Loading

அத்தியாயம் 12

 

பரிதியின் அலுவலகத்தில் அவனுக்கு விபத்து நடந்த விஷயம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தது.

 

அதனால் அன்றைய தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருந்தான் பரிதி.

 

அவர்களின் தொழிற்சாலைக்கு வேலைக்கு எடுக்கப்பட்ட ஆட்களை இன்று வந்து சேர்ந்து கொள்ளும்படி ஏற்கனவே கூறிவிட்டதால், அவர்களும் தொழிற்சாலைக்கு சென்று அவர்களது அப்பொய்ன்மெண்ட் ஆர்டரை காட்டி சேர்ந்து கொண்டனர். 

 

அதில் ஒருவன் மட்டும், “சார்.. இங்க வந்து ஜாயின் பண்ணிட்டேன்.. ” என்று புலனம் வழியாக தகவல் அனுப்பினான்.

 

அதற்குப் பதிலாக அந்தப் பக்கம், “நல்லது. நான் சொல்ற நேரம், என்ன சொல்றேனோ அதை மட்டும் பண்ணு..” என்றதோடு முடித்துக் கொண்டது அந்த குறுந்செய்தி.

 

இவனும் இந்தப் பக்கம் “ஓகே சார்..” என்று பதிலுக்கு அனுப்பி விட்டு, அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

 

******************

 

பரிதி கண் முழித்த பிறகு, மருத்துவர் வந்து அவனை பரிசோதித்து விட்டு, அவனுக்கு எந்த மாதிரியான உணவு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி விட்டு, அவனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளையும் கூறிவிட்டுச் சென்றார் ICU வில் இருந்த செவிலிப் பெண்ணிடம்.

 

பரிதியின் மனமோ, தன்னை நேற்று இங்கு வந்த சேர்த்த பெண்ணைத் தேடியது. ஒரு வேளை நான் கண் முழிக்கும் வரைக்கும் அவள் காத்து இருந்து பார்த்துச் செல்வாளோ என்று எதிர்பார்த்து இருந்தான்.

 

ஆனால் அவள் அவன் கண் முழித்து வெகு நேரமாகியும் அவள் வரவில்லை என்பதை உணர்ந்து உடல் சோர்வுடன் மன சோர்வும் சேர்ந்து அவனை ஆழ்ந்த உறக்கத்திற்கு தள்ளியது. 

 

இனியனோ, பரிதியை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அதற்கான செயல்முறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு, அதனை எல்லாம் செயல்படுத்தி, இறுதியாக கட்ட வேண்டிய மீதிப் பணத்தையும் கட்டி முடித்து விட்டு, அங்கு சேர்க்க வேண்டிய வேறு மருத்துவ மனையிலும் கூறி வைத்து விட்டு, அவசர ஊர்திக்கும் தகவல் கொடுத்து விட்டான்.

 

அனைத்தையும் முடித்து விட்டு, முதல் தளம் வந்தவன், தன் குடும்பத்தினரிடம், இந்த தகவலைக் கூறினான்.

 

அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது.

 

மங்களம், “எப்போ கிளம்புறது இனியா..” கேட்க,

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிரலாம்மா.. அண்ணாகிட்ட தகவல் சொல்லணும். நான் போய் உள்ள சிஸ்டர் கிட்ட சொல்லிட்டு, அண்ணா கூட ஆம்புலன்ஸ்ல வந்துருறேன்.. ” என்றவன் தன் மாமனிடம் திரும்பி, ” மாமா..  நம்ம ஏரியால இருக்குற நலம் ஹாஸ்பிடளுக்கு முன்னால நீங்க எல்லாம் கார்ல போங்க. நாங்க பின்னால வரோம். ” என்றான்.

 

“சரி ப்பா.. ” என்றவர் சிறிது நேரத்தில் பெண்கள் மூவரையும் கூட்டிக் கொண்டு கிளம்பி விட, இனியன் ICUவில் இருந்த செவிலியரிடம் தகவல் தெரிவித்தான்.

 

மாலை நேரம் போல, மருத்துவனையின் ஃபார்மலிட்டிஸ் எல்லாம் முடித்து விட்டு, அங்கு வேலை செய்யும் பணியாட்களின் உதவியுடன் பரிதியை அவசர ஊருதியில் பாதுக்காப்பாக ஏற்றி விட, இனியனும் அவனுடன் உள்ளே அமர்ந்து கொண்டான்.

 

வண்டியும் நலம் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

 

“எதுக்குடா.. இது இப்போ..” என்று சோர்வாக கேட்டான் பரிதி.

 

“இந்த ஹாஸ்பிடல் நம்ம வீட்டுல இருந்து ரொம்ப தூரமா இருக்கு. அந்த பொண்ணு அவசரத்துக்கு இங்க சேர்த்து விட்டுட்டாங்க. ஆனால் நமக்கு எது வசதியோ அங்க மாத்திக்க வேண்டியது தான். நைட் அம்மா படுத்து தூங்க கொஞ்சம் கஷ்டப் பட்டாங்க. அதுக்கு அப்புறம் தான் இந்த முடிவு எடுத்தேன்.. ” என்றான்.

 

“ம்ம்ம்ம்.. ” என்றவன், சோர்வாக  கண்களை மூடிக் கொண்டான்.

 

சிறிது நேரம் கழித்து, பரிதியே, ” இனியா..” என்று அவனை அழைத்திட,

 

” சொல்லு ண்ணா. ” என்றான் தன் அலைபேசியில் பதிந்து இருந்த கண்களை நிமிர்த்தி அவனைப் பார்த்தாவாறு.

 

“நேத்து விபத்து நடந்தப்போ, நான் தானே காரை தவறுதலா ஓட்டுனேனு சொன்னேன்..” என்று அவனிடம் கேட்க,

 

இனியனும் யோசனையுடன் ஆமாம் என்றான்.

 

“அதான் இல்லை. நான் சரியாதான் போனேன். அந்த லாரி தான் வேணும்னே என் வண்டி மேல இடிச்சான்.. இது தெரியாம நடந்தது இல்லை.. தெரிஞ்சே நடந்த போல இருந்துச்சு..” என்றான் இனியன்.

 

” என்ன ண்ணா.. சொல்ற..” என்று இனியன் அதிர்ச்சியுடன் கேட்டதற்கு,

 

“இந்த விபத்து நடந்ததே நான் சாகனும்னு தான்..” என்றான் பரிதி நிதானமாக.

 

“இதை ஏன் நீ காலைல கேக்கும் போது சொல்லல..” என்றதற்கு,

 

” உன்கூட அம்மா இருந்தாங்க. நான் சொல்லி இருந்தால் அவங்க இன்னும் பயந்துருப்பாங்க. அதான் நான் சொல்லல. ” என்றான் பரிதி அமைதியாக..

 

“ண்ணா.. போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்கலாம். இதை அப்படியே சும்மா விட்டுட முடியாது. இதுக்கு கண்டிப்பா ஒரு வழி பண்ணனும். யாருனு கண்டுபிடிச்சு அவனை உள்ள தூக்கி போடணும்..” என்றான் கோபத்தில்..

 

” கோவப்படாத இனியா.. இப்போதைக்கு அமைதியா இரு. இதை எப்படி டீல் பண்ணணுமோ அப்படி டீல் பண்றேன். ” என்று அப்போதைக்கு அவனது கோபத்தை அடக்க நினைக்க,

 

அவனோ, ” இதை எப்படி அவ்வளவு சீக்கிரம் சும்மா விட முடியும். இப்போ இந்த அடியில இருந்து நீ மீண்டு வந்துருவ. ஆனால் இதே உனக்கு வேற எதுவும் ஆகி இருந்தா.. திரும்ப வர முடியுமா. அதுனால அமைதியா என்னால இருக்க முடியாது. கண்டிப்பா நான் கம்பளைண்ட் கொடுக்க தான் போறேன். ” என்று முடித்துக் கொண்டான்.

 

இதற்கு மேல் இவனிடம் பேச முடியாது என்று அறிந்து அவன் அமைதியாக கண்களை மூடிக் கொண்டான்.

 

தீடீரென நிரஞ்சனாவின் முகம் எண்ணத்தில் வந்து போக, மீண்டும் இனியனை அழைத்து, அவளைப் பற்றிக் கேட்டான்.

 

“அது, நேத்தே அந்த பொண்ணை நாங்க வந்த பிறகு அனுப்பி வச்சிட்டோம் ண்ணா. பாவம்… அவங்க தம்பிக்கு கண் ஆபரேஷன் பண்றதுக்கு போய்ட்டு இருந்து இருப்பாங்க போல. உன்ன அப்படி பார்த்ததும், அவங்கனால போக முடியல. அதான் உன்ன ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு, நாங்க வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நான் வந்ததும் கிளம்ப சொல்லிட்டேன் ண்ணா.. ” என்றான்.

 

“ம்ம்ம்ம்… ” என்று மட்டும் சொன்னவனிம் மனமோ அவளிடமே சுற்றி வந்தது.

 

நலம் மருத்துவமனையும் வந்து சேர, அங்கு ஏற்கனவே இனியன் கூறி வைத்து இருந்ததால், இவர்கள் சென்றதும் அங்கு அட்மிஷன் போட்டு, பரிதிக்கு என்று நியமிக்கப்பட்ட அறையில் அவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

 

இவர்கள் செல்வதற்கு முன்னமே, விநாயகம் பெண்கள் மூவரையும் அழைத்து வந்திருந்தனர்.

 

சகல வசதியுடன் அறை இருக்க, இங்கு அறையில் கூடவே ஒருவர் எப்பொழுதும் தங்கிக் கொள்ளலாம் என்று மருத்துவமனை சார்பாக கூறப்பட்டது.

 

அதனால், மங்களம் பகலிலும், இரவு இனியன் வந்து தங்கிக் கொள்வதாக, அவர்களுக்குள் பேசி முடிவு எடுத்துக் கொண்டனர். 

 

மருந்தின் வீரியத்தால் பரிதியும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

 

**************

 

விக்ரமை வந்து பரிசோதித்த மருத்துவர், அவனுக்கு கண்ணில் போடப்பட்ட கட்டை குறைந்தது ஒரு வாரத்திற்காவது போட்டு இருக்க வேண்டும் என்றும் இப்பொழுது அவன் நலமாக உள்ளான் என்றும் கூறி, அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும், மீண்டும் ஒரு வாரம் கழித்து மருத்துவமனை வந்து கட்டை பிரித்துக் கொள்ளலாம் என்றும் கூறி இருந்தார்.

 

இரவு நெருங்கி விட்டதால், தான் மறுநாள் காலையில் இங்கிருந்து செல்வதாக மருத்துவரிடம் கூறி இருந்தாள் நிரஞ்சனா.

 

அவரும் சரி என்று சொல்லிவிட்டு, சென்று விட்டார்.

 

விக்ரம் தூங்கிக் கொண்டிருக்க, நிரஞ்சனாவுக்கு அன்று இரவு ஏனோ பரிதியின் எண்ணம் தான்.

 

“அவரு இப்போ கண் முழிச்சி இருப்பாரா.. எப்படி இருக்காருனு தெரியலயே. நேத்து ஆபரேஷன் பண்ணிட்டு இருக்கும் போதே நம்ம கிளம்பி வந்துட்டோம். அவரு பேரு கூட என்னனு கேக்கலையே.. திரும்ப போன் பண்ணி விசாரிக்கலாம்னு பார்த்தா, மறுபடியும் போன் ரிப்பேர் ஆகிருச்சு. நாளைக்கு இங்க இருந்து கிளம்பி போகும் போது, நேரா அங்க போய்ட்டு அவரைப் பார்த்துட்டு, அப்படியே நம்ம செயினை வாங்கிட்டு வந்துரலாம்..” என்று நினைத்தவள் உதட்டில் பூத்த சிறு புன்னகையுடன் அவளும் உறங்கிப் போனாள்.

 

*************

 

மறுநாள் காலை, புத்துணர்வுடன் எழுந்து, விக்ரமிற்கு தேவையான மருந்து மாத்திரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டவள், அவனை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம் செய்வதற்கு தேவயான செயல்முறைகள் என்னென்ன என்பதை செவிலியரிடம் கேட்டு, அதனை முடித்து விட்டு, மீதம் பணத்தையும் செலுத்தி விட்டு, அங்கேயே காலை உணவையும் முடித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.

 

எப்பொழுதும் அவள் அழைக்கும் ஆட்டோகாரருக்கு அழைத்து முன்கூட்டியே வரச் சொல்லி இருந்ததால் அவரும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.

 

அவரைப் பார்த்து ஒரு புன்னகையுடன்  ஆட்டோவில் ஏறி அமர, “என்னமா, தம்பிக்கு ஆபரேஷன் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா..” என்று கேட்டார்.

 

“ஆமா ண்ணா.. நல்ல படியா முடிஞ்சது. ” என்றவள் பின் “அண்ணா.. அன்னைக்கு ஆக்சிடண்ட் ஆன ஒருத்தரை ஒரு ஹாஸ்பிடல்ல சேர்த்து இருந்தோமே.. அங்க போங்க ண்ணா..” என்றாள் அவள் அவரிடம்.

 

“என்ன ம்மா.. என்ன விஷயம்.. ” எதற்காக என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவர் கேட்க,

 

“சும்மாதான் ண்ணா. எப்படி இருக்காருனு பார்த்துட்டு வரலாம்னு தான்..” என்றாள்.

 

“சரிம்மா சரிம்மா..” என்றார் ஆட்டோக்காரர்.

 

மருத்துவமனை வந்ததும்,”இருக்கவா.. கிளம்பவம்மா..” நேரம் ஆகும் பட்சத்தில் அடுத்த சவாரிக்கு செல்லலாம் என்று நினைத்து அவர் கேட்டார்.

 

“இல்லண்ணா.. போய்ட்டு அரை மணி நேரதுக்குள்ள திரும்பிருவேன். வெயிட் பண்ணுங்க ண்ணா இங்கேயே..” இவரை விட்டால் வேறு ஆட்டோக்காரறரிடம் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தில் அவரை இங்கேயே இருக்கும் படி கூறி விட்டு, விக்ரமிடம், “விக்ரம்.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. நான் பார்த்துட்டு வந்துருறேன். சீக்கிரம் வந்துருவேன்.”என்க,

 

அவனோ,” சரிக்கா.. நான் இந்த அண்ணாக் கூட பேசிட்டு இருக்கேன்..” என்றான்.

 

அவளும் அவன் கன்னத்தை லேசாக தட்டி விட்டு, “பார்த்துக்கோங்க ண்ணா.. வந்துருறேன்..” என்றவள் உள்ளே வரவேற்பு பெண்ணிடம் சென்று விசாரித்தாள்.

 

“நேம் சொல்லுங்க மேம்..” என்று அந்த பெண் கேட்க,

 

“பேரு எல்லாம் தெரியாது மேம். ரெண்டு நாளைக்கு முன்ன, மழை பெய்யும் போது, வந்து அட்மிட் பண்ணோம்.” எந்த விவரமும் அவனைப் பற்றி தெரியாததால், இதை மட்டும் கூறினாள்.

 

“ஓ.. அந்த பேசன்ட்டா.. அவரு நேத்து டிஸ்சார்ஜ் ஆகி போய்ட்டாரு மேம்..” என்று கூறினாள் அவள்.

 

“என்னது.. டிஸ்சார்ஜ்ஜா.. அதுக்குள்ள எப்படி டிஸ்சார்ஜ் ஆக முடியும். நீங்க வேற யாரையோ சொல்லறீங்கனு நினைக்கிறேன்” என்றாள் நிரஞ்சனா.

 

“இல்லை மேம். அந்த பேசன்ட் தான். அவங்களுக்கு இங்க ரொம்ப தூரமா இருக்குனு அவங்க ஏரியா பக்கத்துல சேன்ஞ் பண்ணிக்கிறோம்னு சொல்லி தான் டிஸ்சார்ஜ் பண்ணாங்க..” கூறிவிட்டு, அவ்வளவுதான் தன் வேலை முடிந்தது என்று அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

 

அவளோ, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில், கவலை தோய்ந்த முகத்துடன் வெளியில் வந்து, ஆட்டோவில் ஏறிக் கொள்ள, அவரோ, “என்னமா..அதுக்குள்ள பார்த்துட்டியா.. இப்போதான போன.. ” போன வேகத்தில் வந்தவளை யோசனையுடன் பார்த்துக் கேட்க,

 

“அவங்க சொந்தக்காரங்க அவரை வேற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்கலாம் ண்ணா..” உள்ளுக்குள் இருந்த ஏமாற்றத்தை வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் அவரிடம் சாதாரணமாக பதில் கூறினாள்.

 

“சரிம்மா..  ” என்றவர், “வீட்டுக்கு தானே..” என்று கேட்க, ” ஆமாம் அண்ணா.. ” என்றாள்.

 

அவரும் அவர்களின் வீடு நோக்கி ஆட்டோவைச் செலுத்தினார்.

 

செல்லும் வழி எங்கும், அவளது தாய் தந்தையின் நினைவாக அவள் கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலியின் எண்ணம் தான் அவளை ஆக்கிரமித்து இருந்தது. 

 

நித்தமும் வருவாள்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்