Loading

ஹலோ நண்பர்களே ரேஸ்க்கு ரொம்ப லேட்டா ஆஹ் வந்து இருக்கேன் .  முடிஞ்ச அளவுக்கு டெய்லி போடுறேன் இல்ல கண்டிப்பா போட்ட தான் டைம் குள்ள முடிக்க முடியும் .  

Happy Sunday !!!

பிரபஞ்சம் 1

அந்திமாலை நேரம், சூரியன் தன் பணியை முடித்துக்கொண்டு  படைகளோடு வீடு திரும்பும் சூழல் மனதை களவாடிக்கொண்டு இருக்க, சுற்றிலும் பறவைகள் தங்கள் கூடுகளைத்  தேடி பெரும் கீச்சலுடன்  சென்றுகொண்டு இருக்க, இதில் எதிலுமே மனம் லயிக்காமல் எல்லையில்லா வானில் எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருந்தான். 

கல்லூரி படிப்பை முடித்து ஆறு மாதங்களே ஆகிறது. அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசிப்பதற்குள் விதி அவனை கொஞ்சம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கியது

வானம் நீலத்திலிருந்து இளஞ்சிவப்பாக, பின்னர் மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்து, முழுக்க கருமையுடன் இருள் பரப்பத் தொடங்கியது. அதுவரை இலக்கில்லாமல் வானத்தை நோக்கி இருந்தவன் திடீரென வேகமாக கீழே இறங்கி, தனது வண்டியை ஒரு குத்தில் ஸ்டார்ட் செய்து சீறிப்பாய்ந்தான்.

செல்லும் அவனை ஜன்னல் வழியாக ஒரு உருவம் பார்த்துக்கொண்டிருந்தது. பத்து நிமிடங்களில் மீண்டும் உள்ளே வந்து, அதே வேகத்தில் மாடி ஏறினான். கையில் மதுபானக் குவளை. கவலை மறக்கும் வழியாக அவன் தேர்ந்தெடுத்த பாதை—போதை. ஒரு கையில் பாட்டிலை பிடித்து குடித்துக்கொண்டிருக்க, யாரோ நெருங்கும் காலடி ஓசை கேட்டது.

அவன் திரும்பவில்லை. ஆனால் அடுத்த நொடி கேட்ட சத்தத்தில் அவன் கையில் இருந்ததை மாடியின் சுவருக்கு அப்பால் ஒதுக்கி மறைத்தான்..

“இங்கையா அண்ணா இருக்கீங்க?” என்ற அழுகையுடன் கேட்ட குரல்  அது.

“என்ன குட்டி, இந்த நேரத்தில் இங்க வந்திருக்க, அம்மா அப்பா பார்த்தா திட்டுவாங்க” என்று சற்று தடுமாறியே அவன் கேட்க,

“இப்ப தான் திட்டு வாங்கிட்டு வரேன். விட்டா அடிச்சே இருப்பாங்க. சோகமா ஜன்னல் கிட்ட போன நீங்க மேல போனதை பார்த்தேன். அதன் இங்க வந்துட்டேன்” என 

“அடிச்சாங்களா? எதுக்குடா? என்ன பண்ணின?” 

“நான் பெருசா எதுவுமே பண்ணல” என்று மூக்கை துடைத்துக்கொண்டே சொல்ல,

“அப்ப சின்னதா எதோ பண்ணிருக்க அப்படித்தானே”

“ஐந்து பாடத்தில் இரண்டே இரண்டுல தான் போய்டுச்சு… ஆனா மூணுல பாஸ் தானே நான். அதை சொன்ன அடிக்க வராங்க” என்று மீண்டும் கண் கலங்க சொல்ல,

“பத்தாவது படிக்கிற குட்டி, அடிக்காம என்ன செய்வாங்க கொஞ்சம் நல்லா படிக்கலாம் தானே. உன் கிட்ட வேற என்ன கேக்கறாங்க இது மட்டும் தானே” 

“அதுதான் வரலையே நான் என்ன பண்றது. கஷ்டப்பட்டு படிக்கிறேன்,  ஆனா மறந்து போகுதே ஆமா நீங்க ஏன் இந்த நேரத்தில் இங்க வந்தீங்க” என்று தன் பிரச்சனையை மறந்து கேட்க,

ஒரு நிமிடம் யோசித்தவன் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் குடித்த சரக்கு அதன் வேலையை காட்ட தொடங்கியது.

“நான் பாட்டுக்கு என் படிப்பும்  வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தேன், ஒருத்தி வந்தா லவ்வை சொல்லிட்டு, பின்னாடியே சுற்றினாள். எங்க போனாலும் அங்க இருப்ப, வேண்டாம் சொன்ன என்னையும் மாற்றி அவளுக்காக உருக வெச்சா, ஆனா இப்ப என்னை விட பெட்டரா ஒருத்தர் வந்ததும் அவனை கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டா, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். நான் என்ன பண்றது” 

“ஏன் அண்ணா நீங்க இந்த படம் எல்லாம் பார்க்க மாட்டிங்களா? இந்தப்  பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் தெரியுமா. வெரி பேட்! நீங்க கவலைப்படாதீங்க” என்க 

“நீயும் பொண்ணு தானே. ஆனால் நான் அப்படி இல்லையே என்னோட முதல் காதல், முதல் சலனம், முதல் முத்தம், முதல் மோகம், முதல் சண்டை முதல் பிரிவு முதல் சமாதானம் இப்படி எல்லாமே  ஒரே பொண்ணு கூட மட்டும் தான் என்று நினைச்சிட்டு இருந்தேன். இப்படி எல்லாமே தலைகீழாக மாறும் நினைக்கவே இல்லை” எதிர்க்கே இருப்பது சிறு பெண் என்ற நினைப்பே இல்லாமல்  பேசிக்கொண்டே செல்ல,

அவனையே ஆழ்ந்து பார்த்தவள், சில நிமிடத்தில் “எனக்கு என்ற சொல்றது தெரியலையே” என 

“சரி அதை விடு நேரம் ஆகிடுச்சு பாரு நீ போ இல்லனா  அம்மா திட்ட போறாங்க. படிப்பு மட்டும் வாழ்க்கை கிடையாது அதையும் தாண்டி உன் கிட்ட எதாவது திறமை இருக்கும் அதை கண்டுப்பிடி. அப்பறமா அதையே உன்னோட குறிக்கோளாக மாற்றிக்கோ” என 

“கண்டிப்பா இனி அதை தான் தேடப் போறேன். நீங்க கூட சூப்பரா எனக்கு கிளாஸ் எடுத்தீங்க. அதனால தான் நான் கொஞ்சமாச்சு மார்க் எடுத்திருக்கேன். என்ன தான் இரண்டு பாடத்தில் போனாலும் மிச்ச இருந்த மூன்றில் இந்த அளவுக்கு மார்க் எடுக்க நீங்க தானே காரணம் அதான் தேங்க்ஸ் சொல்லலாம்னு தோணுச்சு. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்” என்று மேலும் எதுவும் பேசாமல் கீழே இறங்கி விட்டாள். அவள் சென்ற பின்னும் அதே இருள் படிந்த வானத்தையே வெறித்துக் கொண்டு இருந்தான் விடியும் வரை.

இருளில் தவித்த அவனின் வாழ்க்கை மெதுவாக விடியலை நோக்கி நகரத் தொடங்கியது…

நேரமும் காலமும்  எவ்வளவு வேகமாக செல்கிறது என்று தோன்றும் அளவிற்கு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டது. 

திருச்சி 

காலை நேரங்களில் அந்த வீட்டில் எப்போதும் சற்று பரபரப்பாகவே இருக்கும். ஆனால் சில நாட்களாக அந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாகவே பொழுது விடியும். ஆனால் இன்றோ அந்த இல்லத்தின் அரசி, வழக்கம்  போல பரபரப்பாக வேலையை செய்துகொண்டு இருக்க,

“என்ன மாதவி இதுக்குள்ள டிபன் பண்ணிட்ட எங்கையாவது வெளிய போகிற வேலை இருக்கா?” என்று அவரின் கணவர் தியாகராஜன் கேட்க,

“அட நீங்க வேற.. இன்றைக்கு கண்டிப்பா கல்லூரிக்குப்  போகணும் என்று காலையில் தான் சொல்றான் உங்க அருமை பையன். அதான் சட்டுப்புட்டுனு செஞ்சிட்டு இருக்கேன்” என்று சொல்லும் போதே மேலே இருந்து வேக நடையுடன் வந்தான் இவர்களின் புதல்வன் குருப்ரசாத்.

“காலேஜ் திறக்க இன்னும் இரண்டு வாரம் இருக்கே அதுக்குள்ள என்ன விஷயம்” என்று தியாகராஜன் கேட்க,

“இன்றைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு பா. துறை தலைவர்  தான் கலந்துக்கணும் ஆனால் சுரேஷ் சார் சடன் ஹெல்த் இஸ்ஸுஸ். அதான் என்னை பார்த்துக்க சொல்லி இருக்காரு. மதியம் வந்துடுவேன்” என்று சொல்லி கொண்டே மாதவி வைத்த இட்லியை காலி செய்தவன் வேகமாக சென்று விட்டான்.

திருச்சியில் இருக்கும் பிரபல தனியார் கல்லூரியான கற்பகா குரூப் ஆப் இன்ஸ்டிடூஷனில் வணிகவியல் துறையில் அசிஸ்டன்ட் ப்ரொபஸராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறான். ஆறடி உயரம் எதிரே இருப்பவரை ஈர்க்கும் விழிகள் நேர் நாசி சிவந்த அதரம் திராவிட நிறம் என்று பார்ப்பவரை ஒரு நொடியில் ஈர்த்து விடும் தோற்றம் தான். இருந்தும் அவன் பார்வை இது வரை புத்தகத்தை தாண்டி எதிலும் நிலை பெற்றது இல்லை.

தன் இருசக்கர வாகனத்தை எப்பொழுதும் விடும் இடத்தில் விட்டு விட்டு வேகமாக மீட்டிங் ஹால் நோக்கி சென்றான். 

“முரளி சார் இன்னும் கரஸ் மேம் வரலை தானே” என்று கேட்டு கொண்டே அவனுக்கான இடத்தில் அமர்ந்தான். முரளி பொருளியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர். குருவின் நண்பரும் கூட.

“இன்னும் இல்ல குரு சார், வர நேரம் தான். கடைசி நேரத்தில் ராதா மேம் என்னை அட்டென்ட் பண்ண சொல்லிட்டாங்க” என்று இவனும் சலித்துக்கொண்டே பேசிக்கொண்டு இருக்க,

சில சலசலப்புடன் அந்த அறைக்குள் நுழைந்தார் மகேஸ்வரி, இந்த குழுமத்தின் தற்போதைய கரஸ்பாண்டன்ஸ். வயதோ அறுபதை நெருங்கி இருந்தாலும் ஆளுமையில் என்றும் இளமையே.

“குட் மார்னிங்” என்று சொல்லி விட்டு தனது நாற்காலியில் அமர, மற்றவர்களும் அமர்ந்தனர். அந்த அறையில் பத்து பேர்  இருந்து இருப்பார்கள். அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, 

“இந்த மீட்டிங் எதுக்கு என்றால் இந்த வருஷத்தோட அட்மிஷன் அண்ட் அகாடமிக் சம்மந்தமா உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ண தான். வழக்கமாக நடப்பது தான். இந்த முறையும் எல்லா துறையிலும் சீட் எல்லாமே நிரம்பிடுச்சு” என்று சொல்லி கொண்டே தன் பக்கத்தில் இருக்கும் தன் உதவியாளர்  சுந்தரத்தை பார்க்க,

அவனோ உடனே தன் கையில் இருந்த பேப்பரை கவனமாக யாரிடம் கொடுக்க வேண்டுமோ பார்த்து கொடுத்தான். 

“இதில் உங்க துறையில் சேர்ந்து இருக்கும் மாணவ மாணவிகளின் பெயர் இருக்கு. மற்ற விவரம் எல்லாம் அந்த டாட்டா பூக்கில் இருக்கு. சீக்கிரமா நம்ம டாட்டாவில் அப்டேட் பண்ணிடுங்க அண்ட் மிஸ்டர் குருப்ரசாத்” என்று அவனை அழைக்க,

“எஸ் மேம்”

“உங்க துறைக்கு மட்டும் பைனல் இயரில் ஒரு பொண்ணு சேர்ந்து இருக்காங்க. ஜஸ்ட் டேக் கேர் ஒப் இட்” என்று மேலும் அனைவரிடமும் பொதுவாக பேசிக்கொண்டு இருக்க,

இவனோ கையில் இருந்த நேம் லிஸ்டை திருப்பி பார்க்க கடைசி பக்கத்தில் மூன்றாம் ஆண்டு என்ற தலைப்புக்கு கீழே  ‘ஆதனி’ என்ற பெயர் இருக்க, இதையே சில நொடி பார்த்தவன் பின் அவன் வேலையை பார்க்க தொடங்கினான்.

திருச்சி பேருந்து நிலையம்,

“இங்க இருந்து ஆட்டோவில் போய்டுங்க நான் ஆட்டோ டிரைவர் கிட்ட அட்ரஸ் சொல்றேன். கொஞ்சம் நாள் இடம் பழகர வரை பார்த்து சூதனமா இருந்துக்கோங்க. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறது தான் நம்ம மூன்று பேருக்கும் நல்லது” என்று பெருமூச்சுடன் சொன்ன அந்த நபரோ பின்,

“ஆத்தா வீடு நம்ம தூரத்து சொந்தக்காரரோடது தான். பயம் இல்லாமல் இருக்கலாம். அக்கப்பக்கம் நிறைய வீடுகள் இருக்கு. வயசு பிள்ளையை வெச்சிட்டு இருக்க கவனமா இருந்துக்கோ. நான் அப்பறமா வரேன்” என்றவன் கோவை செல்லும் பேருந்தை நோக்கி சென்று விட்டான்.

பேச்சிமுத்து, எண்பதுகளின் தொடங்கியதில் இருப்பவர். இந்த தள்ளாடும் வயதிலும் தனியாக தன் பேத்தியை தானே பார்த்து கொள்வதாக தைரியமாக சொன்னவர். அவர் தைரியமும் துணிச்சலும் தான் யாருக்கு வரும். இவ்வளவு நடந்தும் ஒரு வார்த்தை பேசாமல் தலையை குனிந்து கொண்டு கண்ணில் தோன்றும் பயத்தை வெளியே காட்ட கூடாது என்று இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு பேச்சியின் கையை இறுக்க பற்றி இருந்தாள், அவள் தான் ஆதனி.   பெண் பிள்ளை என்று பெற்றவர்களால் பெரிதும் ஒதுக்கப்பட்டவள். இப்பொழுது தெரியாத ஊரில் வயதாக தன் பாட்டியுடன் தன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியை நோக்கி வந்திருக்கிறாள். திருச்சி அவளுக்கு வைத்திருக்கும் சோதனை தான் என்னவோ??

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்