Loading

பவளம்: நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய கல்.
பவளத்தை அணிந்து கொண்டால் வலிப்பு நோய், குடலிறக்கம், மகப்பேறின்மை, கல்லீரல் கோளாறுகள் நீங்கும். நல்ல கம்பீரமான அழகை தரும்.
 
“ஜமீன்தார் இங்க இருந்து கிளம்பின அன்னிக்கு ராத்திரியே ஊர் அடங்கினதும்… ஜமீன்தாரோட பையனும் உங்க கொள்ளு தாத்தாவுமா சேர்ந்து அந்த ஸ்வாமியை எங்கயோ மறைச்சு வெச்சுட்டாங்க”
 
“என்னது.. எங்க கொள்ளு தாத்தா மறைச்சு வெச்சுட்டாரா.. சரி..அப்ப யார் அந்த ஸ்வாமியை திரும்ப கண்டுபிடிப்பாங்களாம்..” என ஏளனமாக ஈஸ்வர் கேட்க..
 
அவனுடைய வார்த்தைகளில் பெரும் கோபமடைந்த சித்தன் “உனக்கு இவ்வளவு பேச்சும், திமிரும் ஆகாது..வயசானா அதுக்கான பக்குவம் வரணும்..”
 
“உன் கிட்ட அந்த பக்குவம் இல்லாததால இனி உன் கிட்ட மேற்கொண்டு விஷயங்களை சொல்ல.. எனக்கு விருப்பம் இல்லை… என சொல்லி விட்டு வேகமாக கிளம்பினார்.
 
அவரின் கோபத்தை கண்ட ஈஸ்வருக்கு அப்போது தான் செய்த தப்பு உறைக்க.. சட்டென்று ஓடி அவர் முன்னால் நின்று..
இரு கைகளையும் கூப்பி “நான் விளையாட்டுதனமா சொல்லிட்டேன்..தயவு செய்து என்னோட பேச்சை பெரிசா எடுத்துக்காதீங்க..”
 
“மீதி விஷயங்களை தெரிஞ்சு என் பிரச்சினைகளை சரி பண்ணணும்னு ஆவலா இருக்கேன்.. இனி இது போல நடுவில… இல்ல உங்கள கோவப்படுத்தாம அமைதியா நீங்க சொல்றத எல்லாம் கேக்கறேன்…என்னை மன்னிச்சுக்கோங்க..” என வேண்டினான்.
 
சித்தன் “ஏற்கனவே நீ இதே போல தான் செஞ்சுட்டு இருக்க.. நானும் பொறுமையா இருந்தேன்.. இப்ப என் பொறுமை கடந்து போயாச்சு.. உனக்கே அக்கறை இல்லேனா.. நான் ஏன் உனக்காக அக்கறைபடணும்”என அலட்சிய குரலில் சொல்ல..
 
ஈஸ்வர் “ஐயா நான் பண்ணது தப்பு தான்.. தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க..”என மறுபடியும் வேண்டினான்..
 
அதில் கொஞ்சம் கோபம் குறைந்த சித்தன்.. “அடுத்த தடவை இது போல நடந்தா அவ்வளவு தான்.. நான் என் வழியை பாத்துட்டு போயிட்டே இருப்பேன்.. என அவனை மிரட்டி விட்டு..
 
“அப்ப உங்க கொள்ளு தாத்தா எப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உன்னை மறைச்சு வெக்கறோமோ.. அதே மாதிரி எங்க பரம்பரை ஆட்கள் ரெண்டு பேருமா சேர்த்து வந்து தேடினால் தான் உன்னை கண்டு பிடிச்சு எடுத்து பூஜை பண்ண முடியும்..”
 
“அதுவரைக்கும் நீ இருக்கிற இடத்தை யார்க்கும் காண்பிச்சுக்க கூடாதுனு இந்த ஸ்வாமிக்கு கற்பூரம் காட்டி சத்தியம் செஞ்சு ஒளிச்சு வெச்சாங்க..”
 
“உடனே அன்னைக்கே உங்க கொள்ளு தாத்தாவும் இங்கிருந்து கிளம்பி காசிக்கு போய் ஜலசமாதி ஆகிட்டார்” என சொல்லி முடித்தார். 
 
“உங்க கொள்ளு தாத்தா கிளம்பினதுமே.. பிடிச்ச அடை மழையில அவரோட வீடு, கிணறு இருந்த பகுதி தவிர மீதி எல்லா இடமும் இடிஞ்சு கீழ விழுந்திருச்சு..”
 
“என்னது வீடு இடிஞ்சிருச்சா”..என அதிர்ச்சி அடைந்த ஈஸ்வர் சற்று பொறுத்து “அருவில குளிக்க போன ஜமீன்தார் திரும்பி வந்து அந்த ஸ்வாமியை கண்டுபிடிச்சு தன் அரண்மனைக்கு எடுத்துட்டு போயிட்டாரா” என ஆவலோடு ஈஸ்வர் கேட்க
 
அதற்கு ஒரு மர்ம சிரிப்பு சிரித்து விட்டு “எங்க ஜமீன்தார் திரும்ப வந்தார்…அருவில குளிக்கும் போது கல்லுல இருந்த பாசில கால் இடறி தண்ணில விழுந்து இறந்துட்டார்..”
 
“அடடா.. அவர் இறந்துட்டாரா” என சொல்லி.. மேலும் பேச வாய் திறந்த ஈஸ்வர் சித்தனின் பார்வையை கண்டு வாயை மூடி கொண்டான்.
 
சித்தன் “கடைசி காரியம் செய்ய அவரோட உடம்பை ஆள் வெச்சு பல நாட்கள் தேடியும் கிடைக்கல..”
 
“அவர் உடலே கிடைக்காம..
அப்டியே தான் அவருக்கு காரியம் செஞ்சான்.. அவரோட பையன் மகேந்திரன்…அவன் தன் அப்பா போனதுக்கு கூட அழல.. அவர் அவ்ளோ பெரிய கொடுமைகாரர்”
 
“கடைசில.. சில மாசம் கழிச்சு.. அவர் பண்ண பாவங்களுக்கு பலனா இதே ஊர் ஆத்தங்கரைல…
மீன்கள் கடிச்சு குதறி, யார்னே அடையாளமே தெரியாம அவரோட உடம்பு வந்து ஒதுங்கிச்சு..”
 
“இங்க வந்து கரை ஒதுங்கின அனாதை பிணத்தை ஜமீன்தாரோட வம்சம் தான் கொள்ளி வெக்கணும்னு சட்டம் இருந்ததால…அவரோட பையன் மகேந்திர பூபதி தான் எரியூட்டினான்..”
 
“கொள்ளி வெக்கறத்துக்கு முன்னாடி, அந்த உடம்பை குளிப்பாட்டும் போது, அவரோட நடு முதுகுல இருந்த மச்சத்தை வெச்சு தான் அது ஜமீன்தார்னே எல்லார்க்கும் தெரிஞ்சது…”
 
“அப்ப மகேந்திரன் தான் அவருக்கு கொள்ளி வெச்சாரா..” என இடைமறித்து ஈஸ்வர் கேட்க..
 
அவனுடைய அவசர புத்தி குணத்தை புரிந்து சித்தனும் “என்ன பண்றது அவரோட உடம்புக்கு மகேந்திரன் தான் கொள்ளி வெச்சான்..ஆனா அவன் இந்த உடம்பு மொதல்ல யார்னே தெரியாம கரை ஒதுங்கினதால..நான் அப்பாங்கற ஸ்தானத்த தந்து கொள்ளி வெக்க மாட்டேன்”
 
“அனாதை பொணம்னு சொல்லி தான் கொள்ளி வெப்பேன்னு தீர்மானமா சொல்லிட்டு.. யார் சொல்லியும் கேக்காம.. தான் சொன்னபடியே செஞ்சான்..”
 
“ஊரை அடிச்சு.. மிரட்டி சொத்து சேர்ந்து ஆடம்பரமா வாழ்ந்தவரோட கதி கடைசில அனாதை பொணம்னு ஆகிடுச்சு..”
 
“சிவனோட சொத்தை தான் அனுபவிக்கணும், அதை தன் சொந்தமாக்கணும்னு தீவிரமா நெனச்சதால தான் தன்னோட அப்பா இறந்துட்டார்னு மகேந்திர பூபதி பலமா நம்பினான்..
 
“அவர் இறந்த பிறகு தான் அவர்  சட்ட விரோதமா நிறைய பணத்தை பதுக்கி வெச்சிருக்கறது, அவரோட நிழலான நடவடிக்கைகள் என எல்லாம் அவரோட அடியாட்கள் மூலம் தெரிஞ்சுகிட்டான்.”
 
“எல்லாம் தெரிஞ்சு ரொம்ப அதிர்ந்து போன மகேந்திரன்..
அதுக்கு பிறகு நேர் வழியில சம்பாதிக்காத பணம் தனக்கு தேவை இல்லனு சொல்லிட்டு தன் அப்பாவால பாதிக்கப்பட்டவங்கள எல்லாம் கூப்பிட்டு அவங்களோட பணம், நகை, சொத்து என எல்லாத்தையும் திருப்பி குடுத்துட்டான்…”
 
“தன் அப்பா பண்ண தப்பை மறந்து…தன்னையும் தன் குடும்பத்தையும் மன்னிக்கணும்.. இனி என் தலைமுறைகள் நல்லா இருக்கணும்னு அவங்கள மனசார வாழ்த்த சொன்னான்” 
 
“அதுக்கு அவனோட அம்மா, பொண்டாட்டி எல்லாம் முழு மனசா ஆதரவா இருந்தாங்க…
இந்த சம்பவத்துக்கு பிறகு தன்னோட பூர்வீக சொத்தை எல்லாம் கூட இந்த ஊருக்கு தானம் பண்ணிட்டான்.”
 
“இதை ஊர்ல அவங்க அம்மாவோட பிறந்த வீட்டு சீதனமா வந்த தென்னந்தோப்புல இருந்த ஓட்டு வீட்டுல தான் கடைசி காலம் வரைக்கும் இருந்தான்…”
 
“அவன் காலத்துக்கு முடிஞ்ச பின்னாடி அவரோட வாரிசுகள் எங்க போனாங்க..என்ன ஆனாங்கனு யார்க்கும் தெரியல” என சோகமாக முடித்தார்.
 
சிறிது அமைதிக்கு பின் ஈஸ்வர் “அப்பறம்…அந்த ஸ்வாமி இருக்கிறது யார்க்குமே தெரியாமயே போச்சா..அவரை தேடி யாரும் வரலையா..அவரை கண்டுபிடிக்கவே முடியலையா..” என தொடர்ந்து கேள்வி கேட்க 
 
சித்தன் “அது எப்டி பா தெரியாம போகும்.. வெளிச்சத்தை எத்தனை துணி கொண்டு மறைக்க முடியும்… அந்த ஈஸ்வரன் முழுக்கவே வெளிச்சமா இருக்கிறவர்… அவரை எல்லாரும் மறந்துடுவாங்களா..
சொல்லு” என புதிராக கேள்வி கேட்டார்.
 

 

(பாகம்-2)
 
 “நவரத்னேஸ்வரரை வெச்சு பூஜை பண்ணா சேராத செல்வம் தேடி வரும்னு சில பேர்…அவரோட திருமேனில இருக்கிற அந்த நவரத்ன கல்லுக்காக பல பேர் அவரை தேடி வருஷ கணக்கா அலையறாங்க..”
 
“இந்த உண்மை நெறைய பேர்க்கு தெரிஞ்சு…அவரை தேடி பலர் இந்த ஊருக்கு வந்தாங்க..பல இடத்துல தேடி பாத்தாங்க…ஆனா யாரும் உயிரோட திரும்ப போகல..”
 
“கடைசியா போய் தேடினவன்.. அவர் இருக்கிற இடத்தை தான் கண்டுபிடிச்சுட்டதாகவும்…அடுத்த நாள் வெளியில அவரை எடுத்து வர போவதாகவும் சொல்லிட்டு போய் படுத்தவனுக்கு… காலைல கண் முழிச்சு பார்த்தா.. கண்ணே தெரியாம போச்சு.”
 
“அவரை கண்டுபிடிச்சு எடுக்க போறவன்ல ஒருத்தன் வெள்ளிகிழமை,நெறஞ்ச பௌர்ணமில சுக்ரஹோரைல இந்த ஊரை தேடி வருவான்னு கோயில் சுவடில எழுதி இருக்கற விஷயம் தெரிஞ்சு பலர் அந்த நாள்ல இந்த ஊரை சுத்தி சுத்தி வராங்க..”
 
“இப்ப அதுக்கான சரியான ஆள்ல ஒருத்தனா நீ வந்திருக்க…
அடுத்தவன் எங்க இருக்கானோ..
எப்ப வருவானோ..இங்க..என்ன நடக்க போகுதோ” என பீடிகை போட…
 
ஈஸ்வர் “இத பாருங்க பெரியவரே…என்ன பெருசா நடந்துடும்…ஆள் வெச்சு மிரட்டுவாங்க..அவ்ளோ தானே…
ஏதாவது பிரச்னைனா கம்ப்ளையின்ட் பண்ணா காப்பாத்த போலீஸ் இருக்கு… கோர்ட் இருக்கு” என்க
 
சித்தன் “சரிப்பா.. ஆனா உன் பாதிப்பே வெளில தெரியலனா.. எப்படி போலீஸ் வரும்” என சிரித்தபடி அவனை மடக்க..
 
அதை கேட்டு வார்த்தை வராமல் போன ஈஸ்வர்.. சில நிமிடங்களுக்கு பின்.. “பெரியவரே..என்னை ஏன் வந்ததுலிருந்து குழப்பிக்கிட்டே இருக்கீங்க.. உங்களுக்கு எனக்கும் என்ன இருக்கு…தயவு செய்து என் கோவத்தை கிளறாதீங்க.. சொல்லிட்டேன்…”
 
“நானும் இங்க வந்ததுலிருந்து இங்க ஒரு ஆள் கூட தென்படலை..நீங்க தான் பேச்சு துணைக்கு இருக்கீங்க….
 
“அதனால பேச்சை மாத்தாம…ஏதோ எள்ளு தாத்தானு சொன்னீங்களே..
அந்த கதையை சொல்லுங்க கேப்போம்..எனக்கும் நல்லா பொழுது போகும்..” என கேலியாக சொல்ல…
 
சித்தன் “இது கேலி செய்யற சமாச்சாரம் இல்லப்பா… கதையும் இல்ல…உங்க குடும்பத்தோட நிலைமைக்கு காரணமான விதை…சொல்றேன்.. குறுக்க பேசாம காது குடுத்து பொறுமையா கேளு” என சொல்லி விட்டு
 
“உங்க எள்ளு தாத்தாவும் பெரிய பண்டிதர்.. ஊருக்கே புத்தி சொல்ற அளவுக்கு விஷயங்கள் தெரிஞ்சவர்….ஊர்ல தகராறுன்னா..இவர் போய் தான் மத்தியஸ்தம் செய்வார்.. எல்லாரும் அவரோட வார்த்தைகளை கேட்பாங்க.. அவ்ளோ மரியாதை “
 
“சாஸ்திரங்கள் தெரிஞ்சவர்.. பனாரஸ்ல வருஷா வருஷம் நடக்கற வேத சதஸ்ல கலந்துப்பார்…”
 
“எல்லார் கிட்டயும் கௌரவமா…மரியாதையா நடந்துப்பார்…வீடு எல்லா விதத்திலும் நிறைஞ்சு இருந்ததது”
 
“அவரோட பொண்டாட்டி மஞ்சள் பூசின முகமும், நெத்தில பெரிய குங்கும பொட்டும், கொண்டைல பூவும், கால்ல கொலுசோட மங்களகரமா அந்த அம்பாளே நேர்ல வந்த மாதிரி இருப்பா..”
 
“எல்லாம் நிறைஞ்சு இருந்தும் உன் எள்ளு தாத்தாக்கு தன் மொதல் பொண்டாட்டி அழகா இல்லனு ஏகப்பட்ட குறை…..எப்ப பாரு அவளை திட்டறது, எல்லார் எதிர்க்கயும் அவமானம் செய்யறதுனு இருப்பார்”
 
“அவளும் என்னிக்காவது மனசு மாறுவார்… தனக்கு நல்ல காலம் வரும்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா…”
 
“ஆனா உங்க எள்ளு தாத்தா தன் பொண்டாட்டி கண் எதிரேயே …அவ கையாலேயே தாலி எடுத்து குடுக்க சொல்லி பேரழகியான ஒருத்திய ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுண்டார்”
 
“எல்லாத்துக்கும் மேல வீட்டுக்கு வந்ததும்… அவ கையாலேயே ஆரத்தி எடுக்க சொல்ல…அவளும் பாவம் தன் வேதனையை மறைச்சுக்கிட்டு..தன் புருஷனுக்காக அதையும் செஞ்சா”
 
“புதுசா வந்தவ வீட்டுக்குள்ள வந்ததுமே.. மூத்தாளை நீ உயிரோட இருக்கிற வரைக்கும் பின்கட்டுல தான் இருக்கணும்னு சொல்லி ஆங்காரமா சிரிச்சுட்டு…இனி எந்த காலத்துலயும் புருஷனை பாக்க கூடாது…பேச கூடாது…வீட்டு வாசல் பக்கம் வரவே கூடாதுனு உத்தரவு போட்டா….அதை கேட்ட உங்க எள்ளு தாத்தா ஏன் அப்டி சொல்றனு கூட அவளை எதுவும் எதிர்த்து ஒரு கேள்வி கூட
கேட்கல…இத்தனைக்கும் அந்த வீடு அவர் மூத்தாளோட பிறந்த வீட்டு சீர்.. “
 
“அவ பாவம்…அதை கேட்டு… எதிர்த்து பேச…சண்டை பெரிசாகி… அவ புருஷன் தன் ரெண்டாவது பொண்டாட்டி சொல்றதை கேட்டு நடந்தா தான் இங்க இருக்கலாம்னு தீர்மானமா சொல்லிட்டார்”
 
“தான் பாசம் வெச்ச புருஷன் கூட தன்னை கைவிட்டுட்டாரே…இனி எதுக்கு இந்த வாழ்க்கைனு
வேதனை தாங்க முடியாம… வீட்டுக்கு பின்னால இருந்த கிணத்துல குதிச்சுட்டா”
 
“பக்கத்து வீட்டுல இருந்தவங்க..அவ குதிக்கறதை  உடனே பார்த்துடவே.. வேகமா ஓடி வந்து கிணத்துல இறங்கி அவளை வெளில தூக்கிட்டு வந்துட்டாலும்… பின் மண்டைல அடிபட்டதால… அவ பொழைக்கல”
 
“அவ சாகற நேரத்துல கூட..கடைசி ஆசையா.. தன் புருஷனோட முகத்தை பாக்கணும்னு கெஞ்சினா…அழுதா..”
 
“ஆனா புதுசா கல்யாணம் செஞ்சுட்டு வந்தவ..அவ சொன்ன எதுக்கும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டல..கடைசி வரைக்கும் அவ புருஷனை பாக்க விடல..அவரும் பொண்டாட்டி தன்னை எதிர்த்து பேசின கோவத்துல அவளை பாக்க வரல”
 
“அதுல வேதனை இன்னும் அதிகமாகி…எந்த காரணத்துக்காக என்னை தள்ளி வெச்சாரோ…அது அவருக்கு இனி கிட்டாமயே போயிடட்டும்..”
 
“இனி காலத்துக்கும் இவரோட வாரிசுகள்.. இவரோட பரம்பரை பேர் சொல்லவே முடியாது….எந்த தெய்வத்தை வேண்டினாலும், அந்த தெய்வத்தோட அருளே கிடைக்காம, வாரிசே இல்லாமல் இந்த பரம்பரை போகட்டும்”
 
“எனக்கு இப்படி மரண வேதனையை குடுத்த இவர் .. என் முகத்தை கூட பாக்க கூடாது….
அவரோட கையால நான் செத்த பிறகு கொள்ளி கூட போட கூடாது..காரியம் பண்ண கூடாது… வருஷ திதி குடுக்க கூடாதுனு கண்ணீரோட அவரை சபிச்சா”
 
“இப்ப தான் என் மேல பாசமா இருக்கிற எங்கண்ணாவோட அருமை எனக்கு புரியுது…நான் உயிரோட இருக்கும் போதே எங்க அண்ணாவை பாக்கணும்னு சொல்லிட்டு அவ உயிரை துடிக்க ஆரம்பிச்சது..”
 
“இந்த விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த அவ அண்ணாவோட கைய பிடிச்சு நீ தான் எனக்கு கொள்ளி போடணும்…உன் காலத்துக்கு பிறகு உன் பையன் தான் எனக்கு திதி குடுக்கணும்னு சத்தியம் பண்ண சொல்லி, சத்தியம் வாங்கிட்டதும்…
அந்த மனதிருப்தியோட அவளோட உயிர் போயிடுச்சு ..”
 
“விஷயத்தை கேட்டு வேகமா வந்த உங்க எள்ளு தாத்தா பார்த்தது.. அவரோட பொண்டாட்டி உயிர் இல்லாம இருந்ததை தான்”.
 
“உங்க எள்ளு பாட்டியோட  அண்ணா தான் சத்தியம் செஞ்சது மாதிரியே, அருமையா வளர்த்த தன் தங்கைக்கு, தன் கையாலயே கொள்ளி வெச்சார்…”
 
“ஓஹோனு…பிரமாதமா வாழ்ந்த குடும்பம்..நிலம், நீச்சு, எடுக்க எடுக்க குறையாத நகைகள்,  சமையலறையில எப்பவும் அணையாத கோட்டை அடுப்பு….இது எல்லாம் அவ போன பின்னால ஒண்ணு  ஒண்ணா.. உங்க எள்ளு தாத்தா கண் முன்னாலயே அழிஞ்சு போச்சு”
 
“அவர் ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுட்டு வந்தவ..ஊரே மெச்சின பேரழகியா இருந்தாலும்…
மொதல் பொண்டாட்டியோட சாபமோ.. என்னவோ.. குழந்தையே பிறக்கல..”
 
“கோயில் கோயிலா போனா.. யார் எந்த விரதம் இருக்க சொன்னாலும் இருந்தும்.. வாரிசே இல்லாம போச்சு..”
 
“கடைசில..பேரழகியான அவ.. கொழந்தை பிறக்காத வருத்தத்துலயும் தன் மூத்தாளோட சாபத்தை நினைச்சு நினைச்சு அழுதுகிட்டு இருந்ததால, கடைசில சித்தம் கலங்கி போய், மூத்தாள் போன ஒரே வருஷத்துல இவளும் செத்து போனா..”
 
(மூன்றாவது அத்தியாயம் முடிந்தது)
 

 

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்