அத்தியாயம் 9 :
காவலர் ஒருவரை அழைத்து ஆட்டோவை காவல் நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தக் கூறினான்.
ஏதோ புதிய எண்ணிலிருந்து அழைப்பு.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக யாரோ அவனைத் தொடர்புகொள்ள முயல்கின்றனர். அறிந்தே இருந்தான்.
எடுக்கவிருக்கும் தருணத்தில் அழைப்பு நின்றுவிடும் அல்லது பேசாமலே வைக்கப்பட்டிருக்கும்.
அமிர்தாவின் வழக்கை கையில் எடுத்ததும் தன்னைச்சுற்றி ஏதோவொரு மாயவலை பின்னப்படுவதை பாரியால் உணர முடிந்தது.
தன்னுடைய இருக்கையில் வந்தமர்ந்தவன் ஆணையர் சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தான்.
“சொல்லுங்க பாரி.”
“அமிர்தா வழக்கை விசாரணை செய்த இன்ஸ்பெக்டரை என்னை மீட் பண்ண சொல்லுங்க” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காது வைத்துவிட்டான்.
இதனை அவனே செய்திருக்கலாம். அவனுக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால், கண்ணுக்கு முன்னால் கொலை என்று உறுதி செய்யும் வகையில் அத்தனை ஆதாரங்கள் இருந்தும் தற்கொலையென வழக்கை மூடியிருக்கிறார் என்றால் அந்த இன்ஸ்பெக்டருக்கு பின்னால் நிச்சயம் அரசியல் பலம் உள்ளது. அதனை நேரடியாகத் தான் தொடக்கூடாது என்பது பாரியின் எண்ணம்.
இதையே பாரிக்கும் மேலதிகாரி, “முன்னால் இவ்வழக்கை விசாரித்தவர் எனும் அடிப்படையில் உங்களுக்குத் தெரிந்ததை இப்போ டீல் செய்யும் பாரியிடம் சொல்லுங்க” என்று சொல்லும்போது அது பணி நிமித்தம் எனும் வகையில் பார்க்கப்படும் என்று இவ்வகையில் அந்த இன்ஸ்பெக்டரே தன்னை வந்து பார்க்குமாறு செய்திருந்தான்.
அவனாக அவர்களை நெருங்கக்கூடாது. அவர்களே அவனை நெருங்க வைக்க நினைத்தான் பாரி.
யோசனையோடு கேண்டியை எடுத்து சுவைக்க ஆரம்பித்தான்.
மீண்டும் புதிய எண்ணிலிருந்து அழைப்பு… இம்முறை அலைபேசியை பார்த்திருந்தானேத் தவிர எடுக்க முயலவில்லை.
ஜென்னை அழைத்தவன், அழைப்பு வரும் அந்த எண்ணை காண்பித்து அதனின் டீடெயில் கேட்டான்.
அந்த எண்ணிற்கான ப்ரூஃப் சரியாக இல்லாத போதும்…
அரை மணிநேரத்தில் அந்த எண்ணின் சிக்னல் வைத்து… இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு அங்கு சென்றான் பாரி.
அது ஒரு ஷாப்பிங் மால். பலதரப்பட்ட கடைகள், மக்கள் என்று எப்போதும் அங்கு திருவிழா கூட்டம் தான்.
சீருடை தவிர்த்து வந்திருந்தான்.
‘லொகேட் கரெக்ட்.’
பாரியின் காதில் மாட்டியிருந்த புளுடூத் வழியாக ஜென்சி இணைப்பில் இருந்தாள்.
“அவங்க எங்கிருக்காங்க எக்சாக்ட் பிளேஸ்… ஐ மீன், எனக்கும் அவங்களுக்கும் எத்தனை மீட்டர் டிஸ்டன்ஸ் இருக்கும்?” என ஜென்சியிடம் கேட்டுக்கொண்டே உள்ளே பார்வையால் அலசியபடி முன்னேறிச் சென்றான்.
“பாரி… ஸ்டாப்.” ஜென்சியிடமிருந்து குரல் வந்ததும் சட்டென்று நடையை நிறுத்தினான் பாரி.
“உனக்கு லெஃப்ட் சைட் பைவ் மீட்டர் டிஸ்டன்ஸில் அந்த நெம்பரோட மொபைல் இருக்கு பாரி.”
“அது ஜூவெல் ஷாப் ஜென்.”
“அப்போ அவங்க லேடியா?”
“ஏன் மென்லாம் நகை வங்கமாட்டாங்களா இல்லை போடமாட்டாங்களா?”
“டேய்… நீயெதுக்கு அங்க போயிருக்க… இப்போ என்ன என்கிட்ட பேசிட்டு இருக்க?” சீரியஸான நேரத்தில் கூட எப்படி இவனால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறதென்று ஜென் கடுப்பாகினாள்.
“நான் ஷாப் உள்ள வந்துட்டேன் ஜென். மேக் அ கால் தட் நெம்பர்.”
பாரி சொல்லியதைபோல் கன்ட்ரோல் ரூமிலிருந்து ஜென் பாரிக்கு வந்து கொண்டிருக்கும் அந்த புது எண்ணிற்கு அழைப்பு விடுக்க… இங்கே பாரியின் செவிகள் கூர்மை பெற, கண்கள் அவ்விடத்தையே பார்வையால் அலசியது.
அந்த நபர் யாரென்று தெரியாது. அவரை இதற்கு முன் பாரி பார்த்ததில்லை. அதனாலேயே அடையாளம் காண ஜென்னை அவ்வெண்ணிற்கு அழைக்கக் கூறினான்.
அலைபேசி ஒலிக்கும் சத்தம் தனக்கு பின்னால் கேட்க பாரி திரும்பும் முன்,
“சித்தப்பா” என்ற அழைப்போடு மூன்று வயது பெண் குழந்தை அவனின் காலை கட்டிக்கொண்டது.
யாரென பார்த்தவன், மழலையெனத் தெரிந்ததும் கீழே குனிந்து தூக்கினான்.
“யார் நீங்க? யாரோடு வந்தீங்க? யார் உங்க சித்தப்பா?”
அது யாருடைய குழந்தையென்று சுற்றி பார்த்துக்கொண்டே குழந்தையிடம் கேட்டான்.
“அம் சின்னு.”
“சோ க்யூட். அம்…”
அவன் தொடங்கியதை குழந்தை முடித்திருந்தது.
“பாரி வேந்தன் ஐபிஎஸ்.”
“வாவ்…” என வியந்தவனுக்கு அம்மழலையின் கொஞ்சல் மொழி ரசிக்க வைத்தது. அந்த குழந்தையை இதற்கு முன் எங்கோ பார்த்த நினைவு. சட்டென்று நினைவு கூர்ந்திட முடியவில்லை.
“பாரி அந்த ஆளு அங்கிருந்து கிளம்பிட்டாங்க. அவங்களோட சிக்னல் லாங் டிஸ்டன்ஸ் காட்டுது.” ஜென்னின் கத்தல் அவனின் காதில் மோதிய போதும், பாரி அதனை கருத்தில் கொள்ளவில்லை.
“என்னை எப்படித் தெரியும் உங்களுக்கு?”
“உங்க ஃபோட்டோஸ் என் வீட்டில் இருக்கே.”
‘என் ஃபோட்டோ?’
“அப்புறம் சித்தி உங்களை பத்தித்தான் நிறைய கதை சொல்லுவாங்க” என்றது அக்குழந்தை மழலையில்.
“யார் உங்க சித்தி?”
அப்போது சின்னு என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு பாரி சின்னுவுடன் சேர்ந்து திரும்ப கடையின் மறுபுறத்தில் உள்ள கிட்ஸ் பிளே ஏரியாவிலிருந்து இளமதி வந்து கொண்டிருந்தாள்.
“ஷீ இஸ் மை மாம்” என்ற சின்னு, பாரியிடமிருந்து இறங்கி இளாவை நோக்கி ஓடிட, இளாவும் அவர்களை நெருங்கியிருந்தாள்.
“இளா!”
இப்போது பாரிக்கு சின்னு சொல்லிய சித்தி தமிழென்று விளங்கியது. அத்தோடு தமிழின் புலனத்தின் முகப்பு படத்தில் அவளோடு இருக்கும் குழந்தை சின்னுயென்று தெரிந்தது.
“பாருடா சாருக்கு உன்னைத் தெரிந்திருக்கு பாரேன்” என்று பரிதியின் குரல் பாரிக்கு பின்னிருந்து வந்தது.
பரிதியை கண்டதும் பாரிக்கு சந்தோஷம். ஆனால் பரிதி சொல்லிய வார்த்தை அவனின் சந்தோஷத்தை துடைத்தது.
“சார் இங்க வந்து ஒன் வீக் ஆகுது. ஆனால் நம்மை பார்க்கத்தான் மனசு வரல” என்ற பரிதியிடம் “நான் என்னடா பண்ணேன். என்னையும் தள்ளி வச்சிட்டல நீ” என்ற பொருள் அடங்கிய பார்வை.
“உங்களுக்கு மட்டும் என்னை பார்க்கணும் எண்ணம் இருந்ததா என்ன?”
“வாட் யூ மீன்?”
ஜென் அனுப்பியிருந்த பரிதி தமிழுக்கு உணவு ஊட்டும் புகைப்படத்தை அலைபேசியில் காட்டினான் பாரி.
“ஹோ…”
“அவ்வளவு பக்கத்தில் வந்தும் என்னை பார்க்கல தான! தம்பிங்கிற நினைவிருந்திருந்தா வந்து பார்த்து திட்டியாவது இருப்பீங்கதான” என்றான் பாரி.
யாரும் வேண்டாமென்று சென்றவன் தான், இப்போது சிறுபிள்ளையென கோபத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.
“உங்களுக்கு எப்பவும் அவள்தான முக்கியம்?” கேட்டவனிடம் பொறாமை இல்லையென பரிதிக்கு நன்கு தெரியும்.
“ஆமாம் அவள் தான் எனக்கு முக்கியம். இளாவைவிடவும் தமிழ் தான் முக்கியம்.”
“உங்களுக்கு நடுவில் என்னை ஏண்டா இழுக்குற?” என்று பரிதியின் தோளிலேயே ஒரு அடி வைத்தாள் இளா.
“நாங்க வேணான்னு நீதான போன. அப்போ வேணுன்னா நீயாத்தான் வரணும்.”
“சரி நீங்க அங்க போய் நில்லுங்க. நானே உங்களைப் பார்த்துவர மாதிரி வரேன்.”
“காமெடி… எனக்கு சிரிப்பு வரல.”
“ஒரு காமெடி வேஸ்ட்டா” என்ற பாரியின் பாவனையில் இப்போது பரிதிக்கு சிரிப்பு வர சிரித்தும் விட்டான்.
“சிரிச்சிட்டிங்களா” என்ற பாரி சகோதரனை அணைக்கச் செல்ல…
“எனக்கு இன்னும் கோபம் போகலை” என்று இரண்டடி பின் தள்ளி நின்றான்.
“ஹேய் இன்னும் என்ன?” என்ற பாரி, இளாவிடம் திரும்பி… “நீயாவது சொல்லு இளா” என்றான்.
“என்னது இளாவா?” என்று புருவம் உயர்த்தியவள், “நான் இப்போ உனக்கு அண்ணி… அந்த மரியாதையோடு அண்ணி சொல்லு, நான் என் புருஷனை உன்கிட்ட பேசச் சொல்றேன்” என்றாள்.
“புருஷனும் பொண்டாட்டியும் என்னை என்ன கட்டம் கட்டுறீங்களா?” எனக்கேட்ட பாரி…
“இவங்க நமக்கு வேண்டாம். நீ வாடா செல்லம் நாம போலாம்” என்று சின்னுவைத் தூக்கிக்கொண்டு எதிரே இருந்த ஐஸ்கிரீம் பார்லர் நோக்கிச் சென்றான்.
எடுத்து வைத்திருந்த நகைக்கு பணம் செலுத்திவிட்டு பரிதியும் இளாவும் பாரியிடம் செல்வதற்குள்… பாரியும் சின்னுவும் நெருக்கமாகியிருந்தனர்.
இவர்கள் சென்ற நேரம், பாரியும் சின்னுவும்… கைகளில் வைத்திருந்த ஐஸ்கிரீமை வாயில் சுவைப்பது போல் வைத்து பல கோணங்களில் சுயமி எடுத்துக் கொண்டிருந்தனர்.
தாய் தந்தையை பார்த்ததும்,
“சித்தப்பாவும் சித்தி மாதிரியே சோ ஸ்வீட் டாடி” என்று பரிதியிடம் சொல்லிய சின்னு பாரியின் கன்னத்தில் முத்தம் வைத்திட, அவனது கன்னத்தில் சின்னுவின் உதட்டிலிருந்த ஐஸ்கிரீம் ஒட்டிக்கொண்டது.
அதனை பார்த்து குழந்தை கைத்தட்டி சிரிக்க…
“இப்படியே ஒரு செல்ஃபீ எடுப்போமா” என்ற பாரி சுயமி எடுத்துமிருந்தான்.
“சுவீட் மொமெண்ட் கேப்ச்சர்டு” என்ற பாரியிடம், “சித்தியும் இப்படித்தான் நான் கிஸ் பண்ண மார்க்கோட செல்பீ எடுப்பாங்க” என்ற சின்னு மீண்டும் ஐஸ்கிரீம் சுவைக்க ஆரம்பித்திட பாரி தன் உணர்வுகள் தொலைத்தான்.
அவனின் தோள் தொட்ட பரிதி…
“இன்னும் எதுவும் மறக்கலையாடா?” எனக் கேட்டிருந்தான்.
“என்னால முடியல? என் பூ…” எனத் துவங்கிய பாரி, நொடியில் தன்னை சரிசெய்து… “நோ மோர் பாஸ்ட். ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்ணியிருக்கோம், ஜாலியா எதாவது பேசுங்க” என்றான்.
“இவன் ஜாலியா பேசணுமுன்னா தமிழ் உடனிருக்கணும்” என்று நொடித்த மனைவியிடம் பாரியை கண்காட்டினான் பரிதி.
எங்கு ஆரம்பித்தாலும் அவர்களின் பேச்சு தமிழடமே வருவதை பாரியும் உணர்ந்தே இருந்தான்.
அதுவே தமிழ் தன் குடும்பத்திற்கு எந்தளவிற்கு இன்றியமையாதவளாக இருக்கின்றாள் என்பதை அவனுக்கு புரிய வைத்தது.
பாரியின் முகத்தையே கூர்ந்து நோக்கிய பரிதியால் அவனின் எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
சூழலை மாற்றிட பரிதியே வேறு பேசினான்.
“இங்க எதுக்கு வந்த பாரி?”
“ஒரு கேஸ்.”
“ஆமாம்ல சார் இப்போ பெரிய போலீஸ்” என்ற பரிதிக்குமே தன் தம்பியின் பதவி கர்வத்தை கொடுத்தது.
“சரி நீங்க பேசிக்கிட்டு இருங்க. இவள் ட்ரெஸ் எல்லாம் பூசிக்கிட்டாள். வாஷ் ரூம் கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்று இளா சின்னுவை அழைத்துக் கொண்டுச்சென்றாள்.
“அப்பா எப்படிடா இருக்கிறார்?”
“குட் டா.”
சில நொடி அமைதி.
இருவருமே நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததும் அனைத்தும் மறந்து சாதாரணமாக பேசிக்கொண்டாலும், இருவருக்குள்ளுமே பிரிவின் வேதனை மண்டி கிடந்தது. அத்தோடு பரிதிக்கு பாரியின் மீது கட்டுக்கடங்காத கோபமும் எழத்தான் செய்தது.
ஆனால் பாரி கேட்ட “அவ்வளவு பக்கத்தில் வந்தும் என்னை பார்க்கல தான!” என்ற வார்த்தையிலேயே… பாரி எந்தளவிற்கு இந்த நான்கு வருடத்தில் உறவிற்காக ஏங்கியிருந்திருக்கிறான் என்பது புரிய கோபம் மறந்தான்.
உறவின் வலி அனுபவித்தும் தங்களை தேடி வரவில்லையே இப்போதும் என்கிற எண்ணம் பரிதிக்கு எழாமல் இல்லை. தமிழுக்காகவே பாரியின் மீது பெரிய மனத்தாங்கல் பரிதிக்கு உண்டு. ஆனால் அதற்காகவெல்லாம் வருந்திருப்பவனை மேலும் வருத்திட பரிதிக்கு மனம் வரவில்லை.
எவ்வளவு தான் தமிழின் மீது பரிதிக்கு அன்பு அக்கறை இருந்தாலும், பாரி அவனுக்கு ரத்த சொந்தமல்லவா! உடன்பிறப்பை விட்டுக்கொடுத்திட முடியுமா என்ன?
“அம்மாவை கேட்கமாட்டியா பாரி?”
அக்கேள்வியில் பாரியின் கண்களில் தெரிந்த வலியில் ஒரு நொடி பரிதியே அரண்டு போனான்.
“அம்மா…”
“ப்ளீஸ்… அவள் மேல எவ்வளவு வருத்தம் இருக்கோ அதேயளவு அவங்க மேலையும் இருக்கு. குறைய மாட்டேங்குது. நான் என்ன செய்ய” என்ற பாரியின் மனம் முழுக்க ஆற்றாமையே.
வாழ்வில் மிகவும் முக்கியமான இரண்டு உறவுகள் தன்னிடம் இல்லையே என. தெரிந்தே வெறுத்து ஒதுக்குகிறேனே என.
“பாரி…” என்ற பரிதி தம்பியின் கையினை தன் கைக்குள் பொத்தி தானிருக்கிறேன் என செயலால் கூறினான்.
“ரியலி மிஸ் யூ டா.”
பரிதியின் வார்த்தையில் பாரியிடம் சிறு புன்னகை.
பரிதிக்கு பாரி என்றால் அத்தனை பிடித்தம் அல்லவா. ஐந்து வருட இடைவெளியில் பிறந்த பாரியை தன் கைகளுக்குள்ளே வைத்திருந்தவனாயிற்றே. பூ வருவதற்கு முன்வரை பாரிக்கு அனைத்தும் பரிதியே.
சிறு வயதில் அண்ணா அண்ணா என்று அழைத்து பின் சுற்றும் சிறுவன் பாரியாகத்தான் இப்போதும் காண்கிறான்.
“மறக்க முயற்சி செய் பாரி.”
“பூவையா?”
இதற்கு பரிதியிடம் பதிலில்லை.
“ஓகே… சில் ப்ரோ. இளா வர்றாங்க.”
பரிதிக்கு பாரியின் மனம் மாறிட வேண்டுமென்று ஆசையல்ல. பேராசை. பின்னே பாரி பரிதிக்கு ஒரு கண் என்றால், தமிழ் மற்றொரு கண்ணாயிற்றே! இருவரும் அனைத்து கசப்புகளையும் மறந்து வாழ்வில் ஒன்றிணைந்தால் அவனை விட அதிகம் மகிழ்வுகொள்வோர் யாருமில்லை.
இளாவும் சின்னுவும் அமர்ந்ததும், கவனமாக தமிழ் மற்றும் குடும்பப் பேச்சுக்களை தவிர்த்தவர்களாக பல கதைகள் பேசி விடைபெற்றனர்.
வீட்டிற்கு அழைத்த பரிதியிடம் முடியாதென்று முகத்திற்கு நேராகவே பாரி சொல்லிவிட்டான். அதற்கு மேல் அவனை எப்படி அழைப்பதென்று பரிதிக்கு தெரியவில்லை.
பரிதி அழைத்தே வரமுடியாதென சொல்லிவிட்டவன் தான் கூப்பிட்டாவா வரப்போகிறான் என்கிற எண்ணத்தில் இளா அவனை அழைக்கவேயில்லை.
ஆனால் செல்லுமுன்… “தமிழை உன் மனைவியா மட்டும் பார் பாரி” எனக் கூறினாள்.
அவளுக்கும் தங்கையின் வாழ்க்கை மலர்ந்துவிடாதா என்கிற ஆசை இருக்கத்தானே செய்யும்.
மொத்த குடும்பமும் பாரியின் மனம் மாறுவதற்காகக் காத்திருக்க… அவனோ இல்லாத கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறான்.
மாலிலிருந்து காவல் நிலையத்திற்கு பாரி வந்தபோது ஆய்வாளர் சேது பாரிக்காகக் காத்திருந்தார்.
அவர் யாரென்று தெரிந்தபோதும் பாரி காட்டிக்கொள்ளவில்லை.
“யார்?” என்று சேதுவை சுட்டிக்காட்டி கணபதியிடம் வினவினான்.
கணபதி, சேதுவின் ஏரியா பெயர் சொல்லி… “அந்த பகுதி ஆய்வாளர்” என்றிட…
“அங்கில்லாம இங்கென்ன வேலை. அங்கு குற்றங்களே நடப்பதில்லையா அல்லது குற்றங்கள் நடந்தாலும் விசாரிக்காம வழக்கை எளிதா மூடும் வழக்கம் உள்ளவரா?” என்று சேதுவை அர்த்தமாக பார்த்துக்கொண்டே கூறியவன்…
“எதுக்கு வந்திருக்கார்?” என தெரிந்துகொண்டே கேட்டான்.
“அமிர்தா வழக்கை முன்பு விசாரித்தவர்…” கணபதி முடிக்கவில்லை.
“அதை அவர் சொல்ல மாட்டாராமா?” எனக் கேட்டிருந்தான் பாரி.
சேது பேச வாய் திறக்க…
“உயர் அதிகாரிக்கு சல்யூட் வைக்கும் பழக்கமில்லையா?” என்றான். அவனின் குரலே அதிகாரத் தொனியில் இருந்தது.
வேகமாக சல்யூட் வைத்தார் சேது.
“சரி சொல்லுங்க… நீங்க இந்த வழக்கில் என்ன கண்டுபிடிச்சிங்க? ஐ மீன் என்ன விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டீங்க?” நேரடியாக விடயத்திற்கு வந்தான்.
“சார்… அது வந்து…” சேது மண்டையை சொறிந்தார்.
“அதான் விசாரணையின் சிறப்பு நல்லாத் தெரியுதே! வேறென்ன?” என்றான் பாரி.
“அரசியல் குறுக்கீடு இருந்தது. அதான் விசாரணை செய்ய முடியல சார்” என்ற சேதுவை முறைத்த பாரி “கெட் அவுட்” என்று கத்தியபடி எழுந்திருந்தான். இருக்கை இரண்டடி தள்ளி பின்னால் விழுந்தது. அதுவே பாரியின் கோபத்தின் அளவைக் காட்டியது.
அவனின் கர்ஜனையில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற காவலர்களும் உள்ளே எட்டி பார்த்திட சேதுவிற்கு அவமானமாகப் போய்விட்டது.
பாரியை முறைத்துக்கொண்டே வெளியேறியிருந்தான்.
“நான்சென்ஸ்… பெரிய ஆளுங்களுக்கு பயப்படுறவன் எதுக்கு இந்த வேலைக்கு வர்றான்” என்று வாய்க்குள்ளேயே சேதுவை நன்கு வசைப்பாடினான். கேண்டியை வாயிலிட்டும்… கை முஷ்டியை தொடையில் தட்டியும் குறைக்க முயன்றான்.
புருவத்தை கீறியபடி “இவனோட ஃபோர் மன்த்ஸ் மொபைல் விவரம் எனக்கு வேணும் அங்கிள். இன் அண்ட் அவுட். டைம் டூயூரேஷன் எல்லாம்” என்றான்.
முதல் முறையாக பாரியின் முகத்தில் தாண்டவமாடும் கனலை பார்த்த கணபதிக்குமே உள்ளூர் குளிர் பரவியது.
“ஓகே சார்” என்ற கணபதி நகர்ந்திட ஜென் அவனறைக்குள் நுழைந்தாள்.
“அறிவிருக்காடா உனக்கு?” எடுத்ததும் அவள் அப்படித்தான் கேட்டாள். ஆனால் பாரியோ அலட்டிக்கொள்ளாமல் அவளை ஏறிட்டான்.
“இந்த கேஸ் நீ கையில் எடுத்ததிலிருந்து தான் அந்த நெம்பரிலிருந்து கால் வருது. அப்படின்னா இதில் சம்மந்தப்பட்ட யாரோ ஒருத்தர்தான் அதுன்னு நீதான சொன்ன. இப்போ அது யாருன்னு தெரிஞ்சிக்க கிடைச்ச வாய்ப்பை இப்படி கோட்டை விட்டுட்டியே பாரி” என்றவள் இருக்கையில் அமர்ந்து மேசையிலிருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.
“நான் பரிதிண்ணாவை பார்த்தேன் ஜென்.”
வாயில் சரித்த அவளின் கை அப்படியே நின்றது.
மாலில் சின்னுவைத் தேடியபடி இளா பாரியின் அருகில் வந்ததுமே அவன் ஜென்னுடனான ப்ளூடூத் இணைப்பை துண்டித்திருந்தான். அதனால் ஜென்னிற்கு எதனால் என்கிற காரணம் தெரிந்திருக்கவில்லை.
குடித்து முடித்தவள்… “ஹோ” என்றதோடு எதுவும் கேட்கவில்லை. அவளுக்கு என்ன கேட்க வேண்டுமென்றும் தெரியவில்லை.
அவன் அவனது அண்ணன் குடும்பத்தை பார்த்திருக்கிறான் வெகு நாட்களுக்குப் பின்னர். அந்நிலையில் தேடும் நபரை விட்டது அவளுக்குத் தவறாகப் படவில்லை. அதனால் அமைதி ஆகினாள்.
“பட் ஜென்… ஐ ஸா தட் பெர்சன்” என்றான் பாரி.
“வாட்… எப்படி?” ஜென்னிடம் இவ்வழக்கில் ஒரு முனை பிடிபட்டு விடும் முனைப்பு.
எதுவாக இருந்தாலும்… தான் தன் வேலையில் கண்ணாக இருப்பேனென்று ஜென்னிற்கு அந்நொடி பாரி உணர்த்தியிருந்தான்.
“ஹூ இஸ்…?”
பாரி சொல்லிய நபரில் ஜென்னிற்கு குழப்பமே மிஞ்சியது.
_________________
“பாட்டி…”
காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்த சின்னு கத்திக்கொண்டே பார்வதியை தேடி கிச்சனிற்குள் ஓடினாள்.
“சின்னுத் தங்கத்துக்கு என்னவாம்? வரும்போதே சத்தம் வீட்டை நிறைக்குதே!” என்று செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சின்னுவை நோக்கி குனிந்த பார்வதி தன் பேத்தியை கன்னம் கிள்ளி கொஞ்சினார்.
தூக்கச்சொல்லிய பேத்தியை அள்ளி அணைத்து முத்தமிட்டு தூக்கிக்கொண்டவர், சமையல் வேலை உதவிக்கு இருந்தவரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அடுக்கைளை விட்டு வெளியில் வந்தார்.
பார்வதிக்கு பதில் முத்தம் வழங்கிய சின்னு… “ஆட்சிம்மாகிட்ட பேசணும். போன் தாங்க” என்று அலைபேசிக்காக கை நீட்டினாள்.
“என்ன பேசணும்?” எனக் கேட்ட பார்வதி, வரவேற்பறை டீபாய் மீதிருந்த அலைபேசியை எடுத்து இளாவின் தாயாருக்கு அழைத்து ஒலி சென்றதும் தன் பேத்தியிடம் நீட்டியிருந்தார்.
சின்னுவும் அவருடன் பேசியபடி இருக்கையில் கால் நீட்டி அமர்ந்துவிட… பார்வதியின் அருகில் இளா வந்தமார்ந்தாள்.
பாரியை பார்த்ததைக் கூறினாள்.
“அப்பத்தா எப்பவும் பாரி சீக்கிரம் வரணும் சொல்லிகிட்டே இருப்பாங்களே அத்தை. அதான் அதை முதலில் அவங்ககிட்ட சொல்லணும் ஒரே அடம். காரில் வரும்போதே. வீட்டுக்கு போய் பேசிக்கலாம் சொன்னதுக்கு மேடத்துக்கு கோபம். அதான் வந்ததும் உங்கக்கிட்ட வந்து போன் கேட்டா(ள்)” என்று மகளை பார்த்தபடியே இளா பார்வதியிடம் சொல்லிக்கொண்டிருக்க…
“பாரியை பார்த்தோம்” என்று அவள் சொன்னதுமே நெஞ்சில் கை வைத்து கண் கலங்கினார் பார்வதி.
“நிஜமா” என்று இளாவுக்கு பின் வந்து நின்ற மூத்த மகனிடம் கேட்டிட… அவனோ ஆமென கண்களை மூடித் திறந்தான்.
சின்னு தன்னுடைய அம்மம்மாவிடம்,
“சித்தப்பா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தாங்க. இங்க முத்தாவெல்லாம் கொடுத்தாங்க” தன் கன்னத்தை தொட்டு காட்டிக் கூறிக்கொண்டிருந்தாள்.
அது பார்வதியின் காதிலும் விழுந்தது.
“வீட்டுக்கு கூப்படலையா பரிதி?” எதிர்பார்ப்போடு வினவினார்.
“கூப்பிட்டிருக்கமாட்டேன்னு நினைக்குறீங்களாம்மா?” என பதில் கேள்வி கேட்டவன்…
“பாரிக்கு தமிழ் மேலிருக்கும் கோவத்தை விடவே உங்க மேலதான் நிறைய இருக்கு” என்றிட பார்வதியின் முகம் மேலும் வருத்தத்தை பிரதிபலித்தது. பனித்த கண்களை துடைத்துக் கொண்டார்.
“உங்களாலதான் தமிழ் மேரேஜ்க்கு ஓகே சொல்லி அவனை கல்யாணமும் பண்ணிக்கிட்டா. நீங்க கேட்காம இருந்திருந்தா தமிழ் ஓகே சொல்லியிருக்கமாட்டா(ள்)ன்னு கோபம் பாரிக்கு.”
பரிதி சொல்வது பார்வதிக்கு நன்கு புரிந்தது. ஆனால் அன்று அவர் தமிழிடம் கேட்டதற்காக மட்டும் அவள் சம்மதம் தெரிவிக்கவில்லையே!
அதையே பரிதியும் கூறி பார்வதியின் வேதனையை பாதியாகக் குறைத்தான்.
“நான் தமிழை வற்புறுத்தியே இருக்கக்கூடாது.” பார்வது தழுதழுத்தார்.
இளா தன் அத்தையை தோள் சாய்த்து ஆறுதலளிக்க முயன்றாள்.
பேசி முடித்த சின்னு பார்வதியிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு…
“சித்திக்கிட்ட பேசணும்” என்றிட…
இளா முடியாதென மறுத்தாள்.
சின்னு அழுது அடம்பிடிக்கவே அவளுக்காக வீட்டிற்குள்ளிருக்கும் பிளே ரூமில் உட்கார வைத்து அவளுக்கு பிடித்த கார்ட்டூனை போட்டு சமாதானம் செய்து வந்தாள்.
வந்தவள்…
“என்னவோ சொல்லிட்டு இருந்தீங்களே திரும்ப சொல்லுங்க” என்று யோசனையாகக் கேட்டாள்.
“அன்னைக்கு அம்மா தமிழிகிட்ட கேட்காமயிருந்திருந்தா அவங்க திருமணம் நடந்திருக்காது தான். ஆனால் அன்னைக்கு நடக்காது இருந்திருந்திருந்தா நிச்சயம் தமிழ் இன்னொருத்தனை கல்யாணம் செய்திருக்கமாட்டா(ள்).”
“என்ன சொல்றீங்க?”
பார்வதிக்கு முன் இளா தன் வியப்பைக் காட்டினாள்.
பரிதி மறைமுகமாக சொல்லியது இளாவுக்கு எளிதாக புரிந்தது.
“என்னடா சொல்லுற எனக்கு புரியல?”
“தமிழ் பாரியை லவ் பண்ணியிருப்பா(ள்). அதனாலதான் பாரியை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சான்னு சொல்லுறார் அத்தை” என்று தெளிவாக விளக்கிக் கூறினாள் இளா.
“அப்படியும் இருக்குமோ?”
“நான் பல தடவை அவக்கிட்ட கேட்டிருக்கேன் அத்தை ஒரு தடவைக்கூட இருக்குன்னு அவள் சொன்னதில்லை” என்று இளா முடிக்கும் முன்…
“இல்லைன்னும் சொன்னதில்லை தான” என்றான் பரிதி.
பரிதியை இளா முறைக்க…
“அவன் சொல்லுறதும் சரிதான இளா. இத்தனை வருஷமா அவளை பார்க்கிறோம். பிடிக்காத, அவள் விருப்பமில்லாத ஒன்னை செய்ய வைக்க முடிஞ்சுதா? ஏன் நம்ம வீட்டுக்கே அவளை இந்த நாலு வருஷமா வரவைக்க முடிஞ்சுதா நம்மளால?” என்றார் பார்வதி.
“என் புருஷன் வீட்டுக்கு முதல் முறையா போகும்போது அவரோட சேர்ந்து போறதுதான் வழக்கம். முறையும் கூட. அப்புறம் நான் மட்டும் எப்படி தனியா வருவேன். பாரி வரட்டும். விட்டுட்டு போனவங்களே என்னை கூட்டிட்டு வரட்டும்” என்று சொல்லி இத்தனை வருடங்களாக அடமாக இருக்கிறாள்.
இளாவின் வளைகாப்பு மண்டபத்தில் வைத்திருக்க… நேராக மண்டபதிற்கு வந்து விழா முடிந்ததும் அங்கிருந்தே ஊருக்கு கிளம்பியிருந்தாள்.
சின்னு பிறந்த போது இளா அங்கே அவளுடன் அவர்களது வீட்டிலிருக்க… ஒன்பது மாதத்திற்கு பிறகே இளா அவளது வீட்டிற்கு சென்றாள். அந்த நாட்களில் சின்னு தமிழுக்கு அனைத்துமாகியிருந்தாள்.
அதன் பின்னர் தமிழுக்கோ, சின்னுவிற்கோ ஒருவரையொருவர் பார்க்க வேண்டும் என்றிருந்தால் பரிதி தான் சின்னுவை அழைத்து வந்து ஊரில் விட்டுச் செல்வான்.
இப்போதும் கூட சொந்த வீடென்று பெரிய பங்களாவே அவளுக்கென உறவுகளோடு இங்கிருக்க… சென்னைக்கு வந்தவள் நேராக இங்கு வராது தோழியின் வீட்டிலல்லவா வசிக்கின்றாள்.
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்த பார்வதி…
“அப்போ உண்மையாவே தமிழ் பாரியை விரும்பியதாலதான் கல்யாணம் செய்துகிட்டாளா பரிதி?” என்று சந்தோஷமாகவேக் கேட்டார்.
“எஸ் ம்மா.”
“சும்மா உங்க கற்பனைக்கு சொல்லி அத்தைக்கு பொய்யான ஹோப் கொடுக்காதீங்க.” இளா பரிதியை கடிந்தாள்.
“எனக்கு இந்த டவுட் அவங்க காலேஜ் டேசிலேயே இருந்தது இளா. பட் பாரி அமிர்தாவை லவ் பண்ணதால நான் இதை தமிழ்கிட்ட கேட்கல” என்றவன் ஜென்சியின் வீட்டில் தமிழ் பாரியை காதலிப்பதாகச் சொல்லியதைக் கூறினான்.
“எனக்கு இப்போ தாண்டா பரிதி நிம்மதியா இருக்கு” என்று அவன் சொன்னதை கேட்ட பார்வதி “அவன் தான் போயிட்டான்னா இவளும் இப்படி எனக்கென்னன்னு இருக்காளேன்னு கவலையா இருந்தேன். இப்போ தான் நம்பிக்கை வருது. பாரி ஒத்துக்கலன்னாலும் தமிழ் அவனை விடமாட்டா(ள்)” என்றார்.
அவரின் கண் முன்னே பாரியும் தமிழும் ஒன்றாக இவ்வீட்டிற்குள் கரம் கோர்த்து நுழையும் காட்சி தோன்றி மறைந்தது.
“எனக்கு ரெண்டு பேரையுமே பார்க்கணும் தோணுது பரிதி.”
“போலாம்மா” என்றவன், “பாரிக்கு கோபமெல்லாம் நேர்ல பார்க்குற வரைதான்னு தோணுதும்மா. அன்னைக்கு அவ்வளவு கத்தினான். ஆனால் இன்னைக்கு தமிழை பார்த்தும் அன்னைய அளவுக்கு கோபம் காட்டாம அமைதியாத்தான இருக்கான். சீக்கிரம் எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றான்.
பரிதிக்கு ஒன்று தெரியவில்லை… அன்று உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்துவனாக இருந்த பாரி… இன்று அவனது பதவிக்காக அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தைக்காரனாக மாறியிருக்கிறான் என்று.
மன உணர்வுகளை எளிதில் வெளிக்காட்டிவிட்டால் எதிராளிக்கு எப்படி பயத்தை தோற்றுவிக்க முடியும். அந்த வித்தையை பாரி தன் வசமாக்கியிருந்தான். பாவம் அதை பரிதி உணரவில்லை.
பார்வதி மகனை கண்களில் கண்டுவிடத் தவித்திட… பரிதி பாரியின் கோபத்தை அதற்கு தடையாக முன் வைத்தான்.
“எல்லாமே அவங்க இஷ்டமா? அப்பவே ஒரு அண்ணனா நீங்க பாரியை அடிச்சோ திட்டியோ வீட்டுக்கு கூப்பிட்டு வந்திருக்கணும். அதில்லையா வீட்டின் மூத்த மகன் அப்படின்னு தம்பி பொண்டாட்டியை கூட்டிட்டுப்போயி இவளுக்கு இனி நீதான் பொறுப்புன்னு விட்டுட்டு வந்திருக்கணும்.
இதுவுமில்லையா… இப்போவாது அவங்க பக்கத்தில இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சேர்த்து வைக்க முயற்சி செய்யணும். இப்பவும்… அவங்க போக்கில் விட்டு வச்சா என்ன அர்த்தம்? அவங்கவங்க இஷ்டத்துக்கு இருக்க எதுக்கு உறவு, குடும்பம்.”
இளமதி பொங்கி விட்டாள். இதில் பாரியின் வாழ்வு மட்டுமில்லையே. அவளது தங்கையின் வாழ்வு உள்ளதே. ஒரு பெண் திருமணத்திற்கு முன் தனித்து இருந்துவிடலாம். அதே பெண் திருமணத்திற்கு பின் தனித்து இருந்துவிட்டால் அப்பெண்ணைக் குறித்து இந்த சமுதாயம் என்னென்ன பேச்சுக்களை முன் வைத்திடும். வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ அப்பெண்ணின் குணத்தைத்தானே முதலில் தாக்கி பேசிடுவர்.
அத்தகைய எண்ணம் சிறிதுமில்லாமல் இப்போதும் பொறுமையாக இருப்போம் என்ற கணவனின் மீது தங்கையின் அக்காவாக அத்தனை கோபம் இளாவிற்கு.
இத்தனை வருடங்கள் பாரியுடன் வாழ வேண்டிய தமிழே ஏதோவொரு காரணத்திற்காக அவனுக்கு இடம்கொடுத்து விலகியிருக்க இளாவால் ஒன்றும் செய்திட முடியாது தங்கையின் மணவாழ்க்கை சீர்பெற்றிட வேண்டுமே என்ற வேண்டுதலோடு பொறுமை காத்தவளுக்கு… இன்று தமிழே பாரிக்காக அவனைத்தேடி அவனை மாற்றிட வேண்டுமென வந்திருக்கும் போது அவர்கள் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ பாரியிடம் பேசி சரி செய்ய தான் முயலாதது மட்டுமில்லாமல், சென்று பேசி பார்க்கிறேன் என்கிற பார்வதியையும் தடுக்கிறானே என்கிற ஆதங்கம் கணவன் மேல்.
இளாவின் பேச்சினைக் கேட்ட பரிதி… தமிழ் சொன்னாலென்று தான் அமைதியாக இருந்திருக்கக் கூடாதோ என்று காலம் கடந்து சிந்தித்தான்.
“எனக்கும் இளா சொல்றதுதான் சரின்னு படுது பரிதி… இனியும் அவங்க இஷ்டத்துக்கு விட முடியாது. நான் போய்தான அவன்கிட்ட பேசக்கூடாது. உன் அப்பா பேசினா அவன் கேட்பான்(ந்)தான” என்ற பார்வதி, “நாளைக்கு நாம போறோம்” என்று இளாவிடம் சொல்லி நகர்ந்தார்.
****
“என்ன மேடம் ஆபீஸ் பிடிச்சிருக்கா?”
“நாட் பேட் டா.”
“பிடிக்கலையா?”
“போகப்போக பிடிச்சிடும்” என்ற தமிழ் “அந்த மேனேஜர் ஜொள்ளு விடுறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காண்டா. கடுப்பேத்துறான்” என ஜூஸினை சிப் செய்தாள்.
“உன் கை வசம் தான் பெரிய போலீஸ் இருக்கே அப்புறம் யார் உன்கிட்ட வாலாட்டினா என்ன. பிடிச்சு உள்ள வச்சிடமாட்ட?”
“கிண்டல் பன்றியாடா… காலையில அவன் கத்தினதை பார்த்ததான!” தமிழ் வெளியில் சிரித்துக்கொண்டு இருந்தாலும், உள்ளுக்குள் அவளுக்கும் வேதனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பாரியின் கோபத்தின் முன் அவனை மாற்றிவிடலாம் என்கிற அவளின் நம்பிக்கை தளர்ந்து கொண்டிருந்தது.
“என்னடா… அம் சாரி. நீ ஃபீல் பண்ணுவன்னு நினைக்கல” என்று அவளின் சோர்ந்த முகம் கண்டு அவி மன்னிப்பு கேட்டான்.
“ஹேய் விடுடா” என்று தமிழ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அவர்களின் அருகில் ஒரு பெண் வந்தாள்.
அவளை அவி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தன் தேநீரில் கவனமாக இருந்தான்.
வந்த பெண் அவியின் மீது கண்களை வைத்தபடி, தமிழுக்கு ஹாய் கூறினாள்.
அவியையும் அப்பெண்ணையும் மாற்றி மாற்றி நோட்டம் விட்டபடி… ஹாய் சொல்லிய தமிழ் அப்பெண்ணை அமருமாறு கூறினாள்.
அவியும் தமிழும் எதிரெதிர் அமர்ந்திருக்க… அவர்களுக்கு பக்கவாட்டு இருக்கையில் அவள் அமர்ந்தாள்.
“ஹாய் அம் நீபா. உங்க டீம் தான்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“ஓகே தமிழ். நான் கிளம்புறேன்” என்று அவி எழுந்துவிட்டான்.
“என்னடா” என்ற தமிழ் “எனக்கு மேனேஜர் கூட ஒரு மீட்டிங் இருக்குடா” என்று நடந்து கொண்டே சொல்லியபடி கேட்டனிலிருந்து மறைந்தான்.
“அவனுக்கு எந்த மீட்டிங்கும் இல்லை. நான் இங்க உட்கார்ந்தேன்னு தான் எழுந்து போயிட்டான்” என்ற நீபாவின் முகத்தில் சுரத்தே இல்லை.
“நீங்க வந்தீங்கன்னா? புரியல?”
நீபாவும் அவியும் ஒன்றாகத்தான் அங்கு வேலைக்கு சேர்ந்தனர். இருவரும் ஒரே டீமாகவும் இருந்திட நண்பர்களாகினர். ஆனால் நீபா அவியை காதலிக்க ஆரம்பித்திருந்தாள்.
நீபா மறைமுகமாக தன்னுடைய மனதை சொல்ல… அவி கருத்தில் கொண்டதாகக் காட்டிக்கொள்ளவேயில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த நீபா ஒருநாள் தன் காதலை கூறிட… அவி பொறுமையாக தன்மையாக அவளிடம் தனக்கு செட்டாகாது என்று சொல்லி மறுத்துவிட்டான்.
ஆனால் நீபா அவியை விடுவதாக இல்லை. காதலிப்பதாக குறுஞ்செய்தி அனுப்புவதோடு, நேரில் காணும் சமயங்களில் காதலிக்க சொல்லி அவியை வற்புறுத்தத் தொடங்கியிருந்தாள்.
சில மாதங்களில் அவியும் அவர்களது ப்ரொஜெக்ட் முடிவடைய வேறு டீமிற்கு மாறிக்கொண்டான்.
அவனின் திறமைக்கு விரைவிலேயே டீம் லீடாகவும் பதவி உயர்வு பெற்றான். இப்படி சில மாற்றங்கள் நிகழ்ந்து வருடம் மூன்றாகிய போதும், நீபா அவனை விடுவதாக இல்லை. இன்றளவும் காதலென்று அவன் பின்னால் சுற்றுகிறாள்.
அவளின் தொல்லை தாங்காது அவளது எண்ணை பிளாக் செய்ததோடு பணி சம்மந்தமாக பேசுவதையும் கூட முற்றிலுமாக நிறுத்திவிட்டான்.
“ஐ லவ் ஹிம்.”
நீபா சொல்லியது தமிழுக்கு எவ்வித அதிர்வையும் கொடுக்கவில்லை. பதிலுக்கு எதுவும் பேசவும் இல்லை.
“நீங்க அவினாஷுக்கு ரிலேட்டிவ்வா?”
“ஃபிரண்ட்.”
“ஹோ” என்ற நீபா, “நீங்க ரெண்டு பேரும் ல…”
நீபாவின் பேச்சை கை நீட்டி தடை செய்த தமிழ்…
“அம் மேரிட்” என்றிட நீபாவிடம் வெளிப்படையாகவே பெருமூச்சு எழுந்தது.
“பயந்துட்டேன். அவினாஷ் பொண்ணுங்ககிட்ட பேசியே பார்த்தது இல்லை. ஆபிசில் கூட கேர்ள்ஸ் டவுட்ன்னா அது சம்மந்தமா சொல்லித் தரதோடு சரி. ஆனால் மார்னிங் நீ வந்ததிலிருந்து, உன்னை அவ்வளவு ப்ரோடெக்ட், கேர் பன்றான். ஜாலியா சிரிச்சு பேசுறான். அதான்” என்று இழுத்தாள்.
“எனக்காக நீ அவன்கிட்ட பேசுறியா? அவன் என்னை லவ் பன்றான்னு சொன்னா மட்டும் போதும்.”
முதலில் பன்மையில் விளித்தவள் இரண்டு நிமிடத்திற்குள் ஒருமையில் நீயென்று குறிப்பிட்டதை தமிழ் கவனித்திருந்தாள்.
அதுவுமில்லாமல் பார்த்து ஒருநாள் கூட ஆகிடாத, பேசி பழகிடாத தன்னிடம் எடுத்ததும் அப்படி கேட்டது தமிழுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“பிரண்ட்ஸ்.”
தமிழின் முன் நீபா கை நீட்டிட…
“நாட் இண்ட்ரெஸ்டட்.” வேகமாக சொல்லியிருந்தாள் தமிழ்.
“வாட்…?”
“வாட்… வாட்… எனக்கு உங்களை, உங்களோட பேச்சு சுத்தமா பிடிக்கல. தென் உங்களுக்கும் எனக்கும் ஒத்தே வராது. அதோட நீங்க எனக்காக மட்டுமே என்கிட்ட பிரண்ட்ஷிப் வச்சுக்க நினைக்கல. என்கிட்ட ஃபிரண்டா இருந்தா அவிகிட்ட நெருங்கி பழகுறது ஈசிங்கிறதுக்காக மட்டுமே உங்களோட இந்த பிரண்ட்ஷிப் டிராமா. சோ, இவங்களோட இருந்தா இதில் நமக்கு யூஸ் அப்படிங்கிற எதிர்பார்ப்போடு வர உறவு உண்மையா இருக்காது. நிலைக்காது.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் அவிக்கு உங்களை பிடிக்கல. என் பிரண்டுக்கு பிடிக்காதவங்ககிட்ட பேச எனக்கும் எதுவுமில்ல” என்று அழுத்தமாகக் கூறிய தமிழ், நீபா தன்னை முறைப்பதை பொருட்படுத்தாது சென்றிருந்தாள்.
சென்றவள் மீண்டும் வந்து…
“அவனுக்கு அல்ரெடி ஆள் இருக்கு. உன்னோட லவ் டிராமாவை வேற யார்கிட்டவாவது வச்சிக்கோ. இனி உன் பார்வை என் அவி பக்கம் திரும்புச்சு… சீவிடுவேன்” என்று கழுத்தை அருப்பதைப்போல் சைகை செய்து எச்சரித்துவிட்டே அகன்றாள்.
அவியுடன் தமிழ் வருவதை கண்டதுமே… அவியின் டீமில் உள்ள மற்ற பெண்கள் நீபாவைப்பற்றி சொல்லி விட்டார்கள். அத்தோடு அவள் அவியை காதலிக்க வைத்துக்காட்டுகிறேன் என்று அவனது மறுப்பில் பழிவாங்குவதற்காகவே இன்னும் லவ்வென்று சுற்றுவதாகவும் சொல்ல… அந்த நீபா யாரென்று தெரியாத போதும் அவளுக்கு தன் கையால் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் தமிழ்.
ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அது நடக்கும் என்று தமிழ் நினைக்கவில்லை.
‘அவளும் அவ ட்ரெஸ்ஸும்.’ தன்னிருக்கைக்கு செல்லும் வரை நீபாவை முடிந்த மட்டும் தன் வாயில் போட்டு நன்றாக மென்றாள்.
“தமிழ் இதெல்லாம் படிச்சு பாரு. எதாவது டவுட் இருந்தா கேளு. டென் டேஸ் தான் ட்ரெயினிங் பீரியட். அப்புறம் எல்லாம் நீதான் செய்யணும்” என்று தமிழின் அருகில் வந்து சில பேப்பர்ஸை நீட்டி அவி சொல்ல… தமிழின் கவனம் அவனிடம் இல்லை.
“தமிழ்…”
“கிட்டவந்தா அவள் மூஞ்சில குத்து விடாம பயந்து ஓடுற. டார்ச்சர் பண்ணுறாள் தெரியுதுல ஓங்கி ஒரு அறை விட வேண்டியது தான. என்ன தைரியமிருந்தா என்கிட்டவே வந்து உன்னை கரெக்ட் பண்ணித்தர சொல்லுவாள்” என்று அவியையும் வறுத்து எடுத்துவிட்டாள்.
“அதான் எனக்காக நீ வார்த்தையால அடிச்சிட்டு வந்திருக்கியே. இவ்வளவு பெரிய பார்டிகார்டு எனக்கிருக்கும் போது நான் ஏன் ஆக்ஷன் பண்ணனும்.”
அவளின் உச்சியில் கை வைத்து ஆட்டியவன், “வேலையைப்பார்” என்று கூறிச் சென்றான்.
பழைய தமிழை மீண்டும் பார்த்த உணர்வு அவிக்கு. தமிழ் அதனை உணர்ந்திருந்தாளா அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழை மீண்டும் இப்படி இலகுவாய் பார்ப்பதற்கு அத்தனை பிடித்திருந்தது. சற்று நெகிழ்ந்தே விட்டான் என்றும் சொல்லலாம்.
“சீக்கிரம் எல்லாம் சரியாகனும்” என்று அக்கணம் அவனின் பிரண்ட் தமிழுக்காக மட்டுமே வேண்டிக்கொண்டான்.
அவ்வளவு எளிதில் அனைத்தும் சீர்பெற்றிடுமா?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
38
+1
2
+1
நட்பு பரிதி தமிழுக்கு அழகாக கிடைத்து இருக்காங்க
நன்றி அக்கா