Loading

வைடூரியம்:  நவக்கிரகங்களில் இது கேதுவுக்கு உரிய கல்.

வைடூரியத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அணிந்து வந்தால் சளி, கபம் போன்ற தொந்தரவுகள் முற்றிலுமாக நீங்கி விடும். அணிந்தவர்க்கு கம்பீர அழகை தரும். 

அவரை அமைதியா பார்த்த ஈஸ்வர் “ஒரு நிமிஷம்…நீங்க இப்ப சொல்றீங்கனு போய் ஸ்வாமியை அங்கேயிருந்து எடுக்கலாம்….ஆனா அவரை அபகரிக்க சுத்தி பல ஆட்கள் அலைஞ்சுக்கிட்டு இருக்கும் போது அவருக்கு நம்மால என்ன பாதுகாப்பு குடுக்க முடியும்.. அதனால அவர் இருக்கிற இடத்துலயே இருக்கட்டும்” என தீர்மானமாக சொல்ல…

சித்தன்.. “அவரை பாதுகாப்பது ரொம்ப கஷ்டம்.. தான்.. ஆனா.. இப்ப நாம அவரை பார்க்கலைனா.. திரும்ப பார்க்க எத்தனை கோடி வருஷமாகுமோ..” என வேதனையோடு சொல்ல..

மகேந்திரன் “உங்க வேதனை புரியது ஐயா..ஆனா..பாதுகாப்பை யோசிச்சா..பயமா இருக்கே..
அதனால எனக்கும் ஈஸ்வர் சொல்றது தான் சரியா படுது” என முடித்தான்..

ஆளுக்கு ஆள் பேச..சித்தன் அவர்களிடம் பல விஷயங்களை சொல்லி வாதாட..ஈஸ்வரும், மகேந்திரனும் கடைசியில் சித்தனின் வார்த்தையை ஏற்று அவரை தரிசிக்க போகலாம் என சொல்ல.. இப்படி… பேசி பேசியே..மாலை மணி மூன்றாக அரைமணி நேரம் தான் பாக்கி இருந்தது.

வேகமாக கிளம்பின சித்தன் அனைவரையும் அழைத்து கொண்டு ஈஸ்வரின் பூர்வீக வீட்டை அடைந்தார். அங்கு போனதுமே இடிபாடுகளுக்கு இடையே மெல்ல நகர்ந்து கிணற்றடியை அடைந்து விழுந்து வணங்கினார்கள்.

அம்பலவாணன் தன் மனைவியோட மேலேயே நின்று விட, சித்தன், ஈஸ்வர், மகேந்திரன் மட்டும் ஒவ்வொருவராக படிகளில் இறங்கி ஆரம்பித்தனர்.

உள்ளே இறங்கியதும்.. சித்தன் “மெல்ல இறங்குங்க.. கடைசி படில இறங்கி நிற்கும் போது கவனமா  இறங்குங்க..பாசி அதிகமா இருக்கு.. என உத்தரவிட்டு.. நகர்ந்து நின்றார்.

உள்ளே இறங்கியதும்.. அந்த இருட்டில் மெல்ல தேட.. வராஹி இருக்கும் இடம் அவர்களின் கண்களுக்கு புலனானது.

சித்தன் அருகில் சென்று கை கூப்பி வணங்கி வராஹியின் பீடத்தை மெல்ல.. திருப்ப.. அவருக்கு பின்னால் இருவர் நிற்கும் அளவுக்கு ஒரு அறை தெரிய வந்தது.

உள்ளே போனதும்..மெல்லிய குரலில் தேவாரம் பாடியபடி சித்தன் தன் கையோடு கொண்டு வந்த விளக்கை ஏற்றினார். அங்கு ஒரு மேடையின் மேல் ஒரு அழகிய சந்தன பெட்டி வைக்கப்பட்டு இருந்தது அந்த விளக்கின் ஒளியால் தெளிவாக தெரிந்தது.

தன் பக்கத்தில் நின்று இருந்த ஈஸ்வரையும், மகேந்திரனையும் பார்த்து சித்தன்..”அதோ அந்த மேடை மேல இருக்கிற மரப்பெட்டியை நமச்சிவாய மந்திரம் சொல்லி நீங்க ரெண்டு பேரும் திறங்க” என உத்தரவிட்டார்.  

அவர்கள் அந்த பெட்டியை நெருங்கி மெல்ல திறந்ததும்…அன்று தான் வைத்தது போல..வில்வமும் துளசியும் பசுமை மாறாமல், வாசம் துளியும் குறையாமல் இருந்தபடி குறைந்த வெளிச்சத்திலும் ஜெகத்ஜோதியாக நவரத்னேஸ்வரர் காட்சி அளித்தார்.

அவரை கண்களில் நீர் வழிய எல்லாரும் இரு கைகளையும் கூப்பி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள்.

தான் கையோடு கொண்டு வந்த பழங்களை அவருக்கு நைவேத்தியம் செய்த சித்தன்..தீபாராதனை காட்ட..அந்த வெளிச்சம் நவரத்னேஸ்வரர் மேல் பட்டதில் அந்த அறையே..சூரிய வெளிச்சம் வந்ததுபோல ஆனது.

தரிசனம் எல்லாம் திருப்தியாக நடந்து, நைவேத்தியம் செய்து விட்டு சித்தன் அவர்களை நோக்கி “யமகண்டம் வர இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு.. இவரை வெளில தரிசனத்துக்கு கொண்டு  வரலாமா..என்ன செய்யணும்னு நீங்க தான் முடிவெடுத்து சொல்லணும்” என்றார்.

ஈஸ்வரும் மகேந்திரனும் ஒரே குரலில் “இப்ப விட்டால் இனி எத்தனை பிறவிகள் கழிச்சு இவரை பார்க்கணுமோ நீங்க வேதனைபட்டதாலயும், எங்களுக்கும் இவரை தரிசனம் செய்யணும்னுங்கற ஒரு பெரிய ஆசையாலும் தான் வந்தோம்..இதோ இப்ப.. பல ஜென்ம ஆசை தீர..கண் குளிர ஸ்வாமியை தரிசனமும் செய்துட்டோம்..”

“ஏற்கனவே சொன்ன மாதிரி இவரை வெளில தரிசனத்துக்கு வெச்சு பாதுகாப்பு குடுக்கறது ரொம்ப கஷ்டம்…அதனால.. இவரோட இருப்பிடம்..நம்மை தவிர வேற யார்க்கும்  தெரியாமயே போகட்டும்..
இவரோட இருப்பிடம் இங்கயே இருக்கட்டும்” என தீர்மானமாக சொல்லி விட்டனர். .

சித்தன் “இதை தான் நீங்க சொல்லுவீங்கனு நான் எதிர்பார்த்தேன்…அப்படி தான் ஈஸ்வரன் கிருபை இருக்குனா.. அப்படியே நடக்கட்டும்..”

“அவர் இனி தன்னை முதலில் உருவாக்கி, பூஜை செய்தவரை  போய் சேர வேண்டிய நேரம் வந்தாச்சு.. இனி இங்க நாம இருக்க முடியாது…இந்த இடமும் கூடிய சீக்கிரம் மண் மேடாகிடும்..அதனால வேகமா இந்த அறையை மூடிட்டு மேல போகலாம் வாங்க..” என சொல்லி..அங்கிருந்து வெளியே வந்து..வராஹி சிலையை திருப்ப.. கதவு மூடி கொண்டது.

கிணற்றில் இருந்து மெல்ல வெளியே வந்தவர்களை.. கிணற்றுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அம்பலவாணன் தம்பதியர் பார்க்க..”தரிசனம் நல்லபடியா முடிஞ்சது அம்மா” அவர் “இனி அவன் கோயிலை அவனை எழுப்பிப்பான்..அதுக்கான ஆளும் வந்தாச்சு…ம்ம்ம்..இது எல்லாம் அவன் விதிச்சது..அவன் நடத்துற நாடகம்…அவனும் காலத்துக்கு கட்டுப்பட்டவன் தானே..எனக்கு தெளிவா தெரிஞ்சு போச்சு..”

மகேந்திரனும்.. ஈஸ்வரும்.. “ஐயா..கோயில் திரும்ப புதுப்பிச்சு கட்டறது உறுதி..நாங்க அந்த சாமியோட பாதுகாப்புக்காக மட்டும் தான் பயப்படறோம்.. வேற எதுக்கும் இல்லை.. அதனால் நீங்க மனசு வருத்தப்படாம தயவு செய்து எங்களை புரிஞ்சு மன்னிக்கணும்..” என வேண்ட

சித்தன் “உங்களை மன்னிக்க.. நான் யாரு.. நான் ஒரு பரதேசி.. எனக்கு பற்று இல்ல… பற்று இல்லனு சொல்லிட்டு திரிஞ்சேனே.. ஈஸ்வர தரிசனமும் ஒரு பற்று தானே..”

“அதனால என்ன..என் பிறவி பயன் கெடச்சுடுச்சே..” என சந்தோஷம் நிரம்பிய குரலில் சொல்லி விட்டு

அவர்களை பார்த்து “நான் உங்க குடும்பத்தோட காவல்காரனா இருந்த நேரம் இதோட முடிஞ்சு போச்சு…

“நான் இங்கே இருந்து போறத்துக்கு முன்னாடி மகேந்திரனை சரி செஞ்சுட்டு போனேன்னு யார் கேட்டாலும் சொல்லிடுங்க..

“இனி உங்க கண்களுக்கு தெரிய மாட்டேன்..ஆனா ஏதாவது ஆபத்து சமயத்துல என்னை நினைச்சா போதும்.. நான் உடனே அங்க வருவேன்” என சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார்.

அங்கிருந்து கிளம்பியவரை தடுத்து நிறுத்திய உமையாம்பிகை “ஒரு நிமிஷம் ஐயா…அவங்க கேட்டது, நீங்க பதில் சொன்னது, ஸ்வாமியை தரிசனம் செஞ்சது எல்லாம் இருக்கட்டும்..இப்ப நான் கேக்கற ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா” என அமைதியாக கேட்க    

அவரின் கேள்வியை கேட்டு சித்தன் “கேளுமா.. உனக்கு என்ன கேக்கணுமோ.. கேளு.. என்னால பதில் சொல்ல முடிஞ்சா நான் சொல்றேன்” என்றார்.

உமையாம்பிகை “நீங்க பல தலைமுறைகளா எங்க குடும்பத்தை காப்பாத்தினீங்க.. கோயிலையும் எந்த ஆபத்தும் அண்டாம பாத்துக்கிட்டீங்க.. இப்ப எல்லாம் கூடி கோயில் கட்டணும்னு சொல்றப்ப..நீங்க போகலாமா.. இப்ப தானே உங்களோட உதவியும்,ஆதரவும் தேவைப்படும்.. யோசிச்சு ஒரு பதில் சொல்லுங்க..” என கேட்டார்.

சிறிது நேரம் அமைதியாக கடந்தது. அதற்கு பின் சித்தன்..”அம்மாடி.. நானே ஒதுங்கணும்னாலும் அந்த சிவன் என்னை விடல மா..உன் மூலமா.. இங்க இருந்து எல்லாத்தையும் முடிச்சுட்டு வர சொல்றான்..” என்க..

உமையாம்பிகை “அதான் அந்த சிவனே சொல்றார்ல.. நீங்க கும்பாபிஷேகம் நல்லபடியா நடந்து முடியற வரைக்கும் இங்க இருந்து போக மாட்டேன்.. எங்க கூட இங்கயே இருப்பேன்.. எல்லாத்தையும் பார்த்துப்பேன்னு எனக்கு வாக்கு குடுங்க” என அவரை வார்த்தைகளால் மடக்கினார்.

சித்தன் வாய் விட்டு சிரித்தபடி “சரி மா.. நீ சொல்றபடி கும்பாபிஷேகம் முடியற வரைக்கும் நான் இங்க இருந்து பாத்துக்கறேன்..அதுக்கு பிறகு நான் கிளம்பறேன்.. இது என்னோட வாக்கு மா..” என சொல்ல அதை கேட்ட எல்லாருமே சந்தோஷமடைந்தனர்.

9.(பாகம் 2)

எல்லோரும் அங்கிருந்து கிளம்பியதுமே எதோ பெரிய இடி விழுந்தது போல சத்தம் கேட்டு பதற திரும்பி பார்க்க முயன்றவர்களை சித்தன் “ஈஸ்வரனின் புறப்பாடு நடக்கிறது..முதலில் வேட்டு வருகிறது.. அவர் இங்கிருந்து கிளம்பும் நேரம் வந்து விட்டது..யாரும் திரும்பி பார்க்க கூடாது…இது அந்த ஈஸ்வரன் உத்தரவு.. வேகமாக அம்பலம் வீட்டுக்கு போகலாம்..வாங்க” 

 
அம்பைவாணன் வீட்டுக்கு போய் சேர்ந்ததுமே நேராக பூஜையறையில் போய் விழுந்து வணங்கினார்கள். 
 
மெல்ல வந்து அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்ததும் யாரோ வீட்டு வாசல் கதவை தட்டுவது போல சத்தம் கேட்டு அம்பலவாணன் போய் கதவை திறந்தார்.

அங்கு தன் வாழ்க்கையில் அவர் அதுவரை பார்க்காத ஒரு ஆள் நிற்பதை பார்த்தவர்..”யார் நீங்க என்ன.. உங்களுக்கு வேணும்” என்றார்.

அந்த மனிதர் பார்க்க தமிழ் பேசுபவர் போல தெரிந்தார் “வணக்கம்ங்க..என் பேர் நவரத்ன குமார்.. நான் கஷ்மீர்ல இருந்து வரேன்..உள்ள வந்து உட்காரலாமா” என சிறு குழந்தை தடுமாறுவது போல தமிழில் கேட்க…

அம்பலவாணன் யாராவது ஏதாவது ஆராய்ச்சி என வந்திருப்பார்கள் என எண்ணி அவரை வரவேற்று உள்ளே உட்கார வைத்து குடிக்க தண்ணீர் குடுத்தார்.

தண்ணீரை குடித்து நன்றியோடு தம்பளரை திரும்பி குடுத்த நவரத்ன குமார் “நான் ஆர்மில பல வருஷமா வேலை செய்யறேன் சார்…பெரிய போஸ்ட்ல இருக்கேன்..”

“கடந்த சில மாசமா… எனக்கு ஒரு கனவு வருது..அதுல ஒரு கோயில்ல இருக்கிற சாமி எனக்கு தாகமா இருக்கு..
பசிக்குது..எனக்கு இருக்க இடம் இல்லை.. நீ தான் வந்து எனக்கு எல்லாம் செய்யணும்னு சொல்லிட்டே இருப்பார்..
ஆரம்பத்துல அவர் பேசின தமிழ் ஒண்ணுமே புரியல..”

“எங்க வீட்டுல இங்க்லீஷ், ஹிந்தி, குஜராத்தி பேசறதால எனக்கு தமிழ் சரியா பேச தெரியாது.. ஆனா பேசினா புரிஞ்சுப்பேன்” என சொல்ல..

அதில் ஆச்சர்யம் அடைந்த அம்பலவாணன் “எப்டிங்க..உங்க பேர் நவரத்ன குமார்னு சொல்றீங்க.. ஆனா தமிழ் சரியா பேச தெரியாதுனு சொல்றீங்களே.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கே” என சொல்ல…

நவரத்ன குமார் “சொல்றேன்..
எல்லாம் சொல்றேன் சார்..”என சொல்லி..எங்க பூர்வீகம் இந்த ஊர் தான்.. எங்க தாத்தா பேர் முருகேசன்” என அவரை பார்த்து சொல்ல..

உடனே அம்பலவாணன் சில நொடிகள் சிந்தித்து.. எந்த முருகேசன்.. வடநாட்டு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்ட..ராஜப்பா மகனா” என கேட்க..

அவனும் “சரியா சொன்னீங்க… அவரே தான்.. இங்கே இருந்து போய் குஜராத்ல எங்க தாத்தா செட்டில் ஆகிட்டார்..அப்பா..
அத்தை சித்தப்பா எல்லாம் அங்க தான் இருக்காங்க..”

“என்னோட இந்த கனவை பத்தி சொன்னதுமே எங்க தாத்தா அவருக்கு தெரிஞ்சவங்க கிட்ட இதை பத்தி சொல்லி விசாரிக்க ஆரம்பிச்சார்…ஒரு நாள் தற்செயலா.. தாத்தா தன் ப்ரெண்ட் கிட்ட தமிழ்ல நீ இங்க வந்தா தான் நடக்கும்னு சொன்னதை கேட்டேன்..”

“எனக்கு அப்ப தான் எங்க தாத்தாவுக்கு தமிழ் நல்லா பேச தெரியும்னு நினைவுக்கு வந்தது….சாமி பேசறதை நல்லா புரிஞ்சுக்க நான் எங்க தாத்தா கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்… அதுக்கு பிறகு..அவர் தன்னோட நிலையை விளக்கறது எனக்கு தெளிவா புரிஞ்சது” என்றான்.

அதை மெய் சிலிர்க்க கேட்ட அம்பலவாணன் “அப்படியா.. “சிவசிவ” என சொல்லி விட்டு “அதுக்கும் நீங்க வந்ததுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு புரியலயே” என குழப்பமாக கேட்க..

நவரத்ன குமார் “நிறைய பேர் கிட்ட பேசி, நிறைய தேடி பார்த்த போது தான்…அந்த ஈஸ்வரனோட இருப்பிடம் தமிழ்நாடு.. இந்த நவரத்னபுரம்னு தெரிஞ்சது சார்” என்றார்.

அதை கேட்டு அம்பலவாணன் கண்களில் நீர் பெருக..கோயில் கட்ட ஆள் வந்தாச்சு என்ற சித்தனின் வாக்கு பலித்திருப்பதை உணர்ந்தார்.

“இப்ப சில மாசமா..ஒரு கோயில் இடிஞ்சிருக்கிறது.. அங்க நீங்க நிக்கிறது, யார் கிட்டயோ.. அங்க இருக்கிறதை காட்டி பேசறது எனக்கு தெளிவா தெரிய ஆரம்பிச்சது….

இன்னொரு ஆள் உங்க கூட கார்ல வர்றதும் எனக்கு தெரிஞ்சது”என நவரத்ன குமார் தொடர….

அம்பலவாணன் “என்னது.. நானா.. எப்டி” என ஆச்சர்யத்தோடு கேட்க

“ஆமாம்.. நீங்க தான்.. அதுக்கு பிறகு நான் உங்களை தேட ஆரம்பிச்சு.. இப்ப கண்டு பிடிச்சு.. உங்க வீட்டுக்கே வந்துட்டேன்..என்னோட கனவுல வந்த மாதிரி கோயில் இங்க ஏதாவது இருக்கா” என நவரத்ன குமார் ஆவலோடு கேட்க…

அம்பலவாணன்..அவருக்கு தங்களுடைய ஊர் கோயிலை பற்றி, அதனுடைய சிறப்புக்களை நவரத்னேஸ்வர் லிங்கத்தை தவிர்த்து மீதி அனைத்தும்
சொல்லி முடித்தார்.

அப்போது தற்செயலாக அங்கிருந்த போட்டோவை காட்டிய நவரத்ன குமார் “இதோ.. இவர் தான்..இவர் கூட தான் நீங்க பேசிட்டு இருந்தீங்க.. யார் இவர்.. என மகேந்திரனின் போட்டோவை பார்த்து குரல் குடுக்க..

அதை பார்த்து இன்னும் ஆச்சர்யமான அம்பலவாணன் “இந்த போட்டோவா..இதுல இருக்கிறது என் பையன்.. என பதில் சொன்னார்.

“நான் சரியான இடத்துக்கு தான் வந்திருக்கேன்..” என வெகு சந்தோஷத்தோடு நவரத்ன குமார் கண்களில் நீரோடு அம்பலவாணனை பார்த்து கை கூப்பினார்.

அதன் பிறகு கோயில் வேலைகள் மள மள என நடக்க ஆரம்பித்தது. நவரத்ன குமாரின் முயற்சியால் கோயில் கட்ட அரசாங்க அனுமதி எளிதாக கிடைக்க, பூமி பூஜை செய்ய முதல் செங்கல்லை ஈஸ்வரும் மகேந்திரனுமாக சேர்ந்து எடுத்து கொடுக்க.. கோயில் கட்டுவது தெரிந்த பலர் தானாகவே முன் வந்து அம்பலவாணனை தேடி வந்து பணம் குடுக்க..அந்த ஊரை தன் பூர்வீகமாக கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி மீதி இருந்த செலவுகளை ஏற்று கொள்ள, கோயில் மெல்ல எழும்ப ஆரம்பித்தது.

ஈஸ்வர் தன் பாட்டி இருக்கும் இடம் தேடி போய் பார்த்து, தன்னுடைய அம்மா செய்த பெரிய பாவத்தை மன்னித்து, திரும்ப அவரை  வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டான்….

ஆனால் அவர் இனி தனக்கு எல்லாம் ஈஸ்வரன் சேவை மட்டுமே வீட்டுக்கு வந்து தன்னால் ஒன்றி வாழ இயலாது என சொல்லி அனுப்பி விட்டார்.

தன் அம்மா உயிரோடு இருப்பது தெரிந்து அதிர்ந்து போன அவனுடைய அப்பா தானும் நேரில் போய் தன் அம்மாவிடம் மன்றாட அவருக்கு அதே பதில் தான் கிடைத்தது.

கோயில் கட்ட ஆரம்பித்ததுமே ஈஸ்வருடைய அப்பாவின் பென்ஷன் விவகாரங்கள் எந்த தடையும் இல்லாமல் சரியாகி அவருக்கு நிலுவை பணம் வந்து விட்டது. அவனுடைய அம்மாவுக்கும் உடல்நிலை சீராகி போனது.

பக்கத்து வீட்டுக்காரன் தானே முன் வந்து தன் தப்பை ஒத்து கொண்டு ஈஸ்வரின் வீட்டு சுவற்றை கட்டி தர ஒப்பு கொண்டான்.

ஈஸ்வருடைய மனைவியின் கர்ப்பம் தெரிந்த அவனுடைய அம்மா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அதை ஏற்று கொண்டு.. அவளை பத்திரமாக பார்த்து கொள்ள ஆரம்பித்தார்.

கோயில் சித்தனின் ஆலோசனைகளோடு அற்புதமாக முன்பு இருந்ததை போல..ஒன்பது நிலைகளோடு கூடிய ராஜகோபுரம், அதை தாண்டியதும் முதலில் கொடி மரம், அதை அடுத்து பெரிய குளம்.

குளத்துக்குள் ஒரு பெரிய மண்டபம், மண்டபத்தில் முதலில் வினை தீர்த்த விநாயகர் தன் தம்பி பாலமுருகனோடு இணைந்து இருக்க, அடுத்து லஷ்மியோடு வைகுண்ட பெருமாள் இணைந்து காட்சி தர, சப்தகன்னிகள், மகிஷனை சம்ஹாரம் செய்த விஷ்ணு துர்கை, சரஸ்வதியோடு பிரம்மா, சிவகாமியுடன் இணைந்த நடராஜர், நவக்ரஹங்கள், சத்ருசம்ஹார பைரவர், 63 நாயனமார்கள் மற்ற கோஷ்ட தேவதைகள் என எல்லாருக்கும் இருபுறமும் தனி சன்னதிகள் அமைக்கப்பட்டது.

அதை தாண்டியதும் முன்பு சிறிய அளவில் நவரத்னேஸ்வரருக்கு
கருவறை இருந்ததை போலவே..  கருவறை அமைத்து கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கொடி மரம் தவிர குளம், கோயில் கட்டுவதற்கு, அந்த பழைய கோயில் இருந்த கற்களையே வைத்து அமைத்து மீதம் இருந்ததை வைத்து நான்கு புறம் மதில் சுவர்களையும் அமைத்து விட்டனர்.

கோயில் கட்டுவதற்காக இடிபாடுகளை அகற்றும் போது உற்சவ திருமேனிகளும் கிடைத்துவிட.. அந்த விக்கிரகங்களும் அங்கேயே ஸ்தாபனம் செய்யப்பட்டது.

மறுநாள் காலை கும்பாபிஷேகம் என இருந்த போது, அம்பலவாணன் வீட்டில் ஈஸ்வரின் பெண் குழந்தைகள் “தாத்தா.. வாங்க தாத்தா விளையாடலாம்” என அவரை அழைக்க.. அவர் போய் பார்க்க..அங்கு அவருடைய மனைவி, மகன், மருமகள், பேரன் மற்றும் ஈஸ்வரின் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்க கண்டார்.

எல்லாரும் பேசுவது சிரிப்பதுமாக நல்லபடியாக பொழுது போக.. “காலைல சீக்கிரமே கும்பாபிஷேகம் இருக்கு..எல்லாரும் எழுந்துக்கணும்.. போய் தூங்குங்க.. என எல்லாரையும் தூங்க அனுப்பினார்.

மறுநாள் குறித்த நேரத்தில்…கும்பாபிஷேகம் இனிதே நடந்து முடிய.. ஏற்கனவே உமையாம்பிகைக்கு குடுத்த வாக்குப்படி அதோடு தன் கடமை முடிந்தது என சித்தன் அங்கிருந்து கிளம்ப… இதுவரை அவர்களுக்கு பாதுகாப்பு இருந்ததற்கு நன்றி என கூறி அமைதியாக அனைவரும் கை கூப்பினர். அவரை நீர் தளும்ப எல்லாரும் அனுப்பி வைத்தனர்.

ஈஸ்வர் குடும்பத்தினர் இனி அடிக்கடி அங்கு வந்து அவருடைய வீட்டில் தங்கி நவரத்னேஸ்வரரை தரிசனம் செய்வதாக அம்பலவாணனுக்கு வாக்கு குடுத்து விட்டு அங்கிருந்து சந்தோஷமாக கிளம்ப, அம்பலவாணன் குடும்பத்தார் அவர்களையும் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள்…

இந்த கும்பாபிஷேகம் நடந்த அதே நாளில்…. அன்றைய பேப்பரில் எட்டாம் பக்கத்தில் ஒரு பத்தி செய்தியாக திருநெல்வேலி அருகே காரில் பயணம் செய்த மேத்தா என்பவரும் அவருடைய நண்பரும், எதிரில் வந்த தண்ணீர் லாரி மோதி அடையாளம் தெரியாமல் பலி.. என வந்திருந்தது..🙏🙏🙏

(முடிந்தது)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்