Loading

25. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

ஏற்கனவே தனக்கு கிடைத்த சில ஆதாரங்களை பார்த்து மன உளைச்சலில் இருந்தவன், மதுராவை பார்த்தாலாவது தன் மனதிற்கு சற்று ஆறுதல் கிடைக்கும் என்றே அவளைத் தேடி வந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே மதுராவின் அருகாமையில், மன அமைதி கிடைக்க கொதித்துக் கொண்டிருந்த அவனது  மனது சற்றே சாந்தமானது.

அதன் காரணமாகவே, அவர்கள் இருவரும் மதுராவின் அண்ணன்களின் கண்களில் அகப்பட்டாலும் அவன் அசராமல் சாந்தமாக தான் வெளியே வந்து நின்றான். 

சர்வ நிச்சயமாக, அவர்கள் அங்கே என்ன பிரச்சனை செய்தாலும் மிக எளிதாகவே சமாளிக்க தான் செய்திருப்பான்.

அவன் ஒன்றும் எந்த தவறும் செய்யவில்லையே!

‘கணவன் மனைவி’ என்ற உறவு அவர்களுக்குள் இருக்க,  அவளை சந்திக்க தனக்கு உரிமை இல்லையா? என்ன? இனி யாரிடமும் இவள் என் மனைவி என்பதை  மறைத்து வைக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை இதன் மூலமாக இவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதும் ஒரு காரணம்.

கண்டிப்பாக தன்னை அவளுடன் பார்த்ததும் வாய் தகராறு ஆகும் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் நடந்ததோ அதற்கு மாறாய் அல்லவா இருந்தது. 

 என்னதான் மதுராவிற்கு அண்ணன் ஸ்தானத்தில் இருந்தாலும், சரியாக விசாரிக்காமல் தன் கண்முன்னே தன்னவளை ஒருவன் அடித்து காயப்படுத்துவதைப் பார்த்தால் அவனால் பொறுக்க முடியுமா? என்ன? 

ஏற்கனவே இருந்த எரிச்சல் வெறுப்பு எல்லாம் இப்பொழுது மொத்தமாய் பிரகதீஷ் பக்கம் திரும்பி விட, கை நரம்புகள் புடைக்க, எரிமலையாய் கொதித்தவன், தன் அதீத கோபத்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது பிரத்தியேக பிஸ்டலை எடுத்தவன், அவனின் குரல்வளையில் வைத்து அழுத்த,

மரண பயத்தில் ஒரு நொடி ‘செத்தோம்’ என்று தான் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான் பிரகதீஷ், 

அதற்குள் அவனின் செயலை கண்ட அதிர்ந்த மதுரா, எதுவும் தப்பாகி விடக்கூடாதே! ஒரு பக்கம் கணவன் என்றால் இன்னொரு பக்கம் அவளின் அண்ணன் ஆயிற்றே! என்று அரண்டு எழுந்தவள்,

“அய்யோ என்ன இது அறிவு கெட்ட தனமா விடுங்க?”என்று அவனின் கையை பிடித்து இழுக்க,

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜெகதீஷும் பிரகதீஷை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

“யார் அறிவு கெட்ட தனமா பண்றது? எவ்வளவு தைரியம் இருந்தா உன் மேல கை வைப்பான்.. அதுவும் என் கண்ணு முன்னாடியே..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?”என்று நெஞ்சு விடைக்க கண்களில் ரௌத்திரத்துடன் கார்முகில் மதுராவை பிடித்து கத்த,

அவனின் குரலுக்கு எதிர் மாறாய் துப்பாக்கியை பிடித்திருந்த அவனின் வலது கையின் கட்டைவிரல் பிரகதீஷின் அடியினால் சிவந்து உப்பி போயிருந்த அவளின் பட்டு கன்னத்தை இறகு போல மெல்லமாய் வருடியது. 

மதுராவிற்கு ஏனோ அந்த க்ஷணத்தை தாங்க முடியாமல் அழுகைதான் வந்தது. ஒரு பக்கம் அவனின் பாசத்தை உணர்ந்த உள்ளம் உவகை அடைய, அதே நேரம் பிரகதீஷ் அடிப்பதற்கு முன்னால் சொன்ன ‘ச்சீ கடைசில உன் அம்மா புத்திய காட்டிட்ட இல்ல…’ அந்த வார்த்தைகள் அவளின் மென் மனதை உடைத்து இருதயத்திற்குள் குத்திக் கொண்டே இருந்தது.

அப்படி என்றால் அவர்கள் இன்னும் தன்னை தங்கையாக பாவிக்கவில்லை.. ஏதோ கடமைக்காக தான் தன்னை இப்பொழுது ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா?

இன்னும் கார்முகிலின் செய்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி விலகாமல் பிரகதீஷ் ஜெகதீஷின் பிடியில் நிற்க,

“எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம் .. கோபம் வந்தா கை நீட்டிடுவியா”என்ற அவனும் தன் பங்கிற்கு அவனை கண்டிக்க, பிரகதீஷ் இன்னும் திகைப்பிலிருந்து வெளிவரவில்லை.

இவர்களுக்கு இடைவெளி விட்டு சற்று தள்ளி நின்றிருந்த வினோதாவோ கார்முகில் வர்ணனின் கோபத்தில் உண்மையிலேயே பயந்துவிட்டாள். ‘எம்மாடி என்ன இவன்‌‌ ஃகன் எல்லாம் வச்சிருக்கான்’ என்று… பக்கத்தில் கூட செல்லவில்லை அவள். 

 அவளுக்கு இன்னும் இவன்தான் மதுராவிற்கு முதலில் தாலி கட்டிய அவன்ன் என்று தெரியவில்லை.. அதற்கு கார்முகில் வர்ணனை இப்போதைய தோற்ற மாற்றமாகவும் இருக்கலாம்.

ஏன் பிரகதீஷ் கூட, இன்னும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே!

ஆனால் அவனையே உற்று நோக்கிய ஜெகதீஷிற்கு.. ஓரளவு அடையாளம் தெரிந்து விட்டது போலும். 

மதுரா அழுதபடி இருக்க, தனது துப்பாக்கியை தன் இடுப்பின் பின்னே சொருகியவன்

அவளின் கண்ணீரை துடைத்து விட்டு “இப்ப எதுக்கு அழுற?”என்று அவளின் கன்னம் இரண்டையும் தாங்கி தனது கோப குரலை மாற்றாமலேயே கேட்க, மதுரா பதில் சொல்லாமல் இதழ்களைக் கடித்தபடி தலைகுனிந்தாள்.

அவர்களின் நெருக்கத்தை பார்த்த பிரகதீஷ் மீண்டும் எரிச்சல் தான் பட்டான். 

“நான் கூட உன்னை என்னமோ நெனச்சேன் என்ன பண்ணிட்டு இருக்க மதுரா? துப்பாக்கி எல்லாம் வச்சிருக்கான் என்னவே சுட வரான்.. நீ அவன் கூட ஓட்டிட்டு இருக்க? இவன மாதிரி ஒருத்தன் கூட உனக்கு எதுக்கு பழக்கம்? அவன விட்ட நகர்ந்து இந்த சைடு வா.. உனக்கு நாங்க நல்லது மட்டும்தான் செய்வோம்னு நம்பிக்கை இருந்தா இந்த சைடு வா” என்று அவன் அழுத்தி கூப்பிட, 

அழுது கொண்டிருந்த மதுராவும் தன் கன்னத்தை இறுக்கமாய் பிடித்து வைத்திருந்தவனைப் பார்த்தாள். என்னைவிடு நான் போகணும் என்பது போல்…

“அவன எதுக்கு பாக்குற தட்டி விட்டுட்டு வா மதுரா.. அவளை. விடுடா” என்று சத்தம் போட, அவனை கார்முகில் வர்ணன் எரிப்பது போல் பார்க்க, “என்னடா பொறுக்கி முறைக்கிற? உன்ன மாதிரி ஒருத்தன் கூட என் தங்கச்சிய பழக விடுவேனா? இனிமே அவளோட நிழல கூட உன்னால தொட முடியாது” என்று தொண்டைக்கிழிய கத்திய பிரகதீஷ் ஜெகதீஷின் பிடியில் இருந்து வெகுவாய் திமிறிக் கொண்டிருக்க,

 அந்த பக்கமாய் ஆங்காங்கே சென்று கொண்டிருந்தவர்களும் நின்று என்ன பிரச்சனை? என்று கவனிக்கும்படி ஆகிவிட்டது.

ஜெகதீஷ் தான், பிரகதீஷ் காதில், “டேய் டேய் ரொம்ப துள்ளாதடா.. நான் சொல்றத கேளு.. அவன நல்லா பாரு.. பாடி கார்ட் கருப்பசாமியா வந்த சிபிஐ..அதான்‌ மதுரா ஹஸ்பண்டுடா.. ” என்றான்.

அப்பொழுதுதான் அவனுமே உற்றுப் பார்க்க, அதே நேரம் காருக்கு பின்னால் மறைந்திருந்த வினோதாவும் அப்பொழுதுதான் கவனித்தாள்.

அவர்களின் வீட்டின் பாடிகார்ட் ஆக இருந்தவன் கருப்பு நிறத்திலான உடைகள் அணிந்து முகத்தை மறைக்கும் அளவிற்கு தாடி மீசையுடன் முடியை நன்றாக வளர்த்து ஃபங் ஹேர் ஸ்டைலில் இருந்தவன் இப்பொழுது ஆளே வேறு மாதிரியாக இருந்தான். 

முகத்தை மறைத்த சாமியார் போன்ற தாடியும் இல்லை.. அவனது ஸ்டைலிஷ் ஆன ஹேர் ஸ்டைல்… உடையும் கருப்பு நிறத்தில் அல்லாத வெள்ளை நிற டி ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தான். முடியிலிருந்து உடைவரை அனைத்திலும் அத்தனை அத்தனை மாற்றங்கள்…!

நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே அவன் தான் இவன் என்று தெரியும் அளவிற்கு தான் இருந்தான். 

‘அய்யய்யோ இவன் எதுக்கு திடீர்னு இவள தேடி இங்க வந்து இருக்கான்? ஒருவேளை ரெண்டு பேரும் நமக்கு தெரியாம பேசிட்டு தான் இருக்காங்களா? அப்போ இவன் மதுராவ கூட்டிட்டு போய்டுவானா? அப்படி போய்ட்டா என்னோட நெலமை என்ன ஆகுறது?’ என்று பயந்து போன வினோதா, 

அவனை எப்படியாவது மதுராவிடம் சேரவிடாமல் தடுக்க வேண்டும் என்றே நினைத்தாள். தன் தம்பிகளின் அருகே வந்தாள்.

அதற்குள் பிரகதீஷும் கார்முகில் வர்ணனை அடையாளம் கண்டு கொண்டான் போலும்.. ஜெகதீஷின் பிடியில் அதுவரை அடங்காமல் துள்ளிக் கொண்டிருந்தவன் குழம்பி போய் சில நொடிகள் அமைதி ஆகிவிட,

ஜெகதீஷும் அவன் மீதான தன் பிடியை தளர்த்திக் கொண்டான்.

அழுகையின் இடையில் சுற்றம் உணர்ந்த மதுராவும் அனைவரின் முன்னிலையிலும் இப்படி நடந்து கொள்கிறானே! என்று கார்முகில் வர்ணனின் பிடியிலிருந்து நகர்ந்து நிற்க முயல, அவளின் கன்னத்தை விட்டவன், அவளை விட்டுவிடாமல் தோள்பட்டையில் கை வைத்து தன்னோடு நெருக்கமாய் நிற்க வைத்துக் கொண்டான். அவன் செய்கையில் இவள் என்னவள் என்ற பொருள் இருந்தது.

இதுதான் சமயம் என்று பார்த்த வினோதாவும் தன் தம்பிகளிடம், 

“என்னடா மதுராவும் இவனும் இப்டி ஒட்டிக்கிட்டு இருக்காங்க.. ரெண்டு பேரோட நெருக்கத்தை பார்த்தால் மதுரா இன்னும் இவன் கூட பேசிட்டு தான் இருக்காளா? உங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல போலயே.. கூட இருந்தே நமக்கு துரோகம் பண்றாளா இவ? அப்படியே அவ அம்மா புத்தி” என்று சாதுரியமாய் கோபப்படுவது போல் அவர்களின் கோபத்தை தூண்டிவிட, ஜெகதீஷ் யோசனையாக தமக்கையை பார்த்தான் என்றால்,

அவளின் தூண்டலால் அடங்கியிருந்த கோபம் பிரகதீஷிற்கு உச்சம் ஏறியது.

முதல் காரணமாக அவன் தன் தந்தையை கைது செய்தவன் என்பதால் தான். என்னதான் அவர் நல்லவர் இல்லை என்றாலும் தன் பிள்ளைகளுக்கு நல்லவராக தானே இருந்தார்? தவறே செய்திருந்தாலும் அவர் அவனுக்கு தந்தை அல்லவா? அப்படிப்பட்டவரை கைது செய்து சமூகத்தில் தங்கள் மரியாதைக்குரிய குடும்ப நிலையை கீழ் தள்ளியதோடு மட்டும் இல்லாமல் போற போக்கில் மதுராவை வேறு திருமணம் செய்து அவளின் வாழ்க்கையையும் கெடுத்தவனாகவே அவனின் மனது அவனை உருவகப் படுத்த, தாங்கள் தூக்கம் கூட வராமல் நெஞ்சில் பாரத்தோடு கஷ்டப்பட்ட நாட்களை எண்ணி பார்த்தவனுக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது.

மதுராவின் மீதும் அத்தனை கோபம் ஒரு வார்த்தை அவனைப் பற்றி சொல்லவில்லையே? ஏன் 

ஜெகதீஷ் பிரகதீஷின் கோபத்தை உணர்ந்தவன் போல், “சும்மா இருடா”என்று சொல்வதற்குள் வார்த்தையை விட்டு விட்டான் அவன்.

“டேய் ராஸ்கல் போனவன் அப்படியே போக வேண்டியது தான.. திரும்ப எதுக்குடா வந்த?” என்று வார்த்தையை விட, 

அவனை நக்கலாக பார்த்த கார்முகில்,

“என் பொண்டாட்டிய பார்க்க நான் வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா?”

“என்னடா பெரிய பொண்டாட்டி? இத்தனை மாசமா எங்க போன? எப்ப நீ கட்டின தாலிய அவ கழட்டி தந்தாளோ அப்பவே உங்க உறவு முடிஞ்சு போச்சுடா”

“உறவுங்கிறது வெறும் தாலிங்கற ஒரு சின்ன ஆர்னமென்ட்ல அடங்குறது இல்ல டா.. அது மனப்பூர்வமான ஒரு பந்தம்.. அது எங்களுக்குள்ள இருக்குன்னு எனக்கு தெரியும்.. அதுக்கு நீ ஒன்னும் டெபினிஷன் தர வேண்டாம்” என்றான் பதிலடியாக, 

“என்னடா பெரிய பந்தம்? இத்தன மாசம் இல்லாத பந்தம் இப்ப என்ன திடீர்னு வந்து இருக்கு..மதுராவுக்கு நல்லது நடக்க கூடாதுன்னு நெனச்சு வந்தியா?”என்று கேட்டு அவனின் கோபத்தை தூண்ட,

“கண்டிப்பா இல்ல அவளுக்கு கெட்டது நடக்க கூடாதுன்னு தான் திரும்ப வந்தேன்.. அவள பத்திரமா பாத்துக்க தான் வந்தேன் ” என்றான். 

அதுவரை அமைதியாக இருந்த ஜெகதீஷ் முதல் முறையாக வாயை திறந்தான். 

“மிஸ்டர்..மதுரா பாத்துக்குறதுக்கு அவளோட ஃபேமிலி நாங்க இருக்கோம்.. உங்களோட சேவை இங்க தேவை இல்ல…”

அவனை ஏளனமாக பார்த்த கார்முகில் வர்ணனோ,

“உண்மைதான் அவளை பாத்துக்க அவளுக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு ஆனா அந்த ஃபேமிலி நான் தான்”

ஜெகதீஷ் அவன் சொன்னது புரியாமல் விழிக்க,

” என்ன புரியலையா? யார் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் மதுரா இப்போ என்னோட வைஃப் அது எப்பவும் மாறாது அண்ட் நான் தான் அவளோட ஃபேமிலி..”என்று சற்று ஆங்காரமாகவே சொல்ல, ஜெகதீஷ் மதுராவை பார்த்தான். அவள் அவனுடைய பிடியில் தலை குனிந்த படி நின்றாள் நிமிரவே இல்லை.

“ப்ச்ச் என்னடா இவன் கிட்ட போய் பேசிட்டு இருக்க? மாறு வேஷம் போட்டு கேவலமா ஒரு வீட்டுக்குள்ள புகுந்து தாலி கட்டுனவனுக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு?”என்று பிரகதீஷ் எகிற, 

“வார்த்தைகளை கவனமா விடு இல்லனா நா வாயால பேச மாட்டேன்..” என்பது போல் தன் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை தொட்டு காட்ட,

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் இவனிடம் தன் பயத்தை காட்டக் கூடாது என்று நினைத்தவன்,

“என்னடா பூச்சாண்டி காட்றியா? நீ வச்சிருக்க ஒவ்வொரு புல்லட்டுக்கும் நீ கவர்மெண்ட்க்கு கணக்கு காட்டனும்டா அவ்ளோ ஈஸியா என்ன சுட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவியா?”

“இது ஒன்னும் கவர்ன்மெண்ட் கொடுத்த பிஸ்டல் இல்லடா என்னோட பிரைவேட் பிஸ்டல் டா.. நான் எதுக்குடா கவர்மெண்டுக்கு கணக்கு காட்டணும்..

 அதோட நான் எதுக்குடா உன்னை சுட்டுக் கொல்லனும் நான் அடிச்சாவே நீ தாங்க மாட்ட..” என்றதும்,

பிரகதீஷ் அவனை தீப்பார்வை பார்க்க,

ஜெகதீஷ் தான் மீண்டும் எதிர்குரல் கொடுத்தான்.

“இங்க நம்மள சுத்தி அத்தன சிசிடிவி கேமரா இருக்கு.. அதோட இங்க நம்மள பாத்துட்டு இருக்க அத்தனை பேரும் விட்னெஸா இருக்காங்க அவங்க முன்னாடியே இப்படி கொலை மிரட்டல் செய்ய எவ்வளவு தைரியம் இருக்கணும்? நான் நெனச்சா கொலை முயற்சின்னு உங்க மேல கம்ப்ளைன்ட் கூட ஃபைல் பண்ணலாம் மிஸ்டர்” என்று மிரட்ட,

கார்முகில் வர்ணனின் இதழ்கள் ஏளனமாய் வளைய, “குட் ஜோக்.. பட் உங்க முயற்சிக்கு ஆல் தி பெஸ்ட்.. நீங்க சொன்ன மாதிரி தாராளமா என் மேல கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணுங்க மிஸ்டர் ஜெகதீஷ் முத்து மாணிக்கம்”என்றான் அவனின் குரலில் தான் அத்தனை நக்கல் அதுவே சகோதரர்கள் இருவரின் முகத்தையும் இருளாக்கியிருந்தது.

இருந்தும் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல், 

“கூட இருந்தே நம்பிக்கை துரோகம் பண்றவங்களுக்கு என் தங்கச்சியை கொடுக்க எங்களுக்கு இஷ்டம் இல்ல.. கொடுக்கவும் மாட்டோம்” என்றான் ஜெகதீஷ். பிரகதீஷ் அதிகமாய் கோபப்பட்டாலும் அவனின் வார்த்தைகளில் தெளிவில்லாமல் இருக்க ஜெகதீஷின் ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை தெளிவாய் வந்து விழுந்தது.

அவன் துரோகம் செய்தவன் என்று சொன்னால் திணறுவான் என்று பார்த்தால், 

கார்முகில் வர்ணனும் அவனுக்கு சளைக்காமல் தெளிவாகத்தான் பதில் சொன்னான்.

“ஒன்னு புரிஞ்சுக்கோங்க ஜெகதீஷ் கண்டிப்பா நான் செஞ்சது நம்பிக்கை துரோகம் இல்லவே இல்ல.. குற்றம் செய்ற குற்றவாளிகள பிடிக்கிறது என்னோட கடமை.. என்னோட கடமையை மட்டும் தான் நான் செஞ்சேன்… அதோட நா நேர்மையா இருக்கறதுக்கு உங்க அப்பா முத்துமாணிக்கம் ஊருக்கே உழைச்ச தியாகச் செம்மல் இல்ல..அவர் ஒரு குற்றவாளி.. பெரிய பெரிய குற்றங்களுக்கு துணை போனவர்.. அத மறந்துட வேண்டாம்… அண்ட் என்னோட கடமை வேற அன்னைக்கு நடந்த கல்யாணம் வேற.. சோ அதையும் இதையும் முடிச்சு போட வேண்டாம்”

“அப்போ கடமைக்கு கல்யாணம் பண்ணலனா எந்த ஆணிக்கு இத்தனை மாசம் சும்மா இருந்துட்டு இப்ப வந்து இருக்க?” என்று பிரகதீஷும் விடுவதாய் இல்லை.

” ஓஓ இப்போ வந்திருக்கேனா என்ன அர்த்தம்? திரும்பவும் எங்க குடும்பத்துக்குள்ள புகுந்து துரோகம் பண்ண தான் வந்தியா? அதனாலதான் நல்லவன் மாதிரி நடிச்சு மதுராவை ஏமாத்துறியா? இன்னும் என்ன திட்டம்லாம் வச்சிருக்க? சொல்லு ” என்றான்.

அவனின் குரலில் நையாண்டியும் எதிரில் இருப்பவனை அவமானப்படுத்தும் வெறியும் மட்டுமே இருந்தது.

“நீ உன்னோட லிமிட்ட க்ராஸ் பண்ணி என்கிட்ட பேசிட்டு இருக்க பிரகதீஷ்… எனக்கும் சில ரீசன்ஸ் இருக்கு.. ஆனா அத உன்கிட்ட சொல்ல எனக்கு இஷ்டம் இல்ல” என்று உறுமியவன், கட்டுக்கடங்காத கடும் சினத்தோடு தான் இருந்தான். 

பிரகதீஷின் இடக்கு மடக்கான கேள்விக்கு தன் கையால் பதில் சொல்ல தான் அவனது நாடி நரம்புகள் அனைத்தும் புடைத்தது.

ஆனால் அவனின் தற்போதைய உணர்வுகளை புரிந்தவள் போல் அவன் கை விரல்களை அழுத்த பிடித்து கெஞ்சும் விழிகளால் அவனை விட்டு விடு என்பது போல் பார்க்கும்‌ மதுராவிற்காக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஒருவேளை சற்று நிதானமாக ஆற அமர பேசி இருந்தால், கார்முகில் வர்ணன் இடைப்பட்ட மாதங்களில் தான் பட்ட துயரத்தை சொல்லி இருப்பானோ? பிரச்சனையும் அதோடு எல்லை மீறாமல் முடிந்திருக்குமோ? என்னவோ? ஆனால் இப்பொழுது நிலைமை கைமீறி போய்க்கொண்டிருந்தது.

பேச்சின் வீரியம் அதிகரித்து கொண்டிருக்க மதுரா யாரின் பக்கம் பேசுவது என்று தெரியாமல் திணறி தான் போனாள். ஒரு பக்கம் அவளுக்கு வெகு வருடங்கள் கழித்து கிடைத்த சகோதர பாசம் இருக்க, இன்னொரு பக்கம் அவளின் மறுப்பாதியான பிளாக்..அவனின் கை என்னும் மதுராவின் தோள்பட்டையில் தான் அழுத்தமாய் பதிந்து இருந்தது. அது சொல்லாமல் சொன்னது நீ என் பக்கம் தான் இருக்க வேண்டும் என்று… அது அவளை இன்னும் இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்த விழிகள் கலங்க அவனை ஏறிட்டாள்.

அவளின் கலங்கிய விழிகளில் என்ன தெரிந்ததோ? கார்முகில் வர்ணனின் பிடி அவளின் தோள்பட்டையில் இருந்து விலகிக் கொள்ள, மதுரா தன் அண்ணன்கள் பக்கம் சென்றாள் அவர்களை சமாதானப்படுத்துவதற்காக.

பிரகதீஷ் கோபத்தில் தன் அருகில் வந்த மதுராவிடம் முகத்தை திருப்ப,

“ப்ரக்கு கோபப்படாத…ப்ளீஸ் உனக்கு தெரியக்கூடாதுன்னு நான் மறைக்கல.. எனக்கே உறுதி இல்லாத உறவா இருக்கும் போது அத எனக்கு அறிமுகப்படுத்த தோணல..”என்றவளின் குரலுக்கு அவன் செவிசாய்க்கவில்லை. 

“நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலி..நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லன்னு நெனச்சேன்.. ஆனா அப்படி இல்லன்னு ப்ரூவ் பண்ணிட்ட மதுரா ” என்ற

ஜெகதீஷிற்கும் கோபம் தான், மதுராவோ அப்படி இல்லை என்று விளக்க வர,

அந்த சந்தர்ப்பத்தை தவறவிடாத வினோதாவும்,”மது உன்கிட்ட இருந்து நான் இத எதிர்பார்க்கல.. நம்ம குடும்பத்தையே இந்த நெலைமைக்கு கொண்டு வந்த இவன் கிட்ட போய் நீ பேசிட்டு இருந்திருக்க? இப்ப கூட நாங்க பாக்கலனா எத்தன நாளைக்கு மறைக்கிறதா இருந்த?”

கலங்கிய விழிகளுடன் மறுப்பாய் தலையசைத்தவள்,

“இல்லக்கா நான் மறைக்கணும்னு நினைக்கல ..என்னோட சிச்சுவேஷன் அப்படி.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்றாள்.

“நல்லவ மாதிரி நடிக்காத… எப்படி இருந்தாலும் உன்னோட அம்மா ரத்தம் தானே உனக்குள்ள ஓடுது நம்பிக்கை துரோகம் ஒண்ணும் உன்னோட ரத்தத்துக்கு புதுசு இல்லையே…! பாத்துக்கோங்கடா என்னதான் நீங்க தங்கச்சி தங்கச்சின்னு உருகுனாலும் பிறவி குணத்தை யாராலயும் மாத்த முடியாது.. இவ கிட்ட இருந்து தள்ளி இருக்கிறதுதான் நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லது..” என்று சந்தர்ப்பம் பார்த்து குத்த, சகோதரர்கள் இருவரும் அதை ஆமோதிப்பது போல் அமைதியாக வேறு  அவளைப் பார்த்துக் கொண்டிருக்க,

மதுராவிற்கு பதில் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

சர்வ நிச்சயமாய் அவளின் தாய் நல்லவர் இல்லை தான்.. இதற்கு முன்னால் பலமுறை தாயைக் கொண்டு மூவருமே அவளை திட்டியதுண்டு சிறுவயதில் அடித்தது கூட உண்டு.. ஆனால் இந்த சில நாட்களில் தன்னை குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டு அன்பை செலுத்தியவர்கள் இன்னும் தன்னை மனதார குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இக்கணத்தில் புரிய மதுரா முற்றிலுமாக உடைந்து போனாள். கண்களில் நீர்வடிய மூவரையும் வெறித்து பார்த்தாள்.

என்ன இருந்தாலும் மூவரும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள் அவளோ துரோகியாக அவர்களின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து களகம் செய்த ஒருத்திக்கு பிறந்தவள் தானே! அவளுக்கு இவ்வளவு நாள் கிடைத்த அன்பும் பாசம் எல்லாம் கானல் நீர் போலத்தான் என்பது இந்த நொடி விளங்கியது.

எதற்காக தான் இவ்வுலகில் பிறந்தோம்? தனக்கென்று யார் தான் இருக்கிறார்கள்? என்ற உணர்வில் கண்களை மூடி நிற்க, 

அவளின் கைகளை பிடித்து தன் கரத்திற்குள் இறுக்கமாய் பிணைத்துக் கொண்டான் கார்முகில் வர்ணன் உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல்…

அவனின் நெருக்கத்தில் கண்களை திறந்த மதுராவும், அவனை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை அதே சமயம் தன் கையை அவனிடமிருந்து விலக்கவும் இல்லை.

வெறித்த பார்வை மட்டுமே அவளிடம்!

மதுராவின் கண்களில் வடிந்த கண்ணீரை விட, அவளின் வெறித்த பார்வை அண்ணன்கள் இருவரையும் உள்ளுக்குள் என்னமோ செய்ய,

“மதுரா இட்ஸ் ஓகே.. இப்பவும் எதுவும் கெட்டு போகல இவன் கிட்ட இனிமே பேச மாட்டேன்னு சொல்லு.. நம்ம முன்ன மாதிரி இருக்கலாம்.. என்ன இருந்தாலும் நீ எங்களுக்கு தங்கச்சி தான்”என்று பிரகதீஷ் சமாதான உடன்படிக்கையில் இறங்க,

அவன் சொன்னதை கேட்டதும் மதுராவின் கைகள் தன்னைப்போல் அவளை இறுக்கமாய் பிணைத்திருந்த கார்முகில் வர்ணனின் கரங்களிலிருந்து  விலகியது.

மதுராவின் இத்தகைய செயல் கார்முகில் வர்ணனை வெகுவாய் பாதித்தது. அவர்கள் சொன்னால் இவள் தன்னை விட்டு விடுவாளா? அவ்வளவுதானா தானா அவர்களின் உறவு? என்ற கேள்வியோடு  இறுக்கமான முகத்துடன் அவளையே  பார்த்துக் கொண்டிருக்க,

வினோதாவும் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி,

“அதேதான் எங்க உறவு வேணும்னா இவனோட இருக்கற உறவை முறிச்சிட்டு நாங்க சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கணும் மது… அப்பதான் எங்களோட உறவும் பாசமும் எப்பவும் உனக்கு கிடைக்கும்… இனிமே நீ இவனை சந்திக்கவே கூடாது”என்று அவள் மூலமாக தனக்கு வேண்டியதை கண்டிஷனாக போட, பிரகதீஷ் ஜெகதீஷ் இருவரும் மதுராவிற்கு பரிந்து ஒரு வார்த்தை பேசாமல் தன் அக்காவின் பேச்சு சரி தான் என்பது போல் மௌனியாகவே நின்றனர்.

அவர்களையேப் பார்த்தவளுக்கு அனைத்தும் வெறுத்துப் போன நிலையாகி விட, ஒரு நொடி கண்களை இறுக்கமாய் மூடித்திறந்தவள் திடமாய் அவர்களைப் பார்த்து பதிலும் சொன்னாள்.

“உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி ..பட் எனக்கு நீங்க கண்டிஷன் போட்டு பிச்சையாக குடுக்குற இந்த உறவும் பாசமும் வேண்டாம்.. சொல்லப்போனா நீங்க யாருமே எனக்கு வேண்டாம்” என்றாள் மதுரா. நிச்சயமாக அவளின் குரலில் எந்த உணர்வும் இல்லை. வெறுமை மட்டுமே நிறைந்திருந்தது. 

தொடரும்…

போன அத்தியாயத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ☺️♥️ 

இந்த அத்தியாயத்தை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் 🙂♥️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
30
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. சூப்பர் மது. வினோதா சீ