அத்தியாயம் 28 :
“நீயா சொல்லிட்டா உனக்கு நல்லது. ஏன்னா, நான் சொல்ல வைக்கிற முறையே வேற மாதிரி இருக்கும். எப்படி வசதி?”
சொல்லிய பாரி தன் பாக்கெட்டில் கை விட… அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தவன் அரண்டு விட்டான்.
“நான் சொல்லிடுறேன்… சொல்லிடுறேன். என்னை சுட்டுடாதீங்க…” என்று பயத்தில் அலறி…
“உங்களை கண்காணிக்க சொல்லி சொன்னாங்க. எதுக்காகன்னு தெரியாது. எங்க அண்ணாத்த சொன்னதை நான் செய்தேன். அப்பவும் என்கூடால இருந்தவன் தான் நீங்க எங்க போறீங்க, வாறீங்கன்னு எல்லாம் எங்க அண்ணாத்தகிட்ட தகவல் கொடுப்பான். அவன் நல்ல நேரம் நீங்க வந்தப்போ நான் ஆட்டோவில் இருந்தேன். உங்களாண்ட மாட்டிக்கிட்டேன்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
பாரி மெதுவாக பையிலிருந்து கேண்டியை எடுத்து அவன் கண் முன் பிரித்து வாயிலிட்டு சுவைத்தான்.
“செம டேஸ்ட்… உனக்கு வேணுமா?”
பாரியின் செயலில் இதற்கா பயந்தோமென்று அவனின் முகம் விளக்கெண்ணெய் குடித்தவன் போலாயிற்று.
“சரி வேண்டான்னா விடு” என்ற பாரி இருக்கையிலிருந்து எழுந்து, “உன்னோட இருந்தவன் யார்?” எனக் கேட்டான்.
அப்போது கணபதி ஒருவனை இழுத்து வந்து பாரியின் முன் நிறுத்தினார்.
“சார் இவன் தான் அந்த ஆட்டோ ஓனர். வண்டி இவன் பேரில் தான் இருக்கு” என்றார்.
“இவன் தான் சார் என்கூடால இருந்தான்” என்று அன்று காவல் நிலையத்தின் முன் ஆட்டோவில் இருந்தபடி கண்காணித்து கொண்டிருந்தவனில் பிடித்த ஒருவன் கூறினான்.
“அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான். இப்போ நீ சொல்லு?” என்று கணபதி இழுத்து வந்தவனிடம், தனக்கு முன்னிருப்பவனை காண்பித்து பாரி வினவினான்.
“என்ன… என்ன சார் சொன்னான் அவன். டேய் சேகரு என்னத்தடா சொன்ன” என்று படபடத்தவன், “அவன் என்ன சொல்லியிருந்தாலும் அது உண்மையில்லை சாரே… ஆட்டோ சவாரிக்கு வேண்டித்தான் நின்னுக்குனு இருந்தோம்” என்றான் அவன்.
“உன் பெயர் என்ன?”
“ஆட்டோ டொனால்ட் சார்.” அவன் சொல்லியதில் பாரி சத்தமாக சிரித்துவிட்டான்.
அங்கிருந்த கணபதிக்கு கூட சிரிப்பு வந்தது.
“டொனால்ட்… ஹ்ம்ம்… நைஸ் நேம். சரி சொல்லு எதுக்கு என்னை வாட்ச் பண்ண?”
“நான் வாட்சும் பண்ணல… போனும் பண்ணல சாரே. போலீஸ் ஸ்டேஷன் எதுத்தாப்புல ஸ்டேன்ட் இக்கிது. அப்புறம் இங்கத்தானே சாரே ஆட்டோ நிறுத்த முடியும்.”
“இவன் சொல்றது கரெக்ட் தான் கணபதி அங்கிள்…” என்ற பாரி,
அன்று ஆட்டோவில் எடுத்த முகவரி அட்டையை அவன் முன் வைத்தான்.
“இதேது உனக்கு?”
“நான் அந்த கட்சி தொண்டன் சாரே!”
“ரைட் விடு.
அப்புறம் என்னாத்துக்கு மாமே உன் போனுல இருந்துக்குனு… இவன் பிஏ நெம்பருக்கு போனு போயினுருக்குது?” என்ற பாரியின் பேச்சில் ஜெர்க்காகினான் டொனால்ட்.
“அது வந்து… அது வந்து சாரே” என்றவன் மேற்கொண்டு பேச முடியாது வலியில் அலறினான்.
பாரி அவனது காலை பூட்ஸ் காலினால் பதம் பார்த்திருந்தான். முடிந்த மட்டும் அழுத்தி ஒருவழி செய்துவிட்டான்.
“எங்க அண்ணாத்த தான் சாரே உங்களை கண்காணிச்சு அந்த ஆளுக்கிட்ட சொல்ல சொல்லிக்கிடுச்சு.”
“யாருடா உங்க அண்ணாத்த…?”
அவன் பாரியின் முகத்தில் தெரிந்த சிவப்பில், ஒருவனின் பெயரை கூறினான்.
“துரை.”
“யாரு அங்கிள் அவன்?”
“அன்னைக்கு அரேஸ்ட் செய்தமே அந்த கவுன்சிலர் தான் சார்.”
“இப்போ அவன் ஜெயிலில் தான இருக்கான்.” பாரி யோசனையாக இழுத்தான்.
அதற்கு அந்த டொனால்ட் சத்தமாக சிரித்தான்.
பாரி அவனை அர்த்தமாக ஏறிட்டான்.
“நீ பிடிச்சு உள்ள வச்சிக்கினா… எங்க அண்ணாத்தையால வெளியில வந்துக்கன முடியாதுன்னு நினைச்சிகிட்டியா சாரே. எத்தா(ன்) பெரிய கேசுல உள்ள போயிக்கினாலும் நாலே நாளுல வெளியில வந்துக்கும். நீங்க எத்தனை ஆதாரம் காமிச்சாலும் நிக்காது சாரே” அலட்சியமாகக் கூறினான்.
“டேய் என்ன திமிரா?” கணபதி தான் அவனை அடிக்கச் சென்றார்.
தடுத்த பாரி…
“அவனெல்லாம் திமிரு காட்டுற மாதிரிதான அங்கிள் நம்ம சட்டம் இருக்கு. மக்கள் பணிக்குன்னு வரவங்களுக்குத்தான் இங்க மக்களைவிட அதிக பாதுகாப்பு, வசதியெல்லாம். இவனை அடிச்சு என்ன ஆகப்போகுது.”
பாரி தன்னிருக்கைக்குச் சென்றான்.
“அவனுங்க ரெண்டு பேர்க்கிட்டவும் கையெழுத்து வாங்கிட்டு விட்டுடு ஜென்” என்றான்.
“அவனுங்க சாட்சியா இருக்கட்டுமே பாரி. பின்னாடி அந்த கவுன்சிலரை சிக்க வைக்க உதவுமே!” ஜென் யோசனையாகக் கூறினாள்.
“நோ யூஸ் ஜென்… இவனுங்க அவனுக்கு பத்தாது கட்ட பதினைந்தாவது கட்ட அடியாளுங்க. இவனுங்களுக்கு முன்னால் அந்த கவுன்சிலருக்கு நிறைய அடியாளுங்க இருப்பானுங்க. அவனை வேற வழியில் தூக்கிதான் விசாரிக்கணும்” என்ற பாரி எங்கோ எதையோ தான் விட்டுவிட்டதாக சிந்தனைக்குள் தேடினான்.
“அந்த கவுன்சிலரை பண்ண சொன்னது யாரா இருக்கும் பாரி?”
“இப்போவே தெரிஞ்சா சஸ்பென்ஸ் போயிடும். சுவாரஸ்யம் இருக்காது” என்றான் பாரி.
“உன்னோட நடவடிக்கைகளை நோட் பண்ண சொல்லி ஆள் அனுப்பியிருக்காங்க அப்படின்னா அவங்க மோட்டிவ் என்னவா இருக்கும்?”
ஜென்னிற்கு பல கேள்விகள் மண்டைக்குள் ஓடியது.
ஆனால் அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவனிடம் தற்போது பதிலில்லையே.
“அமிர்தா இறந்தது கொலை தான் ஜென். ஆனால் அதுக்கான மோட்டிவ் வேற ஏதோ ஒன்னு இருக்கு. அது வெளியில் தெரிஞ்சிடக்கூடாதுன்னு ரொம்ப மெனக்கெடுறாங்க” என்ற பாரி, “இது குடும்ப சண்டைக்காக நடந்த கொலை கிடையாது ஜென்” என்றான். உறுதியுடன்.
“அமிர்தா டைரியில் ஏதும் தகவல் கிடைக்கலயா?”
“ம்ப்ச்… அவள் காலேஜ் டேசில் எழுதிய டைரி அது. அவளோட மேரேஜுக்கு முதல் நாள் வரை எழுதியிருக்காள். அவ்வளவு தான். அடுத்து எதுவும் எழுதல.” சலிப்பாகக் கூறினான்.
“பட் அக்கயூஸ்ட் யாருன்னு ஒரு கெஸ் இருக்கு ஜென். அது சரியாத்தான் இருக்கும் தோணுது. அதுதான் அன்னைக்கு குற்றவாளி யாருன்னு இப்போவே என்னால சொல்ல முடியும் சொல்ல வைத்தது. ஆனால் இப்போ இந்த கேஸ் அமிர்தா கொலையோடு முடியாது போலிருக்கே” என்றான். அவனின் கணிப்பும் உண்மையே.
அமிர்தா இறப்பிற்கு பின்னால் ஒரு மர்மம் உள்ளது. அதனை பாரி எளிதில் கண்டுபிடிப்பானா? கண்டுபிடிப்பேன் எனும் திடம் அவனுள்.
“இப்போ கமிஷ்னரை பார்க்கணுமே ஜென்” என்று பாரி சொல்லி முடிக்க கமிஷ்னரே அவனைத்தேடி அங்கு வந்தார்.
ஜென் அவருக்காக விறைப்பாக சல்யூட் வைத்திட… பாரி தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து கூட எழவில்லை.
பாரியின் குணமறிந்த குமார் இவனிடம் எதற்கு வம்பு என்று அமைதியாகவே பாரிக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“இன்னைக்கு நான் எந்த கவுன்சிலரையும் அரேஸ்ட் பண்ணலையே சார்… பண்ணல தான ஜென்” என்று கேட்டான்.
பாரியின் கேலி ஆணையருக்கு நன்கு புரிந்தது.
“இங்க பாரு பாரி… பெரிய இடத்து விவகாரமெல்லாம் நமக்கு எதுக்கு. கண்டுக்காம இருந்திடு… அதுதான் நமக்கு நல்லது. உன் வயதில் நானும் உன்னை மாதிரி சூடாத்தான் இருந்தேன்” என்றவர், “நம்ம வேலையை பொறுத்தவரை நிதானம் ரொம்ப முக்கியம் பாரி. அவசரப்படாதே” என்றார்.
“உன்னை இதற்குமேல் அடியெடுத்து வைக்க கூடாதுன்னு எனக்கு ஒருத்தன் கால் பண்ணி சொல்றான். அப்போவே நீ குற்றவாளியை நெருங்கிட்டன்னு தெரியுது” என்றவரை…
“இதுக்குமேல எதுவும் செய்யக்கூடாது சொல்றீங்களா கமிஷ்னர் சார்” என பாரி இடைவெட்டினான்.
“இல்லை… உன்னோட வழியில் இனி ஒவ்வொரு அடியையும் பார்த்து கவனமாக வைன்னு சொல்லிட்டு போக வந்தேன்” என்றார்.
“தேன்க் யூ…” என்று பதில் கூறிய பாரி…
“இன்னும் பத்தே நாளில் இந்த கேசை முடிச்சுக்காட்டுறேன்” என்றான்.
“அவசரம் வேண்டாம் பாரி…” என்ற ஆணையர் குமார், “இந்த நெம்பரிலிருந்து தான் எனக்கு கால் வந்தது” என்று அவன் முன் அந்த எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி சென்றுவிட்டார்.
அந்த எண்ணை பார்த்தவாறே பாரி தன்னுடைய யோசனைக்குள் ஆழ்ந்தான்.
*****
“ஹாய் மாமா. ரொம்ப பிஸியா?”
பரிதிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள் பூந்தமிழ். இரண்டு நாட்களாக அவனோடு பேசவில்லை. கடந்து போன நான்கு வருடங்களுக்கு அவளுக்கு பெரிய பலமாக இருந்தது பரிதி. அதனால் தன்னுடைய தந்தையிடம் கூட சொல்லாது தனது மகிழ்வான விடயத்தை… பாரியின் மாற்றத்தை முதலில் பரிதியிடம் சொல்லிட நினைத்து அழைப்பு விட அது எடுக்கப்படாமல் அணைந்தது.
வேலையாக இருப்பானென்று நினைத்தவளுக்கு அப்போதுதான் அவன் ராஜஸ்தான் செல்வதாக சொல்லியதே நினைவில் வந்தது.
அதனாலேயே இப்போது தகவல் அனுப்பிவிட்டு காத்திருக்கிறாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அழைத்தவன்,
“இங்க வந்த வேலை முடியல குட்டிம்மா. வர எப்படியும் ரெண்டு மூன்று நாளாகும் போல. இப்போ இங்க விவசாய சங்கம் மீட்டிங்கில் இருக்கேன். நைட் ஹோட்டல் ரூம் போனதும் கால் பன்றேன்.” படபடவென்று வேகமாக பேசியவன் வைத்துவிட்டான்.
“இந்த மாமாவுக்கு அப்படியென்ன அவசரம்” என்று, அவனின் நிலை புரிந்தும் அலைபேசியை பார்த்து திட்டினாள். மனதிலிருக்கும் சந்தோஷத்தை சொல்ல முடியாத தவிப்பு அது.
“அப்பாகிட்ட சொல்லலாமா?
இல்லை வேண்டாம்.
அத்தை…?
மம்ம்ம்ம்… வேண்டாம் வேண்டாம்.
அப்பத்தா?
எல்லார்கிட்டையும் சொல்லணுமே! நம்புவாங்களா தெரியலையே?”
சந்தோஷம் ஆர்ப்பரிக்க தனக்குள்ளேயே குழம்பினாள். அவளின் இத்தகைய சந்தோஷத்திற்காகத்தானே மொத்த குடும்பமும் பல வருடங்களாகக் காத்திருக்கின்றனர். அந்நேரம் ஒருத்தரை விடுத்து இன்னொருவரிடம் சொல்லவும் மனம் வரவில்லை.
உடனடியாக பாரிக்கு அழைத்தவள்…
“யோவ் காக்கி… எங்க இருக்க?” என்று அவன் ஹலோ சொல்லுவதற்கு முன்பே கேட்டிருந்தாள்.
“என்ன மேடம் சூடா இருக்கீங்க போல” என்ற பாரி… “நான் வெளிய வந்திருக்கேன் பூ. அப்புறம் பேசுறேன்” என்று வைத்துவிட்டான்.
அவள் தான் குட்டிபோட்ட பூனையாக வீட்டின் நீள அகலங்களை அளந்து கொண்டிருந்தாள்.
“ஓய் என்ன பன்ற?”
அவியின் குரல் கேட்டு நடையை நிறுத்தியவள்,
“சும்மா வாக்” என்று சமாளித்தாள்.
“நம்பிட்டேன்” என்றவன் “இப்போ நீ ஓகேவா தமிழ். பீவர் முழுசா விட்ருச்சா?” எனக் கேட்டான்.
“மதியம் டேப் போட்ட அப்புறம் டெம்ப்ரேட்சர் இல்லை அவி. ஆனால் டயர்ட்நெஸ் இருக்குடா” என்றவள் இருக்கையில் அமர்ந்தாள்.
சோர்வையும் மீறி அவளது முகத்தில் இருக்கும் தேஜஸ் எதனால் என்று அவிக்கு தெரிந்தே இருந்தது.
“டீ, காபி எதாவது போட்டுத்தரவா தமிழ். அதை கேட்கத்தான் வந்தேன்” என்றான்.
“காய்ச்சலுக்கு கஞ்சிதான் நல்லாயிருக்குமுன்னு மதியம் நீ கொடுத்த கஞ்சியே கழுத்துவர இருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம்” என்று பூ சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜென் வந்துவிட்டாள்.
“நீ மட்டும் தான் வந்தியா ஜென்?” ஜென்னிடம் கேட்டுக்கொண்டே அவளின் பின்னால் ஆர்வமாக பார்த்தாள்.
“உன் ஆளு வெளிய போயிருக்கான். போன வேலை முடிச்சிட்டு, ஸ்டேஷன் போயிட்டு நைட் தான் வருவான்” என்ற ஜென் தன்னுடைய ஷூவை கழட்டினாள்.
“உனக்கு வேலையில்லையா… சீக்கிரம் வந்துட்ட?”
அவியா கேட்டான் என்பது போல் பூ பார்த்திட…
“இது சீக்கிரமா… மணி 6.30. என் ட்யூட்டி டைம் முடிஞ்சிடுச்சு.”
“போலீஸ் வேலைக்கெல்லாம் நேரம் காலம் இல்லையே!” என்ற அவியையும்,
“அப்போ துணைக்கு நீ வாயேன் போவோம்” என்று பதில் கொடுத்த ஜென்னையும் மாற்றி மாற்றி பார்த்த பூ எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
நேற்று அவர்களுக்குள் என்னவோ நடந்திருக்கு என்று மட்டும் எண்ணிக்கொண்டாள்.
அவியும், ஜென்னும் இன்னும் எதையும் பேசி தீர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் நேற்று இரவில் ஜென்னின் கண்ணீரையும், அவள் சொல்லிய
‘என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத அவி. நீயும் இல்லைன்னா நான் அனாதைடா’ என்ற வார்த்தைகளையும் கேட்ட பின்னர் அவியால் அவளை தவிர்க்க முடியவில்லை. அத்தோடு அவனுக்கும் அவளைத்தவிர வேறு உறவு இல்லையே. அதனாலே அவளிடம் முகத்திருப்பல் இல்லாமல் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தான்.
இப்போதைக்கு அவனது இத்தகைய பேச்சே போதுமென்று ஜென்னும் அதற்குமேல் அவனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. எதற்கும் அவனை வற்புறுத்தவும் இல்லை. நடப்பது நடக்கட்டுமென்று அதன் போக்கில் இருக்கின்றாள்.
அறைக்குள் சென்று உடை மாற்றி வந்த ஜென் மூவருக்கும் தேநீர் வார்த்து கொண்டுவர,
“இப்போதான் இவன் கேட்டான் வேண்டா சொன்னேன்” என்றபோதிலும் பூ தனக்கானதை வாங்கிக்கொண்டாள்.
“மாடிக்கு போகலாமா?”
பூ கேட்டதும் அவளுடன் இருவரும் மாடிக்கு சென்றனர்.
பூ இருள் கவிழும் ஆகாயத்தின் மங்கிய நிறத்தை கண் கொட்டாமல் பார்த்திருக்க… அவியும் ஜென்னும் தலை கவிழ்ந்து தங்களது கோப்பையிலேயே கவனமாக இருந்தனர்.
சிறிது நேரத்தில் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த பூ… பொதுவாக ஆரம்பித்தாள்.
“இங்க தப்பு செய்யாதவங்க அப்படின்னு யாருமே இல்லை. எவ்வளவு தான் நெருக்கமானவங்களாக இருந்தாலும்… ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதல் இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் இடறும். அதை மொத்தமா உறவை முறிச்சிக்கும் காரணியா எடுத்துக்கக் கூடாது.
எனக்கும் வேந்தனுக்கும் நடுவில் பிரிவு வரும்ன்னு எங்களோட இருந்த யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டிங்க. ஆனால் அப்படியிருந்தும் வந்தது.
பிரிவு உறவை பலப்படுத்தும். இதை நான் உணர்ந்து ரொம்ப நாளாச்சு.
வேந்தன் என் மேலிருந்த கோபத்தில் விலகி இருந்தான் தான், ஆனால் விலகளை ஏற்க முடியாம, நடந்ததையே மறந்து திரும்ப என்கிட்ட பழைய மாதிரி இருக்கான். இதற்கு இடையில நாங்க நிறைய பேசிக்கலாம் இல்லை… கடந்த காலத்தில் நடந்ததை எங்க பேச்சில் ஆராய்ந்து… எந்தயிடத்தில் சறுக்கினோம்… இப்போ அடுத்து எப்படி எந்த உறவில் தொடர்ந்து இருக்கணும் தீர்மானிச்சோம். மனதால்.
அன்பு இருக்கும்போது எதுக்கு இந்த தேவையில்லா பிடிவாதம், கோபம்?
உண்மையான அன்பு எது தெரியுமா?
என்ன வேணாலும் நடந்திருக்கட்டும், பல வருஷம் கழிச்சு சந்திக்கும்போது எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமா பேச முடியும். பார்த்ததும் தானா உதடு சிரிக்கும். அது தான் அன்பு.
நானும் வேந்தனும் நேர்ல அப்படியில்லாம இருந்திருக்கலாம் ஆனால் ஒருத்தருக்கொருத்தர் மனசில் சேர்ந்து தான் இருந்தோம்.
வாழ்க்கை நீயா நானா அப்படிங்கிற போட்டி கிடையாது. யாராவது ஒருத்தர் இறங்கி வந்தா இன்னொருத்தர் தானா வந்துதான் ஆகணும். ரெண்டு பேரும் ஜெயித்தாதான் அது காதல்.
நான் இறங்கி வந்தப்பவும் வேந்தன் பார்த்ததும் என்கிட்ட ஓடிவரல, பேசல அவ்வளவு தான். அதுக்காக அவன் என்னை வெறுத்துட்டான்னு சொல்ல முடியாது. யார் முதல்ல பேசறது அப்படிங்கிற ஒரு தயக்கம். அந்த தயக்கத்தை உடைக்க எனக்கு பீவர் வர வேண்டியதாப்போச்சு.
இப்போ உங்களுக்குள்ள இருக்க தடையை போக்க யாருக்கு காய்ச்சல் வரணும்?” என்று சொல்ல வேண்டியதை சொல்லி கேட்க வேண்டியதை கேட்ட பூ இருவரும் பேசிக் கொள்ளட்டுமென்று அவர்களுக்கு தனிமை கொடுத்து கீழ் வந்தாள்.
இப்போது இருவருக்கும் பூ சொல்லிய அதே தயக்கம். அதனை யார் முதலில் தகர்ப்பது என்ற சூழல்.
“அவி…” ஜென்னே உடைத்தாள்.
“என்னை மன்னிச்சிடேன் அவி.”
அவி, பூ சொல்லிய வார்த்தைகளிலேயே கோபத்தை பிடித்து வைப்பதில் எந்தவொரு பலனுமில்லையென உணர்ந்து கொண்டன்.
ஆதலால் இம்முறை ஜென்னின் மன்னிப்பை அவன் உதாசீனப்படுதவில்லை. மாறாக நடந்த நிகழ்வையே மறக்க முயன்றான். முயன்று புறம் தள்ளினான்.
பாரி பூவின் திருமணத்திற்கு பின்பு பாரி, பூ இருவருமே அவி மற்றும் ஜென்னுடன் தொடர்பில் இல்லை.
ஆறு மாதங்களுக்கு பின்,
தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதாக ஜென் கூறிட… அவி தன் தாயுடன் வந்து அவளின் தந்தையை சந்தித்து பேசுவதாகக் கூறி அவளை அனுப்பி வைத்தான்.
அவி அவனது அன்னையுடன் வருவதற்கு முன், தான் பேசி தன்னுடைய தந்தையை சரிகட்டுவோம் என நினைத்த ஜென்… அவளது தந்தை சாமுவேலிடம் காதல் விவகாரத்தைக் கூறிட… மதத்தை காட்டி மறுத்திருந்தாலும் பரவாயில்லை. அவரோ காதலே பெற்றவர்களுக்கு உலகின் பெரிய அரக்கன் என்று குதித்தார். காதலையே வெறுப்பவராக அவரது பேச்சு இருந்தது.
ஜென்னின் பிடிவாதத்தில் சற்று இறங்கி வந்தார்.
அதுவும் “பேசி பார்க்கிறேன் எனக்கு பிடித்தால் மட்டுமே சம்மதம் சொல்வேன்” என்ற நிலையற்ற ஒப்புதலோடு.
ஜென்னிற்கு தந்தை மட்டும் தான். மிகவும் கட்டுப்பாடானவர். எங்கு சென்றாலும் மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்திருக்க வேண்டும். பெண் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர். அப்படித்தான் ஜென்னையும் வளர்த்தார். எதற்கும் தடை. அவருக்கு சரியென படும் விடயங்களை மட்டுமே, ஜென்னின் வாழ்வில் அனுமதிப்பார்.
அப்படிப்பட்டவருக்கு ஜென் காதலென்று வந்து நின்றதை ஏற்கவே முடியவில்லை.
அவரின் முடிவு ‘இல்லை’ என்பது தான். அதனை ஜென்னிடம் முகத்தில் அடித்தார் போல் அவரால் சொல்ல முடியவில்லை.
ஒற்றை மகள் அல்லவா கண்டிப்புடன் வளர்த்திருந்தாலும், அவரும் பாசமிக்க தந்தையே.
கெஞ்சும் மகளை சற்று இளைப்பாற்றவே, நேரில் சந்தித்து பேசுவதாகக் கூறினார்.
நேரத்தையும் இடத்தையும் அவரே தீர்மானித்தார்.
ஜென் அவியிடம் சொல்ல…
“நான் வேலையில் மாட்டிக்கிட்டேன் ஜென். டூ டேஸ் ஆச்சு. இன்னும் வீட்டுக்கு போகல. ப்ரொஜெக்ட் லாஸ்ட் டே. நைட் வீட்டுக்கு போனால் பேசுறேன். இல்லைன்னா நாளைக்கு வீட்டுக்கு போய் அம்மாகிட்ட பேசி, அவங்களை ஒத்துக்க வச்சு கூட்டிவரது முடியாதுன்னு நினைக்கிறேன்.” வேலை அழுத்தத்தில் இருந்தவன் படபடவென்று தன்னிலை விளக்கினான்.
“உன்கிட்ட நான் சொல்லி நாலு நாளாகுது அவி. உனக்கு அப்புறம் நானே எங்கப்பாவிடம் பேசி, அவரை கன்வின்ஸ் பண்ணி இந்த மீட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கேன். நீயென்னடான்னா கூலா இன்னும் பேசவேயில்லைன்னு சொல்லிட்டு இருக்க.” தன்னுடைய காதல் நிறைவேறுமா நிறைவேறாதா. தந்தை சம்மதம் சொல்லவில்லையென்றால் என்ற பயத்தில் இருப்பவளுக்கு அவனிடம் எரிந்து விழத்தான் தோன்றியது. அதே மனநிலையில் அவனிடம் கேள்வியும் கேட்டுவிட்டாள்.
“நான் தான் வேலையில மாட்டிக்கிட்டேன் சொல்றனே ஜென். ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மை சிட்டுவேஷன்” என்று கத்தினான்.
“உனக்கு வேலை தான் முக்கியமா அவி. நான், நம்ம லவ் இல்லையா?”
“வேலையும் முக்கியம் ஜென்.” அழுத்தமாக மொழிந்தான்.
“இப்போ உன்னால வர முடியுமா முடியாதா?”
“நான் நைட் எப்போ வீட்டுக்கு போவன்னு தெரியாது ஜென். மார்னிங் சொல்றேன்.”
……..
பதிலேதும் பேசாது துண்டித்திருந்தாள்.
‘இவளுக்கு மட்டும் தான் லவ் சேரணும் ஆசையா, எனக்கில்லையா?’ என மனதில் அரற்றியவன் வேலையில் கவனமானான்.
இரவு 11 மணி…
“பேசிட்டியா?”
ஜென்னிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது. எடுத்து பார்த்த அவி பதிலேதும் சொல்லாது அலைபேசியை மொத்தமாக அணைத்துப் போட்டான்.
அப்போதுதான் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவன், தனக்கு முன்னிருந்த மேசையில் தலை கவிழ்ந்திட்டான். அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
ஜென் பொறுமையின்றி தன்னை வற்புறுத்துவதாகவே அவனுக்குத் தோன்றியது.
‘தன்னுடைய சூழல் கூட புரிந்துகொள்ளாதவள் என்னை எப்படி காதலித்தாள்?’ அக்கேள்வி மனதில் உதிப்பதை அவனால் தடுக்க இயலவில்லை.
இவ்விடயம் தவிர்த்து அவிக்கும் ஜென்னிற்கும் இத்தனை வருட காதலில் சண்டையென்பதே வந்தது கிடையாது.
அவியை முழுவதும் புரிந்துகொண்டவள் தான் ஜென். அவியும் அவளிடத்தில் அப்படித்தான்.
ஜென்னின் கட்டுப்பாடுகள் அறிந்தவன் தானாக அவளுக்கு அழைப்போ, குறுந்தகவலோ முதலில் அனுப்பிட மாட்டான். அவசரமாக பேச வேண்டுமென்றாலும், குறுந்தகவல் அனுப்பிவிட்டு அவளாக அழைப்பதற்கு காத்திருப்பான்.
மற்ற காதலர்களை போல் தன்னுடைய காதலியுடன் ஊர் சுற்ற வேண்டும், பல இடங்கள் சென்று மணி கணக்கில் கதை பேச வேண்டுமென்று ஆசைகள் எல்லாம் அவிக்கும் உண்டு… இருந்தபோதிலும் அவளுக்காக அனைத்தையும் புரிந்து நடந்து கொள்வான். காரணம் ஜென்னின் தந்தை அவளை ஒரு சொல் தவறாக பேசிவிடக்கூடாது என்பதற்காக.
அப்படி பழகிய அவனை இதில் குறை கூறுவது அவனுக்கு வருத்தமாக இருந்தது.
முதல் சண்டை… அதுவும் அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தில் இணைவதற்காக. அனுபவமில்லாமல் ஓய்ந்து போனான்.
தன்னை சமன் செய்துகொண்ட பின்னரே வீட்டிற்குச் சென்றான்.
அவனுக்கு நன்றாகத் தெரியும். தான் வர தாமதமாகுமென்று சொல்லிய பிறகும் எத்தனை நேரமானாலும் தனக்காக தன் அன்னை காத்திருப்பாரென்று. அவனின் எண்ணம் பொய்யாகவில்லை.
அவனுக்காக அந்நேரம் வரையிலும் காத்திருந்தார்.
“எத்தனை முறை சொன்னாலும் கேட்டக்கூடாதுன்னு இருக்கீங்களா மேகலை?” என்று அவரை முறைத்தவன்,
“இனி லேட்டா வரமாட்டேன்” என்றான் இறங்கிய குரலில்.
அடுத்து அவர் சொல்வது… “நீ சீக்கிரம் வந்தா நான் ஏன் இவ்வளவு நேரம் தூங்காது இருக்கப்போறேன்” என்பதாகத்தான் இருக்கும். அதற்கே அவியின் அந்த பதில்.
“போதும்… போதும்… வேலையில சேர்ந்த நாலு மாசமா இதைத்தான் சொல்லிட்டு இருக்க” என்றவர், “ரெஃபிரஷ் செய்துட்டு வாடா… நீ சாப்பிட்டதும் நான் போய் படுக்கணும்” என்று அவனை விரட்டினார்.
அவி வந்ததும் அவரே அவனுக்கு ஊட்டியும் விட்டார்.
மறுத்தவனிடம், “டிவி பார்த்துக்கிட்டே மணிகணக்கா கொறிச்சிட்டு உட்கார்ந்து இருப்ப… சாப்பிடுடா” என்று அதட்டி ஊட்டி முடித்தார்.
அவருக்கு எல்லாமே அவன் தானே. என்ன தான் அதட்டி, மிரட்டினாலும் அதிலும் அவர் கொண்ட பாசத்தை தான் உணர்வான்.
“ரொம்ப நேரமாச்சு… இப்போதான சாப்பிட்ட ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்திருந்துட்டு போய் தூங்கு. அப்புறம் காலையில ஆபீஸ் கிளம்பும் போது தாம்தூமுன்னு ஆடுவ” என்ற மேகலை தனது அறைக்குள் சென்று படுக்க… அவரின் பின்னே அவி சென்றான்.
“என்னடா என்ன விஷயம்?”
மகனை கண்டு கொண்டவராக வினவினார்.
“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் ம்மா…”
“சரி பேசு.”
“உங்களுக்கு பிடிக்கலன்னா பொறுமையா எடுத்து சொல்லுங்க. கோபப்படக்கூடாது. அப்புறம் உங்களுக்கு பிபி ரெய்ஸ் ஆகிடும். மயக்கம் வந்திடும்” என்றான். அன்னையின் நலனில் அக்கறை கொண்டவனாக.
“எனக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லமா சொல்றியாடா?”
“எனக்கு இருக்கிறது ஒரே அம்மா அதுக்குத்தான்” என்றவன், “டைவர்ட் பண்ணாதம்மா. நானே உன்கிட்ட சொல்ல முடியாம டென்ஸ்ட் ஆகுறேன்” என்றான். அவனது முகத்தில் கலக்கம். தான் சொல்லியதும் அவர் எப்படி ரியாக்ட் செய்வாரென்று.
“அம்மா… நோ சொல்லிட மாட்டியே?”
“மகனே நீ இன்னும் மேட்டரை சொல்லலை?”
“அது வந்தும்மா… எஸ் தான் சொல்லணும் சரியா?”
“டேய் ஒழுங்கா ஓடிடு. எனக்கு தூக்கம் வருது.” அவர் படுக்கையில் சாய்ந்திட… விடாது தடுத்து அமர வைத்தான்.
“கேட்டுட்டு பதில் சொல்லிட்டு தூங்கும்மா.”
“அதுக்கு நீ பர்ஸ்ட் சொல்லணும்.”
“ம்ம்ம்மா…”
“நான் தாண்டா… சொல்லுடா.” விட்டால் அழுது விடுவார் போல். அவரது பாவனை அப்படித்தான் இருந்தது.
“பிடிகலன்னாலும் எனக்காக ஓகே சொல்லிடும்மா?”
“டேய்… மேட்டரை சொல்லிட்டு, அப்புறம் பேசுற டயலாக் எல்லாம் என்ன மேட்டருன்னு சொல்லாமலே பேசிட்டு இருக்கியேடா…?” அவர் கன்னத்திற்கு கையால் முட்டு கொடுத்து கண்களை மூடிக்கொண்டார்.
“அம்மா… தூங்கிடாதம்மா.”
“சொல்லு… இல்லைன்னா எழுந்து போடா!” அதட்டினார்.
“நான் ஒரு பொண்ணை லவ் பண்றேம்மா.” கண்களை இறுக மூடிக்கொண்டு வேகமாக சொல்லிவிட்டான்.
நிமிடங்கள் பல கடந்தும் அவரிடம் எந்தவொரு எதிர்வினையும் இல்லாதிருக்க மெதுவாக கண்களை திறந்தான். மேகலை படுத்து கண்களை மூடியிருந்தார்.
“அம்மா… தூங்கிட்டியா?”
“அம்மா…” கை தொட்டு அசைத்தான்.
“சும்மா… நொம்மா நொம்மா போடாதடா” என்றவர் அவனின் கையை தட்டிவிட்டார்.
“அம்மா எதாவது சொல்லும்மா?”
“என்னடா சொல்லணும்?”
“நான் சொன்னதுக்கு…” நன்கு ராகம் இழுத்தான்.
“பொண்ணு யாரு ஜென் தான! எப்போ அவங்க அப்பாவை சந்திக்கணும்” என்று இலகுவாகக் கேட்டு அவனை அதிர வைத்தார்.
“அம்மா…”
“நான் தாண்டா. மூச்சுக்கு முன்னூறு வாட்டி அம்மா அம்மான்னுட்டே இருக்க. இதுக்காகவே சீக்கிரம் எங்கையாவது போயிடுறேன் இரு.” அவர் சொல்லி முடிக்கு முன்னர் வாயினை கரம் கொண்டு பொத்தினான்.
“அப்படி சொல்லாதம்மா. நீ எங்கையாவது என்னைவிட்டு போயிட்டா நான் தனியா என்ன பண்ணுவேன்.” அத்தனை சோகத்தை முகத்தில் காட்டி கேட்டான்.
“தொல்லை விட்டுச்சுன்னு ஜாலியா இருடா அவி” என்று அவனை மேலும் வெறுப்பேற்றினார்.
“நீயில்லைன்னா நான் என்ன பண்ணணும் இதுவரை நீ சொல்லி கொடுத்ததே இல்லையேம்மா” என்று கன்னம் இறங்கிவிட்ட நீருடன் அவி கேட்டதும் அவனை வாரி அணைத்துக் கொண்டார்.
“நெருப்புன்னு சொன்னால் சுட்டுடுமா அவி. உன்னைவிட்டு அம்மா எங்க போகப்போறேன். தேவையில்லாம நினைத்து ஃபீல் பண்ணாத. ஜென் அப்பாவை எப்போ மீட் பண்ணலாம்?” எனக் கேட்டார். சட்டென்று மகனின் மனநிலையை மாற்ற எண்ணியவராக.
“நாளைக்கு ஈவ்னிங் சர்ச்க்கு வர சொல்லியிருக்கார் ம்மா. ஓக்கேன்னா அப்படியே மேரேஜ்க்கு சர்ச்சில் ரிஜிஸ்டர் பண்ணிடலாம் அப்படின்னு அவங்கப்பா சொன்னதா ஜென் சொன்னாள்” என்றான்.
அதிலேயே சம்மதம் என்றால் எங்க முறைப்படி தான் திருமணம் என்று அவர் மறைமுகமாக சொல்லுவதை மேகலை புரிந்துகொண்டார்.
ஒரே மகன். அவரின் வாழ்வின் மொத்தமும் அவனே. அவனை மட்டுமே பிடிப்பாகக் கொண்டு, அவனுக்காக மட்டுமே வாழ்வை வாழ்ந்தவர். அவரா அவரது மகனின் ஆசைக்கு தடையாக இருந்திடுவார்.
“உன் சந்தோஷம் தான் அவி எனக்கு முக்கியம்” என்றவர் “ஜென் தான் என் மருமகள்” எனக்கூறி அவியை உறங்க அனுப்பி வைத்தார்.
‘நாளை ஜென்னின் அப்பா என்ன பேசினாலும் அதற்கேற்றார் போல் பேசி இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்திட வேண்டும்’ என்ற எண்ணத்தோடு மேகலை உறங்கிப்போனார்.
தன்னுடைய அறைக்கு வந்த அவி அப்போதுதான் அலைபேசியை ஆன் செய்தான்.
ஜென்னிடமிருந்து அத்தனை குறுந்தகவல்கள் குதித்தன.
“என்ன சார் ரிப்பிளையே காணோம்.”
“இன்னும் அம்மாகிட்ட பேசலையா?”
“கால் பண்ணால் ஸ்விட்ச் ஆஃப் வருது?”
“அவ்வளவு தானா?”
“நான் வேண்டாமா உனக்கு?”
“என்னடா கழட்டி விடலாம் முடிவு பண்ணிட்டியா? அதான் ஆஃப் பண்ணி வச்சிட்டியா?”
அவி கோபம் கொள்ளுமளவிற்கு இருந்தன.
ஆனால் அதிலிருக்கும் ஜென்னின் பதற்றம் அவிக்கு நன்கு புரிந்திட… மெல்லிய புன்னகையோடு அந்த குருந்தகவல்களை மேலே தள்ளிவிட்டான்.
“அம்மா ஓகே சொல்லிட்டாங்க. நாளைக்கு மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிடலாம். உன் அப்பா சம்மதிச்சிட்டா!?” என்று அனுப்பியவன் நிம்மதியாக படுக்கையில் விழுந்தான்.
அடுத்த நொடி ஜென்னிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க மேடம்.”
“நிஜமா அம்மா ஓகே சொல்லிட்டாங்களா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“எஸ்.”
“என் அப்பா மட்டும் ஏண்டா இப்படி இருக்கார்?”
“தெரியாது? நீ அவர்கிட்ட தான் கேட்கணும்.”
“ஓகே… ஓகே… நாளைக்கு க்ளீன் ஷேவ் பண்ணிக்கோ. ஃபார்மலா லைட் கலர் ட்ரெஸ் போட்டுக்கோ. கையால முடியை கோதிக்காம, சீப்பு வச்சு படிய வாரிக்கோ. முறுக்கி விட்டிருக்க மீசையை கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்கோ. நாளைக்கு ஒரு நாள் உன் காமெடி சென்ஸை மூட்டைக்கட்டி வச்சிடு. ஹான் அப்புறம் சொன்ன நேரத்துக்கு ஃபிப்டின் மினிட்ஸ் முன்கூட்டியே வந்திடு. பேசாம ஆபீஸ் லீவ் போட்டுடு. இல்லைன்னா வீண் டென்சன் எனக்கு” என்றவளிடம்
“அவ்வளவு தானா?” எனக் கேட்டவன் “உன் அப்பாவையா நான் கல்யாணம் செய்துக்க போறேன்” என்று கிண்டல் செய்தான்.
“அவருக்கு பிடிச்சாதான் கல்யாணம் அவி.” அழுத்தமாகக் கூறினாள்.
அவர்களுக்கென இருப்பது ஒரு உறவு தான். அவர்களின் விருப்பமில்லாமல் செய்து கொள்ளக்கூடாது என்பதில் இருவருமே உறுதியாக இருந்தனர். முதலில் அதை சொல்லியதுமே அவி தான். அதே எண்ணம் ஜென்னின் மனதிலும் அழுந்த பதிந்துவிட்டது. அதனாலேயே தன் தந்தை சரி சொல்லிட வேண்டுமென அவியை அப்படி வா இப்படி வா என்று லிஸ்ட் கூறினாள்.
*****
முதல் நாள் இரவு, விடியலின் போதுதான் அவி உறங்கியிருந்தான். அதுவரை ஜென்னுடன் பேசிக்கொண்டிருந்தான். ஜென் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தான் என்பதே சரியாக இருக்கும்.
காலை பத்து மணிக்கு மேல் தான் அவி எழுந்தான். அப்போதும் சோம்பலாக உடல் அசதியை உணர்ந்தவன் மணியை பார்த்தான்.
“மேகலை இவ்வளவு நேரம் தூங்க விடாதே” என நினைத்தவன், “நைட் லேட்டனதால தூங்க விட்டிருக்கும்” என தானாக சொல்லிக்கொண்டான்.
“அம்மா காலேஜ் போயிருப்பாங்க. ஈவ்னிங் தான ஜென் அப்பாவை பார்க்கணும். இன்னும் கொஞ்சம் தூங்குவோம்” என்றவானாக விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான். இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். அவனது அலைபேசி விடாது சத்தம் எழுப்பி அவனை தூங்காவிடாது தொல்லை செய்ய… முற்றிலும் உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்தான்.
ஜென் தான் அழைத்திருந்தாள்.
“சொல்லு ஜென்?”
“என்னடா சொல்லணும்? கிளம்பிட்டியா?”
“ஹேய் மணி ட்வெல்வ் தாண்டி ஆகுது. ஈவ்னிங் ஃபைவ்க்கு தான மீட்டிங்” என்று அதிர்வாய் வினவினான்.
“எனக்குத் தெரியும் எப்பவும் நீ கடைசி நேரத்தில் சொதப்பிடுவ. அதுக்குத்தான் இப்போவே சொல்றேன்” என்ற ஜென்… “வழக்கம்போல சொதப்பிடாதடா! இட்ஸ் அவர் லைஃப்” என்றதோடு “ஐ லவ் யூ அவி… அவினாஷ்” என அவன் காதலை ஏற்றபோது கூட சொல்லிடாத காதல் வார்த்தைகளை அப்போது கூறினாள்.
“ஜென்…” இன்பமாய் அதிர்ந்தவன் சுதாரித்து “லவ் யூ டூ ஜென்” என்று முடிக்க அவள் அழைப்பை வைத்துவிட்டாள்.
அதன் பின்னர் உற்சாக மனதோடு குளித்து இலகுவான ஆடையுடன் வார்ட்ரோப் பக்கம் வந்தவன், ஜென் சொல்லிய மாதிரி ஒரு ஆடையை தேர்ந்தெடுத்து செல்லும் போது போட்டுக்கொள்வதற்கு தயாராக வைத்தவன், அறையை விட்டு வெளியில் வர வீடே அமைதியாக இருந்தது.
“அம்மா என்ன குக் பண்ணாங்க தெரியலையே… ரொம்ப பசிக்குது” என்றவன் கிச்சன் பக்கம் சென்று பார்க்க… அங்கு காலை சமைத்ததற்கான அறிகுறியே இல்லை… ஹாலிற்கு வந்தவன் கண்ணில் பட்டது மேகலை கல்லூரிக்கு கொண்டு போகும் பையும் புத்தகமும் அங்கிருந்தன.
யோசனையோடு மேகலையின் அறை பக்கம் திரும்பிட… கதவு இரவு அவன் பாதி சாற்றிவிட்டு சென்ற நிலையிலேயே இருந்தது.
மனம் பரபரப்பாக, வேகமாக ஓடிச்சென்று பார்க்க… படுக்கையில் மூர்ச்சையாகி இருந்தார் மேகலை.
“அம்மா” என்று அவரின் அருகில் ஓடியவன் அவரை எழுப்பிட முயற்சிக்க… அவரிடம் சிறு அசைவும் இல்லை. உடல் முழுக்க வியர்த்து இருந்தது ஆடை நனையும் அளவிற்கு.
துரித நிலையில் மேகலையை மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தான். பரிசோதனை செய்த மருத்துவர்… “அட்டாக் வந்திருக்கு. நான்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பே இருக்கலாம்” என்று சொல்லிச் செல்ல அவியின் உலகமே ஸ்தம்பித்து இருண்டுவிட்டது. கற்சிற்பமாய் ஆறுதலுக்கு ஆளின்றி நின்றான் அவினாஷ்.
காலை வழக்கம்போல் எழுந்த மேகலை உடல் என்னவோ போல் அசதியாக இருக்க… அப்படியே படுத்துக்கொண்டார். மீண்டும் எழலாம் என்று அவர் நினைக்கும்போது மணி ஏழை கடந்திருந்தது.
முயற்சித்தவரால் எழ முடியாது போக… இடது கையின் தோள்பட்டையில் ஆரம்பித்த வலி மெல்ல மெல்ல அவரின் இடப்பக்க முதுகு, மார்பென்று பரவியது. உடல் முழுவதும் நொடியில் வியர்த்து வடிந்தது. அவரால் வாய் திறந்து அவியை கூப்பிடக்கூட முடியாது போக… சில நிமிடங்களில் மயக்கத்திற்கு சென்றிருந்தார்.
அவி பார்த்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் பல மணி நேரங்கள் ஆகியிருந்ததால் அவரின் நிலை மிகவும் மோசமாகியிருந்தது.
“காப்பாத்திட முடியுமென்று உறுதியாக சொல்லிட முடியாது.” மருத்துவர் சொல்லிச்செல்ல, அவி நொறுங்கிப்போனான். அவனுக்கென்று இருக்கும் ஒரே ஜீவன். இனி அவருமில்லை என நினைக்கவே அஞ்சினான். மருத்துவமனை என்றும் பாராது கதறினான்.
இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவன் கைகளால் முகம் மூடி அழுகையில் கரைந்தான். உலகிலுள்ள அத்தனை கடவுள்களிடமும் அன்னையை மீட்டுத்தர வேண்டி உயிர் உருகினான்.
அந்நேரம் ஜென்னின் நினைவோ அவளின் அப்பாவை பார்க்க வேண்டும் என்கிற எண்ணமோ சிறிதும் அவனது நினைவில் இல்லை.
பதற்றத்தில் அலைபேசியையும் அவன் கொண்டுவரவில்லை.
மரத்த நிலையில் இருக்கையில் அமர்ந்திருந்தான். அம்மா அம்மா என்று விடாது ஜெபித்தபடி.
சொல்லிய நேரத்திற்கு சர்ச்சிற்கு தந்தையுடன் வந்த ஜென் அவிக்கு எண்ணிக்கையற்ற முறையில் தொடர்பு கொண்டு எடுக்கப்படாது தோற்றாள்.
ஏழு மணி வரை மகளுக்காக பொறுமையாகக் காத்திருந்த சாமுவேல் அதற்கு மேல் முடியாதென கிளம்பிவிட்டார்.
“வரன்னு நம்ப வச்சு ஏமாத்துறவனுக்கு என் பொண்ணை எந்த நம்பிக்கையில் நான் கொடுப்பேன்?”
அவர் கேட்ட கேள்வியில்… அவி அப்படி ஏமாற்றும் ஆளில்லை என்றாலும், அந்நொடி அவரிடம் அதனை கூற ஏனோ வாய் வரவில்லை அவளுக்கு.
“வராமல் இருந்து மறுப்பை காட்டியிருக்காங்க அவியோட அம்மா. இனி நான் இறங்கி வரமாட்டேன்” என்றவர், “என்னோட வர்றியா இல்லை இப்படியே அவனைத்தேடி…”
“அப்பா” என்று அவரது வார்த்தையில் அதிர்ந்தவள் அழும் கண்களை துடைத்துக்கொண்டு அவி மற்றும் அவனது அன்னையின் மீது அக்கணம் எழுந்த மொத்த கோபத்தையும் தன்னுள் அடக்கியவளாக தந்தையுடன் சென்றுவிட்டாள்.
இரவு ஒன்பது மணியளவில் மேகலை இறந்து விட்டதாக மருத்துவர் சொல்ல… மூச்சுவிட மறந்து கீழே சரிந்தான் அவி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
30
+1
+1