Loading

அமர் சிவாவின் விவரங்களை படித்துக் கொண்டிருந்தான். அவனது கோபமும் ஆத்திரமும் நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்து கொண்டே போனது.

பிரியாவும் சிவாவும் ஒரே கல்லூரியில் படித்திருக்கின்றனர். ஒரே ஆண்டில் படித்திருக்கின்றனர். ஒரே துறை வேறு.

பல்லக்கடித்தான் அமர். சிவாவின் வேலைகளை ஆராய்ந்தான். எதாவது குறை இருந்தால் அவனை வேலையை விட்டு தூக்கி விட நினைத்தான். ஆனால் இது வரை எந்த குறையும் இல்லை.

அமருக்கு கோபத்தில் பைத்தியம் பிடிப்பது போல் இருக்க, அறையை பூட்டிக் கொண்டு சில மணி நேரம் தனிமையில் கழித்தான். மூளை மட்டும் மிக வேகமாக வேலை செய்தது.

பிரியாவுக்கும் அவனுக்கும் இடையே இருப்பது வெறும் நட்புமட்டுமல்ல. அப்படி இருந்தால் அதைச் சொல்ல பிரியா தயங்க மாட்டாள். அவர்கள் நெருக்கமாக நடந்து சென்றது கண்ணை விட்டு மறைய மாட்டேன் என்றது.

சிவா அவனை பார்த்து விட்டு லிஃப்டை மூடியதன் காரணம் புரிந்தது. அமரோடு சில நாட்களாக பிரியா பழகுவது அவனுக்கு பிடிக்கவில்லை. அதை அவனிடம் காட்ட வேண்டும் என்று தான் லிஃப்டை மூடினான்.

மேலே வந்த பிறகும் கூட அமரை பார்த்து விட்டு தான் அவளை சுகந்தி என்று அழைத்தான். அது மட்டுமா? ஐஸ்க்ரீமை விழுங்கினான்.

அதை நினைத்ததும் எதையாவது தூக்கிப் போட்டு உடைக்கும் வெறி வந்தது. ஆனால் இருக்கும் இடம் அதை அனுமதிக்கவில்லை.

‘சுகந்தி.. சுகந்தி.. இவன் சுகந்தினு கூப்பிடுறதால தான்.. என்னை வேணாம்னு சொல்லிருக்கா…’ என்று நினைக்கும் போதே கோபத்தில் சிரிப்பு வந்தது.

‘நீ சிவாவோட சுகந்தி இல்ல.. இந்த அமரோட சுகி.. சுகி மட்டும் தான்.. அவனா நானானு பார்க்குறேன்.. ஆடத்த ஆரம்பிச்சு வச்சுட்டான்ல.. அத நான் எப்படி முடிக்கிறேன்னு மட்டும் பாரு’ என்றவனின் கண்கள் பளபளத்தது.

சில மணி நேரங்களை இதே நினைவில் கடத்தியவன் ஒரு வழியாக மனதை மாற்றி வேலையை பார்த்தான். இரவு வீடு திரும்பியவன் தாயின் படத்தை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அறைக்குச் சென்றான்.

மூளை முழுவதும் சிவாவை எப்படி அகற்றுவது என்ற யோசனை தான் ஓடியது. அவனை வேலையை விட்டு தூக்க முடியாது. அப்படி எதாவது ஒரு தப்பை வைத்து தூக்கி விட்டாலும் கூட அவன் பிரியாவிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்வான்.

அவள் முன்னால் அவனது மரியாதை குறையவே கூடாது. அதனால் வேலை விசயத்தில் சிவாவை எதுவும் செய்யக்கூடாது.

திடீரென விபரீதமான யோசனை வந்தது. சிவாவை கொல்ல தோன்றியது. ஆனால் அதுவும் கூட தவறு தான். சினிமாவிலும் கதைகளிலும் வருவது போல் ஒருவனது உயிரை எடுத்து விட்டு தப்பிக்க முடியாது. மாட்டிக் கொண்டால் பிரியா அவனை வெறுத்து விடுவாள். அதனால் சிவாவின் உயிர் தப்பியது.

அது மட்டுமல்ல. இது வரை அமர் எந்த சட்ட விரோதமான செயலும் செய்தது இல்லை. அப்படி எதாவது செய்தால் அவனது மொத்த குடும்பமும் பாதிக்கப்படும்.

வேறு என்ன செய்வது? என்று யோசித்து யோசித்து தலை வலித்தது. காபி போட்டு குடித்தான். அப்போதும் தலை வலி குறையவில்லை. உருப்படியாக எதுவும் தோன்றவில்லை.

வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு குளிக்கச் சென்றான். குளிர்ந்த நீர் தலையில் விழுந்த போது, சூடாக இருந்த மூளையும் குளிர்ந்தது.

மூளையில் பிரியாவும் சிவாவும் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க, திடீரென ஒரு விசயம் பளிச்சிட்டது.

பிரியாவே சிவாவை பிரிந்து விட்டால்? அவன் வேண்டாம் என விலகி விட்டால்? அவளாக விலகா விட்டாலும் அமர் விலக்க வைத்தால்?

அமரின் இதழ்கள் புன்னகை சிந்தியது. இது தான் சிறந்த வழி. இருவரும் பிரிந்து சென்றால் தான் அவன் மீது எந்த குறையும் ஏற்படாமல் இருக்கும். அவனும் பிரியாவை அடையாளம்.

‘சுகி.. யூ ஆர் மைன்’ என்று நினைத்துக் கொண்டு முகத்தை மேலே நிமிர்த்தி கண்களை மூட, தண்ணீர் அவன் முகத்தை நனைத்து ஓடியது.

அதன் பிறகு இரவெல்லாம் அமர் இருவரையும் பிரிக்கும் வழியை யோசித்துக் கொண்டே இருந்தான். எந்த வழியும் சரியாகப்படவில்லை. குழப்பத்துடனே தூங்கி காலையில் எழுந்தான்.

அலுவலகம் கிளம்பிச் செல்லும் வழியில் சிவப்பு விளக்கை பார்த்து விட்டு காரை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தான்.

ஒருவன் ஒரு பெண்ணை கேவலமாக திட்டி விட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு செல்வது கண்ணில் பட்டது. அந்த பெண்ணும் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் பேசிக் கொண்டது எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவன் கோபமாக பேசி விட்டு சென்றது விளங்கியது.

‘இது மாதிரி அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?’ என்று யோசித்தவன் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான்.

அலுவலக வேலைகள் நிறைய இருந்தது. பிரியாவிற்கு ஓய்வு நேரம் கிடைக்க கூடாது. கிடைத்து அவள் சிவாவிடம் பேசக்கூடாது. அது தான் இப்போது முதல் வேலை.

பிரிப்பதை பிறகு கவனிக்கலாம். எப்படியும் வீட்டிற்கு சென்ற பிறகு அவர்கள் பேசிக் கொள்வதை அவனால் இப்போதைக்கு தடுக்க முடியாது. ஆனால் அலுவலகத்தில் பேசுவதை தடுக்கலாம் அல்லவா?

அதனால் பிரியாவிற்கு அதிக வேலைகளை கொடுத்தான். அவளது பயிற்சி முடியும் முன்பே வேலைகளை அதிகப் படுத்தினான். அன்றைய நாள் முழுவதும் வேலைக்குள் மூழ்கிக் கிடந்தாள் பிரியா.

இரவானதும் வீட்டுக்குச் சென்றாலும் அவளுக்கு வேலை மிச்சமிருந்தது. சிவாவிடம் இரண்டொரு வார்த்தையோடு நிறுத்தி விட்டு வேலையை பார்த்தாள்.

அவளுக்கு வேலை செய்வது பிடித்திருந்தது. அதோடு அமர் அவள் நன்றாக வேலை செய்த போது பாராட்டுவது பிடித்திருந்தது. அவளிடம் இருக்கும் திறமையை அவன் வெளிக்கொணர போராடும் போது அவளும் உழைக்க வேண்டுமல்லவா?

அவளை நம்பித்தான் வளவனும் அந்த தொழிலை விற்றார். மகள் எப்படியாவது அந்த தொழிலோடு இருப்பாள் என்று நம்பினார். அவளுக்கு திறமை இல்லை என்று வெளியே வந்தால் அது வளவனை ஏமாற்றியது போல் ஆகுமே.

தெரியாத விசயங்களை வீட்டுக்கு வந்ததும் வளவனிடமும் கேட்க ஆரம்பித்தாள். அவருக்கு தான் எல்லாம் தெரியுமே‌. அதனால் அவரும் தன் பங்குக்கு சொல்லிக் கொடுத்தார்.

அப்படி சொல்லிக் கொடுக்கும் போது அவர் முகத்தில் தோன்றிய வெளிச்சமும் பரவசமும் பிரியாவை வேலை செய்ய தூண்டியது.

அமர் மிகப்பெரிய புத்திசாலி. அவனிடமிருந்து பாராட்டு கிடைக்கும் போது, மேலும் நிறைய வேலை செய்ய ஆசை வந்தது. அதையே பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

ஒரு வாரம்.. தினமும் எல்லோருக்கும் முன்பே வந்தாள். சிவாவை பார்க்க அல்ல. வேலை செய்ய. சிவா வரும் போது அவள் கணினியில் மூழ்கிக் கிடப்பாள். அவன் போகும் போது அமரோடு அறையில் இருப்பாள்.

சிவா பேசினால் வேலையை காரணம் காட்டுவாள். அவனால் அவளிடம் சண்டை கூட போட முடியவில்லை. ஏனென்றால் அமரிடமும் எந்த மாற்றமும் தெரியவில்லை.

வருகிறான். வேலை செய்கிறான். அவ்வளவு தான். சிவா செய்த காரியம் அமருக்கு புரியாமல் இருந்திருக்காது. பிரியாவின் மீது கொஞ்சமாக ஆர்வம் வந்திருந்தாலும் கூட, கண்டிப்பாக சிவாவை கவனித்திருப்பான்.

அவனிடம் பேசவோ அல்லது பிரியாவுக்காக அவனிடம் போட்டி போடவோ முயற்சித்திருப்பான். ஆனால் அமர் எதுவுமே செய்யவில்லை. பிரியாவின் வேலைகளை புஷ்பா கொடுப்பதாக தான் சொன்னாள் பிரியாவும் சொன்னாள்.

அமர் அவளிடம் பேசுவதை குறைக்கவுமில்லை. அதிகப்படுத்தவும் இல்லை. சிவாவுக்கு குழப்பம் தான் மிஞ்சியது.

உண்மையில் அமருக்கு பிரியாவின் மீது ஆர்வம் எதுவும் இல்லையோ? அப்படி இல்லாமல் போனால் மிகவும் சந்தோசம் தான் என்று மனதை தேற்றிக் கொண்டான். மற்றபடி அவள் பேசக்கூட நேரமில்லாமல் வேலையை தேடி ஓடுவது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை.

ஊரிலிருந்து திரும்பி வந்த கணவனை பாசத்தோடு வரவேற்றாள் சண்முகி.

“காலையிலயே அப்பா ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்தா பத்திரமா வைனு சொல்லிட்டு போனான் குரு” என்று சிரிப்போடு சொல்லி விட்டு அவனது பையை வாங்கி உள்ளே கொண்டு சென்றாள் சண்முகி.

“அது இந்த பேக்ல இருக்கு.. பத்திரமா வை.. உனக்கு தான் ஒரு சேலை வாங்கிட்டு வந்தேன்.. இரு நானே வந்து காட்டுறேன்..” என்று கூறி உடை மாற்றச் சென்றான்.

திரும்பி வந்ததும் முதல் வேலையாக சேலையை எடுத்துக் கொடுத்தான்.

சண்முகியின் முகம் சந்தோசத்தில் மின்னியது.

“அழகா இருக்கு.. எப்ப வாங்குனீங்க?”

“சுத்தி பார்க்கலாம்னு போனேன். கண்ணுல பட்டுச்சு வாங்கிட்டு வந்துட்டேன். பிடிச்சுருக்கா?”

“ரொம்ப” என்று சந்தோசமாக சொல்லி விட்டு மேலே போட்டு அழகு பார்த்தாள்.

“ட்ராவல்ல ரொம்ப டயர்ட்மா.. டீ போட்டு கொடு.. குடிச்சுட்டு தூங்குறேன்” என்று கேட்டதும் உடனே சமையலறைக்கு ஓடினாள்.

சுப்பிரமணி மனைவியின் வேகத்தை பார்த்து புன்னகைத்து விட்டு பொருட்களை பிரித்து அடுக்கினான்.

மாலை குரு வந்ததும் சுப்பிரமணியிடம் ஒரு வாரக்கதையும் சொல்லி முடித்தான்.

இரவு மகன் தூங்கியதும் சண்முகி கணவனை பார்த்தாள்.

“திரும்ப ஊருக்கு போக வேணாம்ல?”

“அடுத்த மாசம் தான் போகனும். ஆனா ரெண்டு வாரத்துக்கு என்னை எங்கயும் போகச் சொல்லாதீங்கனு சொல்லிட்டேன். அதுனால கவலையே படாத” என்றவன் மனைவியை அணைத்துக் கொள்ள அவளும் நிம்மதியாக கணவன் மார்பில் சாய்ந்தாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்