அத்தியாயம் 3 :
*அருகாமையில் உள்ள உறவுகள் எல்லாம் சேர்வதுமில்லை. தூரத்தில் உள்ள உறவுகளெல்லாம் பிரிவதுமில்லை.*
நேற்று தொடங்கிய மழை இன்றும் நீடித்தது. நேற்று இரவில் மெல்லிய சாரலாய் வீசிய மழை முன் அதிகாலையில் கனமழையாக வலுத்து விடிவெள்ளி மறையும் வேளை தூவானத் தூறலாய்.
அதெல்லாம் வேந்தனுக்கு ஒரு பொருட்டே கிடையாது.
பூவின் நினைவுகளோடு தன்னையறியாது உறங்கியிருந்த பாரி, வழக்கம்போல் விடியலில் கண் விழித்தான்… காலை நேர ஓட்டத்திற்கு ஏதுவாக கிளம்பியவன் அவியின் அறையை எட்டிப்பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் சயனித்திருந்தான்.
நண்பனை தொல்லை செய்திடாது வீட்டை விட்டு வெளியேறிய பாரி… அவன் பணிபுரிய இருக்கும் காவல் நிலையம் உள்ள ஏரியாவுக்கு வந்தான். கடற்கரை எதிரில் இருக்கவும், மணல் பரப்பை ஒட்டிய நடைபாதையில் தனது மெல்லோட்டத்தை துவங்கினான். அவனது கூரிய விழிகளால் அப்பரப்பையே ஆராய்ச்சி பார்வையால் ஸ்கேன் செய்திட்டான்.
காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்தவன், தேநீர் ஒன்றை சொல்லிவிட்டு அந்தவார செய்தித்தாள்கள் அனைத்தையும் கேட்டு வாங்கிக்கொண்டான்.
“தம்பி ஏரியாவுக்கு புதுசுங்களா?”
கடைக்காரர் கேட்கவும் ஏனிந்த கேள்வி என்ற பார்வை பாரியிடம்.
“இன்னைக்குத்தான் நம்ம கடைக்கு புதுசா வந்திருக்கீங்க…” என்று இழுத்தார்.
“ம்” என்றவன் செய்தித்தாள்களில் மூழ்க… ஐந்து நிமிடத்தில் தேநீரை கொடுத்தார் கடைக்காரர்.
“இந்த ஏரியா எப்டிண்ணா?”
“ஏன் தம்பி கேக்குறீங்க? இங்க குடிவறிங்களா?”
“ம்… ம்…” தலையை மட்டும் அசைத்தான்.
“கமிஷனர் ஆபீஸ் இருக்க ஏரியான்னு வெறும் பேர் மட்டும் தான் தம்பி” என்றவர் கையை விரித்தவராக கடைக்குள் சென்றுவிட்டார்.
அவர் சொல்லிய ஒரு வரியே அப்பகுதியில் நிலவரத்தை யூகிக்க பாரிக்கு போதுமானதாக இருந்தது.
தேநீருக்கான பணத்தை கொடுத்தவன், மேலும் ஒரு தொகையை கொடுத்து… “இந்த பேப்பர்ஸ் எல்லாம் நான் எடுத்துக்கிறேண்ணா” என்று நகர்ந்தவன்… முன்னிருந்த வளாகத்தை வெறித்தவனாக தன்னுடைய இருசக்கர வாகனத்தை இயக்கினான்.
அவனது விழிகளில் பதிந்த காவல் நிலையத்தின் காட்சிகளே அவனின் மூளையை ஆக்கிரமித்திருந்தது. சாலையில் கவனம் இருந்த போதும்.
காவல் நிலையத்திற்கு உண்டான பரபரப்பு சிறிதும் அங்கில்லை. கேட்டினைத் தாண்டி உள்ளுக்குள் மையத்திலிருந்த தூபியை கடந்து கட்டிடத்தின் உள்ளே செல்ல இருந்த படிகளுக்கு மேல் காரிடாரில் போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு பெண்ணும் சிறுவனும் கண்ணீர் மல்க அமர்ந்திருக்க… அவர்களை அங்கு நடமாடிக்கொண்டிருந்த காவலர்கள் யாரும் கண்டுகொண்டதாகவே இல்லை. கேட்டில் காவலுக்கும் ஆளில்லை. ஒருவர் உள்ளிருந்து மேல்ச்சட்டை இன்றி, பனியன் மற்றும் காக்கி பேண்டுடன் கண்களை கசக்கியபடி வெளியில் வந்தார். இரவு பணி என்கிற பெயரில் நன்கு தூக்கியிருக்கிறார் என்பது பாரிக்கு பார்த்ததும் விளங்கியது. அவரின் பார்வை அழுது கொண்டிருந்த பெண்ணின் மீது இகழ்ச்சியாய் படிந்தது. அதுவும் பாரியின் கண்களுக்கு தப்பவில்லை.
‘இங்க வந்த வேலையோடு சேர்த்து இங்குள்ளவர்களையும் மாத்தணும் போலிருக்கே.’ பாரியின் மனம் சொல்லிக்கொண்டது.
*****
அவினாஷ் இன்னும் துயில் கலைந்திடவில்லை. அலைபேசி தொல்லையாய் அலறியது.
அரை உறக்கத்தில் எடுத்து காதில் வைத்தவன்… அந்தப்பக்கம் கேட்ட தமிழின் குரலில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான். தூக்கம் முற்றிலும் விலகியிருந்தது.
“என்ன தமிழ் இந்நேரத்தில். இன்னும் விடியவேயில்லையே?”
“என்னது விடியலையா! சூரியன் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சு அரைமணி ஆவுதுல. போ, பாரிக்கு பிளாக் டீ போட்டுக்கொடு. அஞ்சு மணிக்குலாம் குடிப்பான்” என்று அலைபேசியிலேயே அவியை விரட்டினாள்.
“சரி தமிழ்.”
“உஞ்சரிக்கு நான் போன் போடலல… போ… போய் அவனை பாரு. நான் லைய்ன்லே இருக்குதேன்.”
தமிழின் பேச்சை தட்டாது பாரி தங்கிய அறைக்குள் அவினாஷ் செல்ல படுக்கை பாரியின்றி வெற்றிடமாக இருந்தது.
வீட்டை நொடியில் அலசியவன்…
“பாரி காணோம் தமிழ்” என்றான்.
“இப்போதான் அவன் மொக்கு பாப்பா. காணாம போறதுக்கு. போய் அவன்கிட்டவே கம்ப்லைன்ட் கொடு.” தமிழ் அவனை கடுப்படித்தாள்.
“ஜாகிங் போயிருப்பான். இல்லைன்னா அவன் கன்ட்ரோல் ஏரியாவுக்கு சைட் சீயிங் போயிருப்பான். நீ ஃபோன் போட்டு பாருல” என்றவள் அழைப்பில் விடைபெற்றிருந்தாள்.
‘அப்பவும் சரி இப்பவும் சரி இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நான் தான் சிக்குறேன்.’ பாவப்பட்ட மனசாட்சியை அடக்கியவன் பாரிக்கு அழைத்தான்.
சாலையோரம் வண்டியை நிறுத்திய பாரி தலைகவசத்தை கழட்டி தனக்கு முன் பெட்ரோல் டேங்க் மீது வைத்துவிட்டு, அவியின் அழைப்பை ஏற்றான்.
“எங்க மச்சான் போயிட்ட. ஆள காணோம்?”
“ஜாகிங் வித் சைட் சீயிங் டா.”
“சைட் சீயிங்?”
“ஜாயின் பண்றதுக்கு முன்னாடி ஏரியா எப்படியிருக்குன்னு பார்க்கலான்னு.”
“உன்னை சரியா தெரிஞ்சு வச்சிருக்காள் மச்சான்.” சொல்லிய பிறகுதான் அவி தன் வார்த்தையை உணர்ந்தான்.
“யாரு?” பாரியின் குரலில் சட்டென்று ஒரு கடினம்.
“த… தமி…”
பாரியால் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.
“அய்யோ வந்து காய்ச்சி எடுக்கப்போகிறான்.” தன்னையே திட்டிக்கொண்டான் அவினாஷ்.
அவியின் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் பாரி காவலர் குடியிருப்பு பகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டே வந்திருந்தான்.
அக்குடியிருப்பு பகுதியில் தனித்தனி வீடுகளாக முப்பது வீடுகள் இருந்தன.
இரண்டு படுக்கையறைகளுடன் அவன் ஒருவனுக்கு தாராளமாகவே இருந்தது வீடு. வீடும் சுத்தமாகவே இருக்க, ஒருவேலை மிட்சமென்று அவியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன், அவியிடம் கூட சொல்லாது தன்னுடைய உடைமைகளை கொண்டு வந்து வண்டியில் வைத்தான்.
“பாரி என்னடா செய்யுற?”
“நைட் ஸ்டே பண்ண இடம் கொடுத்ததுக்கு தேன்க்ஸ் டா.” அவி கேட்ட கேள்விக்கு பதில் கூறாது தவிர்த்தான்.
“பாரி… நான் உன் ஃபிரண்ட் டா. என்னடா இப்படி யாரோ மாதிரி பேசுற?”
“ஃபிரண்டுக்கு தேன்க்ஸ் சொல்லக்கூடாதா?”
“நான் இங்க தனியாத்தான் இருக்கேன் பாரி. என்னோடவே தங்கிக்கோடா.” பல வருடங்கள் பிரிந்திருந்த நண்பனை உடன் வைத்துக்கொள்ளவே விருப்பப்பட்டான். அதற்குமேல் பாரியை மீண்டும் தனித்திருக்க விட்டால் தமிழ் தன்னை ஒருவழி செய்திடுவாள் என்று உள்ளுக்குள் அரண்டு போனான்.
“எதுக்கு நொடிக்கு ஒரு முறை என்னைப்பற்றி ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கவா?”
பாரியின் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவி திருதிருத்தான். ஆனால் அடுத்த நொடியே,
“நீ என்னோட இருந்தா மட்டும்தான் உன்னைப்பற்றி தமிழுக்கு தெரியுமென்றில்லை பாரி” என்றான் அர்த்தமாக.
‘ஐ க்னோவ்.’ அவனையும் அறியாது அவனின் மனம் சொல்லிக்கொண்டது.
“குவார்ட்டர்ஸ் அலார்ட் ஆகியிருக்கு அவி.” சொல்லியவன் அவியின் அடுத்த பேச்சிற்கு அங்கில்லை.
தன்னுடைய குடியிருப்பிற்கு வந்து தனக்கேற்றவாறு அனைத்தையும் செட் செய்த பிறகு தான் பாரிக்கு எதிலோயிருந்து விடுபட்ட உணர்வு.
இருப்பினும் தமிழின் பார்வையிலிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது தான் அவனின் உண்மையான நிலை.
வேண்டாம் என்பதற்கும் வேண்டும் என்பதற்கும் வார்த்தையின் தோற்றத்தில் கூட ஒரு எழுத்து என்ற சிறு மாற்றம் தான். அதே இடைவெளி தான் அவனின் மனதிலும்.
தகர்த்திட முடியாத இரும்புக்கோட்டை ஒன்றுமில்லை பாரியின் மனத்திரை. ஏனோ நடந்த நிகழ்வு அவனுக்கு ஒப்பவில்லை. ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதைவிட பெரும் நம்பிக்கை கொடுத்திட்ட ஏமாற்றம் பாரியை ஒவ்வொரு நொடியும் இறுக்கி வைக்கிறது.
குழந்தையிடம் ஒரு பொருளை பிடுங்கிக்கொண்டு அதேபோல் மற்றொன்றை கொடுத்தாலும் அதேதான் வேண்டுமென்று கேட்குமே அதே குணம் தான் இவ்விடயத்தில் பாரியினுடையது.
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமென்று அடம்பிடிப்பவனை எப்படி வழிக்கு கொண்டு வருவதென்று தெரியாது அவனுடன் சேர்ந்து அவனின் மனமும் தவிக்கிறது.
ஒவ்வொரு நாளும் அன்றைய பொழுது கழிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்ததும் காற்றென முகத்தில் மோதும் தனிமை உணர்வு இன்று வெகுவாக தாக்கியது.
அவனது பூ இன்றி நாளின் ஒரு மணித்துளியும் அவனுக்கு கடந்திடாது. மலரவளை பிரிந்து ஒரு கணமும் இருந்திட முடியாது என்றிருந்தவனின் காலமும் வாழ்வும் அவளின்றியே கடக்கின்றன.
எப்போதும் போல் மனம் பூ என்று ஓலமிட்டது.
அவளின் கைகளை பிடித்துக்கொண்டு… கடந்து சென்ற நாட்களில் அவன் அனுபவித்த ஒவ்வொரு நொடிகளையும் பகிர்ந்துகொள்ள துடித்தான்.
முன்பு பூவின்றி மலர்ந்திடாத நாட்கள் இன்று பூவின்றி வாடியது.
கண்களை இறுக மூடி நினைவுகளுக்குள் சுழலும் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டவன், மடிகணினியுடனும், கொண்டு வந்த செய்தித்தாள்களில் இருந்த நகர செய்திகள் அடிங்கிய காகிதங்களுடன் அமர்ந்துகொண்டான்.
அடுத்த ஒவ்வொரு நிமிடங்களும் தண்ணீரிலிட்ட உப்பாக கரைந்தன.
*****
பொன் மாலைப்பொழுது.
பள்ளி முடிந்திருந்தது. சிறிய வகுப்பு மாணவர்கள் அனைவரும் விடுதிக்கு சென்றிருக்க பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்,
பள்ளியின் மைதானத்தில் ஐந்தடி இடைவெளியில் அமர வைக்கப்பட்டு படித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்காணிப்பிற்கு நான்கு ஆசிரியர்கள் ஒவ்வொரு மூலையில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்தனர்.
மடியில் புத்தகம் இருக்க மாணாக்கரின் தலைகள் கவிழ்ந்திருந்தது. படிக்கும் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, கதை, பாட்டு, முன்னாலிருக்கும் மாணவ, மாணவியின் மீது கல்லெறிந்து விளையாடுவது, என்றும் நடந்து கொண்டிருந்தது.
வேந்தனுக்கு பின்னால் பூ அமர்ந்திருந்தாள்.
“வேந்தா… வேந்தா…” பூ இருமுறை மென் குரலில் அழைத்தும் வேந்தன் திரும்பாது புத்தகத்தில் மூழ்கியிருந்தான்.
வேந்தனுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த மாணவி, “வேந்தா உன் ஆருயிர் கூப்பிடுறது கேட்கலையா?” என்று கலாய்த்திட ஒற்றை முறைப்பில் அவளை வாய் மூடச்செய்தான்.
அப்பெண் பூவை சோகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள்.
வேந்தன் திரும்பப் போவதில்லை என்று உணர்ந்த பூ… சிறு சிறு கற்களை அவன் முதுகில் எரிய ஆரம்பித்தாள்.
ஐந்து, ஆறு என கற்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக,
“என்ன?” என்று மெல்லிய குரலில் சீறியபடி திரும்பிய வேந்தனின் முகம் கண்டு பூவின் முகம் சுருங்கி போனது.
“சாரி.” வருத்தமாகக் கூறினாள்.
“நீயே வச்சிக்கோ” என்ற வேந்தன் மீண்டும் புத்தகத்தில் பார்வையை பதிய வைக்க முயற்சிக்க… அவனால் முடியாது போனது.
“ம்ப்ச்” சலித்தவனாக தலையை மட்டும் திருப்பி பூவை பார்த்தவன்…
“உடனே முகத்தை சுருக்காத, நைட் டின்னர் டைம் பேசிக்கலாம்” எனக் கூறினான்.
அவன் பேசியதே போதுமென்று சரியென தலையசைத்த பூ, முதல் முறை அவனின் கோபம் கண்டு கண்களில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டாள்.
“என்னடா உங்களுக்குள்ள சண்டை?” அவர்கள் பக்கம் நடந்து கொண்டிருந்த ஆசிரியர் வேந்தனிடம் வினவினார்.
“நத்திங் சார்.”
இரு பாலருக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகள் ஒன்றாக நடைபெறும். அதன் பொருட்டு இருவரின் நட்பைப்பற்றி தமிழ் ஆசிரியரான ரூபனுக்கு நன்றாகவேத் தெரிந்திருக்க காரணம் கேட்டார்.
“பார்த்தா அப்படித் தெரியலை. கிளாசில் கூட போட்டிபோட்டு பதில் சொல்ற ரெண்டு பேரும் அமைதியா இருந்தீங்க. வாட் ஹேப்பண்ட் பாரி?”
முதல் மதிப்பு மாணவர்களை எல்லா ஆசிரியருக்கும் பிடிக்கும் என்ற வழமைப்போல் பாரியையும் பூவையும் அவருக்கும் பிடிக்கும். அதனாலே இந்த தனிப்பட்ட கண்காணிப்பு. அக்கறை.
“ரெண்டு பேரும் கா விட்டுகிட்டோம் சார்.”
“வாட்.” வேந்தன் சொல்லியதில் வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு கேட்டார்.
“என்னடா இது சின்னப்பிள்ளைத் தனமா?”
“நாங்க சின்ன பசங்க தானே சார். வீ ஹவ் சிக்ஸ்டின் ஒன்லி” என்றான் அசராது.
“கேட்டது என் தப்புடா” என்ற ரூபனும் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
“இது போதுமா உனக்கு? பேசலனா விட வேண்டியது தானே. நமக்குள்ள பிரோப்ளேம்ன்னு எல்லாருக்கும் தெரியணுமா?” என்று மீண்டும் பூவிடம் கோபமாக பேசிய பாரி எழுந்து வேறு இடத்தில் அமர்ந்தான்.
விழித்திரை மிதந்த உப்புநீர் கன்னம் இறங்கிட அந்நேரத்தை கடப்பது பூவிற்கு கடினமாக இருந்தது.
பூ வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் வேந்தனிடத்தில் தானிருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம் என்ற எண்ணமே பூவை மேலும் வருத்தியது.
இத்தனை வருடங்களில் இருவருக்குமிடையில் சின்ன முகச்சுணக்கம் கூட வந்ததில்லை. முதல் சண்டை. அதனால் பெரிதளவில் பூதாகரமாக தெரிந்தது.
இரவு உணவின் போது மணியடித்ததும் வேகமாக மெஸ் ஹாலுக்கு வந்த பூ வாயில் படியிலேயே வேந்தனுக்காகக் காத்திருந்தாள்.
பூவை பார்த்ததும் மதியம் நடந்த நிகழ்வு நினைவில் வர, எதுவும் பேசாது அவளை கடந்து உள்ளே சென்றான் பாரி.
அவனின் பின்னே சென்றவள் அவனுடனேயே இணைந்து உணவினை பெற்றுக்கொண்டு எப்போதும் அவர்கள் அமரும் மேசையில் சென்று அவனுக்கு நேரெதிர் அமர்ந்தாள்.
“வேந்தா ப்ளீஸ் பேசு.” பூவின் குரலில் கெஞ்சல்.
வேந்தன் உணவில் கவனமாக இருந்தான்.
சில நிமிடங்கள் பார்த்த பூவிற்கு பேசாது தன்னை கெஞ்ச வைப்பவன் மீது கடுப்பாக வந்தது.
‘கெஞ்சினால் மிஞ்சுவாங்க’ என நினைத்தவள்,
“இந்தால என்னோடதையும் சேர்த்து உண்கு” என்று தட்டை அவன் முன் நகர்த்தி வைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.
வாயிற்கு அருகில் உணவை கொண்டு சென்ற வேந்தனின் கை அப்படியே நின்றது.
வேந்தனை தாண்டி பூ செல்ல அவளின் கையை பற்றி நிறுத்தியிருந்தான்.
“அல்ரெடி நூன் டைம் நான் சாப்பிடல. இப்பவும் சாப்பிடலன்னா… என்னால முடியாது. ரொம்ப பசிக்குது பூ.” பூவின் கண்களை பார்த்து கூறினான்.
அடுத்தநொடி அவனுக்கு அருகில் அமர்ந்து நகர்த்தி வைத்த தட்டை முன் எடுத்து வைத்து வேகமாக உண்ணத் துவங்கினாள்.
இருவரும் சாப்பிடும் வரை ஒன்றும் பேசவில்லை. உணவு நேரத்திற்கு பின்னர் வரும் ரிலாக்ஸ் டைமில் மெஸ் சுற்றியுள்ள நடைபாதையில் மௌனமாக நடந்தனர்.
“அம் ரியலி சாரி வேந்தா. நீ என்னை சாப்பிட சொன்னதாத்தான் சுரேஷ் சொன்னான். நீ சொல்லி நான் கேட்கலன்னா திட்டுவியேன்னு தான் நான் சாப்பிட்டேன். அப்பவும் அவன்கிட்ட திரும்பத்திரும்ப கேட்டேன்டா. அவன் தான் சப்ஜெக்ட்டில் டவுட் கேட்டு டாப்பிக் சேன்ஞ் பண்ணிட்டான். நானும் அவனுக்கு சொல்லிக்கிட்டே சாப்பிட்டுட்டேன். அகெய்ன் சாரிடா.”
நின்று பூவின் முகத்தை ஏறிட்ட பாரி… அவளின் உச்சித் தலையில் உள்ளங்கையை வைத்து அழுத்தினான்.
“எனக்கு இந்த பைவ் இயர்சா உன்னோடவே சாப்பிட்டு பழகிருச்சு. இங்க எல்லாமே எனக்கு நீதான் பூ. அம்மாக்கு கூட அவங்களை விட உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியும். உன்கிட்ட மட்டும் தான் பூ என்னால் ஓப்பனா இருக்க முடியுது. உன்னை உன் பிரண்ட்ஷிப்பை பீக்ல வச்சிருக்கேன். உனக்கும் நான் அப்படித்தான்னு தெரியும். பட் மதியம் நான் வந்ததைக்கூட கவனிக்காம அவனோட இன்ட்ரஸ்ட்டா பேசிட்டே சாப்பிட்டுட்டிருந்தியா ஒரு மாதிரி ஆகிருச்சு. நமக்கு நடுவில் யாரும் வரக்கூடாதுன்னு அந்த செக் மைன்ட் ஃபுல்லா ஒரு பிரஷர், கோபம்.”
இருவரும் நடையைத் தொடர்ந்தனர்.
“இன்னைக்கு பீன்ஸ் பொரியல். உனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு பிடிச்ச டிஷ் நான் தான் உனக்குத் தருவேன். என்னோட மட்டும் தான் ஷேர் பண்ணிப்ப. பட் டுடே.” மெல்லிய வருத்தம் அவனது குரலிலும் முகத்திலும்.
“பட் ஐ டிடின்ட் மீன் இட்.” வேந்தன் முன்னேற பூவின் நடை நின்றது.
சில அடிகள் சென்று திரும்பிய பாரி மீண்டும் அவளருகில் வந்து நின்றான்.
“நான் வேண்டாம் சொல்லும் போதே அவன் வச்சிட்டான் வேந்தா. நான் அதை சாப்பிடவே இல்லை.” தன்னுடைய வேந்தனை வருந்தச் செய்துவிட்டோமே என்கிற மென் சோகம் அவளிடம்.
“இதுவரை ஒருமுறை கூட நீயும் நானும் ஃபிரண்ட், எனக்காக அதை செய் உனக்காக இதை செய்றேன்னு நாம சொல்லிக்கிட்டது கிடையாது. யார்கிட்டவும் எக்ஸ்பிலைன் பண்ணதுமில்லை. மத்தவங்க எல்லாரும் சரியான கண்ணோட்டத்தில் நம் பிரண்ட்ஷிப்பை புரிஞ்சிக்கக் காரணம் நமக்குள்ள இருக்க அண்டர்ஸ்டேண்டிங் தான். நம்ம ஃப்ரெண்ட்ஷிப் வெளிப்படையா இருந்தது தான். நமக்கு நடுவில் யாரும் வரது எனக்கு பிடிக்கலடா. இட்ஸ் ஹர்ட்டிங். இப்போ சொல்லணும் தோணுது பூ. நீ என் ஃபிரண்ட். எனக்கு மட்டும். என்னோட ஃபிரண்ட்.
ஷேரிங், அடிச்சிக்கிறது, சண்டை போடுறது, எல்லாமே நம்ம ரெண்டு பேருக்குள்ள தான் இருக்கனும்.
இதை உன்மேல் எனக்கிருக்க பொஸஸிவ், இல்லைன்னா உன்னை நான் கண்ட்ரோல் பன்றேன் எப்படி வேணாலும் வச்சிக்கோ. பட் உனக்கு ஃபிரண்ட் அப்படின்னா அது நான் மட்டும் தான். உன்னை விட்டுலாம் கொடுக்க முடியாது.”
சுரேஷால் பூவின் நட்பில் கொண்ட உரிமை உணர்வு வேந்தனையே அறியாது வெளியில் வந்துகொண்டிருக்க இமைக்காது பார்த்திருந்தாள் பூ.
நட்பிலும் உரிமை உணர்வு அழகு தான்.
நீ மட்டும் போதும் என்பது நட்பிலும் வரம் தான்.
அதனை தன்னை அறியாது பூவிற்கு உணர்த்தினான் பாரி வேந்தன்.
“நீ சொன்னதெல்லாம் நானும் சொல்ல வேண்டியது வேந்தா. எனக்கு ஃபிரண்ட் அப்படின்னாலே நீ மட்டும் தான். சாரிடா.”
மீண்டும் மன்னிப்பு கேட்ட பூவின் தோளினை அணைத்து விடுத்தான் பாரி.
“எமோஷனல் ஆகிட்டேன் அவ்வளவு தான். விடுடா” என்றவன், “நீ, உன்னோட ஃப்ரண்ட்ஷிப் இல்லாம இருக்க முடியாதுன்னு இந்த ஹாஃப் டேவில் நல்லா புரிஞ்சிடுச்சு பூ. என்னை என்ன பண்ணி வச்சிருக்க பூ? உன்னோட ஃப்ரண்ட்ஷிப்புக்கு என்னை நீ அடிமை படுத்தி வச்சிருக்க” என்பதை கூட சந்தோஷமாகக் கூறினான்.
“எனக்கும் தான். நீ பேசாம மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு சுத்தும்போது எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” எனக் கேட்ட பூ,
“இனி என்ன நடந்தாலும் பேசாம மட்டும் இருக்காத வேந்தா” என்றாள்.
அவளின் குரலிலிருந்த சோகம் அவனை வெகுவாகத் தாக்கியது.
தன் ஒதுக்கத்திற்காக “சாரி பூ” என்றவனுக்கும் அவனின் விலகல் பிடிக்காது வருந்திய பூவிற்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை… சிறு நேர பிரிவைக்கூட ஏற்க முடியாத அவர்களின் நட்பு மொத்தமாக பிரிந்து சென்றிடக்கூடுமென்று.
நட்பின் பிரிவும் நொடிக்கு நொடி வருத்துமென்றும்.
_______________________________
“என்னத்துக்கு இம்புட்டு ஆவலாதியா கெளம்புற? விட்டுட்டுப்போன மவராசனே வந்து கூட்டிட்டி போனாத்தேன் உனக்கு அங்கன மரியாதி(மரியாதை) இருக்கும்.”
சிறு பெட்டிக்குள் தன்னுடைய உடைமைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் பேத்தி தமிழிடம் தங்கம் கத்திக் கொண்டிருந்தார்.
அவரின் கத்தலை காதில் வங்காதவள், அடுக்கி முடித்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“ஏட்டி இங்கன நான் கரடியா கத்துறது உஞ்ச்(உன்) செவுளுல விழுகலையா?”
“கரடித்தேன் கத்துதுன்னு நினைச்சேன்.”
தமிழ் கொடுத்த பதிலில் தங்கம் வாய் மேல் கை வைத்தவராக அறையை விட்டு வெளியேறினார்.
“உம் மவ(ள்) என்ன சொன்னா கேட்டியாட்டி?” மருமகளிடம் பொரிய ஆரம்பித்தார்.
“புள்ள வளத்திருக்கா பாரு. கொமட்டுலே குத்தி குத்தி வளத்திருந்தா பெரியவங்கிற மரியாதி தெரிஞ்சிருக்கும்.
இப்போ என்னத்துக்கு அங்கன போவனமாட்டிக்கு?”
“ம்மா சும்மா சலம்பிட்டு இருக்காதம்மா. வாப்பெட்டிய செத்த சாத்து.” தமிழின் தந்தை மணியரசு, அவரது அன்னை தங்கத்தினை அடக்கினார்.
“அவளோட வாழ்க்கைம்மா இது. அவளே பார்த்துகிடட்டும்.”
“அன்னைக்கும் இதையேத்தாம்ல சொல்லி என் வாப்பெட்டிய மூடுன. எம்புட்டு நாளைக்குல இது. பெரியவ உச்சி குளிர வாழுறது பார்த்து, சின்னவ இவளும் அப்படியொரு வாழ்வு வாழனுமேன்னுக்கு எனக்கு ஆசை இருக்காதால.
பொம்பள புள்ளய கூட்டாளிய வச்சிருக்க எவனும் கண்ணாலம் பண்ணிக்காமலால இருக்கான். கூட்டாளிய இருந்தவகலே கண்ணாலம் கட்டிக்கிட்டு சந்தோஷமாத்தானே வாழுறாங்க. உன் மருமவந்தேன் என்னமோ அதிசயம் கணக்கா எம் பேத்தியை ஒதிக்கி வச்சிருக்கான்” என்று தங்கம் வழக்கம்போல் ஆரம்பத்திலிருந்து தமிழின் கதையை புலம்ப ஆரம்பித்தார்.
‘இது இன்னும் ஒரு பொழுது நேரத்துக்கு நிக்காது.’
“இப்போதைக்கு உங்க ஆத்தா வாப்பெட்டி மூடமாட்டாக. நீங்க என்னத்தையும் பேசி தமிழு கெளம்புறதை தடுத்துப்புடாதீக” என்று அரசுவின் மனைவி மணியம்மை கணவரிடம் மெல்லிய குரலில் சொல்லி தமிழின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
குளித்து முடித்து கிளம்பித் தயாராக இருந்த மகளைக் கண்டதும் கண்களில் துளிர்த்த கண்ணீரை சேலை தலைப்பால் ஒற்றிக்கொண்ட மணியம்மை…
“வேணுங்கிறதை எடுத்துக்கிட்டியா தமிழு” எனக் கேட்டவாறு அவளின் பெட்டியை சரி பார்த்தார்.
“உன் மாமியார் வீட்டுக்குத்தானே தமிழு போற?”
கேட்ட தந்தைக்கு இல்லையென தலையசைத்தாள் தமிழ்.
“பொறவு?”
“இனியும் அவனை…” அன்னை முறைத்த முறைப்பில் அவன் என சொல்லியதை மாற்றி “அவங்களை விட முடியாதுப்பா” என்றாள் தமிழ்.
“சரி தாயி உன் மனம்போல பண்ணு. உன் அத்தைக்கு தெரிஞ்சாத்தான் வெசனப்படுவாக” என்றவர் தமிழின் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார்.
“என்னமாட்டுக்குமின்னா பெரிய மாப்பிள்ளைக்கிட்ட கேளுத்தா” என்ற மணியம்மை கையோடு கொண்டு வந்திருந்த குங்குமத்தை தமிழின் நெற்றியில் வைத்து வழி அனுப்பினார்.
“என்ன அப்பத்தா வரட்டுமா?” எனக்கேட்டு, தூணில் சாய்ந்தபடி புலம்பிக்கொண்டிருந்த தங்கத்தை வம்பிற்கு இழுத்தாள் தமிழ்.
“நான் ஏதோ ஆத்தமாட்டாம வெதும்பிக்கிட்டு கெடக்கேன். என் வாப்பெட்டிய ஏண்டி புடுங்குற” என்று எழுந்து தமிழின் அருகில் வந்த தங்கம், “ராசாத்தி கணக்கா நீ வாழுறத பார்த்துப்புட்டா எனக்கு வேறென்னத்தா” எனக்கூறி அவளின் கன்னம் வழித்தார்.
“ராவுல போற பார்த்து சூதானமா இருந்துக்கோ. அங்கன போனதும் தகவல் சொல்லு” என்ற பெரிய மனிதியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தந்தை தயாராக வைத்திருந்த காரில் ஏறினாள் தமிழ்.
****
ரயில் நிலையம்.
“தம்பி இந்தப்பக்கம் வந்திருச்சாம்மா?”
ரயில் புறப்படுவதற்கு இன்னும் அவகாசம் இருக்க… அரசு மகளிடம் பேச்சுக்கொடுத்தார்.
“வந்துட்டாங்கப்பா. ஹோம் மினிஸ்டர் பொண்ணு இறப்பு விடயத்துல சந்தேகம் இருக்குமாட்டிக்கு. அந்த கேசுக்காக இவரை ஸ்பெஷல் பிரிவுல சென்னைக்கு மாற்றியிருக்காங்க.” தந்தை கேட்ட கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்தாள்.
“ஹ்ம்ம்… நீயும் அமைதியா போற பொண்ணில்லை. அதுவும் மாப்பிள்ளை விடயத்தில், நீ இத்தனை வருசமா பொறுமையா இருந்ததுக்கும், இப்போ திடீர்னு கெளம்பி போறதுக்கும் வலுவான காரணமிருக்குமுன்னு மட்டும் விளங்குதுத்தா. என்ன பண்ணாலும் பார்த்து சுதாரிப்பா பண்ணு கண்ணு” என்றவர்,
“திரும்பவும் மாப்பிள்ளைக்கு கோபம் வர கணக்கா என்னத்தையும் செய்துபுடதத்தா” என்று சேர்த்தே கூறினார்.
“புரியுதுப்பா” என்ற தமிழுக்கு கணவனின் கோபம் எதனால் எனும் போதே ஆயாசமாக வந்தது.
‘புரிஞ்சிக்கவே மாட்டியாடா?’ எப்போதும் அவனிடம் மனசீகமாகக் கேட்கும் கேள்விக்கு இப்போதும் பதலில்லை.
கணவனை நினைக்கையில் பல நினைவுகள் அவளுள் சுழன்றது.
அத்தோடு அவன் அவளிடம் கெஞ்சியதும்… மிரட்டியதும்… இறுதியில் கோபம் கொண்டு கத்தியதும் நினைவில் ஆட… முகத்தோடு மனமும் சேர்ந்து கசங்கியது.
தமிழின் தோளில் கை வைத்து அழுத்திய அரசு…
“எல்லாம் சரியாப்போவும் தமிழ்” என்று ஆறுதல் வழங்கினார் வார்த்தையால் மட்டுமே. அவருக்கு மகளின் வாழ்க்கையை நினைத்து பயம் இருக்கத்தான் செய்தது. அதோடு பூவுடனான அவனது அன்பை நினைக்கையில் சற்று பெருமையாகவே இருந்தது.
என்னயிருந்தாலும் மனைவி என்று ஆனபின் தமிழை பூவின் நட்புக்காக ஒதுக்கி வைத்ததைத்தான் இன்னமும் அவரால் ஏற்க முடியவில்லை. அந்த கோபமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதே. மகளின் வாழ்வாகிற்றே.
யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து இறங்கித்தானே போயாக வேண்டும் என்கிற எண்ணமே அவரின் கோபத்தை ஒதிக்கு வைக்க காரணமாக அமைய, மகளை அவளின் வாழ்வைத்தேடி பயணம் அனுப்பி வைக்க வந்திருந்தார்.
ரயில் புறப்படுவதற்கு ஏதுவாக அறிக்கை ஒலித்திட…
“நீங்க கெளம்புங்கப்பா. நான் அங்கன போய் சேர்ந்தததும் போன் போடுதேன்” என்று தமிழ் கூறிட அரசு சிறு தலையசைப்புடன் அங்கிருந்து நகர ரயிலும் மெல்ல தன் இயக்கத்தை துவங்கியது.
சன்னல் கம்பியில் சாய்ந்தபடி பின்னால் செல்லும் மரங்களின் காட்சி தமிழின் மனதையும் எங்கோ இழுத்துச் சென்றது.
‘லவ் யூ பாரி.’ யாரோ ஒரு பெண்ணின் குரலில் சொல்லப்பட… ‘லவ் யூ டூ பேபி’ என்ற பாரியின் பதிலும் செவியில் அறைந்திட… கன்னம் இறங்கிய நீரை துடைத்துவிட்டு பெர்த்தில் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
இவர்களின் பிரிவுக்கு பாரி பூவுடன் கொண்ட நட்பு காரணமாக இருந்தாலும்… இன்னொரு காரணமும் இருந்தது. அது பாரியின் காதல்.
நினைக்க நினைக்க வதைத்தது.
கணவனின் நிகழ்வுகளோடு உறங்கியிருந்தவளின் விடியல் சென்னையில் ஆரம்பித்தது.
அவளுக்கு முன்பாக ரயில் நிலையம் வந்து காத்திருந்தான் இளம்பரிதி.
ரயிலிலிருந்து இறங்கிய தமிழ் பரிதியை கண்டதும் வேகமாக சென்று அணைத்துக் கொண்டாள்.
“மாமா.”
“எப்படிடா இருக்க?”
அவனிலிருந்து விலகியவள் “நீங்களே பார்த்துக்கோங்க” என்று ஒரு அடி பின் நகர்ந்து நின்றாள்.
“வாலு” என்றவன் அவளிடமிருந்து பெட்டியை வாங்கிக்கொண்டான்.
“மாமா சூடா ஒரு காஃபி.”
“வீட்டுக்கு போயிடலாம்டா. நான் வரும்போது வீட்டில் யாரும் எழுந்துக்கல. நாம் போக கொஞ்சம் லேட் ஆனாலும் உன் அக்கா என்னை காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாள்” என்று சொல்லிகொண்டே நடந்து காரின் அருகில் வர தமிழின் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை.
அவளின் அந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை என்பதை பரிதியும் உணர்ந்தே இருந்தான்.
காரில் ஏறி அமர்ந்தவாறே வினவினாள்.
“அக்காகிட்ட சொல்லலையா?”
“நான் சொல்லியிருந்தாலும் அவள் நம்ப மாட்டாள். அதான் உன்னை கூட்டிட்டு போய் நீ வந்துட்ட, திரும்பி வந்துட்டேன்னு சொல்லிக்கலாம்” என்றான் காமெடியாக. பேச்சினூடே காரை இயக்கியிருந்தான்.
சிரித்து முடித்தவள்… “நான் அங்க வரலையே மாமா!” என்றாள்.
“அப்போ உன் அவரை பார்க்க மட்டும் தான் வந்தியா?” பரிதியிடம் சிறு கோபம்.
“நான் அங்க வந்தா என்னை பார்த்ததும் அத்தை எல்லாம் அவங்களாலதான்னு வருத்தப்படுவாங்க மாமா.”
“இப்பவும் அவங்களுக்காகத்தான் யோசிக்கிற. உன்னைப்பற்றி சிந்திக்கவே மாட்டியா தமிழ்’ம்மா.” அவனது அன்னையால் தானே எல்லாம்.
“என்னைப்பற்றி யோசிக்க ஒரு ஆள் இருக்கும்போது நான் வேற தனியா யோசிக்கணுமா மாமா?” எனக் கேட்டவளுக்கே தான் சொல்லுவது இல்லாத ஒன்று, இறந்த காலத்தில் இருந்த ஒன்று என்று தெரிந்துதான் இருந்தது.
“ம்ம்.”
“நீங்க நம்பலன்னு தெரியுது மாமா” என்ற தமிழ், “வெறுத்தாலும் வெறுக்கவாவது என்னையே நினைச்சிட்டு இருப்பான் மாமா” என்றாள்.
“இது கரெக்ட்” என்று பரிதியும் அவளின் அப்பேச்சை ஒப்புக்கொண்டான்.
“இப்போ உன்னை எங்க டிராப் பண்ணனும்?”
“போலீஸ் குவார்ட்டர்ஸ்.”
“அப்போ நீ வீட்டுக்கு வரமாட்ட!”
“வந்தா அவனோடதான் மாமா.”
“நாலு வருடமா இந்த அழுத்தத்துக்கு மட்டும் குறைச்சலில்லை” என்ற பரிதி, “அங்க அவன் குவார்ட்டர்ஸிலா தங்கப்போற?” என வேண்டுமென்றே கேட்டான்.
“அந்த பிளான் தான் முதலில் யோசிச்சேன். ஆனால் பாருங்க, இருக்க கோபத்தில் சட்டுன்னு வெளிய தள்ளி கதவை சாத்திட்டான்னா என்ன பன்றது அதான் இப்போதைக்கு அந்த பிளான் டிராப் பண்ணிட்டேன்.”
பரிதி சொல்ல முடியாத பாவனையில் அவளை பார்த்தான்.
“நீங்க உள்ளுக்குள்ள கடுப்பாகுறது தெரியுது மாமா. பட் எனக்கும் வேற வழியில்லை. இனி தினமும் என்னை பார்த்துகிட்டே இருக்க வைக்கப்போறேன். எப்படி என்னைத் தவிர்க்கிறான்னு நானும் பார்க்கிறேன்” என்றவளுக்கு அவளின் கணவன் பாரி வேந்தனை எண்ணுகையில் சற்று கலவரமாகத்தான் இருந்தது.
சிறு வயதில் எப்படியோ… ஆனால் கல்லூரி காலங்களில் எதாவது ஒன்றென்றால் முதலில் அவன் கை தான் பேசும். அவனின் முரட்டு குணம் கண்டு அவன்மீது பயம் கொள்ளாத ஒரே ஆள் பூ மட்டும் தான்.
ஆனால் இப்போது அவனைப்பற்றி நினைப்பது தமிழ் ஆயிற்றே. கலக்கம் சூழத்தான் செய்தது.
“குவார்ட்டர்ஸ் வந்தாச்சு தமிழ். ஜென்சி வீடு எது?”
ஜென்சி தமிழ் மற்றும் பாரியின் கல்லூரித் தோழி. அவினாஷிற்கும்.
“செகண்ட் கிராசில் ஃபோர்த் வீடுன்னு சொன்னா(ள்) மாமா.”
தமிழ் சொல்லிய வீட்டின் முன்பு பரிதியின் கார் நின்றது.
அவ்வீட்டிற்கு பக்கத்தில் இருந்த வீட்டிற்கு முன் சுவற்றில் இருந்த பெயர் பலகையை கண்டதும் பரிதி தமிழைத்தான் பார்த்தான்.
‘பாரி வேந்தன். ஐ.பி.எஸ்.’
“இது உனக்கு முன்னாடியே தெரியுமா?”
தெரியாதென உதடு சுளித்து இல்லையெனத் தலையாட்டினாள்.
“விதியே உங்களை சேர்த்து வைக்க பிளான் பண்ணிடுச்சுப்போல” என்ற பரிதிக்கு அவர்கள் ஒன்னு சேர்ந்து வாழ்ந்தால் சந்தோஷம் தான்.
“சரிடா நான் இப்படியே கிளம்புறேன். வீட்டுக்கு போய் அவங்களையெல்லாம் சமாளிக்கணும்” என்று பரிதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தமிழ் எதையோ சொல்ல முடியாத பார்வை பார்த்தாள்.
பொருளுணர்ந்த பரிதியும், “நீயா அங்க வரும்வரை உன்னை யாரும் வந்து தொல்லை பண்ணமாட்டாங்க” என்று உறுதியளித்தான்.
தமிழும் காரிலிருந்து இறங்க… ஜென்சியும் வீட்டிலிருந்து வெளியில் வந்தாள்.
பல வருடங்களுக்குப் பின்னர் தோழியை பார்த்ததால் அணைத்து விடுவித்தாள்.
“உள்ள வாங்கண்ணா.” பரிதியையும் வரவேற்றாள்.
“இருக்கட்டும்மா. பார்த்துக்கோங்க” என்றவன், தமிழ் கார் பின்னாலிருந்து பெட்டியை இறக்கியதும் சென்றுவிட்டான்.
“வா தமிழ்” என்ற ஜென்சி அவளின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல… தமிழும் பக்கத்து வீட்டை திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே உள் சென்றாள்.
இரு வீட்டுக்கும் நடுவில் மதில் சுவர் மட்டுமே பிரிவாய் இருந்தது.
“நீ அங்க பார்க்கிறது வேஸ்ட். காலையிலே கிளம்பிட்டான்.” ஜென்சி தமிழுக்கு வேண்டிய தகவலைச் சொல்லிட… கேட்டுக்கொண்டதற்கான “ம்” என்ற ஒலி மட்டும் தமிழிடம்.
“எனக்கு ஒன்னு மட்டும் புரியல தமிழ். இந்த நாலு வருடம் நிஜமா நீ பாரியை மீட் பண்ணவேயில்லையா?”
“அவன் தான் என்னை பார்க்கல.” சாதாரணமாகத் தோளை குலுக்கியபடி கூறினாள் தமிழ்.
“புரியல?”
“எஸ்.ஐ மேடமுக்கு இப்போ என்ன புரியல” என்ற தமிழ்… “நான் அவனை பார்க்க அடிக்கடி பெங்களூர் போவேன். பார்த்துட்டு வந்திடுவேன்” எனக்கூறி அங்கிருந்த குஷனில் அமர்ந்தாள்.
“பாரி பெங்களூரில் தான் இருந்தான்னு, இங்க புது டிசி வராருன்னு டீட்டெயில் சொன்ன போதுதான் எங்களுக்கேத் தெரியும். பட் உனக்கெப்படித் தமிழ்… தெரிஞ்சும் யார்கிட்டவும் சொல்லாம இருந்திருக்க?” ஜென்சி நண்பர்கள் இருவரின் வாழ்வு வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாத ஆதங்கத்தில் கேட்டுவிட்டாள்.
“சொல்லக்கூடாதுன்னு இல்லை ஜென். அவனிருக்கும் இடம் தெரிஞ்சா அத்தை மாமான்னு எல்லோரும் போய் தொல்லை செய்வாங்க, கோபம் தான் அதிகமாகும். அவனுக்கு தேவைப்பட்ட ஸ்பேஸ் கொடுக்க நினைத்தேன். அவ்வளவு தான்.
பரிதி மாமாவால் கண்டுபிடித்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா? எனக்காகத்தான் அவரும் பொறுமையா இருக்கார்.”
“நீ பாரியை லவ் பண்ணியிருப்பியோ தோணுது தமிழ். பன்றதெல்லாம் பார்த்தால், உன் அத்தைக்காகவும், பாட்டிக்காகவும் மேரேஜ் செய்துகிட்ட மாதிரி தெரியல?”
“எல்லா கேள்விக்கும் இப்போவே பதில் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காதே ஜென்” என்ற தமிழ் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
“அப்போ லவ். அது தான் உண்மையில்லையா?”
“மே பீ.”
கண்களை தமிழ் திறக்கவே இல்லை.
மீண்டும் ஏதோ கேட்க வந்த ஜென்சியை கையெடுத்து கும்பிட்ட தமிழ்… “போலீஸ்காரின்னு கேள்வி கேட்டு நிரூபிக்காதடி. முடியல. பசிக்குது. எதாவது கொடு” என்றாள்.
“அச்சோ சாரி தமிழ். சாரி, மறந்துட்டேன்” என்ற ஜென்சி பத்து நிமிடங்களில் கையில் தோசை மற்றும் பொடியுடன் வந்தாள்.
ரயிலிலே ஃபிரஷ் ஆகி வந்திருந்ததால் தமிழ் உணவினை பார்த்ததும் வேகமாக உண்டாள். உண்டு முடித்த பின்னரே தன்னை தெளிவாக உணர்ந்தவள் வீட்டிற்கு அழைத்து தான் வந்துவிட்டதையும் ஜென்சியுடன் தங்கிக்கொள்வதையும் கூறியதோடு… அங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதையும் கூறினாள்.
அவள் வேலைக்கு செல்ல இருக்கிறாள் என்பது தெரிந்ததும் தங்கம் கத்தத் துவங்கிவிட்டார்.
“கட்டிணவனோடு வாழப்போறா(ள்)ன்னு நினைச்சாக்கா சோலிக்கு போறேன்னு சொல்லுதா. இதை என்னான்னு கேட்டுக்கிடமாட்டியாள அரசு” என்று அவர் அங்கு கத்துவது அலைபேசி வாயிலாக தமிழுக்கு நன்கு கேட்டது.
“பொழுதன்னைக்கும் உம் பேரனையே சுத்த சொல்றியாக்கும். இங்கன வந்தது வேலைக்குந்தேன். உன் வாவ கொஞ்சம் மூடேன் அப்பத்தா. உன் ஜம்பெம் எல்லாம் என்னுகிட்டத்தேன். எம் புருசன்கிட்ட காட்டேன் பாப்போம்.” எதை சொன்னால் கிழவி வாயை மூடுமென்று தெரிந்து பேசினாள்.
“உன்னய்ய பேசி செயிக்க முடியுமா?” என்ற தங்கம், “என்னவும் பண்ணு. ஆனா வாரப்போ சோடியாத்தேன் வரனும்” என்று கட்டளை போல் கூறி வைத்தார்.
“ஷ்ஷ்ஷ்…” இவங்களுக்கே இப்படியிருக்கே என்று தமிழுக்கு பெருமூச்சு ஒன்று இப்போதே கிளம்பியது.
“டேய் சத்தியமா முடியலடா. இப்போவே கண்ணை கட்டுதே” என்று எங்கோயிருக்கும் கணவனுக்கு கேட்டுவிடாதோ என்கிற நினைப்பில் கத்தினாள்.
“எதுக்குடி இப்படி கத்துற. இது போலீஸ் ஏரியாடி. என்னவோ ஏதோன்னு யாராவது வரப்போறாங்க” என்று வேகமாக அறைக்குள்ளிருந்து வெளியில் வந்தாள் ஜென்சி.
ஜென்சியின் வார்த்தைகளை தமிழ் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
“எங்க போயிருக்காங்க தெரியுமா?”
தமிழ் யாரைக் கேட்கிறாள் என்று தெரிந்தே யாரென்று வினவினாள் ஜென்சி.
“நான் யாரை கேட்கிறேன் உனக்குத் தெரியும்.” சிறுப்பிள்ளையென முறைத்து மெல்லிய குரலில் கூறினாள்.
“நீ ஒரு நேரம் அவன் இவன் சொல்லுற இன்னொரு நேரம் அவங்க இவங்க சொல்லுற இதில் நான் யாரைன்னு சொல்லுறது தமிழ்” என்று ஷூவை போட்டுக்கொண்டே கேட்டாள் ஜென்சி.
“சொல்லுலைன்னா போடி” என்ற தமிழ் பாரி வந்து விட்டானா என்று வெளியில் எட்டிப்பார்க்க… இப்போதும் அவன் வீடு பூட்டியே இருந்தது.
“அவ்வளோ ஆர்வமா?”
“லைட்டா. பார்த்து த்ரீ மந்த்ஸ் ஆகுது” என்றாள்.
“நைட் தான் வருவாங்க.” யூனிஃபார்மில் இப்போது இருப்பதால் ஜென்சி பாரியை தன்னுடைய மேலதிகாரி என்ற முறையில் பன்மை பண்பில் கூறினாள்.
“என்ன மரியாதையெல்லாம்?”
“நேத்தே ட்யூட்டியில் ஜாயின் பண்ணிட்டாங்க.”
“ஜாயினிங்க்கு இன்னும் டூ டேய்ஸ் இருக்கே!”
“ம்ம்… அப்படித்தான் நினைச்சு ஸ்டேஷனில் எல்லோரும் அசால்ட்டா இருந்தோம். வந்ததும் பார்வையாலேயே லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு” என்ற ஜென்சி நேற்று நடந்த நிகழ்வை தமிழிடம் கூற, அவளின் கண்கள் அகல விரிந்தன.
“பாரி இன்னும் இறுக்கமாகிட்டான் தோணுது தமிழ்” என்ற ஜென்சிக்கு தமிழடமிருந்து மௌனமே பதிலாக.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
40
+1
4
+1
Enak rendu perum orea person nu thonuthu