Loading

அத்தியாயம் 17

 

ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார் கண்ணகி.

 

மணி பத்தை தாண்டிவிட்டது வரவேற்பு முடிந்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்கு அழைத்து வர.

 

“நல்லவேளை மண்டபத்துலயே சாப்பிட்டாச்சு. இப்ப போய் கட்டையை சாய்க்கலைனா காலைல நடமாட முடியாது. இதுல நாலஞ்சு பேர் இன்னைக்கு வர முடியலன்னு சொல்லி காலைல வேற வருவாங்க. அவங்களையும் பார்க்கணுமே!” என சொல்லிக் கொண்டே கொண்டு வந்தவற்றை எடுத்து வைத்தவர்,

 

“நிரஞ்சா! மாவு அரைக்கல. நாளைக்கு காலைலயே எனக்கு மாவு மட்டும் வாங்கி தந்துட்டா நான் இட்லியும் சாம்பாரும் வச்சு வர்ற ஆளுங்களை பார்த்துப்பேன். நீ பாட்டுக்கு போனை சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிடாத!” என இளைய மகனிடம் கூறினார் கண்ணகி.

 

“அதை காலைல பார்ப்போம் ம்மா!” என்று கொட்டாவியை கைக்குள் மறைத்து தன் அறைக்கு சென்றுவிட்டான் அவன். பரமேஸ்வரன் இன்னும் வரவில்லை. 

 

“இவனை நம்பி நான் தூங்கவா?” எனறு முறைத்த கண்ணகி, சோஃபாவில் கைகாலை நீட்டிக் கொண்டு அமர்ந்த கார்த்திகைசெல்வனை,

 

“நீ தூங்க போகாம என்ன?” என கேட்க, தேவதர்ஷினி சமையல் அறையில் இருந்து தண்ணீரை குடித்துவிட்டு வந்தாள்.

 

“போனும் ம்மா! தலைவலிக்குது. ஒரு காபி தாங்க!” என அன்னையிடம் அவன் கேட்க,

 

“நேரம் கெட்ட நேரத்துல தான் காபி கேட்பியா டா நீ? கண்ணெல்லாம் எரியுது!” என்றவர் மகன் கேட்கவும் சரி என சமையலறை உள்ளே செல்ல போக,

 

“அத்தை! காபி தானே? நான் போட்டு கொடுக்குறேன். நீங்க போய் தூங்குங்க!” என்றாள் தேவா.

 

“பரவால்ல டா. நீயும் தான் எவ்வளவு நேரம் நின்ன?” என்றவரை பேசி தூங்க அனுப்பி வைத்தவள்,

 

“ஒரு அஞ்சு நிமிஷம் த்தான்!” என கணவனிடம் சொல்லிவிட்டு சமையலறை சென்று பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றினாள்.

 

“சாரி! தூங்குற நேரம் வேலை வச்சுட்டேனா?” என கார்த்திகைசெல்வன் உள்ளே வர,

 

“அதெல்லாம் எதுவுமில்லை த்தான். காபி தானே?” என்றாள் திரும்பியும் பாராமல்.

 

அங்கேயே அவன் நிற்பதை கண்டவள், “நீங்க ரூம்க்கு வேனா போங்களேன். நான் கொண்டு வர்றேன்!” என்றாள்.

 

“நிறைய பால் வச்சிருக்க. கொஞ்சமா ஊத்திருக்கலாம்ல?” என அவள் கேள்வியை விட்டு இவன் ஒன்றை கேட்க,

 

“எனக்கும் சேர்த்து வச்சேன் த்தான்!” என்றாள்.

 

“ஏன்? உனக்கும் தலைவலிக்குதா என்ன?“ என்றவன் அப்பொழுது தான் அவளுக்கு இன்னும் உடை எதுவும் மாற்றவில்லை என்பதை நினைவுக்கு கொண்டு வந்தான்.

 

“ஹ்ம்!” என்றவள் அமைதியாய் நின்று பால் பொங்கியதும் கொஞ்சமாய் காயவிட்டு இரண்டு காபிகளை தயாரிக்க,

 

“என்கிட்ட குடு!” என வாங்கி வந்து ஹாலில் வைத்துவிட்டு தானும் அமர்ந்தான்.

 

“எங்க போற?” என அவள் நகர்ந்ததும் கேட்க,

 

“நீங்க குடிச்சுட்டு வாங்க த்தான். நான் ஜீவெல்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு வர்றேன்!” என மேலே சென்றாள்.

 

“ஆறிடுமே தேவா?”

 

“பரவால்ல த்தான் நான் குடிச்சிப்பேன்!” என்றவள் குரல் சென்று கொண்டே பேசியதில் கொஞ்சமாய் கேட்டது.

 

குடித்து முடித்து அவளுடைய காபியை எடுத்துக் கொண்டு தானும் அறைக்கு வர, புடவையை மாற்றி இருந்தவள்,

 

“சோஃபா எங்க த்தான்?” என்றாள் வந்ததும் அதை காணுமே என பார்த்துவிட்டு தான் குளியலறை சென்றிருந்தவள்.

 

“ஹால்ல ஸ்டெப்ஸ்க்கு கீழே இருக்கே! பாக்கல நீ?” என்றவனை கேள்வியாய் அவள் பார்க்க,

 

காபி குடி! ஆறிடுச்சு!” என்றவன் சட்டையை கழட்டிக் கொண்டு குளியலறை செல்ல, நகை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு காபியை குடித்து முடித்தாள்.

 

அத்தனைக்கு சோர்வாய் இருந்தது. நான்கு நாட்களாக தூக்கமே இல்லை. நேற்றும் லீலா, கயல்விழி என இரவு அவர்களுடன் பேசி இருந்து காலையிலும் சீக்கிரமே எழுந்திருக்க, கண்கள் தூக்கத்திற்கு இன்று தான் கெஞ்சியது.

 

“நீ பாட்டுக்கு பெட்ஷீட் எடுத்துட்டு கீழ படுத்துக்குறேன்னு நிக்காத தேவா. பெட்க்கு வா!” என்றபடி வந்து படுத்துக் கொண்டு அவன் கண்களை மூட,

 

அவன் சொல்லும் வரை அதை தான் செய்ய நினைத்தவள் அவன் சொல்லியபின் வேறு வழியின்றி விளக்கை அணைத்துவிட்டு கட்டிலின் மற்றொரு பக்கத்துக்கு வந்து படுத்துக் கொண்டாள்.

 

அலுப்பில் கண்களை மூடியதுமே தூக்கம் அவளை அணைத்துக் கொள்ள தயாராய் இருக்க, நொடியில் நிகழ்ந்த மாற்றத்தில் வந்த தூக்கமும் பறந்து சென்றது தேவதர்ஷினியிடம்.

 

“அத்தான்!” என்றவள் குரலில் அதீத அதிர்ச்சி. நெஞ்சமெல்லாம் படபடவென அடித்துக் கொள்ள எதிர்பார்க்காத அவனின் இந்த நெருக்கத்தில் தொண்டைக்குள் மூச்சுக்கள் அடைப்பட்டது.

 

“ம்ம்!” என்றவன் அவள் இடையை வளைத்திருக்க, எதாவது பேசுவான் என சில நொடிகள் காத்திருந்தவள் அவன் பேசவில்லை என்றதும் தூங்கிவிட்டானோ என மெதுவாய் நகரப் பார்க்க,

 

“ப்ச்! தேவா!” என கண்டிப்பில் அவன் அழைத்ததில் இவ்வளவு நாள் இருந்த ஆதங்கத்தோடு இப்பொழுது கோபமும் சேர்ந்தது.

 

அதன்பின் கொஞ்சமும் யோசிக்கவில்லை அவள். வேகமாய் அவன் கையை தன்னில் இருந்து பிரிக்க முயல,

 

“ப்ளீஸ் தேவா! எனக்கு உன் கோபம் புரியுது. ஆனா நாளைக்கு பேசிக்கலாம். இப்ப ரெண்டு பேருமே டையர்ட்!” என்றான் கொஞ்சமும் கையை விலக்காமல்.

 

“நான் தூங்கணும் த்தான்!” என அப்பொழுதும் அழுத்தமாய் அவள் சொல்ல,

 

“தூங்கேன்!” என்றானே தவிர்த்து அவன் கை அசையவே இல்லை அவளிடம் இருந்து.

 

“ப்ச்! என்ன பண்றீங்க நீங்க?” என கேட்டே விட்டாள் தாங்க முடியாதவளாய்.

 

“ஒண்ணுமில்ல தேவா! இப்படியே தூங்கலாம். தூங்கு!” என்றவன் சொல் புரியவே இல்லை.

 

இதற்கு மேல் என்ன பேச இவனிடம் என்பதாய் ஒரு ஆயாசம் தேவதர்ஷினியிடம்.

 

அத்தனைக்கு விருப்பம் இல்லாததாய் பேசிவிட்டு இப்படியா? எப்படி முடிகிறது? சகித்துக் கொள்வானாமா? இல்லை வேறு வழி இல்லை என்றா என ஆயிரம் எண்ணங்கள்.

 

ஆனாலும் அத்தனை குறுகுறுப்பு. நிச்சயம் இப்படி தூங்கவெல்லாம் முடியவே முடியாது. மனம் அத்தனை வெதும்பி நின்றது. ஒரு சமாதான வார்த்தை கூட இன்றி இத்தனை நாளும் தள்ளி நிறுத்தி இன்று மட்டும் என்ன? என நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை.

 

அவளை வளைத்து பிடித்தவனும் தூக்கத்திற்கு செல்லவில்லை. அவளிடம் பேச நிறைய இருந்தும் எங்கிருந்து சொல்ல எதை சொல்ல என அவ்வளவு யோசனைகள்.

 

அவளுமே தூங்கி இருக்க மாட்டாள் என தெரியும். நீண்ட நேரமாய் இருவரிடமும் அசைவுகள் இல்லை. 

 

நீண்ட நிமிடங்களுக்கு பின் மீண்டும் அவள் அவன் கையை எடுக்கப் பார்க்க, “ப்ச்!” என்றவன் சத்தத்தில்,

 

“தண்ணி வேணும்!” என்றாள் பல்லைக் கடித்து. இவ்வளவு கோபமாய் எல்லாம் யாரிடமும் அன்னை தந்தையிடமும் சேர்த்து யாரிடமும் காட்டியது இல்லை. ஏன் இவ்வளவு கோபம் ஆதங்கம் என இத்தனை நாளும் மனதில் இருந்ததும் இல்லை அவளிடம்.

 

சின்னதாய் சிரித்தவன் கைகளை விலக்க, எழுந்து தண்ணீர் குடித்தவள் கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.

 

“தூக்கம் வரலையா தேவா?” என சாதாரணமாய் அவன் கேட்டது கூட கோபத்தை தான் அவளுக்கு கிளறியது.

 

“எப்படி த்தான் இப்படி இருக்கீங்க?” என அதே சூட்டோடு அவள் கேட்டு விட,

 

“சொல்றேன். லைட் ஆன் பண்ணேன்!” என்றான்.

 

எழுந்து கொள்ளவில்லை அவள். இன்னும் அந்த குறுகுறுப்பு மறையவில்லை. அவன் முகம் பார்க்கவும் முடியாது. அதுவும் தனது இந்த கோபம்? என நினைக்க நினைக்க ஆற்றாமையாய் இருந்தது அவளுக்கு.

 

“உன்னை சமாதானப்படுத்த நான் என்ன சொன்னாலும் அது வெறும் வார்த்தையா தான் இருக்கும் தேவா! உன் கோபம் ஹன்ட்ரேட் பர்சண்ட் நியாயம் தான். அந்த வார்த்தை ரொம்ப தப்பு. நான் அப்படி பேசியிருக்க கூடாது தான். மன்னிச்சுக்கோன்னு கேட்டா மட்டும் போதாது தான்.. வேறென்ன நான் பண்ண?” என அவள் அப்படியே அமர்ந்திருந்த உருவம் கண்டு கார்த்திகைசெல்வன் கேட்டவன்,

 

“ஆனா நாம திரும்ப திரும்ப நம்ம லைஃபை காம்ப்ளிக்கெட் பண்ணிட்டு இருக்கோம்” என்றான்.

 

“நானா பண்றேன்?” என கேட்டவளை எண்ணி பெருமூச்சை கொடுத்தவன்,

 

“இல்ல நான் தான். இவ்வளவு நாளும் நான் தான் பண்ணிட்டு இருந்தேன். இப்ப நீ பண்ணிட்டு இருக்க!” என்றான்.

 

“நானும் ஃப்ரங்கா பேசிடுவேன் த்தான். அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க! தலைவலின்னு சொன்னிங்க தானே பேசாம தூங்குங்களேன்!” என கோபத்தை காட்டியும் காட்டவா என்றும் அவள் கேட்க,

 

“உனக்கு தூக்கம் வரலைனா எனக்கு எந்த இஸ்ஸுஸ்ம் இல்ல. நீ பேசு. நான் கேட்குறேன்” என்றவன்,

 

“நான் பேசினதை கேட்டு வந்த வருத்தம் தானே உன்னை பேச வைக்குது? அப்போ நீ பேசலாம் தேவா. பரவால்ல!” என்றான்.

 

“என்ன பரவால்ல? எனக்கு தலையெல்லாம் சுத்துது த்தான். உங்களை புரிஞ்சிக்கவே முடியல. தெரியும்ன்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கணுமான்னு கேட்டீங்க முதல் நாள். அப்பவே எனக்குள்ள ஒரு பயம். ஆனாலும் உங்களுக்கு இதை ஏத்துக்க டைம் வேணும்னு அமைதியா இருந்தேன். நீங்களா சொல்லாம கொள்ளாம கிளம்பி போனீங்க. நீங்களா வந்திங்க. நல்லா பேசினீங்க. மறுபடியும் வார்த்தையை விட்டிங்க.. இப்ப எதுவுமே இல்லைன்ற மாதிரி…. “ என்றவள் தலையை பிடித்து அமர, தானுமே நிமிர்ந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான் அவன்.

 

“எனக்கு சொல்ல தெரியல த்தான். ஆனா எனக்கும் கொஞ்சம் ஆசை இருக்கும் போல. அதான் எதிர்பார்த்து ஏமாந்து மறுபடியும் எதிர்பார்க்க பயமா இருக்கு. உங்க ஆசை என்ன? அவ்வளவு கோபமா என்கிட்ட போன்ல அன்னைக்கு சொன்னிங்க. அப்போ உங்க ஆசைல நான் இல்லைனும் போது எப்படி உங்களால என்னோட வாழ முடியும்? வேற வழி இல்லாம என்னை ஏத்துக்க தான் ஊருக்கு கூட்டிட்டு போறிங்களா?” என்றவளை,

 

“தேவா!” என அழைத்து கார்த்திகைசெல்வன் நிறுத்தப் பார்க்க,

 

“ஆமான்னு எல்லாம் சட்டுன்னு சொல்லிடாதீங்க த்தான். நிஜமா தாங்கிக்க மாட்டேன். அவ்வளவு ஸ்ட்ரோங் இல்ல நான். கல்யாணத்துக்கு முன்னாடி இவ்வளவு எதிர்பார்க்கல. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய எதிர்பார்த்துட்டேன். நிஜமா என்னென்னவோ எதிர்பார்த்துட்டேன். ரொம்ப வலிக்குது. இவ்வளவு மனசுக்குள்ள வச்சுக்கவும் தெரியல. ஃபர்ஸ்ட் டைமா! அதான் யார்கிட்ட சொல்றதுன்னும் தெரில த்தான்!” என்றவள் அவனிடமே இவ்வளவையும் சொல்லியதில் அதையும் தாள முடியாமல் தன் மடியில் முகம் புதைத்து அழ, 

 

அதற்குமேல் யோசிக்காமல் நகர்ந்து அவளருகில் வந்தவன் அவள் கைப்பிடிக்கவும், வீம்பாய் தேவதர்ஷினி அவன் கைகளை தட்டிவிட, அதையும் தாண்டி அவளை இழுத்து அணைத்து நெஞ்சில் சாய்த்தான் கார்த்திகைசெல்வன்.

 

தொடரும்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்