அத்தியாயம் 34 :
அவினாஷ் ஏற்கனவே அனைத்தும் ஏற்பாடு செய்திருந்ததாலும்… நேரம் குறைவாக இருப்பதாலும் அன்றைய தினமே தங்களுடைய கம்பெனியை திறந்திருந்தனர்.
“பரிதிண்ணா தான் திறந்து வைக்க வேண்டும்” என்று அவி சொல்லிட மற்ற மூவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.
பாரியின் மொத்த குடும்பமும் வந்திருந்தனர். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்களின் நட்பின் பிணைப்பு கண்டு.
பரிதி திறந்து வைத்திட… எம்டி இருக்கையில் மூவரும் சேர்ந்து அவியை உட்கார வைத்தனர். அவன் மறுத்திட… பாரியும், பரிதியும் தூக்கிச்சென்று விடாப்பிடியாக அமர வைத்தனர்.
அவி கண்டனமாக ஏறிட…
“யாராவது இதுல உட்கார்ந்து தானே ஆகணும் அவி. எப்படியும் நானும் ஜென்னும், எங்க வேலை முடித்து ஃபிரீ டைமில் தான் இங்க வந்து உனக்கும் பூவுக்கும் ஹெல்ப் பண்ண முடியும். வேலை உங்களோடது தான், பூ எப்படியும் உன்னைத்தான் உட்கார வைக்க நினைப்பாள், பெட்டர் நீயே பொறுப்பை ஏத்துக்கிறது” என்றான் பாரி.
அதற்கு மேல் அவியால் வாய் திறக்க முடியவில்லை.
தில்லை அவியை அணைத்து வாழ்த்துக்கள் தெரிவிக்க… நெகிழ்ந்து போனான்.
பார்வதி தான் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அனைவரும் கலகலப்பாக இருக்க சின்னு அவர்களை எல்லாம் சுற்றி வந்து அவ்விடத்தை மேலும் அழகாக்கினாள்.
உறவென்று சொல்லிக்கொள்ள இத்தனை பேர் உடனிருக்க இனி அவிக்கு என்ன கவலை.
தன்னைச்சுற்றி தனக்கு தூணாயாக இருக்கும் அனைவரையும் கலங்கிய கண்ணோடு புன்னகை விரிந்த இதழோடு அவி பார்த்திருக்க… அவனின் மனம் புரிந்த ஜென் கை பற்றி நிகழ் மீண்டாள்.
“நாம யாருமில்லாதவங்க இல்லைல ஜென்…” நெகிழ்வோடு அவி கேட்டிட ஜென் தலை ஆமாமென்று ஆடியது.
அவியின் மற்றைய பக்கம் வந்து அவனின் கையை பற்றிய பூ…
“அப்போ சார் இவ்வளவு நாளா எங்களையெல்லாம் உங்க உறவா நினைக்கில போலிருக்கே!” என்று கேட்ட கணம் அவளை அணைத்து கண்ணீர் வழிய விட்டிருந்தான் அவி.
“பரிதிண்ணா மட்டும் இல்லைன்னா அம்மா இழப்புக்கு அப்புறம் நான் மீண்டு வந்திருக்கவே முடியாது பூ. நீ சொல்லுற மாதிரியெல்லாம் இல்லை. எனக்கு என் குடும்பம் நீங்க தான்” என்று சிறுப்பிள்ளையென பூவின் தோளில் முகம் பதித்து தேம்பியவனின் முதுகை பரிதி ஆதரவாகத் தட்டிவிட்டான்.
“நல்ல நாள் அதுவுமா சின்னபிள்ளை மாதிரி இதென்ன அழுகை அவி” என்று தில்லை கண்டிக்க…
“நீயும் ஜென்னும் கூட என் பசங்க தான் அவி. உங்களை தனியா விட்டுடுவோமா… இந்த பாரி கொடுத்த வருத்தத்தில் உலகம் மறந்து இருந்திட்டேன். இனி கவலையெல்லாம் இல்லை. சந்தோஷம் மட்டும் தான். நிறைவோட வேலையில் கவனம் வை. நீ ரொம்ப பெரிய ஆளா வரணும்” என்று அவியின் கன்னம் வழித்து ஆதுரமாக அவனின் நெற்றியில் பார்வதி முத்தம் பதிக்க உணர்வுக்குவியலாக அவி.
அவியின் உணர்வு ஜென்னையும் ஒருவித இன்ப சூழலுக்குள் நெகிழ வைத்திட…
“உனக்கும் அதேதான்” என்று அதட்டி சரி செய்தார்.
அனைத்தையும் பாரி புன்சிரிப்புடன் பார்த்திருந்தான்.
“உனக்குள்ள இப்படியொரு அழு மூஞ்சி பையன் இருப்பான்னு நான் எதிர்பார்க்கல அவி” என்று இளா கேலி செய்திட… கண்களை துடைத்துக்கொண்டு சீரானான் அவி.
யாருமற்ற நிலையில் நானிருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தைக்கு எத்தனை சக்தி இருக்கிறது என்பதை அவியும் ஜென்னும் அந்த நொடி உணர்ந்தனர். அதே எண்ணம் தான் பாரிக்கும்.
‘இதையெல்லாம் விட்டு தனித்திருந்தோமே’ என்ற மனதின் நினைப்பை பாரியால் தடுக்க முடியவில்லை.
பாரியை கவனித்த பூ…
பாரிக்கு அருகில் சென்று,
“நடந்து முடிஞ்சு போனதை நினைத்து பீல் பண்ணா கஷ்டமா இருக்கும் வேந்தா. ஜஸ்ட் இக்னோர் இட்” என்று சொல்லிட பாரியிடம் அதனை ஒப்புக்கொண்ட முகபாவம்.
“இப்போலாம் நீ கூடவே இருந்தா போதும் இருக்கு மலரே” என்ற பாரி அவளின் உள்ளங்கையை தன்னுடைய கையில் வைத்து தடவிக் கொடுத்தான்.
வேகமாக இழுத்துக் கொண்டவள் தில்லை பார்வதியை கண் காட்டிவிட்டு மற்றவர்களிடம் இணைந்து கொண்டாள்.
கணபதியிடமிருந்து அழைப்பு வர, பாரியும் ஜென்னும் தங்களது பணிக்குச் சென்றுவிட்டனர்.
குடும்பத்தினரும் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிட… அவியும் பூவும் பரிதியை தங்களுடன் நிறுத்திக் கொண்டனர்.
“இன்டர்வியூவ் இருக்கு பரிதிண்ணா. சப்ஜெக்ட் நாலேஜ் வைஸ் தான் எங்களுக்குத் தெரியும்… மற்ற கேரக்டர்ஸ் பார்த்து நீங்க தான் செலக்ட் பண்ணனும்” என்று சொல்லிவிட்டான்.
நன்றே செய் அதையும் இன்றே செய் எனும் விதமாக அவியும் பூவும் சேர்ந்து அனைத்தையும் துரித கதியில் துவங்கியிருந்தனர்.
அவிக்கு ஏற்கனவே தானாக தொழில் தொடங்கும் எண்ணமிருந்து அதற்கான ஆரம்பகட்ட பணிகள் அனைத்தையும் பரிதியின் உதவியுடன் செய்து கொண்டிருந்ததால், தான் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து விடுபட்டதும் தடுமாறாமல் அடுத்து என்னவென்று… ஏற்கனவே தயாராக சீரமைத்து வைத்திருந்த தன்னுடைய பாதையில் பூவுடன் இன்று பயணிக்கத் தொடங்கியிருந்தான்.
அன்றைய தினம் அந்தந்த பிரிவிற்கு தேவையான ஆட்களை தகுந்த குணங்களுடன் தேர்ந்தெடுப்பதில் பரபரப்பாக முடிவடைய… யாரிடமும் பின்னர் மெயில் அனுப்புகிறோம் என்று சொல்லி நேரவிரயம் செய்யவில்லை.
அப்போதே கையில் வேலையில் சேர்வதற்கான ஆர்டரை கொடுத்து… நாளையே பணியில் சேர வேண்டுமென சொல்லியிருந்தனர்.
நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர்…
“எதுக்கு மாமா படிப்பை முடித்தும் சில வருடங்கள் வேலை கிடைக்காதவங்களுக்கு பர்ஸ்ட் பிரிப்ஃபரன்ஸ் கொடுத்தீங்க?” என்று பாரியிடம் பூ கேட்டாள்.
அந்த கேள்வி அவிக்கும் இருந்தது.
“ப்ரெஷர்ஸ் எடுத்திருந்தா அவங்க கொஞ்சம் அப்டேட்டடா இருந்திருப்பாங்க” என்றான் அவி.
“இருந்திருப்பாங்க… பட் ஸ்டடிஸ் முடிச்சதுமே வேலை, பொறுப்பா இருப்பாங்களா தெரியாது. ஆனால் வேலை கிடைக்காமலிருந்து கிடைத்த அவங்க இந்த வேலையில் எப்படியும் தன்னை முன்னிலை வகுத்து நிலைநிறுத்திக்க வேண்டுமென்கிற வேகம் இருக்கும். இப்போ உங்களுக்கு அந்த வேகம் தான் தேவை.”
பரிதியின் இந்த சிந்தனையில் இருவருமே சிந்திக்கவில்லை.
“சரியா இருக்கும். நீங்க சொல்றதை அப்படியே செய்வாங்க. இல்லாதவங்களுக்கு தான அதன் அருமை தெரியும். அந்த கோட்பாடு தான். வேறொன்றுமில்லை.”
“இதுக்குத்தான் ஒரு ஜீனியஸ் வேணுங்கிறது. இதெல்லாம் அப்பப்போ இந்த பக்கம் வந்து, கொஞ்சம் சொல்லி கொடுத்துட்டு போங்க மாமா” என்று பூ சொல்ல… அன்றைய நாளின் அழுத்தம் குறைய புன்னகைத்துக் கொண்டனர்.
**********
கணபதி அழைத்ததும் பாரி ஜென்னை அழைத்துக்கொண்டு பரபரப்பாக தன்னுடைய அலுவலகம் வந்து சேர்ந்தான்.
ரித்தேஷ் வந்திருப்பதாக கணபதி சொல்லியதே பாரியின் இந்த பரபரப்பிற்கு காரணம். ஆனால் அதையெல்லாம் அலுவலகத்தின் வெளியவே விட்டுவிட்டு தன்னை அமைதிபடுத்திக்கொண்டு மிக நிதானமாக உள் சென்றான் பாரி.
இந்த வழக்கு பாரி எதிர்பார்த்திடாத பல திருப்பங்களை கொடுப்பதால்… அடுத்து என்ன என்று தெரிந்துகொள்ள நினைக்கும் பாரியின் எண்ணமே அவனது இந்த பரபரப்பிற்கு காரணம்.
ஜென்னுக்கு பாரியின் திடீர் உணர்வு மாற்றங்கள் புரியவில்லை என்றாலும் அவனை பின் தொடர்ந்தாள்.
சாதாரணமாக அலுவலகத்திற்குள் நுழைந்த பாரி…
“இன்வெஸ்டிகேட் ரூமில் உட்கார வைக்க வேண்டியது தான அங்கிள்” என்றான் அங்கிருந்த இருக்கை ஒன்றில் தோரணையாக அமர்ந்தவாறு.
“நீங்க வரட்டும் பார்த்தேன் சார்” என்ற கணபதி…
குற்றவாளிகளின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்த ரித்தேஷை போகலாம் எனும் விதமாக பார்த்தார்.
ரித்தேஷ் பாரி விசாரணை செய்ய தன்னுடைய அலுவலகம் வர சொல்கிறார் என்று ஜென்னின் மூலம் அவனது காரியதரிசிக்கு தகவல் சென்றதுமே பதட்டம் கொண்டுவிட்டான்.
அதற்கு காரணம் அவன் வீட்டில் அவனது அறையில் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்த ஒன்று காணாமல் போனது.
வேறொரு மாநிலத்திற்கு சென்றிருந்தவன் வீடு வந்து சேர்ந்ததும் முதலில் ஆராய்ந்தது அதனைத்தான். அதுதான் ஏற்கனவே பாரியின் வசம் சென்றிருந்ததே. அதெப்படி அவனக்குத் தெரியும். தன்னுடைய அறையையே தலைகீழாக புரட்டி தேடி பார்த்துவிட்டான். கிடைக்கவில்லை.
அடுத்து அவன் வீட்டையே மொத்தமாக கவிழ்த்து போட்டு தேடிவிட்டான். கிடைக்கவில்லை.
முக்கியமானதல்லவா… மிக மிக முக்கியமானது. அதனை வைத்து அரசியலில் பல்வேறு திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறான். இப்போது அதெல்லாம் தவிடு பொடியாகிவிடும் போல்.
பைத்தியம் பிடித்தவன் போல் வீட்டையே கலைத்து போட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
என்னவென்று கேட்ட சங்கரனுக்கு பதிலே சொல்லாமல் அவன் காரியமே கண்ணாக இருந்திட… மேற்கொண்டு அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
அந்நேரம் தான் பாரி விசாரணைக்கு அழைப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்வதாக ரித்தேஷின் காரியதரிசி அவனிடம் கூறினான்.
நொடி நேரத்தில் ஏதேதோ எண்ணங்கள் ஊர்வலம் சென்றிட… கண நேரத்தில் உடல் வேர்த்து வடிய தொப்பென்று இருக்கையில் அமர்ந்தவன்… கைக்குட்டை கொண்டு முகத்தை ஒற்றி எடுத்தான்.
நெஞ்சுவலி வரும் போலிருந்தது.
‘ஒருவேளை தான் தேடுவது பாரியின் கைக்கு சிக்கியிருந்தால்… அரசியலில் உயரம் செல்லும் கனவை விட… தன் அரசியல் கனவே இல்லாமல் ஆகிவிடுமே!’ பயத்தின் ஓலம் அவனுள்.
ஆனால் தன் வீட்டிற்குள்… தனது அறைக்குள் இருந்த பொருள்… இத்தனை பாதுகாவலர்களை மீறி பாரியின் கைக்கு சென்றிருக்காது என்ற அவனின் குருட்டு நம்பிக்கை கொடுத்த தைரியத்தில் நாளை வருவதாக கூறியிருந்தான். அதன்படி இன்று பாரியின் முன் அமர்ந்திருந்தான் ரித்தேஷ்.
உள்ளுக்குள் ஓடிய பயத்தை முகத்தில் காட்டாது வெகுவாக சமாளித்து உட்கார்ந்திருந்தான்.
அவ்வறையில் கண்ணாடி சுவருக்கு பின்னால் விசாரணையில் நடைபெறும் அனைத்தையும் பதிவு செய்தபடி ஜென் மற்றும் கணபதி இருந்தனர். அவர்களின் நடப்பு ரித்தேஷிற்கு தெரியாது. அவனை பொறுத்தவரை அது நிழல் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடி சுவர்.
“நீங்க கேட்டுக்கிட்டதால் தான் இந்த ஏற்பாடு. இந்த நான்கு சுவற்றைத் தாண்டி நீங்க பேசும் எந்தவொரு வார்த்தையும் வெளியில் செல்லாது.”
எதிராளியை தன் வசம் செய்திட… முதலில் அவர்களை நம்ப வைத்திட வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கை எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லும் உந்துதலை அவர்களுக்கு அளிக்கும்.
அதைத்தான் பாரி இப்போது செய்தான்.
காவல் நிலையத்தில் விசாரணை என்றதுமே ரித்தேஷ் வைத்த கோரிக்கை… விசாரிப்பவரைத் தவிர யாருக்கும் அந்நேரத்தில் அனுமதி கிடையாது என்பதே. அதற்கு அவனின் பதவியும் துணையிருக்க… அவனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு நீதிபதியின் ஒத்துழைப்பு கொடுத்தாக வேண்டுமென்கிற கட்டளை ரித்தேஷை பாரியிடம் பணிந்து போக வைத்தது.
சில கணங்கள் அங்கு ஆழ்ந்த அமைதி.
நிசப்தத்தை கிழித்துக்கொண்டு கேட்ட பாரியின் கம்பீரக் குரலில் ரித்தேஷின் கைகள் வெளிப்படையாக நடுக்கத்தை காண்பித்தன.
“அமிர்தா இஸ் யுவர் லவ்… ரைட்?”
“எஸ்…” குரலிலும் நடுக்கம் தென்பட்டது.
“உங்களை விரும்பி… ஐ மீன் லவ் பண்ணித்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களா?” அமைதியாக அடுத்தடுத்து வினவினான் பாரி. ரித்தேஷின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை அவதானித்தபடி.
“கேஸுக்கு ரிலேட்டடா மட்டும் கேளுங்க?” ரித்தேஷின் குரலில் சூடேறியது.
“அப்போ அமிர்தா உங்களை லவ் பண்ணல அப்படித்தானே?” பாரி இன்று அவனை விடுவதாக இல்லை.
“பாரி அவனை மொத்தமா வச்சு செய்ய பிளான் பண்ணிட்டான் போல சார்” என்று அந்தப்பக்கமிருந்த ஜென் கணபதியிடம் சொல்ல… இருவரும் சிரித்துக்கொண்டனர்.
“அப்படி சொல்ல முடியாது. அவள் விருப்பம் இல்லாமலும் எங்க மேரேஜ் நடக்கல.” வேகமாக படபடவென கூறினான்.
“வெல்…
அப்புறம் எதுக்கு அவங்களை கொலை செய்தீங்க?”
“நான் பண்ணல… நான் எதுக்கு பண்ணப்போறேன். சும்மா என்மேல கொலைப்பழியை போட பார்க்காதீங்க” என்று ரித்தேஷ் அரண்டு கூறினான்.
“அப்போ அமிர்தா மரணம் கொலைதான்னு உங்களுக்கும் தெரிந்திருக்கு. அப்புறம் எதுக்கு, சங்கரன் இதில் ஏதோ மர்மம் இருக்கு… போலீஸ் கேஸ் ரீ இன்வெஸ்டிகேட் செய்யனும் சொன்னப்போ நீங்க மறுத்தீங்க?” பாரியிடம் அப்படியொரு அழுத்தம்.
“நான் எப்போ கொலைன்னு சொன்னேன்?” ரித்தேஷ் அதிர்ந்து வினவினான்.
“நான் கொலைன்னு சொல்லும்போது… அப்படியா, யார் செய்ததுன்னு கேட்காம… எடுத்ததும் உங்களை காப்பாற்றிக்க, நான் செய்யலன்னு தான் சொன்னீங்க. அதுவே போதுமே அமிர்தா கொலை உங்களுக்கும் தெரிந்திருக்குன்னு.” பார்வையில் கூர்மையை படியவிட்டு மெல்ல விளக்கினான் பாரி.
………
“சொல்லுங்க மினிஸ்டர் சார்… கொலை நடந்ததை பார்த்து வீடியோ எடுக்கத் தெரிந்த உங்களுக்கு உங்க மனைவியை காப்பாத்தணும் தோணவேயில்லையா? இதுக்கு பேர் தான் காதலா?” பட்டென்று பாரி மொத்தமாக உடைத்தே பேசிவிட்டான்.
“நீ… நீங்க… நீங்க… என்ன சொல்றீங்க பா..ப்…பாரி…” சொல்லியது உண்மையென்ற நிலையில் ரித்தேஷிற்கு நா குழறியது.
“உங்களுக்கு கடவுள் பக்தி அதிகம் போல… அதைவிட சிவலிங்கம் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” ரித்தேஷ் ஒன்றை கேட்க… பாரி வேறொன்றை கேட்டு அவனின் பயத்தை அதிகரித்தான்.
பாரி லிங்கமென்று குறிப்பிட்டதுமே ரித்தேஷின் உலகம் பயத்தில் அப்படியே நின்றுவிட்டது.
பாரிக்கு அனைத்தும் தெரிந்துவிட்டதென்று தெரிந்த பின்னரும்… அவன் நிலையில் உறுதியாக நின்று மறுத்தான்.
தன் காக்கிச்சட்டை பையிலிருந்து… ரித்தேஷின் வீட்டிலிருந்து எடுத்த மிகச்சிறிய அளவிலான லிங்கத்தை கையிலெடுத்த பாரி ரித்தேஷின் முன் மேசையில் அதன் அடிப்பகுதியை தட்டியவாறு வைக்க… அதன் தலைப்பகுதியில் பெண்ட்ரைவ் அமைப்பு வெளியில் வந்தது.
“இப்போவே உன்னை கஸ்டடியில் எடுக்க முடியும்… ஆனால் என் மண்டைக்குள்ள குடையுற ஒரே கேள்வி…
அமிர்தா அறைக்குள் பால்கனியோ… விண்டோவோ இல்லாம பூட்டியிருந்த நிலையில் எப்படி உள்ள போனீங்க… வெளிய வந்து உள்ள எப்படி லாக் பண்ணீங்க?” என்று தீவிரமான பாவனையில் பாரி கேட்டிட… ரித்தேஷிற்கு இதயம் அதன் துடிப்பை நிறுத்தியிருந்தது.
அமிர்தா கொலை மட்டுமல்லாது… முக்கிய ரகசியம் ஒன்று பாரியின் கையில் இப்போது சிக்கியிருக்கே, மூச்சே நின்று போனாலும் ஆச்சரியம் இல்லை.
“உங்களோட மூணாவது ஒருத்தன் இருக்கானே… அவனுக்கும் ராயப்பனுக்கும் என்ன சம்மந்தம்?”
“எனக்குத் தெரியாது.”
“ஆஹான்… சரிவிடு நானே கண்டுபிடிச்சிக்கிறேன்” என்ற பாரி “நீ கிளம்பு” என்றான்.
பாரி எல்லாம் தெரிந்த நிலையில் தன்னை விட்டுவிடுவான் என்று ரித்தேஷ் நினைக்கவேயில்லை. ஆச்சரியமாக பாரியை ஏறிட்டான்.
“என்ன பாக்குற… நீ இப்போ பல்லு பிடுங்கின பாம்பு. உன்னை காப்பாத்திக்க தான் ராயப்பன் செய்த கொலையை வீடியோ எடுத்து வச்சிருக்க… அது ராயப்பனுக்கு தெரிந்தால்? பெத்த பொண்ணையே யோசிக்காம சாகடிச்சவன் உன்னையெல்லாமா விட்டுவைப்பான். அதனால நான் இந்த கேஸை முடிக்கும் வரை நீயிருக்கும் இடமே தெரியக்கூடாது. வாய் கம் போட்டு ஒட்டிக்கிட்டு உன் வேலையை மட்டும் பார்க்கணும்” என்று வார்த்தையாலேயே மிரட்டி ரித்தேஷை அனுப்பி வைத்தான் பாரி.
“சூப்பர் பாரி… அந்த ரித்தேஷ் மூஞ்சில் ஈ ஆடல…” ஜென் பாரியிடம் சொல்ல அவனிடம் பிரதிபலிப்பு இல்லை.
“என்னடா தின்கிங்?”
“அவிக்கு வேற ஏதும் ரிலேட்டிவ்ஸ் இருக்காங்களா?”
பாரிக்கு அவியை சின்ன வயதிலிருந்தே தெரியும். அப்படியிருக்க இந்த கேள்வியை தன்னிடம் கேட்க அவசியமென்ன என்ற ரீதியில் அவனுக்கு பதில் சொல்லாது ஜென் பார்த்தாள்.
“எனக்கு தெரிந்து இல்லை. உனக்கு தெரிந்து யாராவது இருக்கலாமோன்னு தான் கேட்டேன்.” பாரியின் சமாளிப்பை ஜென் கண்டுகொண்டாள். ஆனால் ஏனென்று கேட்டுக்கொள்ளவில்லை.
“அவன்கிட்டவே நேரடியா கேட்க வேண்டியது தானே?”
“கேட்கணும்…” என்ற பாரி, “சத்யான்னு ஒருத்தவங்க வருவாங்க நேரா என்கிட்ட அனுப்பி வை” என்று பேச்சை மாற்றி சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“என்ன பன்றான், என்ன நினைக்கிறான் ஒன்னும் தெரியமாட்டேங்குது. அநியாயத்துக்கு போலீஸா இருக்கான்” என்று அலுத்துக்கொண்ட ஜென் மற்றொரு வழக்கில் தன் கவனத்தை செலுத்தினாள்.
சிறிது நேரத்தில் பாரி சொல்லிய சத்யா வந்துவிட்டதாக மற்றொரு காவலர் வந்து சொல்லிச் சென்றார்.
சத்யாவைத் தேடி தன்னுடைய அறையிலிருந்து வெளிவந்த பாரி…
இங்கு பேச வேண்டாம் எனும் விதமாக கண்ஜாடை காட்டிட, சத்யா புரிந்தது எனும் விதமாக வெளியேறி எதிரேயிருந்த தேநீர் கடைக்கு சென்றான்.
சில நிமிடங்களில் அலுவலகம் விட்டு காக்கி உடை தவிர்த்து வேறு உடையில் வெளியேறிய பாரியை பின் தொடர்ந்தான் சத்யா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
35
+1
3
+1