Loading

அத்தியாயம் 24 :

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு…

புது தில்லி.

NZM CAPE SF EXPRESS.
Delhi to Thirunelveli : 1 day 21 hrs.
2210 km. 26 stops.

“ஏன் பாரி இவ்வளவு அடம் பிடிக்கிற? இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம், இப்போ தான் ட்ரெயின் ஏறுற நீ. ட்ரெயின் டிராவல் டெல்லி டூ நெல்லை டூ டேஸ் ஆகும். கல்யாணத்துக்கு முதல் நாள் ஈவ்னிங் ஆர் நைட் ஆகும், நீ இங்க வந்து சேர. ரொம்ப பன்றடா!”

டெல்லி ரயில் நிலையத்தில் அலைபேசியுடன் நின்றிருந்த பாரி… அந்தப்பக்கம் தொடர்பிலிருந்த பரிதியின் திட்டில் அலைபேசியை இரண்டடி தள்ளி பிடித்தான்.

“தாலி கட்டுற நேரத்துக்கு நான் அங்கிருந்தா போதாதா பரிதிண்ணா.” அலட்டிக்கொள்ளமல் கேட்டான் பாரி.

“தாலி கட்டும் நேரத்திற்கு மட்டும் வரதுக்கு நீயொன்னும் ரிலேட்டிவ் கிடையாது பாரி. மாப்பிள்ளையோட தம்பிடா… நீயில்லாம எப்படிடா?” தன்னுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வில் உடன் பிறந்தவன் இல்லையே என்கிற வருத்தம் பரிதியிடம்.

“கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு கண்டிப்பா நான் அங்க இருப்பேன் பரிதிண்ணா.” அவனுக்கு மட்டும் அண்ணன் கல்யாணத்திற்கு யாரோபோல் சென்றுவர வேண்டுமென்றா ஆசை.

விடுமுறை கிடைக்கவில்லை. இதுவே கடைசி நேரத்தில் எமெர்ஜென்சி என்று சொல்லி வாங்கியது. பொய் சொல்லியது தெரிந்தால் அதற்கு தண்டனையும் உண்டு. இருப்பினும் அண்ணணுக்காகத்தானே என்று சமாளித்து கிளம்பியிருக்கிறான். திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் அவன் கிளம்பியாக வேண்டும். கொடுத்திருக்கும் விடுமுறையின் காலளவு அவ்வளவு தான்.

பாரி தற்போது ஐ.பி.எஸ் பயிற்சி காலத்தில் இருக்கின்றான். பயிற்சியில் சேர்ந்து மூன்று மாதங்களாகின்றன. பொதுவாக பயிற்சி காலத்தில் விடுமுறையே கிடையாது. பயிற்சி முடியும் வரை அந்த வளாகம் மட்டுமே அவர்களது உலகம். வெளியிடங்களுக்கும் பயிற்சி சம்மந்தமாக பயிற்சியாளர்களுடன் மட்டுமே சென்றுவர இயலும்.

“டெல்லி டூ தூத்துக்குடி பிளைட் பைவ் ஹவர்ஸ் தாண்டா…” பாரி சீக்கிரம் வந்துவிட வேண்டுமென்கிற ஆசை.

“பிளைட் இல்லை பரிதிண்ணா. ஃபோர் டேஸ்ஸா இங்க வெதர் கண்டிஷன் சரியில்லை. சோ, ஏர் ட்ரான்ஸ்போர்ட் டிராப் பண்ணி வச்சிருக்காங்க. நான் என்ன பண்ணட்டும்.” இவ்வளவு சொல்லியும் தன் அண்ணன் தான் வேண்டுமென்றே செய்வதாக நினைத்து பேசுகிறாரே என்று ஆயாசமாக உணர்ந்தான் பரிதி.

“நீ என் தம்பிடா. நீயிருக்கணும், கூடவே இருந்து எனக்கு எல்லாம் செய்யனும் நான் நினைக்கமாட்டேனா?” என்ற பரிதி, “அட்லீஸ்ட் பொண்ணு யாரு, பெயர் என்ன இப்படி எதாவது கேட்டியாடா?” அண்ணனாக பரிதியின் கோபம் சரியே.

கடந்த இரண்டு வருடங்களாக எதிலும் ஒட்டுதல் இல்லாது தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று தான் இருக்கின்றான் பாரி.

“தம்பியா நான் உங்க கல்யாணத்தில் ஓடியாடி வேலை பார்க்கணும் ஆசைப்பட்டிருந்தா, என் ட்ரெயினிங் முடிஞ்ச அப்புறம் நீங்க கல்யாணம் பண்ணியிருக்கணும்.” பாரிக்கு அப்படியொரு எண்ணமில்லை. பரிதியின் வருத்தம் கண்டு வேண்டுமென்றே கூறினான்.

“நான் என்னடா பண்றது. பொண்ணோட பாட்டிக்கு உடம்பு முடியல. பேத்தி கல்யாணத்தை பார்த்தே ஆகணுன்னு சொன்னதால இப்படி திடீர் ஏற்பாடு பண்ணிட்டாங்க. இல்லைன்னா இந்த தேதியில் எங்கேஜ்மெண்ட் பண்றதுதான் பிளான்.”

“இட்ஸ் ஓகே பரிதிண்ணா… கரெக்ட் டைமுக்கு நான் அங்கிருப்பேன்.”

“நீ மட்டும் இல்லைன்னு வை…”

“கூல் பரிதிண்ணா.” சிரித்தபடி கூறினான்.

“என் டென்சன் உனக்கு சிரிப்பா இருக்காடா? நீ இங்க வந்த அப்புறம் உன்னை கவனிச்சிக்கிறேன். திருநெல்வேலி வர இரண்டு ஸ்டேஷன் இருக்கும்போதே சொல்லு… ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்புறேன்.”

“கல்யாணம் திருநெல்வேலி தான பரிதிண்ணா. நான் மண்டபத்துக்கு நேரா வந்துடுறேன்.”

“நெல்லை டவுனில் இல்லைடா… கொஞ்சம் தள்ளி” என்ற பரிதி “சொன்னதை செய்டா” எனக்கூறி வைத்துவிட்டான்.

பேச்சு மும்முரத்தில் பாரி அவன் ஏற வேண்டிய ரயில் வந்ததையும் மக்கள் தங்கள் இருக்கைத்தேடி அலைமோதி எறியதையும் கவனிக்கவில்லை.

கடைசி நிமிடத்தில் கவனித்து தான் பயணிக்கவிருக்கும் ஏசி பெட்டியின் உள்ளே ஏறியவனுக்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது.

தனது இருக்கை இருக்கும் கூபேவினை நெருங்க நெருங்க புதுவிதமான உணர்வு அவனைத் தாக்கியது.

‘என்னதிது… புது ஃபீல்’ என நினைத்தவன் இதயப்பகுதியை நீவி விட்டுக்கொண்டான்.

ஆழ்ந்து மூச்சினை உள்ளிழுத்து வெளியேற்றி துடிக்கும் மனதை சீர் செய்து தன்னை நிலைப்படுத்தினான்.

வண்டி நகரத் தொடங்கியிருந்தது.

இருவர் மட்டும் பயணிக்கக்கூடிய குளிரூட்டி வசதியுடன் கூடிய கூபே அது.

கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், மீண்டும் கதவினை தள்ளி சாற்றி… கையிலிருந்த பேக்கினை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு திரும்ப… ஒரு பக்க முகம் முழுக்க கூந்தல் வழிந்து மறைத்தபடி, மறுபக்க முகம் தெரியாது சன்னல் பக்கம் பார்வையை பதித்தவாறு பெண்ணொருத்தி அமர்ந்திருக்க கண்டான்.

‘பொண்ணா… செக் பண்ணித்தானே சீட் வாங்கினேன்’ என்று உள்ளுக்குள் ஆராய்ந்தாலும், அப்பெண்ணின் தோற்றம் பார்த்து பழகிய உணர்வை கொடுக்க தலையை உலுக்கிக்கொண்டான்.

‘ரெண்டு நாள் ஒரு பொண்ணுக்கூட தனியா… முடியாது பாரி, இறங்கிடு’ என்று அவன் கால்களை நகர்த்தி திரும்பிய கணம்… இரண்டரை வருடங்களாக அவன் கேட்கத் துடித்த அழைப்பு மெல்லொலியாக அவன் செவிகளை நிறைத்தது.

“வேந்தா…”

அவ்வோசை இதயத்தை சில்லென்று தாக்க… உடல் முழுக்க ஒருவித இதம் பரவ… பனிச்சிற்பமாக உறைந்து நின்றான்.

அவனது அருகில் வந்தவள் முதுகு புறமாக அவனின் தோளின் மீது கை வைத்திட…

அத்தொடுகை பனியாக அவனை கரைய வைத்தது.

“பூ” என்று முணுமுணுத்தவன் இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கண்களை இறுக மூடியிருந்தான்.

கண்களை திறந்தால் எப்போதும் அவள் உடனிருப்பதைப்போல் கண்முன் விரியும் கனவு காட்சி கலைந்து விடுமோ என்று அஞ்சி கண்களை திறவாது அப்படியே அமர்ந்திருந்தான்.

மனம் எங்கும் பூ என்ற முணுமுணுப்பு.

பாரியின் முன்பு மண்டியிட்டு அமர்ந்த பூ… அவனின் கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் பொத்தியபடி…

“என்கிட்ட பேசு வேந்தா” என்றாள்.

“என்ன பேசணும் தெரியல.” இமை திறந்தவன், அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

இரண்டரை வருடங்களுக்கு முன்பிருந்த பூவின் முகத்தில் மாற்றம்… ஒரு பக்குவம் இப்போதிருக்கும் முகத்தில்.

இடையில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும், தன் கண் முன்னே இருக்கும் அவனின் பூவை அவனால் ஏனோ தவிர்க்க முடியவில்லை.

பாரி தன்னிடம் பேசுவானோ மாட்டோனோ என்று கலங்கியபடியே பூ அவனை பார்த்திருக்க…

“சில் மலரே…” என்றவன் தன்னை மீட்டிருந்தான். அவளின் கலக்கத்தை காணும் சக்தியின்றி.

“எப்படிடா இருக்க?”

கண்களில் கண்ணீர். உதட்டில் புன்னகை. எல்லா பக்கமும் தலையசைத்தாள்.

அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து ஆட்டியவன்…

“டெல்லியில என்ன பன்ற?” எனக் கேட்டான்.

“ஒரு ப்ரொஜெக்ட் விஷயமா” சொல்லியவள் அவனை தலை முதல் அடி வரை பார்வையால் ஆராய்ந்தாள்.

“பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு பார்க்குரியா?”

“ம்ப்ச்… உனக்கு இந்த லுக் நல்லாயிருக்கு வேந்தா. போலீஸ் லுக்.”

“ஆஹான்…”

அதன் பின்னர் அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே சென்றது.

மறந்தும் இருவரும் பழையதை பேசவேயில்லை. என்ன நடந்தது, எதனால் இப்படி எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே அறிந்தவையை மீண்டும் கேட்டு ஒருவரையொருவர் ரணப்படுத்த விரும்பாது… தங்களின் சந்தோஷ பக்கங்களை மட்டும் புரட்டிக் கொண்டிருந்தனர்.

“நான் சொல்லாமலே போலீஸ் ட்ரெயினிங்கில் இருக்கேன்னு எப்படித் தெரியும்?”

“பரிதி மாமா பிளஸ் உன் மொபைல் நெம்பர்…”

“அண்ணா காண்டாக்ட்டில் இருக்காங்களா உன்னோட?” கேட்ட பாரிக்கு அத்தனை வருத்தம்.

‘தன்னை மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தாளா?’ என்று.

“இல்ல. உன்னோட பேசாம யாரோடவும் பேச நான் நினைக்கல வேந்தா” என்றவள், “மாமாக்கு மேரேஜ்” என சொல்ல வந்தவள் அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.

பரிதி தன்னுடைய மேரேஜிற்கு அழைத்திருப்பான் என்று பாரியாக யூகித்துக்கொண்டான்.

அமிர்தாவைப்பற்றி அவளும் கேட்கவில்லை, அவனும் எதுவும் கூறவில்லை.

அவி மற்றும் ஜென்னை பற்றி அவர்கள் பேச்சு வர… பாரி இருவருக்கும் அழைத்து பூவை அவர்களுடன் அலைபேசியில் பேச வைத்தான்.

“நாங்களும் பரிதிண்ணா மேரேஜ்க்கு வர்றோம். அங்க நேர்ல மீட் பண்ணிக்கலாம்” என்று அவி கூற அவர்களின் உரையாடல் முடிவுற்றது.

பாரிக்கும் பூவிற்கும் நடுவில் பகிர்ந்துகொள்ள நிறைய இருந்தன. ஆனால் யார் தொடங்குவதென்று இருவருக்குள்ளும் தயக்கம்.

அக்கணம் பூவின் அலைபேசி ஒலித்தது. அரசு தான் அழைத்திருந்தார்.

“அம்மாடி… கெளம்பிட்டியாடாம்மா?”

“ஒரு மணி நேரம் ஆகுதுங்கப்பா” என்றவள் பாரி உடனிருப்பதை தெரிவிக்க… நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவனிடம் பேசினார்.

எத்தனைமுறை அவருக்கு பாரி அழைத்திருப்பான். பூவின் வார்த்தைகளை மீறி அவர் எடுத்ததில்லை. அந்த வருத்தம் கொஞ்சமுமின்றி அவரிடம் எப்போதும் போல் பேசினான். அவருக்குத்தான் குற்றவுணர்வாகிப்போனது.

“தமிழுக்கு விருப்பமில்லாத ஒன்னை எப்பவும் நான் செய்ததில்லை பாரி” என்றவர் அவனிடம் மன்னிப்பு வேண்டிட… புன்னகையில் கடந்துவிட்டான் பாரி.

அரசு அழைப்பினைத் துண்டிக்க… பூவிடம் அலைபேசியை நீட்டிய பாரி அப்போதுதான் அதன் திரையை கவனித்தவனாக அவளின் கையில் கொடுத்தான்.

பயிற்சி சீருடையில் பாரியின் தற்போதைய புகைப்படம்.

இது எப்படி உனக்கு கிடைத்தது என்று பாரி அவளிடம் கேட்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் புலனத்தில் அவன் வைத்த படம் அது. தன்னை தொடர்ந்து கொண்டிருந்தாள் என்பதே சற்று ஆறுதல் அளித்தது.

“இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட உனக்கு என்கிட்ட பேசணும் தோணவேயில்லையா பூ?” கேட்கக்கூடாது என்று நினைத்ததை கேட்டுவிட்டான்.

ஆனால் அவளிடம் தான் பதிலில்லை.

“நான் உன்னை அப்பப்போ பார்த்துட்டு தான் இருக்கேன் வேந்தா.” பாரியிடம் ஆச்சர்ய பாவம்.

“தூரத்தில் நின்னு பார்த்திட்டு போயிடுவேன்.”

“அப்போ இந்த ரெண்டு வருஷத்துல என்னென்ன நடந்துச்சுன்னும் உனக்குத் தெரியும் அப்படித்தான?”

ஆமென்று மௌனமாக தலையாட்டினாள்.

“யாருக்காக பூ என்னை விட்டு போன… என்னோட சந்தோஷத்துக்காகவா?” எனக் கேட்டவன், “என் சந்தோஷம் நீதான்னு உனக்கு தெரியாதுல?” என்றிட… பூ இமை சிமிட்டாது அவனை பார்த்தாள்.

“அமிர்தா போன அப்புறம் கூடவா உனக்கு என்கிட்ட பேசணும் தோணல?”

“இப்போ பார்த்ததும் நான் தான வேந்தா பர்ஸ்ட் பேசினேன்” என்று அவனிடம் கூறியவள், ‘உனக்காகத்தான் நான் இங்க வந்தேன்’ என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.

“பார்த்ததும் தான். பார்க்காம இருந்திருந்தா, பேசியிருக்கமாட்ட இல்லையா?”

பூவிடம் பதிலில்லை.

அவனது கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் இருக்கும் ஒரே பதில்… அவளது காதல். அவன் மீது அவள் கொண்டுள்ள அளவில்லா நேசம். அதனை சொல்ல நினைத்தாலும் அவளால் சொல்லிடத்தான் முடியுமோ? அவனின் நட்பை கடந்து.

“சாரி வேந்தா…”

அவனால் முடியாது என்று தெரிந்தும் அவனுக்கு அவளாகக் கொடுத்திட்ட பிரிவிற்காக. அவள் என்ன நினைத்து வலிக்க வலிக்க அவளது வேந்தன் கற்பனையிலும் கற்பனை செய்திடாத பிரிவை கொடுத்தாளோ அதற்கு அர்த்தமேயில்லாமல் அல்லவா நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன.

பூ ஒன்றை நினைத்து அமிர்தாவிற்கு பாரியை விட்டுக்கொடுத்து விலகிச் சென்றாள்.

மலரவளுக்காக பாரி அவனது காதலையே அல்லவா முறித்துக்கொண்டான்.

“நீ தப்பேதும் செய்யலயே பூ. எதுக்கிந்த சாரி” என்ற பாரி… “ஒருவிதத்தில் நீ விலகிப் போனதுல நல்லதும் இருக்கு பூ” என்றான்.

அவள் புரியாமல் அவனின் வார்த்தைகளில் குழப்பம் கொண்டு அவனை ஏறிட்டாள்.

“பிரிவு… வாழ்க்கையில் அடிக்கடி வர ஒன்னு. பிரிவில்லாத உறவில்லை. அப்போ பிரிவை நீ தரமா இருந்திருந்தா… இவ்வளவு தொலைவு உன்னை பிரிஞ்சி நிச்சயம் நான் வந்திருக்கமாட்டேன். அது பயிற்சிக்காகவேன்னாலும் கூட. நீ என்னோட இல்லாத இடத்துல இருக்கவே பிடிக்காமத்தான் இந்த தொலைவுக்கு ஓகே சொல்லிவந்தேன்” என்று சொல்லியவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கும் வலியை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனை அவளைத்தவிர வேறொருவரால் இந்தளவிற்கு புரிந்துகொள்ளத்தான் முடியுமா?

“என்ன நீ கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருக்கலாம். வேகமா வந்தா(ள்). அதே வேகத்தோடு போயிட்டா. ஷீ இஸ் பாஸ்ஸிங் கிளௌட். அவளுக்காக அவள் சொன்னான்னு என்னை நீ விட்டுகொடுத்து போனதத்தான் இன்னும் ஏத்துக்க முடியல பூ” என்ற பாரி வெகுவாக உடைந்திருந்தான்.

இத்தனை நாள் உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருந்த வெட்கையெல்லாம் அவளிடம் சொல்லிடத் துடித்தான்.

“ஒரே ஒருமுறை என்கிட்ட பேசியிருந்தாலும்… நமக்குள்ள இந்த பிரிவு வந்திருக்காது” என்றவனின் முகம் முழுக்க மிதமிஞ்சிய வேதனையே…

“ரிசல்ட் வந்தப்போ… இந்திய அளவில் எட்டாவது ரேங்க். அந்த சந்தோஷத்தைக்கூட உன்கிட்ட சொல்ல முடியாம என்னால முழுசா அனுபவிக்க முடியல. அன்னைக்கு எத்தனை முறை உனக்கு கால் பண்ணியிருப்பேன்? உனக்காகத்தான் இந்த வேலையே!”

“நீயூஸில் பார்த்தேன் வேந்தா.”

“அப்போக்கூட உனக்கு என்கிட்ட பேச தோணலையா பூ?” பாரிக்கு கண்கள் கலங்கி விட்டன.

நீர் சுரந்த கண்களை துடைத்துக் கொண்டவன்…

“உன் விஷயத்துல மட்டும் நான் ஏன் இவ்வளவு சென்சிட்டிவ்வா இருக்கேன்னு எனக்கேத் தெரியலடா!”

‘நட்பைத் தாண்டி யோசி வேந்தா… காரணம் தெரியும்.’ மனதில் மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.

பூ விழி அசைக்காது அவனையே பார்த்திருக்க.

“ஓகே ஃபைன். நடந்தது எல்லாம் அப்படி ஓரமாக வச்சிடலாம். இனி என்னைவிட்டு போகவேக்கூடாது” என்று விரல் நீட்டி எச்சரித்தவன்,

“என் மேல பிராமிஸ் பண்ணு” என்றான். இன்னும் மூன்று தினங்களில் அவளை விட்டு நிரந்தரமாக பிரியும் முடிவெடுத்தவனாக செல்லவிருக்கிறோம் என்பதை அறியாதவனாக.

நொடியும் தாமதியாது சத்தியம் செய்தவள்…

“ரியலி… பேட்லி மிஸ் யூ வேந்தா” என்றிட…

“போடா’ம்மா” என்று அவளின் கன்னத்தில் வலிக்காது அடித்தவன், தன்னுடைய பூவை நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டான்.

அதற்கு பின்னான நேரங்கள் முழுக்க அவர்கள் பேசிய பல கதைகளில் கழிந்தன.

அன்றைய இரவு அவர்களுக்கு உறங்கா இரவாகிப்போக… அடுத்தநாள் பகலில் சில மணி நேரம் உறங்கி எழுந்தனர். அப்படியே பேச்சு, சிரிப்பு, பகிர்தல் என இரண்டு நாள்  பயணம் சுவாரஸ்யமாகவே சென்றது.

இரு தினங்களும் பயணத்தில் எப்படி கழியுமோ என்றிருந்தவனுக்கு ஒவ்வொரு நொடியும் அத்தனை வேகத்தில் கடந்திருந்தன.

“ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு எப்படி போற பூ? நான் வந்து விடவா?” என்று கேட்டவன் அதன் பிறகே பொன்னுவின் நினைவு வந்தவனாக… “பொன்னு உண்டில்லைன்னு பண்ணிடும்ல” என்றான்.

“பொன்னு இறந்து வருஷம் இரண்டாகப் போகுது வேந்தா…”

அவள் சொல்லியதும் பாரியின் பார்வை அவள்மீது குற்றம் சுமத்தின.

“அப்போ நமக்கு தடையா இருந்தவர் இல்லாமப் போனப்பிறகும்…” பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.

“ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போயிருக்கும் இதத்தை நான் இழக்க விரும்பல பூ” என்றவன், தலையை அழுந்த கோதிக்கொண்டான்.

பாரி பிரிவைப்பற்றி பேசினாலே,

அவளிடம் மௌனம் மட்டுமே.

அப்புறம் என்ன, தன் காதல் தான் நமக்கு தடையாக இருந்ததென்று அவளால் சொல்லவா முடியும்.

சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி. அதனை பாரியே கலைத்தான்.

“இப்போகூட என்னை வீட்டுக்கு கூப்பிட மாட்டியா பூ?” ஏக்கமாகக் கேட்டிருந்தான்.

“வீட்டுக்குத்தான்…” சொல்ல வந்தவள் சொல்லாது,

“போகலாம் வேந்தா” என்றாள்.

அதன் பின்னர் பாரி முழுக்க தன்னுடைய பயிற்சியை பற்றி பேசிக்கொண்டே வர பூ அவனையே ரசித்தவளாகக் கேட்டிருந்தாள்.

“உன் கண்ணுல ஏதோ மாற்றம் பூ.”

திடீரென பாரி அவ்வாறு சொல்லியதும் பூவிற்கு தூக்கிப்போட்டது.

“என்ன… என்ன வேந்தா?” தடுமாற்றமாக வினவினாள்.

“உன் கண்ணு ஏதோ சொல்ல நினைக்குதுன்னு தோணுது. ஆனால் அது என்னன்னு தான் புரியல” என்றான்.

மூச்சு சீராகிட… “ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால கொஞ்சம் அழுத்தமா ஆழ்ந்து பார்த்தேன். அதுக்காக இல்லாததை யோசிக்காத வேந்தா அப்படியே ஏதேமிருந்தா உன்கிட்ட  சொல்ல எனக்கென்னத் தயக்கம்.” அவளின் மனமே அவள் கூறியதை ஏற்காது சிரித்து வைத்தது.

‘எங்கே உன் காதலை சொல்லு பார்ப்போம்.’ சொல்லிய மனதை தட்டி வைத்தாள்.

“இல்லை… நீ எதையோ மறைக்கிற?”

“அப்படியெல்லாம் இல்லை. ஸ்டேஷன் வந்திருச்சு இறங்கலாம் வா” என்றவள் தன்னுடைய பையை எடுக்க வழக்கம்போல் பாரி வாங்கிக்கொண்டான்.

ரயிலிலிருந்து இறங்கியதும்,

“பரிதிண்ணா கால் பண்ண சொன்னாங்க. மறந்துட்டேன். இப்போ மண்டபம் அட்ரெஸ் கேட்டால் திட்டப்போறாங்க” என்று பூவிடம் சொல்லியவாறு பாரி அலைபேசியை எடுக்க…

“நான் கூட்டிப்போறேன் வேந்தா” என்றாள் பூ.

“உனக்குத் தெரியுமா? நீ வீட்டுக்கு போகல?” என்று வினவினான்.

“இது எங்க ஊரு” என்று கெத்தாகக் கூறியவள் டேக்சி ஒன்றை பிடித்தாள். இருவரும் ஏற டிரைவரிடம் போக வேண்டிய இடம் சொல்லிய பூவிற்கு பாரி உடனிருப்பதே அத்தனை மகிழ்வை கொடுத்தது.

பூ அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியதால் போகும் இடம் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாது, அவள் டிரைவரிடம் சொல்வதிலும் கவனமில்லாது சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி இருந்தான் பாரி.

நேரம் மதியம் மூன்று.

“ரிஷப்ஷனுக்கு என்னால வர முடியாது பரிதிண்ணா சொன்னாங்க. இப்போ இவ்வளவு சீக்கிரம் போய் நின்னா ஷாக் ஆவாங்க” என்று சொல்லிய பாரிக்குத் தெரியவில்லை, தனக்கு அங்கு நேரவிருக்கும் அதிர்வைப் பற்றி.

_________________________________

“வாவ் நைஸ் பிளேஸ்.”

கரிய தார் சாலை வளைந்து நெலிந்து நீண்டிருக்க… இரு மங்கிலும் வானைத் தொட்டு அணிவகுத்து நிற்கும் தென்னை மரங்கள் பார்ப்பதற்கே அத்தனை அழகாய் காட்சியளித்தது.

அதனை பார்த்தவாறே அதன் அழகை சிலாகித்துக் கூறினான் பாரி.

“டவுனிலிருந்து கொஞ்சம் தள்ளின்னு அண்ணா சொன்னாங்கா. பட் ரொம்ப நேரம் போற மாதிரி இருக்கே பூ.”

அதுவரை சாலையோர இயற்கையை ரசித்தவாறு வந்தவன்… செல்லும் நேரத்தை கணித்தவாறு வினவினான்.

காரில் ஏறியது முதல் பாரியையே வைத்த கண் எடுக்காது ரசித்திருந்தவள் அவன் திடீரென அவள் புறம் திரும்பி கேட்டதில் சற்று தடுமாறினாள்.

‘தான் வேகமாகத் திரும்பியதில் பயந்துவிட்டாள்’ என நினைத்த பாரி…

“ரிலாக்ஸ் மலரே!” என்று அவளின் கை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

“இப்போ நாம பாபநாசம் போறோம் வேந்தா” என்றவளிடம்,

“உங்க வீட்டுக்கா பூ?” என உற்சாகமாகக் கேட்டான்.

“இல்லை” என்றவள் “நம்ம வீட்டுக்கு” என அவன் சொல்லியதை மாற்றிக் கூறினாள்.

“சூப்பர் மலரே!” என்று சிறு பிள்ளையென தன் மகிழ்வை முகம் ஒளிர காண்பித்தவன், “பரிதிண்ணாக்கு கால் பண்ணி சொல்லிடுறேன். இல்லைன்னா நான் வரலன்னு ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்க” என்று பூவிடம் சொல்லியவாறே பரிதிக்கு அழைத்து, டெல்லி ரயிலில் பூவினை சந்தித்ததை சொல்லி அவளுடன் வீட்டிற்கு செல்வதாகக்கூறி, இரவு வந்துவிடுவதாக பரிதியின் பதிலைக்கூட கேட்டிடாதவனாக பேச்சினை முடித்துக்கொண்டான்.

“இப்போ தான் பர்ஸ்ட் டைம்  நம்ம வீட்டுக்கு வரப்போறேன்ல மலரே?” பாரியிடம் உற்சாகம் ததும்பியது.

அவனின் சந்தோஷம் அவளுக்கும் அதீத சந்தோஷத்தைக் கொடுத்தது. பாரியின் தோளில் சாய்ந்து கண்களை மூடி அந்நேர கனத்த சந்தோஷத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

“என்னடா டயர்டா இருக்கா?” திடீரென தன் தோள் மீது சாய்ந்து கண் மூடியதும்  அவளுக்கு லாங் டிராவல் முடியவில்லை போலும் எனக் கேட்டிருந்தான்.

“உன் மேல சாய்ஞ்சிக்க ஏதாவது காரணம் இருக்கணுமா வேந்தா?”

பூவின் அக்கேள்வியில் பாரியிடம் மலர்ந்து விரிந்த புன்னகை.

“ரெண்டு பக்கம் ரோடு இருக்கேம்மா எதுல போறது?” ஊருக்குள் சென்றதும் டிரைவர் வினவினார்.

முதன்மை சாலையிலிருந்து இரண்டு கிளை சாலைகள் செல்ல அதில் ஒன்றை காண்பித்து போகச் சொல்லிய பூ… பாரியின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக்கொண்டாள்.

அங்கு பாரிக்கு இருக்கும் ஆச்சர்யத்தை அறிந்தவளாக உள்ளுக்குள் படப்படத்தாள். அதனை மறைக்கும் பொருட்டே இந்த கைகோர்ப்பு.

“அங்க வாழை மரம் கட்டியிருக்க வீட்டு முன்ன நிறுத்துங்க.”

டிரைவரிடம் பூ சொல்ல…

“வீட்ல விசேஷமா பூ?” என்றான் பாரி.

“ஆமாம்” என்றவள் “அக்காக்கு கல்யாணம் வேந்தா” என்றாள்.

“டூ டேஸ் உன்னோடவே இருந்திருக்கேன் சொல்லவேயில்லையே” என்று அவன் முகத்தை சுருக்கி கேட்க…

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்… அதுக்காகத்தான் சொல்லல. இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு வா” என்று காரிலிருந்து இறங்கியவள்,

வீட்டிற்கு முன்பு போட்டிருந்த பந்தலில் சீரியல் பல்புகளை மாட்டிக் கொண்டிருந்தவரிடம்,

“முத்துண்ணா, வேந்தா வந்திருக்கான்னு உள்ளே போய் சொல்லுங்க” என்று அவரை விரட்டினாள்.

டிரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு வந்த பாரி,

“என்ன பூ எனக்கு வரவேற்பு பலமா இருக்கும் போல” என்று கேட்டுக்கொண்டே, காரிலிருந்து இறக்கிய பைகளை கையில் தூக்கியபடி நிமிர, பார்வதி முகம் முழுக்க சிரித்தபடி அவனை நோக்கி வீட்டினுள்ளிருந்து வர… அவர் பின்னாலேயே பூ மற்றும் பாரியின் குடும்பத்தினர் அனைவரும் வந்தனர். பாரியும், ஜென்னும் உடனிருந்தனர்.

“அம்மா… அப்பா… நீங்க?

பரிதிண்ணா நீங்களும்… பூ வீட்ல?”

பார்க்கும் காட்சி அவனை ஆச்சர்யத்தின் உச்சியில் தள்ளியிருக்க கேட்பதை சரியாகக் கேட்க முடியாது தடுமாறினான்.

“பரிதி மாமாக்கும் இளா அக்காக்கும் தான் கல்யாணம் வேந்தா.” பூ பாரியிடம் சொல்லிட அத்தனை ஜாலங்கள் அவன் முகத்தில்.

“அப்போ இனி நமக்குள்ள பிரிவு வர சான்ஸே இல்லைல மலரே? இப்போ நெருங்கிய சொந்தக்காரங்களாகப் போறோம்… அப்போ நாம பேசி பழக இனி யாரும் தடையா இருக்க மாட்டாங்கல?” பாரி வெகுவாக நெகிழ்ந்திருந்தான். இருவரின் முகமும் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.

பாரியும் பூவும் இப்படி இணையாக நின்றிருப்பதை பார்க்கும்போது பார்வதிக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதி அவரை ஒரு முடிவும் எடுக்கச் செய்தது.

இரண்டு வருடங்களாக சோகமே துணையென்று சுற்றிக் கொண்டிருந்த தன்னுடைய இளைய மகனின் சிரிப்பை கண்டுவிட்டதால் கணநேரத்தில் மனம் எடுத்த முடிவு அது.

பார்வதி தில்லையிடம் பாரியின் சிரிப்பை சுட்டி கண் காட்டிட… அவரும் அதைத்தான் பார்ப்பதாக மொழிந்தார்.

“பாரியோட சிரிப்பு தமிழிடம் தாங்க இருக்கு.”

“ஆமாம் பாரு.”

“முதல் முறையா வூட்டுக்கு வந்த புள்ளையை வாசலிலே நிற்க வச்சு பேசிட்டு இருக்கீங்களே” என்ற மணி, பாரியை உள்ளே வரவேற்றார்.

“அத்தை” என்று அவரை பாரி குறிப்பிட, மணி அவனின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.

“மாப்பிள்ளை என்னைவிட உனக்கு வரவேற்பு பலமா இருக்குடா பாரி” என்று சிரித்த பரிதிக்கும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தன் தம்பியை இப்படி சிரித்த முகமாக பார்த்ததில் மனம் நிறைந்திருந்தான்.

அவியும் ஜென்னும் பாரியை ஓடிவந்து அணைத்துக்கொள்ள…

“நீங்கக்கூட என்கிட்ட சொல்லலயே?” என கோபித்தான் பாரி.

“உன் பூவையே கேளு, அவள் தான் நாலு நாளுக்கு முன்ன எங்களை நேர்ல மீட் பண்ணி பேசி… இங்கவர பஸ்ஸும் ஏத்திவிட்டு உன்னை பிக்கப் பண்ண டெல்லி வந்தா(ள்).”

ஜென் சொல்லி முடிக்க…

“உளறிட்டாள் பாவி” என்று நாக்கை கடித்து ஒரு கையால் முகத்தை மூடி விரல் இடுக்கு வழியாக பூ பாரியை பார்க்க.. அவனோ இடுப்பில் கை குற்றி நின்று அவளை முறைத்தான். நொடியில் இருவரும் சிரித்து விட்டனர்.

“இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட மறைச்சிருக்க பூ?” என்று கேட்டவனிடத்தில் கோபம் சிறிதுமில்லை. தனக்காக அவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் என்பதே அவனுக்கு பூவின்மீது இத்தனை நாளிருந்த கோபத்தை குறைத்திருந்தது.

“நம்ம பாரி இப்படி சிரிச்சிகிட்டே இருக்கணுன்னா பூ அவனோட வாழ்க்கையில இருக்கணுங்க.” பார்வதி தன் மகனை வாஞ்சையாக கண்களால் தழுவியபடி சொல்ல, தில்லை அதனை ஆமோதித்தார்.

அதே எண்ணம் தான் அரசுவிற்கும் அந்நொடி.

“தமிழ் சந்தோஷம் அந்த புள்ள பாரிகிட்டதேன் இருக்குது மணி.”

“ஆமாங்க… இவுக கல்யாணம் முடிஞ்சதும், அவங்களுக்கு பண்ணிடலாம்.” மணி ஆசையோடு கூறினார்.

“ரெண்டு பேரும் ஒத்துப்பாங்கன்னு தோணல மணி” என்றவர் அவர்களின் ஆரம்ப கால நட்பிலிருந்தே இருவரையும் பார்த்து கவனித்துக் கொண்டிருக்கிறாரே! மகளிடம் தெரிந்த தடுமாற்றம் பாரியிடம் இல்லையென்று தந்தையாக அவரால் தெரிந்துகொள்ள முடிந்தது. அத்தோடு திடீரென்று மகள் கல்லூரி செல்லமாட்டேன் பாரியுடன் இனி நீங்களும் பேசாதீங்க என்று அழும் கண்களோடு சொல்லும்போது அவளின் மனதை அவரால் கணிக்கக்கூடவா முடியாதிருக்கும். யூகித்ததை மகளுக்கு தெரியாமல் மறைத்து அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டார்.

பாரி யாரையும் விரும்பாமல் இருந்திருந்தால் கூட தன் மகளுக்காக சென்று பேசியிருப்பாரோ என்னவோ?

தங்கம் உடல்நிலையில் திடீர் குறைவு ஏற்பட்டதால் அவர் தற்போது படுக்கையில் தான் இருக்கிறார். அவரது அறையில் இருந்தவாறு தான் முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த பாரி, பூவின் சந்தோஷத்தை அரசு, மணி பார்த்தபடி பேசினர்.

சட்டென்று ஏதோ யோசனையில் கணவர் இருக்கவும், அவரைத் தொட்டு நிகழ் மீட்டார் மணி.

“கல்யாண வேலை ஆயிரம் கெடக்கு… நீங்க பாட்டுக்கு உங்க பொண்ணு சிரிப்பை ரசிச்சிக்கிட்டு நின்னுட்டு இருக்கீங்க?”

“அவள் இப்படி சிரிச்சதை பார்த்து எம்புட்டு நாளாச்சு மணி” என்றவர், “நீ அம்மாவை கெளப்பு” எனக்கூறி அறையிலிருந்து வெளியில் வந்து…

“இன்னும் கொஞ்ச நேரத்துல மண்டபத்துக்கு போவணும். சுருக்க எல்லாரும் கெளம்புங்க” என்று அனைவருக்கும் பொதுவாகக் கூறினார்.

“சரி வேந்தா நீ பிரெஷ் ஆகிட்டு வா” என்ற பூ, அவனை பரிதி அழைத்துச் சென்றதும் ஜென்னுடன் தன்னுடைய அறைக்கு வந்தாள்.

பரிதியுடன் அறைக்குள் நுழைந்த பாரி, தன் அண்ணனை அவனின் முதுகு பக்கமாக தாவி அணைத்துக் கொண்டான்.

“தேன்க்ஸ் பரிதிண்ணா” என்றான்.

“அண்ணாக்கு யாராவது தேன்க்ஸ் சொல்லுவாங்களா பாரி” என்ற பரிதி, “ஆமா எதுக்கு?” எனக் கேட்டான்.

“முடியல பரிதிண்ணா… ஒரே செண்ட்டிமெண்டா இருக்கு” என்று உள் வந்த அவி, “நீங்க இளா அண்ணியை கல்யாணம் செய்யப்போறது அவனுக்காகன்னு ஃபீல் பன்றான் போல” என நண்பனை புரிந்தவனாகக் கூறினான்.

“இல்லைன்னு சொல்லமாட்டேன் பாரி. பட் இளாவை பார்த்ததும் எனக்கும் ரொம்ப பிடிச்சுது” என்றான் பாரி.

பூவும் பாரியும் எதனால் பிரிந்தார்கள் என்ற காரணம் குடும்பத்தார் ஒருவருக்கும் தெரியாது. விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற பூ திரும்பி வரவேயில்லை.

வந்தாள்… தேர்வெழுத மட்டும். இறுதி பருவம் அல்லவா… வேறெங்கும் தொடரவும் வாய்ப்பில்லை. அதனால் பாரியுடன் ஒன்றாக சுற்றித்திரிந்த கல்லூரிக்கு இறுதியாக தேர்வெழுத மட்டுமே வந்தாள். அவள் தேர்விற்கு வந்தாள் என்பதே தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, துறையிலிருக்கும் குறிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவு அறிக்கை காகிதத்தில் அவளின் பெயரை பார்த்த பின்புதான் தெரியும்.

அன்று பாரி கொண்ட வருத்தத்தின் அளவை சொல்லில் வடிக்க முடியாது.

விடுமுறையில் பாரி அழைத்த எந்த அழைப்பிற்கும் பூவிடம் பதிலில்லை. வழக்கம் போல் பொன்னுவை மனதில் வைத்து, அரசுக்கு அழைத்தால் அவரும் ஏற்கவில்லை.

அவன் அனுப்பும் குறுந்தகவல்கள் பார்க்கப்பட்டிருந்தன, ஆனால் பதில்கள் இல்லை. பாரி குழம்பி போனான்.

வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பிட… அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. பரிதி அழைத்த போது மட்டும் பூ எடுத்தாள். அப்போது பாரியும் உடனிருந்தான்.

பரிதி ஸ்பீக்கரில் போட்டிருந்தான்.

“என்னை யோசிக்காம அவன் வாழ்க்கையை பார்க்க சொல்லுங்க மாமா” என்றவள் இணைப்பை இறுதியாகத் துண்டித்திருந்தாள்.

அதன் பின்னர் அவள் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோதெல்லாம் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே வர பாரி முற்றிலும் சோர்ந்து போனான்.

பூ பரிதியிடம் போனில் சொல்லியதே காதிற்குள் ரீங்காரமிட… அடுத்து என்னவென்ற சிந்தனையே இல்லாது விட்டத்தை வெறித்தபடி அறைக்குள்ளே முடங்கி கிடந்தான்.

பார்வதி அரசுவிற்கு அழைக்க…

“என்னன்னு தெரியாம நாம ஒரு முடிவுக்கு வரவேண்டாம்மா” என்றவர், “என் பொண்ணுக்காக நானும் தள்ளித்தான் இருந்தாகணும்” என்றுகூறி வைத்திட மேற்கொண்டு அவரிடம் பேசவும் வழியில்லாது போனது.

கல்லூரி திறப்பதற்கு முதல் நாள் பாரி வீட்டிற்கு அவி வந்திருந்தான்.

எப்போதும் உற்சாகத்தோடு வரவேற்கும் பார்வதி கவலையாக இருக்க… அவனை கண்டதும், “என்ன பிரச்சனைன்னு உனக்காவது தெரியுமா அவி?” எனக் கேட்டார்.

அவி தெரிந்தும் சொல்லாது மௌனமாக நின்றான்.

“வாடா அவி… இன்னைக்குத்தான் வழி தெரிந்ததா” என்றபடி வந்த பரிதி… இப்போதாவது தன் தம்பி அறையை விட்டு வெளியில் வரமாட்டானா என்ற எதிர்பார்ப்போடு… பாரியின் அறை நோக்கி பரிதி குரல் கொடுத்தான்.

“பாரி அவி வந்திருக்கான்.”

ஐந்து நிமிடங்கள் கடந்த பின்னர் கீழே வந்த பாரியின் தோற்றம் கண்டு நண்பனாக வருந்திய அவி நடந்ததை பூ சொல்லக்கூடாது என்று சொல்லியதையும் மீறி சொல்லிவிட்டான்.

“நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அமிர்தா” என்றான்.

பாரி விலுக்கென அவியை ஏறிட்டான்.

மற்றவர்கள் யாரிந்த அமிர்தா என்று பார்க்க…

“உன் ஆளு தானே பாரி. அன்னைக்கு நைட் இந்த பெயர் தான தமிழ் சொன்னா(ள்)” என்றபடி வந்தார் தில்லை.

நடக்கும் நிகழ்வில் பரிதிக்கு சுத்தமாக அமிர்தா நினைவில் இல்லை. தில்லை சொல்லியதும் தான் நினைவு வந்தது.

“அமிர்தாவால் என்ன?” பரிதி அவியிடம் வினவினான்.

கடைசி தேர்வின் போது நடந்த நிகழ்வை அப்படியே… அமிர்தா பேசிய ஒரு வார்த்தையையும் கூட்டியோ குறைத்தோ இல்லாமல் அவள் பேசியதை பேசியபடி சொல்லியவன், இறுதியில் பூ சொல்லியதையும் கூறிவிட்டான்.

பாரி அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனிடம் சுளித்த புன்னகை. அவ்வளவுதான் அவனின் பிரதிபலிப்பு.

அமிர்தாவின் பேச்சைக் கேட்ட குடும்பத்தாருக்கு சுத்தமாக அக்கணம் அவளை பிடிக்காது போனது.

“அமிர்தா உன்னோட இருந்தா இனி உன் வாழ்வில் உன் பூ கிடையவே கிடையாது பாரி” என்று சொல்லி பார்வதி சென்றுவிட்டார்.

“தமிழுக்கு இருந்த பயம் இதுதான் பாரி.” பரிதி சொல்லிட,

“அப்போ என்மேல நம்பிக்கையில்லையா?” எனக் கேட்டவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

தன்னிடமிருந்த மாதேஷின் அலைபேசியை எடுத்து அந்த புகைப்படம் அவனுக்கு யார் அனுப்பியது என்று ஆராய்கையில் அது அமிர்தா என்று காட்டியது.

பூவை தன்னிடம் பிரிப்பதற்காக வேண்டுமென்றே செய்யாத ஒன்றை செய்ததாக அவள் சொல்லியிருப்பாளோ என்று நினைத்த பாரிக்கு அப்படியில்லை என்றது உண்மை.

அடுத்த நாள் கல்லூரிக்கு பூ வரவில்லை என்பதிலேயே அவளின் முடிவு என்ன என்பதை பாரி அறிந்துகொண்டான்.

“தமிழோட திங்க்ஸ் எதுவுமே ரூம்ல இல்லை” என்று லீலா சொன்னபோது அவனின் எண்ணம் உறுதியானது.

‘அப்போ இதுதான் உன் முடிவா பூ?’ என தன் முன்னால் இல்லாதவளிடம் கேட்டவன், ‘உன் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பம்’ என இருந்துகொண்டான்.

அன்று அமிர்தா அவனிடம் பேச வருகையில்…

“இனி நமக்குள்ள ஒத்துவராது அமிர்தா” என்று நேரடியாகக் கூறிவிட்டான்.

அமிர்தா அதற்கும் பூவை காரணமாக வைத்து பேசிட…

“நீயெப்படின்னு எனக்கு எப்பவோ தெரியும். காதலிச்ச பொண்ணை அப்படியே ஏத்துக்கிறது தான் காதல். அதுக்காக மட்டும் தான் நீ செய்ததையெல்லாம் பொறுத்துக்கிட்டு அமைதியா இருந்தேன். அதை நான் உன்கிட்ட ஏமாந்ததா நீ நினைச்சா, அது உன்னோட தப்பு. எப்போ ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணுக்கு செய்யக்கூடாத ஒன்னை செய்தியோ அப்பவே உன் மேலிருந்த ஒரு பெர்சென்ட் காதலும் போயிருச்சு. இப்போ உன்மேல் வெறுப்பு மட்டும் தான் இருக்கு” என்றவன், “உன்னை கொல்லுற அளவுக்கு கோபம் வருது. ஒரு அடியாவது அடின்னு மூளை சொல்லுது. ஆனால் உன்னை அடிச்சி, தேர்ட் பெர்சன் உரிமையைக்கூட உன்கிட்ட காட்ட எனக்கு அருவருப்பா இருக்கு” என்று அவளைத் திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.

அதன் பின்னர் அமிர்தாவை முற்றும் முழுதாக தவிர்த்தான்.

அமிர்தா என்ற ஒருத்தியை தன் வாழ்நாளில் தான் சந்தித்ததே இல்லை எனும் விதமாக பாரியின் நடவடிக்கைகள் இருந்தன.

இறுதி வருடத் தேர்விற்கு முன்பு பாரியிடம் வந்த அமிர்தா,

“எக்ஸாம் முடிஞ்சதும் எனக்கு மேரேஜ்” என்று சொல்ல… “யார் நீ?” என்பதைப்போல் ஒரு பார்வை பார்த்து அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

காதலின் வலியோ அல்லது காதலிக்கு திருமணம் என்கிற வலியோ, அப்பெண்ணை தான் கைவிட்டுவிட்டோம் என்கிற குற்றவுணர்வோ பாரிக்கு சிறிதும் இல்லை. அவனை பொறுத்தவரை அமிர்தா என்பவள் யாரோ?

ஆனால் அமிர்தா பாரியை இழந்ததை நினைத்து வருந்தினாள். தன் அவசர பொறாமை புத்தியால் ஆத்மார்த்தமான ஒரு நட்பை பிரித்ததை எண்ணி தன்னுடைய இறுதி நாட்கள் வரை குற்றவுணர்வில் கலங்கி இருந்தாள்.

கல்லூரி காலம் முடிய,

வெறித்தனமாக ஐபிஎஸ் தேர்விற்காக படித்தான். பூ நினைவுகளை மூழ்கும் மனதை படிப்பில் கட்டிவைத்தான். ஒன்றரை வருடம் முழுக்க எந்நேரமும் படிப்பு படிப்பென்று சாப்பிடும் நேரம் கூட புத்தகமும் கையுமாக திரிந்தான். உறங்கும் நேரம் மட்டுமே புத்தகமின்றி இருந்தான்.

“இப்படி படிச்சி மூளை குழம்பிடப் போறான்” என பார்வதி கூட அந்நேரம் கவலை கொண்டார்.

படிப்பில் தன்னை முழுதாக தொலைத்தவன் மீண்டு வந்தது தேர்வு முடிந்த பின்னர் தான்.

தேர்வு முடிவு வரும்வரை, அவி, ஜென்னுடன் நன்றாக ஊர் சுற்றினான். பரிதியுடன் விடிய விடிய இரவு நேரங்களில் பேசி அடுத்து என்ன வென்று பகிர்ந்து கொண்டான். பார்வதியிடம் செல்லம் கொஞ்சினான். தில்லையுடன் சேட்டை செய்தான்.

இவை அனைத்தும் பூவின் நினைவிலிருந்து தப்பிப்பதற்காகவே அவன் செய்கிறான் என்று அனைவருக்கும் புரிந்து தான் இருந்தது.

முடிவு வந்த அன்று… அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.

இந்திய அளவில் எட்டாவது தரம் பெற்றிருந்தான்.

அவி முடிவு தெரிந்ததும் ஓடி வந்துவிட்டான். பாரியின் வீடே அமர்க்களமாக இருந்தது.

ஜென்னின் மூலம் விடயம் அறிந்த அவளின் தந்தைகூட அவனை அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இவை எதுவும் அவனை சந்தோஷப்படுத்தவில்லை.

யாருக்காக யாரின் வார்த்தைக்காக இவ்வளவு கடினப்பட்டு இதை பெற்றானோ அவளிடமிருந்து ஒரு அழைப்பு வராதா என்று அன்று அவன் ஏங்கிய ஏக்கம் பரிதியை ஒரு முடிவு எடுக்க வைத்தது.

அந்த முடிவு தான் அவனின் திருமணம்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
39
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்