Loading

.(பாகம்-1)

மரகதம்: நவரத்தினங்களில் இது புதனுக்கு உரிய கல்.

மரகதத்தை அணிந்து கொண்டால் சோம்பல், பசியின்மை, தூக்கமின்மை, கண் நரம்பு, முதுகு தொடர்பான கோளாறுகளை நீக்கும் வல்லமை பெற்றது.

ஈஸ்வர் அவர் சொன்னதை பொறுமையாக கேட்டு.. கடைசியில் அதிர்ந்து போய்.. “இரண்டு பேரும் செத்து போயிட்டாங்கனு சொல்றீங்களே.. பாட்டி சாபம் குடுத்தாங்கனு வேற சொல்றீங்க.. அப்பறம் எப்டி கொள்ளு தாத்தா…எங்க தாத்தானு பரம்பரை வந்தது” என குழப்பமாகவும் அதே சமயம் சித்தன் கோபப்படாத வகையில் கேள்வி எழுப்பினான்.

அதை கேட்டதும் புன்னகை புரிந்த சித்தன்…”இப்ப தான் உனக்கு கொஞ்சமா பொறுமை வந்திருக்கு போலிருக்கே…. சரி மீதியையும் சொல்றேன்.. ஆனா குறுக்க பேச கூடாது” என வழக்கம் போல மிரட்டல் விட்டார்.

அவருடைய மிரட்டலை கேட்டு ஈஸ்வர் குழந்தை போல தன் கை விரல்களால் வாயை மூடி கொண்டான்.

அதை பார்த்தாலும் பார்க்காதது போன்று சித்தன்.. “இது சிரிக்கிற நேரமில்ல..வேதனையான நேரம்” என சொல்லி தன் பேச்சை தொடர்ந்தார்.

“தான் பண்ண வினையால தான் தனக்கு வாரிசே இல்லாம போயிடுச்சுனு நல்லா புரிஞ்சு …
ரொம்ப மனசொடிஞ்சு போய், வேதனைபட்ட உங்க எள்ளு தாத்தா… போய் நின்ன இடம்..தன் மூத்த மனைவியோட அண்ணன் வீடு…”

“அவரும் முகம் சுளிக்காமல் இவரை வரவேற்று எல்லாம் பண்ணார். உங்க எள்ளு தாத்தா ரெண்டு மூணு தடவை போனார். ஆனா எதுவும் பேசாம வந்தார்”

“அதில் ஆச்சர்யம் அடைந்த அவர் மச்சினர்… இவர் ஏதோ மனசுல வெச்சுட்டு தான் அடிக்கடி வரார்னு புரிஞ்சுக்கிட்டார்…”

“அடுத்த தடவை சுந்தரேசன் அங்க போன போது தான் அவரோட தங்கைக்கு பண்ண துரோகத்தால தான் தனக்கு வாரிசு இல்லாம போயிடுச்சு.. தான் அவர் தங்கைக்கு பண்ண துரோகம் நல்லா புரிஞ்சு உணர்ந்து கொண்டதாகவும்..

தன்னை பெரிய மனசு கொண்டு மன்னிச்சு…அவரோட பையன் ஒருத்தனை தனக்கு தத்துகுடுக்க சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டார்…
சொந்தக்காரங்க மூலமாவும் தூது விட்டார்.”

“அவரோட மச்சினரும் அடிக்கடி இவர் பேசறதாலயும், தான் மாறிட்டேன்னு சொல்லி சொன்னதாலயும்  ரொம்ப யோசிச்சு..தன் அம்மா, அப்பா, பொண்டாட்டி, மாமனார் மாமியார்னு எல்லார் கிட்டயும் கேட்டு ரொம்ப போராடி தான் அவங்களோட சம்மதத்தை வாங்கினார்….

“தன் தங்கையை அவர் பாத்துகிட்ட மாதிரி தன் பிள்ளையை பாத்துக்க கூடாது.. அவனை நல்லபடி வெச்சுக்கணும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டு தான் தன்  மூணாவது பையனை தத்து குடுக்க சம்மதிச்சு.. தத்தும் குடுத்தார்”

“தத்து கொண்டு வந்து பின்னால.. அவரும் .. பையன் கிட்ட ரொம்ப பாசமா தான் இருந்தார்….ஆனா
அதுவரைக்கும் அந்த வீட்டில நடந்த எல்லா விஷயமும் அவரோட தத்து பையனுக்கு நல்லா தெரிஞ்சிருந்ததால …அவரோட சொத்துக்களை தொட கூட மாட்டேன்னு சொல்லிட்டார்..”

“கோயில்ல பூஜை பண்றதை மட்டும் தான் ஏத்துக்கிட்டார். அவர் தான் உங்க கொள்ளு தாத்தா ஸ்வாமிநாதன்.”

 
“அவர் எது மேலயும் ஏன் பற்றில்லாம இருந்தார்னு
இப்ப உனக்கு புரிஞ்சிருக்குமே…” என சொல்லி அமைதியாக சிரித்தார்.

“எல்லாம் சரி…ஐயா.. அதுக்கும் எங்க குல தெய்வம் தெரியாததுக்கும், நாங்க கஷ்டப்படறதுக்கும் என்ன சம்பந்தம்” என ஈஸ்வர் கேட்க

சித்தன் “அவனோட படைப்புல எல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் இருக்கும்…உங்க எள்ளு தாத்தா இதே ஊர்… நீ தேடி வந்த அந்த நவரத்னேஸ்வரர் தான் உங்க குல தெய்வம்…”

“இதோ சிதிலமா.. கல்லு எல்லாம் உதிர்ந்து… மண்மேடா இருக்கே.. இது தான் அந்த கோயில்…இந்த கோயில் உன் கையால தான் திரும்ப மக்கள் வழிபாட்டுக்கு வரணும்னு அந்த ஈஸ்வரன் விதிச்சிருக்கான்.. நமச்சிவாய” என்றார்.

“அவர் எங்க குல தெய்வமா..எப்டி.. அதான் எங்க கொள்ளு தாத்தா வேற குடும்பமாச்சே” என ஈஸ்வர் சட்டென்று கேள்வி எழுப்ப

“சரியான கேள்வி தான் கேட்டு இருக்க…ஆனா எப்ப உங்க கொள்ளு தாத்தாவ தத்து குடுத்துட்டாங்களோ .. அப்ப அந்த வீட்டு குல தெய்வம் தான் அவருக்கும்.. அவரோட பரம்பரைக்கு குல தெய்வம்.. குலத்தை காக்கற காவல் தெய்வம் எல்லாம்”

“அது மட்டும் இல்ல.. உன்னால தான் இந்த கோயில் எடுத்து கட்டி கும்பாபிஷேகம் பண்ணணும்ங்கற விதி இருக்குப்பா” என பதில் சொன்னார்.

ஏன் ஐயா… பக்கத்துல இருந்து பாத்த மாதிரி இவ்ளோ தகவல்கள் சொல்றீங்களே…. எங்க என் பேரும்..வந்த நோக்கமும் சொல்லுங்க பாப்போம்” என அவரை யோசனையாக பார்த்தபடி  ஈஸ்வர் கேட்க…

சித்தனும் உடனேயே “அதுக்கென்ன தாராளமா சொல்றேன்… சரியானு கேட்டுட்டு நீ நிதானமா பதில் சொல்லு..” என சொல்லி விட்டு

“உன் பேர் ஸ்வாமிநாதன்…உங்க கொள்ளு தாத்தாவோட பேரு தான் அதுனு தெரியாத உங்கப்பா தனக்கு பையன் பொறந்தா ஸ்வாமி நாதன்னு பேர் வெக்கறதா வேண்டி அந்த ஸ்வாமிமலை முருகனோட அருளால நீ பிறந்ததால அந்த பேர உனக்கு வெச்சான்…ஆனா இப்ப பொழப்புக்காக நீ ஈஸ்வர்னு பேர் மாத்தி வெச்சிருக்க…”

“நீ பிறந்தது..மார்கழி மாசம்… திருவாதிரை நட்சத்திரம்..உன் கோத்திரம் சிவ கோத்திரம்… உன்னை போலவே அந்த ஸ்வாமியை தேடி எடுக்க போற இன்னொருத்தனும்.. அதே கோத்திரம்.. அதே..மாசம்.. அதே நட்சத்திரமா தான் இருப்பான்”

“உன் பொண்டாட்டி வைகாசி கிருத்திகை. உன் பசங்க ரெண்டு பேரும் பெரியாழ்வார் பொண்ணு ஆண்டாள் அவதரிச்ச ஆடி பூரம் சரியா…”

“சாட்சாத் அந்த ஈஸ்வரியே வந்து மாமரத்துக்கு கீழே தவம் பண்ண இடத்துல தான் உன் வாசம்..உன் பொண்டாட்டி பேர் மதுரையை அரசாள்பவளோட பேர்..”

“ரெட்டை பெண் குழந்தைகள்…பெரிய பொண்ணுக்கு நீ இருக்கிற ஊர்ல ஆட்சி செய்யறவளோட பேர் வெச்சிருக்க…சின்னவளுக்கு மயிலா வந்து பூஜை செய்து, ஆட்சி செய்யறவளோட பேர் வெச்சிருக்க..”

“நீ வந்த இங்க காரணம்… உங்கப்பாக்கு பென்ஷன்ல பிரச்சினை உங்கம்மாக்கு என்ன வியாதினே தெரியாம…. தினம் ஒரு ஹாஸ்பிடல்க்கு போயிட்டு இருக்கா…”

“இப்ப உனக்கு உத்யோகத்துல சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினை… இருக்கிற வீட்டுல பிரச்சினை… உன் வீட்டு சுவரை பக்கத்து வீட்டு ஆள் இடிச்சுட்டான்… நீ போய் கேட்டாலும் அவன் அதை
கட்டி தர மாட்டேன்னு தகராறு செய்யறான்…”

 
“இப்ப உன் வீட்டுல ஒரு பக்கம் சுவர் இல்லாம வெறும் திரை தான் இருக்கு..இப்படி உனக்கு பிரச்சினைகள்  அணி வரிசையா இருக்கு”

“இது எல்லாம் தீர்ந்து…நிம்மதியா இருக்க…ஏகம்பன் குடி இருந்து ஆட்சி செய்யற இடத்துல இருக்கிற ஒரு ஜோசியன் கிட்ட போய் கேட்டே.”

“அவன்  உன் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம்  உனக்கு குல தெய்வம் தெரியாதது தான்….இந்த பிரச்சினை தீர்ந்த எல்லாம் சரியாகணும்னா….. உன்னை இங்க வர சொல்லி அனுப்பி இருக்கான்…”

 
“நிறைஞ்ச பௌர்ணமி,
வெள்ளிக்கிழமைல தான் நீ இங்க வரணும்னு அவன் சொல்லி.. அதுக்காக காத்திருந்து.. இன்னிக்கு இங்க வந்திருக்க… என்ன நான் சொல்றது எல்லாம் சரியா”..என சரியாக அவன் விவரங்களை சொன்னார்.

4.(பாகம்-2)

ஈஸ்வர் ஆச்சர்யம் அடைந்து  “நீங்க சொல்றது ரொம்ப சரி… என் பொண்டாட்டி பேர் மீனாட்சி.. பெரிய பொண்ணு பேர் காமாட்சி…சின்னவ பேர் கற்பகம்..”

“எங்கப்பா,அம்மா, வீட்டை பத்தி நீங்க சொன்னது எல்லாமே உண்மை..”

“உண்மையை சொல்லுங்க.. நீங்க யார்…நான் இன்னிக்கு வரப்போறது சரியா எப்டி தெரியும்…இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.. எனக்கு கொழப்பமும்.. சந்தேகமாகவும் இருக்கே” என ஈஸ்வர் பெரும் குழப்பத்தோடு கேள்வி எழுப்பினான்.

சித்தன் “அப்பா… நான் தான் உங்க கொள்ளு தாத்தா ஸ்வாமியை மறைச்சு வெச்சதுக்கு இருக்கிற ஒரே சாட்சி..தன் பரம்பரையை நான் கூடவே இருந்து காப்பாத்தணும்னு அவர் சத்தியம் வாங்கிகிட்டதால….
இதுவரைக்கும் உங்க எல்லா விஷயத்துலயும் மறைவா உங்க கூடவே இருக்கேன்..”

“என்ன ரொம்ப குழம்புதா…. நான் சொல்றதுல உனக்கு சந்தேகமா இருக்கா…. அப்ப ஒண்ணு பண்ணு” என சொல்லாமல் நிறுத்தி அவனை பார்க்க

ஈஸ்வரோ குருவிடம் பாடம் கேட்கும் சிஷ்யனை போல .. அமைதியாக அவரை பாக்க..

சித்தன் “உன் பொண்டாட்டி இப்ப கர்ப்பமா இருக்கா…. இன்னும் வைத்தியர் கிட்ட கூட காட்டாம இருக்கா…இந்த தடவை பையன் பிறந்துடணும்ங்கறது அவளோட வேண்டுதல்”

“போன தடவையே உங்க அம்மா.. பெண் குழந்தைகள் பெத்ததுக்கு அவளை வாய்க்கு வந்தபடி பேசிடவே, இந்த தடவை டாக்டர் கிட்ட காண்பிச்ச பிறகு தான் உங்கம்மா கிட்ட சொல்லணும், அதுவரைக்கும் அவளுக்கு தெரியாம இருக்கணும்னும்… உங்கம்மாவோட வாய்க்கு பயந்து வெளில சொல்லாம இருக்கா” என சொல்ல…

“என்னது.. எனக்கே தெரியாம…என் பொண்டாட்டி கர்ப்பமா…புதுசு, புதுசா கதை சொல்றீங்களே..” என அவரை கேலி செய்ய ஆரம்பித்தான்…

சித்தன் “சரிப்பா..நான் கதை சொல்றவனாவே இருந்துட்டு போறேன்…நீ போன் வெச்சிருக்கல்ல.. உன் பொண்டாட்டிக்கு போன் பண்ணி நான் சொன்னது உண்மையா பொய்யானு கேளு”

“அவ என்ன பதில் சொல்றானு பாக்கலாம்” என சொல்லியபடி அங்கிருந்த சிறு கல்லில் மேல் சித்தன் உட்கார்ந்து கொண்டு அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை பார்க்க ஆரம்பித்தார்.

அவரின் வார்த்தைகளில் பெரிதும் ஆடி போன ஈஸ்வர் உடனே தன் மனைவி மீனாட்சிக்கு போன் செய்தான். போனை எடுத்ததுமே “என்னங்க..நீங்க நல்லபடியா போய் சேந்திங்களா..அந்த கோயில் கண்டுபிடிக்க முடிஞ்சுதா” என கேட்க

அவனும் “ஊருக்கு வந்து சேந்துட்டேன் மீனா… இன்னும் கோயில பத்தி தெரியல.. அதான் விசாரிச்சுட்டு  இருக்கேன்” என அவளுக்கு மழுப்பலாக பதில் சொல்லி விட்டு..

ஈஸ்வர் “மீனா… நான் ஒண்ணு கேப்பேன்.. அதுக்கு மறைக்காம.. உண்மையை சொல்வியா” என கேள்வி கேட்க

மீனாவும் “என்னனு சொல்லுங்க” என்க

ஈஸ்வர் “மீனா…. கேக்கலாமா.. வேணாமானு யோசனையா இருக்கு” என சொல்ல..

அவள் “அட ராமா.. எனக்கு நிறைய வேலை இருக்கு…புதிர் போடாம சொல்றீங்களா” என சலித்து கொண்டே கேட்க

ஈஸ்வர் சட்டென்று “மீனா நீ இப்ப எங்க இருக்கே..எங்கம்மா எங்க” என சம்பந்தமில்லாத கேள்வி கேட்க

அவள் “வேற எங்க இருப்பேன்..வீட்டுல தான் இருக்கேன்.. அம்மாவும் அப்பாவும் யாரையோ பாக்கணும்னு வெளில போயிருக்காங்க.. சாயந்திரம் தான் வருவாங்க..”

“பசங்க ஸ்கூல் போயிருக்காங்க.. நான் மட்டும் தான் இருக்கேன்.. போதுமா” என படபட என்று பேச

ஈஸ்வர் “கொஞ்சம் அமைதியா இரு…மீனா…எனக்கு ஒரு சந்தேகம்… நீ இப்ப கர்ப்பமாவா இருக்கே” என கேட்டு விட்டான்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா… “என்னங்க..என்னாச்சு.. யார் உங்களுக்கு சொன்னா..நான் யார் கிட்டயும் சொல்லலையே.. நீங்க ஊர்லயும் இல்ல…இன்னிக்கு கார்த்தால வரைக்கும் உங்களுக்கு தெரியாத விஷயம்..திடீர்னு எப்படி தெரிஞ்சது” என தொடர் கேள்விகள் எழுப்ப

ஈஸ்வருக்கு உடனே சித்தனிடம் தான் பேசிய வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை குறைய..”மீனா அப்ப..இது உண்மை தானா” என பிசிறடித்த குரலில் கேட்க…

அவள் “ஆமாங்க.. உண்மை தான்.. உங்கம்மாக்கு பயந்து…”என சொல்வதற்குள்..

“எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு… இதுவரைக்கும்… எங்க அம்மா நல்லவனு நெனச்சிருந்ததும்.. பொய்யா போச்சே..”

“அவள பத்தின உண்மை எல்லாம் தோண்ட தோண்ட ஒண்ணு ஒண்ணா வருது” என ஈஸ்வர் மன வேதனையோடு சொல்ல..

“என்னாச்சுங்க” என்ற மீனாவின் கேள்விக்கு சிறிது நேரம் யோசித்து விட்டு..

“மீனா.. நான் இப்ப சொல்றத கேட்டு பதறாத.. பொறுமையா அமைதியா கேக்கணும்.. புரியுதா” என சொல்லி தான் ஊருக்கு வந்தது, வந்ததுமே சித்தனை சந்தித்தது, அவர் சொன்ன விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.

“தன் பாட்டியை அப்பா ஊரில் இல்லாத போது அம்மா வீட்டை விட்டு அனுப்பியது….”

“அவர் திருச்சிக்கு கோயிலுக்கு போன போது, காவேரியில் குளித்த போது, வந்த வெள்ளத்தில் மூழ்கி இறந்து போனதாகவும்… போய் பார்த்து அவரோட உடல் கூட கிடைக்காமல் போனதாக அப்பாவிடம் பொய் சொன்னது… “

“அப்பாவும் அதை உண்மை என நம்பி இன்னும் உயிரோடு  இருக்கும் பாட்டிக்கு திதி கொடுப்பதையும்.. சொன்னான்.”

அம்மா விரட்டிய பின் மனசு வெறுத்து போன பாட்டி ஏதோ ஒரு ஆசிரமத்தில் தங்கி சமையல் வேலை செய்து கொண்டு இருப்பதாகவும்.. சொல்லி முடித்தான்.

அனைத்தையும் கேட்டு அதிர்ந்த மீனாட்சி “என்னங்க.. நீங்க என்ன சொல்றீங்க..இதெல்லாம் உண்மையா” என குரல் நடுங்க கேட்க…

ஈஸ்வர் “ஆமாம் மீனா.. வேதனையான உண்மை… யாரும் தன் அம்மாவை பத்தி தெரிஞ்சுக்கவே கூடாத உண்மை” என வேதனையோடு சொன்னான்.

தொடர்ந்து “எங்கம்மா இவ்ளோ கொடுமைகாரினே இப்ப தான் தெரிஞ்சது… மீனா நீ கர்ப்பமா இருக்கேனு தெரிஞ்சும் சந்தோஷப்படாம.. சந்தோஷத்தை குடுக்காம வேதனை தான் தரேன்..நான் இப்ப சொல்ல போறது இன்னும் வேதனையான விஷயம்..” என்றான்.

மீனா “இதுவே தாங்க முடியலயே…இன்னும் வேதனையான விஷயமா..” என வேதனையான குரலில் சொல்ல..

ஈஸ்வர் “ஆமா மீனா..” என சொல்லி தன் எள்ளு தாத்தா, கொள்ளு தாத்தா, தன் தாத்தாவின் வாழ்வில்
நடந்த அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்ட மீனா..”என்னங்க.. இது உங்க பரம்பரைல இவ்ளோ ரகசியமா இருக்கு” என ஆச்சரியமாக கேட்க..

ஈஸ்வர் “ஆமா.. மா.. அவங்க நிறைய அனுபவிச்சுட்டு போயிட்டாங்க…நாம இன்னும் அனுபவிக்க என்ன என்னலாம் பாக்கி இருக்கோ தெரியலயே..” என சொல்லி கொண்டே இருக்கும் போது வேகமாக தன் பக்கத்து வந்து நிறுத்திய காரில் இருந்து “யாருங்க அது…ஊருக்கு புதுசா” என்ற சத்தம் கேட்டு “நான் உன்னை அப்பறம் கூப்பிடறேன்” என சொல்லி மீனாவின் போனை துண்டித்தான்.

அவன் திரும்பி பார்க்க… காரில்  வெள்ளை சட்டை போட்டிருந்த இருந்த ஒருவரை பார்த்தான்.

அங்கு நின்று கொண்டு இருந்த சித்தனை பார்த்த அந்த மனிதர் “ச்சே.. வர வர ஊர்ல பைத்தியங்களோட தொல்லை அதிகமா ஆகிடுச்சு.. நிம்மதியாவே நடமாட முடியல” என சலித்து கொண்டான்.

அதை கேட்டு கோபமான ஈஸ்வர் “யார்ங்க நீங்க.. திடீர்னு வந்தீங்க.. நல்லா பேசிட்டு இருந்தவரை பார்த்து பைத்தியம் னு சொல்றீங்க” என கோபமாக கேட்டான்

(நான்காம் பாகம் முடிந்தது)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்