Loading

20. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

எதுவுமே நடக்காதது போலான கார்முகில் வர்ணனின் துள்ளலான சிரிப்பும், ‘மிஸ் கேட்’ என்ற விழிப்பும், கூடவே அவன் அருகில் இருந்த தொடுப்பும் ..மதுராவை மதுரையை எரித்த கண்ணகியின் நிலைக்கு கொண்டு வந்திருக்க, உண்மையிலேயே அவளுக்கு எரிக்கும் சக்தி இருந்தால் இவ்விடத்திலேயே இருவரையும் எரித்து இருப்பாளோ? என்னவோ?

ஒரு நொடி இணைந்திருந்த இருவரின் கைகளையும் தன்னையும் மீறி வெறித்துப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் அனலாய் கொதித்தாலும் எடுத்திருந்த முடிவும் நினைவுக்கு வர, ‘கண்டுக்காத மாதிரியே இருக்கணும் மது ‘என்று பல்லைக் கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள்,

“ஐ அம் பைன் சார் கொஞ்சம் ஹெல்த் இஸ்யூசஸ்.. அதான் வர முடியல” என்று சொல்ல,

“ஓ ஐ சீ… அப்போ… இப்போ ஹெல்த் ஓகே ஆகிவிட்டு தானே..இனி லீவ் எடுக்க மாட்டீங்களே?”

“இல்ல சார் இனி என் வேல முடியற லீவ் எடுக்க மாட்டேன்..” என்றாள் உறுதிப்போல்…

“ம்ம் இனி அடிக்கடி என்னோட கண்ணு உங்கள தான் கேட் நோட் பண்ணும்… அதனால கவனமா இருக்கணும்”என்றான் இரு பொருள் பட, அவளின் கண்களையே பார்த்தவாறு…

‘இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் உன் கண்ணுல பட்டா தானே நீ என்ன நோட் பண்ணுவ?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், அவன் கேட்டதற்கு சரி என்பது போல் மட்டும் தலையை ஆட்ட,

“ம்ம் குட்..”என்றவனின் கண்களில் அவள் மீதான ரசிக்கும் பாவனை… 

வான நீல நிறத்தில்.. பார்டரில் மட்டும் வெள்ளை கற்கள் பதித்த துப்பட்டா அவளின் ஒரு பக்க தோளில் அழகாய் மடிப்பு எடுக்கப்பட்டு சுருட்டி குத்தப்பட்டிருக்க… மற்றொரு பக்கமோ ஒற்றை மடிப்பில் விடப்பட்டு அவளின் கைகளில் பாந்தமாய் சிக்கியிருந்தது… முழு வெள்ளை நிற அனார்கலி சுடிதாரில் தேவதை பெண்ணாக வந்திருக்கும் மதுரா, அவனுக்குள் புத்துணர்ச்சியை விதைத்திருக்க, அவள் மீதிருந்த கண்களை பிரித்தெடுக்க முடியாமல் அவனுக்கென்று பிரத்தியேகமாக இருந்த மின் தூக்கியை பயன்படுத்தாமல் அவளுடனேயே பயணமுற முடிவு செய்தான்.

அதற்குள் அங்கு பணிபுரியும் நபர்கள் உபயோகிக்கும் மின் தூக்கியின் கதவும் திறந்து விட, மதுரா  உள்ளே போக,

அவளுக்கு பின்னேயே இவர்களும் ஏற, கூட இன்னும் இரண்டு பணியாளர்களும் கார்முகில் வர்ணனுக்கு காலை வணக்கம் சொல்லி ஏறிக்கொண்டனர்.

‘நம்ம கூட எதுக்கு ஏறுறாங்க? இந்த லிஃப்ட் ஒர்க்கர்ஸ்க்கு மட்டும் தானே? ஒருவேளை அந்த லிப்ட் ஒர்க் ஆகலையோ?’என்ற கேள்வியை மனதிற்குள் எழுந்தாலும்,

‘கையோட கைகோர்த்து நம்ம முன்னாடி சீன் போடறான்.. இவன எதுக்கு நம்ம பார்க்கணும்.. தேவையில்லாம பிபியை ஏத்தணும்’ என்று கடுப்பாய் நினைத்த

மதுரா முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவன் பார்வையையும் சந்திக்காமல் இயல்பாக இருக்க முயன்றாள்.

இத்தனைக்கும் மின் தூக்கியில் ஏறியதும் கார்முகில் வர்ணன் இயல்பாய் ஷாலினின் கைகளை தன்னிடம் இருந்து விலக்கி  மதுரவாணியை மட்டுமே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

அதைப் பார்க்க வேண்டியவளோ, அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் தனது தளம் வந்ததும் ‘போதும்டா சாமி’ என்பது போல் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அவசர அவசரமாய் ஓடாத குறையாக இறங்கி செல்பவளைப் பார்த்த ஷாலினி  மர்மமாய் புன்னகைத்துக் கொண்டாள் என்றால், அவள் தன்னை மறுப்பதற்கு காரணம் புரியாமல், தன்னை விலகிச் செல்லும் மனையாளை ஏக்கம் சுமந்த விழிகளுடன் பார்த்திருந்தான் கார்முகில் வர்ணன்.

“என்ன மது ஓகேவா உடம்புக்கு? உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்டி”என்று தேஜு கட்டி அணைத்து ஆர்ப்பாட்டமாய் வரவேற்றதும்,

அவ்வளவு நேரம் இருந்த படபடப்பு குறைய, தானும் மெல்ல தோழியை அணைத்துக் கொண்டவள், 

“ஏன் டி நீ என்ன பாக்காமயா இருக்க? ஹாஸ்பிடல்ல வந்து பார்த்திருக்க…அண்ட் அதுபோக வீக்லி ஒன்ஸ் என்ன பாக்க வந்துட்டு தானே இருக்க? அதுக்குள்ள என்ன மிஸ் பண்றியா என்ன?” 

என்று தோழியின் அன்பில் கரைந்தாலும் செல்லமாய் கடிய …

“ம்ம் நல்லா சொல்லுவடி.. அதுவும் இதுவும் ஒண்ணா? ஒரு ஒன் ஹவர் பாத்துட்டு வர்றதுக்கும் நாள் ஃபுல்லா கூடவே இருக்கிறதுக்கும் எவ்வளவு டிஃப்ரண்ட்… அதுவும் உன்னோட அக்கா என்ன பேசவே விடல உன் கூடவே தானே இருந்தாங்க….”

“சரி சரி ரொம்ப பொங்காத டி…பாத்துக்கலாம்”

“என்ன பாத்துக்கலாம்? ஆபீஸ்ல நீ இல்லாம எவ்வளவு கடுப்பா இருந்துச்சு தெரியுமா? ஆத்திர அவசரத்துக்கு ஒரு காஷிப்ப ஷேர் பண்ண கூட ஆள் இல்லடி எனக்கு .. நான் எல்லார் கூடவும் பேசினாலும் நீ எனக்கு ஸ்பெஷல்ன்னு தெரியும் தானே? இனி லீவ் எடுக்காதடி ப்ளீஸ்ஸ்” என்ற தேஜுவின் கெஞ்சலான பேச்சு மதுராவிற்கு புரியாமல் இல்லை.. ஆனால் இன்னும் மூன்றே மாதங்களில் வேலையை விட போகிறாள்.. என்பதை எப்படி இவளிடம் சொல்லி புரிய வைக்க? என்று நினைத்தவள் அதைத் தொடர்ந்து பேச விருப்பம் இல்லாமல்…

“சரி விடுடி அதுதான் இப்ப வந்துட்டேன்ல… இனி ஜமாச்சிடலாம்”என்று சொல்லோடு மதுரா தன் இருக்கையில் அமரவும்,”நான் சொன்ன எதுக்கும் பதிலே வரலையே…”என்று கேட்டாலும் மதுரா சிரிப்பை மட்டுமே பதிலாய் அளிக்க,

“சிரிச்சே நல்லா சமாளிக்கிற டி” என்றபடி தேஜுவும் அவள் இருக்கையில் அமர்ந்தாள்.

அடுத்தடுத்த நிமிடங்களில் மதுராவுடன் பணிபுரிபவர்கள் 

 அவளின் நலனை விசாரித்தப்படி இருக்க, அனைவருக்கும் இன்முகமாகவே பதில் சொன்னாள் மதுரா.

இஷ்டம் இல்லாமல் இங்கே வந்திருந்தாலும் தோழமைகளை சந்தித்த உற்சாகம் மனமெங்கும் தொற்றிக்கொள்ள கொஞ்சம் மகிழ்ச்சியோடு இருந்தவளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக

சற்று நேரத்தில் அடுக்கடுக்காய் அவர்களது ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்டிடம் இருந்து வேலைகள் வந்து குமிய, 

மலைபோல் குவிந்த கோப்புகளின் அணிவகுப்பை மலைப்புடன் பார்த்த மதுரா,

“என்னடி ஒரே நாள்ல இவ்ளோ ஃபைல்ஸ் தராங்க… எல்லாத்தையும் ஒரே நாள்ல எப்படி முடிக்க? இது எல்லாத்தையும் முடிக்கவே ஒன் வீக் ஆகுமே” 

“கிட்டத்தட்ட ஒரு வாரமா ஆதிகாலத்துல உள்ள பழைய பைல்ஸ் எல்லாத்தையும் தூசி தட்டி சிஸ்டம்ல ஏத்துற ஒர்க் தான் போயிட்டு இருக்குடி” 

“அதுக்குன்னு இவ்வளவா? உங்களுக்கெல்லாம் கம்மியா தானே இருக்கு.. எனக்கு மட்டும் ஏன்டி இவ்ளோ குடுத்திருக்காங்க?” என்று மதுரா கேட்டுக் கொண்டிருக்க,

அதற்கு பதில் அவர்களுக்கு பின்னால் கேட்டது. 

“நீங்க அதிகமா லீவ் எடுத்து இருக்கீங்க மதுரா…உங்களோட ஒர்க் பெண்டிங் எல்லாத்தையும் யார் முடிப்பா? “

மதுரா அது யார்? என்று திரும்பிப் பார்க்க.

ஷாலினி தான் ஏளனமாய் அவளைப் பார்த்தபடி அங்கே நின்றிருந்தாள்.

“நம்ம டிபார்ட்மெண்ட் ஹெட்டோட அசிஸ்டன்ட் டி..” என்று தலை முடியை ஒதுக்குவது போல்

தேஜஸ்வினி மெதுவாய் மதுராவிற்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுக்க,

இவளா? என்று அதிர்ந்தாலும், 

“என்னால இவ்ளோ வொர்க்க ஒரே நாள்ல பண்ண முடியாது மேம் ” என்று உண்மையை சொல்லத் தயங்கவில்லை அவள். 

“சும்மா இருக்க தான் ஆபீஸ் வரீங்களா? சேலரி மட்டும் கரெக்ட் டைமுக்கு வாங்க தானே போறீங்க? அதுக்கு ஏத்த மாதிரி ஒர்க்கும் பண்ண வேண்டாமா? ” என்று நக்கலாய் கேட்டவளுக்கு,

“…..”பதில் சொல்லாமல் ஒரு நொடி அவளைப் பார்த்தவள்,

“நான் ஒன்னும் சும்மா இருக்க வரல….எனக்கு அலார்ட் பண்ண ஒர்க்க முடிச்சிடுவேன்”என்ற சொல்லோடு மதுரா பேச்சை முடித்துக் கொண்டாள்.

அவளுக்குத் தெரிந்து விட்டது ஏதோ ஒரு காரணத்துக்காக தன்னிடம் வம்பு வளர்க்க முயல்கிறாள் என்று… அதன் பிறகு அவளிடம் பேச்சை வளர்க்க முயலவில்லை மதுரா.

தேஜஸ்வினி கூட, “நம்ம ரெண்டு பேரும் வேணா…நம்ம டிபார்ட்மென்ட் ஹெட் கிட்ட பேசி பார்க்கலாமா?”என்று கேட்டதற்கு மறுத்துவிட்டவள்,

“நீ என்ன பத்தி வொர்ரி பண்ணிக்காம உன்னோட வேலைய மட்டும் பாரு தேஜு‌.. அப்புறம் என்னால உனக்கும் கெட்ட பேரு” என்று மதுரா தோழிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் அந்த ஃபைலில் இருந்த டேட்டாவை உள்வாங்கிக் கொண்டு கணக்கு டேலி செய்து சரி பார்த்து அவர்களது கம்பெனிக்குரிய டேட்டா பேஸில் விவரங்களை சேகரிப்பதிலும் தான் இருந்தது.

“ப்ச்ச்… ஆனாலும் உன்ன கஷ்டப்படுத்தறது பர்சனல் அட்டாக் மாதிரி இருக்கு மது‌‌… நம்ம ஹெட் எப்படி கத்துவாங்க …இவகிட்ட மட்டும் பொட்டி‌ பாம்பா அடங்கி இருக்காங்க…”

“சரி விடு தேஜு பார்த்துக்கலாம்”

“ப்ச்ச் நம்ம பாஸ்க்கு சொந்தம் போல.. அதான் ரொம்ப ஆட்டம் போடுது”

‘சொந்தம் இல்ல சொந்தமாக போறவங்க! தேஜு’ என்று விரக்தியாய் மனதிற்குள் நினைத்த மதுராவிற்கு …அன்றைய தினம் கார்முகில் வர்ணனின் வீட்டில் விழுந்த கிடந்த தாங்கள் எழுந்த போது …தான் பார்த்த காட்சி நினைவிற்கு வந்தது… 

இருவரும் எழும்போது வரை, என் கணவன் என்ற உரிமையில் தான் மதுரா மகிழ்ச்சியாக இருந்தாள், ஆனால்எ எழுந்தவனின் பின்னால் இருந்த ஆளுயர புகைப்படத்தில் கண்களில் காதல் சொட்ட அன்று மண்டபத்தில் பார்த்த ஷாலினி என்ற பெண்ணிற்கு மோதிரம் அணிவித்து அவளின் விரல்களில் முத்தம் கொடுப்பது போல் இருந்த புகைப்படமும்… இருவரின் நெற்றியும் ஒன்றோடு ஒன்று முட்டி கைகளை கோர்த்து இருப்பது போல் இருந்த மற்றொரு புகைப்படமும் அதற்கு கீழே இருந்த அவர்களின் நிச்சயதார்த்த தேதியும் நாளும் குறிப்பிடப்பட்டிருக்க..

அதைப் பார்த்தவளின் மனநிலை முற்றிலுமாக மாறிப்போனது தான் உண்மை…

பின்னே அவள் நினைத்தது என்னவென்றால் …அவனுக்கு நினைவில்லாத பொழுது தான் ஃபியான்சி என்ற ஒருத்தி அவனது வாழ்க்கையில் வந்திருப்பாள் என்று நினைத்துதான் அவள் அசட்டையாக இருந்தாள்.

ஆனால் அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதி… நிச்சயமாக அண்மையில் எடுக்கப்பட்டது இல்லை… இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, அதாவது கருப்பசாமி என்று பெயரிட்டு கார்முகில் வர்ணன் அவளது வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்பே, அவனுக்கும் அப்பெண்ணுக்குப் நிச்சயதார்த்தமாகி இருக்க, இவனோ, எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தன்னை திருமணம் செய்தது மட்டுமல்லாமல் கடமைக்காக உன்னை திருமணம் செய்ய வில்லை… என்று தன்னோடு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறான். 

அதுவும் அப்புகைப்படத்தில் அவனின் காதல் கண்களில் அப்பட்டமாய் தெரிய, அதற்கு பதிலாய் அப்பெண்ணின் முகத்திலும் வெட்கப் புன்னகை,

அதுவே அவளுக்கு அவன் மீதான வெறுப்பிற்கு தூபமாய் போய்விட, 

அவ்வளவு நேரம் இனிமையாய் இருந்தவள் கனலாய் மாறி அப்புகைப்படத்தை காட்டி வார்த்தைகளை வீசி இருப்பாள் தான்… ஆனால் எதுவோ ஒன்று அதைப் பற்றி அவனிடம் கேட்பதையே தடுக்க, அப்படியே கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தன்னை நம்ப வைத்து விட்டால்? தானும் அவன் மீதிருந்த அன்பில் முட்டாள் தனமாய் நம்பி விடுவோமே! என்ற எண்ணத்திலேயே… என்னென்னமோ பேசி அவனையும் குழப்பி… தானும் குழம்பி அங்கிருந்து வந்து விட்டாள்.

அதன் பிறகு எப்படியோ தேஜுவின் உதவியால் வீட்டிற்கு வந்தவள் அழுது கொண்டே ஷவரில் வெகு நேரம் நனைந்து விட்டு ஈரத்தோடையே படுக்கையில் விழுந்திருக்க, பூஞ்சைப் போன்ற உடம்பு கொண்டவளுக்கு உடனே காய்ச்சல் வந்து தொற்றிக் கொண்டது. கூடவே இலவச இணைப்பாக மூச்சுத் திணறளும்…

அதன் பிறகு தான் ஒரு வாரம் ஹாஸ்பிடல் வாசம்.. வினோதா மனம் திருந்தி வந்தது.. என்று எல்லாமே நடந்தது.

வீட்டில் இருந்த ஒரு வாரமும் சதாகாலமும் சிந்தனையில் இருந்தவள், 

இவனும் வேண்டாம் இவன் வேலையும் வேண்டாம்..என்று ஒருமனமாய் முடிவு செய்திருக்க ஆனால் அதற்கும் முடியாமல், அக்ரிமெண்ட் என்ற பெயரில் மீண்டும் வரவழைக்கப்பட்டிருந்தாள் மதுரவாணி. 

அவள் தன் சகோதரர்களிடம் நிலைமையை சொன்னால், வேலையை விட்டு விலக.. கட்ட வேண்டிய பத்து இலட்சம் ரூபாய் ஒன்றும் ஏற்பாடு செய்ய முடியாதது இல்லை ..ஆனால் அவளுக்கு தெரியும் ஏற்கனவே சொத்துக்களை இழந்திருந்தவர்களுக்கு அது பெரிய தொகை தானே… தனக்காக

முயன்று திரட்டி தருவார்கள் தான்..ஆனால் வேண்டாமே!

பழைய நிகழ்வுகளில் மூழ்கிக் கொண்டே, தனது வேலையில் கவனமாய் இருந்தவள், மதிய உணவு இடைவேளைக்கு கூட எழுந்திருக்கவில்லை. தேஜஸ்வினி எவ்வளவோ கூப்பிட்டும் வேலை இருக்கிறது என்று வர மறுத்து விட, பொறுத்து பொறுத்துப் பார்த்து.. பசி தாங்க முடியாதவளோ ‘போடி’ என்று விட்டு சாப்பிட சென்று விட்டாள்.

இன்று முடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன்

கவனம் முழுவதும் வேலையில் மட்டுமே இருந்தது மதுராவிற்கு, குற்றம் சொல்ல காரணம் தேடிக் கொண்டிருந்த ஷாலினி கூட வந்து பார்த்துவிட்டு ஒன்றும் சொல்ல முடியாமல் சென்று விட்டாள். 

மாலை அலுவலக நேரம் தாண்டியும், நிமிராமல் அவளின் தளிர் விரல்கள் கீ போர்டில் நர்த்தனமாட வேலை செய்து கொண்டிருந்தவளின் முன்னால், தூசி படியாத பளிச்சென்ற பாலிஷ் செய்யப்பட்ட கருப்பு நிற ஷூக்கள் அணிந்திருந்த கால்கள் வந்து நிற்க, அதை முதலில் கவனிக்கவில்லை அவள்.

ஆனால் வெகு நேரம் தன்னை யாரோ உற்று நோக்குவது போல் இருக்கவும், உள்ளுணர்வின் உந்துதலால் நிமிர்ந்தவள் பார்த்தது என்னவோ கைகளை கட்டிய படி அவளின் மீது மட்டுமே கண்களை வைத்திருந்த கார்முகில் வர்ணனை தான்..

ஒரு நொடி அவனின் பார்வையில் திடுக்கிட்டவள்,

“எ…எ..என்ன ப்ளா..க்…ப்ச்ச்.. கார்முகில் சார்?”என்று திணறி போய் கேட்க, 

“ம்ம் நீ என்ன பண்றன்னு பாக்க வந்தேன் கேட்…”

“நீங்க ஒன்னும் பார்க்க வேண்டாம்…நான் சின்சியரா தான் ஒர்க் பண்றேன் சார்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக..

“ஆஹான்…ஆபீஸ் நேரம் முடிஞ்சி அரை மணி நேரம் ஆகுது? இப்ப என்ன சின்சியாரிட்டி மேடம்?”என்றவனின் குரலில் நக்கல் மட்டுமே இருக்க,

” ஹான்” என்று அவன் சொல்வதை நம்பாமல் கைக்கடிகாரத்தைப் பார்க்க,

மணி ஐந்தரையை தாண்டி இருந்தது.

அவர்கள் தளத்தில் அவளைத் தவிர யாரும் இல்லை. 

அவளுக்கு துணையாக அருகில் இருந்த தேஜு கூட மாயமாய் மறைந்திருக்க, ‘இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தா திடீர்னு எங்க போனா?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் முன்னால் சொடக்கிட்டவன்,

 “உங்ககிட்ட தான் கேட்டேன் எப்ப வேலை முடியும்?”

கிட்டத்தட்ட வேலையை முடித்து விட்டால் தான்… இன்னும் இரண்டு மூன்று கோப்புகள் மட்டுமே மீதம் இருக்க, “இன்னும் 20 மினிட்ஸ்ல வேலைய முடிச்சுடுவேன் சார்..நீங்க போங்க..” என்றாள்.

” உங்களுக்கு பயமா இருந்தா.. வேலை முடியிற முடியும்.. நான் வேணா கூட இருக்கவா?”என்று கேட்டவனை வேற்றுகிரக வாசி போல் வித்தியாசமாய் பார்த்தவள், 

“நோ சார்..எப்பவும் வொர்க் பண்ற இடம் தானே இதுல என்ன பயம் இருக்கு?” என்று விட, 

“அதுக்கு இல்ல கேட் இதுக்கு முன்ன இங்க நைட் டைம் வொர்க் பண்ண பொண்ணு ஒன்னு லவ் ஃபெயிலியர் ல இதே ப்ளோர்ல சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்… அதுல இருந்து இங்க நைட் டைம் ஒர்க் பண்றவங்களுக்கு வித்யாசமான சவுண்ட்ஸ் எல்லாம் கேட்குமாம்.. அதான் நைட் டைம் இங்க யாரும் ஒர்க் பண்ண மாட்டாங்களாம்.. அதான் ஒரு சப்போர்ட் காக உன் கூட இருக்கலாம்ன்னு பார்த்தேன்”

அவன் அப்படி சொன்னதும் மதுராவின் முகத்தில் ஒரு நொடி பயம் தெரிந்தாலும் அது பொய்யோ என்பது போல் மறைந்து விட,

“ப்ச்ச்..இந்த உலகத்துல மனுஷங்களை விட ஆபத்தானவங்க யாருமே இல்ல சார்.. அதோட எனக்கு பேய் பிசாசு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல.. அதனால நீங்க போகலாம்”

“ஆர் யூ ஷியர்?” என்று மீண்டும் ஒருமுறை கேட்க,

“எஸ்ஸ் ஐ அம் ஹண்ரெட் பெர்சன்ட் ஷியர் சர்..”என்றதும், “அப்போ ஓகே..ஏதாவது எமர்ஜென்சினா க்ரவுண்ட் ப்ளோர்ல வாட்ச்மேன் இருப்பாங்க அவங்க கிட்ட கேட்டுக்கோங்க…” என்று அலட்சியமான ஒரு தோள் குலுக்களுடன் அவனும் கிளம்பி விட, செல்லும் அவனின் முதுகை வெறித்து பார்த்தவளுக்கு ‘ இதே என் எடத்துல அவனோட ஃபியான்சியா இருந்தா இப்டி விட்டுட்டு போவானா? கேட்டா ஐயா என்ன மிஸ் பண்ண கூடாதுன்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணினாராம்’ என்று அவளையும் மீறி மனதிற்குள் கடுப்பும் மனதாங்களும் வராமல் இல்லை. 

பின் நினைவு வந்தவளாக சகோதரர்கள் இருவருக்கும், இன்று தனக்கு வேலை அதிகம் என்பதால் வர தாமதம் ஆகும் … என்றும் அதனால் தானே டாக்ஸி புக் செய்து வந்து விடுவதாக சொல்லி குறுஞ்செய்தியையும், குரல் வழி செய்தியையும் அனுப்பி வைத்தவள் நிமிர,

 சுற்றிலும் அப்படி ஒரு அமைதி… கொஞ்சம் இருட்ட ஆரம்பிக்கவும், பிளாக் சொன்னது வேறு காதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்க, சுற்றுப்புறத்தை பார்க்கவே சற்று பீதியாகத்தான் இருந்தது. 

‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று கந்தனை துணைக்கு அழைத்தவள்…. அவசரமாய் எழுந்து அந்த தளத்தில் இருந்த அத்தனை விளக்குகளையும் எரிய விட்டவளுக்கு பயம் சற்றே குறைந்தது போல் இருக்க,

சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று

முனைப்புடன் அவசர அவசரமாய் மீதமிருந்த கோப்புகளையும் படித்து சரிபார்த்து டேட்டா பேஸில் அப்லோட் செய்ய, அவளது அவசரம் புரியாமல் கடைசி கோப்பில் மட்டும் சிறு கோளாறு… பாதி பக்கங்கள் மட்டுமே அதில் இருக்க, இடைப்பட்ட பகுதிகளை காணவில்லை.

அதுவும் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முந்தைய கோப்பு என்பதால், அது இதற்கு முந்தைய வருடத்தின் கோப்புகளின் பக்கங்களோடு இணைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கணித்தவளுக்கு இதை மட்டும் நாளைக்கு காலையில் விரைவாக வந்து செய்து விடலாமே என்ற எண்ணம் தான்…

ஆனாலும் ஷாலினி இன்று தன்னிடம் பேசிய முறை ஞாபகத்திற்கு வர, 

‘அந்த வெள்ள தக்காளி எப்படி எல்லாம் பேசுச்சு… என்ன ஆனாலும் சரி இதை முடிச்சுட்டு தான் போகணும் மது’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தவள், 

அத்தளத்திலேயே கோப்புகளை சேகரித்து வைத்திருக்கும் அறைக்குள் போக, அடுத்த நொடி அவ்வறையின் கதவுகள் யாராலோ மிகமெதுவாய் மூடப்பட்டது.

மதுராவின் நிலை?

தொடரும்…

இன்னும் ஐந்தாறு அத்தியாயத்துல ஸ்டோரி முடிஞ்சிடும்… நிறைய கேள்விகளுக்கான பதில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கிடைக்கும் நட்பூஸ்..🙂♥️

போன அத்தியாயத்திற்கு கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ☺️ ♥️ 

இந்த அத்தியாயத்தை பற்றிய தங்களது கருத்துக்களை பதிவிடவும். 

நன்றி!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
26
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. Super epi sis… Black thana door close pannathu…