Loading

அத்தியாயம் 20

 

அனைவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்த தேவதர்ஷினி கண்கள் எல்லாம் அழுது அழுது சிவந்திருக்க, மூக்கையும் உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

ஊருக்குள்ளேயே படிச்சிட்டு அங்கேயே ஒர்க் பண்ணிட்டு இருந்த தானே? அதான் இப்ப கஷ்டமா இருக்கு உனக்கு!” கார்த்திகைசச்செல்வன் கூறிவிட்டு உள்ளே சென்றவன்,

 

“இதை குடிச்சிட்டு கொஞ்சம் தூங்கி எழுந்துக்கோ! சரி ஆகிடும்!” என கொண்டு வந்ததை அவன் நீட்ட, என்னவென்று பார்த்தாள் அவள்.

 

“இஞ்சி டீ! நல்லா தான் போடுவேன். ட்ரை பண்ணி பாரு!” என சொல்லவும் வாங்கிக் குடித்தவள் எதுவும் சொல்லாமல் இருக்கையிலேயே சாய்ந்து அமர,

 

“பெட்ல போய் படு தேவா! இல்லைனா நினைச்சு நினைச்சு அழுதுட்டு இருப்ப நீ!” என்றான்.

 

“ப்ச்! வேண்டாம்” என்றவள் மணியைப் பார்க்க, ஆறை நெருங்க இருந்தது.

 

அவன் சொன்னது போல தான் இருந்தது ‘இன்னும் இரண்டு நாட்களுக்கு இவர்கள் எல்லாம் இருந்திருக்கலாமே!’ என எண்ணமெல்லாம் அவர்களிடம் தான்.

 

“வெளில ஒரு வாக் போலாமா தேவா?” என அவள் முகம் கண்டு தானே கேட்க, 

 

“மழை வர்ற மாதிரி இருக்கு! வேண்டாம்” என்றவளை,

 

“இந்த ஏரியா சரவுண்டிங் நல்லாருக்கும். வா மழைக்கு முன்ன வந்துடலாம்!” என்றவனிடம் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கிளம்பினாள்.

 

மனம் அத்தனை நிம்மதியாய் இலகுவாய் என தெளிவாய் இருந்தது கார்த்திகைசெல்வனுக்கு.

 

கொஞ்சமாய் ஒருவித அல்லாடல் அஷ்வினியை எண்ணி என தினம் தினம் நினைக்காத நாளே இல்லை. நிச்சயம் அது தவறான பாதையில் இல்லவே இல்லை.

 

தேவதர்ஷினி தான் இனி தனக்கு எல்லாம் என ஒரு முடிவிற்கு வந்து அவளுடனான தன் வாழ்க்கைக்கு அத்தனை பொறுமையோடு காத்திருப்பவன் தான் எனினும் அஷ்வினி வாழ்க்கை நல்லவிதமாய் அமைய வேண்டும். அவளும் அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஒரு எண்ணம் மனதை கொஞ்சம் அழுத்தி தான் பார்த்தது கார்த்திக்கு.

 

எல்லாம் பெங்களூர் வந்த இரண்டு நாட்களுக்கு தான். மூன்றாம் நாள் அஷ்வினியோடான எதிர்பாராத அந்த சந்திப்பும் அவள் பேசிய விதமும் அவள் தெளிவும் என கார்த்திகைசெல்வனுக்கு முழு நிம்மதியை உணர்ந்த நாள் அன்று.

 

அடுத்த நாளே அனைவரும் கிளம்பி இருக்க, இனி மனைவியும் தானுமாய் என தங்களுக்கான நாட்கள் என குறித்துக் கொண்டான்.

 

உறவுகளை எண்ணி ஏங்கி அழுது கவலையில் இருந்தவளை வெளியே சில தூரம் அழைத்து வந்திருக்க மௌனமாய் அவனோடு நடந்து கொண்டிருந்தாள் தேவதர்ஷினி.

 

“என்ன இவ்ளோ சைலன்ட் தேவா?” என கார்த்திகைசெல்வன் கேட்க, கைகளை கட்டிக் கொண்டு நடந்தவள் எதுவுமில்லை என்பதாய் அவனைப் பார்த்து தலை அசைத்தாள்.

 

”தனியான்னு நீ வந்ததே இல்லை இல்ல? அதான்! ரொம்ப பீல் பண்ற இல்ல?” என கேட்க, மௌனமாய் தலையசைத்தாள்.

 

“பழகிப்போம்! அதான் நான் இருக்கேனே!” என புன்னகைத்தவன்,

 

“இத்தனை வருஷத்துல என்னைப் பார்க்க பெங்களூர்க்கு நம்ம வீட்டுல இருந்து யாருமே வந்தது இல்ல. நிரஞ்சன் ஒரு டைம் காலேஜ் ட்ரிப் வந்தப்ப நான் தான் அவன் இருந்த இடத்துல போய் பார்த்துட்டு வந்தேன்” என்று சொல்லி,

 

“ஆனா இது கூட நல்லாருக்கு நமக்காக வர்ராங்க இல்ல இப்ப!” என்றான்.

 

“நீங்க எத்தனை வருஷமா த்தான் இங்க இருக்கீங்க?” என தேவதர்ஷினி கேட்க,

 

“தெரியாதா என்ன? நான் தான் காலேஜ் முடிஞ்சதும் வந்துட்டேனே! அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு!” என்றான் அந்த நினைவுகளோடே!.

 

“ஹ்ம்! எப்பவாச்சும் தானே ஊருக்கு வருவீங்க?” என கேட்க,

 

“ஆமா தேவா! திருவிழா, தீபாவளி, பொங்கல்னு ரேர் தான். வருஷத்துக்கு மூணு நாலு டைம் தான் வருவேன். ஆனா இனி அப்படி இருக்க முடியாது இல்ல. அடிக்கடி போக வேண்டியது இருக்கும் என்று சொல்லவும் தேவதர்ஷினி சிந்தனையோடே நடந்தாள்.

 

“நீயும் தனியா ஊருக்கு போய் வர கத்துக்கலாம். இப்ப வேண்டாம். இன்னும் கொஞ்சம் போகட்டும். எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கணும் நீ!” என சொல்ல, கேட்டபடி நடந்தவளுக்கு சில்லென்ற அந்த காற்றுக்கு கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பிக்க, ஆனாலும் அவனிடம் சொல்லவில்லை அவள்.

 

அவன் தான் மேலும் சில நிமிடம் அவள் வேலையைப் பற்றி படிப்பை பற்றி என பேசியபடி வர, மழை சிறிதாய் தூரலை ஆரம்பிக்கவுமே நடையை எட்டிப் போட்டனர்.

 

வீட்டிற்கு வரும் பொழுது நன்றாய் நனைந்துவிட்டனர் இருவருமே!

 

“இங்க இது ஒண்ணு! எப்ப எப்படி இருக்கும் சொல்ல முடியாது!” என்றபடி தலையை அவன் துவட்டிக் கொள்ள, தானும் சென்று உடை மாற்றி வந்தாள் தேவதர்ஷினி.

 

மதியம் லீலாவும் கண்ணகியும் செய்த சாப்பாடு மீதி இருக்கவே, கார்த்தி அதையே சூடு செய்ய சொல்லவே எட்டு மணிக்கெல்லாம் உணவையும் எடுத்துக் கொண்டனர்.

 

தானும் மனைவியும் என ஒரு வீட்டில். அத்தனை அமைதியோடு என கார்த்திகைசெல்வன் பேசினாலுமே அடுத்து என்ன பேச என்பதாய் ஒரு தயக்கத்தில் தான் பேச்சு முடிந்து கொண்டிருந்தது.

 

சாப்பிட்டு முடித்து இருவரும் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் தேவதர்ஷினி எழுந்து படுக்கையறை சொல்ல, அதைக் கண்டவன் மேலும் அரை மணி நேரம் டிவியில் கவனத்தை செலுத்தி அதன்பின் அதை அணைத்துவிட்டு கதவை மூடி, விளக்குகளை அணைத்துவிட்டு அறைக்கு வர, போர்வைக்குள் சுருண்டிருந்தவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.

 

ஏசியை போட்டுவிட்டு படுக்கைக்கு வர, ஊரில் இருந்ததை விடவும் சிறியதாய் தான் இருந்தது இங்கிருந்த கட்டிலும் மெத்தையும் என.

 

எளிதாய் அவளருகில் நெருங்கிக் கொண்டவன், “தூங்கிட்டியா தேவா?” என கேட்க, பதில் இல்லை அவளிடம்.

 

குளிரும் அதிகத்திற்கு இருக்கவே இன்னுமே நெருங்கி வந்து போர்வைக்குள் நுழைய, சட்டென அந்த வித்தியாசத்தை உணர்ந்தவன்,

 

“ஹேய்!” என எழுந்து விளக்கை எரிய விட, குளிரில் நடுங்கிக் கொண்டு உடலை தனக்குள் சுருக்கிக் கொண்டு படுத்திருந்தவளுக்கு காய்ச்சலில் உடல் கொதித்தது.

 

“எதையுமே சொல்ல மாட்டியா நீ!” என கேட்டு மாத்திரையை தேடி எடுத்தவன் சுடுதண்ணீர் வைத்து அதோடு அவளுக்கு கொடுத்தவன் தைலத்தையும் அவளுக்கு தேய்த்துவிட, கண்கள் கலங்கி கண்ணீர் முட்டி நின்றது தேவதர்ஷினிக்கு

 

“இதுக்கு பேரு ஹோம் சிக் தானே?” என முறைத்தவன், “உன்னை என்ன சொல்ல?” என்றான்.

 

கூடவே, ‘லைட்டா தான் நனைஞ்சுட்டா. அதுக்கே காய்ச்சல்ல படுத்துட்டா!’ என முன்னொரு நாள் அன்னை சொல்லியதும் அப்பொழுது தான் நினைவில் வந்தது கார்த்திகைசெல்வனுக்கு.

 

“உனக்கு மழை ஒத்துக்காதா?” என கேட்டவன்,

 

“ப்ச்! ஆமா அம்மா அன்னைக்கே சொன்னாங்க! நான் தான் தேவை இல்லாம மழைல இழுத்து விட்டுட்டேன்!” என நெற்றியை நீவிக் கொண்டான்.

 

மழையோடு உறவுகள் கிளம்பிய கவலையும் தான் இதற்கு காரணம் என புரிந்தாலும் இனி இப்படி தானே என எண்ணி அவளை கொஞ்சம் பழக்கிவிட தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

இரவு முழுதும் காய்ச்சல் விடவும் தொடரவுமாய் இருக்க, மாத்திரைக்கு உடல்நிலை சரியானதாய் தெரியவில்லை.

 

ஊருக்கு சென்று சேர்ந்துவிட்டதாய் அழைத்த கண்ணகியிடம் தேவா தூங்குவதாய் சொல்லி சமாளித்துவிட, லீலாவிடமும் அதை தான் சொல்லி வைத்தான். அவர்களையும் ஏன் வருத்துவானேன் என்பதாய்.

 

காலை பத்து மணிக்கு நந்தனிடம் கேட்டு மருத்துவமனைக்கு சென்று ஊசியையும் செலுத்தி வீடு, 

 

“என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்?” என்றாள் வந்ததுமே!.

 

“ஃபீவர் என்ன சொல்லிட்டா வரும். அப்படி பார்த்தா நான் தான் நீ சொல்லியும் கேட்காம மழைல கூட்டிட்டு போய்ட்டேன்!” என்றவன் மருத்துவர் கொடுத்த மாத்திரையை கொடுத்து அவளருகில் அமர,

 

“இன்னைக்கும் லீவ் போட்டீங்களா?” என்றாள் தேவதர்ஷினி.

 

“ஹ்ம்! ஏற்கனவே பத்து நாள் லீவ் சொல்லிருந்தேன். மூணு நாள் ஊர்ல போச்சு. நாலு நாள் வந்தவங்க கூட போச்சு. இன்னைக்கு காய்ச்சல்ல போச்சு. இன்னும் ரெண்டு நாள் இருக்கு!” என்றான் மாத்திரைகளை எடுத்துப் பார்த்தபடி.

 

“வீக்கா இருக்கியாமே தேவா? என்னாச்சு? எப்பவுமே இப்படி தானா? இல்ல இப்ப தானா?” என கார்த்தி கேட்க, சத்தமே இல்லை அவளிடம்.

 

“நிறைய மாத்திக்கணும். முதல்ல நல்லா சாப்பிடணும்! இரு அம்மாகிட்ட கேட்டுக்குறேன் நீ எப்படி சாப்பிட்டன்னு. அப்புறம் இருக்கு!” என சொல்ல, அப்போதும் அமைதியாய் தான் இருந்தாள்.

 

“இனி கொஞ்சம் கவனமா இருக்கனும் தேவா! பெங்களூர் கிளைமேட் எப்பவுமே இப்படி தான் இருக்கும் மோஸ்ட்லி!” என்று சொல்லி அவளை கவலையாய் கண்டான்.

 

“பழகிக்குறேன்!” என அவன் பார்வைக்கே அவள் பதில் சொல்ல, சின்னதாய் புன்னகைத்தவன்,

 

“ஓகே பார்த்துப்போம்!” என்றான்.

 

நந்தன் மதியமாய் இருவருக்கும் உணவை கொண்டு வந்து கொடுத்துவிட் டு சென்றிருந்தான். 

 

“நல்லவேளை டா. எனக்கு ஹோட்டல்ல தான் வாங்கலாம்னு இருந்தேன்!” என கார்த்தி சொல்ல,

 

“பத்திரம் டா. எதுவும் வேணும்னா கூப்பிடு!” என்றிருந்தான் நந்தன்.

 

“சாதம் மசிச்சு வச்சிருக்கேன் உனக்கு. சாப்பிட முடியுதா பாரு. இல்லைனா நந்தா கொடுத்ததும் இருக்கு. ஷேர் பண்ணிப்போம். உனக்கு சாப்பிட முடிஞ்சா தான்!” என சொல்லி கொஞ்சமாய் சாப்பிட வைத்திருந்தான் அவளையும்.

 

அன்று முழுதும் உறங்கவும் விழிக்கவும் என தேவதர்ஷினி இருக்க, அவளை பார்த்துக் கொள்வதற்கு என்றே நேரம் சென்றது கார்த்திகைசெல்வனுக்கும்.

 

மாலை ஆறு மணிக்கு மேல் கொஞ்சம் பரவாயில்லை என்பதாய் எழுந்து நன்றாய் கண் விழித்து தேவா ஹாலுக்கு வர, அங்கே பூண்டினை உரித்துக் கொண்டிருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“வா தேவா! இப்ப ஓகேவா?” எனக் கேட்டு, அவள் பூண்டைப் பார்க்கவும்,

 

“உனக்கு தான் சாதத்துல போட்டு காய்ச்சு குடுக்க சொன்னாங்க நந்தாவோட அம்மா” என்றான்.

 

எதுவும் பேசாமல் அமர்ந்தவளுக்கு டிவியை ஆன் செய்து ரிமோட்டையும் அவள் கையில் கொடுக்க, டிவியில் மனம் லயிக்கவே இல்லை தேவாவிற்கு.

 

கேட்டுவிடு கேட்டுவிடு என சொல்லிக் கொண்டே இருந்தது தேவதர்ஷினியின் உள்ளம்.

 

அவன் செய்வதை எல்லாம் பார்த்தபடி அவள் இருக்க, அவனுமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை சாப்பிடும் வரை.

 

“என்னவும் சொல்லனுமா இல்ல பேசணுமா தேவா?” என மாத்திரையையும் கொடுத்து படுக்கைக்கு சென்றபின் தான் கேட்டான் கார்த்தி.

 

“என்னவோ பேச தான் நினைக்குற இல்ல? ஆனா சொல்ல முடியல. அப்படி என்ன?” என்றவன் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறான் என்பதும் அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது.

 

“நானுமே உன்கிட்ட பேசனும். எப்ப தான் பேசுன போறேனோ! நான் சொல்லிடலாம்னு நினைக்கும் போது தான் ஏதாச்சும் ஒண்ணு நடந்திட்டு இருக்கு” என அவள் சிந்தனையில் இருக்கும் போதே கார்த்திகைசெல்வன் சொல்ல,

 

“அஷ்வினியை பத்தி தானே த்தான்?” என கேட்டு அதிர வைத்தாள் தேவதர்ஷினி.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
17
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்