக்கு உலர்ந்து போய் இருந்தது. அருகில் நீர்க்குவளையும் இல்லை. அறைக்கதவை திறக்க முயல, அது வெளியில் தாழிடப்பட்டு இருப்பதை அறிந்து ஒரு நொடி பதற்றம் தொற்றிக் கொண்டது. கதவை இரண்டுமுறை திறக்க முயற்சித்தும் முடியவில்லை. சட்டென்று மூளையில் அபாயமணி ஒலித்தது. தெரிந்தவரா? இல்லை திருடனா? என்ற அச்சத்துடன் மாற்றுச்சாவியைத் தேடினான்.

தன்னிடம் இருந்த மாற்றுச்சாவியை வைத்து கதவை திறந்து வெளியே வந்தவன் சமையலறையில் நிழலாடுவதை உணர்ந்து அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்துக் கொண்டு தாக்க தயாரானான். நிச்சயம் சுமியாக இருக்காது. அவள் வர இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது என உள்மனம் அடித்து சொன்னது. ‘பேயோ இல்லை திருடனோ யாராக இருந்தாலும் ஒரே போடு’ மூளை சொன்னதை கைகள் செயல்படுத்த முனையும் நேரம் சென்ற மின்சாரம் வந்துவிட்டது.

தீப்பெட்டியை தேடிக்கொண்டிருந்த அபிமன்யூ சட்டென்று திரும்பிட, தன்னை அடிக்கத் தயாராக இருக்கும் நித்திலனைக் கண்டு அலறிவிட்டான்.

“அய்யோ அடிச்சிடாதீங்க. நான்தான் அபிமன்யூ” கைகளை தூக்கி சரண்டர்.

கிரிக்கெட் மட்டையை கீழே போட்டவன், “இந்நேரம் மண்டைய பொழந்து இருப்பேன். இந்த நேரத்துல இங்க என்ன பன்றீங்க.? அதுவும் கிட்சன்ல?”

“அது… அது வந்து… சுமித்ராதான் வர சொன்னா.”

“என்ன சொல்றீங்க? சுமியா? அவ நாளான்னைக்குத்தான வரா?”

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது கூடத்தில் மின்விளக்கு அணைக்கப்பட்டது. இருவரின் கவனமும் அங்கு செல்ல, கையில் மெழுகுவர்த்தியோடு புன்னகை முகமாக நின்றிருந்தாள் சுமித்ரா.

நித்திலனிற்கு மூளையில் மணியடித்துவிட்டது. அவளை நோக்கி மாறாத சிரிப்புடன் அடியெடுத்து வைத்தான் நித்திலன். அறையில் வண்ணவிளக்குகள் ஒளிர அணிச்சல் கட்டியை வெட்டினான்.’

‘இப்போது நினைத்தாலும் அந்த நாட்கள் மனத்தில் சாரல் வீசித்தான் செல்கிறது. சுமித்ராவின் ஆருயிர் நண்பன்தான் அபிமன்யூ. திருமணத்திற்கு பின் எனக்கும்தான். ஆனால், மீரா பிறந்ததற்கு பிறகு அபிமன்யூ பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. பணி மாற்றலாகிவிட்டது என்ற செய்திமட்டும் யாரோ ஒருவரால் சுமிக்கு கிடைத்தது. அதனோடு ஒரு கடிதமும். அதிலிருப்பதை சுமித்ரா மட்டுமே அறிவாள். அதன்பிறகு பல நாட்கள் நண்பனுக்காக அழுது இருக்கிறாள். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல மழை நீங்கிய பிறகும் சிலிர்க்கும் மரத்தின் இலைகள் போல அவனின் நினைவுகள் மட்டும் துளியாய் மனத்தில் சிதறிக்கொண்டுத்தான் இருக்கிறது.

தற்போதெல்லாம் அபிமன்யூ பற்றி பேசினால் அவளிடம் சிறு புன்னகை மட்டுமே. கடந்த கால நினைவுகள் சில நேரம் வலியையும் புன்னகையையும் ஒரே நேரத்தில் நல்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் சுமியின் முகத்தில் அடிக்கடி பார்ப்பதுண்டு.’ சிந்தனை வண்டி சுமியிடம் ஆரம்பித்து எங்கோ சுற்றி இறுதியில் சுமியிடமே வந்து முடிந்தது.

திரைப்படத்திற்கு சீட்டுகளை அலைபேசியில் முன்னேற முன்பதிவு செய்திருந்ததால் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

….

“ஏய்! லைன்ல இருக்கியா? பதிலே காணோம்?”

“என்ன திடீர்ன்னு?”

“திடீர்னுலாம் இல்ல, தோணுச்சு கேட்டேன்”

“நமக்குள்ள இதுலாம் செட் ஆகாதுடா ஏஞ்சலு. வேண்டாமே!”

“உனக்கு அப்டி தோணலயாடா?”

“நிறய பேர் சொல்லி இருக்காங்கடா. ஏன், நாம எங்க போனாலும் நம்மள லவ்வர்ஸ்ன்னுதான சொல்றாங்க. ஆனா, ஒரு பையனும் பொண்ணும் ஃப்ரென்ட்ஸ்சா இருக்கவே முடியாதா?”

“பைத்தியம், இது லவ்வுக்குள்ள நான் கொண்டு வரலடா. உன்ன எனக்கு தெரியும், என்னை எப்டி சமாளிக்குறது எப்டி ஹேண்டில் பன்றதுன்னு உனக்கு தெரியும். ரெண்டு பேரும் லைஃப் லீட் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு சோ கேட்டேன்.”

“ஆனா, உங்க வீட்ல ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை வச்சு இருக்காங்க. அத நான் கெடுக்க விரும்பலடா.”

சுமித்ராவிடம் பதிலில்லை. “ஓ! சரிடா. இனிமே இத பத்தி பேசுறதுல ஒரு பயனும் இல்ல. இந்த டாபிக் நமக்குள்ள ஓடுச்சுன்னு ரெண்டு பேரும் மறந்துடலாம். இத விடு, வீட்ல என்ன சொன்னாங்க?”

“அதான் அந்த பொண்ணு வீட்ல வேண்டாம் சொல்லிட்டாங்க. அம்மா அடுத்து பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. கடுப்பா இருக்கு. பேசாம சாமியாரா போய்டலாம்னு இருக்கேன்”

“ரொம்ப சந்தோசம், வா ஒன்னா போகலாம்”

“எதே! அங்கயாவது என்னை தனியா விடுடா எரும”

“அதெப்டி என்னை விட்டுட்டு நீ போகலாம். டேய், ஜோக்ஸ் அப்பார்ட். இன்னும் நல்ல பொசிசன் போகணும்டா. அதுனால ஒழுங்கா படி. சாமியாரா போறத பத்தி அப்ரோம் யோசிக்கலாம். நான் வைக்குறேன்” என்றபடி இணைப்பைத் துண்டித்தவளின் கண்கள் வியர்த்து இருந்தன.

எத்தனை முயன்றும் மனது அமைதியடைய மறுத்தது. ‘அப்படி என்ன நான் கேட்டுவிட்டேன்? என்மேல் ஏதேனும் தவறா? எனக்கு தோன்றியதைப் போல் அவனுக்கு தோன்றவில்லையா? இல்லை, மற்றவர்களுக்காக பயப்படுகிறானா? இல்லை சாதி பார்க்கின்றானா? ச்சே, இருக்காது. இருந்தாலும் இந்த மனத்திற்கு என்ன சொல்லி புரிய வைப்பேன் நான்? வலிக்கிறதே!’ அலைபேசியை தலையில் வைத்தவளின் எண்ணம் முழுவதும் அவளின் நண்பன் மட்டுமே!

…..

சுமித்ராவும் நித்திலனும் தற்போது வெளியான படத்தைப் பார்த்துவிட்டு வந்தனர். அப்படியே மதிய உணவிற்கு சுமிக்கு பிடித்த உணவகத்திற்கு செல்லலாம் என்று நித்திலன் எண்ணியிருந்தார்.

நித்திலன் வண்டியை நிறுத்தி வைக்கும் இடத்திலிருந்து வெளியே எடுக்க, பின்னே வந்த வண்டி, அவரின் ஈருளியை இடித்தது. சற்றுத் தடுமாறினாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர், திட்டுவதற்காகத் திரும்ப அதற்குள் சுமி அருகில் வந்துவிட்டார்.

“என்ன ஆச்சுங்க?”

“ஒன்னுமில்ல சுமி. வயசு பசங்க பேசிக்கிட்டே ஒழுங்கா வண்டிய எடுக்கல. சட்டுன்னு இடிச்சதுல பேலன்ஸ் பண்ண முடியல”

“சரி, அவசியம் வெளியதான் சாப்பிடணுமா? வீட்டுக்கு போகலாமே?”

“அதுலாம் கிடையாது. வீட்டுக்கு போய் என்ன செய்யப் போற? அதுக்கு இந்த கிழவன் கூடயாவது இருக்கலாம்ல?” பாவமாகக் கேட்ட விதம், சுமிக்கு வெட்கம் கலந்த சிரிப்பைத்தான் தந்தது.

“அதுசரி, விளையாடாம வண்டியை எடுங்க”

இருவரும் சிரித்துப் பேசி ஈருளியில் சென்றுக் கொண்டிருந்தனர். சில நேரங்களில் நம் மனது நமக்கு நடக்கவிருக்கும் எதிர்கால நிகழ்வுகளை ஒரு உணர்வாக சொல்லிக்கொண்டே இருக்கும். அது நல்லதா, கெட்டதா என்பது பின்வரும் நாட்களில் மட்டுமே நாம் அறியக் கூடிய ஒன்று. தற்போது இருவருக்கும் ஒன்றுபோல், இவர்களைத் தவிர்த்து எங்கோ இருக்கும் இருவருக்கும் சொந்தமான ஒரு உயிரும் தவித்துக் கொண்டிருந்தது.

சாலையில் மேம்பாலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நித்திலனின் இரத்த அழுத்த மாத்திரை அன்று போடாதக் காரணத்தினாலும் வெயிலின் வெப்பத்தாலும் வியர்வை அதிகமாக, ஈருளியின் வேகத்தை குறைக்க முற்பட்டார். எதிரே வரும் கனரக வாகனத்தின் ஒலிப்பான் சப்தம் காதில் கேட்டாலும் ஒரு நொடி கண்கள் இருட்டிக் கொண்டு வர, சட்டென்று தெளிந்தவர் வண்டியை இடப்பக்கம் திருப்ப முயற்சித்தார். திரையரங்கில் நடந்த சின்ன நிகழ்வால் அவரின் சாய்நிலை நிற்பி சரியாக மடங்காமல் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. உள்ளுணர்வின் நிலையோ, காலன் விதித்த வலையோ ஏதும் அறியாது வண்டியை திருப்பிய நித்திலன், சாய்நிலை நிற்பியால் ஈருளி தடுமாறிட சாலையில் க்ரீச் என்ற சத்தத்துடன் வண்டி நிலைசாய்ந்தது. தடுப்பானை அழுத்த முயன்று எதிரே இருந்த சிமென்ட் மூட்டையில் இடித்தவாறு ஈருளி நின்றது. பல சிராய்ப்புகளோடு நித்திலன் மயக்கமானார்.

ஆனால், சுமித்ரா?

….

இத்தனை நேரம் அழுது கரைந்த மகனை தற்போதுதான் ஆயிரம் சமாதானங்கள் சொல்லி தூங்க வைத்தான் அபிமன்யூ. இன்று சுமித்ராவுக்கும் நித்திலனிற்கும் திருமணநாள் என்ற நினைவு இருந்தாலும், இதேநாள்தான் தனது மனைவியும் தன்னைவிட்டு சென்ற நாள் என்பது பெரும் வேதனையைத்தான் தந்தது.

ஒவ்வொரு வருடமும் முகிலன் இப்படித்தான் அழுது கரைவதுண்டு. இந்தநாள் மட்டும் அவனை கண்ணும்கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்படியோ அவனை அறையில் தூங்க வைத்துவிட்டு சமையலை கவனித்தார் அபிமன்யூ. சிறிது நாட்களாகவே மனது ஒரு நிலையில் இல்லை. ஒருமுறை நெஞ்சுவலி வந்ததனால் மகனுக்காக உடலையும் மனத்தையும் கவனமாகத்தான் பார்த்துக் கொண்டு வருகிறார். ஆனால், இந்த சில நாட்கள் துடிப்பு சற்று அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. என்ன நேர்ந்தாலும் மாத்திரை மருந்தை மறந்ததில்லை.

சமையலை முடித்தவர், அமைதியாக இருக்கையில் சாய்ந்தார். நித்திலனும் சுமித்ராவும் புன்னகை முகமோடு அமர்ந்திருக்க, சுமித்ராவின் மடியில் மித்ரனும் நித்திலன் மடியில் மீராவும் அமர்ந்திருந்தனர். மீரா பிறந்ததும் சுமியையும் குடும்பத்தையும் பிரிந்தவர், அதன்பின் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது அவர்களை பார்த்துத்தான் வருகிறார்.

பணிஓய்வு பெற்று வருடம் ஒன்றாகிறது. முகிலன் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறான். பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பவன், அன்னை தந்தை விசயத்தில் இன்றும் வளர்ந்த பிள்ளையாகவே தெரிகிறான்.

‘தனக்கு நேர் எதிரில் தன் குடும்பப்புகைப்படம். என் உலகத்தையே மாற்றி அமைத்து தந்த வாழ்வின் மற்றொரு தேவதை, பைரவி. அவள் உடனிருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்து போகும். அன்பை அள்ளி வழங்கும் லட்சுமி’ என்று தன் மனையாளின் நினைவோடு அப்படியே உறங்கிப் போனவர், மதிய நேரம் “ஏஞ்சலு” என்ற கத்தலுடன் எழுந்து அமர்ந்தார்.

அன்புடன்

காதல்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்