Loading

அத்தியாயம் 18 :

உறங்காது விழி மூடியபடி படுத்திருக்கும் பூவையே ஆழ்ந்து பார்த்தவாறு லீலா நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

நிமிடங்கள் பல கடந்தன.

தனக்குள் எதையோ நினைத்து உழன்றவளை என்ன சொல்லி எப்படி தேற்றுவதென்று லீலாவிற்குத் தெரியவில்லை.

ஆனால் பூவை இப்படி பார்க்க அவளுக்கு என்னவோ போலிருந்தது.

அச்சமயம் லீலாவின் வீட்டிலிருந்து அழைப்புவர… எடுத்து பேசியவள் வைக்கும் போதுதான் கவனித்தாள் பாரியிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது.

“லீலா இஃப் யூ ஃபிரீ… மேக் அ கால் டூ மீ.”

உடனடியாக பாரிக்கு அழைத்திருந்தாள். பாரியும் லீலாவின் அழைப்பிற்காக காத்திருந்தானோ? முதல் ஒலியிலேயே எடுத்திருந்தான்.

“லீலா பூ ஓகே தான?” அழைப்பை ஏற்றதும் அவனது முதல் கேள்வி இதுவாகத்தான் இருந்தது.

“ஓகே தான் பாரி” என்ற லீலாவிடம் அதனை ஏற்காது…

“இல்லை லீலா. அவளுக்கு என்னவோ ப்ராப்ளம் நீ கொஞ்சம் பாரேன்” என்று படபடத்தான்.

“ஹேய் பாரி சில். அவள் நார்மலாத்தான் இருக்காள். இப்போகூட தூங்கிட்டு தான் இருக்கா(ள்)” என்றாள்.

“அவள் பகலில் தூங்கலாமாட்டா(ள்) லீலா. அவளுக்கு எதாவது முடியலன்னா தான் பகல்ல படுக்கவே செய்வா(ள்). பூ தூங்கிட்டு இருக்கன்னு சொன்னதாலதான் என்னவோ ஏதோன்னு உன்னை கால் பண்ண சொன்னேன்” என்ற பாரியிடம் பூவைப்பற்றிய தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“சரிடா… நான் அவகிட்ட கேட்டு சொல்றேன். நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு” என்ற லீலா, அழைப்பைத் துண்டிக்காமலே கவனக்குறைவாக விட்டுவிட… லீலா லைனில் இருப்பதால் காத்திருக்க சொல்கிறாள் என்று நினைத்து பாரியும் துண்டிக்காது அலைபேசியை காதிலேயே வைத்திருந்தான்.

பூவின் அருகில் சென்று அமர்ந்த லீலா, அலைபேசியை பக்கத்திலிருந்த மேசையில் வைத்தாள்.

லீலாவின் அரவம் உணர்ந்த பூ,

“ப்ளீஸ் லீலா நான் கொஞ்சம் யோசிக்கணும். தனியா விடேன்” என்று  சொல்ல அது பாரிக்கும் நன்றாகக் கேட்டது.

“என்ன யோசிக்கணும். எதைப்பற்றி?” லீலா விடுவதாக இல்லை. ஒருநாளும் பூவின் முகத்தில் இப்படியொரு வேதனையை லீலா கண்டதில்லை அவளை பார்த்தது முதல்.

“முதலில் நீ எழுந்து உட்காரு” என்று லீலா அதட்ட… அங்கே பாரி “அவளை அதட்டமாப் பேசு லீலா” என்று லைனில் இல்லாத லீலாவை அதட்டினான்.

பூ எழுந்து அமர, தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்தாள். பூ மெல்ல ஆசுவாசமடைந்தாள்.

“இப்போ சொல்லு தமிழ். உன் மண்டையில் என்னத்த போட்டு பலமா உருட்டுற?”

பூவிற்கும் உள்ளுக்குள்ளே குழப்பிக்கொள்வதற்கு லீலாவிடமாவது சொல்லலாம் என்று தோன்ற தனக்குள் இருப்பதை கூறினாள்.

“அமிர்தா என்னை ரொம்ப கேர் செய்யுறா(ள்) லீலா.”

“இதிலென்ன உனக்கு குழப்பம்?”

“குழப்பமே அதுதான். அவளுக்கு ஏன் என்மேல் அக்கறை. சாப்பிடும் போது எனக்கு தண்ணீ வேணுன்னு நான் பாட்டில் எடுத்தால் அவள் எனக்கு முன்ன எடுத்து ஓப்பன் பண்ணிக் கொடுக்கிறா(ள்). நோட்ஸ் எடுக்கும்போது கை வலிக்குதுன்னு வேந்தன் கிட்ட நோட் கொடுத்தால் அவள் பிடுங்கி எழுதி கொடுக்கிறாள். எனக்காக வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வர்றாள். நான் சும்மா பெஞ்சில் தலை சாய்ச்சிக்கிட்டா அவள் மடியில என் தலையை வச்சிக்கிறாள். தட்டிலாம் கொடுக்கிறாள். வேந்தன் எனக்கு என்னவெல்லாம் பன்றானோ அதையெல்லாம் இவளும் எனக்கு செய்றாள். காரணம் தான் புரியல” என்று  இரு கைகளையும் கோர்த்து தலையில் வைத்துவிட்டாள்.

“ச்சூ… இதுக்குத்தானா இவ்வளவு குழப்பம். அமிர்தாவுக்கு உன்னை பிடிச்சிருக்கலாம். அதனால இதையெல்லாம் பண்ணியிருக்கலாம். அவளும் உன்னுடைய பிரண்ட் தான தமிழ். உனக்கென்ன குழப்பம் தெரியுமா? பாரி உன்மேல காட்டுற அக்கறையை வேறயாரும் காட்டுனா அதை உன்னால ஏத்துக்க முடியல அதுதான் காரணம்” என்று பூவை சமாதானம் செய்ய சொல்லிய லீலாவுக்குமே ‘அமிர்தா எதற்கு அதிக அக்கறை காட்ட வேண்டும்?’ என்ற கேள்வி மண்டைக்குள் ஓடியது.

பூ சொல்லியதையும் அதற்கு லீலா கொடுத்த பதிலையும் கேட்ட பாரிக்கும் அமிர்தாவின் செய்கைகளுக்கு தப்பர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. அமிர்தாவும் தன்னைப்போலவே பூவின் மீது அன்பாக இருக்கின்றாள் என்று தவறாக எண்ணிக்கொண்டான். அதன் விளைவு அமிர்தாவின் மீது பாரிக்கு மெல்லிய ஈர்ப்பு.

தன்னைப்போலவே பூவை பார்த்துக்கொள்ளும் இன்னொரு ஆள். அதனால் அமிர்தாவின் மீது வந்த பிடித்தம் அவனுள். அமிர்தாவின் திட்டமும் அதுதான். அவியும் ஜென்னும் அவளைப்பற்றி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பேசிக்கொண்டதைக் கேட்ட அமிர்தா தீட்டிய திட்டமே இதுதான்.

“பூவை விலக்கும்போது பாரி தானாவே அவளை விலக்கிடுவான்” என்று ஜென் சொன்னதை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டாள் அமிர்தா.

“அவளை விலக்கினா விலகுறவன், அவள் மேல அன்பு காட்டினா(ல்) என்னை நெருங்குவான் இல்லையா?” என நினைத்தவள் அன்று முதல் பூவிடம் அன்பாக நடந்துகொண்டாள். அதிகபட்ச அக்கறை காட்டினாள்.

சில சமயங்களில் ஜென்னே கூட…

“உன்னை ஓவர்டேக் பண்ணிடுவாள் போல பாரி” என்று கிண்டல் செய்திருக்கிறாள். அந்தளவிற்கு பூ மீது பாசமாக இருப்பதாக அமிர்தா நடிப்பில் சிறப்பாக செயல்பட்டாள்.

இப்போது அவள் எண்ணியது நடந்தும் விட்டது. பூவே வேந்தன் செய்வதைப்போல் என்று சொல்லிட, பாரிக்கு பூ தன்னை அமிர்தாவில் காண்கிறாள் என்றே தோன்றியது. அதுவே பாரிக்கு அமிர்தாவின் மீது நெருக்கத்தைக் கூட்டியது.

தன்னாலேயே தன் வார்த்தைகளாலேயே பாரிக்கு அமிர்தாவின் மீது பிடித்தம் ஏற்படுமென்று பூ நினைத்திருக்கமாட்டாள்.

‘இனி லீலாவே பேசி பூவை சரி செய்திடுவாள்’ என நினைத்த பாரி இணைப்பைத் துண்டித்திருந்தான். மேற்கொண்டுஅவர்கள் பேசுவதை பாரி கேட்டிருக்கலாமோ?

“ஹோ… நான் ஃபிரண்ட் அப்படிங்கிறதுகாகத்தான் எல்லாம் செய்றாளா?” என்று ஒரு மாதிரி கேட்ட பூ… “எனக்கு அப்படித் தெரியல லீ” என்றாள்.

“புரியல தமிழ்.”

“ஒன் இயர் முடியப்போகுது லீ… இப்பக்கூடவா அவள் உண்மையா பழகுறாளா பொய்யா பழகுறாளான்னு தெரியாது. அவளோட இன்டென்ஷன் வேற. அது என்னன்னு தான் தெரிய மாட்டேங்குது” என்ற பூவின் கண்கள் கண்ணீரில் நனைந்தன.

அவளுக்குள் அமிர்தாவின் காரணங்கள் புரிந்தும் புரியா நிலை.

யோசித்து யோசித்து தலை வெடிக்கும் போலிருந்தது.

இந்த வாரம் பாரியுடன் வீட்டிற்கு சென்றிருப்பது தெரிந்து வேண்டுமென்றே அத்தனை முறை அமிர்தா கால் செய்தது பூவிற்கு ஏதோ தவறாகப்பட்டது. அதன் விளைவு ஆரம்பத்திலிருந்து அமிர்தாவின் செயல்களை யோசிக்க வைத்து பெரும் குழப்பத்தில் அவளை ஆழ்த்திவிட்டது. லீலாவிடம் பகிர்ந்துகொண்ட பின்னரும் கூட ஒரு தெளிவில்லை.

‘இனியும் இதைபற்றியே இவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள் இரவு சரியாக உறங்கமாட்டாள்’ என நினைத்த லீலா,

“பாரி கால் பண்ணப்போ ஒழுங்கா பேசியிருக்க வேண்டியது தானே தமிழ். நீ சரியா பேசலன்னதும் அவன் ரொம்ப பயந்துட்டான். எனக்கு கால் பண்ணி உனக்கென்னாச்சுன்னு கேட்குறான்” என்று யாரைப்பற்றி பேசினால் அவள் சடுதியில் நிலைபெறுவாளோ அவனைப்பற்றி சரியாகப் பேசினாள்.

“நான் பேசிக்கிறேன் லீ” என்ற பூ அலைபேசியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள்.

பூவிற்கு ஏனோ அமிர்தா செய்பவை யாவும் பாரி தனக்கு செய்வதை தடுப்பதற்காகவே அவள் முந்திக்கொண்டு செய்வது போலிருந்தது. அதனை ஏனோ லீலாவிடம் சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.

அதற்கு காரணம் பாரிக்கு ஜென்னிடம் கொண்டுள்ள நெருக்கம் கூட அமிர்தாவிடம் இல்லை. அவனது கவனம் அமிர்தாவின் மீது அதிகபட்சமாக ஒரு நொடிக்கு மேல் நீடித்தது கிடையாது. அதனால் கூட அவளின் வேண்டுமென்கிற செயல்கள் பாரியின் கண்ணில் படாமல் இருக்கலாம். பாரி பார்த்து கவனித்திருந்திருந்தால் அமிர்தாவைப்பற்றி சரியாக கணித்திருப்பான்.

இப்படி பூவின் ஒரு பாதி பேச்சினை மட்டும் கேட்டுவிட்டு அமிர்தா மீது நல்லெண்ணம் கொண்டிருக்க மாட்டான். அந்த நல்லெண்ணம் அவனை காதலில் கொண்டு சென்று தள்ளவிருக்கிறது. இதனால் ஏற்படப்போவது அவனது பூவிடனான பிரிவு. அவனே அவனது பூவின் காதலுக்கு வலியை கொடுக்கவிருக்கின்றான். அவன் நினைத்து நினைத்து மருகும் நிகழ்வு ஒன்றை அவனே நடத்தவிருக்கிறான்.

அன்று சரக்கொன்றை மரத்தடியில் பூ சற்று முன்னரே வந்து அமர்ந்திருந்தாள். லீலா லேபில் வேலையிருப்பதாக விரைவில் கிளம்பிட, அறையில் தனித்திருக்க வேண்டாமென்று பூவும் அவளுடனே வந்துவிட்டாள்.

வேகமாக ஓடிவந்த அவி பூவின் அருகில் அமர்ந்தான்.

“என்ன அவி இது, எதுக்கு இப்படி ஓடிவர?” எனக்கேட்ட பூ அவனிடம் தண்ணீர் போத்தலை நீட்டினாள்.

“ரெக்கார்ட் முடிக்கல தமிழ். லாஸ்ட் கொஞ்சமிருக்கு” என்றவன் எடுத்து எழுத ஆரம்பித்தான்.

“அத்துக்குத்தேன் இம்புட்டு வேகமா? நைட்டே முடிச்சிட்டு தூங்கிருக்கலாமே!”

“அப்போ கவனிக்கல… இப்போ வீட்டுல உட்கார்ந்து அவசரமா எழுதினா ப்ரொஃபஸ்ஸர் மேடம் படிப்பு விஷயத்தில் கவனம் வேண்டாமான்னு உண்டில்லைன்னு பண்ணிடுவாங்க. அதான் இங்க வந்துட்டேன். பாரிகிட்ட சொல்லல. அவன் எனக்கு வெயிட் பண்ணுவான். நீ கொஞ்சம் கால் பண்ணி சொல்லு தமிழ்” என்றவன் எழுதுவதில் மும்முரமாக இருந்தான்.

“நான் பன்றேன் அவி” என்றபடி வந்தமர்ந்த அமிர்தா, அலைபேசியை கையிலெடுக்க…

“நான் உன்கிட்ட சொல்லலை அமிர்தா” என்றான் அழுத்தமாக.

“அவி விடு. நீ பர்ஸ்ட் எழுதி முடி” என்று அவியின் கவனத்தை திருப்பிய பூ, “நீயே சொல்லிடு” என அமிர்தாவிடம் கூறினாள்.

“தமிழ் இந்த டென்ஷனில் சாப்பிடவேயில்லை… இப்போ ரொம்ப பசிக்குது. பேக்கில் பாக்ஸ் இருக்கு” என்று அவி இழுக்க…

அவன் சொல்ல வருவதை புரிந்துகொண்ட பூ, பாக்ஸை திறந்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

“நீயும் சாப்பிடு தமிழ். உனக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன்” என்று சொல்லியவன் எழுதுவதில் கண்ணாக இருக்க… அவிக்கு ஊட்டியவாறே பூவும் சாப்பிட…

“எனக்கில்லையா?” என்று வந்து சேர்ந்தாள் ஜென்.

“லூசுக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கிறதில்லை” என்று அவி சொல்ல… அவனின் தலையில் வழக்கம்போல் கொட்டிய ஜென், பூ அவனுக்கு கொண்டுச் சென்ற சாப்பாட்டை தன் வாயில் வாங்கிக்கொண்டாள்.

“பார்த்து அவள் கையை கடிச்சிடாதே” எனக்கூறி மீண்டும் ஒரு கொட்டு ஜென்னிடம் வாங்கிக்கொண்டான்.

“உங்களுக்கு இதே வேலையாப்போச்சு. ரெண்டு பேரும் அமைதியா இருங்க” என்று அதட்டிய பூ இருவருக்கும் மாற்றி மாற்றி ஊட்டினாள்.

‘ரொம்ப ஓவரா இருக்கு. இந்த பாரிக்காக இதையெல்லாம் பொறுத்து போகணும்’ என்று நினைத்த அமிர்தா பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள்.

“நீ சாப்பிடுறியா அமிர்தா?” பூ கேட்டிட வேகமாக மறுத்தாள்.

“இதே பாரியோட சாப்பாடுன்னா கேட்கவே தேவையில்லை…” என்று அவி முணுமுணுத்தான்.

அமிர்தா அவியை முறைத்திட…

“வேந்தாக்கு சொல்லிட்டியா அமிர்தா” எனக்கேட்டு அவளின் பார்வையின் போக்கை மாற்றினாள் பூ.

“வந்திட்டு இருக்கானாம்” என சொல்லியவள் “நான் கிளாசுக்கு போறேன்” என்று எழுந்துவிட்டாள். அதற்கு மேல் அவளால் அவர்களுடன் அமர்ந்திருக்க முடியவில்லை.

“இன்னைக்கு என்ன இவள் ரொம்ப பளிச்சுன்னு இருக்காள்?” செல்லும் அமிர்தாவை நோக்கியவாறு ஜென் கேட்க, பூ தோளினைக் குலுக்கினாள்.

“அவகிட்ட நீயேன் அவி ஓப்பனா உன் கோபத்தை காட்டுற?” பூ அவியிடம் வினவினாள்.

“பின்ன என்ன தமிழ்… எப்போ பாரு ஓவர் ஆக்டிங்” என்றவன் கடுப்பின் உச்சத்தில்.

“எதுக்குடா இவ்வளவு கோபம்” என்ற பூ கடைசி வாய் உணவை அவனது வாயில் திணித்தாள்.

“அமிர்தாவை பார்த்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு இந்த கோபம் இருக்கு” என்றாள் ஜென். அவனைத் தெரிந்தவளாக.

“நீங்க வேணா பாருங்க… அந்த அமிர்தா பாரி மேல லவ்வுன்னு வந்து நிக்கப்போறாள்” என்று எரிச்சலாகக் கூறியவன், “நாய்கிட்ட இருந்து சேவ் பண்ணா லவ் வந்திடுமா?” எனக் கேட்டான்.

அவி சொன்னதில் பூவிடம் அப்பட்டமான அதிர்வு. மூச்சே நின்று போனது. இதயத்தில் எதையோ பாரமாக வைத்த உணர்வு. மூச்சு விடவே சிரமமாக உணர்ந்தாள். அந்நொடி பாரியின் மீது தனக்கு எத்தனை நேசமென புரிந்துகொண்டவளுக்கு ஏனென்றே தெரியாது கண்ணில் நீர் நிறைந்தது. அதனை நண்பர்களுக்கு காட்டாது மறைத்தவள் பாக்ஸ் கழுவி வருவதாக சொல்லி வேகமாக அங்கிருந்து சென்றாள்.

“பாரி ஹேண்ட்ஸம் டா… அதுனால பார்த்ததும் லவ் வந்திருக்கும். லவ் அட் பர்ஸ்ட் சைட் நீ கேள்வி பதிட்டதில்லையா?” என்ற ஜென், “கர்ச்சிஃப் எடுத்து கொடுத்தாலே லவ் வர காலம் டா இது” என்றாள்.

அத்தோடு அவியின் அருகில் நெருங்கி அவனது காதோரம் குனிந்த ஜென்… “என் க்ரஷ் லிஸ்டில் பாரிக்குத்தான் பர்ஸ்ட் பிளேஸ் தெரியுமா?” எனக்கேட்டு கண் சிமிட்டினாள்.

இப்போது முதல் முறையாக ஜென்னின் தலையில் அவி கொட்டியிருந்தான்.

“என்னடா” என்ற ஜென்னை மீண்டும் கொட்டியவன், “உனக்கு க்ரஷ், சைட், லவ் எல்லாம் நான் தான்” என்றான். நிர்மலமான முகத்தோடு.

“எப்போலிருந்து” எனக் கேட்டாள். அத்தனை அமைதியான ஜென்னின் குரலை அவி கேட்டதே இல்லை.

தடுமாறியவன் அவளின் துளைக்கும் பார்வை அறிந்து…

“நீ சொன்னியே உன் க்ரஷ்… அந்த வோர்ட் கேட்டதிலிருந்து. டக்குன்னு தோணுச்சு சொல்லிட்டேன். அவ்வளவு தான் விருப்பமிருந்தா அக்செப்ட் பண்ணு” என்றவன் எழுதி முடித்த குறிப்பேட்டை பையில் வைத்துக் கொண்டிருந்தான்.

“ஒரு வோர்ட் கேட்டால் கூட லவ் வரும் போல அவி” என்று ஜென் படுதீவிரமாக சொல்ல… சில கணங்கள் இருவரும் ஒருவரையொருவர் அசையாது பார்த்து… பக்கென்று ஒரே நேரத்தில் சிரித்து விட்டனர்.

“சொன்னா நானும் சிரிப்பேன்” என்றபடி வந்த பூ… பாக்சினை அவியிடம் நீட்டினாள்.

பூ அழுதிருப்பாள் போலும். கண்கள் சிவந்து இருந்தன. ஆனால் இருவருமே அவளிடம் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அவிக்கு மட்டும் எதனால் என்று ஓர் யூகம் இருந்தது.

“டைம் ஆச்சே… இன்னுமா அவன்(பாரி) வரல” என்றபடி நேரத்தை பார்த்த அவி, “நாம போலாம் வாங்க” என்க மூவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

மூவரும் வகுப்பிற்குள் நுழைய பார்க்கும் காட்சியை நம்பாது வாயிலிலே சமைந்து நின்றனர்.

பாரியும் அமிர்தாவும் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்திருந்தனர். அதிலும் அமிர்தா பாரிக்கு சாக்லேட் ஊட்டிவிட்டபடி. அதையே பாரியும் அமிர்தாவுக்கு செய்தவாறு.

பூ அவியின் கையை இறுகப்பற்றினாள். அதிலிருந்த அழுத்தமே அவிக்கு அவளின் மனதை தெள்ளென தெரியப்படுத்தியது.

அவர்களுக்குள் அருகருகே அமர்வதோ, தொட்டு பேசுவதோ, ஒருவருக்கொருவர் உணவினை பகிர்ந்து ஊட்டிக்கொள்வதோ புதிதுமல்ல. வித்தியாசமுமல்ல.

ஆனால் பாரி… பாரிக்கு ஏனோ இத்தனை நாட்கள் ஆகியும் அமிர்தாவிடம் ஒரு ஒட்டுதல் இல்லை. தோழி என்கிற முறையில் பேசுவான் எல்லாம் செய்வான். ஆனால் அவளுடன் இத்தகைய நெருக்கத்தை என்றுமே அவன் காட்டியதில்லை. அமிர்தாவாக பேசினால், கேட்டால் அதற்கான பதிலை மட்டுமே கொடுப்பான். ஜென்னிடம் கூட அடித்து விளையாடியிருக்கிறான். அமிர்தா என்றாலே எப்போதும் ஒரு அடி தள்ளி நிற்பவன் இன்று இத்தனை உரிமையாய். பார்ப்பவர்களால் நம்பவே முடியவில்லை.

அவர்களுக்கு எங்கே தெரிந்திருக்கப்போகிறது… பூவால், அவளது வார்த்தைகளினால் மட்டுமே பாரி அமிர்தாவிடம் தனக்கிருந்த சிறு விலகளையும் உதறிவிட்டான் என்று.

“என்னடா இது…” ஜென் ஆச்சர்யமாகக் கேட்க,

“அவளும் நம்ம பிரண்ட் தான ஜென். இதிலென்ன இருக்கு” என்று சொல்லிய அவி பூவை கண் காட்டினான்.

ஜென்னும் புரிந்தது எனும் விதமாக…

“சுவீட் ஊட்டிக்கிற அளவுக்கு என்ன மேட்டர்ன்னு கேட்போம் வாங்க” என்று ஜென் பேச்சை மாற்றினாள்.

“நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் ஜென்” என்று மரத்த குரலில் கூறிய பூவை தனித்துவிட மனமின்றி… “நானும் வரேன் தமிழ்” என்றாள் ஜென்.

“ப்ளீஸ் ஜென். நான் மட்டும்” என்று பூ மறுத்து சொல்லும் போதே அங்கு வந்த சீனியர் மாணவன் மாதேஷ்… “தமிழ் உன்கிட்ட பேசணும்” என்று தனியாக வரச்சொல்லி அழைத்தான்.

பூவும் உடனடியாகத் தன்னுடைய பையினை அவியிடம் கொடுத்தவள் “ம்ம் வர்றேன்” என்று மாதேஷுடன் நடந்தாள்.

“என்னடா அவி…?” ஜென்னிற்கு ஒன்றும் புரியவில்லை.

“வெயிட் அண்ட் வாட்ச்” என்ற அவி… உள்ளே தாங்கள் அமரும் இடம் நோக்கிச் சென்றான்.

தனக்கு மறுபக்கம் சென்று அவியும் ஜென்னும் அமர்ந்த பிறகே அவர்களை கவனித்தான் பாரி.

“எங்கடா பூ?” என அவர்களிடம் கேட்டவன், வாயிலை பார்த்து மீண்டான்.

“பேக் உன்கிட்ட இருக்கு?” அவியிடமிருந்த பூவின் பையை காண்பித்துக் கேட்டான்.

அவியும் ஜென்னும் பாரிக்கு அருகில் அமர்ந்திருக்கும் அமிர்தாவை அர்த்தமாக ஏறிட…

அவி கண்களாலேயே “என்னதிது?” என பூவின் இடத்தில் அமிர்தா அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி வினவினான்.

ஒன்பது பேர் உட்காரும் அந்த நீண்ட மர பெஞ்சில் இவர்கள் ஐவர் மட்டுமே அமர்வார்கள். அதுவும் பாரிக்கு வலப்பக்கம் பூ. இடப்பக்கம் அவி, அவனுக்கு அடுத்து ஜென். பூவிற்கு அடுத்து அமிர்தா. இந்த வரிசையில் மாற்றம் வந்தாலும், பாரிக்கு அருகில் பூவை தவிர்த்து ஜென், அவியென மாற்றி மாற்றி அமர்ந்திருக்கிறார்களேத் தவிர அமிர்தாவின் அருகில் ஒருபோதும் பாரி அமர்ந்ததில்லை. அதுவும் பூவின் இடத்தில் அவியையே உட்கார அனுமதித்திட மாட்டான். ஆனால் இன்று?

“ஹேய்… இன்னைக்கு அமிர்தா பர்த்டே டா. அதான் சுவீட் கொடுத்தாள்” என்று பாரி தன் கையிலிருந்த சாக்லெட்டினை காண்பிக்க… அமிர்தாவும் அவர்கள் இருவருக்கும் சாக்லேட் கொடுத்திட… வாழ்த்தி சாக்லேட்டினை வாங்கிக்கொண்டவர்கள் மேற்கொண்டு அதிகப்படியாக எதையும் அமிர்தாவிடம் பேசவில்லை.

“சரி பூ எங்கடா?”

“நீ ஏன் மரத்துகிட்ட வரல?”

பாரி கேள்விகேட்க பதில் சொல்லாது தானொரு கேள்வியைக் கேட்டான் அவி.

“நான் அங்கதாண்டா வந்தேன். எனக்கு எதிர்ல அமிர்தா வந்தாள். அவள் தான் நீங்க வந்துட்டு இருக்கீங்க சொன்னாள். அதான் கிளாஸ்க்கு வந்துட்டேன்” என்றான் பாரி.

அவி அமிர்தாவை அழுத்தமாக பார்க்க… அவள் அவியின் புறம் திரும்பவேயில்லை.

“அவ்வளவு நேரம் நம்மளோட தாண்டா இருந்தாள். பர்த்டே சொல்லவேயில்லை” என்று அவியிடம் ஜென் முணுமுணுக்க…

“நாம வந்திட்டிருக்கோமுன்னு அவள் பாரிகிட்ட பொய் சொல்லியிருக்காள். அது உனக்கு புரியலையா?” என்று அவி பல்லைக் கடித்தான்.

“நிச்சயம் இவளாலதான் நமக்குள்ள ப்ராப்ளம் வரப்போகுது.”

“என்னடா சீக்ரட் பேசுறீங்க ரெண்டு பேரும்” என்ற பாரி அவியின் பதிலை எதிர்பார்க்காது, “பூ எங்கடா” என்று மீண்டும் கேட்டான்.

“சீனியர் கூப்பிட்டாங்கன்னு போயிருக்காடா?”

“தனியா எதுக்கு அனுப்புனீங்க? அவளோடதான இருந்தீங்க, யாராவது கூடப்போயிருக்கலாமே!” பாரிக்கு முன் அமிர்தா கேட்டிருந்தாள். வார்த்தையில் அத்தனை அக்கறையைக்காட்டி.

அந்நொடி அவிக்கு புரியாத ஒன்று சரியாக புரிந்தது.

“சீனியர் கூப்பிட்டாங்கன்னு தான போயிருக்காள். காலேஜில் என்ன பயம். இப்போ வந்திடுவாள்” ஜென் கூறிட, “ஓவர் டோஸ் வேண்டாம் அமிர்தா” என்று அவி நேரடியாகவே எச்சரித்தான்.

“ஹேய் அவி சில் டா. இப்போ எதுக்கு அவகிட்ட ரெண்டு பேரும் கோவப்படுறீங்க? பூ தனியா போயிருக்கான்னு அக்கறையில் கேட்டுட்டாள் விடு” என்று முதல்முறையாக அமிர்தாவிற்காக பரிந்து வந்தான் பாரி.

‘இந்த அக்கறையால் தானே அவள் மீது உனக்கு திடீர் ஈடுபாடு.’ அவியால் வெளியில் கேட்டிட முடியவில்லை.

வகுப்பிற்குள் ஆசிரியர் வர அவர்களின் பேச்சும் அத்தோடு நின்றது.

இரண்டு வகுப்புகள் கடந்தும் பூ வரவில்லை என்றதும் பாரியினுள் பதற்றம். இடைவேளை மணி ஒலிக்க பாரி அவியை கடிந்து கொண்டான்.

“அவளை எங்கடா தனியா விட்டீங்க? சொல்லாம எங்கடா போனாள்?”

“இப்போ நீயேன் டென்ஷன் ஆகுற பாரி. வந்திடுவாள்.” அவிக்கு துணை வந்தாள் ஜென்.

“டென்ஷன் ஆகாம எப்படி இருக்க முடியும் ஜென். நீங்க உங்களோடவே கூப்பிட்டு வந்திருக்கணும் அப்படியில்லையா யாராவது அவளோட போயிருக்கணும். இப்படி தனியா விட்டுட்டு பாரியை டென்ஷன் பன்றதே நீங்கதான். தமிழ் எங்க போனாளோ” என்று அதீத கவலையில் முகத்தை வைத்துக்கொண்டு பேசிய அமிர்தா,

“நாம எங்கன்னு தேடிப் பார்க்கலாம் பாரி” என அவனையும் இழுத்துக்கொண்டு சென்றாள்.

“என்ன அவி இவள் இப்படியிருக்கா(ள்)?” அமிர்தாவின் பேச்சைக்கேட்டு ஜென் வாயில் அதிர்ந்து கை வைத்துவிட்டாள்.

“அவள் நம்மளோட கேங் சேர்ந்ததே பாரிக்காகத்தான்னு இப்போ தெளிவா புரியுது ஜென்” என்ற அவி, “இந்த இயர் ஸ்டார்டிங்கில் நீ என்கிட்ட ஒன்னு சொன்ன நினைவிருக்கா?” என்று கேட்டான்.

ஜென் இல்லையெனக் கூறினாள்.

“தமிழை ஓரங்கட்ட நினைச்சா அமிர்தா தான் பாரியின் நட்பை இழப்பான்னு.”

“நினைவிருக்கு அவி.”

“அதைத்தான் உல்ட்டாவா செய்றாள்” என்ற அவி ஜென்னிற்கு புரியும்படியே கூறினான்.

“பாரிக்கு தமிழ் தான் எல்லாம். தமிழை அவனைவிட இன்னொருத்தவங்க நல்லா பார்த்துகிறாங்கன்னு வை, அவனுக்கு அவங்களையும் பிடிக்கத்தானே செய்யும். பாரியை கவுக்க அமிர்தா போட்ட பிளான் தான் தமிழ். தமிழை வச்சே பாரிகிட்ட நெருங்கிட்டாள்.”

“புரியுது அவி” என்றவள், “இதை அப்புறம் யோசிப்போம். தமிழை தேடுவோம் வா” என்று ஜென் சொல்ல இருவரும் மாதேஷின் வகுப்பிற்குச் சென்றனர்.

“தமிழ் எங்க சீனியர்?”

“நான் பேசிட்டு அப்போவே அனுப்பிட்டனே அவினாஷ்.”

“சீனியர்…?”

“டேய் பிராமிஸ் டா. உங்க ஃப்ரண்டை நான் ஒன்னும் மறைச்சு வைக்கலடா! நான் அவகிட்ட பேசுறதுக்கு முன்னவே, கொஞ்சம் மூட் அப்செட் சீனியர். நான் அப்புறம் வரன்னு சொல்லிட்டு போயிட்டாள் டா. நம்புடா” என்றான் மாதேஷ்.

“எங்க போனா(ள்) பார்த்தீங்களா?”

“ஹாஸ்டல் பக்கம் நினைக்கிறேன்” என்ற மாதேஷ் விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்.

அவியும் ஜென்னும் விடுதி பக்கம் செல்ல… கேன்டினிலிருந்து பாரியும் அமிர்தாவும் வந்தனர்.

“கிரவுண்ட்… லீலா கிளாஸ், கேன்டின் எல்லாம் பார்த்தாச்சுடா. பூ எங்கயுமில்ல” என்ற பாரிக்கு கண்கள் சிவந்திருந்தது. கலங்க துடிக்கும் கண்களின் அடக்கமே அந்த சிவப்பென அவிக்கு புரிந்தது.

பூவின் மீதான பாரியின் அன்பு தான் அவிக்கு நன்கு தெரியுமே! இவ்வளவு நேரம் பூவை காணாததால் அவன் உடைந்திருப்பான் என்பதும் விளங்கியது.

அமிர்தாவிற்கு எரிச்சலாக இருந்தது.

‘இப்போது தான் கொஞ்சம் நெருங்கி வந்திருக்கான். முகத்தில் எதையாவது காட்டி அதுக்கு ஆப்பு வச்சிக்காதே அமிர்தா’ என்று சொல்லிக்கொண்டவள் வெளியில் “அய்யோ தமிழ் எங்கதான் போன?” என்று புலம்பினாள்.

அவியும் ஜென்னும் ஒருவரையொருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.

“ஃபீல் ஃபிரீ பாரி. தமிழ் ஹாஸ்டலுக்குத்தான் போயிருக்காள்” என்று அவி சொல்ல… நால்வரும் விடுதி பகுதிக்கு வந்திருந்தனர்.

அங்கு பார்வையாளர் அறையில் மற்ற மூவரும் இருக்க… ஜென் மட்டும் விடுதி காப்பாளரிடம் அனுமதி பெற்று பூவின் அறைக்குச் சென்றாள்.

அறையின் கதவு திறந்தேயிருக்க…

“தமிழ்” என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜென்.

மெத்தையில் கால்களை கட்டிக்கொண்டு பின்னால் சுவற்றில் சாய்ந்து தலை சாய்த்து அறையின் மூலையில் எங்கோ நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

“தமிழ்” என்ற விளிப்புடன் அவளின் அருகில் அமர்ந்த ஜென், “கால் பண்ணாலும் எடுக்கல. ஏன் இங்க வந்த?” எனக் கேட்டுக்கொண்டே அவளின் கையை தொட… உணர்வு வரப்பெற்று ஜென்னை பார்த்த பூ அவளின் மடியில் முகம் புதைத்து முடிந்த மட்டும் கதறினாள்.

“தமிழ்… தமிழ் என்னம்மா? என்னாச்சு?” ஜென்னிற்கு பதற்றம். அந்நேரத்தில் எப்படி என்ன பேச வேண்டுமென்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. பாரியோடு அடித்து விளையாடி தன்னோடும் அவியோடும் கலகலப்பாக பேசி சிரித்து துருதுருவென இருக்கும் பூவின் திடீர் அழுகை முகம் ஜென்னிற்கு என்னவோ போலிருந்தது.

“தமிழ்… ப்ளீஸ் அழாதடா” என்று அழுகையில் குலுங்கும் பூவின் முதுகை நீவியபடி ஜென் இருக்க… பூவின் கதறல் நிற்பதாக இல்லை.

“போன ஜென்னையும் காணோம். என்னடா அவி. ரூம்லதான் இருக்காளான்னாவது கால் பண்ணி சொல்லலாம்ல?” என்ற பாரி அவ்வறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

“நான் வேணா போய் பார்த்துட்டு வரட்டுமா பாரி?”

“விடமாட்டங்க அமிர்தா. ஹாஸ்டல் ஸ்டூடன்ட்ஸ் தவிர்த்து யாருக்கும் அலோவ் இல்லை. என்னோட அம்மா தான் பூவுக்கு கார்டிய(ன்)ங்கிறதால ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டதால் ஜென்னை அலோவ் பண்ணியிருக்காங்க” என்ற பாரியின் பதற்றம் பூவை பார்க்கும் வரை குறையாதென அவிக்கு தெரிந்ததால் எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தான்.

ஆனால் அமிர்தா பூவின் மீது அக்கறை இருப்பதாக அவளின் நலன் பற்றி ஏதேதோ பேசியபடி இருக்க… ” நீ கொஞ்சம் உன் வாயை மூடுறியா?” என்று அவிக்கு கத்த வேண்டும் போல் தோன்றியது.

நேரம் தான் கடந்ததே தவிர பூவின் அழுகை நின்றபாடில்லை. என்ன காரணமென்று ஜென் பலவிதமாக கேட்டும் பலனில்லை.

“நீ அழறது எனக்கும் அழ வருது தமிழ். எதுவாயிருந்தாலும் நாம சரிபண்ணிடலாம் டா” என்று ஜென்னும் விசும்பிடவே அவளின் மடியில் புதைத்த தலையை நிமிர்த்தினாள் பூ.

ஜென் கண்ணில் நீரை பார்த்ததும் தன்னால் தானென்று பூவிற்கு குற்றவுணர்வாகிட… தன்னையே நிந்தித்தவளாக தன் அழுகையை நிறுத்தினாள்.

“சாரி ஜென். கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்ற பூவை கட்டிக்கொண்ட ஜென்… “நீ ஃபீல் பண்ற விஷயம் என்னவாயிருந்தாலும் நாங்க இருக்கோம் தமிழ். அதுவும் நீ இப்படி அழுதன்னு பாரிக்கு தெரிஞ்சா உடைஞ்சுப் போயிடுவான். இப்போகூட ஹாஸ்டல் விசிட்டர் ரூம்ல தான் இருக்காங்க” என்று ஜென் சொல்லியதும் கட்டிலிலிருந்து இறங்கினாள் பூ.

“நீ போயிட்டே இரு ஜென். ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு டூ மினிட்ஸ்ல வந்துடுறேன்” என்ற பூ, இரண்டடி வைத்த ஜென்னின் கையை பிடித்து தயக்கமாக ஏறிட…

“கண்டிப்பா நீ அழுதன்னு நான் சொல்லமாட்டேன்” எனக்கூறிச் சென்றாள்.

ஜென் சென்று சேர அவளுக்கு பின்னாலே பூவும் தன்னை சரி செய்துகொண்டு ஓட்டமாக வந்து சேர்ந்திருந்தாள்.

ஓடி வந்து நின்ற பூவை தலை முதல் பாதம் வரை அளவிட்ட பாரியின் ஆராயும் விழிகளில் பூவின் கண்ணீர் தடம் சரியாக சிக்கிக்கொண்டது.

பூவின் அருகில் நெருங்கி நின்றவன்,

“எதுக்கு இப்படி ஓடி வர?” எனக்கேட்டவாறு தண்ணீர் போத்தலை நீட்டினான்.

அவனுக்கு சொல்ல பதில் இல்லாததால் வேகமாக நீரினை குடிப்பதைப்போல் அதனை தவிர்த்தாள்.

“சொல்லிட்டு வந்திருக்கலாமே தமிழ். உனக்கு ஒன்னுமில்லையே” என்று பூவை அணைத்து அமிர்தா கேட்டிட, பூ பாரியையே தான் பார்த்திருந்தாள்.

அந்நொடி பள்ளியில் ஒரு மாணவனுடன் அமர்ந்து உணவு உண்டதற்கே அவ்வளவு உரிமை பேச்சு பேசியவன், இப்போது அமிர்தாவின் செயலுக்கு அமைதியாக நிற்பது அவன் மீது காதல் கொண்ட மனதை ஊசியால் குத்தியது போலிருந்தது.

அவிக்கு பூவின் வலி நன்கு புரிந்தது.

அமிர்தாவின் அணைப்பில் இருப்பது வேண்டாத ஒன்றை கையில் வைத்திருப்பதைப் போன்ற உணர்வை கொடுக்க…

“நத்திங் அமிர்தா. தலை வலிக்கிற மாதிரி இருந்தது, அதான் ரூமுக்கு வந்துட்டேன்” என்று பூ முழுதாக சொல்லி முடிக்கவில்லை…

“தலைவலியா?” என்று இரண்டு அதிர்வான குரல்கள் அங்கு ஒலித்தது.

பாரி மற்றும் அமிர்தாவுடையது.

“டேப்லெட் போட்டியா தமிழ். இப்போ ஓகேவா? ரெஸ்ட் எடுக்கிறதுன்னா நீ போ தமிழ்” என்று அமிர்தா வார்த்தையில் தன் கனிவை காட்டிட, ‘தன்னைப்போல் அமிர்தா பூவிற்கு நல்ல தோழியாக இருப்பாள்’ என பாரி நினைத்தான்.

அமிர்தாவினுடையது வெறும் வார்த்தைகள் மட்டுமே என அறிந்த பூ…

“நவ் அம் ஓகே வேந்தா. கிளாஸ் போலாம்” என்று பாரியிடம் பதில் கூறினாள் பூ.

பூவையே அழுத்தமாக பார்த்தவாறு பாரி தலையசைக்க அனைவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

பெஞ்சில் பாரி அமர்ந்ததும் அவனுக்கு அருகில் அமிர்தா சென்று அமர்ந்துகொள்ள… பாரிக்கு அந்தப்பக்கம் இருந்த அவி முகம் சுருங்க நின்றிருந்த பூவைப்பார்த்து, “நீ இங்க உட்கார் தமிழ்” என தன் இடத்தைக் காட்டினான்.

“இட்ஸ் ஓகே அவி” என்று பாரியின் மீது அழுந்த பார்வை பதித்து சொல்லிய பூ ஜென்னிற்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

பாரிக்கு காரணமே புரியாது முகமே விழுந்துவிட்டது. முன்பென்றால் அமிர்தாவிடம் பட்டென்று சொல்லியிருப்பான் தள்ளி உட்காரென்று. பூவின் மீது அதீத அக்கறையோடு இருக்கும் அமிர்தாவை அவனால் ஏனோ கடிந்துகொள்ள முடியவில்லை. பேராசிரியரும் உடனே வருகைத்தர பாரியால் பூவிடம் பேச முடியாது போனது.

அதன் பின்னர் வகுப்புகள் விரைந்து ஓட… மதிய உணவு பாரி பூவிற்கும் சேர்த்து கொண்டு வந்திருந்தபோதும் பூ மெஸ்ஸில் சாப்பிடுவதாக அவி மற்றும் ஜென்னிடம் மட்டும் கூறிச் சென்றுவிட்டாள்.

பாரிக்கு உணவு உள்ளே செல்லவே இல்லை. தொண்டை இறங்கிட மறுத்தது.

அமிர்தாவிற்கு இக்காட்சி அதீத மகிழ்வை கொடுத்தது.

எப்போதும் சிறு செயலென்றாலும் பூவின் பக்கம் மட்டுமே நிற்கும் பாரி இன்று அமிர்தாவை எதுவும் சொல்லாது அமர்ந்தது அவி மற்றும் ஜென்னிற்கே அவன் மீது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்க, அவனிடம் அவர்களும் எதுவும் பேச முயலவில்லை.

அமிர்தா இது தனக்கு கிடைத்த தருணமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தவள், பாரியை வற்புறுத்தி உண்ண வைத்தாள்.

அமிர்தாவின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறத் தொடங்கியது.

மதிய வகுப்பின் போதும் பூ ஜென்னிற்கு பக்கத்தில் சென்று அமர, பாரி எழுந்து சென்று பூவின் பக்கத்தில் அமர்ந்தான்.

அப்போது அவி அமிர்தாவை மிதப்பாக ஒரு பார்வை பார்த்திட… அமிர்தா அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. ஏளனமாக உதடு சுளித்தாள்.

‘இவல்லாம் ஒரு ஆளா’ என நினைத்த அவி அடுத்து அவளை கண்டு கொள்ளவில்லை.

“பூ எதுக்கு அழுத?”

பேராசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருக்க கவனிப்பதுபோல் மெல்ல உதடசைத்தான் பாரி.

“எப்போ? நான் அழலயே!” என்ற பூவை சில கணங்கள் கூர்மையாக பார்த்த பாரி… அவளின் கவனம் தன்னிடமில்லை என்றதும் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.

மாலை கல்லூரி முடிந்ததும் வகுப்பிலிருந்து முதல் ஆளாக வெளியேறியிருந்தாள் பூ.

செல்வதற்கு முன் பாரியிடம்… “பை” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே!

பாரிக்கு உலகமே ஸ்தம்பித்த கணம் அது.

வழக்கம்போல் ஜென் தன் தந்தைக்கு பயந்து வேகமாக சென்றிருக்க… பாரியுடன் அவி மற்றும் அமிர்தா மட்டுமே இருந்தனர்.

பாரி வீட்டிற்கு செல்லும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருக்க…

“டைம் ஆகுது பாரி. கிளம்பலாம்” என்று அவி அவனை கிளப்பிக்கொண்டு வாகனங்கள் தருப்பிக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்.

பாரியின் இந்த சோகம் அமிர்தாவிற்கு கடுப்பை கிளப்பியது. அவளுக்கு எங்கே தெரியப்போகிறது உண்மையான நட்பின் ஆழமும் அன்பும்.

பாரியை கலைக்கும் பொருட்டு…

“அச்சச்சோ” என்று சத்தமாக பதறினாள் அமிர்தா.

‘இப்போ என்னவோ!’ என்று எண்ணிய அவி, பாரியுடன் சேர்ந்து சத்தம் வந்த திசையில் திரும்பினான்.

“என்னாச்சு அமிர்தா?” பாரி தான் கேட்டிருந்தான்.

“வண்டி பஞ்சர்” என்று சோகமாக சொல்லியவள்… “என்னை டிராப் பன்றியா பாரி” எனக் கேட்டிருந்தாள்.

பாரி எப்படியும் சம்மதித்து விடுவானென்று அவி நினைக்க… அதற்கு மாறாக பதில் வழங்கியிருந்தான் பாரி.

“சாரி அமிர்தா… பூவைத் தவிர யாரையும் எனக்கு பின்னால் வண்டியில் அலோவ் பண்ண முடியாது. நீ பஸ் இல்லைன்னா ஆட்டோ… ஏன் நம்ம அவியோட போயேன்” என்றான்.

பாரியின் பதிலில் அமிர்தாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

‘மகனே நீ மட்டும் சரின்னு சொல்லியிருந்த உன்னை இன்னைக்கே கொன்னிருப்பேன்’ என்று மனதோடு சொன்னான் அவி. பின்னே அவனைக்கூட அந்த வண்டியில் ஏற்றிடாத கடுப்பு அவனுக்கு.

கேட்டால் ‘பூவைத்தவிர யாரையும் ஏற்றுவதற்கு பிடிக்கவில்லை’ என்று சொல்லுவான்.

“இட்ஸ் ஓகே பாரி நான் ஆட்டோவில் போய்க்கிறேன்” என்று அமிர்தா நகர்ந்திட்டாள்.

“எவ்வளவு நேரம்டா இப்படி இங்கேயே நிக்கிறது?” அவிக்கு பாரியின் செயல் சிறுப்பிள்ளைத் தனமாகப்பட்டது.

“அவள் உட்கார்ந்தா(ள்) நான் என்ன பண்ணட்டும் அவி. இதுக்கு போயிட்டு பேசாம கோவமா இருக்காள். அவளுக்குத் தெரியும் தான அவளோட பேசாம என்னால இருக்க முடியாதுன்னு. அப்புறம் இதென்ன வீம்பு” என்று புகார் படித்த பாரியின் தலையிலேயே கொட்ட வேண்டும் போலிருந்தது அவிக்கு.

“அன்னைக்கு ஜென் உட்கார்ந்தப்போ சொன்னதானே!”

“இன்னைக்கு ஏனோ சொல்ல வரல அதை விடேண்டா.”

“உனக்கு பூ யார் பாரி?”

இதென்ன கேள்வி என்பதைப்போல் அவியை முறைத்தாலும் பதில் சொல்லியிருந்தான்.

“எல்லாமே அவள் தான் அவி. எல்லா உறவையுமே அவகிட்ட என்னால் ஃபீல் பண்ண முடியும்.”

“இந்த எல்லாமே மீன்ஸ்?’

“எல்லாமேன்னா எல்லாம் தான். நீ நினைப்பது போலில்லை. ஃப்ரண்டுக்குள்ளும் எல்லா உறவும் இருக்கு.” கூர்மையாகக் கூறியிருந்தான்.

அவிக்கும் இதைத்தான் சொல்வானென்று தெரியும்.

“யாருகிட்டையுமே விட்டுக்கொடுக்காத உன்னோட பூவை இன்னைக்கு அமிர்தாகிட்ட விட்டு கொடுத்தது உனக்கு தெரியலையா பாரி?”

அவி கேட்டது பாரிக்கு சுருக்கென்று தைத்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment