பிறை -8
அகிலாண்டேஸ்வரி ஆடிய ஆட்டத்தில் சிவகாமி ஓய்ந்து போனார். பெற்றவர்களுக்கே தெரியாமல் சம்மந்தம் பேசி வந்திருக்கும் தாயை சிவானந்தம் கேள்விகளால் துளைத்து இருக்க.. அதில் ஆடிய ஆட்டம் தான்.
” அப்படி என்ன டா தப்பு பண்ணிட்டேன்.. எம்புட்டு தைரியம் இருந்தா என்னையவே கேள்வி கேட்ப.. உன் பொண்டாட்டி தூண்டி விட்டாளா.. நல்ல ஊமை கோட்டான் மாதிரி இருந்துட்டு அவ என்ன வேலை பார்த்துருக்கா.. என் பேத்திக்கு நான் என் சொந்த மகள் வீட்ல போய் சம்மந்தம் பேசினேன். இதுல நான் யார் கிட்ட அனுமதி கேட்டனும்.. மகாராணி அவள் கிட்ட கேட்கனுமா.. வெளிய வரச் சொல்லு டா அவளை ” என்றதும் பயத்தோடு அடுக்களையில் இருந்து வெளியே வந்தார் சிவகாமி.
” எவ்வளவு தைரியம் இருந்தா என் பிள்ளை கிட்ட ஏத்தி விட்டு உள்ள இருந்து வேடிக்கை பார்ப்ப.. அப்படி என்ன டி உனக்கு நெஞ்சழுத்தம் .. நான் என் பேத்திக்கு வரன் பார்க்க கூடாதா.. இந்த சொத்து மட்டும் உங்களுக்கு வேணும், ஆனால் நான் பார்க்கிற மாப்பிள்ளையை உன் மகள் கட்டிக்க மாட்டாளா ” எகிறிக் குதித்த அன்னையை நிதானமாக பார்த்தவர்..
” விஷயம் புரியாம பேசாதீங்க மா. சிவகாமி சொல்லி உங்ககிட்ட நான் இந்த விஷயத்தை கேட்கல. இந்த சம்மந்தம் பண்ண போற விஷயத்தை சொன்னதே உங்க அருமை மகள் தான் ” உண்மையை போட்டு உடைத்திருந்தார் சிவானந்தம்.
‘ மகளா ‘ என மனதிற்குள் நினைத்தாலும்.. ” யாரு டா உனக்கு சொன்னது.. சின்னவளா, பெரியவளா. நான் இப்போவே போன் போட்டு கேட்குறேன். ஏன்னா வர வர உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு நீ ஆடிட்டு இருக்க.. உன் பொண்டாட்டியை காப்பாத்த கூட நீ இதை பண்ணிருக்கலாம்னு எனக்கு தோணுது ” அப்போதும் அவர் அடங்கவில்லை.
” நல்லா கேளுங்க உங்க பெரிய மக தான் போன் போட்டு சொன்னது. ஏம்மா பசங்க எல்லாரும் நம்ம பிறையை விட சின்ன பசங்க.. எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்குறது ”
” என்ன டா பெரிய வயசு.. அந்த காலத்துல எல்லாம் வயசையா பார்த்துட்டு இருந்தோம்.. சொந்தம் விட்டுப் போகக் கூடாது.. நம்ம சொத்தும் விட்டுப் போகக் கூடாது ”
” எந்த சொத்து மா.. இந்த வீடா இல்ல வயலா.. எதை சொல்லுறீங்க.. “
” எல்லாம் தான்.. இதெல்லாம் நீ வச்சிருக்க ஒரே மகளுக்கு தானே டா. கல்யாணம் ஆகவும் அவ புருஷன் பேருக்கு மாத்தி கொடுத்துடு.. வேற எதுவும் என் மக கேட்க மாட்டா ” கல் மனம் போல.. மகள் நன்றாக இருக்க வேண்டும்.. குடும்பத்திற்காக உழைத்த மகன் எப்படி போனால் என்ன என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் பிறை மீது பிரியம் அதிகம்.
” அதுசரி சொத்தை எல்லாம் அந்த வீட்ல எழுதி வச்சுட்டு நானும் என் பொண்டாட்டியும் தெருவுல நிக்கிறதா ”
” அப்படி எல்லாம் உன்ன விடுவாளா டா உன் கூடப் பிறந்தவ “
” அவளைப் பத்தி தெரிஞ்சதுனால தானே சொல்லுறேன். எனக்கே ஏதாவது ஆனாலும்.. என் பொண்டாட்டியோட கதி. இந்த வீட்ல எனக்காக இத்தனை வருஷம் உழைச்சு கொட்டிட்டு, வாயை மூடிட்டு இருக்கான்னா அது யாருக்காக.. எனக்காக மட்டும் தான். அப்படி எனக்காகவே வாழ்ந்தவளுக்கு நான் என்ன செய்ய போறேன் மா.. இதுக்கு அப்புறமும் இப்படியே இருக்கிறது சரி இல்ல.. என் சொத்தை எல்லாம் சிவகாமி பேருக்கு தான் மாத்த போறேன் ” சிவானந்தம் திருமணம் ஆன இத்தனை நாட்களில் நேருக்கு நேராக மனைவியின் உரிமைக்காக சண்டையிட்டார்.
” நல்லா இருக்கு டா.. அவ பேருல எழுதி வச்சா எப்படி .. அவ பேருல இருக்குற வீட்ல நான் எப்படி இருக்க முடியும் “
” ஏன்… ஏன் இருக்க முடியாது.. அவ உங்க மருமக தானே.. “
” ஆமா பிள்ளை கொடுக்க முடியாதவ ” என அகிலாண்டம் வார்த்தையை விட்டு விட.. சினந்து போனார் சிவானந்தம்.
” ஆமா மா பிள்ளை கொடுக்க முடியாதவ தான்.. பிறைக்கு அப்புறம் எத்தனை முறை தெரியுமா அவ மாசமா இருந்தா.. எல்லாம் உங்களால தான் மா கரைஞ்சு போச்சு. வீட்ல வேலைக்கும் ஆள் வைக்க விடாம.. மொத்த வேலையையும் அவளையே பார்க்க சொல்லி, வயல் வேலையையும் பார்க்க சொல்லி அவளை கொடுமை படுத்தி குழந்தையை எல்லாம் கொன்னுட்டீங்க மா .. அப்படியும் அவ பிள்ளை பெற தகுதி இல்லாதவ இல்லையே.. என் வீட்டுக்கு மகாலட்சுமியை கொண்டு வந்தவ ” என எகிறினார். இப்போது பேசி என்ன பயம். அனைத்தும் காலம் கடந்து விட்டதே. இந்த குரலை அப்போதே எழுப்பி இருந்தால் சிவகாமிக்கு நியாயம் கிடைத்திருக்கும்.
இத்தனை நாளும் குடும்பம் பிரிந்து விடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்த சிவானந்தம்.. இன்று மகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக போவதில் பயந்து போனார். அதை விட இந்த வீட்டுக்காகவே வாழ்ந்த சிவகாமியின் நிலை என்னவாகுமோ என்ற பயமும் இருந்தது.
என்ன நடந்தாலும் சரி இதற்கு ஒரு முடிவை கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிவானந்தம் பேசி விட்டார்.
” ஓ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா.. இந்த சிறுக்கி அமைதியா இருந்தே காரியத்தை சாதிச்சுட்டு இருக்கா. என் வயித்தெறிச்சல் சும்மா விடாது டி உன்னைய.. என் பேரனை விட்டுட்டு உன் மகளுக்கு வேற ஒருத்தனை கட்டி வச்சா, அவ வாழாமா தான் இந்த வீட்ல வந்து இருப்பா.. ” சாபத்தை அள்ளி தெளித்தார் அகிலாண்டேஸ்வரி. பாசத்தை விட கோபம் கண்ணை மறைத்தது.
” அத்தை….. ” என சிவகாமி முதல் முதலாக கத்தி இருக்க..
” அடி செருப்பால.. என் முன்னாடியே குரலை உசத்தி பேசுறியா.. வாயை இழுத்து வச்சு தச்சுப் புடுவேன் ஜாக்கிரதை .. ” என முடியை அள்ளி கொண்டையிட்டவர்.. ” இதுக்குமேல இந்த வீட்ல இருந்தா எனக்கு என்ன மரியாதை இருக்கு.. நான் என் மக வீட்டுக்கு போறேன் ” என் அகிலாண்டேஸ்வரி கூறியும் சிவானந்தம் தடுக்கவில்லை.
இதுதான் நடக்கும் என்பது தெளிவாக தெரியும்.. தற்போது உள்ள நிலையில் எடுத்துக் கூறினாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் விட்டு விட்டார்.
” அத்தை தயவுசெஞ்சு போகாதீங்க.. இருங்க.. ” என சிவகாமி கண்ணீரோடு கெஞ்ச..
” இப்போ கூட நீங்க சொல்லுற மாதிரி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு உன்னால சொல்ல முடியாதுல .. அழுத்தக்காரி டி நீ.. அப்படியே ஊமையா இருந்தே கழுத்தை அறுத்துட்ட ” என வேண்டிய துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டவர், சொல்லிய கையோடு கிளம்பியும் இருந்தார்.
மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது. சிவானந்தம் அப்படியே தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.
” நீங்களாவது சொல்லியிருக்க வேண்டமாங்க.. அத்தை போயிட்டாங்க ” அழுத மனைவியை இமை வெட்டாமல் பார்த்தவர்..
” இத்தனை நாளும் நான் உனக்குன்னு எதுவும் நல்லது பண்ணது இல்லை சிவகாமி. இனிமேலாவது கொஞ்ச நாளைக்கு நீ நிம்மதியா இரு.. போனவங்க எங்க போக போறாங்க.. மக வீட்டுக்கு தானே.. மகள் கவனிக்கிர கவனிப்புல எப்படி இங்க ஓடி வராங்கன்னு மட்டும் பாரு ” என துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டவர்.. ” நான் வயலுக்கு போயிட்டு வரேன்.. நடந்தது எதுவும் பாப்பாக்கு தெரிய வேணாம்.. வருத்தப்படும்.. வந்ததும் சொல்லிக்கலாம் ” என கிளம்பிச் சென்றிருந்தார்.
காலையிலே சமையல் வேலையும் முடிந்ததால், மனதை மாற்ற கோவிலுக்கு கிளம்பி இருந்தார் சிவகாமி.
**
சுஷ்மிதாவின் மாமா வீட்டில் இருப்பதில் அப்படி ஒன்றும் தயக்கமாக இருக்கவில்லை அவளுக்கு. ரஞ்சனி அவளோடு நன்றாக பழகி இருந்தார். அன்னிய வீட்டை போலவே அவளுக்கு தோன்றவில்லை.
” பிறை மா.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை நம்ம எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வரலாமா ” ரஞ்சனி கேட்டதும் சுஷ்மிதா அலுப்பாக.. ” ஐயோ இன்டென்ஷிப் போயிட்டு வந்ததே டயர்டா இருக்கு அத்தை.. நீங்க போயிட்டு வாங்களேன் ” என மறுத்து விட.. பிறை உற்சாகமாக தலை அசைத்தாள்.
” நான் வரேன் ஆண்டி.. நம்ம போகலாம்.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் ” என கிளம்பி இருந்தாள்.
அரை மணி நேரத்தில் வேலையை முடித்து கொண்டு இருவரும் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றனர். அது பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் என்பதால் கூட்டம் சற்றே அலைமோதியது.
” எனக்கும் உங்க மாமாவுக்கும் பொம்பளை பிள்ளை வேணும்னு ரொம்ப ஆசை.. ஆனால் பாரு ரெண்டு ஆம்பளை பசங்க.. ரெண்டு பேரையும் பாரினுக்கு படிக்க அனுப்பிட்டு நாங்க இங்க தனியா இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் வந்தது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. உங்க மாமா வேலை இருக்குன்னு சதா வெளிய போயிடுவாரு.. நானும் வீட்ல வேலையை முடிச்சிட்டு, சும்மா எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்னு தையல் கிளாஸ் போய் அதை கத்துட்டு வந்து எனக்கு நானே தச்சு வச்சு நேரத்தை போக்கிக்கிறேன் ” உள்ளிருக்கும் ஏக்கங்களை எல்லாம் பிறையிடம் கொட்டி இருந்தார் ரஞ்சனி.
” அதுனால என்ன இந்த ஒரு மாசமும் தூள் கிளப்பிடலாம்.. நான் எம்பிஏ முடிச்சத்தும் இங்க தான் வேலைக்கு வருவேன்.. அப்போ வந்து உங்களை பாத்துட்டு போறேன்.. கவலைப்படாதீங்க ” பிறைநிலா கூறியதில் சற்றே அவரது மனம் மகிழ்ந்து தான் போனது.
” இந்த மாதிரி டிரஸ் எல்லாம் நீ போடுறதை பார்க்கும் போது தான் நமக்கு ஒரு பொம்பளை பிள்ளை இல்லையே.. இதெல்லாம் வாங்கி போட்டு அழகு பார்க்குனு இருக்கு ” அவளது தாவணியை பார்த்து கூறினார் ரஞ்சனி.
” அதுனால என்ன .. நான் உங்களுக்கு போட்டு காட்டுறேன் ” என பாவடையை இரு பக்கமும் பிடித்து கொண்டு ஒரு சுற்று சுற்றி காட்ட.. ரஞ்சனி சிரித்து விட்டார்.
” நல்ல கலகலப்பான பொண்ணு தான் நீ ”
” விளக்கு போடுவோமா ஆண்டி ” என்றதும் இருவருமாக விளக்கு போடும் இடத்திற்கு சென்றனர்.
” ரொம்பவே அழகா இருக்கா டா.. என்னால கண்ணை எடுக்க முடியல.. ” ஆடவர்கள் கூட்டத்தில் ஒருவன்.
” எனக்கும் தான் மச்சி.. நம்ம ஊர்ல இப்படியெல்லாம் டிரஸ் பண்ணி பொண்ணை பாக்குறது எல்லாம் அபூர்வம் “
” கிராமத்து பொண்ணா இருப்பாளோ .. “
” இருக்கும் .. ஆனால் படிச்ச பொண்ணு மாதிரி தான் தெரியுது ” ஆடவர்கள் பேசிக் கொள்வது அருகில் இருந்தவனின் காதுகளில் தவறாமல் விழுந்தது.
யாரை பற்றி கூறுகிறார்கள் என நிமிர்ந்து பார்த்தவனுக்கு விருந்தாக வந்து விழுந்தாள் பிறைநிலா.
” நான் விளக்கு போட்டேன் பிறை.. ஐயர் கிட்ட பூஜை சாமானை கொடுத்துட்டு வரேன்.. அபிஷேகம் ஆரம்பிக்க போகுது. நீ விளக்கு போட்டுட்டு அங்க வந்துரு ” என ரஞ்சனி கூறி விட்டு சென்று விட.. மிகவும் பக்தியாக எதையோ வாயில் முனு முனுத்துக் கொண்டே விளக்கை ஏற்ற ஆரம்பித்தாள் பிறை.
விளக்கை வைத்து, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு கையெடுத்து கும்பிட்டு , அம்மனை வேண்டிக் கொண்டவள், மெதுவாக தீயை பற்ற வைத்து இரண்டு விளக்குகளையும் ஏற்றினாள்.
திரியை தூண்டி நன்றாக எரிகிறதா என பார்க்க..
” ஐயோ…… கடவுளே… நெருப்பு…. நெருப்பு ” என்ற அலறல் சத்தத்தில் பயந்து போனவள், திரும்பிப் பார்க்க.. அவளது தாவணியில் தான் நெருப்பு பற்றி இருந்தது.
சட்டென மூளை வேலை நிறுத்தம் செய்ய.. ஆடாமல் அசையாமல் நெருப்பை பார்த்த வண்ணம் பிறை நிற்க.. நெருப்பு வேகமாக மேலேறியது.
அதே நேரம் அனைவரையும் தள்ளிக் கொண்டு ஓடி வந்தவன்.. அவளை இழுத்து கொண்டு பூசை சாமான் வைக்கும் அறைக்குள் விட்டு கதவை காலிலேயே தாழிட்டவன்… சட்டென அவளது தாவணியை அவளது உடல் மேலிருந்து இழுத்து எறிந்தான்.
அதிர்ச்சியாக அவனை பார்த்தவள்.. கண்ணீரோடு திரும்பி நின்று கொண்டாள். கைகளால் அணை போட்டவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாவணியில் பற்றிய தீயை அணைத்தவன்..
” இடியட்… அறிவில்லை… ” இடியாக விழுந்த அவனது சத்தத்தில் மிரண்டு போனாள் பிறைநிலா.
” நெருப்பு பிடிச்சதை அப்படியே பார்த்துட்டு நிக்கிற.. கொஞ்சம் கூட புத்தி வரலையா உனக்கு ” அவன் கேட்டதும் சரி தானே..
” கொஞ்சம் விட்டாலும் முழு உடம்புக்கும் வந்துருக்கும்.. படிச்ச பொண்ணு தானே நீ.. ஹீரோ மாதிரி எவனாவது வந்து உன்ன காப்பாத்தி சட்டையை கொடுத்து கூட்டிட்டு போவான்னு நினைச்சியா ” அவன் கேட்டதும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு. தற்போது தான் தாவணி இல்லாத தனக்கு சட்டையை கொடுத்தால் என்னவென்று தோன்றியது அவளுக்கு. மனதில் நினைத்ததை அடுத்த நிமிடமே கூறி இருந்தான்.
” இல்ல.. இல்ல.. பிளீஸ் நான் எப்படி சார் வெளிய போறது ” கண்ணீரோடு கேட்டவளை கொலைவெறியுடன் பார்த்தவன்..
அருகில் இருந்த அம்மன் புடவைகளில் ஒன்றை எடுத்து அவள் மீது தூக்கி எறிந்தவன்.. கதவை திறந்து கொண்டு புயலாக வெளியேறி இருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.
சனா💖