Loading

நீலக்கல்: நவக்கிரகங்களில் இது சனிக்கு உரிய கல். 

சனியின் ஆதிக்கம், லக்னத்தில் சனி இருப்பவர் மட்டுமே இந்த கல்லை மோதிரமாக செய்து அணிய வேண்டும். இதை அணிந்து கொண்டால் வாத நோய், சிறுநீர் கோளாறுகள்,கீல் வாதம் ஆகியவை நீங்கும். 

அழும் அம்பலவாணனை ஈஸ்வர் பெரு முயற்சி செய்து சமாதானம் செய்தான்.

ஈஸ்வர் “சார் வயசுல பெரியவர் நீங்க…அழாதீங்க சார்.. உங்களை பாக்கவே பாவமா இருக்கு..” என சொல்லி சமாதானம் செய்ய…

அவரும் சற்று சமாதானம் ஆகி ஓய்ந்து..உட்கார்ந்து இருந்த நாற்காலியில் இருந்து எழுந்து அந்த அறைக்குள்ளேயே சில தடவைகள் நடந்தார்.

சிறிது அமைதிக்கு பின் ஈஸ்வர் “அதுக்கு பிறகு பிரச்சினை எதுவும் இல்லையே.. எல்லாம் சரியாகிடுச்சா சார்” என மெதுவாக கேட்க..

அம்பலவாணன் “அந்த பிரச்சினை எப்டி தம்பி ஓயும்… அது ஓயவே இல்ல தம்பி..
தொடர்ந்துட்டு தான் இருந்தது”

“கோயிலுக்கு சொந்தமான பொருளை எங்க வீட்டுல தான் ஒளிச்சு வெச்சிருக்கறதாக அந்த ஜோசியனுக்கு அருள் வாக்கு வந்ததாம்… அது தவிர அவன் அவனோட குருநாதர் கிட்டயும் கேட்டானாம்.. அவரும் அதையே சொன்னாராம்…”

“என் வீட்டம்மாவோட ஆவேசத்தை நேர்ல பாத்ததால… இது எல்லாத்தையும் அந்த மேத்தா எனக்கு போன் பண்ணி தான் சொன்னான்.. அடிக்கடி அதையே பேசுவான்..நானே வேதனைல இருக்க.. அவனையும் அவன் வார்த்தைகளையும் எங்க காது குடுத்து கேக்கறது..”

“அவனால தான் என் பிள்ளைக்கு பாதிப்பு வந்துடுச்சுனு எனக்கும் தோணிடவே.. நானும் அவனை மதிக்கல..”

“அவன் கிட்டேயிருந்து போன் வந்தாலும் எடுத்து பேசாம அவனை தவிர்க்க ஆரம்பிச்சேன்…”

“அதுக்கு பிறகு நேர்ல வந்தான்.. வந்தவன்…அவன் போன் செஞ்சு நான் எடுக்கலைனா..என்
பையனை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டவே அதுக்கு பயந்து..அவனோட போனை எடுப்பேன்…”

“என் பையன் நடிக்கறதா சொல்லி அடிக்கடி வந்து மிரட்டி சண்டை போட்டான்….”

“அதுக்கு பிறகு” என்ற ஈஸ்வரின் கேள்வியை இடைமறித்து அம்பலவாணன் “ஒரு நாள் வீட்டுல இருந்த என் பையனை ரொம்ப நேரமா காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருந்தோம்..
எங்க தேடியும் கிடைக்கல..ரொம்ப சோர்ந்து போயிட்டோம்”

“அப்ப தான் அந்த கொலை பாதகன் ஆள் வெச்சு அவனை  கடத்திக்கிட்டு போயிருக்கான் தெரிஞ்சது தம்பி…கடத்திட்டு போய் அவனை அடிச்சு,ஒதைச்சு  உண்மையை சொல்ல சொல்லி சித்திரவதை செய்திருக்கான்..”

“நல்ல வேளையா இது யார் மூலமாவோ சித்தனுக்கு தெரிய வர.. சரியான சமயத்துல என்னை அங்க அழைச்சிட்டு போனார்”

“நான் அங்க போனதும் மேத்தாவை பார்த்து..ஏன்யா.. இப்டி பண்ண…எதுக்கு என் பையனை கடத்தின…அவன் என்ன பண்ணான்..”

“நீயும், உன் கூட வந்த அந்த வீணா போன ஜோசியனும் சேந்து ஏதோ பூஜை பண்ணி, அதுல அவனே பிரமை பிடிச்ச மாதிரி இருக்கான்…”

“நீங்க பண்ண இந்த வேலையால..அவனோட பொண்டாட்டியும் குழந்தையும் அவனை விட்டு போயிட்டாங்க.. உங்களால அவன் குடும்பமே சிதைஞ்சிருச்சேனு ரொம்ப கோவமா சண்டை போட்டேன்”.

“அதுக்கு அவன் உன் பையனுக்கு பைத்தியம் இல்ல…பைத்தியம் மாதிரி நடிக்கறான்னு சொன்னான்..”

அதை கேட்டதுமே எனக்கு இன்னும் பயங்கர கோவம் வந்து “அவன் இப்டி தான் அந்த பூஜை பண்ணதுலேந்தே இருக்கான்…
இன்னும் தெளியல.. அப்பப்ப கத்த வேற கத்தறான்…அவனுக்கு நடிக்க என்ன அவசியம் இருக்குனு” கேட்க…

மேத்தா… “உங்க ஊர் கல்வெட்டுல முக்கியமான ஒரு கல்வெட்டு இருக்கே…அது தெரியுமானு புதிர் போட ஆரம்பிச்சான்..”

“எனக்கு எதுவும் புரியாம… அது என்ன முக்கியமான கல்வெட்டுனு கேட்டேன்…”

“அவன்… கோயிலோட முக்கியமான ஒரு பொருள் ஒளிச்சு வெச்சிருக்கு..அதை தேடி எடுக்கறவனை பத்தினு சொன்னான்..”

ஈஸ்வர் வெகு நிதானமாக கேட்கலாமா வேணாமானு யோசித்து “அது என்ன பொருள் சார்” என கேட்பதற்குள்..

“எனக்கு எதுவும் வேணாம்.. நான் அங்க போகணும்னு ஒரு ஆண் குரல் அலறும் சத்தம் கேட்க..”என் கூட வாங்க தம்பி.. வந்து பேசலாம்..” என சொல்லி அங்கிருந்து வேகமாக ஓடி  மாடியறைக்கு போக..அங்கு அவருடைய மனைவியும் மகனும் நின்றிருக்க கண்டார்..

ஈஸ்வர் அவனை பார்த்ததுமே. உமையாம்பிகை அழுது கொண்டே …”பாருங்க தம்பி..என் பையனை மகேந்திரனை பாருங்க.. சில பேரோட பேராசையால என் பையனுக்கு வந்த கதியை பாரு” என சொல்ல ஆரம்பித்தார்.

அவரை தடுத்து அம்பலவாணன் “உமை..அப்படில்லாம்.. இல்லம்மா” என சொல்வதற்குள் “அவரை என் கிட்ட பேச வேணாம்னு சொல்லுங்க” என உமையாம்பிகை கோபமாக முடித்தார்.

ஈஸ்வர் நடப்பதை பார்த்து ஏகப்பட்ட குழப்பமாகி போனது.. நமக்கு பிரச்சினை என ஓரிடம் வந்தால்..அங்க இருக்கும் பிரச்சினையை பார்த்தால் நம்மோட பிரச்சினையே சின்னதாக இருக்கும் போலிருக்கு என நினைத்து கொண்டான்.

அவருடைய மனைவி பெருமுயற்சி செய்து மகேந்திரனை சாப்பிட வைக்க..அவன் சாப்பிட்டதும்  அப்படியே அம்மாவின் மடியில் படுத்து தூங்க ஆரம்பித்தான்.

அவன் தூங்கியதும்.. அங்கிருந்து மெல்ல நகர்ந்த அம்பலவாணன் ஈஸ்வரை தன்னுடைய படிக்கும் அறைக்கு மறுபடியும் அழைத்து வந்தார்.

“பார்த்தீங்கல்ல.. தம்பி.. அவனை.. பல நாட்கள் அமைதியா இருப்பான்.. திடீர்னு ஒரு நாள் இப்படி தான் கத்துவான்… இவன் செய்யற ஆர்ப்பாட்டம் எல்லாத்தையும் பாக்க சகிக்காம..
வேதனையோட அவன் பொண்டாட்டி என் பேரனோட…அவளோட அம்மா வீட்டுலயே இருக்கா..”

“இவனுக்கு கூடிய சீக்கிரம் சரியாகிடும்… அது வரைக்கும் ஒரு பொழுது உப்பு உரைப்பில்லாம…சாப்பிட்டு விரதம் இருனு மருமகளுக்கு யாரோ ஒரு பெரியவர் உபதேசம் செய்ய… அவ …அவங்க அப்பாவோட எதிர்ப்பு எல்லாம் மீறி, அந்த பெரியவரோட வார்த்தைகளை தட்டாம அப்படியே கடை பிடிச்சுட்டு வரா..”

“அதை கேள்வி பட்ட என் வீட்டம்மாவும்..அவ சின்ன பொண்ணு.. அவளே உடம்பை வருத்தி விரதம் இருக்கிறா…. நான் வயசானவ….. நானும் விரதம் இருக்கேன்னு விரதம் இருக்கா..”

“தினமும் மதியம் ஒரு வேளை தான் சாப்பாடு.. அதுவும்
உப்பு, உரைப்பில்லாம..
சாப்பிடறா..அவ சமைச்சு சாப்பிடற அடுப்பை கூட நான் தொட கூடாது”

“அப்ப நீங்க என்ன சாப்பிடுவீங்க சார்” என ஈஸ்வர் கேட்க

அம்பலவாணன் “நான் தனியா ஒரு அடுப்பு வெச்சு  சாதம் வடிச்சு மோர் ஊத்தி சாப்பிட்டுப்பேன்..
ராத்திரிக்கு அதே சாதம் மோர்… தான். மோர் பக்கத்து ஊர்லேந்து வாங்கிட்டு வந்துடுவேன்…”

“வெய்யிலா இருந்தாலும் சரி…கொட்டற மழையா இருந்தாலும்.. இது தான் இந்த ரெண்டு வருஷமா என் சாப்பாடு” என வேதனையோடு சொன்னார்.

ஈஸ்வர் “பாவம் சார் நீங்க.. இதை கேட்கவே கஷ்டமா இருக்கு…எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும்..” என அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு

ஏதோ நினைத்து கொண்டது போல..”அது சரி சார்… நான் இன்னிக்கு தான் இங்க வந்தேன்… நான் வர்றது எப்டி அம்மாக்கு தெரியும்…”

“அதுவும் சாப்பிட வர்றது எப்டி கரெக்டா தெரியும்…நான் ஒரு ஆள் சாப்பிடவா அம்மா ஆப்பம், குழி பணியாரம்னு வகை வகையா செஞ்சாங்க” என ஆச்சர்யத்தோடு கேட்டான்

7.(பாகம் 2)

அம்பலவாணன் “அது எல்லாம் எங்க பையன் மகேந்திரனுக்கும் பிடிச்சது தம்பி.. அவன் தினமும் இதை செய்யணும்னு சொல்வான்….அவனுக்கு பிடிச்சதை தினமும் சாப்பிட்டா.. பையனுக்கு திரும்ப பழைய நியாபகம் வந்துடும் என் வீட்டம்மாக்கு ஒரு நம்பிக்கை.. அதான்..” என சொல்லி தன் கண்களை துடைத்து கொண்டார்.

ஈஸ்வர் “ஓஹோ..அதான் நான் இதெல்லாம் எனக்கு பிடிக்கும்னு சொன்னதும்.. அம்மா அழுதாங்களா” என கேட்டான்.

அவரும்.. “ஆமாம் தம்பி.. அதனால தான் அவ அழுதா” என ஆமோதித்தார்.

அம்பலவாணன் திடீரென  நினைத்து கொண்டது போல “பாத்தீங்களா..தம்பி..இங்க நடந்த ஆர்ப்பாட்டத்துல… நாம பேசிட்டு இருந்ததை பாதியிலயே விட்டுட்டோம்..”என சொல்லி தான் சொன்னதை தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்..

“அந்த பொருளை பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல..” என ஆரம்பித்து சித்தன் ஈஸ்வரிடம்  சொன்ன ஸ்வாமியை ஒளித்து வைத்த விஷயங்ளை ஒன்று விடாமல் அவனிடம் விளக்கி சொன்னார்.

அத்தனையும் கேட்ட பின் ஈஸ்வரருக்கு இது ஏதோ பெரிய விஷயம்..இதை சாதாரண மனிதர்களால் செய்ய முடியாது …எல்லாவற்றையும் அந்த ஈஸ்வரன் தான் முன்னின்று இயக்குகிறான் என தெளிவாக நன்றாக முதன் முறையாக புரிந்தது..தான் தேவையில்லாமல் சித்தனை, அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்ததும் புரிந்தது.. மனசார அவரிடம் மன்னிப்பும் கேட்டான்.

“அந்த மேத்தா என்ன ஆனார்..இப்ப எங்க இருக்கார் சார்” என ஈஸ்வர் ஆவலோடு கேட்க

அம்பலவாணன் “எனக்கு அவன் எங்க இருக்கான்..என்ன செய்யறான்னு எதுவும் தெரியாது தம்பி…இதுவரைக்கும் எந்த தொடர்பும் இல்ல…”

“ஆனா.. அவன் ஆள் வெச்சு என்னை கண்காணிக்கிறது எனக்கு நல்லா தெரியும்..இப்ப கூட நீங்க என் கூட வந்ததை அவனோட ஆள் பார்த்துட்டு தான் போனான்.. இந்த நேரம் அவனுக்கு தகவல்  போயிருக்கும்..”என்றார்.

ஈஸ்வர் “என்ன சார் சொல்றீங்க..என்னை பாத்து தகவல் சொல்லி இருப்பாங்களா” என அதிர்ந்து கேட்க…”

அம்பலவாணன் “ஆமாம் தம்பி..ரொம்ப க்துதுட்டு இருந்ததால…அவனால பொறுத்துக்க முடியாது.. உண்மை என்னனு தெரிஞ்சுக்க சீக்கிரம் வருவான் பாருங்க” என்று சொல்லி கொண்டு இருந்த போது..

மறுபடியும் அவருடைய பையன் மகேந்திரனின் குரல் அதிகமாக கேட்க ஆரம்பித்தது…

அம்பலவாணன் ஈஸ்வரை பார்த்து வேதனையுடன்  “என் பையனுக்கு இன்னிக்கு பேச்சு ரொம்ப அதிகமா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல பேச்சு இன்னும் அதிகமா ஆகும்…அவனை பிடிக்கவே முடியாது.. ரொம்ப திமிறுவான்..”

“உங்களுக்கு பிரச்சினை இல்லனா…சிரமம் பார்க்காம..நீங்களும் என் கூட வந்து அவனை பிடிச்சு கூப்பிட்டு வந்து பூஜையறைல உக்கார வெச்சா போதும்.. கொஞ்சம் கொஞ்சமா அவனோட கொறஞ்சிடும்..அவனும் அமைதியாகிடும்” என வேண்ட

ஈஸ்வர் “சார்.. எனக்கு சிரமம் ஒண்ணுமில்ல.. என் கிட்ட கேட்க இப்டி தயங்காதீங்க..நீங்க உரிமையா கேட்கலாம்..வாங்க போகலாம்” என சொல்லி அவரோடு கிளம்பி..
மாடியறையில் இருந்த மகேந்திரனை தன்னோடு வருமாறு அழைக்க.. அதுவரையில் பேசி கொண்டு இருந்தவன்.. ஈஸ்வரை பார்த்ததும் ஏதும் பேசாமல் அமைதியாக அவனோடு இணைந்து பூஜையறைக்குள் வந்து சேர்ந்தான்.

அவன் அங்கு வந்ததும் வேகமாக வந்த அவனுடைய அம்மா உமையாம்பிகை ஸ்வாமிக்கு முன்பு விளக்கேற்றினார்…

“என்ன மறுபடியும் வம்பு பண்ண ஆரம்பிச்சாச்சா” என்ற சித்தனின் குரலில் திரும்பி அனைவரும் பார்க்க.. அவர் நிதானமாக பூஜையறைக்குள் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டார்.

அம்பலவாணனை பார்த்து..”என்ன அம்பலம்..தம்பியை எந்த ஆபத்தும் இல்லாம.. இங்க அழைச்சிட்டு வந்துட்டியா”

“நடந்த எல்லாத்தையும் இவன் கிட்ட சொல்லிட்ட போலிருக்கு” என தெளிவாக கேட்க

அவரும்..ஆமாம் சாமி.. எனக்கு தெரிஞ்ச வரைக்கும்.. நீங்க சொன்னது எல்லாம் சொல்லிட்டேன்…இனி உங்க பொறுப்பு” என அவரை நோக்கி இரு கைகளையும் கூப்பினார்.

ஒன்றும் புரியாமல் குழப்பமாக பார்த்த.. ஈஸ்வரிடம்.. “என்னடா இவன் அங்க பைத்தியம் மாதிரி நடிச்சான்.. இப்ப தெளிவா இருக்கான்னு ஒரே குழப்பமா இருக்கா..” என சித்தன் கேட்க

ஈஸ்வர் “ஆமாம்” என்று தலையாட்டினான்.

சித்தன் ஈஸ்வரை பார்த்து  “அதிகமா குழம்பாதே பா..நான் தெளிவா.. சொல்றேன்.. கேளு..உன் கிட்ட கோயில்ல வெச்சு நவரத்னேஸ்வரர் பத்தி சொன்னேன்ல்ல…அவரை பலர் வித விதமா தேடறாங்கனு சொன்னேன்ல…”

“அதுல ஒரு ஆள் தான் இந்த மேத்தா.. அவன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்னு பொய் சொல்லிகிட்டு பல கோயில்களுக்கு போவான்..
ஊரை ஏமாத்த சும்மா கல்வெட்டு எல்லாம் பிரதி எடுப்பான்…”

“அங்க இருக்கிற ஸ்வாமிக்கு சாத்தி இருக்கிற நகைகளை மெதுவா நோட்டம் பாப்பான்…கோயில் ஆட்கள் கிட்ட பேச்சு குடுத்து.. தனக்கு தேவையான தகவல்களை சேகரிச்சுப்பான்…சரியான சமயம் கிடைச்சா.. நகைகளை கொள்ளை அடிப்பான்..இல்லனா.. அங்க இருக்கிற விக்கிரகங்களை கடத்துவான்..இது தான் அவனோட முக்கியமான வேலையே”.

“இந்த கோயில்ல.. ஒளிச்சு வெச்சி இருக்கிற ஸ்வாமி மேல இருக்கிற கல் ஒவ்வொண்ணுக்கும் மதிப்பே போட முடியாத அளவுக்கு விலை உயர்ந்ததுனு அவனுக்கு தெரிஞ்சதுமே..அவன் இருபது வருஷமா இந்த ஸ்வாமியை தேடறான்.. அவன் எவ்ளோ முயற்சி செஞ்சாலும் அவனுக்கு எந்த தகவலும் கிடைக்கல…அந்த ஈசனோட அருளால நான் அவனுக்கு தகவல்கள் கிடைக்க விடாம பாத்துக்கிட்டேன்..”

“பல தடவை அவன் முயற்சியை தடுத்த எனக்கு அந்த சித்திரை பௌர்ணமி தடுக்க முடியாம போச்சு..அவனுக்கும் நான் தான் தடுக்கறேன்னு நல்லா தெரியும்”

“என்னை எப்படியாவது இங்கே இருந்து அப்புறப்படுத்தணும்னு நெனச்சான்.. ஆனா முடியல..
அன்னிக்கு.. நான் கொல்லி மலைக்கு போறதை எப்படியோ அந்த ஜோசியன் மூலமா தெரிஞ்சு..அவன் அந்த ஜோசியனை வெச்சு, கோயில்ல மறைச்சு வெச்சது புதையல் தான் னு தப்பா புரிஞ்சுகிட்டு புதையலை கண்டு பிடிக்கற மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்சான்..”

“இந்த தகவல் எனக்கு தெரிய கூடாதுனு அம்பலத்தையும் அவனோட பையனையும் கண் கட்டு செஞ்சிட்டான்….”

“அப்பறம் எப்டி ஐயா நீங்க அங்க சரியான சமயத்துல வந்தீங்க” என ஈஸ்வர் ஆச்சர்யத்தோடு கேட்க…

சித்தன் “உங்க குடும்பம் போல நான் அம்பலத்தோட குடும்பத்துக்கும் காவல்காரன். என்ன உங்களுக்கு என்னோட காவல் தெரியாம.. இவங்களுக்கு தெரிஞ்சு..அவ்ளோ தான்”

“அம்பலத்தையும், அவனோட பிள்ளையையும் கண் கட்டுல இழுத்தவங்க…அம்பலத்தோட பொண்டாட்டியை அவங்க இழுக்க மறந்து போயிட்டாங்க…இல்ல.. அவளை அலட்சியமா நெனச்சுட்டாங்க”

“அவ தான் சரியான நேரத்துல இந்த ஆபத்தை சொல்லி வேண்டவே, என் அப்பன் ஈசனோட ஆணையால சரியா அந்த பூஜை முடியிற நேரத்துக்கு என்னால வர முடிஞ்சது..அவங்களை பூஜையை முடிக்க முடியாம துரத்தி விட முடிஞ்சது…நமசிவாய” என்றார்.

ஈஸ்வர் “சரிங்க..ஐயா..மறுபடியும் எனக்கு ஒரு சந்தேகம்… நான் இவ்ளோ கஷ்டப்படறத்துக்கும்..
என் குடும்பமே..நிலை இல்லாம தடுமாறி நிக்கறதுக்கும், இவரோட பிள்ளை இப்டி சித்த பிரமை வந்து கஷ்டப்படறத்துக்கும்.. என்ன தொடர்பு” என புரியாமல் கேட்க

சித்தனும் சிரித்து கொண்டே “அம்பலத்தோட பையனும் மார்கழி மாசம்.. திருவாதிரை நட்சத்திரத்துல பிறந்தவன்..சிவ கோத்திரம்..இதான் அந்த தொடர்பு” என்றார்.

அதை கேட்ட அதிர்ச்சியில் ஈஸ்வர் வாயடைத்து போனான்.

(ஏழாம் பாகம் முடிந்தது)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்