Loading

அத்தியாயம் 24

 

காலை கண் விழிக்கும் நேரம் அத்தனை சோம்பல் தேவதர்ஷினியிடம். 

 

“ப்ச்!” என சத்தத்தோடு கண் விழித்து எழுந்து கொள்ளாமல் மணியைப் பார்க்க எட்டை கடந்திருந்தது.

 

“எட்டு மணியா?” என்று அதிர்ந்து பக்கத்தில் பார்க்க கார்த்தி அங்கே இல்லை என்றதோடு இரவோடு பகலும் என நடந்ததெல்லாம் கண்களுக்குள் அப்பொழுது தான் படமாய் விரியத் துவங்கியது தேவதர்ஷினிக்கு.

 

“அச்சோ!” என்றவள் போர்வைக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு மீண்டுமாய் படுக்கையில் விழ,

 

“ஓய்! நான் கிளம்பிட்டேன்!” என அவள் படுக்கையில் விழுந்த வேகத்தில் அறைக்குள் வந்த கார்த்தி சொல்ல, “ம்ம்ஹும்!” அவன் முகம் பார்க்க முடியும் என்றே தோன்றவில்லை தேவதர்ஷினிக்கு.

 

“தேவா!” என்று பெயரை மட்டும் தான் அழைத்தான் அதில் தான் எத்தனை குறும்பும் கேலியும் என குரலே அவளுக்கு கதை சொல்வதாய் இருக்க, 

 

‘இப்படியே எப்படி பாக்குறதாம்?’ என அத்தனை சிணுங்கியது அவள் மனது.

 

“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் தேவா! ஆல்ரெடி எனக்கு டைம் ஆச்சு! நந்தா வேற கூப்பிட்டுட்டே இருக்கான்” என்றவன் குரலில் அதற்கு மேலும் முடியாமல்,

 

“ம்ம்ம்!” என எழுந்தவள் எழுந்த வேகத்தில் குளியலறை செல்ல, சத்தமாய் சிரித்துவிட்டான் கார்த்திகைசெல்வன்.

 

சில நிமிடங்களில் வந்தவள் அறைக்குள் அவன் இல்லை என்றதும் வெளியே வர, அவளுக்கான காபியுடன் காத்திருந்தான் கணவன்.

 

“நீங்க பண்ணீங்களா? என்னை கூப்பிடிருக்கலாமே?” என அவனிடம் கேட்டாலும் பார்வை அவனிடம் இல்லை தேவாவிற்கு.

 

காபியை எடுத்துக் கொண்டு அவனுக்கு எதிரில் வந்து தேவா அமர, தானே எழுந்து வந்து அவளருக்கே அமர்ந்தான்.

 

“சாப்பிட எதுவும் பண்ணலையே த்தான்?” 

 

“வெளில சாப்பிட்டுக்குறேன்” 

 

“ஹ்ம்!” என்றவன் காபியைப் பருக, இருவருவருக்குமே முதல் நாள் குறுகுறுப்பு இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது.

 

“ஓகே! கிளம்பவா தேவா?” என அவள் தோளை சுற்றி கையைக் கொண்டு வர,

 

“த்தான்!” என காபியை மெதுவாய் கீழே வைத்துவிட்டவள் பதறிவிட்டாள்.

 

“இங்க நாம தான் இருக்கோம் தேவா!” என அப்போதும் அவன் சொல்ல, பதில் சொல்ல முடியவில்லை அவளுக்கு.

 

“நந்தா ண்ணா வெய்ட் பன்றாங்க சொன்னிங்களே!” நியாபகப்படுத்த முயல,

 

“முக்கியமான விஷயம் பேசணும்னு கூட சொன்னேன்!” என்றான் தோள்களை உரச அமர்ந்து கொண்டு. இன்னுமே திடும் திடும் என்றது அவள் மனது.

 

“இங்க என்னைப் பாரு!” என நேரே அவள் முகம் பார்த்து அமர்ந்துவிட,

 

“த்தான் ப்ளீஸ்!” என்றுவிட்டாள் அதற்குமேல் தாங்கமாட்டாதவளாய்.

 

“நான் என்ன பண்ணிட்டேன்?” என்றவனை நிமிர்ந்து அவள் முறைக்கப் பார்க்க, அந்த சீண்டலான பார்வைக்கு பதில் பார்வை எல்லாம் வாய்ப்பே இல்லை தேவாவிடம்.

 

“நந்தா ண்ணா வர போறாங்க!” தேவா சொல்ல,

 

“நானா போன் பண்ற வரை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்!” என்றான் புன்னகையோடு கார்த்தி.

 

“ச்சோ! என்னால நிஜமா முடியல!” என எழுந்துவிட்டவளை சிரிப்புடன் கைப்பிடித்து அவன் அமர வைக்க,

 

“என்னனு சொல்லிட்டு கிளம்புங்களேன்!” என்றுவிட்டாள்.

 

“நான் என்ன சொல்ல? நீ தான் சொல்லணும்” என்றதும் அவள் என்னவென்று பார்க்க,

 

“எனக்கு புரிஞ்சது தான் ஆனாலும் கேட்கணுமே! உனக்கு ஓகே தானே? நீ ஓகே தானே?“ என்று கேட்டவனையும் கேட்ட விதத்தையும் கேட்ட நேரத்தையும் என எண்ணி விழிகளை விரித்தவள்,

 

“ச்சோசோ!” என கண்களை மூடி கைகளைக் கொண்டு முகம் மறைத்துவிட்டாள்.

 

“தேவா!” என இன்னும் கரகரத்த குரல் அதுவும் காதுக்கு அருகே என்றதில் சட்டென எழுந்து,

 

“போதும் போதும் த்தான். நீங்க கிளம்புங்க!” என்று அவன் கைகளைப் பிடித்து எழுப்பியவள் முகமெங்கும் சிவந்திருக்க,

 

“போய்ட்டு வாங்க ப்ளீஸ்!” என்றவளை,

 

“இப்படியா தினமும் கிளம்புவேன்?“ என்றவன் கொடுத்த அணைப்பிற்கு அவள் மயங்கப் பார்க்க, காலையில் அவன் எப்பொழுதும் கொடுக்கும் கன்னத்து முத்தம் முதல் முறையாய் இதழ்களில் துவங்கி கன்னத்தில் கதை எழுதியதில் தலையை உலுக்கி அவனிடம் இருந்து பிரிந்துவிட்டாள் வேகமாய்.

 

“என்ன தேவா?” என அப்போதும் சிரிப்பு தான் அவனுக்கு.

 

“த்தான்!” என்றவள் அவனை மேலிருந்து கீழாய் பார்க்க,

 

“நீட் தான். நான் தானே குடுத்தேன். நீயா குடுத்த?” என அவ்வளவு பேசுபவனை விழிகள் வெளிவரும் அளவுக்கு மூச்சுமுட்டப் பார்த்தவள்,

 

“நீங்க கிளம்புங்க. நேரமாச்சு!” என்று சொல்லி தள்ளிவிடாத குறையாய் தான் அனுப்பி வைத்தாள்.

 

மதியம் வரையுமே அவள் சிந்தனையும் முகச்சிவப்பும் என மனம் அங்கேயே நின்றுவிட, மதிய நேரமாய் வந்த அழைப்பில் கணவனை எதிர்பார்த்து தேவதர்ஷினி அத்தனை ஆர்வமாய் எடுக்க, முகப்பில் அம்மா என்ற பெயரில் தான் சற்று நிதானமே அடைந்தாள்.

 

நேரமும் தான் அழைக்காததும் என அப்பொழுது தான் நியாபகத்தில் வந்து நின்றது.

 

“இவ்வளவு நேரமா கூப்பிடுவனு பார்த்துட்டு இருந்தேன் தேவா. தூங்கிட்டியா என்ன? என்ன சமையல் பண்ணின? கார்த்தி சாப்பிட்டானா?” என அத்தனை கேள்விகள் லீலா தேவாவிடம் கேட்க, பேசி முடித்து வைக்கவே போதும் என்றானது அவளுக்கு.

 

‘இப்படியா இருப்பது’ என தன் தலையில் தானே தட்டிக் கொண்டாலும் மாற்றிட மட்டும் முடியவில்லை.

 

இப்படி பெங்களூர் வந்த பின் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மாற்றம் என அவர்களுக்குள் நாட்கள் அழகாய் புரிதலுடன் கழிய துவங்கி இருந்தது.

 

இன்னுமே நெருக்கம் இன்னுமே புரிதல் இன்னுமே வாழ்க்கையின் பயணம் என அனைத்தும் புரிய ஆரம்பித்த நாட்களின் துவக்கம் தான் இந்த இனிய நாட்கள்.

 

மனதில் இருந்த அழுத்தங்களும் நினைவுகளும் என மனைவியிடம் பகிர்ந்து கொண்டபின் அத்தனை இதமாய் இருந்தது கார்த்திகைசெல்வனுக்கு.

 

கணவன் தன்னை தேடவில்லையா அவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லையா என ஆயிரம் கவலைகளுடன் குழப்பங்களுடன் இருந்த தேவதர்ஷினிக்குமே வாழ்க்கை அத்தனையையும் சொல்லிக் கொடுத்து சமாளிக்கும் திறனையும் வளர்த்து கொடுத்த நாட்கள் இவை.

 

அடுத்த இரண்டு மாதங்களும் புதுமணத் தம்பதியினராய் அத்தனை அத்தனை சந்தோஷங்களையும் பகிர்ந்து குளிர்வாய் ஒரு வாழ்க்கை என தாம்பத்யம் அவர்களை வழிநடத்தி சென்றது என்றால் மிகையில்லை.

 

அந்த இரண்டு மாதங்களின் முடிவில் லீலாவை அழைத்துக் கொண்டு கண்ணகி பெங்களூர் வந்துவிட்டார் மகனையும் மருமகளையும் காண.

 

கிளம்பும் அன்று மாலை நான்கு மணிக்கு தான் மகனிடமே தாங்கள் வருவதை கூறினார் கண்ணகி.

 

“என்னம்மா திடிர்னு? சொல்லவே இல்ல? டிக்கெட் எல்லாம்?” என கார்த்தி ஆச்சர்யமாய் கேட்க,

 

“என்ன டா பண்ண? என்னவோ எங்களுக்கு புரியுறது எல்லாம் நிஜமான்னு நாங்களும் பார்க்கணுமே! அதான் உன் தம்பியை டிக்கெட் போட சொன்னே!” என்றவர்,

 

“தேவாகிட்ட எதுவும் சொல்லாத. நாங்க வந்து பார்த்துக்குவோம்!” என்றும் சொல்லிவிட,

 

“அதென்ன தேவா மட்டும் ஸ்பெஷலா? அவளுக்கு மட்டும் சர்பிரைஸ்?” என சிரித்தபடி தான் கேட்கிறான் என புரிந்து கொண்டவர்,

 

“உனக்கு நாங்க சர்பிரைஸ் குடுத்து நீ சர்பிரைஸ் ஆகிட்டாலும். போயேன் டா!” என்றவர் மீண்டும் அவனிடம் நியாபகப்படுத்திவிட்டு போனை வைத்தார்.

 

அடுத்தநாள் காலை இருவரும் நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் அழைப்பு மணி சத்தம் கேட்க, மணியை பார்த்தாள் தேவதர்ஷினி.

 

“அஞ்சு மணி தானா?” என்றவள் கணவனை திரும்பிப் பார்க்க, அவன் நல்லா உறக்கத்தில் இருந்தான்.

 

“இவங்களுக்கு கேட்கலையோ?” என நினைக்கும் போதே மீண்டும் சத்தம் கேட்க,

 

“த்தான்!” என அவனை உலுக்கினாள்.

 

அவனும் மூன்று மணியில் இருந்து உறங்கவில்லை என்பதோடு அவர்கள் வருவதை கவனித்து அழைத்து பேசி நந்தனை அவர்களை அழைத்து வர அனுப்பிவிட்டு என கண்ணகியை விட இவன் தான் அவர்கள் சர்பிரைஸ் கொடுக்க அதிக வேலை செய்தான்.

 

தேவதர்ஷினி கூறவும், “நந்தா அம்மாவா தான் இருக்கும் என்னனு பாரு!” என திரும்பிப் படுத்துக் கொள்ள, விழிகள் சுருக்கிப் பார்த்தாள்.

 

‘அத்தனை கவனமெடுப்பானே ஒவ்வொன்றிற்கும். இப்படி இந்த நேரம் தனியே கதவை திறக்க சொல்கிறான்?’ என குழப்பத்தில் இன்னுமே,

 

“அத்தான்!” என மீண்டும் எழுப்ப,

 

“என்ன டி?” என்று எழுந்து அமர்ந்தவனுக்கு சரியாய் தூங்காததில் இப்பொழுது தான் தூக்கம் வருமாய் இருக்க,

 

“வா!” என சொல்லிக் கொண்டு முன்னே எழுந்து செல்ல, கூடவே சென்றாள்.

 

“oஊர்ல இருந்து தானே?” அவன் கையை பிடித்தபடி வந்தவள் கேட்டுவிட்டு அவனைப் பார்க்க, நின்று நெற்றியில் தட்டிக் கொண்டான்.

 

“அப்போ அதே தான்!” என சிரித்தாள்.

 

“எப்படி?” என கார்த்தி கேட்கும் போது ஆச்சர்யம் தான் அவனுக்கு.

 

“பின்ன? தோணுச்சு. இந்நேரம் வேற யாரும் கதவ தட்ட வாய்ப்பில்ல. கூடவே உங்களோட இந்த…” என சொல்ல வந்தவளை, கைகாட்டி நிறுத்திவிட்டு சென்று மீண்டும் அழைப்பு மணி அடிக்கவும் அவன் கதவை திறக்க,

 

“வழியை விடு டா!” என முந்திக் கொண்டு உள்ளே வந்தார் கண்ணகி. கூடவே லீலாவும்.

 

அன்னையை எதிர்பாராதவளுக்கு நிஜமாய் அது சர்ப்ரைஸ் தான். 

 

மூவருமாய் கூட்டம் சேர்ந்து அந்நேரமே பேச்சை ஆரம்பிக்க, ஒரு தலையசைப்புடன் உள்ளே சென்று படுத்துவிட்டான் கார்த்தி.

 

கார்த்தியாகட்டும் தேவாவாகட்டும் இருவருமே தாங்கள் கவனித்த வரை இன்னும் சரியாய் பேசிக் கொள்வதே இல்லை என்று நினைத்திருந்தவர்களுக்கு இந்த இடைப்பட்ட மாதங்களில் அலைபேசி பேச்சுக்களிலேயே சில வித்தியாசங்களை உணர முடிந்த்து.

 

நேரில் வந்து பார்க்கும் போது அது இன்னும் உறுதியாவதாய் இருந்தது.

 

ஊரில் மற்றவர்களை பார்த்துக் கொள்வதை தன் பொறுப்பாக்கிக் கொண்டார் சுந்தரி.

 

அதனாலேயே மேலும் ஒரு வாரம் தங்கிவிட்டே லீலாவும் கண்ணகியும் அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.

 

அதுவுமே போதாது என்பதாய் அவர்கள் கிளம்பும் நேரம் அத்தனைக்கு வாடிவிட்டாள் தேவதர்ஷினி.

 

“உன்னை கொல்ல போறேன் தேவா! முழுசா பத்து நாள் ஆச்சு நீ என்னை கவனிச்சு! இப்பவும் அவங்க கிளம்புறாங்களேனு அழப் பாக்குற! கண்ணுல தண்ணி வந்துச்சு!” என அவர்கள் கிளம்பும் முன் கார்த்தி தேவாவிடம் ஹாலில் வைத்து தனியே சொல்லி மிரட்டியவன்,

 

“நீ அழுது அவங்க பயந்துன்னு உன்னையும் கூட்டிட்டு போக வச்சுடாத டி!” என கெஞ்சலாய் கூறி வைத்தான்.

 

இருவரின் பேச்சு கேட்கவிட்டாலும் அந்த நெருக்கம் பெரியவர்கள் கண்களுக்கு விழ தான் செய்தது. கண்டும் காணாததாய் புன்னகையுடன் விலகி நின்றனர்.

 

லீலா மகளின் மலர்ந்த முகத்திலேயே தான் கவனம் வைத்து அதில் தானும் மகிழ்ந்து கணவனுக்கு அழைத்து அவரிடமும் சொல்லி என அத்தனை சந்தோஷத்துடன் தான் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

 

அடுத்த இரண்டு மாதங்களில் தலை தீபாவளிக்கு ஊருக்கு செல்லலாம் என கார்த்திகைசெல்வன் மனைவியிடம் சொல்லி இருக்க, அதற்கு முன்பே அஷ்வினியை பெண் கேட்டு சொந்தக்காரர் ஒருவர் வர இருப்பதாக தகவலும் வந்து சேர்ந்தது கார்த்திக்கு தன் மனைவியிடம் இருந்து.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்