“தேவ்” என்று சினுங்கினாள் மித்ரா.
“அட ச்சீ போ அங்கிட்டு…இப்போ தான் சினுங்கிட்டு இருக்கா” என்றாள் சிறு புன்னகையுடன் போனை அவளிடம் இருந்து வாங்கியபடி ரியா.
“போன் கொடு டி நான் பேசிட்டு தரேன்”
“உன் போன்ல போய் பேசு போ” என்று அவளை துரத்தி விட,
“போடி “என்று தன்னுடைய போனை எடுத்து அவனுக்கு அழைக்க..
“பிஸி” என்று வந்தவுடன் தன் தங்கையிடம் வந்து நின்றாள்.
“பிஸினு வருது” என்று ,
அவளை மேலும் கீழுமாக பார்த்த ரியா “அறிவுக் கொழுந்து, அறிவை அடகு வச்சுட்டியா என்ன ? மூளை இல்லாத முக்கா வேக்காடு, நீ எல்லாம் என்னத்த பாடத்தை எடுத்து ,பசங்க படிச்சு ,விளங்கின போலத்தான் “என்று அவள் தலையில் தட்ட,
மித்ரா சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டு வர,
“அட பைத்தியமே !உன் கண்ணு முன்னாடி தான நான் உட்கார்ந்து அவர் கிட்ட பேசிட்டு இருக்கேன். போன் போட்டா பிஸின்னு வராம வேற எப்படி வரும் ?” என்றாள் நக்கலாக.
தன் நெற்றியில் தட்டிக் கொண்ட மித்ரா..” அப்போ நீ போன வை டி”. என்று முறைத்தாள்.
“நான் வைக்க முடியாது. அப்புறமா பேசிக்கோ போ.. நான் பேசறதே என்னைக்கோ ஒரு நாள் தான்” என்று ஒரு ஐந்து நிமிடங்கள் பேசி இருந்து விட்டு வைத்தாள் ரியா.
தேவ் குகனை படிக்க வைத்து விட்டு , அவனை தூங்கவும் வைத்துவிட்டு ,மித்ராவிற்கு மெசேஜ் செய்தான்.
“ராங்கி ஒர்க்கா ?ஃப்ரீயா ?”என்று,
அவளும் உடனே அவனுக்கு பதில் அளித்து இருந்தாள்.
“முடிச்சுட்டனே! ஃப்ரீ தான்” என்று,
” போன் பண்ணவா ?”
” ஓகே!”
” இல்ல அது” என்று அவன் தயங்க,
இவளே அவனுக்கு அழைத்து விட்டாள்.
“சொல்லு இராங்கி” என்றான் குதூகலமாக ..
“நீங்க தான போன் பண்றதா கேட்டீங்க அதான்”
” ஓ! நான் கேட்டதால அப்போ சரி..மேடம் ஃபோன்ல என் பேர வேற மாறி சேவ் பண்ணி வச்சிருக்கீங்க போல ” என்று ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க,
“அ..அது” என்று அவள் தடுமாற, அவள் கையில் தட்டிய ரியா . “அப்படி போய் பேசு. சட்டுனு ஒன்னும் வைக்க வேணாம். இன்னொரு விஷயம் நான் இருக்கிறதால நீங்க போன் பேசாம இருக்க வேணாம்”.
” அப்படிலாம் இல்லடி”
” எனக்கு தெரியும் . என்ன காரணமா வச்சு தான் நீங்க போன் பேசுறது இல்லன்னு.. ஓகேவா! அது யாரோட விருப்பமோ? எனக்கு அது தேவையில்லை. நான் ஹெட் செட் போட்டுகிறேன். அந்த பக்கம் போய் பேசு,எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று அவளை துரத்தி விட்டு, இவள் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு படுத்து விட்டாள் .
“என்னடி சொல்றா ரியா ? கொஞ்ச நேரமா சத்தத்தையே காணோம் “
ரியா மித்ராவின் கையில் தட்டியவுடன் மித்ரா போனை மியூட்டில் போட்டு இருந்தாள்.ரியா கூறியதை மித்ரா சொல்ல..
“ஓ! மேடம் நமக்காக டைம் தரங்களோ?”என்று நக்கலடித்தான்.
“தேவ் அதை விடுங்க! நீங்க வீட்டுல சொல்லிடீங்களா?அங்க என்ன சொன்னாங்க?”என்று கேட்டாள் ஆர்வமாக.
அவனும் நடந்தது சொல்ல,
“அப்பாகிட்ட ஃப்ரீயா பேசிட்டு போல” என்று கேட்டான்..
அவளும் “ஆமாம் “என்று இங்கு நடந்ததை சொன்னாள். அதன் பிறகு, சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“சரி தேவ்” என்றவள் அமைதியாக இருக்க ..
“மேடம் இப்ப வரை நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே” என்றான்..
அவள் அமைதியாக இருக்க, ‘சங்கடப்படுகிறாள் ‘என்று உணர்ந்தவன்
.”சரி ஓகே நாளைக்கு பாக்கலாம். டைம் ஆகுது தூங்குவோம்” என்று போன் வைத்து விட்டான்.
போன் வைத்துவிட்டு வந்து மித்ரா பார்க்க ,ஹெட்செட் மாட்டிக்கொண்டே ரியா தூங்கி இருந்தாள்.
” லூசு குட்டி “என்று அவளை எண்ணி சிரித்து விட்டு, பாட்டை ஆஃப் பண்ணிவிட்டு ,ஹெட் செட்டையும் கழட்டி வைத்துவிட்டு, ஃபோனை நகர்த்தி வைத்துவிட்டு, அவள் நெற்றியில் இதழ் பதித்து, அவளை கட்டி அணைத்தபடி தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் ஸ்கூலில் இருவரும் சந்திக்கும் படியாக அமையவில்லை.
தேவ் தான் மெசேஜ் செய்தான். “ராங்கி இன்னும் வரலையா ?”என்று,
” வந்துட்டேன் தேவ் கொஞ்சம் வேலை இருக்கு”
” சரி “என்று குகனை உள்ளே விட்டுட்டு வேலைக்கு கிளம்பி இருந்தான்.
மாலையும் அவளுக்காக காத்துக் கொண்டிருக்க ,காலையில் நேரமில்லாததால் அவனும் கிளம்பி இருந்தான்.
இப்பொழுது மாலையும் வராமல் இருக்க , போன் செய்தான்
“சொல்லு தேவ் “என்றவள் தடுமாற,
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ இங்க இருக்கணும்.உனக்கு வேலை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியும் ! என்ன அவாய்ட் பண்ணனும் நினைக்கிற இல்லையா?”
“அப்படி எல்லாம் இல்லை” என்றாள் அவசரமாக..
“நீ வர”என்றவன் வைத்து விட்டான்.
அவளும் தன்னை சமன் செய்து கொண்டு வந்தாள்.
அவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டிருக்க,
குகன் மித்ரா வருவதற்கு முன்பாகவே அங்கு உள்ள ஊஞ்சலில் தான் விளையாடிக் கொண்டிருந்தான்.
” என்ன தேவ்?” என்று கேட்டுக் கொண்டே மித்ரா வர..
“எதுக்காக என்ன அவாய்ட் பண்ற?”
” அவாய்ட் பண்ணல தேவ் “என்றாள் அவசரமாக..
அவளை மேலும் கீழும் பார்த்தவன்.” நான் எதைப் பற்றியும் கேட்க மாட்டேன். ஓகே வா! ஃப்ரியா இரு! நீ அவாய்ட் பண்ணல தான்” என்றவன் அமைதியாக இருக்க..
” எனக்கு உங்களை நேருக்கு நேர் பார்க்க ஒரு மாதிரி இருக்கு”
” நேத்து நம்ப மீட் பண்ணி பேசினதலையா ?”
“இல்லை” என்று தலையாட்ட ..
“அப்புறம் என்ன?” என்று அவளை குறுகுறுவென பார்க்க..
அவளோ,தலையை கீழே தாழ்த்திக் கொண்டாள்.
” நிமிர்ந்து பாருடி பப்ளிக் ப்ளேஸ்ல இருக்கோம்.. ஃப்ரீயா இரு நேத்து எதோ ஒரு எக்சைட்மெண்ட்ல கேட்டுட்டேன்.. ஓகேவா, அதுக்காக என்ன அவாய்ட் பண்ணாத! நம்ம பாத்துக்கிறது ஒரு பைவ் மினிட்ஸ் 10 மினிட்ஸ் தான் ..பெருசா எதுவும் பேசவும் முடியாது..அந்த நேரத்தையும் சுருட்டி வச்சிட்டு இப்படி ஓடி ஒழியாத ஓகேவா” என்றான் கண்களை சுருக்கி,
அவளுக்கும் அவனின் கவலை புரிய ,”சரி” என்று தலையசைத்தாள்.
” சரி ஓகே பாய்! நைட் கால் பண்றேன் “என்று ஒரு தலையசைப்புடன் கிளம்பி இருந்தான்.
நேரம் கிடைக்கும் போது போன் பேசிக் கொண்டார்கள். மெசேஜ் செய்து கொண்டார்கள். ஸ்கூலில் ரொம்ப நேரம் நின்று பேசுவதில்லை . அது அடுத்தவர்களுக்கு காட்சி பொருளாக ஆகிவிடும், தவறான முன் உதாரணமாகவும் ஆகிவிடக்கூடாது, ஆசிரியர்களுக்காகட்டும் ,மாணவர்களுக்காகட்டும் என்பதால் ஓரிரு வார்த்தைகளில் கிளம்பி விடுவான்.
தினமும் கூட சந்திப்பதில்லை. தூரத்திலிருந்து பார்த்து ரசித்து விட்டு கிளம்பி விடுவான்.
அந்த வர இறுதியில் ஞாயிற்றுக்கிழமை எழில் சொன்னது போல் தன் குடும்பத்துடன் மித்ரா வீட்டிற்கு சென்றார்கள்.
சனிக்கிழமை இரவு ரியாவிற்கு ஃபோன் செய்து, நாங்கள் நாளை வருகிறோம். வீட்டில் அப்பா அம்மாவிடம் மட்டும் சொல்லிடு. மித்ரா கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.
அவளும் அதன்படி தன்னுடைய அப்பா ,அம்மாவிடம் சொல்லி இருக்க .அவர்களும் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
மித்ராவுக்கு தெரிய வேண்டாம் என்று கூறியதால் ,மூவரும் அவளிடம் சொல்லவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் லீவு என்பதால் பட்டியாலா பேண்ட் சுடிதார் சகிதம் முடியை தலைக்கு மேல் கொண்டையிட்டபடி பாட்டு பாடிக் கொண்டே ,செடிக்களில் இருக்கும் பில்லு ,பூண்டுகளை பிடுங்கிக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது ஆட்டோ சத்தம் கேட்க, திரும்பி பார்த்தாள் . புதிதாக இருவர் இறங்குவதை பார்த்தவள் ஒன்றும் புரியாமல் நின்றாள்.
முதலில் எழிலும், தனமும் தான் இறங்கினார்கள் .நடுத்தர வயதில் இறங்குபவர்களை பார்த்தவுடன் யோசனையுடன் இருக்க, அடுத்து குகன் இறங்க நாக்கை கடித்துக் கொண்டு ,”வாங்க ” என்று அழைத்தவள் வீட்டிற்குள் நுழைந்து தன் அம்மாவிடம் ,”அம்மா அது அவங்க” என்று தடுமாற,
“வந்துட்டாங்களா டி “என்றவர் ..வேகமாக வெளியில் வர,” என்ன ?” என்று அதிர்ச்சியுடன் தன் தந்தையை பார்க்க ,அவரும் எழுந்து கொள்ள..
‘அப்போ இவங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமா ?’என்று யோசனையுடன் ரூமுக்குள் சென்று ரியாவின் முதுகிலே இரண்டு போட்டாள் .
“இப்போ என்ன அதுக்கு டி அடிக்கிற?”என்று எகிறி கொண்டு வர,
” நடிக்காத!அவங்க வராங்கன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருக்க பொய் தானே! அப்பா ,அம்மா கிட்ட சொல்லிருக்க, அவங்க வராங்கன்னு என்கிட்ட சொல்ல வேண்டி தான!”
” உன் ஆள் தான் பா சொல்ல வேணாம்னு சொன்னாரு! வந்துட்டாங்களா?” என்று தோலை குலுக்கி விட்டு வெளியே செல்ல..
அனைவரையும் வரவேற்று ஹாலில் உட்கார வைத்திருந்தார்கள்.
” ஹாய் தேவ்!” என்றாள் ரியா.
” இது என்ன பழக்கம் டி. மரியாதையா கூப்பிட்டு பழகு! பேர் சொல்லி கூப்பிடுற ?”என்றார் சத்யா அதட்டலாக ..
குகன் முந்திக்கொண்டு ,”பாட்டி நானே தேவ்னு தான் கூப்பிடுவேன் “என்று முத்துப்பற்கள் தெரிய சிரிக்க..
அவன் தலையிலே கொட்டினான் வேலு.
” நீ சின்ன பையன் பா..இவளுக்கு என்ன ?”என்றார்
“அத்தை விடுங்க! பிரியா அப்படி உரிமையா கூப்பிடுறா இதுல ஒன்னும் தப்பு இல்லை” என்றான்..
எடுத்த எடுப்பில் உரிமையாக அத்தை என்று அழைக்கவும்.. அவருக்கும் உள்ளுக்குள் மென் சாரல் ..புன்னகைத்தபடி “சரி” என்று தலை அசைத்தவர் எதுவும் பேசவில்லை.
அதன் பிறகு, இரு வீட்டு பெற்றவர்களும் பெரியவர்களும் பேசிக்கொள்ள,
“இரண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போச்சு சம்பந்தி. நம்மளும் பேசி முடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் நினைக்கிறேன். உங்களுக்கும் சம்மதமா ? என்றார் எழில்.
“எங்களுக்கும் சம்மதம் தான் சம்பந்தி ஒன்னும் பிரச்சனை இல்ல “என்று தலையசைத்தார் இளவரசன்.
“சரி மேற்கொண்டு, கல்யாணம் எப்ப பண்ணலாம்னு பேசிக்கலாமா?” என்றவுடன் ..வேகமாக தனம் தான் “அண்ணா கொஞ்சம் சீக்கிரமாவே முடிச்சிடலாம் அண்ணா ! இவன் வயசுல இருக்க எல்லாத்துக்கும் கல்யாணம் ஆகி புள்ள குட்டியே இருக்கு..இவன் தான் இவ்வளவு நாள தள்ளி போட்டுட்டே போறான்.. எப்படா எங்க வீட்டுக்கு ஒரு மகராசி வருவான்னு பாத்துட்டு இருந்தோம். இப்பதான் மனசு இறங்கி வந்திருக்கான்” என்று அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே செல்ல ..
தன் தம்பியின் காதை கடித்தான் வேலு..”என்னடா கூட பிறந்த அண்ணன் கிட்ட பேசுற போல உரிமையா அண்ணன்னு சொல்லி நம்பள பெத்த ஆத்தா பேசிட்டே போகுது !”
“கொஞ்சம் அமைதியா இரு டா!”என்று அவன் தொடையில் கிள்ள..
“பாவி பையன் ” என்று முனகி கொண்டே, நடக்கும் சம்பாஷனைகளை பார்க்க ஆரம்பித்தான்.
இங்கே மித்ரா இன்னும் வெளியில் வராமல் இருக்க.. “மித்ரா “என்று குரல் கொடுத்தார் இளவரசன்.
அவளும் வெளியில் வர ..
தேவின் கண்கள் அவளை தான் வட்டமிட்டது ..மித்ராவும் அவனை தான் பார்த்தாள்.
முதல் முறையாக ஒருவரை ஒருவர் இந்த அளவிற்கு ஊன்றி பார்க்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.. இதுவரை இருவரின் பார்வையும் கண்களைத் தாண்டி சென்றதில்லை ..ஆனால் ,இன்று ஏனோ புதிதாக தெரிந்தார்கள் என்று கூட சொல்லலாம்..
இதுவரை புடவையில் மட்டுமே அவளை பார்த்தவன்.. முதல் முறையாக சுடிதாரில் பார்க்கிறான்.. அதுவும் வாராதா தலை.. வீட்டில் எப்படி இருப்பாளோ அதேபோல் இருக்க ..அவளை ஒவ்வொரு நொடியாக ரசித்து பார்க்க, அவளும் அவனை தான் ஓர விழியால் பார்த்தாள்.
ப்ளூ கலர் சட்டை ,சாண்டல் கலர் பேண்ட் இன்று தான் முழுவதாக அவனை அடி முதல் அந்தம் வரை பார்க்கிறாள்..
அவனை பார்த்துக் கொண்டே இருக்க, தேவ் யாருக்கும் தெரியாமல் கண்சிமிட்டி சிரிக்க.. இவள் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொள்ள..
“எம்மா மித்ரா சுத்தி ஆளுங்க இருக்காங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க!” என்றாள் மித்ராவின் காதில் கிசு கிசுத்த படி.
அவளுக்கு வெட்கமும் ,கூச்சமும் நாணமும் போட்டி போட அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி கொண்டாள்.
“நீ சொன்ன மாறியே பண்ணிடலாம் தங்கச்சி மா ஒன்னும் பிரச்சனை இல்ல “என்றார் இளவரசன்.
அப்பொழுது சத்யாவும் “அண்ணி! நானும் அதை தான் நினைச்சுட்டு இருக்கேன். சீக்கிரம் முடிச்சிடனும் , பொம்பள புள்ளையை வீட்ல வச்சுட்டு வெளியே அனுப்புறது வயிற்றில் நெருப்பை கட்டிட்டு இருக்க மாறி இருக்கு. இப்பதான் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு. நானும் இவர்கிட்ட தினமும் புலம்பி கிட்டு தான் இருக்கேன்.. இவளோ, நான் கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு தான் கல்யாணம் பண்ணிபேன்னு சொல்லிட்டு இருக்கா” என்றார்..
“இனி நீ நிம்மதியா இருக்கலாம் தங்கச்சி மா.. சீக்கிரம் பேசி முடிச்சிடலாம் ” என்றார் எழில்.
“மாமா தப்பா எடுத்துக்காதீங்க நான் கொஞ்சம் பேசணும்” என்று அவன் உரிமையுடன் இளவரசனை அழைத்தான்.
“அவரும் சொல்லு பா “என்றார்.
“அத்தையும் ,அம்மாவும் ஆசைப்படுற போல சீக்கிரம் நிச்சியம் மட்டும் வச்சிக்கலாம் .கல்யாண ஒரு ஆறு மாசம் போகட்டுமே “என்றான் சங்கடமாக..
வேலு அவனை முறைத்தவன். “எதுக்குடா உனக்கு ஆறு மாசம்”
” நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?”
“இன்னும் என்னடா உனக்கு பிரச்சனை. ரெண்டு வீட்டிலும் பேசி முடிச்சிட்டாங்க அப்புறம் எதுக்கு கல்யாணத்தை தள்ளி போடனும் “
வித்யாவும் அவனை “ஏண்டா?” என்பது போல் தான் பார்த்தாள்.
இளவரசன் “ஏன் பா”என்றார்.
” நிச்சயம் மட்டும் பண்ணிட்டு ,ஆறு மாசத்துக்கு இன்னும் காதல் காவியம் ஓட்டலாம் என்ற எண்ணமோ சாருக்கு “என்று வேலு நக்கலடிக்க,
தனது அண்ணனை தீயென முறைத்தான்.
‘இவன் தொல்லை தாங்கல’ என்று தலையில் தட்டிக் கொண்டவன். இப்பொழுது அமைதியாக இருக்க ,
வீட்டில் உள்ளவர்களும் வேலு சொன்னது போல் தான் யோசிக்கிறானா? என்று யோசித்து மித்ராவை பார்த்தார்கள் அவளுக்கு என்ன விருப்பம் என்று,
அவளும், “எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் குடுங்க !நான் இன்னும் கல்யாணத்துக்கு பிரிப்பேர் ஆகல.. அத பத்தி யோசிக்கவே இல்லை” என்றாள் சங்கடமாக ..
அதன் பிறகு, இரு வீட்டுப் பெற்றவர்களும் பேசி சரி ஆறு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
தேவ் அவளுக்கு கண் காமித்து விட்டு எழுந்து கொள்ள, வேலுவும் உடன் எழுந்தான்.
“நீ எங்கடா வர ?”என்றான் பற்களை கடித்த படி..
” அன்னைக்கு போட்டோ காட்டச் சொன்னதுக்கே காட்டல.. நான் இன்னைக்கு அந்த பிள்ளை கிட்ட பேசியே ஆகணும்” என்றான் குழந்தை போல..
“டேய் !”என்று தேவ் பல்லை கடிக்க..
“நீ தினமும் தான பாக்குற? அது மட்டும் இல்லாம அந்த புள்ளையை தூக்கிட்டா ஓடிடுவாங்க” என்றவன் மித்ராவிடம் பேச சென்றான்.. உடன் வித்யாவும்..
தானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் தேவ் ,குகனையும் தூக்கிக்கொண்டு …
மித்ராவுடன் ,ரியாவும் வெளியே சென்றாள்..
சிறியவர்கள் அனைவரும் வெளியில் இருக்க… இரு வீட்டு பெற்றவர்கள் மட்டும் உள்ளே உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
தனிமை கிடைக்காத கோபம் அவன் முகத்தில் தெரிய..அவனை பார்த்து சிரித்த வேலு” அதுக்கு தான் அன்னைக்கே போட்டோ காட்டி இருக்கணும் “என்று சிரித்தான்.
“அவனை வம்பு இழுக்கலனா உங்களுக்கு தூக்கம் வராதே”என்று அவன் காலை வாரினாள் வித்யா..இப்படியே சிரிப்பும் கும்மலமுமா அவர்களின் பேச்சு முடிய..
நேரங்கள் செல்ல,தேவ் குடும்பத்தினர் அனைவரும் சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டார்கள் தங்களது இருப்பிடத்தை நோக்கி,
அன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலை விஷயமாக பார்க்கிற்கு ஒருவரை பார்க்க சென்று இருந்தான் தேவ்.
அவன் பேசி முடித்துவிட்டு வெளியில் கிளம்பும் பொழுது, தூரத்தில் ஒரு பெண் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிய,
‘எங்கோ? பார்த்த மாதிரியே இருக்கே ?’என்று யோசித்தான்.
” சரி “என்று அருகில் நெருங்கினான்.
‘ பார்த்த முகமாக இருக்கே?’ என்று யோசனை உடனே செல்ல ..
கிட்ட நெருங்க..அது ரியாவாக இருந்தது.
ஒரு பக்கமாக அவள் முகம் தெரிந்தது.. அதுவும் காரசாரமாக பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன்..’ ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?’ என்று எண்ணிக்கொண்டே அவள் அருகில் “ரியா “என்று அழைத்துக் கொண்டே செல்ல ,
அவளும் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த தன் உடல் மொழியையும் ,பாவனைகளையும் மாற்றிக் கொண்டு, “தேவ் “என்று திரும்பினாள்.
” நீங்க இங்க என்ன?”என்றாள்.
“ஒரு வேலை விஷயமா ஒருத்தர பார்க்க வந்தேன்.நீ இங்க என்ன பண்ற ?”..
” அ..அது ” என்று அவள் தயங்க,
” நீங்க யாரு சார்?” என்றான் அவளுடன் பேசி கொண்டு இருந்த ஆடவன் ..
அவனை மேலும் கீழும் பார்த்தவன்,”அவளோட மாமா “என்றான் உரிமையாக..
” மாமா வா” என்று புரியாமல் பார்க்க..
“மாமாவவே தான் ” என்றவன் ரியாவிடம் இப்பொழுது பார்வையை பதிக்க,
” அது இவரை நான் லவ் பண்ணேன் தேவ் “என்றாள்.
சூப்பர்