அத்தியாயம் 16
கார்த்திகைசெல்வன் தேவதர்ஷினியின் வரவேற்பு விமர்சையாய் நடந்து கொண்டிருந்தது.
லீலா பசுபதி இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. ஊரார் முன் நிறைவாய் மகளுக்கு தங்கள் கடமையை நிறைவேற்றி மகளை ஒரு நம்பிக்கையான குடும்பத்தில் சேர்த்துவிட்ட நிம்மதியும் கூட.
மாலை ஆறு மணிக்கெல்லாம் மண்டபம் வந்து மேடையில் நின்றனர் பெண்ணும் மாப்பிள்ளையும்.
அன்னை, தந்தை, அத்தை, மாமா என தங்கள் குடும்பங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்ட புதுமண ஜோடிகள் மேடையில் நின்றிருக்க,
“புடவை ரொம்ப அழகா இருக்கே தேவா! யாரு மாப்பிள்ளை செலக்ட் பண்ணினதா?” என தோழி ஒருத்தி கிண்டலாய் மேடையில் வைத்து சொல்லிவிட்டு இறங்கி செல்ல, நெற்றியை நீவிக் கொண்டு சிந்தனையில் நின்றான் கார்த்திகைசெல்வன்.
அவனை திரும்பியும் பார்க்கவில்லை தேவதர்ஷினி. கோபமெல்லாம் இல்லை தான். அவளுக்கே தெரியும் அவனுமே அந்த தோழி கூறியதை கேட்டிருப்பான் என்று. பின் எதற்கு திரும்பிப் பார்த்துக் கொண்டு என அமைதியாய் நின்றுவிட்டாள்.
இப்பொழுது இந்த நிமிடம் என்று இல்லாமல் நேற்று மாலை கார்த்திகைசெல்வன் ஊரில் இருந்து வந்தது முதலே தேவதர்ஷினியிடம் இவ்வளவு தான் என அளவான வார்த்தைகளும் பார்வைகளும் என கார்த்திகைசெல்வனும் உணர்ந்து தான் இருந்தான்.
வரவேற்பு அன்று காலையில் வருவதாய் சொல்லி இருந்த கார்த்திகைசெல்வனின் முந்தைய நாள் வரவை யாருமே எதிர்பார்க்கவில்லை. தேவதர்ஷினியிடமும் சொல்லி இருக்கவில்லை அவன்.
“இருக்கட்டும் இருக்கட்டும்! பொண்டாட்டி வந்தாச்சுல்ல? இன்னுமா என்கிட்ட சொல்லிட்டு இருப்பான் எப்ப வர்றேன் போறேன்னு!” என விளையாட்டாய் கண்ணகி சொல்ல,
“சத்தியமா என்கிட்டயும் சொல்லல த்தை அவங்க!” என்றாள் பாவமாய் பார்த்து.
“அண்ணி! அம்மா சும்மா சொல்றாங்க! ஆமா அப்படி தான்னு சொல்லுங்களேன். யார் கேட்பா உங்களை?” என்றான் நிரஞ்சனும்.
இரண்டு நாட்களுக்கு முன் தேவாவிடம் பேசியது தான். அதன்பின் இருவருமே அழைத்துக் கொள்ளவில்லை என அவர்களுக்கு எல்லாம் தெரியாதே!
அன்று இரவு எட்டு மணிக்கு “வீட்டுக்கு வந்ததும் கால் பண்ண சொன்னேனே தேவா!” என கார்த்திகைசெல்வன் கூறவும் அமைதியாய் இருந்தாள் தேவதர்ஷினி.
“தேவா எதுவா இருந்தாலும் சொல்லிடு. மனசுல வச்சுட்டே இருக்காத. இப்படியே நாளை எல்லாம் கொண்டு போக முடியாது நாம” கார்த்திகைசெல்வன் சொல்ல,
“நானும் அதை தான் நினைச்சுட்டு இருந்தேன் த்தான்!” என்றவள் அர்த்தமே வேறாய் இருந்தது.
“என்ன நினைச்ச?” என அவன் கேட்க,
அது தான் இப்படியே நாளை நகர்த்த முடியாதே! என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சேன்!” என்றவள் மொழி புரிந்ததோ இல்லையோ அந்த குரல் புரிந்தது கார்த்திகைசெல்வனுக்கு.
“கொஞ்சம் நார்மலா பேசு தேவா! நான் தான் சொல்றேனே! என்னவோ ஒரு தாட்ல நேத்து அப்படி பேசிட்டேன். விடேன்!” என சொல்ல, அத்தனை சாதாரணமாய் போய்விட்டதா அந்த வார்த்தை இவனுக்கு என்று தோன்றி இன்னுமே பயத்தை தான் கொடுத்தது அவளுக்கு.
எல்லாமே போன்ல பேசி சமாதானப்படுத்த முடியாது நேத்து பேசினது தப்பு தான். மன்னிப்பும் கேட்டேனே! ஏதோ வேகத்துல பேசிட்டேன்” என மீண்டும் சொல்ல,
“அப்போ இதே மாதிரி எப்ப வேனா பேசிட்டு மன்னிப்பு கேட்டுக்கலாமா த்தான். இப்படி தான் ஒவ்வொரு முறையும் சொல்லி காட்டுவீங்களா? நானும் ஒவ்வொரு தடவையும் அதை கேட்டுட்டே தான் இருக்கணுமா?” எனக் கேட்டவளை உள்ளம் அதிர தான் நினைத்துக் கொண்டான் கணவனானவன்.
“தேவா!” என்றவன் குரலே கம்மிவிட்டது.
“இல்ல! எதுவா இருந்தாலும் உடனே பேசிடனும் சொன்னிங்களே! அதான் சொல்லிட்டேன். கூடவே இன்னொன்னும் சொல்லனும் த்தான்!” என்றவளை என்னவோ என்று நினைத்து அலைபேசியை காதில் வைத்திருந்தான் அழுத்தமாய்.
“கல்யாணத்தப்ப உங்களுக்கு என்னை பிடிச்சதா, இந்த கல்யாணத்துக்கு உங்களுக்கு சம்மதமான்னு எல்லாம் எனக்கு தெரியாது த்தான். எனக்கு கேட்கவும் தோணல. அம்மாவும் அப்பாவும் என்ன சொன்னாலும் சரின்னு தான் கண்ணை மூடிட்டு சம்மதம் சொல்லி இருந்தேன். அப்படி உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க என்கிட்ட சொல்லிருக்கலாமே த்தான். இல்ல உங்ககிட்ட கேட்கும் போதோ இல்ல உங்களை வற்புறுத்தி சம்மதம் சொல்ல வச்சிருந்தா அங்கிருந்து உடனே கிளம்பி ஊருக்கு போயோ உங்க பிடித்தமின்மையை காட்டி இருக்கலாமே த்தான்? நான் என்ன பண்ணினேன்?” என கேட்க, அந்த வார்த்தைகளும் அந்த காயப்பட்ட குரலும் என வெகுவாய் நொந்து போனான் கார்த்தி.
“தேவா ப்ளீஸ்! நீ ரொம்ப யோசிக்குற!” என சொல்லியும்,
“ஆனா பொய்யா யோசிக்கல தானே? கல்யாணம் நின்னிருந்தா என் அம்மா அப்பாவோட அவங்களோட பொண்ணா அவங்க வீட்டுல இருந்திருப்பேன். அம்மா அப்பா பீல் பண்றதை பார்த்து கொஞ்சமா அழுதிருப்பேன் அத்தோட முடிஞ்சிருக்குமே த்தான். இப்படி என்னை பிடிக்காதவரோட எப்படி வாழனு தினம் தினம் யோசிச்சு அழுதுட்டு இருந்திருக்க மாட்டேன் தானே?” என்றவள் கண்ணங்களில் கண்ணீர் இறங்கிவர, கார்த்திகைசெல்வன் கண்களுமே கலங்கிவிட்டது.
நிச்சயம் இவ்வளவு பேசுவாள் என நினைக்கவே இல்லை அவன். ஆனால் அதில் எத்தனை உண்மை உள்ளது என்பதையும் புரியாதவன் இல்லை.
“இதை நான் எனக்காக மட்டும் சொல்லல த்தான். உங்களுக்காகவும் தான் சொல்றேன். உங்களுக்கும் இப்ப தேவை இல்லாம இந்த தேவாவால எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு மனஅழுத்தம்!” என அதே கண்ணீர் குரலில் அவள் சொல்ல,
“போதும் தேவா! ப்ளீஸ் ஸ்டாப் இட்!” என்றவன் மனதில் இப்பொழுது தான் இன்னுமின்னும் பாரம் ஏறிய உணர்வு.
“நான் வந்து பேசுறேன்!” என்றவன் அதன் கனம் தாங்காமல் வைத்துவிட்டான்.
அவன் வலியும் வேதனையும் அவன் மட்டுமே அறிந்த ஒன்று தானே!
வேறு ஏதோ ஒரு பெண்ணை விரும்பி இருந்தால் கூட இத்தனைக்கு மனம் அல்லாடி இருக்குமோ என்னவோ.
ஒரே குடும்பத்தில் இருந்து கொண்டு இதை எப்படி என்னவென்று மனைவியிடம் அவன் பகிர்ந்து கொள்ள முடியும்? அந்த அடர்ந்த அழுத்தம் தான் அவனை அப்படி பேச வைத்ததும் என அவனுக்கு புரிந்ததை இரு காரணமாய் சொல்லவும் முடியாத நிலை தான் கார்த்திகைசெல்வனுக்கு.
அடுத்து அழைத்துக் கொள்ளவே இல்லை இருவரும். மனதில் இருந்ததை சொல்லி விட்டவள் அதன்பின் கண்ணகி முன் இயல்பாய் வலம் வர, அவள் கணவனால் அப்படி இருக்க முடியவில்லை.
புதிய வீட்டை பார்வையிட்டு தன்னுடைய பொருட்களை கூட அந்த வீட்டில் மாற்றிக் கொள்ளாதவன் மனைவி வந்தபின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்பதாய் வரவேற்புக்கு முந்தைய நாளே மாலை வந்துவிட்டான்.
அவன் வந்ததும் அதற்கு அதிக சந்தோஷமும் இல்லை கேள்வியும் இல்லை என்பதாய் அத்தனை சாதாரணமாய் பார்த்து ஒரு புன்னகையும் கொடுத்த தேவதர்ஷினியை முந்தைய தன் வரவுக்கு அவள் கொடுத்த முகமாற்றம் மனக்கண்ணில் வந்து சென்றது தான் கார்த்திகைசெல்வனுக்கு.
சரி இரவு பேசிவிடலாம் என்றால் அன்றைய இரவு கயல்விழி மருதாணியுடன் வந்து அமர்ந்துவிட்டாள்.
கண்ணகி, தேவதர்ஷினி, நிரஞ்சன், சுந்தரி, பரமேஸ்வரன் என மொத்தமாய் இரவு ஒரு மணி வரை உறங்கவில்லை.
எப்படியும் தூங்க வருவாள் தானே என நினைத்து அவனுமே ஹாலில் இருக்க,
“மணி என்ன தெரியுமா? அர்த்த ராத்திரி வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? பேசாம இங்கேயே எல்லாருமா தூங்குவோம்” என்றார் சுந்தரியையும் கயல்விழியையும் கண்ணகி.
“இந்த அஷ்வினியை கூப்பிட்டேன் வரலைனு சொல்லிட்டா அண்ணி. அவ தனியா இருப்பாளேன்னு பார்த்தேன்!” என சுந்தரி சொல்ல,
“லீலா கூட அவளை தூங்க சொல்லு. இரு பாயை எடுத்துட்டு வர்றேன்!” என்ற கண்ணகி அதன்பின் தான் மகனைக் கண்டவர் தேவதர்ஷினியையும் கேள்வியாய் பார்க்க,
“மருதாணியோட எங்க மேலயும் கீழேயுமா நான் அலையவா? நானும் உங்களோடவே தூங்குறேன்!” என்ற மனைவியை மௌனமாய் பார்த்தான் கார்த்திகைசெல்வன்.
அடுத்தநாள் சென்ற வேகமே தெரியவில்லை அனைவர்க்கும். வேலைகள் என்று இல்லாமல் உறவுகள் சூழப் போகும் ஒரு விழாவின் மகிழ்வில் தான் அந்த தினம் முழுமையடைந்து இருந்தது.
பேச சந்தர்ப்பம் கிடைக்காமல் இல்லை. ஆனாலும் மௌனமா mமை பார்த்து நகர்ந்து வரவேற்புக்கு மேடை ஏறி அருகருகே நின்றனர் தேவதர்ஷினியும் கார்த்திகைசெல்வனும்.
திருமணத்தன்று நின்றதற்கு மாறாய் கார்த்திகைசெல்வன் புன்னகையோடு நிற்க, ஒட்ட வைத்த புன்னகையோடு நின்றாள் தேவதர்ஷினி.
அஷ்வினி வந்ததும் மணமக்கள் தெரியும்படி இறுதி வரிசையில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பார்த்தவள் மனதில் இருந்து புன்னகைத்து அவர்களின் வாழ்க்கைக்கு மனதார வாழ்த்தி அமர்ந்திருக்க, கார்த்திகைசெல்வன் அவளைக் கண்டாலும் பெரிதாய் எதுவும் தோன்றவில்லை.
அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டும் தான் இப்பொழுது அவனிடம் இருந்தது.
அவனின் சிந்தனை முழுக்க இப்பொழுது மனைவியிடம் வந்திருந்தது. இனி அதில் இருந்து மீள விரும்பவும் இல்லை. வேறு நினைவும் மனதை ஏற்க விடுவதாய் இல்லை.
இப்படி மேடையில் நினைவுகளோடு நின்றவன் தான் தன் மனைவியிடம் அவன் தோழி கூறியதை தற்செயலாய் கேட்டதும் அதற்கு மனைவி புன்னகையை கவனித்ததும்.
இப்பொழுது இன்னுமே தன்னைத் தானே மண்டையில் தட்டிக் கொள்ளலாம் போல வந்தது அவனுக்கு.
திருமணம் தான் அத்தனை அவசரகதியில் நடந்து முடிந்தது. இப்பொழுது வரவேற்புக்கு என அவளின் ஒவ்வொரு அலங்காரமும் அவன் பார்வைக்கும் இப்பொழுது தான் ஆழமாய் வந்து நின்றது.
‘நிஜம் தானே? இந்த புடவையைக் கூட தேர்வு செய்ய என தான் செல்லவில்லை தானே? திருமணம் என்றால் மூன்று முடிச்சிடுவது மட்டும் இல்லையே! நிச்சயம் முதல் பத்திரிக்கை, திருமண ஜவுளிகள், அலங்காரம் என வரவேற்பு வரை உள்ள எதுவுமே தங்கள் விருப்பப்படி இல்லை தானே!
‘நான் நினைத்திருந்தால் இன்றைய தினத்திற்கு என் மனைவிக்கு என நானே புடவையை தேர்ந்தெடுத்திருக்கலாமே! ஒவ்வொரு பெண்ணுக்கும் இதெல்லாம் தானே பெரிய பெரிய கனவுகளாய் இருக்கும்’ என காலம் கடந்து யோசித்து நெற்றியை நீவிக் கொண்டு கார்த்திகைசெல்வன் நிற்க,
“த்தான்” என அழைத்திருந்தாள் தேவா.
“ஹ்ம்ம் தேவா!” என அவனும் என்னவென உடனே திரும்ப,
“போட்டோ எடுக்குறாங்க. கொஞ்சம் அங்க பார்த்து சிரிங்களேன்! கொஞ்ச நேரம் தான். ப்ளீஸ்!” என சத்தமே வராமல் அவன் மட்டும் கேட்கும்படிக்கு கெஞ்சலாய் தேவதர்ஷினி சொல்ல, முள்ளோன்று உள்ளிருந்து இதயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கீறுவதாய் இருந்தது அவளின் கெஞ்சல்.
‘அவனுக்கு பிடிக்கவில்லை போல. தலைவலியோ, கோபப்பட்டு விடுவானோ!’ என நினைத்து தேவதர்ஷினி அழைத்த அந்த தயங்கிய விதம் அத்தனை கூறு போட்டது கார்த்திகைசெல்வனை.
இவர்களுக்குள் மட்டும் தான் இந்த குழப்பம் எல்லாம். மற்றபடி அத்தனை நிறைவு பெற்றவர்கள் இரு குடும்பத்திற்கும் வரவேற்பு நல்ல விதமாய் நடந்து முடிந்ததில்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
2
+1