அத்தியாயம் 22
அடுத்த இரண்டு நாள் விடுப்பிலும் வீட்டிற்கு மனைவிக்கு தேவையானது என அவளுடன் சென்று பார்த்து, அந்த இடங்களையும் காட்டி என தேவதர்ஷினியுடன் தான் இருந்தான்.
காய்ச்சல் பரவாயில்லை என்றாலும் இன்னுமே அந்த சூழலுக்கு அவள் உடல்நிலை ஒத்துவரவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
“கஷ்டமா இருக்கா தேவா இங்க?” என அவளிடமே கார்த்தி கேட்க,
“இல்லையே த்தான்!” என்றாள்.
“இல்ல கொஞ்ச நாள் ஊர்லயே இருக்கியா?” என அவனே கேட்க,
“அங்க இருந்தா இங்க எப்படி பழகும்? பழகிக்கணும் சொன்னிங்க தானே! பழகிக்குறேன்!” என்றாள் புன்னகைத்து. அதுவே இன்னும் மகிழ்வை கொடுத்தது அவனுக்கும்.
“மனசுக்கு பிடிச்சிருந்தா தான் இடமும் இருக்க சொல்லும். நிஜம் தான்ல!” கார்த்தி கேட்க,
“அதனால தான் இருக்குறேன்னு சொல்றேன்! அதே மாதிரி மனசுக்கு பிடிச்சிருந்தா போக சொல்லவும் தோணாது!” என்றாள் தேவதர்ஷினி.
“நான் உனக்காக தான் சொன்னேன். உன்னை அனுப்பிட்டு நான் மட்டும் என்ன பண்ணிட போறேன்? உன் ஹெல்த் கண்டிஷனும் பார்க்கணும்ல!” என கார்த்தியும் சொல்ல,
“ஹ்ம்! பாத்துக்குறேன் சொல்லி கூட்டிட்டு வந்ததா நியாபகம்!” என்றாள் உதட்டுக்குள் ஒளித்த புன்னகையுடன்.
“பாத்துக்கிட்டா போச்சு!” என்றவன் புருவ உயர்தலும் பார்வையும் என அமைதியாக்கிவிட்டான் தேவாவை.
அந்த இரண்டு நாட்களுமே இருவருக்குள்ளும் ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தது.
அப்போதைக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொள்ள தெரிந்து கொள்ள என பக்கத்தில் இருக்கும் இடங்களை காண்பித்து வீட்டிற்கு தேவையானவற்றையும் கவனித்து என இரண்டு நாட்களும் கொஞ்சம் அமைதியோடும் நிறைவோடும் தான் நகர்ந்திருந்தது.
மூன்றாம் நாள் காலையே எழுந்து கொண்டு கார்த்திக்கு மதியத்திற்கு தேவையான உணவை தயார் செய்து தேவா முடிக்கும் நேரம் அவனுமே எழுந்து வந்துவிட்டான்.
“ஹோம் மேட்?” என கேட்டு புன்னகைத்துவிட்டு அவன் குளிக்க செல்ல, காலை உணவும் தயாராகிவிட்டது.
குளித்து கிளம்பி தயாராகி வந்தவன் சாப்பிட அமர, தேவதர்ஷினி பரிமாறிட ஆரம்பித்தாள்.
இரண்டு வாய் இட்லியை சாப்பிட்டவன் பின் சிரித்துக் கொண்டே சாப்பிட,
“என்னாச்சு?” என்றாள் அவன் சிரிப்பை கவனித்து.
“ம்ம்ஹ்ம்ம்!” என தலையசைத்தாலும் இன்னுமே அவன் சிரிக்க, அவளும் என்னவென்று கேட்காமல் முறைக்க,
“ஒண்ணுமில்ல தேவா! ஊருக்கு வந்தா தான் இந்த மாதிரி மார்னிங் நேரத்துக்கே சாப்பிடுவேன். இங்க எப்பவும் பத்து மணி ஆகும். சில டைம் டீ குடிச்சுட்டு விட்டுடுவேன். மதியத்துக்கு செக்யூரிட்டி அண்ணா சாப்பிட வாங்கிட்டு வந்து குடுப்பாங்க. இனி நானும் லஞ்ச் பாக் தூக்கிட்டு போனும்ல அதை நினைச்சேன்!” என சொல்லி புன்னகைக்க,
“ஏன்? முன்னயும் ரூம்ல தானே இருந்திங்க? சமைக்க மாட்டிங்களா?” என்றாள்.
“ம்ம் சமைப்பேனே! வாரத்துக்கு ரெண்டு நாள். அதுவும் நைட்டு மட்டும்!” என்ற பதிலில் தேவதர்ஷினி முறைக்க,
“மார்னிங் எழுந்து ஓடவே சரியா இருக்கும். இதெல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது. நைட்டுமே வந்து டையார்ட்ல தூங்க தான் தோணும். சோ வரும் போதே பார்சல் வாங்கிட்டு வந்துடுவேன். எப்பவாச்சும் செய்ய தோணினா செய்யுறது தான்!” என விளக்கம் கொடுத்தான்.
“ஆனா இதுவும் நல்லாருக்கு தேவா! நமக்காக வீட்டுல ஒருத்தங்க இருக்காங்கன்ற நினைப்பு” என சொல்லி கண் சிமிட்ட,
“இவ்வளவு நாளும் அப்ப அத்தையை நினைக்கல நீங்க?” என்றாள் அவளும் குறும்பாய் சிரித்தபடி.
“உங்க அத்தையை எவ்வளவோ நானும் இங்க கூப்பிட்டிருக்கேன். ஒரு நாள் வந்தது இல்ல. பின்ன எங்க நினைக்குறது? ஊருக்கு போனா தான் நடக்குறது, தாவுறது, நீந்துறதுனு ஒரே நேரத்துல எல்லாத்தையும் பிளேட்ல வச்சு அன்பு தொல்லை பண்ணுவாங்க” என சொல்லியபடி சாப்பிட்டு எழுந்து கொண்டான்.
அடுத்து அவன் கிளம்பி வந்து அவள் கையில் இருக்கும் மதிய உணவையும் வாங்கிக் கொள்ளும் வரை என்னவோ மனமெல்லாம் பிசைய துவங்கிவிட்டது தேவாவிற்கு.
அதைக் காட்டிக் கொள்ளவும் விருப்பமில்லை. காட்டாமல் இருக்கவும் தெரியவில்லை.
“பிவேர் இல்லை தானே!” என அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தவன்,
“இன்னும் கொஞ்ச நாளானா பழகிடும் தேவா. ஆனா கஷ்டம் தான் இல்ல?” என அவள் முகம் பார்த்து கார்த்திகைசெல்வன் கேட்க, புன்னகைத்தாள்.
“ஓகே! பார்த்துக்கோ! வந்துடுறேன்!” என்றவன் வாசல்வரை செல்ல, தானும் உடன் சென்றாள்.
“ஓகே தானே?” என கேட்கவும் அவள் தலையசைக்க, தானும் தலையசைத்து விடைபெற்றான்.
இனி மாலை வரை தான் மட்டும் என நினைக்கவே மலைப்பாய் இருந்தது. இனி பழகிக் கொள்ள வேண்டும் தான் என்றாலும் சட்டென்று உருவான தனிமையில் கண்கள் கலங்கி வந்தது தேவதர்ஷினிக்கு.
கதவடைத்து வந்த இரண்டு நிமிடங்களில் அழைப்பு மணி சத்தம் கேட்கவும் கண்களை துடைத்துக் கொண்டு வேகமாய் சென்றாள்.
‘எதையும் மறந்து வச்சுட்டு போய்ட்டாங்களோ!’ என்ற எண்ணத்தோடு அவள் சென்று கதவை திறக்க, அவனே தான்.
“என்ன த்தான்?” என அவள் கேட்கும் நேரம் அவள் கண்களையும் கவனித்துவிட்டவன்,
“மறந்துட்டேன் தேவா!” என்றதும் என்னவென்று அவள் பார்க்க, நொடியில் ஒரு சிறு அணைப்பும் கன்னத்து முத்தமும் என அவள் எதிர்பாராத நேரமாய் கொடுத்துவிட்டவன், அவள் சிலையாய் நிற்கும் நேரமே,
“சாரி தேவா! அழாம வெய்ட் பண்ணிட்டு இரு. வந்துடுறேன்!” என அவள் காதில் சொல்லி கன்னம் தட்டி பின் மெல்லமாய் பிரிந்து தானே கதவடைத்து சென்றுவிட, சில நொடிகள் பிடித்தது தேவாவிற்கு தன்னுணர்வு வரவே!.
தலையை உலுக்கிக் கொண்டு மீண்டுமாய் அது தான் நடந்ததா என நினைத்துப் பார்க்க, அவனின் அந்த ரகசிய வார்த்தைகளும் இப்பொழுதும் காதில் கிசுகிசுத்தது.
“உஃப்ப்!” என இன்னுமே அவளால் தெளிய முடியவில்லை. இங்கே வந்தது முதல் சின்ன சின்னதாய் அவளோடு இணைந்து கொள்ள அவன் செய்யும் சேட்டைகள் எல்லாம் என நொடி நேரம் என்றாலும் நினைவுக்கு வந்து முகம் சிவக்க வைத்துவிட்டான் தேவாவை.
அதன்பின் எங்கே தனிமையை நினைத்து வாட என்பதை போல அவன் செய்து வைத்ததில் முகம் முழுதும் மலர்ந்தே இருந்தது அன்று முழுதும்.
இத்தனையெல்லாம் கார்த்தியிடம் எதிர்பார்க்கவில்லை தேவதர்ஷினி. அவ்வபோது அவனாய் நெருங்கும் நேரங்களில் எல்லாம் மனது அத்தனை நிம்மதியாய் உணர்வதையும் மறுக்க முடியாது.
இன்னும் சொல்ல போனால் அந்நேரங்களில் எல்லாம் மொத்தமாய் மனம் மயங்கிய நிலை தான் அவளுக்கு.
கணவன் என நெருங்கும் அந்த நேரங்களில் அவன் தரும் முத்தமும் அணைப்பும் என தேவாவிற்கு அத்தனை இதமான நேரங்கள் தான் அது.
கொஞ்சம் அழுத்தமுடன் அந்த முத்தம் தனக்கு தொடர இருக்குறதோ என நினைக்கும் நேரம் அவனாய் விலகி ஒரு இதமான அணைப்பைக் கொடுத்து உறக்கத்திற்கு செல்லும் அவனை நினைத்து இப்பொழுது சிறு குழப்பமும் தான்.
இதுநாள் வரையும் அவன் அதற்குமேல் தன்னிடம் உரிமை எடுத்துக் கொள்ளவில்லை என்பதில் தானாய் மனம் ஏன் என அலச துவங்கியது.
என்னவாய் இருக்கும் என மனம் எதைஎதையோ நினைக்க துவங்க, ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கே தன் எண்ணப் போக்கில் தலையில் அடித்துக் கொண்டவள், வீட்டிற்கு அழைத்து பேசி தன் எண்ணங்களை திசை திருப்பி இருந்தாள்.
அன்னைக்கும் அத்தைக்கும் என அழைத்து பேசி நேரம் சென்றுவிட, மதியமாய் போனில் அழைத்து சாப்பிட்டாயா என்ற கணவனிடம் சில நிமிடம் பேசவிட்டு என நேரம் சென்று கொண்டே இருக்க, மூன்று மணிக்கு நந்தனின் அன்னை வந்துவிட்டார்.
அவரை வரவேற்று அமர வைத்து பேசிக் கொண்டிருக்க நேரம் நன்றாய் சென்றுவிட்டது.
“நந்தாக்கு பொண்ணு பார்த்துட்டு தான் இருக்கோம் தேவா! இன்னும் மூணு மாசத்துல பண்ணிடணும்னு முடிவுல இருக்கோம்!” என அவரும் பேசிக் கொண்டிருந்தார்.
அவரும் விடைபெற்று செல்லும் நேரம் மணி ஐந்தை தொட, அடுத்து சில வீட்டு வேலைகளை செய்து முடித்து கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தவள் மனமும் மனைவி என்ற இந்த புதுவித அனுபவத்தை எண்ணி சிரித்துக் கொள்ள ஆரம்பித்தது.
நந்தனுடன் கார்த்திகைசெல்வனும் வந்துவிட்டான்.
களைப்பு அதிகமாய் இருந்த போதும் தனக்கென காத்திருக்கும் மனைவியைக் காணும் ஆவலில் புது உற்சாகமும் கூடி இருந்தது கார்த்திகைசெல்வனுக்கு.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு புன்னகை முகமாய் அவள் வரவை எதிர்பார்த்து அவன் காத்து நிற்க, வந்து கதவை திறந்து நின்றவளோ கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுது சிவந்த முகத்துடன் நின்றாள் தேவதர்ஷினி.
மொத்த சிரிப்பும் அங்கேயே நின்று போனது கார்த்திகைசெல்வனுக்கு.
“தேவா?” என கேள்வியாய் அழைத்து உள்ளே வந்து கதவை அடைத்தவன்,
“ஹே! என்னாச்சு?” என கேட்க,
“ம்ம்ஹும்ம்!” என்றவள் இப்பொழுது கொஞ்சம் தெளிந்தது போல முகம் வைத்து சமையலறை செல்ல, எதுவும் புரியாமல் அவள் பின்னேயே வந்தான் கார்த்தியும்.
ஏற்கனவே காய்த்து வைத்திருந்த பாலை சூடு செய்து கொண்டிருந்தவள் கைப்பிடித்து தன் பக்கம் திருப்பி நிறுத்தியவன்,
“தேவா! என்னனு சொல்லு! பக்குன்னு இருக்கு. அஃப்டேர்நூன் கால் பண்ணும் போது கூட நல்லா தானே பேசின?” என்றான்.
கொஞ்சம் படபடப்பும் சேர்ந்து கொண்டது அவனுக்கு. என்னவாய் இருக்கும் என துளியளவும் கண்டு பிடிக்க முடியாமல் கிட்டத்தட்ட பயந்து தான் போனான்.
காலை தான் செய்த செயலின் போது கூட அத்தனை சிவந்த முகத்துடன் தானே நின்றிருந்தாள்? சாப்பிடும் நேரம் அழைக்கும் பொழுதும் வேறெதுவும் வித்தியாசம் தெரியவில்லையே! என நொடிக்குள் ஆயிரம் யோசனைகளுக்கு தாவிவிட்டான்.
“இல்ல இல்ல த்தான்! எதுவுமில்ல!” என்றவள் பால் பொங்குவதைப் பார்த்து திரும்ப, அதை அணைத்தவன்,
“உனக்கு புரியுதா இல்லையா தேவா? என்னனு சொல்லு. வந்ததும் நீ இப்படி நின்னா நான் என்னனு நினைக்குறது?” என்றவன் அப்பொழுது தான் நியாபகம் வந்தவனாய்,
“ஊர்ல இருந்து கால் பண்ணினாங்களா?” என கேட்க, ஆமாம் என்பதாய் தலை ஆடியது தேவாவிற்கு.
“என்னம்மா?” என அத்தனை கனிவாய் அவன் கேட்ட நொடி அவளுக்குமே சோர்ந்து கண்ணீர் வர தயாராக,
“அம்மாக்கு தான் முடியலையாம் த்தான்!” என்றான் அழுதுவிட கூடாது என அழுகையை அடக்கும் குரலில்.
“அத்தைக்கா? ஏன் என்னாச்சு?” என்றவன் உடனே அலைபேசியை எடுத்து பசுபதிக்கு அழைத்துவிட, காபியை கலந்தாள் விசும்பியபடி தேவதர்ஷினி.
‘இதென்ன வாழ்க்கை? அன்னைக்கு முடியாத சமயம் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லையே!’ என ஆற்றாமையும் ஆதங்கமும் என மருக ஆரம்பித்தவள் எண்ணம் புரிய, ஊரில் இருக்கும் நிலவரத்தை கேட்டு தெரிந்து கொண்டான் தேவாவின் கணவனை.
அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் “ஓகே! ஒண்ணுமில்ல! சரியாகிடும்!” என தன் நெஞ்சில் ஏங்கியபடி சாய்ந்த மனைவியை வாஞ்சயாய் வருடிக் கொடுத்தான் கார்த்திகைசெல்வன்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
2
+1
2