Loading

“அப்பா வந்தாச்சு” என்று கத்திக் கொண்டே ஓடினான் குருபிரசாத். ஏழு வயது சிறுவன்.

அவனுடைய தந்தை சுப்பிரமணி, அவனை பார்த்ததும் புன்னகை புரிந்தான்.

“ப்பா.. வாங்கிட்டு வந்தியாபா?”

“வாங்கலனா நீ விட மாட்டியே” என்று கூறி சிரித்துக் கொண்டே செருப்பை கழட்டி விட்டு உள்ளே வந்தான்.

மிக அழகான வீடு. அடுக்குமாடி குடியிருப்பில் மேலே இருக்கும் ஒரு தளத்தில், கணவன் மனைவி குழந்தை என்று வாழும் அழகான குடும்பம்.

“வந்துட்டீங்களா? ஸ்கூல் விட்டு வந்ததுல இருந்து நீங்க எப்ப வருவீங்கனு கேட்டு என் உயிர எடுத்துட்டான்” என்று கையை துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள் சண்முகி.

“அவனுக்கு அவன் ஸ்கூல் பிராஜெக்ட் தவிர வேற எதுவுமே முக்கியமில்ல” என்று மனைவிக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

“எடுபா.. உள்ள இருந்து எடு”

“டேய்.. எடுங்கனு சொல்லிப்பழகுனு எத்தனை தடவ சொல்லுறேன்” என்று சண்முகி கோபமாக மிரட்ட உடனே குரு மாற்றி, “எங்கப்பா?” என்று நல்ல பிள்ளையாக கேட்டான்.

அவனது பள்ளியில் கேட்ட ஒன்றை வாங்கிக் கொடுத்தான் சுப்பிரமணி.

“ஹய்யா… நான் போய் பிராஜெக்ட் செய்ய போறேன்” என்று குரு ஓடி விட, “பார்த்து போடா.. கீழ போட்டு உடைச்சுடாத” என்றாள்.

“அதெல்லாம் பார்த்துக்குவான். விடு”

மகன் அறைக்குள் சென்று மறைந்ததும், சுப்பிரமணி மனைவியின் கையைப்பிடித்துக் கொண்டு, “ரொம்ப டயர்ட்மா” என்றான்.

“தலைய பிடிச்சு விடவா?”

“ஒரு டீயோட செய்யலாமே.. நானும் போய் இத கழட்டி வேற மாத்திட்டு வர்ரேன். கசகசனு இருக்கு”

சண்முகி புன்னகையில் சம்மதம் சொல்லி விட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

சுப்பிரமணி உடை மாற்றி விட்டு மகனுக்கு உதவ அமர்ந்து விட, சண்முகி தேநீரோடு இருவரிடமும் வந்தாள்.

“இந்தா.. இத தள்ளி வச்சு சாப்பிடு.. ப்ராஜெக்ட்ல கொட்டிறாத..” என்று மகனுக்கு சிற்றுண்டியை கொடுத்து விட்டு அவனை தள்ளி அமர வைத்து விட்டு, அவளும் அங்கே அமர்ந்தாள்.

குரு வளவளவென பேசிக் கொண்டே இருக்க, பெற்றவர்கள் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர்.

மூவருமாக சேர்ந்து அந்த பள்ளி பிராஜெக்ட்டை முடித்த போது இரவாகியிருந்தது.

“ஐ.. சூப்பர்…” என்று குதித்தான் குரு.

“இத பத்திரமா வச்சு நாளைக்கு எடுத்துட்டு போறது தான் முக்கியம்..” என்று சண்முகி சொல்ல, “ஆமாடா.. எதுவும் பண்ணாம கொண்டு போகனும்” என்றான் சுப்பிரமணி.

“ப்பா.. நாளைக்கு நீயும் வாபா..”

“குரு” என்று சண்முகி அதட்ட, “நீங்களும் வாங்க பா.. நானா இத தூக்க முடியாது..பெருசா இருக்கு” என்று கையை விரித்துக் காட்டினான்.

அவனது பேச்சில் மயங்கி சண்முகி புன்னகைக்க, “இல்லடா.. நான் காலையிலயே கிளம்பி ஊருக்கு போகனும்” என்றான் சுப்பிரமணி.

“மறுபடியுமா?” என்று சண்முகி சலிப்பாக கேட்டாள்.

ஒரே மாதத்தில் மூன்று முறை ஊருக்கு சென்று வருகிறான். வேலை காரணமாக செல்கிறான் என்றாலும், கணவனை அடிக்கடி பிரிவது அவளுக்கு பிடிக்கவே இல்லை.

அவன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். வேலை விசயமாக ஊர் ஊராக சுற்றும் நிலைமை. ஆனால் அது சண்முகிக்கு பிடிப்பதே இல்லை.

“வேலைய விடவா முடியும்? போய் தான் ஆகனும்” என்று சுப்பிரமணி சொன்னதும் சண்முகி உதட்டை சுளித்தாள்.

“ப்பா.. அப்ப வரும் போது எனக்கு ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வாங்கபா” என்று குரு ஆசையாக சொல்ல, “என்ன வேணும்னு சொல்லு” என்று மகனோடு கொஞ்ச ஆரம்பித்தான்.

“நீங்க பேசியே பொழுத ஓட்டுவீங்க.. நான் போய் தோசை சுடுறேன். இதெல்லாம் எடுத்து வச்சு சுத்தம் பண்ணிட்டு சாப்பிட வாங்க” என்று விட்டு சண்முகி எழுந்து சென்று விட்டாள்.

இரவு சுப்பிரமணி உடையை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, சண்முகி தூங்கிய மகனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு கணவன் ஊருக்கு போவது எப்போதும் பிடிப்பதில்லை.

மற்றவர்களை போல இல்லை சுப்பிரமணி. மிகவும் நல்ல கணவன். சண்டையே போட்டாலும் கூட அவளை எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டான். அவளிடமும் மகனிடமும் மிகவும் பாசமாக இருப்பான்.

திருமணம் முடிந்து முதல் இரண்டு வருடம் குழந்தை உண்டாகவில்லை. அவளது மாமியார் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்ததும், கோபம் கொண்டு தாயோடு சண்டை போட்டு மனைவி மக்களோடு தனியே வந்து விட்டான்.

அன்றிலிருந்து சண்முகி கணவனின் மீது கொண்ட காதல் மலையை தொட்டது. இருவரும் இனிமையான இல்லறம் நடத்தி, அடுத்த வருடமே மகனை பெற்றெடுத்தனர்.

கடந்த மூன்று வருடமாகத்தான் இப்படி அடிக்கடி வெளியூர் செல்கிறான் சுப்பிரமணி. நிறைய பொறுப்புகள். நிறைய பணத்தேவைகள்.

போனால் ஒரு வாரத்திற்கு பிறகு தான் திரும்பி வருவான். அது வரை அவளும் பிள்ளையும் மட்டும் தனியாக இருப்பதால் பயத்துடனும் எச்சரிக்கையுடனுமே இருக்க வேண்டியிருக்கும்.

“என்ன ரொம்ப அமைதியா இருக்க?” என்று சுப்பிரமணி சிரித்துக் கொண்டே கேட்க, “ப்ச்ச்.. அதான் ஊருக்கு போறீங்களே.. போயிட்டு வாங்க.. நாங்க ரெண்டு பேரும் தனியா வீட்ட சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்கனும்..” என்று கூறி பெருமூச்சு விட்டாள்.

“என்ன புதுசா போற மாதிரி கோச்சுக்கிற?” என்று கேட்டவன் அவளருகே அமர்ந்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

சண்முகியும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“இந்த மாசத்துல நீங்க வீட்டுல இருந்தது வெறும் ஆறு நாள் தான். இப்ப மறுபடியும் போறீங்க. எப்பவும் உங்கள தான் அனுப்பனுமா? வேற யாரும் கிடைக்கலயாமா?”

“ஐயா பர்ஃபாமென்ஸ் அப்படி. நான் போனா தான் சரியா வேலைய முடிச்சுட்டு வருவேன்”

“பெருமை தான்” என்று நக்கலடித்தாலும் உண்மையில் மனதில் கணவனை மெச்சிக் கொள்ள தான் செய்தாள்.

மனைவியை கொஞ்சி சமாதானம் செய்து விட்டு அதிகாலையில் கிளம்பிச் சென்று விட்டான் சுப்பிரமணி.

அவனை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் தூங்கி எழுந்த சண்முகி, தம்பியை வரச்சொன்னாள்.

“அழைப்பு மணியை அழுத்தியதும் உடனே வந்து திறந்தவள் சிவராமனை பார்த்து புன்னகைத்தாள்.

“வாடா..”

“என்னகா காலையிலயே வர சொல்லிருக்க.. எங்க குரு? கிளம்பிட்டானா? மாமா எங்க?”

“அவரு ஊருக்கு போயிட்டாருடா..”

“மாமாவும் அடிக்கடி ஊருக்கு போயிடுறாரு.. நீயும் நல்லா புருஷன அனுப்பிவிட்டு தனியா ஜாலியா இருக்கல?”

“ஆமா ஜாலியா இருக்காங்க. நீ பார்த்த” என்று கூறி சண்முகி நொடித்துக் கொண்டாள்.

“பார்த்தாலே தெரியுதே..”

“காலையிலயே வாங்காத.. அவன் ஸ்கூல் பிராஜெக்ட் ஒன்னு பண்ணான். பஸ்ல தூக்கிட்டு போக முடியாது. உடையாம போகனும். பைக்ல கொண்டு போய் அவன ஸ்கூல்ல விட்டுருனு கூப்பிட்டேன்”

“பண்ணிடலாம்.. மாப்ள…”

“மாமா…” என்று கத்திக் கொண்டே குரு ஓடி வந்தான்.

“என்னடா டைய கையில எடுத்துட்டு வர்ர..” என்று கேட்டு மண்டியிட்டு அமர்ந்து சிவா மாட்டி விட, சண்முகி மகனின் பையை தயார் செய்து முடித்தாள்.

“கிளம்பலாமா?” என்று கேட்ட சிவா குருவையும் பையையும் தூக்கிக் கொள்ள, மகனது பிராஜெக்ட்டை எடுத்துக் கொண்டு பின்னால் நடந்தாள் சண்முகி.

இருவரும் பைக்கில் ஏறிக் கொண்டு கிளம்பியதும், கையாட்டி விடை கொடுத்தாள்.

பிறகு வெறுமையும் தனிமையுமான உணர்வோடு வீடு திரும்பினாள்.

சிவா மருமகனை பள்ளியின் வாசலில் விட்டான்.

“இங்க இருந்து கொண்டு போயிடுவல?”

“போயிடுவேன் மாமா” என்று விட்டு குரு உள்ளே சென்றதும், சிவா சந்தோசமாக பிரியாவை சந்திக்க கிளம்பி விட்டான்.

பிரியாவிற்கு வேலை சொல்லிக் கொடுக்க ஆள் வந்தது. வந்தவர் பெண்மணி. அதுவும் பிரியாவின் தாய் வயதை ஒத்தவராக இருந்தார்.

அவரது பொறுப்பில் பிரியாவை விட்டான் அமர். பிரியாவும் மிகவும் நல்ல பிள்ளையாக தொழிலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.

அமர் தினமும் காலையில் வந்ததும் பிரியாவிடம் அவள் கற்றுக் கொண்டவற்றை கேட்டு அறிந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

அதனால் சிவாவை பார்க்கவென்று சீக்கிரமாக கிளம்பி வந்து கொண்டிருந்த பிரியாவால், அவனோடு ஒரு நிமிடம் கூட நின்று பேச முடியவில்லை. வந்ததும் அமரிடம் வேலையை பற்றிச் சொல்ல வேண்டும் என்று ஓடிப்போனாள்.

முதலில் சிவா அதை அவ்வளவு பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் போகப்போக வருத்தப்பட்டான்.

“நீயும் ஆஃபிஸ்ல வேலை பார்த்தா நாம நிறைய மீட் பண்ணலாம்னு நினைச்சேன். நீ இப்படி வேலையில பிசியாகிட்ட” என்று அவன் வருத்தப்படும் போது அவளுக்கும் கூட வருத்தமாக தான் இருந்தது.

இருவரும் மணிக்கணக்காக பேச மாட்டார்கள். ஆனால் பார்த்து இரண்டு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அது கூட முடியாமல் போனதில் வருத்தம் அதிகமாக இருந்தது.

“எல்லாம் கொஞ்ச நாள் தான் சிவா. நான் வேலைய கத்துக்கிட்டதும் அந்த புஷ்பா மேடம் போயிடுவாங்க. நான் ஃப்ரி ஆகிடுவேன். அப்புறம் நாம நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருக்கலாம்.. லவ் பண்ணிட்டு இருக்கலாம்.. ஓகே?” என்று அவள் சமாதானம் சொன்ன போது அரை குறையாக சமாதானம் ஆனான் சிவா.

அலுவலகத்தில் பிரியா சேர்ந்து இரண்டு வாரங்கள் ஆனது. நாட்கள் நதிவெள்ளமாக உருண்டோடியது. இத்தனை நேரத்திற்குள், பிரியாவின் மனதில் அமரின் மீது மரியாதை வளர்ந்திருந்தது.

அவனது பொறுப்பும் திறமையும் அவளை வியக்க வைத்தது.

‘அமேசிங் பர்ஸ்னாலிட்டி’ என்று மனதினுள் பாராட்டிக் கொள்வாள்.

அவளுக்கு தோன்றிய சந்தேகங்களை அவனிடம் கேட்கப்பழகி இருந்தாள். அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கும் புஷ்பா மிகவும் கடுமையாக இருந்தார். அவரிடம் அவளால் சகஜமாக பேச முடியவில்லை. சந்தேகங்கள் கேட்பதற்கு அமரிடம் ஓடி வர, அது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அன்றும் அவளுக்கு வேண்டியதை சொல்லி முடித்து விட்டு, “இன்னைக்கு ஃபேக்டரி போறேன். என் கூட வர்ரியா?” என்று கேட்டான்.

முதல் முறையாக அவளோடு ஒன்றாக வெளியே செல்ல கேட்கிறான். வேலை விசயமாக இருந்தாலும் மறுக்க கூடாதே என்று படபடப்பு அவன் மனதினுள் இருந்தது.

“எந்த ஃபேக்டரி? உங்களோடதா?”

‘நம்மலோடதுனு சொல்ல மாட்டியா?’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டாலும் வாய் “ஆமாம்” என்றது.

“போகலாமே” என்று அவள் சொன்ன போது உலகை வென்றவன் போல் ஒரு பரவசம் உண்டானது.

உடனே கணினியை அணைத்து விட்டு எழுந்தான். அவளும் எழுந்து நடந்தாள்.

“என் பேக் எடுத்துட்டு வர்ரேன்” என்று விட்டு தன் கைப்பையை எடுக்கச் செல்ல அவளுக்காக காத்து நின்றான்.

அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களை கவனித்தாலும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

சிவா மட்டும் இருவரும் ஒன்றாக கிளம்புவதை புருவம் சுருங்க பார்த்தான்.

‘எங்க போறா?’ என்று சந்தேகத்துடன் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அவள் பார்க்கவும் இல்லை. பதிலளிக்கவும் இல்லை.

பிரியாவை தன் காரில் ஏற்றிக் கொண்டு, மனம் நிறைய குதூகலத்துடன் கிளம்பினான் அமர். அவளிடம் நிறைய பேச ஆசை வந்தது. அதே நேரம் பேசாமல் இப்படி அருகே இருந்தாலே போதும் என்று தோன்றியது.

அவனது தாயைப்பற்றிச் சொல்லலாமா? என்று ஒரு முறை யோசித்தான். பிறகு அதை கை விட்டான். அவளாக அவனிடம் நெருங்கி பழகிய பிறகு சொல்லிக் கொள்ளலாம். பரமேஸ்வரிக்காக அவள் அவனுடன் பழகுவது நல்லதல்ல.

பிரியா தொழிற்சாலை பற்றி கேள்வி கேட்க அவனும் பதிலளித்தான். இருவருக்கும் இடையே வேலையை தவிர பேச ஒன்றுமில்லை என்பது போல் இருந்தது.

பிரியா அவனை உடன் செய்பவனாக மட்டுமே பார்க்கிறாள் என்பது வருத்தமளித்தது. ஆனால் இதையும் ஒரு நாள் மாற்றுவான். அவனோடு அவளது வாழ்வை பகிர்ந்து கொள்ளும் அளவு மாற்றுவான்.

தொழிற்சாலைக்குள் நுழைந்ததும் பலமான மரியாதை கிடைத்தது. பிரியா அமரோடு வந்ததால் பல மடங்கு மரியாதை கிடைத்தது.

அவளை அவனது பார்ட்னராக அறிமுகம் செய்து வைத்தான் அமர்.

‘சீக்கிரமே உன்னை என் லைஃப் பார்ட்னர் ஆக்கிட்டா தான் சந்தோசமா இருக்கும்’ என்று மனம் ஏங்கியது.

மிகப்பிரபலமான அந்த தொழிற்சாலையை சுற்றி வந்து அனைத்தையும் அறிந்து கொள்வதற்கு நேரமெடுத்தது. அந்த நாள் முழுவதும் ஓடி மறைந்து போனது.

அதுவரையிலும் கூட பிரியா கைபேசியை எடுக்கவில்லை. அவள் அறிந்து கொள்ள வேண்டிய பல விசயங்கள் மிச்சமிருந்தது.

அவளை நம்பி சில பல ரகசியங்களை கூட அமர் சொல்ல, ஆர்வமிகுதியில் அவன் பேசுவதை மட்டுமே கவனித்தாள். மற்ற அனைத்தும் மறந்தே போனது.

மாலை எல்லோரும் வேலை முடிந்து கிளம்பியதும் அவர்களும் கிளம்பினர்.

“உன் கார் ஆஃபிஸ்ல இருக்கு?”

“ஆமா.. நான் அங்க போய் தான் எடுக்கனும்”

“நான் உன்னை டிராப் பண்ணுறேன். நாளைக்கு வந்து எடுத்துக்கோ”

“இல்ல இல்ல.. காலையில வர லேட் ஆகிடும். போய் எடுத்துட்டே போறேன்” என்றவளை அவனும் மறுக்கவில்லை.

‘இப்பவே சிவா கிட்ட பேச நேரம் கிடைக்கல.. லேட்டா வந்தா பார்க்க கூட முடியாது’ என்று நினைத்தவள் உடனே தன் காதலனிடம் பேச நினைத்தாள்.

காரில் ஏறியதும் கைபேசியை எடுத்துப் பார்க்க, எதோ சொல்ல வந்த அமர் சொல்லாமல் விட்டு விட்டு காரை எடுத்தான்.

காலையில் சிவா அனுப்பிய செய்தியை படித்தவள் இப்போது தான் அதற்கு பதில் அனுப்பினாள்.

இவ்வளவு தாமதமாக அவள் பதில் அனுப்பியது சிவாவுக்கு பிடிக்கவில்லை. நாள் முழுவதும் அமரோடு அவள் இருந்தாள் என்பது மேலும் பொறாமையை கிளப்பியது.

அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான். அடிக்கடி அந்த அமரிடம் பிரியா பேச ஆரம்பித்து விடுகிறாள். எல்லாம் வேலையைப்பற்றி என்று சொன்னாலும், அவனது காதல் மனம் பொறாமையை உணர்ந்தது.

“இதுக்கு ரிப்ளை பண்ண இவ்வளவு நேரமா?” என்று சலிப்பாக கேட்டான்.

“வொர்க் பார்த்துட்டு இருந்ததுல டைம் போறதே தெரியல சிவா.. ஃபோன பார்க்கவே இல்ல..”

“என்னவோ.. இப்ப எங்க இருக்க?”

“நம்ம ஆஃபிஸ் தான் போயிட்டு இருக்கேன். கார எடுத்துட்டு வீட்டுக்கு போகனும்”

“சரி சரி சாப்பிட்டியா?” என்று சாதாரணமான பேச்சுக்கு தாவினான்.

அவனுக்குள் இருந்த பொறாமையை அவன் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

பிரியா வேறு புன்னகை நிறைந்த முகமாக கைபேசியை பார்த்துக் கொண்டே வர, அமர் அதை கவனித்து விட்டு யோசனையுடனே காரை ஓட்டினான்.

அவளை அலுவலகத்தில் விட, “தாங்க்யூ சார்.. நாளைக்கு பார்க்கலாம்” என்று கையாட்டி விட்டு இறங்கிச் சென்று அவளது காரில் ஏறி கிளம்பி விட்டாள்.

அவள் சென்றதும் பெருமூச்சு விட்டான்.

‘நாலு வருசம் பொறுத்தாச்சு.. இன்னும் கொஞ்ச நாள்.. உன் மனச என் பக்கம் திருப்புற வரை வெயிட் பண்ணித்தான் ஆகனும்..’ என்று சோர்வாக நினைத்துக் கொண்டு இறங்கி உள்ளே சென்றான்.

அவள் சென்று விட்டாள் தான். ஆனால் அவளுக்கு இன்னும் வேலைகள் மிச்சமிருந்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்