Loading

அத்தியாயம் 19 :

பூ பாரியின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

என்ன தான் பாரியின் மீது கோபம் கொண்டு பேசாது வந்தாலும், சில நிமிடங்கள் கூட அவளால் அறையில் இருக்க முடியவில்லை.

‘இதென்ன புதிதாக பாரியின் மீது கோபமெல்லாம்’ என்று தன்னையே கடிந்து கொண்டவளுக்கு அவனை நேரில் பார்த்து பேசாது மனம் அமைதியடையாது என்று தோன்றிட… நேராக லீலாவின் முன் சென்று நின்றாள்.

பூ அறைக்கு வந்தது முதல் லீலா அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். தனியாக பேசினாள். தலையில் கொட்டிக் கொண்டாள். நெற்றியில் தட்டி தன்னையே திட்டிக்கொண்டாள். ஏதோ தீவிர யோசனையென்று லீலா அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

“நான் ரெண்டு நாள் ரூம்ல இல்லைன்னா மேனேஜ் பண்ணிப்பியா லீ?” எனக் கேட்டிருந்தாள்.

அதுவே அவள் பாரி வீட்டிக்கு செல்லவிருக்கிறாள் என்பதை உணர்த்திட…

“நீ போயிட்டு வா தமிழ். சரண்யா ரூமெட் நைட் அவுட் போயிட்டான்னு சொன்னாள். நான் அவளை நம்ம ரூம்ல நைட் படுக்க வச்சுக்கிறேன்” என்று உடனடியாகக் கூறினாள்.

“இப்போ தான் ரெண்டு நாள் போயிட்டு வந்தேன்…” என்று பூ தயங்கிட…

“நாட் ஆன் இஸ்யூ தமிழ்” என்றிருந்தாள் லீலா.

லீலாவை அணைத்து விடுவித்த பூ…

“பாரியை ஹர்ட் பண்ணிட்டேன் லீலா” என்றாள் உள்ளே அடங்கிய குரலில். அதுவே பூவின் மனநிலை தற்போது எப்படியிருக்குமென்று லீலாவுக்கு காட்டிட மேற்கொண்டு எதுவும் அவள் கேட்டுக்கொள்ளவில்லை.

“எப்படியும் கிளம்பியிருக்க மாட்டான்” என்ற பூ அரசுவிற்கு அழைத்து பாரி வீட்டுக்கு போகணும் என்று சொல்ல அவரும் ஏன் எதற்கு என்று கேட்டிடாது, வார்டனுக்கு அழைத்து சொல்லி பூ இரண்டு தினங்கள் வெளியில் தங்குவதற்கு அனுமதி வாங்கிக்கொடுத்தார்.

“ஓகே பை லீலா. டேக் கேர்” என்று லீலாவிடம் சொல்லிவிட்டு விடுதியை கடந்து கல்லூரி பார்க்கிங் பகுதிக்கு வர பாரி வண்டியின் ஒரு பக்கமாக கால்களைத் தூக்கி வைத்தவாறு அமர்ந்திருந்தான். அவனுக்குத் துணையாக அவியும் அதே நிலையில்.

கையில் பையுடன் வரும் பூவை கண்டதும் வேகமாக இறங்கி ஓடிய பாரி அவளிடமிருந்து பையை வாங்கியிருந்தான்.

‘இதுக்கெல்லாம் குறையில்லை’ என்று முணுமுணுத்த பூ,

“அவி ரொம்ப பசிக்குதுடா. சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” என்று அவியிடம் கூறினாள்.

“நைட் அவுட்டா தமிழ்” என்ற அவியிடம் தலையாட்டி கண் சிமிட்டிய பூ, அவள் சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லியதுமே பாரி வண்டியில் அமர்ந்து அதனை இயக்கியிருக்க பூ அவனுக்கு பின்னால் அமர்ந்தாள்.

“அவள் வருவான்னு தெரிஞ்சுதான் கிளம்பாம இருந்தியாடா?”

“அஃப்கோர்ஸ் மச்சான்” என்ற பாரி வண்டியை முடுக்கியிருந்தான்.

பாரிக்குத் தெரியும்… தன்னிடம் பேசாது சென்றவளால் அடுத்து எதுவும் செய்ய முடியாது தன்னை தேடுவாளென்று. அதனால் நிச்சயம் தன்னை தேடி வருவாள் என்பதற்காகவே பாரி காத்திருந்தான். ஆனால் வீட்டிற்கு வருவாளென்று எதிர்பார்க்கவில்லை தான்.

“மதியம் சாப்பிடலையா பூ?”

……

“வீட்டுக்கு வந்து கம்ப்ளெயின்ட் பண்ணப்போறீயா பூ?”

அவன் கேட்டதற்கு பதில் சொல்லாது அவனது முதுகில் தலை சாய்த்துக்கொண்டாள்.

“தூக்கம் வருதா?”

“ரோட்டை பார்த்து போல!”

ஆட்டோவிற்காக காத்திருந்த அமிர்தா இருவரும் ஒன்றாக செல்வதை நம்ப முடியாது பார்த்து உள்ளுக்குள் குமைந்தாள். அவளுக்கு ஒன்று புரியவில்லை. அது பாரி பூவிற்கு இடையில் யாரும் வர முடியாது என்பது. அதனை தெரிந்துகொள்ள அவளுக்கான நேரம் வந்துக்கொண்டே இருக்கிறது.

வழியில் செல்லும்போதே பூவிற்கு பழச்சாறு வாங்கி கொடுத்திருந்தான். மறுக்காமல் வாங்கி குடித்தவள் அவனிடம் பேச மட்டும் செய்யவில்லை.

வீடு வந்ததும் வேகமாக இறங்கியவள்,

“அத்தை” என்று அழைத்துக்கொண்டே அடுக்கலைக்குள் நுழைந்தாள்.

அவர் மாலை நேரத் தேநீர் போட்டுக்கொண்டிருக்க… சாப்பிட என்னயிருக்கு என்று பாத்திரங்களை அவளே திறந்து பார்த்து… ஒரு தட்டில் உணவை போட்டுக்கொண்டவள் அவளின் செய்கையை பார்த்தபடி இருந்த பார்வதியிடம்…

“உங்க பையனோட சண்டை பாரு. மதியம் சாப்பிடவேயில்லை. செம பசி. மெஸ்ஸிலும் இனி ஏழு மணிக்கு மேலதான் சாப்பாடு கிடைக்கும். அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவள் உணவு மேசைக்குச் சென்று உணவினை உண்ண ஆரம்பித்தாள்.

பார்வதிக்கு தெரியும்… பூ முதலில் சொல்லியது மட்டும் தான் காரணம் என்று. மெஸ் சொல்லியதெல்லாம் பாரிக்காக வந்தேன் என்பதை பூசி மொழுகுவதற்காக.

அவள் சாப்பிடும் வேகத்திலேயே பசியின் அளவு தெரிந்திட… உணவு பதார்த்தங்களை மங்காவை மேசையில் எடுத்து வைக்க சொன்னார் பார்வதி.

“அக்கா எனக்கு இதுவே போதும். நீங்க நல்லா ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போடுங்க போங்க… போங்க” என்று மங்காவை விரட்டினாள்.

பூவின் பையை அவளுக்கென்று இங்கிருக்கும் அறையில் கொண்டு சென்று வைத்துவிட்டு ஆடை மாற்றி வந்த பாரி பூவிற்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

பாரி பூவிடம் வாய் திறந்து காட்ட…

கையிலெடுத்த உணவை அவனது வாயில் திணித்தவள்…

“அதான் மதியம் சாப்பிட்டிங்கதான அத்தை. அப்புறம் எதுக்கு என்கிட்ட பங்குக்கு வர்றீங்க?” என்று கேட்டபடியே அடுத்த வாயும் அவனுக்கு வைத்தாள்.

“என்ன கேட்டுட்டு அவனுக்கு ஊட்டுற?” என்ற பார்வதி… இருவருக்குமிடையே என்னவென்று கேட்கவில்லை. பின்னே அவர்களுக்குள் பஞ்சாயத்து என்று சரி செய்யப்போனால் இரண்டும் ஒன்றுகூடி நமக்குத்தான் சேதாராமகும் என்று அவருக்குத் தெரியும்.

அடுத்த வாய் உணவும் அவனுக்கு ஊட்டிட முற்பட…

“மதியம் ரெண்டு பேருமே சாப்பிடலையா?” எனக்கேட்டார் பார்வதி.

“நான் சாப்பிட்டேன் ம்மா” என்ற பாரியின் குரல் அவனுக்கே கேட்கவில்லை.

“என்ன ஆச்சர்யம் பாரேன் பாரு. தமிழ் சாப்பிடாம உன் பையன் சாப்பிட்டிருக்கான்” என்று சொல்லியவாறு தில்லை வர… பூ பாரியை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

“இதுங்களுக்குள்ள சண்டையே வராதுன்னு சொல்லுவியே இப்போ பார்த்தியா?” என்று தில்லை மேலும் அவர்களை சீண்டிட… பூவிற்கு பாரி மேல் தான் கோபம் வந்தது. பின்னே தாங்கள் இப்படிதானென்று பிறர் வியக்கும்படி இருந்தவர்கள் இன்று சராசரி நண்பர்கள் போன்று நடந்துகொள்வதற்கு காரணமே அவன் தானே!

“நாங்க சண்டை போட்டோம்ன்னு யார் சொன்னா பெரிய மாமா?” என்று தில்லையிடம் கேட்ட பூ பாரியிடம் திரும்பி… “ஏம்லே நாம சண்டையால போட்டுகிட்டோம்?” என்று அவனின் மீதான கோபம் மறைந்து கேட்டாள். யாரிடமும் தங்களை விட்டுக்கொடுத்திட அவள் விரும்பவில்லை. தங்களது உறவுகளாவகே இருந்தாலும்.

பாரியும் உடனே இல்லையென்க…

“வழக்கம்போல இப்பவும் எங்களுக்குத்தான் பல்பா?” என்று கேட்டு தில்லை சிரிக்க… “உங்களுக்குன்னு மட்டும் சொல்லுங்க. என்னை ஏன் சேர்க்குறீங்க? இதுங்களை தெரிஞ்சிதான நான் சும்மா இருந்தேன்” என்று கணவரை கிண்டல் செய்தார் பார்வதி.

“அதென்னவோ உண்மை தான்” என்ற தில்லை, “நான் அப்படி கேட்டதால் தான் ஒண்ணுமே நடக்கலன்னு ரெண்டும் நடந்ததை மறந்துட்டு பேசிக்கிட்டாங்க” என்று கூறிட… பாரியும், பூவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“நீங்க கம்பெனிக்கு போகலையா மாமா? இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டி நியாயம் பேசிட்டு இருக்கீங்க?” என்ற தமிழிடம்… “பரிதி எல்லாம் பார்த்துகிறானே” என்று பதில் சொல்லியவரை அவள் விடுவதாக இல்லை.

“பரிதி மாமா பார்த்துகிட்டால்… எல்லாத்தையும் அவர் தலையிலேயே போடுவீங்களா? மாமாக்கு இது என்ஜாய் பன்ற வயசு. அவரை ஃபிரியா விடுங்க. அப்படியே லவ் எதாவது பண்ண சொல்லுங்க” என்று அவள் சொல்லி முடிக்க… அவள் பேசுவதை கேட்டபடி வந்த பரிதி பூவின் காதை பிடித்து வலிக்காது திருகியிருந்தான்.

“என்னை நீ கெட்டப்பையனா மாத்த பார்க்குறீயா வாலு?”

“லவ் பண்ணா, ஜாலியா இருந்தால் கெட்டப்பையனா?” அவளும் பதிலுக்கு பதில் கேட்டாள்.

“பரிதிண்ணா வலிக்கப்போகுது விடுங்க” என்று பாரி பரிதியை தடுத்த பின்னர் தான் பூ வேண்டுமென்றே “அய்யோ மாமா வலிக்குது… வலிக்குது…” என்று கத்தினாள்.

உடனே பாரி வேகமாக பரிதியின் கையை விலக்கிவிட்டு பூவின் காதினை ஆராய… அதில் சிவந்த தடம் சிறிதுமில்லை.

“வலிக்கணுமுன்னா முதலில் கிள்ளியிருக்கணும் பாரி” என்ற பரிதி… “அந்த வாலு நீ பதறின பிறகு தான் கத்தினாள். அதை நீ நோட் பண்ணியா?” என்றிட பாரி அசடு வழிந்தான்.

இப்படியே பேச்சும் சிரிப்புமாக அந்த பொழுது கடந்து இரவு வந்தது.

இரவு உணவிற்கு பின்னர் தோட்டத்தில் அமர்ந்து அனைவரும் கேரம் விளையாடினர். பார்வதியை தவிர்த்து. அவர் பார்வையாளராய் உடன் அமர்ந்திருந்தார்.

இப்போது பூவின் முகத்தில் நிறைந்திருக்கும் சிரிப்பை கண்ட பாரிக்கு… தன்னால் அவள் மதியம் அழுததை எண்ணி தன்மீதே ஆத்திரமாக வந்தது.

அதுவும் அவி சொல்லிடும் போது அவ்வளவு வலித்தது அவனுக்கு.

பார்க்கிங் பகுதியில் பூ வருவாளா மாட்டாளா என்று தெரியாமலே அவளுக்காகக் காத்திருக்கும் போது அவி பேசியவை கேட்டவையெல்லாம் அவன் மனதில் ஊர்வலம் போயின.

“யாருகிட்டையுமே விட்டுக்கொடுக்காத உன்னோட பூவை இன்னைக்கு அமிர்தாகிட்ட விட்டு கொடுத்தது உனக்கு தெரியலையா பாரி?”

அவியின் அக்கேள்வியில் சுருக்கென்ற வலி பாரியினுள்.

இதற்கான பதிலை பாரியால் சொல்லிட முடியும். ஆனால் பூவிடமே இதுபற்றி இன்னும் பேசிடாத போது, அவியிடம் என்னவென்று சொல்வதென அமைதியாக இருந்தான்.

“தமிழ் ஜென் மடியில படுத்து அப்படி அழுதியிருக்காள். என்னிடம் சொல்லும்போதே ஜென் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. இதுக்கு காரணம் நீதான் பாரி” என்ற அவி, “என்ன சடனா அமிர்தாவோட உனக்கு நெருக்கம்?” என்று கேட்டிட பாரிக்கு உள்ளம் உதறியது. ஆனால் தற்போது பதில் சொல்லிட முடியாதே. அவனுக்கே தெளிவில்லாத ஒன்றை எப்படி சொல்லிட முடியும்.

“நீ கவனிக்கிறாயா இல்லையா தெரியல பாரி. ஆனால் அமிர்தாவை நான் நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்” என்ற அவி…

“அமிர்தா உனக்காகத்தான் எல்லாம் செய்றாள்” என்று நேரடியாகக் கூறினான்.

பாரியிடம் அதிர்வெல்லாம் இல்லை. கண்டுகொள்ளாமல் இருந்தாலும் கருத்தில் கொள்ளாமல் இல்லை அவன்.

பாரியிடம் தான் சொல்லியதில் எவ்வித எதிர்வினையும் இல்லை என்றதுமே அவிக்கு ‘அவன் எல்லாவற்றையும் கவனிக்கிறான்’ என்று அவனின் உள்மனம் கூறியது. ஆனால் பாரி தான் பார்க்கும் கோணத்திலிருந்து பார்க்கவில்லை என்று அவிக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் தனக்குள் இருக்கும் அனைத்தையும் விளக்கமாகக் கூறியிருப்பானோ என்னவோ. அதற்குமேல் அவனிடம் சொல்லி பலனில்லை என்று அப்பேச்சை முடித்துக்கொண்டான்.

அதனை நினைத்துக் கொண்டிருந்த பாரி… பூவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என நினைத்தான்.

“பாரி தூக்கம் வருதா? நீதான் அடிக்கணும்” என்று பூ சத்தமிட்ட பின்னரே பாரி சுயம் அடைந்தான்.

நேரம் பத்தை நெருங்கிட…

“விளையாடினது போதும். கிளம்புங்க. போய் தூங்குங்க” என்று அதட்டி அனைவரையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார் பார்வதி.

அறைக்கு வந்த பூ, இளாவிடம் பேசிவிட்டு பால்கனியில் சென்று நின்றுகொண்டாள். சில்லென்ற காற்று முகத்தில் மோத மனம் லேசாவது போலிருந்தது. குளுமையின் இதம் இதயத்தையும் குளிர்விக்க மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு இருள் வானில் ஊர்வலம் போகும் நிலாவை ரசித்தவாறு அங்கேயே நின்றுகொண்டாள்.

அறையின் கதவு திறந்திருந்த போதும்… இருமுறை தட்டிவிட்டு உள்ளே வந்த பாரி, பூவைத்தேடி அறைக்குள் கண்களை சுழலவிட்டான். பால்கனியில் அரவம் உணர்ந்து அங்கு சென்றவன் பூவின் அருகில் சென்று நின்றான்.

பாரி வருவானென்று பூவும் எதிர்பார்த்தாளோ… அவனை பார்த்து அமைதியாகக் கேட்டாள்.

“என்ன பேசணும் வேந்தா?”

பால்கனி கம்பியினை பிடித்திருந்த பூவின் கரத்தை எடுத்து தன் பிடிக்குள் வைத்துக்கொண்டவன் “சாரி பூ… சாரிடா” என்று விடாது அரற்றினான்.

“சாரி கேட்கிற அளவுக்கு இப்போ நமக்குள்ள என்ன நடந்துச்சு வேந்தா?” என்ற பூ…

“எனக்கு என்ன வருத்தம்ன்னா, அமிர்தாவை உனக்கு பிடிக்கும்ன்னு முன்னாடியே சொல்லியிருக்கலாம்” என்றிட பாரியிடம் வெளிப்படையான அதிர்ச்சி.

“பூ…”

“எனக்கு என்னைவிட உன்னைத்தான் வேந்தா அதிகம் தெரியும்” என்று தழுதழுத்த குரலை சரிசெய்து பூ சொல்லிட அவளை பாரி அணைத்திருந்தான்.

“நான் சொல்லியிருக்கணும் பூ. என் தப்பு தான்” என்றவன், “அமிர்தாவை பார்த்ததும்லாம் பிடிச்சுதுன்னு சொல்ல மாட்டேன். எனக்காகத்தான் அவள் பிராஞ்ச் மாத்திக்கிட்டு வந்தான்னதும், சொன்னதும், அவகிட்ட உன்னை பார்த்தேன் பூ. நீயும் எனக்காகத்தானே எல்லாம் செய்வ, இதென்ன இப்படி தோனுதுன்னு அதை அப்போதைக்கு விட்டுட்டேன். ஆனால் அமிர்தாவை பார்க்கும்போது ஒரு தடுமாற்றம். அவள் மீது ஈடுபாடு வருதுன்னு நல்லாவே என்னால உணர முடிஞ்சுது. அதனாலதான் ஜென்கிட்ட நல்லா பேசி பழக முடிஞ்ச என்னால அமிர்தாகிட்ட முடியல. எங்க அமிர்தாவோட பழக ஆரம்பிச்சிட்டா உன்கிட்ட விலகல் வந்துடுமோ, நம்ம நட்புக்கு இடையில அவள் தடையா வந்துடுவாளோன்னு பயம் வேற.

ஆனால் இப்போ அந்த பயம் எனக்கில்ல பூ” என்று சொல்லி “ஏன்னா?” எனக் கேட்டு நிறுத்தியவன்…

“அமிர்தாவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். அவளும் என்னை மாதிரியே உன்னை பார்த்துப்பான்னு தோணுது பூ” என்றதோடு பூவும் லீலாவும் அன்று பேசியதை தான் கேட்க நேர்ந்ததைக் கூறி… “உனக்கே அமிர்தா மேல நம்பிக்கை இருக்குல பூ? அதான் இனியும் எதுக்கு விலகி இருக்கணும். நான் பேசலன்னாலும் அவளா வந்து பேசும் போது தவிர்க்கிறது கஷ்டமாத்தான் இருந்தது. இனி அந்த கஷ்டம் தேவையில்லதான பூ” என அதுநாள் வரை மனதிலிருந்த அனைத்தையும் பூவிடம் மடமடவென்று சொல்லியிருந்தான்.

“லவ் பன்றனாத் தெரியல பூ. பட் அமிர்தாவை பிடிச்சிருக்கு. இது எந்த உறவில் தொடரும்ன்னு பார்க்க வெயிட் பன்றேன். முதலில் படிப்பை பார்ப்போம்.” பூவிடம் மறைத்ததை சொல்லியதால் அவனிடம் ஒரு உற்சாகம்.

பூ தன்னை புரிந்துகொள்வாள் எனும் திடம்.

பூவை அணைத்தபடி பாரி சொல்லிக்கொண்டிருந்ததால் அவளின் கலங்கும் விழிகள் அவனக்குத் தெரியாமல் போனது.

அமிர்தாவை பிடித்திருக்கிறது என்று சொல்லாது மற்றதை சொல்லியிருந்தால்,

“உன்னை இம்ப்ரெஸ் செய்யத்தான் அமிர்தா என்மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கின்றான்னு” என்று பூ வெளிப்படையாக பாரியிடம் சொல்லியிருப்பாள்.

ஆனால் அவனோ அவளை பிடித்திருக்கிறது. அவளிடம் ஒரு ஈடுபாடு தோன்றுகிறது என்று சொல்லும்போது அவளது வேந்தனின் பிடித்தத்திற்கு அவள் தடையாக இருந்திடுவாளா என்ன?

எந்தப்புள்ளியில் அவன் மீதான நட்பு காதலாக மாறியதென்று பூவிற்குத் தெரியாது. ஆனால் அதனை முற்றும் முழுவதும் அவள் உணர்ந்தது அமிர்தாவால் தான். அமிர்தா பாரியிடம் நெருங்க நெருங்க பூவிற்கு அவளின் மனம், பாரிக்காக அவளிதயம் கொண்டுள்ள நேசம் புரிந்தது. புரிந்த கணம் இது இன்று உதிர்த்த நேசமல்ல என்றோ ஜனித்து, உணரப்படமால் உள்ளுக்குள் பதிந்து போனது என்று அறிந்து கொண்டாள்.

அந்நொடி… பாரிக்காக மட்டுமே யோசித்து யோசித்து களைத்துப் போனவளுக்கு அவனின் உள்ளமும் தெரிந்தது.

தனக்காக பரிதியிடமே வாதம் செய்பவன், அமிர்தாவிடம் அமைதியாக இருக்கக் காரணம் அவள் ஏதோவொரு விடயத்தில் பாரியின் மனதை பாதிக்கிறாள் என்று தெரிந்தது. அது முதல் தன் மனதை திடப்படுத்த தொடங்கிய பூவுக்கு என்ன முயன்றும் தன் கட்டுபாடின்றி கண்கள் சிந்தும் கண்ணீரை மட்டும் அடக்க முடியவில்லை.

பூ எப்போதும் அவளுக்காக என்று நினைத்ததைவிட, அவனுக்காக அவளது வேந்தனுக்காக நினைத்தது தானே அதிகம். அதனால் மொத்தமாக அழுது அழுத்தி வைக்கும் பாரத்தை தீர்க்க நினைத்தவள் ஜென்னின் மடி புதைந்து கதறி கரைத்திட்டாள். அக்கரைதலில் பாரியின் மீது உண்டான காதலையும் இதயத்தின் அடி ஆழம் சேர்த்து புதைத்திட்டாள்.

அதன் பலனே இப்போது பாரி அவனின் மனதினை சொல்லும்போது எவ்வித அதிர்வுமின்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘அவனுக்காகத்தானே அமிர்தா எல்லாம் செய்கிறாள். அவனுக்காக என்று வரும்போது நிச்சயம் அமிர்தா நல்லதே செய்வாள்’ என்று பாரியின் பிடித்தம் அறிந்த பூ அவனின் விருப்பத்திற்காக அவனை விட்டுக்கொடுத்திட தீர்மானித்தாள்.

பாரியின் தோளில் பதிந்திருந்த தனது முகத்தை நிமிர்த்தியவள், அவனறியாது கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவனிலிருந்து பிரிந்தாள்.

_____________________________

இரண்டாம் ஆண்டு தொடங்கி சில மாதங்கள் கடந்திருந்தன.

அன்று பாரி தன் மனிதிலிருப்பதை சொல்லியது முதல்… பூ அமிர்தாவின் குணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை பாரியின் மூலமாக பார்க்கத் துவங்கியிருந்தாள். மனதில் எவ்வளவு தான் வலியிருந்தாலும் அதனை பாரிக்காக… பாரியின் சந்தோஷம் என்று எண்ணி மறைத்துக்கொண்டாள்.

பாரியால் என்றும் தன்னை நட்பு என்ற வட்டத்திலிருந்து வேறாக பார்க்க முடியாது என்று புரிந்த தருணம் அது. அன்றைய இரவில் அவள் அழுத்தத்தின் அழுகையின் சாட்சி அவ்விருள் சுமந்த வானம் மட்டுமே.

அந்தநாள் இரவு, இன்னும் பூவின் நினைவில் அழுத்தமாக பதிந்துள்ளது.

பாரியின் அணைப்பிலிருந்து விலகியவள்…

“உனக்கு பிடிச்சது எதுவாயிருந்தாலும் எனக்கும் பிடிக்கும் வேந்தா. அதே மாதிரி தான் உனக்கும். எனக்கு பிடிக்காதது உனக்கு பிடிக்காது. இது நம்ம நட்புக்கு அன்புக்கு சரிவரலாம். சரியாக்கூட இருக்கலாம். ஆனால் உனக்கு வந்திருக்கும் இந்த பிடித்தம் உன் வாழ்வா மாறப்போறது… உன் வாழ்க்கையை மாத்தப்போறது.

அதுல என்னைக் கொண்டு, நம்ம நட்பைக் கொண்டு முடிவெடுக்காத!

உனக்காக மட்டும்… உனக்கே உனக்குன்னு அமிர்தாவை பிடிச்சா மட்டும்… இதுல ஒரு முடிவெடு. உன் முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். நான் உன்னைத்தாண்டி உன் விருப்பத்ததுக்கு தடையா இருக்கமாட்டேன் வேந்தா” என்று தெளிவாக மிக நிதானமாக பாரிக்கு எடுத்துரைத்தாள்.

“சில் மலரே… நீ இதுல இவ்வளவு யோசிக்கத் தேவையில்லை. எனக்கு ஒரே ரீஸன் தான்” என்றவன், “எனக்கோ உனக்கோ வரப்போற லைஃப் பார்ட்னர் நம்ம நட்புக்கு நமக்குள்ள தடையா இருக்கக்கூடாது.

அமிர்தாவுக்கு என்மேல பிடித்தம் இருக்கு. அவள் என்கிட்ட காதலை சொல்லும்போது உன்னை, நம்ம நட்பை வைத்துதான் நான் தீர்மானிப்பேன். இதுல எந்த மாற்று கருத்தும் இல்லை” என்றவன்…

“ஃப்ரியா விடு மலரே… அமிர்தா பெட்டர் சாய்ஸ் தான். பிடிச்சிருக்கு. அடுத்த லெவல் போகுதா பார்ப்போம்” எனக்கூறி சென்றுவிட்டான்.

அவளுக்குத்தான் குழம்பிய நிலை. அவனுக்காக யோசித்தால் அது காதல். ஆனால் அவன் யோசிப்பதோ நட்பிற்காக. வரும் பெண்ணுக்கு அவனுக்கு அவள் தானே முதலில் என்கிற எண்ணம் ஆசையெல்லாம் இருக்குமே! அதுவும் அவனை நெருங்கவே அவ்வளவு செய்யும் அமிர்தா… பாரியை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்வாள். நினைக்கவே பூவிற்கு கலவரமாகத்தான் இருந்தது.

இதில் அவளுக்கு புரிந்ததெல்லாம் ஒன்று தான்… ‘அவளின் காதல் பூக்கும் முன்பே காய்ந்து போனது.’ காரணம் பாரியுடனான ஆழமான நட்பு. காதல் இல்லையென்றாலும், நட்பு விட்டுப்போகக்கூடாதென நினைத்தவள் அவளது வேந்தனின் மீதான காதலை தனக்குள்ளே பதுக்கிக்கொண்டாள்.

அதன் விளைவு… உயிரோடு இருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு இதயத்தை பிடுங்கும் வலியை உணர்ந்தாள். மூச்சுக்குழல் காற்றிற்கு தவித்தது.

தனியாக இருந்தால் மேலும் ரணம் கூடும்… அத்தோடு இதில் உறுதியாக முடிவெடுக்க மனதிற்கு அமைதி வேண்டுமென்று நினைத்தவள், தனியாக இருந்தால் வலிதான் கூடுமென்று பார்வதி, தில்லையின் அறைக்கு சென்று பார்க்க… உள் பக்கமாக பூட்டியிருந்தது. உறங்குபவர்களை தொல்லை செய்யாது வந்தவள், பரிதியின் அறையில் விளக்கு ஒளிர்வதைக் கண்டு அங்கு சென்று வாயிலில் நின்றாள்.

மெத்தையில் அமர்ந்து மடிகணினியில் வேலை செய்துகொண்டிருந்த பரிதி மூடியும் மூடாது இருந்த கதவின் வழியே வாயிலில் அசையும் நிழலினை உணர்ந்து எட்டிப்பார்க்க பூ கைகளை பிசைந்தபடி இருந்தாள்.

“உள்ள வா குட்டிம்மா!”

அவனின் அழைப்பில் உள்ளே வந்தவளின் முகமே அவளின் தீவிர யோசனையை பரிதிக்கு காட்டிக்கொடுத்தது.

“என்னடா… தூங்கலையா?”

“தூக்கம் வரல மாமா. தனியா, என்னவோ மாதிரி இருக்கு” என்றவள் தன்னுடைய மனதை விடுத்து பாரி சொல்லியதை மட்டும் சொல்லியவள், “எனக்காகன்னு ரொம்ப யோசிக்கிறானோன்னு தோணுது மாமா. எனக்காகன்னு அவன் எடுக்குற முடிவு காதலில் சரி வருமா?” என்று கேட்க…

“உனக்காக, உன்மேல அமிர்தா அன்பா அக்கறையா இருக்கான்னு பிடிச்சிருக்கு சொல்றவன், உன்னைவிட்டு இருக்க முடியாதுன்னு உன்னையே லவ் பண்ணலாம்” என்று ஏதோவொரு வேகத்தில் சொல்லிவிட்டான் பரிதி.

அதை தானும் யோசித்து இருந்ததால் பூ பரிதியின் பேச்சுக்கு அதிர்ந்துவிடாமல் அமைதியாகவே இருந்தாள்.

அவளின் அமைதியை பரிதி கவனித்திருந்தால், ஒருவேளை பூவின் மனம் புரிந்திருக்குமோ. அதனால் நடக்கவிருக்கும் நிகழ்வுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்குமோ!

“நான் பாரிகிட்ட பேசுறேன்டா. நீ போய் தூங்கு. ரொம்ப நேரமாகுது” என்று பரிதி சொல்ல…

“நான் இங்கனவே படுத்துகிடட்டுமா மாமா” என்று கேட்டவளிடம் ஏனோ அவனால் மறுத்து சொல்ல முடியவில்லை.

“சரிடா” என்றவன் மடிகணினியுடன் மெத்தையிலிருந்து எழ…

“இங்கனவே உட்காருங்க மாமா” என்றாள்.

பரிதி அமர்ந்ததும் அவன் மடியில் தலை வைத்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். ஓடும் சிந்தனையிலிருந்து தப்புவதற்கு. பரிதியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். பிடியின் அழுத்தம் சொல்லாமல் சொல்லியது அவளின் அலைப்புறுதலை.

மடிகணினியை அணைத்து ஓரம் வைத்தவன்,

“எதுவும் திங்க் பண்ணாம தூங்குடா” என்றிட…

“எங்களுக்குள்ள யாரும் வந்திடமாட்டங்களே மாமா” என்று பயத்தோடு வினவினாள்.

“நாங்களாம் இருக்கும்போது பிரிவை வரவிட்டுடுவோமா” என்று பதில் வழங்கிய பரிதி,

பூவின் மனம் எதிலோ காயப்பட்டிருக்கு என்று கணித்தான். எதனால் என்றுதான் கண்டறிய முடியவில்லை. மெல்ல அவன் அவளின் தலை கோதிட நீண்ட நேரத்திற்கு பின்னர் ஆழ்ந்த நித்திரையில் விழுந்தாள்.

பூவின் உறக்கத்தை உறுதி செய்தவன், அவளின் துயில் கலையாது நகர்த்தி தலையணையில் தலை வைத்தவன், போர்வையை போர்த்திவிட்டு ஏசியை மிதமான குளிரில் வைத்து, படுக்கைக்கு முன்பிருந்த கோச்சில் சென்று படுத்துக்கொண்டான்.

எப்போதும் அதிகாலை ஓட்டத்திற்கு தன்னை எழுப்ப வரும் மூத்த மகன் இன்று வராமலிருக்க அவனறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த தில்லை…

“தமிழுக்கு ஏதோ கவலையிருக்கும் போல பாரு” என்று பூ பரிதியின் அறையில் உறங்கியிருப்பதை தவறாக எண்ணாது, குடும்பத்தை பிரிந்து இவ்வளவு தூரத்தில் பாரிக்காக மட்டுமே இங்கு வந்திருப்பவளுக்கு ஏதேனும் மன வேதனையென்றால் மட்டும் தங்களில் ஒருவரை பூ நாடுவாள் என்பதை சரியாக அறிந்து மனைவியிடம் கூறினார்.

“சரி, நீங்க ஏதும் கேட்டுக்காதீங்க. பரிதி பார்த்துப்பான்” என்ற பார்வதி அவர்களாக எழுந்து வரட்டுமென்று சொல்லிவிட்டார்.

காலையில் கண் விழித்த பாரி நேராக பூவின் அறைக்குச் செல்ல… அங்கு அவளில்லை என்றதும் மேலிருந்தவாறே, அன்னையிடம் பூவை விசாரித்தான்.

“பரிதி ரூமில் பாருடா” என்றவருக்கு ‘இவன் தான் என்னத்தையும் சொல்லி தமிழை கஷ்டப்படுத்தியிருப்பான்’ என்று பாரியை மனதிற்குள் திட்டினார்.

பாரி பரிதியின் அறைக்கு வரும்போது, அவன் தொழிற்சாலைக்கு செல்ல கிளம்பித் தயாராகி கண்ணாடி முன் நின்று தலை வாரிக்கொண்டிருந்தான்.

“பூ… பரிதிண்ணா…” என்று அழைத்தபடி உள்ளே வந்தவன், “பூ எப்போ இங்க வந்து தூங்கினாள்?” என அங்கு உறங்கும் பூவை பார்த்து கேட்டவன்… “என்னண்ணா இவ்வளவு சீக்கிரம்?” என்றான்.

“அதையேதான் பாரி நானும் கேட்கிறேன். ரொம்ப சீக்கிரம் பண்ணக்கூடாதது எல்லாம் பன்ற?” என்று மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு கால்களை அகட்டி வைத்து அவனை ஆராயும் பார்வையில் வினவினான்.

பூ சொல்லிவிட்டாள் போலும் என்று நினைத்தவன், அதையே அவனிடமும் கேட்டான்.

“போட்டுக்கொடுக்கணும் எண்ணத்தில் அவள் சொல்லல.”

“அது எனக்கும் தெரியும்” என்று வேகமாகக் கூறிய பாரி, “எங்களுக்கு நடுவில் யாரும் வந்திடக்கூடாதுங்கிற அவளோட பயத்துக்காகத்தான்… எங்களை நல்லா தெரிஞ்சவள் எனக்குத் துணையா வந்தால் நல்லாயிருக்கும் நினைச்சேன். இதில் என்ன தப்பு பரிதிண்ணா” என்று மிக நிதானமாகக் கேட்டான்.

சரியாக அந்நேரம் தூக்கம் விழித்த பூ…

“இதையேதான் மாமா சொல்றான். எனக்காக எனக்காகன்னு. லவ்வுக்கு இதெப்படி சரி வரும் கேளுங்க மாமா!” என்றாள்.

“உனக்காக யோசிக்காம வேற யாருக்காக யோசிக்கணும் பூ” என்று அவளிடம் கேட்டவன், பரிதியின் பக்கம் திரும்பி… “இப்போ பியூச்சரில் எனக்கு பொண்ணு பார்த்தால் நம்ம குடும்பத்துக்கு, அம்மாவுக்கு உதவியா இருப்பாளான்னு எல்லாம் யோசிப்போம் தான பரிதிண்ணா? அதைப்போல என் நட்புக்கும் வரப்போற பொண்ணு சரிவருவாளான்னு நான் யோசிக்கிறதுல என்ன தப்பு?” என்று கேட்டிட பூவிற்கு விழி பிதுங்கியது.

“அவளுக்காகன்னு யோசிச்சு உனக்கு செட்டாகாத ஒன்னை சூஸ் பண்ணிடுவியோன்னு அவள் பயப்படுறாள் பாரி” என்ற பரிதி “அப்படி மட்டும் யோசிச்சு நீயெடுக்கும் முடிவு தவறாகிட்டா அது காலத்துக்கும் தமிழுக்கு குற்றவுணர்வாகிப்போகும் பாரி” என்று தன் தம்பிக்கு புரிய வைத்திடும் நோக்கில் எடுத்துக்கூறினான்.

“புரியுது பரிதிண்ணா” என்றவன், “பூவுக்காக யோசிச்சாலும், எனக்கும் அவளை பிடிச்சிருக்கு. அந்த பிடித்தம் லவ் வரை போகுமான்னு நானே இன்னும் யோசிக்கல” என்றான்.

“இதென்னடா பதில்” என்ற பரிதி “படிக்கிற வேலையை மட்டும் பார் பாரி” என்றான்.

“நானும் அந்த நினைப்பில் மட்டும் தான் இருக்கேன்” என்று அழுத்தமாகக் கூறினான்.

“அவன் ரொம்ப தெளிவா இருக்கான் குட்டிம்மா. நீ ரொம்ப கஃன்பியூஸ் பண்ணிக்காத” என்ற பரிதி, “ரெண்டு பேரும் கிளம்பி காலேஜ் போங்க” என்று சொல்லி அவன் கிளம்பிவிட்டான்.

பூவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்த பாரி…

“நீயெதுக்கு பூ அண்ணா ரூம் வந்த?” என்று சற்று பொறாமையோடு கேட்டவன், “உனக்கு எதுனாலும் நீ என்னைத்தான் தேடனும்” என்றிட ‘தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பவனுக்கு எப்படி நேசமில்லாது போனது’ என தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள் அவனுக்கு வேகமாக சரியென தலையசைத்திருந்தாள்.

‘நாளை அமிர்தாவிடம் காதலை ஏற்றபின்னரும் பாரி தன்னோடே ஒட்டிக்கொண்டிருந்தால் நிச்சயம் அவனால் அமிர்தாவுடன் நிம்மதியாக இருக்க முடியாது’ என்று நினைத்த பூ மெல்ல மெல்ல பாரியிடமிருந்து விலகும் முயற்சியை மேற்கொண்டாள். ஆனால் அது முடிந்தால் தானே. அந்நேரத்தில் அவளுக்கு ஆறுதல் லீலா மட்டுமே.

தன்னுடைய மனம் தனது கட்டுப்பாட்டை மீறும் போதெல்லாம் அன்று பாரி மனம்விட்டு கூறியதை நினைத்து பார்த்தே தன்னை கட்டுக்குள் வைத்திருக்கிறாள் பூ.

இதில் அதிகம் கோபம் கொண்டு பூவிடம் அவளுக்காகவே சண்டை போட்டது அவி தான். அவிக்கு பூவிற்கு பாரியின் மீது காதலிருக்குமென்றெல்லாம் அந்த நாட்களில் எண்ணமில்லை. ஆனால், அமிர்தாவின் செயல்களுக்கான காரணம் தெரிந்தும் பாரியிடம் அவளை பழகவிடுவதற்கு அத்தனை பேசியிருந்தான்.

“வேந்தனுக்கு அமிர்தா மேல இண்ட்ரெஸ்ட் அவி” என்றதோடு பூ முடித்துக்கொண்டாள்.

பூ பாரிக்கு என்ற வகையில் அனைத்து பக்கங்களிலுருந்தும் யோசிப்பாள், அவனுக்கு நன்மை எனும்போதுதான் அதனை அவனருகிலேயே அனுமதிப்பாள் என்பது தெரிந்திருந்ததால் அவி அதற்கு மேல் அவ்விடயத்தில் மூக்கை நுழைக்கவில்லை.

அவி அமிர்தா மீதிருக்கும் கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சுற்ற…

“நீ பாரியை மட்டும் பார் அவி” என்று பூ சொல்லிட… அவியும் அமிர்தா தங்களிடம் எப்படி நடந்துகொண்டாலும், அவள் செய்வதெல்லாம் பாரிக்காகத்தானே என்று அவளிடம் நல்ல முறையிலேயே பழகத் துவங்கியிருந்தான்.

அமிர்தாவிற்கு கோபமெல்லாம் பூ மீதுதானே தவிர அவி மற்றும் ஜென்னிடம் இல்லையே, ஆதலால் அவர்களிடம் நன்றாகவே பழகினாள்.

பூவிடம் கூட தனிப்பட்ட முறையில் எவ்வித கோபமும் இல்லை. அதனால் பாரி உடன் பூ நெருக்கமாக இருக்கும் தருணங்களில் மட்டும் அமிர்தா வேறொருவளாக மாறிப்போவள். அந்நேரத்தின் சூழல் அறிந்து பூ தன்மையாகவே நடந்துகொள்வாள்.

முதலில் பாரிக்காக என்று பூவிடம் நெருங்கி பழகிய அமிர்தாவுக்குமே பூவின் குணம் பிடிக்கத்தான் செய்தது. என்னவொன்று பாரியின் அதீத முக்கியத்துவம் பூ என்பதால் அவளிடம் அதனை காட்டாது வெறுப்பையே வளர்த்துக் கொண்டிருக்கிறாள்.

நாளுக்கு நாள் அமிர்தா பாரியை அதிகமாக நெருங்கிக் கொண்டிருந்தாள்.

பாரிக்கு அதெல்லாம் அமிர்தாவிற்கு தன்மீதிருக்கும் பிடித்தத்தால் என்று உள்ளுக்குள் ரசித்தபடியே அமைதியாக இருந்தான்.

நாட்கள் அதன் போக்கில் அமைதியாகவே நகர்ந்து கொண்டிருந்தது.

அமிர்தாவின் குணமறிந்து பூ பாரியை விட்டு தள்ளியிருக்க முயற்சித்தாலும், பாரி பூவை இழுத்து பிடித்தான். அவனுக்கு பூவின் விலகல் தெரியாமலேயே அவளை தன் கைக்குள்ளேயே வைத்திருந்தான்.

புதிதாக என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டும் ஆனால் பூவிற்கான இடம் எப்போதும் பாரியிடம் அப்படியே மற்றவர்களிலிருந்து தனித்தே இருந்தது. அது பூவைவிட அவிக்குத்தான் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

அமிர்தாவிடம் உரிமையாக பழகினாலும் பூவிற்கென்று அவன் மனதிலிருக்கும் சிலவற்றை பாரி மாற்றிக் கொள்ளவேயில்லை.

அது அவனருகில் அமிர்தா அமர முயன்றாலும் நாசூக்காக மறுத்துவிடுவான். அவனது இருசக்கர வாகனத்தில் இன்றும் பூவைத்தவிர யாரையும் ஏற்றியதில்லை. பூவிற்கு முதல் வாய் உணவை ஊட்டிவிடுவது. இப்படி பல இன்னும் அவனிடம் அவனது பூவுக்காக என்று மட்டுமே இருந்தது.

அதில் ஒன்றையாவது எப்படியேனும் முறியடிக்க வேண்டும் என நினைத்த அமிர்தா… பாரியிடம் சென்று,

“எனக்கு பெரிய பைக் ஓட்ட ரொம்ப நாள் ஆசை. உன் பைக்கில் கத்துத்தறியா பாரி. அட்லீஸ்ட் ஒரு ரவுண்ட்” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

அவளிடம் மறுக்க மனமின்றி அவியின் பைக் கீயை வாங்கியவன், அமிர்தாவை உடன் அழைக்க…

“நான் உன் பைக்கில் கேட்டேன் பாரி” என்றாள். அவளின் குரலில் என்ன இருந்ததோ!

“சிலது என் பூக்காக மட்டும் தான் அமிர்தா” என்ற பாரியிடம் நிச்சயம் அத்தனை அழுத்தத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

“உனக்குன்னு ஒருத்தி வந்த பிறகுமா பாரி?”

“நாளை வருவதை நாளை பார்த்துக்கலாம்” என்றவன், “என்னையும் பூவையும் புரிஞ்சிகிட்ட பொண்ணு தான் எனக்குன்னு வருவாள் அமிர்தா” என்று அவளை மனதில் வைத்தே அவளிடம் கூறினான்.

அமிர்தாவின் முகம் சிறுத்துவிட்டது. அவனிடமிருந்து மறைக்க படாதபாடு பட்டுப்போனாள்.

அவனின் வார்த்தைகளில் உடனடியாக சுதாரித்தவள்…

“நீ உன் ஃபிரண்ட்ஷிப்பில் ஸ்ட்ராங்குன்னு இப்போ ஒத்துக்குறேன்” என்றதோடு “நான் கேட்டதும் உன் பூவை விட்டுக்கொடுத்திடுவியோன்னு நினைச்சேன்” என்றாள் சிரித்தபடி.

அதில் உண்மையாக பாரிக்கு மனம் நிறைந்துவிட்டது. நிச்சயம் அமிர்தா உடன் வந்தால் தனக்கும் பூவிற்கும் இடையில் பிரிவு வராது என்று அந்நொடி அதிகமாக நம்பத் துவங்கினான்.

இருவருக்குள்ளும் ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனை நண்பர்கள் மூவரும் கண்டும் காணததைப்போல் இருக்க… பூவுக்கு மட்டும் சிறு வலியும் சேர்ந்து கொண்டது.

பூவின் வலியை அமிர்தா ரசிக்கத் தொடங்கியிருந்தாள். அந்த ரசிப்பு அவளுக்கு பிடித்திருந்தது. அதனை அதிகரிக்க நினைத்தவள் தன் காதலை பாரியிடம் சொல்லிட நினைத்து அவனை கல்லூரிக்கு சீக்கிரம் வருமாறு சொல்லியிருக்க… அவனும் வந்திருந்தான்.

நிச்சயம் பாரி மறுக்க மாட்டானென்று அத்தனை உறுதி அவளிடம்.

அமிர்தா பாரியிடம் சொல்லத் தயங்கி நிற்க…

அவியும், ஜென்னும் ஒருவரையொருவர் தொடர்ந்து சிறு இடைவெளியில் அங்கு வந்து சேர்ந்தனர்.

“தமிழ் இன்னும் வரலையாடா?” என்ற ஜென்…

“இன்னும் டைம் இருக்கே!” என்ற பாரியிடம்… “ஹோ… அப்போ நான் ஹாஸ்டல் வரை போயிட்டு வரேன்” என்று சொல்லி நகர்ந்தாள்.

“எதுக்கு? பூவுக்கு என்னாச்சு?” பாரி சட்டென்று பதறிவிட்டான்.

“ஹேய் பாரி. எதுக்கு இத்தனை பதட்டம்?” அவி தான் அவனை கன்ட்ரோல் செய்தான்.

“இவபாட்டுக்கு வந்தால். பூவை கேட்டாள். ஹாஸ்டலுக்கு போறேன்னு போறாள்” என்று பாரி விளக்க…

“என்ன ஜென் நீ, அவன் தான் தமிழ் விஷயத்தில் சென்சிட்டிவ் தெரியுமே?” எனக் கேட்டான் அவி.

“சாரிடா… லீலாவுக்கு பர்த்டேவாம். அவள் முல்லை பூ வச்சிக்க ஆசைப்பட்டிருப்பாள் போல. தமிழ் வாங்கிட்டு வர சொன்னாள்” என்று ஜென் தெளிவாகக் கூறிய பின்னரே பாரிக்கு மனம் சமன்பட்டது. இருப்பினும் உள்ளே சற்று முணுக்கென்றது.

எதுவென்றாலும் தன்னிடம் கேட்கும் பூ இன்று ஜென்னிடம் கேட்டிருப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதுநாள் வரை அவியிடமோ ஜென்னிடமோ எதுவும் பூ வாங்கி வர சொல்லியோ அல்லது தன்னால் முடியாது செய்து தாருங்கள் என்றோ கேட்டதே கிடையாது. எல்லாவற்றிற்க்கும் பாரி இருக்கும்போது மற்றவர்களிடம் கேட்க வேண்டிய நிலை அவளுக்கு இருந்தது இல்லை. அப்படி மற்றவர்களிடம் கேட்கும்படி ஒரு நிலையை பாரி அவளுக்கு உண்டாக்கியது இல்லை.

‘இன்று ஏன் இப்படி?’ எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், பூவிற்கு அழைக்க எண்ணி… அலைபேசியை எடுக்க அதில் பூவின் தவறவிட்ட அழைப்புகள் நான்கும்… குறுந்தகவல் இரண்டும் வந்திருந்தது.

அப்போதுதான் அவனுக்கு மூச்சே சீரானது.

பூவின் அழைப்பை ஏற்காத தன்னையே நெற்றியில் தட்டிக்கொண்டான். இருப்பினும் தன்மீது அவனுக்கு கோபம் குறையவில்லை.

எதனால் இப்படி என யோசித்தவனுக்கு விடை அருகிலேயே நின்றது.

அமிர்தா வர சொல்லியதில், எதிர்பார்த்த ஒன்றும் நடக்கவிருக்கும் எண்ணத்தில் தடுமாறிப்போனதை நினைத்து வருந்தினான்.

பாரி யோசனையிலேயே நின்றிருக்க… ஜென் நகர்ந்திருந்தாள்.

உடன் அவியும் அமிர்தாவும் மட்டும் இருந்தனர்.

“ஒரு சின்ன விஷயம் இதுக்கு எதுக்கு பாரி இவ்வளவு டென்ஸ்ட் ஆகுற?”

கேட்ட அவியால் எப்போதும் பூவிடம் பாரிக்கு இருக்கும் உணர்வை புரிந்துகொள்ள முடியாது. அவியால் மட்டுமல்ல யாராலும். பாரிக்கு மனம் கனத்துப்போனது.

அது அவனுள் எரிச்சலாக மண்டியது.

அந்நேரம் அமிர்தா “பாரி” என்று அழைக்க…

“என்ன சொல்லணுமுன்னு இவ்வளவு சீக்கிரம் வரச்சொல்லி படுத்தி எடுத்த?” என்று அவள்மீது காய்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்