பிறை -3
தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, அதை ஒரு முறை சரி பார்த்தார் சிவகாமி.
” கண்ணு போற இடத்துல எல்லாம் ரொம்ப சேட்டை பண்ணக்கூடாது.. உன்னைய நம்பி தான் அப்பா இவ்வளவு தூரம் அனுப்பி இருக்காரு.. அதுனால ரொம்ப பொறுமையா இருக்கனும். நிதானமா எல்லா விஷயங்களையும் பண்ணனும்.. எதுனாலும் அம்மாக்கு ஒரு போனை போட்டு சொல்லிடு. நேரம் இருந்தா தினமும் பேசு ” என ஆயிரம் அறிவுரைகள் கூறினாலும்.. மகளை தனியே அனுப்ப அவருக்கு மனம் ஒப்பவில்லை தான். ஆனாலும் அவள் ஆசைப்பட்டு கேட்ட விஷயத்தை செய்யாமல் இருக்க முடியவில்லை.
பிறை துணிச்சலான பெண்.. அவளது அப்பத்தாவை போல.. சட்டென முகத்திற்கு நேராக பேசும் ரகம். வீட்டில் தேவையில்லாத பிரச்சனையால் தான் வாயை மூடிக் கொண்டு இருக்கிறாள். கல்லூரியில் கேட்டால் அவளை பற்றியான வரலாறு வேறு மாதிரியாக இருக்கும்.
அனைத்து அறிவுரைகளையும் வலப்பக்க காதில் வாங்கி, இடப்பக்க காதில் விட்டுக் கொண்டிருந்தாள் பிறை.
” நான் சொல்லுறது எல்லாம் விளங்குதா சாமி.. ” என மீண்டும் மகளிடம் கேட்க… தலையை நாலாபக்கமும் ஆட்டி வைத்தாள்.
அதே நேரம் சிவானந்தம் உள்ளே வந்தவர்.. சட்டையில் இருந்து சில ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து கொடுத்தார். ” ஜாக்கிரதை பாப்பா.. வீட்டையும் மீறி உன்னை அனுப்பி வைக்கிறேன். விளையாட்டு தனத்தை கைவிட்டுட்டு ஒழுங்கா இருக்கனும் ” என நாலே வார்த்தையில் முடித்து கொண்டார்.
அவர் கொடுத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு.. அவருக்கும் தலையசைப்பை மட்டுமே கொடுத்தாள்.
அதற்கு மேல் மகளிடம் பேச எதுவுமில்லை. ஆனால் மனைவியுடன் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தார். எல்லாம் அவளது அழகான எதிர்காலத்திற்கு தான்.
ஆனால் இந்த முடிவால் அவளது எதிர்காலம் சீர்குழைய போவது அறியவில்லை அவர்கள். ஆசை ஆசையாய் அனைத்தையும் தயார் செய்து முடித்து விட்டாள் பிறை.
” இட்லி பொடி அரைச்சு வச்சுருக்கேன், புளிக்காய்ச்சல் இருக்கு, அப்பறம் பருப்பு பொடி, நெய் எல்லாம் இருக்கு பிறை.. சாப்பாடு சரியில்லைனா உடனே சாதம் மட்டும் போட்டு இதெல்லாம் போட்டு சாப்பிட்டுக்கோ.. ” என வரிசையாக பைகளை நிரப்பி இருந்தார் சிவகாமி.
” இப்போவே கொஞ்சம் இட்லி பொடி வைங்க மா.. நான் டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுறேன் ” என்றதும்.. மகளுக்கு சூடாக இட்லி வைத்து, கூடவே புதிதாக அரைத்த பொடியையும் வைத்தார்.
பொடியின் சுவையில் தாறுமாறாக இட்லி உள்ளே சென்றது.. நைட்டு ட்ரெயின் இருக்கு கண்ணு.. ” கொஞ்சம் கவனமா சாப்பிடு.. இல்லைனா கஷ்டமா ஆகிடும் ” என்றதும்.. அதையும் யோசித்து இட்லியை குறைத்து கொண்டாள் பிறை.
” இங்க பாரு டி.. உன் ஆத்தா அப்பனை மயக்கி ஊருக்கு போறது எல்லாம் சரி தான்.. போனவ போன மாதிரி வரனும்.. ஏதாச்சு வம்பு தும்பு பண்ணிட்டு ஊர் பக்கம் வரனும்னு நினைச்ச அவ்வளவுதான் சொல்லிட்டேன் .. ஒழுக்கமா படிச்சுட்டு வர வழியை பாரு ” என அகிலாண்டம் அவளது ஆசைக்கு கண்டனம் தெரிவிக்க.. சோர்வாக தனது தாயின் முகத்தை பார்த்தாள் பிறை.
அங்கே வைத்து மகளிடம் எதுவும் பேச விரும்பாதவர்.. அவள் உண்டு முடிக்கவும் அறைக்கு அழைத்து சென்றார். ” இங்க பாரு கண்ணு.. உங்க அப்பாத்தா அந்த காலத்து ஆளு.. அப்படி இப்படி தான் பேசுவாங்க. அதுக்காக அதையே மனசுல வச்சுட்டு இருக்காத.. ஆனாலும் அவங்க சொல்லுற மாதிரி அந்த ஊர்ல நீ ஜாக்கிரதையா இருக்கனும். பிரச்சனை வராம பார்த்துக்கனும். முக்கியமான விஷயம் நீ படிப்பை முடிக்கவும் நானும் அப்பாவும் சேர்ந்து உனக்கு நல்ல மாப்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறோம் ” என கூறினாலும் அதில் மறைமுக செய்தி ஏதேனும் இருந்தது என்னவோ உண்மை தான்.
” லவ் எல்லாம் எனக்கு செட் ஆவாது மா.. அப்படியே பண்ணாலும்.. என்னைய எல்லாம் ஒரு நாளைக்கு மேல வச்சு அவன் தாக்கு பிடிக்க முடியாது ” என்றதும் சிவகாமிக்கு சிரிப்பு தான்.
” அதெல்லாம் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு பிறை. நீ நல்லவ தான்.. ஆனால் உன்னைய யாரும் ஏமாத்திட கூடாது இல்லையா.. நீ இந்த பக்கத்து டவுன் தாண்டி எங்கேயும் போனது இல்ல.. அதான் சொல்லுறேன் ”
” நான் அகிலாண்டம் பேத்தி மா.. அப்படியெல்லாம் என்னைய யாரும் ஒன்னும் பண்ண முடியாது.. முதல்ல என்னைய பத்தின கவலையை விடுங்க. நான் அங்க போய் டெய்லி உங்களுக்கு போன் பண்ணுறேன். என்ன நடக்குதுன்னு அப்போ அப்போ சொல்லறேன் “
” இது போதும் பிறை.. வா ” அழைத்து சென்று குல தெய்வத்தை வேண்டி திருநீர் வைத்து விட்டு, கையிலும் அதை கொடுத்து விட்டார்.
” நம்ம சாமியே நம்ம கூட வரும்.. பத்திரமா வச்சுக்கோ.. தினமும் வெளிய போகும் போது வச்சிட்டு போ ” என பல அறிவுரைகளை கூறி இதோ வீட்டிலும் சொல்லி விட்டு, அத்தை வீடுகளிலும் சொல்லி விட்டு , இரயில் நிலையத்தில் மூவரும் நின்று கொண்டிருந்தனர்.
” தண்ணி எல்லாம் இருக்குல்ல பாப்பா.. ”
” அதெல்லாம் இருக்கு பா.. ” என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வண்டியும் வந்து விட.. மனதே இல்லாமல் மகளின் படிப்பிற்காக பெற்றவர்கள் இருவரும் மகளை மதராசபட்டினத்தை நோக்கி அனுப்பி வைத்தனர்.
இருவருக்கும் கை அசைத்து விட்டு கிளம்பி இருந்தாள் பிறை. தோழிகள் இருவரும் அவளோடு சேர்ந்து கிளம்பி இருந்தனர்.
” டி.. உங்க அண்ணன் ஹாஸ்டல் எல்லாம் பார்த்திட்டாரு தானே..” பிறை கேட்கவும்..
” அதெல்லாம் நல்ல ஹாஸ்டல் பார்த்து இருக்கார் பிறை.. நம்ம இறங்கவும் அவரே வந்து பிக் அப் பண்ணி நம்மளை அங்க விடுவார்..” கீதா கூறினாள்.
இவை எதையும் காதில் வாங்காமல் இரயிலில் ஏறியதில் இருந்து போனை தான் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுஷ்மிதா.
” நாங்க இங்க பேசிட்டு இருக்கோம். அப்படி என்ன தான் அந்த போன்ல இருக்கோ ” பிறை சத்தமிடவும்.. அவசரமாக போனை பைக்குள் வைத்து அவர்களோடு பேச ஆரம்பித்தாள் சுஷ்மிதா.
**
காலை பொழுது நன்றாக விடிந்தது. வழக்கம் போல நாளிதழ்களை எடுத்து புரட்ட ஆரம்பித்தார் திவாகர்.
” ஏங்க இன்னைக்கு பொண்ணு வீட்ல இருந்து நம்மளை பார்க்க வர சொல்லி இருக்காங்க.. கூட அவனும் வரனும் நீங்க பேசுங்க ” மெல்ல காதில் ஓதிய மனைவியை ஒரு பார்வை பார்த்தவர்..
” நான் சொன்னா உடனே லீவ் போட்டு வந்துடுவானா “
” அப்போ யாரு தான் சொல்லுறது “
” வழக்கம் போல உன் டிராமாவ நீ ஸ்டார்ட் பண்ணு ” என்றதும் மனைவியின் உஷ்ண மூச்சுக்கள் அவர் மீது பட.. பேப்பரை ஓரம் கட்டியவர்.. பாவமாக மனைவியை பார்த்தார்.
” அது.. வந்து.. மீனு..”
” வாயை மூடுங்க.. நான் பண்ணுறது உங்களுக்கு டிராமா மாதிரி தெரியுதா.. என் பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நான் போகாதா கோவில் இல்ல.. வேண்டாத சாமி இல்ல.. ஆனால் இப்போ வரைக்கும் அவன் எதுக்கும் பிடி கொடுக்காம போறான். அவன் மனசுல எந்த பொண்ணும் இல்ல.. நம்மளா முடிச்சு வைக்கலாம்னு பார்த்தா அதுக்கும் சம்மதம் சொல்லாம நழுவுறான்.. ” என கண்ணீரை துடைத்த மனைவியை பார்த்தவர்..
” சரி மீனு அழுகாத.. நான் அவன் கிட்ட பேசறேன் ” என்றதும் தான் அவரது முகமே தெளிந்தது.
” இப்போ வருவான் .. நான் சாப்பாடு வைக்கிறேன்.. நீங்க பேசுங்க ” என அனைத்திற்கும் தயாராகி இருந்தனர். பார்கவி வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு மாடிக்கு ஓடி விட்டாள்.
சரியாக எட்டு நாற்பத்தி ஐந்துக்கு கிளம்பி கீழே வந்த மகனை பார்த்து கணவனுக்கு கண்ணை கட்டினார் மீனாட்சி.
அவன் சாப்பாட்டு மேஜையில் அமரவும்.. இன்று திவாகரும் வந்து அமர்ந்தார்.
அதிலேயே எதையோ யூகித்தவன்.. ” ரெண்டு இட்லி மட்டும் வைங்க மா ” என்றதும், அதுவே பரிமாறப்பட.. மகன் சாப்பிடும் வேகத்தை பார்த்து திவாகர் பேச்சை ஆரம்பித்தார்.
” இன்னைக்கு ஈவ்னிங்… “
” எக்ஸாக்டலி… நல்லவேளை நியாபகம் பண்ணீங்க.. இன்னைக்கு ஈவ்னிங் ஹையர் ஆபீஸர்ஸ் கூட மீட்டிங் இருக்கு.. அதுனால நான் வீட்டுக்கு வர லேட் ஆகும்.. டின்னர் அங்கேயே முடிச்சுட்டு வந்துடுவேன் ” என அவன் பேசி முடிப்பதற்கும், இரண்டு இட்லிகள் காலி செய்வதற்கும் சரியாக இருந்தது.
அவனே பேசி விட்டு கையை சுத்தம் செய்து விட்டு கிளம்பியே விட்டான் ஆதிதேவ் ஆருத்ரன்.
பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் செய்வதறியாது பார்த்து கொண்டிருந்தனர்.
” இவன் வரலைன்னா என்ன .. முதல்ல நம்ம போய் பார்த்துட்டு வரலாம் .. நமக்கு பிடிச்சா அடுத்து அவனை பார்க்க சொல்லலாம்.. என்ன சொல்லுறீங்க ” மீனாட்சியின் யோசனையை சற்றே சிந்தித்தவர்.. ” அதெல்லாம் போகலாம் தான்.. ஆனால் மாப்பிள்ளை எங்கன்னு அவங்க வீட்ல கேட்டா என்ன சொல்லுறது “
” முக்கியமான வேலை அதான் நாங்க வந்தோம்.. கண்டிப்பா அவனை வர சொல்றோம்னு சொல்லுவோம் ”
” ம்ம்” என தலையாட்டினாலும் அவருக்கு மனம் ஒப்பவில்லை.
சென்னை டிராபிக்கில் வண்டியை ஓரமாக நிறுத்தி ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ். காலையில் அவர்களது பேச்சில் இருந்து தப்பிக்க இரண்டு இட்லிகள் மட்டுமே உண்டு வந்ததால், அவனது வயிற்றுக்கு மேற்கொண்டு தீனி போட்டால் தான் மூளை வேலை செய்யும் என்ற நிலையில் ஜூசை குடித்துக் கொண்டு சாலையில் பார்வையை பதித்து இருந்தான்.
அப்போது அந்த சிக்னலில் வந்து நின்றதும் அந்த வாகனம். முன்னாள் ஒரு ஆடவன், அவனுக்கு அருகில் ஒரு பொண்ணும், பின்னால் இரண்டு பெண்களும்..
கார் கண்ணாடியை இறக்கி விட்டு, கண்களில் ஆர்வமுடன் சென்னை மாநகரத்தை ரசித்து கொண்டிருந்தாள் அவள். அழகான கருவிழிகள் இரண்டும் அசைந்தாட அங்குமிங்கும் உருண்டு கொண்டிருக்கும் விழிகளை… விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ்.
சிக்னல் பச்சை வண்ணத்தை காட்டி, அவனது ரசனைக்கு தற்போதைய இடை நிறுத்தம் செய்ய.. போகும் வாகனத்தை கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து வைத்தான் ஆதி.
பெண் வீட்டினர் நல்ல முறையில் வரவேற்று , நன்றாக உபசரித்து தான் அனுப்பி வைத்தனர். பெண்ணை பார்த்து பிடித்தும் போனது இருவருக்கும். ஆனால் பிடிக்க வேண்டியவனுக்கு பிடிக்க வேண்டுமே.. வந்ததில் இருந்து மீனாட்சி ஒரே புலம்பல்.. இந்த வீட்டில் சம்மந்தம் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல முறை திவாகரிடம் கூறி விட்டார்.
” உன் மகன் வரவும் நீயே பேசி சம்மதம் வாங்கு. கல்யாணத்தை ஜோரா பண்ணிடலாம் ” என அவர் எழுந்து உள்ளே சென்று விட்டார்.
மகன் சம்மதம் கூறா வரையில் இந்த சம்மந்தம் முடிக்கப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தேவையில்லாமல் மீனாட்சி போல மனதில் ஆசையை வளர்க்க அவர் விரும்பவில்லை. மகனை பற்றி மீனாட்சிக்கும் தெரியும் தான். இருந்தாலும் ஒரு ஆசையில் பறந்து கொண்டிருக்கிறார்.
பார்ப்போம்..
சனா💖