Loading

அத்தியாயம் 10

 

இனியமும் விநாயகமும் வெளியேறிச் சென்ற அதே சமயத்தில் தான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் வைஷ்ணவி.

 

“என்னம்மா..?? அப்பாவும் இனியனும் கிளம்பி இந்த மழையில வெளிய போறாங்க.. என்ன விஷயம்??” தன் அன்னையை பார்த்துக் கேட்டாள்.

 

“பரிதியை இன்னும் காணோம்டி.. பேக்டரில இருந்து எப்பவோ கிளம்பிட்டாராம். ஆனால் இன்னும் வீடு வந்து சேரல.. அதான் என்னனு பாக்க போய் இருக்காங்க..”என்றார் மல்லிகா.

 

“அப்படியா…?? ” என்றவள் அவளின் பங்குக்கும் ஒரு முறை பரிதிக்கு அழைத்துப் பார்க்க, அழைப்புச் செல்லவில்லை என்பதை உணர்ந்து அவளும் இவர்கள் இருவருடன் சேர்ந்து கூடத்தில் அமர்ந்து கொண்டாள்.

 

இப்பொழுது, இவர்கள் சென்று இவ்வளவு நேரம் ஆகியும் எந்த வித அழைப்பும் வரவில்லையே என்ற பயத்துடனே இருந்தார் மங்களம்.

 

“அத்தை.. நீங்க எதையும் நெனச்சி பயப்படாதீங்க.. மாமாக்கும் ஒன்னும் ஆகி இருக்காது..” இவளுக்கு உள்ளூற சற்று கலவரமாக இருந்தாலும் அதனை வெளிகாட்டாமல் மங்களத்திற்கு ஆறுதல் வார்த்தைகளை கூறினாள்.

 

“அவன் லேட் ஆச்சுன்னா எப்பவும் போன் பண்ணி சொல்லுவான் வைஷு மா.. இப்போ அவன் போனும் போகல. அவன்கிட்ட இருந்தும் எந்த வித தகவலும் வரல. போதாதுக்கு இவனுக ரெண்டு பேரும் கிளம்பி போய் எவ்ளோ நேரம் ஆச்சு. அவனுங்ககிட்ட இருந்தும் எந்த காலும் வரல..” என்று புலம்பிக் கொண்டிருந்த சமயத்தில் இனியனிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“அவனுக்கு 100 ஆயுசு. அவனைப் பத்தி பேசும் போது கரெக்ட்டா கால் பண்ணிட்டான். எடுத்து என்னனு கேளுங்க அத்தை..” என்றாள் வைஷ்ணவி.

 

அவரும் அவனது அழைப்பை ஏற்று, காதில் வைத்தவர், எடுத்ததும் அவனுக்கு இரண்டு வசவுகளை முதலில் தந்து விட்ட பிறகே பரிதியை பற்றிக் கேட்டார்.

 

“அதைப் பத்தி சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க திட்டிகிட்டு இருக்கீங்க..” என்றான் அவன் அந்தப் பக்கம்..

 

“டென்ஷன் பண்ணாம விஷயத்தை சொல்லு..” பொறுக்க முடியாமல், அவர் கேட்க,

 

“அம்மா.. அது.. அண்ணாவுக்கு கார்ல வரும் போது ஒரு சின்ன ஆக்சிடண்ட் ஆகிருச்சு.” என்று முழுதாக சொல்லி முடிக்கும் முன்பே..

 

“அய்யயோ.. என்ன டா சொல்ற.. எப்படி இருக்கான் என் புள்ள. அவனுக்கு என்ன ஆச்சு.. ” என்று பதட்டப்பட ஆரம்பித்து விட்டார்

 

“அம்மா.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. அண்ணாவுக்கு ஒன்னும் இல்லை. நீங்க ரொம்ப பதட்டப்பட்டா உங்க உடம்புக்கு நல்லது இல்லை. அவன் நல்லாத்தான் இருக்கான். அப்புறம் உங்களுக்கு ஏதாவது ஆகிருச்சுனா, அவன் என்னை சும்மா விட மாட்டான். உங்க ரெண்டு பேருக்கிடையில நான் தான் மாட்டிட்டு முழிக்கணும்.. ” அவன் நொந்தபடி பேச,

 

“பரிதி பக்கத்துல இருந்தான்னா அவன்கிட்ட போனைக் கொடு..” அவனிடம் பேசி விட வேண்டும் என்ற ஆவலில் இனியனிடம் கூறினார்.

 

” அவனுக்கு டாக்டர் ஸ்ட்ரிட்சிங் போட்டுட்டு இருக்காங்கம்மா. இப்போ பேச முடியாது. நீங்க இங்க வாங்க.. போனை வைஷு கிட்ட கொடுங்க.. ” என்றான் அவன்.

 

அருகில் இருந்த வைஷ்ணவியிடம் அலைபேசியை மங்களம் கொடுக்க, அவளும் காதில் வைத்து,” ஹலோ.. இனியா.. ” என்று ஆரம்பிக்க, ” ஹே.. வைஷு.. அண்ணாக்கு சின்னதா ஒரு ஆக்சிடண்ட் ஆகிருச்சு. நீ ரெண்டு பேரையும் அழைச்சிட்டு நான் சொல்ற ஹாஸ்பிடல் வா.. ” என்று சொல்லி முடித்ததும்,

 

“என்னது ஆக்சிடண்ட்டா… என்ன சொல்ற..” என்று அவள் பயந்து போய் கேட்க, “அடியேய்.. தொண தொணனு கேக்காம அவங்களை கூப்பிட்டுக்கிட்டு வந்து சேருடி.. ஹான் அப்புறம் அண்ணாக்கு தேவையான திங்ஸ் எடுத்துட்டு வாங்க..” என்று மருத்துவமனையின் பெயரைக் கூறிவிட்டு அலைபேசியை வைத்து விட்டான்.

 

இவர்களிடம் இப்பொழுது இருக்கும் நிலைமையைக் கூறினால் அவர்கள் மேலும் பதட்டப்படக் கூடும். இங்கே வந்து பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் சின்னதாக ஒரு விபத்து என்று மட்டும் முடித்துக் கொண்டான். 

 

அதே நேரத்தில், விநாயகம் எ. டி. எம் சென்று அவளுக்கு பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, அவள் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டு அங்கே செல்ல ஆட்டோவும் பிடித்துக் கொடுத்து விட்டு மீண்டும் முதல் தளத்திற்கு சென்றார்.

 

விநாயகம் வருவதைப் பார்த்த இனியன்,”எடுத்துக் கொடுத்துட்டிங்களா மாமா.. ” என்றுக் கேட்க,

 

“ஆமா டா.. அப்டியே ஆட்டோ பிடிச்சி அனுப்பியும் வச்சிட்டேன்.. இந்தா டா உன் கார்டு..” தன் கையில் இருந்த அவனது எ. டி. எம் கார்டை அவனிடம் கொடுத்தார்.

 

அவனும் அதை வாங்கி மீண்டும் தன் பர்ஸ்க்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

 

பரிதி உடமைகள் இருக்கும் பையை திறந்துப் பார்க்க, அவனது ரத்தக்கரை படிந்த சட்டை மற்றும் பேண்ட் இருந்தன..

 

அவனது அலைபேசியை எடுத்துப் பார்க்க, அது உயிரை விட்டு இருந்தது புரிந்தது.

 

மேலும் ஒரு சிறிய கவர் இருக்க, அது என்னவென்று புரியாமல் எடுத்துப் பார்க்க, அவனுடைய உடைந்து போன வாட்ச், தங்க நகைகள் இருந்தன.

 

“ஓ.. மிஸ் ஆகிறக் கூடாதுனு இதை எல்லாம் பத்திரமா இன்னோரு கவர்ல போட்டு இருக்காங்க போல. குட் ..” என்றவன், அவனது அலைபேசி, பர்ஸ் மற்றும் அவன் அணிந்து இருந்த தங்க நகைகளை மட்டும் அவன் எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டு, ” இந்த ட்ரெஸ் என்ன மாமா பண்றது. ரொம்ப ரத்தக் கரையா இருக்கு. ” என்றான் தன் மாமனிடம்.

 

“அதை எங்கயாவது ஆத்துல இல்லை குளத்துல வீசிறலாம் டா.. இனி அது வேஸ்ட். ” என்றார் அவர்.

 

“ம்ம்ம்.” என்றவன், ” ஹான். அப்புறம் மாமா.. நான் வீட்டுக்குச் சொல்லிட்டேன். அண்ணாவுக்கு சின்னதா அடி பட்டு இருக்குனு தான் சொல்லி இருக்கேன். வைஷுவை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன். வந்த பிறகு நம்ம சொல்லிக்கலாம் ” என்றான் அவன்.

 

” நீயே சொல்லிட்டியா.. நான் எப்படி சொல்றதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். நீ மாத்தி சொன்னதும் சரி தான். இல்லனா அக்காக்கு தேவை இல்லாம பிரஷர் கூடி அவங்க உடம்பு ஸ்பாயில் ஆகிடும்.. ” என்றார் தன் அக்காவை பற்றி தெரிந்து கொண்டு.

 

சிறிது நேரம் அறையின் முன்னாள் இருந்த சேரில் அமர்ந்து இருக்க, இனியனுக்கு அலுவலகம் தொடர்பாக அழைப்பு வந்ததில் அவன் எழுந்து பேச சென்று விட்டான்.

 

விநாயகம் சற்று நேரம் கண் அயர்ந்தார்.

 

அதே நேரத்தில், சஞ்சயிற்கு காளி அழைத்து தகவலைக் கூறி விட்டான்.

 

ஆனாலும் பரிதியின் இறப்புப் பற்றி எந்த வித தகவலும் இது வரை வந்து சேரவில்லையே என்று அவன் சந்தேகத்திலே இருந்தான்.

 

மீண்டும் காளிக்கு அழைத்து, “டேய்.. காளி.. அந்த பரிதி செத்து போன தகவல் இன்னும் வந்து சேரலயே .. நீங்க அவனை தான் தூக்குனீங்களா.. இல்லை வேற ஆளா..” சற்று குரல் உயர்த்தி அவனிடம் மிரட்டலாக கேட்டான் சஞ்சய்.

 

“சார்.. நீங்க சொன்ன ஆளு தான். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம் உங்களுக்கு. ” என்றான் இந்த பக்கம் காளி.

 

“சரி வை..” என்றவாறு கடுப்புடன் கூறிவிட்டு வைத்தான்.

 

“அவனைத் தான் லாரி வச்சி அடிச்சி இருக்கானுங்கன்னா, எப்படியும் நியூஸ் வராமலா போகும்.  கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்..அப்போ பார்த்துக்கலாம்.” என்று நக்கலாக சிரித்துக் கொண்டான்.

 

ஆட்டோவில்  புறப்பட்ட நிரஞ்சனாவும் விக்ரமும், விக்ரமிற்கு பரிசோதனைக்கு செல்லும் கண் மருத்துவமனைக்கு சென்றனர்.

 

இரவு வெகு நேரம் ஆகி விட்டதால், மருத்துவர் என்ன கூறுவாரோ என்ற பயத்துடனே சென்றாள்.

 

மருத்துவமனையை அடைந்ததும், அவர்கள் இறங்கி வரவேற்பு பெண்மணியிடம் விவரத்தைக் கூற, அவளோ “டாக்டர் கிளம்பிட்டாங்க. பாக்க முடியாதே..” என்றாள்.

 

“சர்ஜ்ரிக்கு இன்னைக்கு வந்து அட்மிட் ஆக சொல்லி இருந்தாரு. எங்கனால சரியான நேரத்துல வர முடியல மேடம். வேற ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டோம். அதான்.” தான் வர முடியாத சூழ்நிலையை விளக்கிக் கொண்டிருந்தாள்.

 

“ஓ.. இருங்க. நான் அந்த டிபார்ட்மென்ட் சிஸ்டர் கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்ற வரவேற்பு பெண்மணி, ஆப்தமாலஜிசிட் பிரிவுக்கு அழைத்து அங்கு இருக்கும் செவிலியரிடம் தொடர்பு கொண்டு நிரஞ்சனா மற்றும் விக்ரமை பற்றிக் கூறினாள்.

 

“அவங்களுக்கு அட்மிசன் போடுங்க. நாளைக்கு டாக்டர் வந்து செக் பண்ணிக்குவாங்க..” என்றாள் அந்த செவிலிப் பெண்.

 

“ஓகே சிஸ்டர்..” என்று அழைப்பை துண்டித்து விட்டு, இப்பொழுது நிரஞ்சனாவைப் பார்த்த வரவேற்பு பெண், “உங்களுக்கு அட்மிஷன் போட சொல்லிருக்காங்க..” என்றவள், அதற்கான ஃபார்ம்மை தயார் செய்து அவளிடம் கொடுத்து, முன் பணமும் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதையும் கொடுத்தாள்.

 

அதனை பெற்றுக் கொண்டு, கண் சிகிச்சை பிரிவிற்கு சென்று அங்கு இருக்கும் செவிலியரிடம் அட்மிஷன் ஃபார்ம் மை காட்ட, அவளும் அதனை ஒரு முறை சரிப் பார்த்து விட்டு அவர்களுக்கான அறையைக் காட்டி விட்டு அவளுடைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 

நிரஞ்சனாவும், விக்ரமை அழைத்துச் சென்று  கட்டிலில் அமர வைத்தவள், ” அப்பாடா.. ஒரு வழியா வந்தாச்சுடா.. எப்படியும் நாளைக்கு டாக்டர் வந்து செக் பண்ணிட்டு ஆபரேஷன் பண்ணிருவாங்க. நீ பதட்டப்படாம ரிலாக்ஸா இரு. ஓகே வா.. ” என்று தன் தம்பிக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருந்தாள்.

 

” ம்ம்ம். சரிக்கா.. ” என்றவன், ” அக்கா.. பசிக்கிது.. மத்தியானம் சாப்பிட்டது.. அதுக்கு அப்புறம் அங்குட்டு இங்குட்டு அலைச்சல் தான். பசி எடுக்க ஆரம்பிச்சிருச்சி க்கா.. ” என்றான் விக்ரம்.

 

“அச்சோ.. நான் இதை மறந்தே போய்ட்டேன் டா. சாரி டா தம்பி. இரு ஏதாவது போய் வாங்கிட்டு வரேன். அது வரைக்கும் நீ தனியா இருந்துப்பல ..” என்று கேட்டாள்.

 

“இருந்துப்பேன் க்கா. ” என்றான்

 

“ம்ம். சரி நான் வெளிய இருக்குற சிஸ்டர் கிட்ட சொல்லிட்டுப் போறேன். சீக்கிரம் வந்துருவேன். பத்திரமா இரு..” என்று தம்பியிடம் கூறி விட்டு, கதவை லேசாகச் சாற்றி வைத்தவள், வெளியே இருந்த செவிலியரிடமும் கூறி விட்டு உணவு வாங்கச் சென்றாள்.

 

 

நித்தமும் வருவாள்… 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்