புயல் 18
ஓய்ந்து போனவளை சாப்பிடச் சொல்லவும் ஆள் இல்லை. ருத்ரனும் அவசரமாக கிளம்பிச் சென்றவன்தான். அதன்பின் போன் கூட இல்லை.
அவள் சோர்ந்து போய் வெளியே வர வாசலில் ஆத்விக் நின்றிருந்தான்.
“ஆத்வி! உள்ள வாடா..” வரவேற்புக்குக் கூட பதில் சொல்லாமல் “வீட்டுக்குப் போகலாம் கிளம்பு” என்றான் இவன்.
“என்னடா திடீர்னு”
“மாமாதான் போன் பண்ணி உன்னைக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க”
“அவனா சொன்னான்”
“ஆமா கிளம்பு..”
“நீதான் என்கூட பேச மாட்டயே..”
“வர்றயா இல்லை இங்கயே இருக்கயா. ஏதோ மாமா சொன்னாரே பாவமேன்னு கூப்பிட வந்தால் ரொம்பத்தான் பண்ணுற”
“இரு இரு நான் வர்றேன்” உடனே ஓடிச் சென்று தனது கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு அவள் பாட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.
“எப்படி இருக்க?” வண்டியில் செல்லும் போது மெல்ல விசாரித்தான்.
“இரண்டு வருசத்துக்கு மேலாச்சு. இப்போ வந்து கேட்குற ஆத்வி”
“நீ அப்படிப் பண்ணதுல எனக்குக் கோபம். ஏன் உன் மேல கோபப் படக்கூடாதா? ஆக்சுவலா நான் மாமாவே வேண்டாம்னு தான் நினைச்சேன். அதுலயும் உன் மாமியார்.. எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல”
“நீ சொல்லவே வேண்டாம் எனக்குத் தெரியும் ஆத்வி. தெரிஞ்சுக்கிட்டேன். யாரு யாரு எப்படிப்பட்டவங்கன்னு எல்லாமே நான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“இப்படியொரு நிலைமையில நான் உன்னைப் பார்த்துடக் கூடாதுன்னு தான் இந்த சம்பந்தம் வேண்டாம்னு நினைச்சேன். நான் அப்போ சொல்லும் போது இதெல்லாம் நிச்சயமா உன் மூளைக்குள்ள பதிஞ்சுருக்காது அக்கா..”
“இப்பவும் எனக்கு ருத்ரன் பிரச்சனை இல்லையே டா”
“அது தெரியும். பட் மாமாவும் நீங்களும் தனியாவா இருக்கீங்க. இல்லைல அப்போ பிரச்சனை இருக்கத்தான் செய்யும். சரி நீ இவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸை தலையில ஏத்திக்காத அது உன் ஹெல்த்துக்கு நல்லதில்லை. புரிஞ்சுதா..”
“புரியுது.. அதுக்குத்தான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரணும்னு உன் மாமன் கிட்ட பர்மிஷன் கேட்டேன். அதுக்குள்ள கவிதா வரும் சமையல் செய்யணும்னு என்னை வச்சு செஞ்சுட்டாங்க. கரெக்டா சமையல் எல்லாம் முடிச்சு அவங்களை சாப்பிட வச்சு அப்போத்தான் சாய்ஞ்சு நின்னேன் டா. நீ வந்துட்ட”
“நீ சாப்பிட்டயா?”
“எனக்கு சாப்பிட டைம் இல்லை. என்னால ஒருகட்டத்துக்கு மேல நிக்கவும் முடியல ஆத்வி. கிச்சனுக்குள்ளயே என் வாழ்க்கை முடிஞ்சுடுமாடா..”
“சாப்பிடாமல்தான் வந்தயாக்கும்..” வண்டியின் வேகத்தினை அதிகப்படுத்தினான் ஆத்விக்.
“சாப்பிடத் தோணலை டா”
“நீ ஏன் வேலைக்குப் போகக் கூடாது. இதுல இருந்து கொஞ்சமாச்சும் ரிலீப் ஆவேல”
“ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு ஆத்வி. இப்போ வேலைக்கு போனால் அது ஸ்டாப் ஆகும். நான் பேபி பொறந்த பிறகு வேலைக்குப் போயிக்கிறேன்”
“அப்போ உங்க கடைக்கே நீ போயேன்”
“அங்கயா? ஏன்?”
“ஏன்னா. நான் உங்க கடைக்குப் போயிருக்கேன். எப்பவும் கூட்டமா தான் இருக்கும். இப்போ இன்னும் ஆள் போட்டாரா என்னென்னு தெரியல. ஆனால் மச்சான் ஒரே ஆளா எல்லா வேலையும் பார்ப்பாரு. அவரு தம்பி எல்லாம் சும்மா வந்துட்டு சீன் போட்டுட்டு அப்படியே கிளம்பிப் போயிடுவாரு”
“என்ன சொல்லுற? அவனும் சேர்ந்துதான் கடையை தூக்கி நிமிர்த்திட்டு இருக்குறதா சொன்னாங்களே”
“யாரு உன் மாமியாரா?”
“ஆமா லட்சணா கிட்ட அப்படித்தான் பேசிட்டே இருப்பாங்க”
“எல்லாம் கப்சா.. நீ இப்படியே வீட்டு வேலையைப் பாரு. அந்த மனுஷன் கடையே கதின்னு கிடக்கட்டும். மத்தவங்க எல்லாரும் நோகாம இருப்பாங்க. சரி அதுக்குன்னு இருக்க கிரடிட்ஸாவது எடுத்துக்கிறீங்களா. அதையும் இன்னொருத்தருக்கு விட்டுத் தந்துடுறீங்க. உமா நீ இப்படியெல்லாம் இருக்க மாட்டயே. மாமா உன்ன அவர் மாதிரி மாத்தி விட்டுட்டாரா என்ன?”
“பேசணும்னு தான் நினைப்பேன். என்னவோ தெரியல அந்த வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது ஆத்வி..”
அவன் சொன்னதை அசைபோட்டபடி அவள் பார்வையைத் திருப்ப ருத்ரன் ஒரு பெண்ணுடன் போவது தெரிந்தது. முதுகுதான் தெரிந்தது இருந்தாலும் அந்த சட்டை அவனுடையது என்பதால் ருத்ரன் என அவளது மூளை அடித்துச் சொன்னது.
இப்போதிருக்கும் மனநிலையில் அதையும் இதையும் என்று யோசிக்க முடியாமல் அவள் அமைதியாய் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்.
மதியத்திற்கு பரிமாற உமாவை அழைக்கும் போதுதான் அவள் வீட்டில் இல்லை என்று தெரிந்தது மணியம்மாவிற்கு.
“எங்கடி போனா அவ?” கவிதாவிடம் கேட்க “என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும். நீ போன் பண்ணிப் பாரு” என்றாள் அம்மாவிடம்.
போன் பண்ணிப் பார்க்க போனை சைலண்டில் போட்டு நிம்மதியாக சாப்பிட்டு உறங்கிக் கொண்டிருந்த உமா போனை எடுக்கவில்லை.
“போனை எடுக்க மாட்டுறாடி”
“உன் புள்ளைக்குக் கால் பண்ணி கேளு..”
அவனுக்கு அழைக்க “அம்மா வீட்டுக்குப் போயிருக்கா.. ஒரு வாரம் கழிச்சுத்தான் வருவா” என்றான் அவன்.
“சொல்லிட்டுக் கூட போக மாட்டாளா உன் பொண்டாட்டி”
“அவளை போகச் சொல்லி நான் தான் சொன்னேன். என் மச்சினன் தான் வந்துக் கூப்பிட்டுப் போனான். வீட்டுல இருந்து ஒருத்தி வெளிய கிளம்பிப் போனது கூடத் தெரியாமல் அம்மா புள்ளை எல்லாரும் உண்ட மயக்கத்துல உறங்கிட்டு இருந்தால் உங்கள எழுப்பி சொல்லிட்டுப் போகணுமா என் பொண்டாட்டி. போனை வைங்க” எரிந்து விழவும் மணியம்மாளுக்கு அத்தனை ஆத்திரம்.
“என்னாச்சும்மா”
“உன் அண்ணன் எப்படியெல்லாம் பேசுறான் தெரியுமா? இப்படியெல்லாம் பேசுனதே இல்லைடி. அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசுறதை கேட்டப்போ பக்குன்னு இருக்குது. அவ வேற அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாளாம்”
“அம்மா அப்போ சமையல் எல்லாம் நீ தான் பண்ணுவயா?”
“வேறென்ன செய்யுறது இத்தனை நாளும் இந்த கைவலியைச் சாக்கு வச்சு நான் எந்த வேலையும் செய்யாமல் இருந்தேன். இப்போ செஞ்சுதானே ஆகணும்..”
முணங்கிக் கொண்டே வேலையைச் செய்தவர் லட்சணாவிடம் சிறு வேலை சொன்னால் கூட அவள் தம்பியைப் பார்க்கணும் என்று ஓடிவிட, மணியம்மாள் கவிதா ஊருக்குச் செல்வதற்குள் ஒருவழியாகிப் போனார்.
பத்து நாட்களுக்குப் பின் உமா வந்த போது அவள் முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது.
அதன்பின் அவ்வீட்டில் ஒருவாரம் எந்தவித இடைஞ்சலும் இன்றிதான் கழிந்து போனது.
அந்த ஒரு வாரமும் ருத்ரன் அவள் பின்னாடியேச் சுற்றித் திரிந்தான்.
அதில் அவன் ருத்ரன் தானா என்ற சந்தேகம் உமாவிற்கு வந்துவிட்டது.
அம்மா வீட்டுக்குச் சென்று வந்ததால் அவள் மனம் சமன்பட்டிருக்க அவளும் ருத்ரனுடன் இயல்பாக இருந்தாள்.
இருவரது சந்தோஷத்தினையும் குலைக்கும் வண்ணம் அதிர்ச்சி தரும் செய்தியோடு இத்தனை நாளும் அறைக்கே வராத மாமியார் அவளைத் தேடி அறைக்கு வந்தார்.
“உமா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
“சொல்லுங்க”
“என் பையன் அப்படிங்கிறதுக்காக நான் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது. அவன் கொஞ்ச நாளா சரியில்லை”
“சரியில்லைன்னா? எனக்குப் புரியல”
“அவனுக்கும் சத்யான்னு ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு”
இதயம் தாறுமாறாக துடிதுடிக்க ஆரம்பித்தது.
அம்மா வீட்டுக்குச் செல்லும் போது வழியிலேயே ஒரு பெண்ணுடன் ருத்ரனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
“என்ன சொல்லுறீங்க?”
“இந்த கல்யாணம் எனக்குப் பிடிக்கலைதான். ஆரம்பத்துல கோபம் இருந்தது உண்மைதான்.. அதுக்காக என் மருமகளோட வாழ்க்கை எப்படியும் போகட்டும்னு நான் நினைக்க மாட்டேன் உமா. இதைப் பத்தி அவன்கிட்ட மாமா பேசியிருப்பாங்க போல.. அவன் திமிரா பேசிட்டு இருக்கான். கடையை கூட இவன் இப்போ எல்லாம் பார்த்துக்கவே இல்லை. வீராதான் எல்லாத்தையும் பார்த்துக்கிறான் பாவம். எந்த வேலையும் செய்யாமல் அவன்பாட்டுக்கு காசை எடுத்துச் செலவு செய்யுறான். உங்க ட்ரீட்மெண்ட்க்குன்னு சொல்லி நிறைய எடுத்துட்டான். இப்போ இப்படியொரு பொண்ணுகூட.. அவளுக்குன்னு எக்கச்சக்கமாக செலவு பண்ணியிருப்பான். இதுலாம் தேவையா அவனுக்கு. ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு கூடவே இருக்கு. அவகூட சந்தோஷமா இருக்குறதை விட்டுட்டு இப்படி அசிங்கம் பண்ணிட்டுத் திரியுறானே.. அவன் போன் இப்போ எல்லாம் அடிக்கடி பிஸியா இருக்குன்னு வீரா சொல்லுறான். உனக்கு அவன் நடவடிக்கையில சந்தேகமே வரலையா உமா. வீராவும் மாமாவும் போய் அந்த பொண்ணை பார்த்துப் பேசிட்டு வந்தாங்க. அந்த பொண்ணு நான் இப்போலாம் பேசுறது இல்லை. ருத்ரன் தான் போன் பண்ணி பேசிட்டு இருக்கான். என்னை விடமாட்டுறான்னு புலம்புதாம். மாமா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு.. உன்கிட்ட கூட சொல்ல வேண்டாம். ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடும்னு சொன்னாரு. நான்தான் பொண்டாட்டிகிட்ட புருஷனைப் பத்திச் சொல்லாமல் விடுறது தப்புன்னு சொல்லிட்டு வந்தேன். என்ன பண்ணலாம் உமா.. நீ சொல்லுறதுதான் முடிவு.. எனக்குலாம் வர்ற கோபத்துக்கு அவனை அடி நொறுக்கணும்னு இருக்கு. கல்யாணம் முடிஞ்சவனை என்ன செய்யன்னு தான் பேசாமல் இருக்கேன் உமா.. அதுவும் கூட உன் முகத்துக்குத்தான்..
நான் நினைச்ச மாதிரி கல்யாணம் நடந்திருந்தால் மாமனார் வீடு இங்க இருக்கு. அவங்க வசதியில நம்மளை விட அதிகம்னு அவனுக்குக் கொஞ்சம் பயம் இருந்திருக்கும். இப்போ அதுக்கும் வழியில்லாமல் அவன் இஷ்டத்துக்கு ஆடிட்டுத் திரியுறான்..”
அவளது அழுகையைக் கண்டு பதறிய மணியம்மாள்..
“உமா.. அழாதமா.. அய்யோ நான் ஒரு பையித்தியக்காரி.. மாமா சொல்லச் சொல்லக் கேட்காமல் வந்து இப்படி உன்னை அழ வச்சுட்டேன்.. அவன் இல்லைன்னா என்ன உன்னை நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.
“அண்ணி!” சட்டென உள்ளே நுழைந்தான் வீரா.. அவளது கண்கள் அவன் மேல் பதிந்தது.
அவளுக்கு உள்ளே அவ்வளவு வேதனை. அதையும் மீறி அவள் நிமிர “அண்ணி! நீங்க எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். அவன் அக்கவுண்ட்ல இருந்து நிறைய காசு அங்க போயிருக்கு. அதுவும் கடைக்குன்னு வச்சுருந்த காசை எல்லாம் எடுத்துச் செலவு பண்ணியிருக்கான். எப்படி அண்ணி இப்படி இருக்கான். ச்சே அவனைப் போய் என்னோட அண்ணன்னு சொல்ல வெட்கமா இருக்கு”
“இருக்கும்ல வீரா. எனக்கே இது எப்படி இருக்கு தெரியுமா? என்னால தாங்க முடியல. இதுக்காகவா அவனை நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..”
“அச்சோ அண்ணி நீங்க அழாதீங்க. அவன் வரட்டும். இன்னைக்கு நான் அவனை விடப் போறது இல்லை”
“டேய் நீ பேசாமல் இருடா.. நான் பேசிட்டு இருக்கேன்ல”
“கொஞ்சமாச்சும் மூத்தவன்னு அவனுக்குப் பொறுப்பு இருந்திருந்தால் நான் ஏன்மா இப்படிப் பேசப் போறேன்…”
ஏங்கி ஏங்கி அழத் தொடங்கிவிட்டாள் உமா.. இருவரும் பதறி சமாதானம் செய்ய முயலும் போது “வேண்டாம் நான் கொஞ்சம் தனியா இருக்கணும்” என்றாள் அழுகையுடனே..
இருவரும் வெளியேறிவிட்டார்கள்.
ருத்ரன் இப்படிச் செய்திருக்கக் கூடாது. இப்படியொரு பேச்சுக் கேட்க வேண்டும் என்றுதான் இந்த காதல் செய்தோமா? அவனுக்கென்று இறங்கி இறங்கிப் போய் இப்போது இப்படியொரு கீழ் நிலையில் இருக்கிறோமே.. இதற்கு ஆத்வியின் பேச்சைக் கேட்டு கல்யாணம் வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கலாமே.. கண்டதையும் அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ருத்ரனைக் கடித்துக் குதறும் வேகம் பிறந்தது. தோற்றுப் போன மனநிலையில் இருந்தாள் அவள். போன் அடித்தாள் ருத்ரனுக்கு. பிஸி டோன்..
அந்த டோனிற்குப் பின்னாலேயே மணியம்மாள் சொல்லியது வேறு ஒலிக்க இப்போது அதையும் மீறி “தங்கம்” என்ற ருத்ரனின் குரல் கேட்டதில் நடப்புக்குத் திரும்பியவள் மடியில் படுத்திருந்தவன் தலையில் ஓங்கி குட்டு வைத்தாள்.
சரமாரியாக அவனை தாக்கிக் கொண்டிருக்க அவனோ அடியை வாங்கிக் கொண்டு அசராமல் இருந்தான்.
“ஏன்டா இப்படிப் பண்ண? எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்தயே.. என்னை நினைச்சுப் பார்த்தியா? அசால்ட்டா பழியைத் தூக்கிப் போடுறாங்க. நீயும் மறுத்துப் பேசாமல் அமைதியாய் இருக்க? என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது? அவனுக்காக நீ இப்படி இறங்கிப் போவயா? அப்படியென்ன டா அவன் உனக்குப் பண்ணிட்டான் உன் கூடப் பொறந்ததைத் தவிர. ச்சே” படுக்கையில் இருந்து உருட்டி விட்டிருந்தாள் ருத்ரனை.
“நான் தப்புப் பண்ணலைன்னு உனக்குத் தெரியுமா உமா?”
“தெரியும்.. திருவிழால இருந்து உன்னைப் பார்த்துருக்கேன் ருத்ரா. எனக்கு நம்பிக்கை இருந்தது. அப்பறம் அந்த சட்டை.. அது உன்னோட சட்டைதான். அதை உன் தம்பிட்ட குடுத்துட்ட போலயே கர்ணப்பிரபு.. அந்த சட்டையேப் போட்டுட்டு அவன் போனப்போ உன்னை மாதிரிதான் இருந்தான்.
பின்புறம் மட்டும்தான் தெரிஞ்சது. அந்த சட்டையால சட்டுன்னு நீன்னு தான் மைண்ட்ல ஸ்ட்ரைக் ஆன. அதோட நான் வீட்டை விட்டு போறதுக்கு முதல்நாள் நைட்தான் உன் அம்மாவும் உன் தம்பியும் பேசினாங்க. அன்னைக்கு போட்டுருந்ததும் அதே சட்டைதான். அப்போத்தான் கன்பார்ம் பண்ணேன் அது அவன்தான்னு. அவனால எப்படி தப்பை உன் பக்கம் திருப்பி விட முடிஞ்சது?”
“நான் தப்பு பண்ணலைன்னு தெரிஞ்சும் ஏன்டி வீட்டை விட்டுப் போன? எவ்வளவு பெரிய சந்தோஷம். அதை என்னால ஒழுங்கா அனுபவிக்க கூட முடியல. சரவணன் சொல்லி நான் அப்பாவானதைத் தெரிஞ்சுக்கணுமாடி”
“உனக்குச் சொல்லவேக் கூடாதுன்னு நான் நினைச்சேன். அப்பறமும் பாவம் பார்த்துத்தான் சரவணன் அண்ணா கிளினிக்கு நான் வந்தேன். இதுக்காக வருத்தப்படுறயே.. நாளைக்கு என் புள்ளைங்களை பொம்பளை பொறுக்கியோட பிள்ளைங்கன்னு ஊரு சொல்லுமே.. அப்போ என்ன பண்ணுவ? தம்பிக்காக அதையும் தாங்கி என் பிள்ளைங்க மையும் அசிங்கப்படுத்துவயா? நீ சொல்லு இப்போ நீ தப்பு பண்ணவன்னு ஊருக்குள்ள பேசுறாங்களா. இல்லை உன் தம்பியா.. உனக்கு, பழனிச்சாமிக்கு அண்ணனுக்கு, ஆத்விக்கு, எனக்கு மட்டும் இதுக்கான பதில் தெரிஞ்சால் போதுமா..? நீ நல்லவன்னு நாங்க நினைச்சுக்கிட்டால் மட்டும் போதுமா.. பட்டு லட்டுன்னு சொல்லுறயே. அவங்களை யாரும் நாளைக்கு பட்டு லட்டுன்னு சொல்ல மாட்டாங்க..? இதுதான் பொறக்கப் போற பசங்களுக்கு நீ வாங்கித் தர்ற பேரா.. அந்த கோபத்துல தான் நான் இங்க இருக்க கூடாதுன்னு நினைச்சேன்..” அதுவரை அப்படியொரு கோணத்தில் யோசிக்காதவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான் ருத்ர தாண்டவன்.
புயல் தாக்கும்…