Loading

அத்தியாயம் 16

புவித்திற்கு காய்ச்சல் முழுதாக விட்டிருந்தது.

அவன் எழும் முன்னதாகவே எழுந்திருந்த அகனிகா, மெத்தைக்கு பக்கவாட்டில் இருக்கும் நீள்விருக்கையில் அமர்ந்து, முன்னிருக்கும் டீபாயின் மீதிருந்த புவித்தின் மடிக்கணினியை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

நேரத்தைப் பார்த்தான். அவள் காவல் நிலையம் செல்லும் நேரத்தைத் தாண்டியிருந்தது.

“ஸ்டேஷன் போகலையா?” மெத்தையை விட்டு இறங்காது கேட்டிருந்தான்.

“இனி எப்பவும் போக வேணாம்” என்றாள். அவனை பாராது.

“ஏன்?” புவித்தின் நெற்றி சுருங்கியது.

ஒரு நொடி புவித்தின் முகம் பார்த்துவிட்டு மீண்டும் மடிக்கணினியில் பார்வையை பதித்திருந்தாள்.

“கேட்டதுக்கு பதில் சொல்லு கனி” என்ற புவித் எழுந்து அவளின் அருகில் வர,

“பேசலாம்… ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க” என்று மடிக்கணினியை மூடி வைத்தாள்.

அவளிடம் எப்போதும் இப்படியொரு தோரணையை புவித் கண்டதில்லை.

ஆராய்வாக அவளை பார்த்தவாறு குளியலறைக்குள் புகுந்தவன், சிறிது நேரத்தில் வெளியில் வந்தான்.

அவனுக்காக காத்திருந்து… கண்கள் மூடி அமர்ந்தவள், தனக்கு எதிரே இருக்கும் இருக்கையில் புவித் அமரும் அரவம் உணர்ந்து கண்கள் திறந்தாள்.

“ஸ்டேஷன் போகல?” புவித் மீண்டும் வினவினான்.

தன்னுடைய அலைபேசியை எடுத்தவள் ஒரு செய்தியை ஓடவிட்டு அவன் முன் வைத்தாள்.

ஒருவாரத்திற்கு முன்பு ரங்கராஜனுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட செய்தி திரை நிறைத்தது.

மெல்ல இதழ் விரித்த புவித், கால் மேல் காலிட்டு, இருக்கையில் கை ஊன்றி, விரலினால் முகம் தாங்கி தோரணையாக அமர்ந்தான்.

“எதுக்குன்னு கேட்கமாட்டேன். ஆனால் ஏன்?” என்றாள்.

புவித்திடத்தில் மென் புன்னகை மட்டுமே. அதன் தடத்தின் ஒளி கண்களின் வழி சிதற, அவளுள் குளிர் பரவியது.

“பக்கா பிளான்.”

“எஸ்…” என்று தோள் குலுக்கிய புவித்,

“சரி போவோமா?” எனக் கேட்டான்.

“எங்க?” அகனிகா புரியாது கேட்டாள்.

“நீ என்னை அரெஸ்ட் பண்ணா எங்க போகணுமோ அங்கதான்” என்றான். அத்தனை எளிதாக.

“என்னால உங்களை அரெஸ்ட் பண்ண முடியும் நினைக்கிறீங்களா?” எனக் கேட்ட அகனிகா, “வரிசையா கொலையும் பண்ணிட்டு, அதோடவே எனக்கு ஆதாரமும் வெளிக்காட்டிட்டு இருந்திருக்கீங்க. உங்களுக்கு மத்தவங்ககெல்லாம் உடந்தை இல்லையா?” என்றாள்.

“நான் எனக்குத் தெரியனும்னு எதுவும் பண்ணல. நீயா உன் போலீஸ் மூளையை வச்சு கண்டுபிடிச்சதை எல்லாம் என் கிரெடிட்டில் சேர்க்காத” என்றான்.

“அப்படியா?” என்ற அக்னிகா, “அப்போ நம்ம கம்பெனி பேக்கிங் பாக்ஸ், லோகோ, நீங்க நான் பார்க்கணும் அப்படிங்கிறதுக்காவே புதுசா டிசைன் பண்ணும் வாட்ச் மெட்டீரியல்ஸ் எல்லாம் நான் பார்க்க அப்படியே அங்கங்க நம்ம ரூமில் போட்டு வச்சது எல்லாம் தற்செயலா நடந்தது சொல்றீங்களா?” என அழுத்தமாக வினவினாள்.

“மே பீ” என்ற புவித், “டார்க்கெட் அச்சீவ் பண்ணியாச்சு. சோ தண்டனை அனுபவிக்கணுமே” என்றான்.

“நான் உங்ககிட்ட இதை எதிர்ப்பார்க்கல” என்றாள். சட்டென்று அடைத்த தொண்டையை செருமி சரிசெய்தாள்.

“பாருடா காக்கி மேடமுக்கு என்னை நினைச்சு வருத்தமெல்லாம் வருதுபோல” என்று கேலி செய்தவனின் பற்கள் வரிசைக்கட்டி மின்னியது.

“எப்படி இப்படி ஈசியா இருக்க முடியுது? குடும்பத்தை யோசிக்கவே இல்லையா?” அகனிகாவிடம் பெரும் ஆதங்கம். அதிர்ந்துக்கூட பேசிட யோசிப்பவன் வரிசையாக இத்தனை கொலைகள் செய்திருக்கின்றான் என்பதில்.

“உன்னை யோசிச்சேன்…”

அவனது பதிலில் அவளுக்கு இதயம் நின்று துடித்தது.

“மாமா!” அவளின் நெஞ்ச விம்மலை அவளது நடுங்கும் உதடுகள் காட்டிக்கொடுத்தது.

“உன்னைத் தடுக்க எனக்கு வேற வழித் தெரியல” என்ற புவித், “எனக்கும் என் வலியை குறைக்கணுமே! எவ்வளவு நாள் தான் மூவ் ஆன் ஆன மாதிரி நடிக்கிறது. இப்போ நம்ம பேமிலியே அவ்ளோ நிம்மதியில் இருக்கு” என்றான். புவித்தின் முகத்தில் எதையோ வென்ற திருப்தி.

“நான் பழிவாங்கணும் நினைச்சேன் தான். ஆனா இப்படி கொலை செய்து இல்லை. சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்கனும் நினைச்சேன். அந்த ரங்கராஜனோட உண்மை தெரிந்திருந்தா, சட்டமே அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்திருக்கும்” என்றான்.

“உன் சட்டம் தானே” என்று சத்தமிட்டு சிரித்த புவித், “நல்லா கொடுக்கும் தண்டனை… அப்போ ஏன் அவள் விஷயத்தில் கொடுக்கல. உன் சட்டம் அந்த நேரம் தூங்கிடுச்சா?” என்றவனின் கண்கள் தீ கங்குகளாய் ஒளிர்ந்தன.

வாழ்விலே முதல்முறை புவித்தின் கோப முகம் காண்கிறாள். தானாக உள்ளத்தில் திடுக்கிடல்.

“என்னை சமாளிக்க சட்டத்தை காரணம் காட்டாத கனி. உன் பிளான் என்னன்னு நல்லாவேத் தெரியும். ரங்கராஜனை பல வருஷமா நீ தேடிட்டு இருந்தது சட்டத்துக்கு முன்ன நிறுத்த இல்லை அவனை சாவுக்கு முன்ன நிறுத்தன்னு நல்லாத் தெரியும்” என்றான்.

“ஆரம்பத்தில் அவனை என் கையால் கொலை பண்ணனும் எண்ணமிருந்தது உண்மை தான். அவனை சாதாரணமா தேட முடியாதுன்னு தான் போலீஸ் ஆனேன். ஆனா போலீஸ் ஆன அப்புறம், சட்டத்துக்கு முன்ன அவனுக்கான தண்டனை வாங்கித்தரனும்ன்னு நானே முடிவு பண்ணிட்டேன். அவனுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டி, அவனை கூண்டில் நிக்க வைக்கணும் நினைச்சேன். நடுவில் நீங்க இப்படி பண்ணுவீங்க எதிர்பார்க்கல.”

“சிரிப்பு காட்டுற கனி…” என்ற புவித், “நல்லா இழு இழுன்னு இழுத்து சாகுற வரை ஆயுள் தண்டனைங்கிற பேருல சொகுசா ஜெயிலுக்குள்ள அவனை வச்சிருக்கும் உன் சட்டம்” என்றான்.

“அதுக்கு இது தீர்வு இல்லையே மாமா” என்றவள், “இப்போ நீ கொலைகாரனா நிக்கிறியே” என்றாள்.

“சோ வாட்?” என்று அறை அதிர கத்தியவன், “இந்த கையில அந்த ரத்தக்கறை இன்னும் அப்படியே இருக்கு கனி. அந்தநாள் நினைவு உன்னால மறக்க முடிஞ்சுதா?” என்றவனிடம் அத்தனை ஆக்ரோஷம்.

“புதுசா தெரியுற மாமா” என்றவள், “ரங்கராஜன் தான் டார்கெட்… ஆனா மத்த கொலைகளெல்லாம் எதுக்கு?” எனக் கேட்டாள்.

“ஒரு கொலை பண்ணாலும் ஒன்பது கொலைகள் பண்ணாலும் ஒரே தண்டனை தான கனி… சோ கண்ணில் தப்புன்னு பட்ட அத்தனை பேரையும் கொன்னேன். சிம்பிள். அவனுங்கெல்லாம் இருந்து என்ன யூஸ்” என்று கண்கள் சிமிட்டிய புவித்தின் முகம் இதுவரை அவள் கண்டிராதது. குழந்தை முகத்துக்குள் இவ்வளவு வெறி உணர்வா என்றிருந்தது அவளுக்கு.

“அப்போ நீங்க டீச்சிங் சூஸ் பண்ண இதுதான் காரணமா?”

“எஸ்… ரங்கராஜனை கண்டுபிடிக்க வேற ஆப்ஷன் என்கிட்ட இல்லை. சோ, நான் வேலை பார்க்கும் காலேஜில் அவன் ஒன் ஆஃப் தி பார்ட்டனர் தெரிஞ்சுது… உள்ள போக எனக்கிருந்த ஒரே ஆப்ஷன் இதுதான்” என்றான்.

“ஏற்கனவே ஒரு இழப்பு. இப்போ உங்களையும் இழந்துட்டு வேதனைப்படனுமா?” என்றவளை எதிர்பாராதவிதமாக இழுத்து தனக்குள் அடைக்காத்துக் கொண்ட புவித்,

“உன்னை காலம் முழுக்க இப்படியே பார்க்கணும் சொல்றியா?” என்றான்.

“தப்பு பண்ணது நான் அப்படிங்கிறப்போ இந்த வலி எனக்கு சரியானதுதான” என்று அகனிகா கேட்டு முடிக்கும் முன்பு அவளை வேகமா தள்ளி நிறுத்திய புவித், “எல்லாரும் சொல்றதால அன்னைக்கு நடந்ததுக்கு காரணம் நீயாகிட முடியாது” என்றான். அகனிகாவின் இருபக்க புஜத்தையும் பற்றி இறுக்கியவனாக.

“இப்போ என்ன எனக்காகன்னு சொல்லி… நீங்க கொலை பண்ணதை நியாயப்படுத்த பாக்குறீங்களா?” எனக் கேட்டாள். அவனுக்கு வலிக்குமெனத் தெரிந்தே கேட்டாள்.

“நீ எனக்காகன்னு யோசிக்கிறியோ இல்லையோ… நான் உனக்காகத்தான் எப்பவும் யோசிக்கிறேன் சொல்றேன். அவ்ளோதான். என் பொண்டாட்டி நிம்மதியா இருக்கணும் நினைச்சேன். அந்த நிம்மதி அவன் செத்தாதான் கிடைக்கும் தெரிஞ்சது… சோ, கொலை பண்ணேன். அவனைத் தேடும்போது தான் தெரிஞ்சது அவனை மாதிரி பலபேர் இருக்காங்கன்னு. அதனால என்கிட்ட சிக்கின அத்தனைப்பேரையும் கொன்னேன். எனக்குமே இதுல ஒரு ஆத்ம திருப்தி கிடைச்சது. அவளுக்காக நியாயம் கிடைச்சது தோணுச்சு. ஏன் இவனுங்கெல்லாம் சாகுறாங்க காரணம் தெரிஞ்சா, இவனுங்க மாதிரி இருக்க எல்லாருக்கும் பயம் வரும் தோணுச்சு… அத்தோட எனக்கு நான் நினைச்ச மாதிரி நீ என்னை ஸ்மெல் பண்ணிட்டன்னு தெரிஞ்சது, சோ அவனுங்க தப்புக்கான ஆதாரம் எல்லாம் உனக்கு அனுப்பி வச்சேன். வெளியுலகுக்கு அவங்க பண்ண தப்பை தெரிய வச்சேன்” என்று பேசிய புவித்திடம் ஒவ்வொரு வார்த்தையும் எழுந்த நிதானத்துடன் வெளிவந்தது.

புவித்திடம் இதனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தடயமாகக் கிடைத்த அட்டை பெட்டியை வைத்து தனது வீட்டில் தான் யாரோ ஒருவரென்பது அவளின் யூகமாக இருந்தபோதும், முதல்கட்ட சந்தேகத்தில் புவித் இதனை செய்திருப்பானென்று சற்றும் எண்ணவில்லை.

பேசும் வார்த்தையிலும் மென்மையை காட்டுபவன் கொலைகள் எப்படி செய்வான் என்பது அவளின் எண்ணமாக இருக்க, புவித்தை சந்தேக வட்டத்திலிருந்து தள்ளி வைத்திருந்தாள்.

தான் நினைத்ததுபோல் அவளின் சந்தேகம் தனது பக்கம் விழவில்லை என்பதை அறிந்த புவித், விதார்த்திடம் வீட்டில் வைத்தே கைக்கடிகாரத்திற்கான பணியை செய்கிறேனென்று தெரிவித்து, அவளின் கண்பட செய்தான். மிதுன் பார்வையிட்ட கொலையில் கைக்கடிகாரத்தைப் பற்றிய பேச்சினை பெஞ்சமின் மூலம் ஆரம்பித்து வைத்தான். அன்று மருத்துவமனையில் அவள் பார்க்க வேண்டுமென்றே அவளது கையில் தன்னுடைய அலைபேசி இருந்திட, பெஞ்சமின் அலைபேசியிலிருந்து மிதுனுக்கு அழைத்து, “ரங்கராஜன் கிடைச்சாச்சு” என தகவல் அனுப்பக்கூறினான்.

அவள் பார்க்கவில்லை, நினைத்து நடக்கவில்லையென நினைத்து தான் மிதுனுக்கு அழைத்து, “கிரேட் எஸ்கேப்” எனும் விதமாக பேசியிருந்தான். ஆனால் அவளின் சந்தேகம் தன்மீது விழுந்துவிட்டது என்பதை அவளின் பார்வை தன்னை துளைக்க ஆரம்பித்ததில் கண்டுகொண்டான்.

ரங்கராஜன் தான் முடிவு என்பதால் அவனை கொன்றதும் தானாக சரணடைய தீர்மானித்திருந்தான். தற்போது நினைத்தது அனைத்தும் நடந்திருக்க, கைதாக தன்னுடைய மனைவியின் முன்பு தன்னை முழுதாக வெளிப்படுத்திக் கொண்டவனாக நின்றிருக்கிறான்.

“ரங்கராஜனுக்கு விருது அறிவிக்காம இருந்திருந்தா அவனை கண்டுபிடிச்சிருக்க மாட்டிங்க தான? உங்களோட கொலைகளும் கூடிட்டே இருந்திருக்கும்ல?” எனக் கேட்டாள்.

“அவனை டூ மன்த்ஸ் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டேன். பட் ரீச் பண்றது கஷ்டமா இருந்தது. அப்போதான் அவனுக்கு விருது கிடைச்சிருக்கிறதா அறிவிப்பு வந்தது. விருது வாங்குன நேரம் கொன்னா நியூஸ் ஹைப் ஆகுமே! சோ வெயிட் பண்ணி அன்னைக்கு நைட் அவன் கதை முடிய பிளான் பண்ணேன்” என்றான்.

“ஓ…” என்றவள், “எல்லாம் நீங்க மட்டுமே பண்ண மாதிரி சொல்றீங்க? மாமா, பெஞ்சமின் அண்ணா, மிதுன், நிரூப் எல்லாரும் கூட்டுதான? அவங்களை காப்பாத்த பிளானா?” எனக் கேட்டாள்.

“அவங்க எல்லாரையும் என்னோட பிளானுக்கு நான் யூஸ் பண்ணிக்கிட்டேன். அவ்ளோதான். இதுல சின்ன சின்ன ஐடியாவும் என்னோடது மட்டும் தான்” என்றான்.

“உங்களோட நண்பர்கள் அப்படின்னு நீங்க பண்ற தப்புக்கும் துணையா நின்னு நிரூபிச்சிருக்காங்க ரைட்?” என்றாள்.

“அஃப்கோர்ஸ்” என்ற புவித், “ரங்கராஜன் செய்த தப்புக்கு ஆதாரம் எல்லாம் இதிலிருக்கு” என்று ஒரு கோப்பினை எடுத்து அகனிகாவின் கையில் வைத்தான்.

கோப்பின் அட்டையை திறந்தவளின் விரல்கள் முதல் பக்கத்திலிருந்த புகைப்படத்தைக் கண்டதும் நடுக்கம் கொண்டது.

“நீனா…” ஓசையின்றி உதடுகள் உச்சரிக்க… அவளின் கண்கள் திரண்ட நீர் ஒற்றைத் துளியாக புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் விழுந்து தெறித்தது.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்