அத்தியாயம் 2 :
“தேன்க்ஸ் டா பாரி. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.” செக்ரி சிறு கவலையோடு கூறியிருந்தார்.
இறுதியாக பாரி கையாண்ட வழக்கையும் நேற்று முடித்து வைத்து… அவ்வழக்கின் குற்றவாளிகளையும், அவற்றிற்கான ஆதாரங்களையும் செக்ரியிடம் ஒப்படைத்தான்.
நேற்று திரையரங்கில் அவன் தேடிக்கொண்டிருக்கும் குற்றவாளிகள் அங்கு வரப்போவதாக தகவல் அறிந்தே சென்றான். அங்கு அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிவதற்கே இடைவேளை வரை காத்திருந்தான். இருவரும் தாங்கள் கொண்டு வந்த பைகளை மாற்றிக்கொள்ள அதிலிருப்பது என்னவென்று இத்தனை மாதங்களாக அவற்றைப்பற்றி தேடுதல் நடத்தும் அவனுக்கு நன்றாகவேத் தெரிந்தது.
வார நாளில் தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆதலால் தங்களுக்கு சிரமம் இருக்காது என்பதற்காகவே தமிழ் திரைப்படம் ஓடும் திரையரங்கைத் தேர்ந்தெடுத்திருந்தனர். பைகளை மாற்றிக்கொண்டதும் இருவரும் கிளம்ப முயற்சிக்க… நொடியில் தன் போலீஸ் அடியால் வீழ்த்தி மயக்கம் அடையச்செய்திருந்தான்.
காவல் நிலையம் கொண்டு வந்தவன், அவர்களின் பைகளை ஆராய… அதில் அரிய வகை வைரங்கள் வெளிநாட்டிலிருந்து முறையான கணக்கு மட்டும் வரிகள் இல்லாது கடத்தப்பட்டிருப்பது தெரிந்தது.
வைர கடத்தல் மூலம் நிறைய கருப்பு பணங்கள் புழக்கத்தில் வருவது தெரிந்தே இதன் குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு பாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மாதங்களில் காரணமான குற்றவாளிகள் அனைவரையும் பிடித்துவிட்டாலும், அவர்கள் யாவரும் யாரோ ஒருவரின் கட்டளைக்கு அடிபணிபவர்களாகவே இருந்தனர். அவர்களின் தலைவன் யாரென்று கண்டுபிடிப்பது சவாலாக இருந்த போதும் இன்று குற்றவாளிகளை தகுந்த ஆதாரங்களோடு பிடித்து வழக்கையும் முடித்து வைத்துவிட்டான்.
அன்றே சென்னை கிளம்புவதாகக் கூறினான்.
“இன்னும் ஒரு வாரம் இருக்கே!” செக்ரி சொல்லிய போதும்… பாரியிடம் மாற்றமில்லை. சிறு தலையசைப்பு மெல்லிய புன்னகையோடு, தன்னுடைய மாற்றலுக்கான காகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டவன்… செக்ரியை பார்த்து விரைப்பாக சல்யூட் ஒன்றை வைத்தான்.
“மூணு வருசத்திற்கு முன்பு நீயிங்கு வேலையில் சேர்ந்தபோது எனக்கு சல்யூட் வைத்தது. அதுக்கு அப்புறம் இப்போ தான்” என்ற செக்ரியிடம் பாரியை நோக்கிய கனிவு மட்டுமே அந்நேரம்.
“வாழ்க்கையில் உனக்குன்னு யாராவது வேணும் பாரி. இப்படியே யாருமில்லாம இருந்திட முடியாது. நம்ம கஷ்டத்தை சொல்லுறதுக்கு ஏதாவது ஒரு உறவு துணையா இருக்கணும். இல்லைன்னா நம்ம வாழுற வாழ்க்கைக்கே அர்த்தம் இருக்காது. உனக்கு இன்னும் வாழ்க்கை நீண்டு இருக்கு. இப்படி தனிமையில் அதை தொலைச்சிடாதே!”
செக்ரி பாரியை அணைத்துக் கொண்டார்.
‘எனக்குன்னு எல்லாமே இருக்கு. அம்மா, அப்பா, அண்ணா, நட்பு, எல்லாமே. ஒருத்தி இருக்கா(ள்). மொத்தமா என்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கிற ஒருத்தி. என் முகத்தை வைத்தே நான் என்ன யோசிக்கிறன்னு கண்டுபிடிச்சிடுவா. இப்போக்கூட இந்த செகண்ட் நான் என்ன பன்றன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கும்.’ மனதில் சொல்லிக்கொண்டவனுக்கு மனம் இன்னும் இன்னும் இறுகியது. அதற்கான காரணம்?
‘யாரும் வேண்டான்னு நான்தான் அவங்களையெல்லாம் ஒதுக்கி வைத்திருக்கேன்’ என நினைத்தவன் செக்ரியின் நெருக்கத்திலிருந்து தன்னை விடுத்துக்கொண்டான்.
திரும்பி நடந்தவனிடம்…
“அங்கு போயும் கன்னடத்தில் பேசிடாதே… குற்றவாளி முழிக்கப்போகிறான்” என்ற செக்ரி சத்தமாக சிரித்து வைத்தார்.
‘தமிழ்.’ ஒருமுறை தனக்குள்ளே முணுமுணுத்தான். ‘வெறுத்திட முடியுமா?’
தான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தவன், ஏற்கனவே பயணத்திற்கு தகுந்தவாறு அடுக்கி கட்டி வைத்திருந்த இரு பெரிய பைகளை எடுத்தவன்… தன்னுடைய இருசக்கர வாகனத்தின் பின்னால் வைத்து கட்டினான்.
உடைகள் மற்றும் புத்தகங்கள் மட்டுமே அவனது உடைமைகள். தனியாக இருந்ததாலோ என்னவோ, அவை மட்டுமே அவனுக்கு போதுமானவையாக இருந்தன. ஐந்தாறு பாத்திரங்கள் மட்டுமே தனக்கென்று சமைப்பதற்கு வைத்திருந்தான். அதுவும் நினைத்தால் செய்து உண்பான் இல்லையென்றால் வெளியில் முடித்துவிடுவான். அப்பாத்திரங்கள் மற்றும் கட்டில் ஒன்றை தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டான். அவர்கள் வயது முதிந்தவர்கள். பிள்ளைகளற்றோர்.
அவன் அங்கிருந்து செல்கிறான் என்றதும் மிகுந்த வருத்தப்பட்டவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் வீட்டு வாடகையில் வரும் பணம் தான். தகுந்த ஆளை தான் தங்கியிருந்த வீட்டிற்கு ஏற்பாடு செய்துவிட்டான். குடியிருக்க வருவோர்களால் வயதானவர்களுக்கு தொல்லை இருக்கக்கூடாது என்பதற்காகவே.
இருவரிடமும் சொல்லிக்கொண்டவன், தன்னுடைய பறக்கும் ராஜாளியை உயிர்ப்பித்து சென்னை நோக்கி தன் பயணத்தை தொடங்கினான்.
பயணம் நிஜத்தில் மட்டுமல்ல… நினைவுகளோடும்.
********
ஊட்டி.
கிர் என்ற எலக்ட்ரிக் மணியின் ஒலி அதீத அலறலுடன் எதிரொலித்தது. அடுத்த கணம் அந்த மிகப்பெரிய வளாகத்தினுள் தனித்தனியாக இருக்கும் இரு கட்டிடங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் மாணவர்கள் மெஸ் கட்டிடம் நோக்கிச் சென்றனர்.
இருபாலரும் படிக்கக்கூடிய போர்டிங் ஸ்கூல் அது.
இரு விடுதி கட்டிடத்திற்கு நடுவில் அரண் போல் மெஸ் கட்டிடம் இருந்தது.
சரியான நேரத்திற்கு உணவு, படிப்பு, தூக்கம் என அனைத்தும் வரையறுக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அந்த வருடத்திற்கான பள்ளி துவங்கி ஒரு வாரம் சென்றிருந்தது.
பழைய மாணவர்கள் இதெல்லாம் பழக்கம் என்பதைப்போல் மணி அடித்ததும் உணவு உண்ண இயல்பாக செல்ல… புதிய மாணவர்கள் ஏற்று பழக வேண்டும் என்று சிறு சலிப்போடும்… வீட்டை பிரிந்திருக்கும் ஏக்கத்தோடும் உணவு உண்ணும் அறைக்குச் சென்றனர்.
அனைத்து மாணவர்களும் உணவு உண்ண சென்றுவிட்டனரா என்பதை இரு கட்டிடத்திலும் ஒவ்வொரு அறையாக தட்டி இருவர் சரிப்பார்த்தனர்.
ஆண்கள் கட்டிடத்தில் ஒரு அறையில் ஒரு மாணவன் மட்டும் உணவு உண்ண செல்லாது விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தான்.
“உனக்கு ஒவ்வொரு வேளையும் சாப்பிடபோகச் சொல்லி ஆள் வந்து சொல்லணுமா? மணி அடித்தால் நீயா போகமாட்டியா?” என்று அவர் கத்திய கத்தலில் உடல் தூக்கிப்போட அறையை விட்டு வெளியில் வந்தான்.
வளாகத்தில் இருக்கும் மைதானத்தின் மையத்தில் பெரும் உயரத்தில் நடுநாயகமாக நின்றிருந்த மணிக்கூண்டில் இரவு கம்பங்களில் ஒளிரும் விளக்குகளின் உதவியோடு மணியை பார்த்தான்.
நேரம் ஏழு முப்பதை கடந்து எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
நேரத்தை அறிந்த பின்னர் தான் பசியை உணர்ந்தான்.
கூடவே ‘இன்றும் திட்டு வாங்க வேண்டுமா?’ என ஆயாசம் எழுந்தது. அதற்காக பசியின் கொடுமையை அனுபவித்திட முடியாதே! செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்து கொண்டிருப்பவனுக்கு பசி என்பது கூட புதிது தான்.
மிகப்பெரிய கல்வி நிறுவனம். இந்தியாவின் ஒட்டு மொத்த பணக்கார மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் அது. அவர்கள் நினைத்தால் காலதாமதமாக வரும் மாணவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து கொடுத்திட முடியும். ஆனால் மாணவர்களுக்கு காலத்தின் அளவு தெரிந்திருக்க வேண்டும். எந்தவொரு செயலுக்கான காரணமும் தெரிந்திருக்க வேண்டும். ஒழுக்கம் எத்தகைய பெரிய விடயமென்று தெரிந்திருக்க வேண்டும். வாழ்வில் தவறவிட்ட ஒன்றின் இழப்பு தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவன் கல்வி பாடத்தோடு சேர்த்து வாழ்வியல் பாடத்தையும் கற்றிருக்க வேண்டும் என்பதால் சிறு அசைவிற்கும் பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உண்டு. அதேபோல் மாணவர்களின் சிறகுகளுக்கு அவர்கள் எல்லை வகுக்கவில்லை. அவர்களுக்கான சுதந்திரமும் அதன் எல்லையும் அங்கு உண்டு. நீண்டு பறந்திட கற்பிக்கின்றனர். அதனாலேயே பல பெரிய இடத்து பிள்ளைகளின் கல்விக்கு சிறந்த இடமாக அப்பள்ளி கருதப்படுகிறது.
சிறுவன் உணவு கூடத்திற்கு வந்து அமர்ந்த போது… அவ்விடமே கிட்டத்தட்ட காலியாகியிருந்தது.
அனைவரும் உண்டு சென்றிருந்தனர்.
ஒன்றிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
உணவு வழங்குபவர் அவனை ஏறயிறங்க நோக்கினார்.
“தினமும் உனக்கு இதே வேலையாடா? ஒருவேளை சாப்பிடாம இரு. அப்போதான் நாளையிலிருந்து சரியான நேரத்துக்கு வருவ” என்று கத்தியவர் “சாப்பாடு காலி” எனச் சென்றுவிட்டார்.
அப்படியே பெஞ்சில் இரு கைகளையும் வைத்து தலை கவிழ்ந்தவனின் முன் யாரோ அமரும் அரவம். உணர்ந்தபோதும் நிமிரவில்லை.
“வேந்தா.” அமைதியான அவ்விடத்தில் சத்தமாக எதிரொலித்தது அக்குரல்.
அவளது விளிப்பில் எவ்வித பாவனைகளுமின்றி முகத்தை மட்டும் நிமிர்த்தி கண்களை உயர்த்தியவனின் முன் முகம் முழுக்க புன்னகையுடன் இரட்டை பின்னலில் குட்டியாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
குண்டு கன்னங்களுடன், விரிந்த விழிகளுடன் பால் வண்ணத்தில் கள்ளமற்ற சிரிப்புடன் தன் முன்னிருந்த சிறுமியின் மீது சில நொடிகள் மென்மையாக அவனின் பார்வை படிந்தது.
“ஹூ ஆர் யூ?” அடுத்த கணம் அவனது கண்கள் கேள்வியை தாங்கியது.
“சாப்பிடு.” அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது தன் தட்டை அவன் முன் வைத்து அதிலிருந்த ஒற்றை சப்பாத்தியை காண்பித்து அவனிடம் கண் காட்டினாள்.
அவனோ அழுத்தமாக அவள் வைத்த உணவையும் அவளையும் மாற்றி மாற்றி பார்த்தவன் இறுதியில் அவள்மீது பார்வையை நிலைக்கவிட்டபடி அசைவற்று இருந்தான்.
“என்னலே சொல்லிக்கிட்டே கெடக்க(ன்). அசையமாட்டுங்குத. உண்(ங்)குல. ஊட்டிவிடனுமாட்டிருக்கு.”
சிறுமி பேசியதில் ஒன்றுகூட அவனுக்கு விளங்கவில்லை. என்ன சொல்கிறாள் என்பது புரியாது திருதிருத்தான்.
“பாஷை அம்புடலையாட்டுக்கு. இது நேட்டிவிட்டில. உண்கு” என்றாள்.
இருவரும் அவரவர் பிடியில் நிலையாக இருந்தனர். அவள் எவ்வளவோ சொல்லியும் அவன் உணவில் கை வைப்பதாக இல்லை. அவனின் மறுப்பெல்லாம் ஏற்காது அவனை உண்ண வைத்திட வேண்டுமென்று அவளும் மல்லுகட்டினாள் அவனிடம்.
“சொன்னா கேட்டுக்கிடமாட்டியால” என்றவள், தானே சப்பாத்தியை பிய்த்து குருமாவில் தோய்த்தெடுத்தாள்.
‘நீ ஊட்டிவிட்டா நான் வாய் திறக்கணுமோ’ என்ற எண்ணத்தில் இறுக்கமாக இதழ்களை ஒட்டிக்கொண்டு அவளை சவாலாகப் பார்த்தான்.
அவளோ சிறிதும் அவனின் முறைப்பைக் கண்டுகொள்ளாது தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து எக்கி அவனின் மூக்கினை அழுந்த பிடித்தாள்.
அவள் மூக்கினை பிடித்ததும் சுவாசம் தடைபட தன்னைப்போல் வேந்தனின் வாய் திறந்து கொண்டது. பட்டென்று சப்பாத்தி வில்லையை அவனின் வாயில் திணித்துவிட்டாள்.
வேந்தன் அவளின் செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனால் அவளை முறைக்க மட்டுமே முடிந்தது. இப்போது அக்கூட்டத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
உணவு பரிமாறுபவர் வந்து பார்க்க…
“இன்னும் சாப்பிட்டு முடிக்கல. ஃபைவ் மினிட்ஸ்” என்றாள்.
“சரி, சரி சீக்கிரம் சாப்பிடுங்க. லேட்டானா வாடர்ன் கத்தும்” என்றவர், அங்கிருந்த உணவு பாத்திரங்களை அடுக்க ஆரம்பித்தார்.
அவர் வந்ததுமே வாயில் அவள் வைத்த உணவினை துப்புவதற்கு முயன்றவன் அது முடியாது உள்ளே விழுங்கி வைத்தான்.
மீண்டும் அவளே அவனுக்கு அடுத்த வாய் ஊட்ட கையை கொண்டு செல்ல…
“எனக்கு வேண்டாம்” என்று இம்முறை அழுத்தமாக மறுத்தான்.
“பசி உங்கண்ணுல தெரியுதுல. உண்கு.”
“நீ பேசுறதே எனக்கு புரியல. அந்த அங்கிள் கிட்ட நல்லாதானே பேசுன.”
“வாப்பெட்டிய உண்க மட்டுந்தேன் தொறக்க மாட்டியாக்கும்.”
எப்படியும் தான் சாப்பிடாது அவளும் செல்லமாட்டாள் தன்னையும் செல்ல அனுமதித்திட மாட்டாளென்று அறிந்தவன், புரியாத அவளின் பாஷையை கேட்பதற்கு விரைந்து உண்டுவிட்டு சென்றுவிடலாமென தட்டிலிருந்த உணவை வேகவேகமாக வாயில் திணித்தான்.
“பைய்யல… விக்கிக்கிடப்போவுது” என்றவள் தண்ணீரை எடுத்து நீட்ட,
“அதான் விக்கிக்கலயே” என்றவன் மெதுவாக உண்டு முடித்த பின்னரே நீர் அருந்தினான்.
“சரி நான் கிளம்புறேன்” என்றவன் எழுந்து செல்ல…
“இந்த தேங்க்ஸ் சொல்லுத பழக்கமில்லையா” எனக் கேட்டாள்.
நின்று திரும்பி அவளை பார்த்த வேந்தன்…
“யார் நீ?” என்று முதலில் கேட்ட கேள்வியை இப்போதும் கேட்டான்.
“பூ. செவன்த் சி. கிளாசில் எல்லோரும் ஃபிளவர் கூப்பிடுவாங்க. உனக்கு நேர் பெஞ்ச் என்னோடது. உனக்கும் எனக்கும் நடுவுல சார் நடந்துபோற கேப் மட்டும் தான். இருந்தும் நீ என்னை பார்த்ததில்லை. என்னை மட்டுமில்லை நம்ம கிளாசில் யாரையுமே உனக்குத் தெரியாது. இங்க வந்த ஒரு வாரத்தில் எதையோ பறிகொடுத்த மாதிரி தான் எப்பவும் சோலோவா சுத்திட்டு இருக்க. சரியா சாப்பிடக்கூட வரமாட்டேங்கிற. அதுவும் நைட்ல சுத்தம். பசியோட எப்படி நீயிருக்க. என்னால சுத்தமா முடியாது. எப்பவும் உனக்கு எடுத்து வைக்கிறவங்க, இன்னைக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்லிட்டாங்களா அதான் எனக்கு கொடுத்த சப்பாத்தியில ஒன்னு உனக்குக் கொடுத்தேன்” என்று நீளமாக அவன் கேட்டதற்கும் கேட்காததற்கும் சேர்த்து அவளின் வழக்கு மொழியை விடுத்து அவனுக்கு புரியும் வகையில் பதில் வழங்கினாள்.
“ஷ்ஷ்ஷ்” என்று பெருமூச்சோடு இருபக்கமும் தலையசைத்தவன், “சாப்பிட்ட ஒரு சப்பாத்தியும் செறிச்சிருக்கும்” என்றவனுக்கு, தமிழை மிகவும் பிடித்தது. தன்னுடைய பசியை எண்ணி அவளின் பாதியை கொடுத்த அவளின் கள்ளமற்ற குணம் வேந்தனை வெகுவாக கவர்ந்தது.
“நான் நட்ஸ் எல்லாம் என் பேக்கில் ஒளிச்சு வச்சிருக்கேன். நைட் பசிச்சா அதை சாப்பிட்டுப்பேன்” என்று அவள் பேசியதை குறிப்பிட்டு அவன் உணவு செறித்திருக்கும் என சொல்லியதன் பொருள் விளங்காது பதில் வழங்கினாள்.
அதில் வேந்தனின் முகத்தில் கீற்றுப்போல் புன்னகை.
“இப்போதான் நீ சிரிச்சு பார்க்கிறேன்” என்ற பூ, “வா போவோம். வாடர்ன் வந்தாக்கா சங்கை நெறிச்சிப்புடும்” என கழுத்தில் கை வைத்து காண்பித்தவள், வேந்தனின் கரம் பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.
“நீ பேசுற சில வோர்ட்ஸ் புரியல.”
“அது எங்க ஊர் பேச்சு. அப்பப்போ எட்டி பார்க்கும். நீ கண்டுக்கிடாத. நாமதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோமே, இனி நான் பேசுறது உனக்கு புரிஞ்சிடும். இலைன்னா நான் நார்மலாவே உன்கிட்ட பேச ட்ரை பன்றேன்” என்ற தமிழை அவளுக்காக அவளின் பேச்சுக்காகவே வேந்தனுக்கு அத்தனை பிடித்தது.
எனக்காக நீ மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொல்லாமல், தன்னையே உனக்காக மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை பூ அவனுக்காக மிக எளிதாக சொல்லியிருந்தாள்.
“நாம எப்போ பிரண்ட்ஸ் ஆனோம்?” வேண்டுமென்றே கேட்டான். அவள் பேசுவதை கேட்பதற்கு அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
இங்கு வந்த ஒரு வாரத்தில் அவனின் அமைதி கண்டு வகுப்பில் மட்டுமில்லாது, விடுதி அறையில் கூட யாரும் அவனை நெருங்க முயற்சிக்கவில்லை. பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவனை விட்டு முதன் முறையாக பிரிந்து வந்த ஏக்கம் வேந்தனை யாரிடமும் பேச அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் தானாக வந்து, இப்போது பூவைப்போல் பேச்சுக் கொடுத்திருந்தால் பேசியிருப்பானோ என்னவோ?மற்றவர்கள் ஒதுங்கிச் செல்ல வேந்தனும் தனக்குள் உழன்று குடும்பத்தை எண்ணியே தனித்திருந்தான். இப்போது தன்னுடைய தனிமையை போக்க வந்த பூவை தன் தோழியாக மனதில் பதிந்து கொண்டான்.
“பிரண்ட்ஸ் இல்லைன்னா பொறவு என்னத்துக்குல எஞ்சாப்பாட்டை வாங்கி உண்குன?” பிரண்ட் இல்லை என்பதைப்போல் வேந்தன் கேட்டதும் பூ பொங்கிவிட்டாள்.
பூ பேசியது சில நொடிகள் கழித்தே வேந்தனால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
“நானா கேட்டேன். நீயாத்தானே கொடுத்த?” வேந்தன் தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி அவளிடம் எகிறினான்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது பூ திருத்திருக்க… வேந்தன் சத்தமாக சிரித்துவிட்டான்.
“என்னத்துக்குல இம்புட்டு சிரிப்பு உமக்கு?”
“ஃபிரண்ட்ஸ்.” அவள் கேட்டதை கண்டுகொள்ளாது கையை அவள்முன் நீட்டினான்.
“உன்னை கிளாசில் சோகமாக பார்த்ததுமே என் ஃபிரண்டா ஏத்துகிட்டேன்” என்று வேந்தனின் கையை பிடித்துக் கொண்டாள்.
“இனிமேட்டுக்கு சோகமா திரியாதல. உன்னை அப்படி பாக்க என்னவோமாட்டிருக்கு” என்ற பூவின் தலையில் கையை வைத்து ஆட்டியவன்,
“போ! மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் டைமில் மீட் பண்ணுவோம்” என்று பூவை அனுப்பி வைத்தவன், அவள் பெண்கள் விடுதி கட்டிடத்திற்குள் நுழைந்த பின்னரே தன்னுடைய கட்டிடம் நோக்கிச் சென்றான்.
“பூ.” அவளின் பெயரை ஒருமுறை பெயருக்கு ஏற்றவாறு மென்மையாக உச்சரித்துப் பார்த்தான்.
ஏனோ ஒருவாரமிருந்த வருத்தம் இப்போது இந்நொடி அவனிடம் இல்லை. தான் வருத்தத்திலிருந்தால் தன்னை தேற்றி சிரிக்க வைக்கும் குடும்பத்தை மொத்தமாக பூவிடம் கண்டவனின் மனதில் பூ மிகவும் நெருக்கமாகியிருந்தாள்.
*****
பார்த்த முதல் நாளே… சில கணங்களுக்குள் நட்பால் நெருக்கமானவள் இன்று வெகு தொலைவில் சென்றுவிட்டதை நினைத்து, இன்று வருத்தமா நிம்மதியா எதுவென்று பிரித்தறிய முடியா நிலையில் பாரி வேந்தன்.
அன்றைய பூவின் முகம் இன்றும் அவனின் நெஞ்சத்தில் பசுமையாய்.
“நீ என் ஃபிரண்ட் பூவாவே இருந்திருக்கலாம்.” வாய்விட்டே சொல்லிக்கொண்டான்.
இப்போதும் நட்பு உள்ளது. அதை ஏனோ அவன் மறுக்கிறான்.
புறவழிச்சாலையின் ஓரத்தில் இருக்கும் தாபா ஒன்றில் வண்டியை நிறுத்தியவன், மணியை பார்த்தான் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடலாம் என்று கணக்கிட்டான்.
அந்த இரவு நேர தாபா பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து மின்னியது.
வெளியில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவன் தனக்கு வேண்டிய உணவை சொல்லிவிட்டு இருள் வானை வெறிக்க ஆரம்பித்தான்.
சொந்தவூர் திரும்புவதாலோ என்னவோ பழைய தாக்கங்கள் மனதின் மேலெழும்பின.
நினைவுகளின் ஆதிக்கம் யாவும் அவனின் பூவே!
‘மறந்திட முடியாத… வெறுத்திட முடியாத… மொத்த நினைவும் அவனே(ளே).’
__________________________
நள்ளிரவில் சென்னையை வந்தடைந்தான் பாரி வேந்தன். பொறுமையாக ஆங்காங்கே இளைப்பாறி பயணத்தை நீட்டி தாமதமாகத்தான் வந்து சேர்ந்திருந்தான். அவன் சென்னையின் எல்லையில் தடம் பதித்த நேரம்… தூவானமாகத் தூறல் தூறியபடி அவனை வரவேற்றது.
பார்த்ததும் அவனொரு காவல்துறை அதிகாரியென தெரிந்துவிடுமானத் தோற்றம். கம்பீரமான நேர்மையான போலீஸிடம் உள்ள அனைத்து அம்சங்களும் பக்காவாக பெற்றிருந்தான். வயது இருபத்தி ஒன்பதை கடந்து மூன்று மாதங்கள் ஆகிறது.
தனக்கு முன்னிருந்த கட்டிடத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்வையால் அலசியவன், வண்டியில் ஒலியை எழுப்ப… சாரலாய் வீசும் மழைத்துளியையும் பொருட்படுத்தாது பாதி உறக்கத்தில் ஓடிவந்து பெரிய கேட்டிற்கு அருகிலிருந்த ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவிற்கு இருந்த சிறிய கேட்டினை திறந்து அவனுக்கு அருகில் நுழைந்தார் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி.
“சார் நீங்க?”
பாரியின் முறுக்கிய மீசையும், இருசக்கர வாகனத்தின் ஆக்சலேட்டரில் பிடித்திருந்த கையின் பிடியால் ஆடையின் கையைத்தாண்டி திமிறிக்கொண்டு வெளித்தெரிந்த உருண்டு திரண்டிருந்த புஜமும் தானாக அவரை மரியாதையாக பேச வைத்தது.
“அவினாஷ்?”
அணிந்திருந்த ரேபானை கழட்டியவாறு நண்பனின் பெயரைக் கூறினான்.
“அவருக்கு நீங்க?…”
இப்போது அவனின் கண்களில் தெரியும் ஒருவித கூர்மை அவரை முழுதாகக் கேள்வியை கேட்கவிடவில்லை. தன்னைப்போல் பாரியின் மீது ஒரு பயம் கலந்த மரியாதைத் தோன்றியிருந்தது.
“ஃபிரண்ட்.”
“சார் தப்பா நினைக்கலைன்னா அவருக்கு கால் செய்து வர சொல்றீங்களா?” என்று தன்மையாக வினவினார்.
அவனுக்கு அவரின் பயம் புரிந்தது. நள்ளிரவில் இப்படி யாரேனும் வந்தால் வளாகத்தில் அவ்வளவு எளிதாக அனுமதித்திட முடியாதே. ஏதேனும் தவறாக நடந்துவிட்டால் காவல் பொறுப்பு அவர் கையில் இருக்கும்போது அடுத்து அவரின் நிலை பெரும்பாடாகிப்போகுமே!
அவனின் மௌனம் கண்டு அவரே பேசினார்.
“உங்களை பார்த்தால் தப்பா தெரியல. ஆனா என் வேலைன்னு ஒன்னு இருக்கே சார்” என்றார்.
அதற்குள் பாரி நண்பனுக்கு அழைத்திருந்தான்.
இரண்டு நிமிடங்களில் அவினாஷ் கேட்டிற்கு அருகில் வர, நீண்ட நெடும் நாட்களுக்குப் பின்னர் பார்த்துக்கொள்வதால் புன்னகையுடனான சிறு அணைப்பில் மீண்டனர்.
“நல்லவேளை நீ வந்த நேரம் மழை நின்னுது.” சொல்லிய நண்பனுடன் வளாகத்தின் உள்ளேச் சென்றான் பாரி.
மூன்றாம் தளத்தில் இருக்கும் அவினாஷின் வீட்டிற்குள் இருவரும் நுழைந்த அடுத்த நொடி அவியின் அலைபேசி அதிர்ந்தது.
தன்னுடைய உடைமைகளை அவிகாட்டிய அறையில் வைத்து விட்டு வந்தான் பாரி.
ஒலிக்கும் அலைபேசிக்கு செவி மடுக்காது கையில் வைத்து திரையையே பார்த்து நின்ற நண்பனின் அருகில் வந்து அலைபேசியை பார்த்தவனின் கண்கள் ரௌத்திரம் கொண்டன.
திரையில் தமிழ் என்ற பெயர்.
அவியின் தடுமாற்றம் எல்லாம் பாரியின் முன்பு எப்படி தமிழிடம் பேசுவதென்றே!
ஒருமுறை சென்று மீண்டும் அழைப்பு வர, இம்முறை மறுத்திட முடியாதென… நண்பனிடம் பார்வையாலேயே கெஞ்சிவிட்டு அழைப்பை ஏற்றான்.
“ஹேய் லூசு கால் பண்ணா உடனே அட்டெண்ட் பண்ண மாட்டியா? நீயே பண்ணுவன்னு எதிர்பார்த்தேன். அட்லீஸ்ட் மெசேஜ் செய்திருக்கலாம். வந்தாச்சா உன் ஃபிரண்டு. கிளம்புன நேரத்துக்கு எப்பவோ வந்திருக்கணுமே?”
முதலில் பதட்டமாக, அடுத்து கோபமாக, இறுதியில் மெல்லிய வருத்தத்தோடு ஒலித்து அடங்கியது தமிழின் குரல். அமைதியான இரவில் அவளின் குரல் அவிக்கு அருகில் நின்றிருந்த பாரிக்கும் நன்கு கேட்டது.
முழுதாக நான்கு வருடங்களுக்குப் பின்னர் அவளின் குரல் பாரியின் செவி நுழைந்தது. அடுத்த கணம் அவனுள் தன்னைப்போல் ஒரு இறுக்கம். மின்னலென அறைக்குள் புகுந்து கதவினை அறைந்து சாற்றினான்.
அதே சமயம் மனதோடு ஒலித்த அவனின் பூவின் “வேந்தா” என்ற இதமான குரல் அவனை இதமாக்கியது.
இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம். ஒன்று போலிருந்தாலும் வேறுபாடு அவனின் மனம் மட்டுமே உணரும்.
“பூ.” இரு உள்ளங்கையையும் இறுக மூடியவன் தொடையில் தட்டிக்கொண்டே… விட்டத்தை நோக்கி தலையை உயர்த்தி அவ்வறையே அதிர கர்ஜித்தான்.
வேந்தனின் சத்தம் தமிழுடன் பேசிக்கொண்டிருந்த அவியை அதிர வைத்தது.
“இப்போ தான் வந்தான் தமிழ். பார்க்க நல்லாயிருக்கான். நான் இன்னும் எதுவும் பேசவில்லை. அப்புறம் கால் செய்றேன்” என்று படபடவென வேகமாக மொழிந்தவன் மறுமுனையில் பதில் கூறுவதற்கு முன்னர் இணைப்பைத் துண்டித்துவிட்டு வேந்தனின் அறைப்பக்கம் ஓடினான்.
“பாரி…” தாழிடப்படாத கதவு திறந்து கொண்டது.
தலையை பிடித்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்தான் பாரி.
பக்கத்தில் சென்றமர்ந்த அவினாஷ்…
“உண்மையா தமிழுக்கு நான் சொல்லல பாரி. தமிழும் நீ போனதிலிருந்து எங்களோட டச்சில் இல்லை. உன்னைப்போல தான் அவளும் யார்கூடவும் ஒட்டுதல் இல்லாம இருந்தா(ள்). நீ திரும்ப சென்னை வரன்னுதான், அதுவும் நீ எனக்கு கால் பண்ணுவ தெரிந்து தான் அவள் எனக்கு கால் பண்ணா. அவள் பேசியது எனக்கே ஆச்சரியம் தான். என்னை நம்புடா” என்று மன்றாடினான்.
அவியை ஏறிட்டுப் பார்த்த பாரியின் கண்களில் இன்னதென்று பிரித்தறிய முடியா உணர்வு. சோகமா? வலியா? கோபமா? வெறுப்பா? துயரமா? அவன் மனம் மட்டுமே அறியும். கண்கள் இரண்டும் ரத்த நிறம் கொண்டிருந்தன.
அவினாஷிற்கு ஒரு கணம் பயத்தில் இதயம் நின்று துடித்தது.
“நீ கால் செய்து இங்க வரன்னு சொல்லிய அரை மணி நேரத்தில் தமிழ் எனக்கு கால் செய்தாள். உன் ஃபிரண்ட் வரான் போல, பார்த்துக்கோ. வந்ததும் இன்ஃபார்ம் பண்ணு. சொல்லிட்டு வச்சிட்டாள்.”
அவியின் விளக்கம் பாரிக்கு ஒன்றை மட்டும் அறிவுறுத்தியது.
‘தான் கிரகங்கள் தாண்டி தொலைந்துப்போனாலும் அவள் ஒருத்தியின் பார்வையிலிருந்து மறைய முடியாது. அவளால் தான் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்’ என்பது.
பாரி அமைதியாகவே பார்த்திருந்தான்.
பாரியிருக்கும் நிலையில் அவியால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
நண்பனிடமிருந்து பார்வையை விலக்கி திறந்திருந்த பால்கனியின் வழியே தெரிந்த இருட்டில் எதையோ தேடியவனாக…
“எப்படியிருக்கா(ள்)?” எனக் கேட்டான்.
நான்கு வருடங்களுக்கு பிறகு தமிழில் பேசியிருக்கின்றான். அதுவும் ஒற்றை வார்த்தையாக. பேசிய தமிழ்… வேறொரு தமிழை நினைவுகூற உடலெல்லாம் தகித்தது. தமிழ் என்பவளை மறக்கவே தமிழ் மொழியவளை மறந்திருந்தவன், அவளின் நலன் அறிந்திடவே மீண்டும் முதல் தமிழை பேசினான். பேசும் மொழியான தமிழ்… பெண்ணாகிய தமிழை இனி நொடிக்கொருமுறை நினைவுபடுத்துமே! என்ன செய்திடுவான். இனியும் ஓடி ஒளிந்திட முடியாதே! எதை வெறுத்து சென்றானோ அது நெருங்கும் அபாயம் அவனுள்.
ஆனால் ‘தான் மனது வைக்காது, தன்னுள் திடம் உள்ளவரை ஒன்றும் நடந்தேறிடாது’ என்று தனக்குள்ளே உருப்போட்டுக்கொண்டான்.
தமிழ் அவனின் எண்ணத்தை, அவனை இனியும் விட்டு வைப்பாளா?
தனக்குள்ளிருக்கும் பிம்பம் மறைந்து வேறொரு உருவகம் கொள்ளும் நிலையை ஏற்க முடியாது தவிப்பவனின் மனம் தமிழை வெறுத்து பூவை வேண்டியது.
அவனின் பூ. வேந்தனின் நறுவீ (பூ). அவனுக்கும் அவனின் நட்பிற்கும் என்றும் உரித்தானவள். மலரவள் மீது அவன் கொண்ட நேசம் வானுக்கும் உயர்வானது. பூவுடனான நட்பு என்ற பந்தத்தில் கல்லெறிந்திட்ட தமிழின் மீதுள்ள கோபம் அவ்வளவு எளிதில் மறைந்துவிடாதே.
உலகிலேயே அவன் அதிகம் நேசித்தது அவனது பூவுடனான நட்பைத்தான். காதலை காதலியைக்கூட பூவின் நட்பிற்கு அடுத்த அடியில் தான் வைத்திருந்தான். அவனது குடும்பமும் அவளுக்கு அடுத்து என்ற நிலையில் தான்.
ஆனால் தமிழால் அவனின் பூ இன்று அவனுடன் இல்லையே.
வேந்தனின் இதயம் பூவை தேடியது.
*****
பூவிற்கும் வேந்தனுக்கும் இடையேயான நட்பு மிக வேகமாக நெருக்கம் கொண்டது.
பூவின் கள்ளமற்ற பேச்சும் சிரிப்பும், வேந்தனுக்காக எதையும் செய்யும் மனமும் வேந்தனை பூவிடம் மேலும் மேலும் நெருக்கம் கொள்ள வைத்தது.
அவளின் நட்பில் வேந்தன் தினமும் திளைத்தான்.
பூவுடனான நட்பிற்கு பிறகு வேந்தன் குடும்பத்தின் நினைவில் தன்னை வருத்திக் கொள்ளவுமில்லை தனிமையை நாடவுமில்லை. வகுப்பிலும் அனைவருடனும் ஒன்றிப்போனான்.
வகுப்பு நேரங்களில் இருவரும் ஒன்றாகவே இருந்தாலும்… பேசிக்கொள்ளவோ, நட்பை பகிர்ந்துகொள்ளவோ நேரமிருக்காது. வகுப்பில் ஆசிரியர் இருக்கும்போது அதெல்லாம் சாத்தியப்படாது. பாட சம்மந்தமாக ஏதேனும் கேட்டுக்கொண்டால் மட்டுமே உண்டு. இடைவேளையின் போதும் அவ்வளவு ஒன்றும் பேசிவிட முடியாது. உணவு வேளைகளில் சந்தித்து இருவரும் ஒன்றாகவே அமர்ந்து உண்டாலும், காலை மற்றும் மதியம் வகுப்பிற்கு செல்லும் பரபரப்பு இருக்க உணவு உண்ண மட்டுமே நேரம் சரியாக இருக்கும்.
ஆனால் இரவு உணவு நேரம் அப்படியில்லை, இருவரும் பேசியபடி மெதுவாக உட்கொள்வர். இரவு உணவிற்கு பின்னர் இருபது நிமிடங்கள் மாணவர்களுக்கான பிரத்யேக நேரமது. நடை பயில்வோர் விடுதி பகுதிக்குள்ளேயே நடை பயிலலாம். சைக்கிளிங் செல்லலாம். குடும்பத்தாருடன் உரையாடல் மேற்கொள்ளலாம். ஆனால் இருவரும் அந்நேரத்தை தங்களுக்கு தங்களது நட்பிற்கான நேராமாக உரித்தாக்கிக்கொண்டனர்.
அந்நேரம் நாள் முழுக்க நினைத்தது, நடந்தது, தத்தம் விடுதியில் பிள்ளைகள் செய்யும் நிகழ்வுகள், பாட சம்மந்தம், குடும்பங்கள் பற்றி அனைத்தும் பேசியபடி நடப்பர். அதில் அதிகம் பேசுவது பூவாகத்தான் இருக்கும்.
தான் பேசுவது அவனுக்கு பிடித்திருக்கு என்பதற்காகவே நிறைய பேசுவாள். சில நேரங்களில், தன்னுடைய பாட்டி இரவு நேரங்களில் உறக்கத்திற்காக சொல்லிய கதைகளை வேந்தனக்கு சொல்லுவாள். அவனும் ரசித்து கேட்பான்.
வேந்தன் மற்றும் பூவின் நட்பு இருவரின் குடும்பத்தாருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவர் நன்கு தெரியுமளவிற்கு அவர்களது பேச்சு இருந்தது.
ஒவ்வொரு அழைப்பின் போதும் வேந்தன் பூவைப்பற்றி தன் வீட்டாரிடம் சொல்வதைப்போல் பூவும் வேந்தனைப்பற்றி சொல்லுவாள்.
இரு வீட்டாருக்கும் தங்களது பிள்ளையின் நட்பை பாராமலே அவர்களை பிடித்தது. அதிலும் வேந்தனின் அன்னைக்கு பூவை அவ்வளவு பிடித்தது. பள்ளியின் ஆரம்பத்தில் சோகத்தோடு இருந்த மகனுக்கும் இப்போது இருக்கும் மகனுக்கும் இடையேயான வித்தியாசம் பூவால் எனும்போது அவருக்கு பூவும் தன் குடும்பத்தில் ஒருத்தியாகிப்போனாள்.
மாதம் ஒருமுறை பிள்ளைகளை பார்க்க பெற்றோர் வரலாம். அதுவும் விடுமுறை நாளான ஞாயிறு மட்டுமே.
இரு விடுதிகளிலும் விருந்தினருக்கான தனியறை உள்ளது. அங்கு வைத்து பிள்ளைகளை பார்த்து, பேசி நலமறிந்து, கொண்டு வந்ததை கொடுத்து செல்லலாம். விருப்பப்பட்டால் வார்டனிடம் அனுமதி வாங்கி இரண்டு மணிநேரம் வெளியில் கூட்டிச்செல்லலாம்.
அந்த முறை வேந்தனின் அன்னை பார்வதி பூவை பார்ப்பதற்காகவே கணவர் வைத்தியலிங்கத்துடன் பள்ளிக்கு வந்தார்.
“வேந்தன் உன் பெற்றோர்.”
வார்டனின் உத்தரவின் பெயரில் விடுதி பணியாளர் வேந்தனின் அறையில் சென்று சொல்ல… தன்னுடனிருக்கும் நண்பனிடம் சொல்லிவிட்டு விருந்தினர் அறைக்குச் சென்றான்.
“அம்மா.” பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்ட மகனின் உச்சியில் முத்தம் வைத்த பார்வதி,
“எப்படிப்பா இருக்க?” என்று நலம் விசாரித்தார்.
தன் நலத்தை வேந்தன் கூறியதும், அடுத்து பார்வதி கேட்டது பூவைப்பற்றித்தான்.
“ஷீ இஸ் குட் மாம்” என்றவன் அடுத்து பேசியதெல்லாம் பூ… பூ… பூ மயமே.
அவனுக்கு அவள் உணவு வாங்கி வைத்துக் காத்திருப்பது. வகுப்பில் தன்னிடம் யாரேனும் வம்பு செய்தால் அவர்களை ஒருவழி செய்வது, சிற்றுண்டி நேரத்தில் அளிக்கப்படும் பண்டங்கள் பழங்கள் யாவும் தனக்கு பகிர்ந்தளிப்பது… சென்றவாரம் விளையாடும் போது வலது கையில் அடிப்பட்டுவிட்டதால் உணவு உண்ண முடியாமல் தவித்தவனுக்கு எவ்வித தயக்கமுமின்றி தான் ஸ்பூனால் உண்டு கொள்கிறேன் என்ற அவனின் பேச்சை தடை செய்து அவளே அவனுக்கு கையின் வலி குறையும் வரை ஊட்டிவிட்டது, தனக்கு கதை சொல்வது என அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்த பிறகே வேந்தனின் கவனம் தன்னையே பார்த்திருந்த தந்தையின் மீது படிந்தது.
“ஹாய்ப்பா… வாட் அ சர்ப்ரைஸ். பேக்டரி விட்டு வரமாட்டிங்களே!” எனக்கேட்டவனை முறைத்து “உன் ஃபிரண்டை பார்க்க வந்தேன்” என்று கூறினார்.
“ஆமாம்டா… எனக்கும் பூவை பார்க்கணும். உன் க்ளோஸ் ஃபிரண்ட் கிட்ட நானும் ஃபிரண்ட் ஆகிக்கிறேன்” என்றார் பார்வதி.
பழைய பள்ளியிலேயே வேந்தன் நன்றாக படித்த போதிலும், அவனின் வளமான கல்விக்காக அவனை பிரிய முடியாத வருத்தம் இருந்த போதும் இங்கு சேர்த்தனர். அதில் வேந்தனுக்கு பெற்றோரின் மீது வருத்தம் உண்டாக பேசாமல் இருந்தவன், பூவின் நட்பிற்கு பின்னர் தான் மீண்டும் சகஜ நிலைக்கு மீண்டிருந்தான். அதுவுமில்லாமல் பேசும் போதெல்லாம் பூவைப்பற்றியே பேசி அச்சிறுமியின் மீது பெற்றோருக்கும் பாசத்தினை வரவழைத்திருந்தான். அதனாலேயே இருவரும் பூவை பார்க்க விரும்பினர்.
“வார்டன் பெர்மிஷன் கொடுக்கணும்” என்றான் வேந்தன்.
அதனை தான் பார்த்துக்கொள்வதாகக் கூறிய வைத்தியலிங்கம் வார்டனிடம் பேச அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.
“பெற்றோரைத் தவிர்த்து யாரும் பார்த்திட அனுமதி கொடுக்க முடியாது சார். உங்க மேல நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் உங்களுக்கு அனுமதி கொடுத்தா மற்றவர்களும் இதுபோல் கேட்க வாய்ப்பிருக்கு. இங்கிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நான்தானே பொறுப்பு” தன்மையாகவே எடுத்துக் கூறினார் வார்டன் மேரி.
வைத்தியலிங்கமும் புரிந்தது என்றார்.
“இந்த வயதிலேயே இருவருக்குமிருக்கும் நட்பு, புரிந்துணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது எல்லாம் எனக்கே வியப்பா இருக்கு சார். இப்போ ரெண்டு பேரும் சிறுவர்கள் என்பதால் ஆண் பெண் பேதமில்லை. அவங்க பழக்கத்தில் எங்களுக்கும் எவ்வித கண்டிப்பும் இல்லை. ஆனா, பெரிய வகுப்பு போகப்போக இங்க பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் பேசுவதற்கே நிறைய ரூல்ஸ் இருக்கு. அப்போ என்ன செய்வார்களோ?” என்று வார்டன் தங்கள் பக்கம் கூற, இவர்களின் நட்பு ஒரு எல்லைக்குமேல் முடிவுக்கு வந்துவிடுமோயென பார்வதி அச்சம் கொண்டார்.
மகன் இத்தனை தூரம் தங்களை பிரிந்து இருந்தபோதும், மகிழ்வாய் இருக்க ஒரே காரணம் பூ. ஆதலால் அவர்களின் நட்பு முடிவு பெறும் என்பதில் குடும்பத்தாருக்கு வருத்தமே!
வாழ்வின் மிகப்பெரிய சொத்து உண்மையான நட்பல்லவா. அது எந்த வயதில் கிடைத்தாலும் இழக்க மட்டும் மனம் விரும்புவதில்லை. அவ்வெண்ணமே பார்வதிக்கு.
“பூ எப்பவுமே என் பிரண்ட் தான் மேம். துரியோதனனுக்கு கர்ணனைப்போல.” வார்டன் பேசியதில் சிறுவனான வேந்தனுக்கு என்ன புரிந்ததோ, மகாபாரத கதையிலிருந்த நட்பை தங்களுக்கு உதாரணாமாகக்காட்டி நன்கு நிமிர்ந்து பட்டென்று கூறியிருந்தான்.
பார்வதிக்கு மகனின் பேச்சில் அத்தனை மகிழ்வு.
வார்டனும் மென்னகை புரிந்தார்.
மூவரும் வார்டன் அறையிலிருந்து வெளியேற…
“மகாபாரத கதையெல்லாம் உனக்கு யார் சொன்னா பாரி?” என வினவினார் பார்வதி.
“பூ தான்ம்மா அவங்க பாட்டி சொன்னாங்கன்னு எனக்கு சொன்னா(ள்)” என்றான்.
“பூ மட்டுமே சொல்றியே முழுப்பெயரே அதானா?” என்ற தந்தையிடம்… “எனக்கு பூ மட்டும் தான். அதான் எனக்கு பிடிச்சிருக்கு” என்றான் அழுத்தமாக.
“ஃபைன். ஹவ் இஸ் யூவர் ஸ்டடிஸ்?”
“கோயிங் குட் டாடி.”
மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு அவர்கள் கிளம்ப…
“நெக்ஸ்ட் டைம் அண்ணாவையும் கூட்டிவாங்கம்மா” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.
இரவு உணவின் போது அவளுக்கு முன்னதாகவே வந்து இருவருக்கும் உணவினை வாங்கிக்கொண்டு காத்திருந்தான் வேந்தன்.
கையில் தூக்க முடியாது சிறு பையை தூக்கிக்கொண்டு வந்தாள் பூ.
“என்ன ஃபிளவர் இது?” பூவை சிலநேரங்களில் அவன் ஃபிளவர், மலர் என்றும் அழைப்பதுண்டு.
“அம்புட்டும் உனக்குதாம்ல.”
“எனக்கா?”
“எஸ்.”
“எத்தனை நாள் சாப்பிடறது. ஒன் மந்த்துக்கு சாப்பிட வேண்டியதை இப்படி ஒன் டேக்குன்னு சொல்றியே அநியாயமா இல்லையா?”
வேந்தன் அவ்வாறு கிண்டல் செய்ததும் பூவின் முகம் சுருங்கிவிட்டது.
“இதெல்லாம் நம்ம தோட்டத்து ஃப்ரூட்ஸ். நோ கெமிக்கல்ஸ். அப்பா உனக்கும் சேர்த்து கொண்டு வந்தாங்க.” சிறு குரலில் கூறினாள்.
“எனக்குத்தான கொடு” என்று கை நீட்டியவனிடம் கொடுக்காது, “இம்புட்டும் உண்க முடியாது சொன்ன?” என்று கேட்டாள் அவள்.
“பூ ஃபேஸ் டல்லானா எனக்கு பிடிக்காதே. கொடு… நான் ஃபிரண்ட்ஸோட ஷேர் செய்து சாப்பிடுறேன்” என்று பெரிய மனதாய் அவன் கூறிட…
“இதெல்லாம் உனக்குத்தான். யாருக்கோ இல்லை” என்றாள் சிறுமி.
அதில் வேந்தனுக்கு அப்படியொரு மகிழ்வு.
“ஓகே ஓகே. நானே சாப்பிடுறேன். முகத்தை அப்படி வைக்காதே” என்றவன், அவளுக்கான உணவுத்தட்டை அவள் முன் வைத்திட இருவரும் அன்றைய நாளின் நிகழ்வுகளை பகிர்ந்தபடி உண்டு முடித்தனர்.
இதுவே தொடராக… வருடங்களும் கடந்தன. வளர வளர இருவருக்குமிடையேயான நட்பு ஆழமானது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருபாலருக்கும் பொதுவான வகுப்பறைகள். ஒன்பதிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள். இருந்தபோதிலும் அவர்களின் நட்பில் நெருக்கம் குறையவில்லை. இருவருமே நன்கு படிக்கும் மாணவர்கள் என்பதால், ஆசிரியர்களுக்கு விருப்பமானவர்களாக இருந்திட அவர்களின் நட்பும் பள்ளியில் பிரபலமானது.
இடைவேளையின் போது மைதானத்திலும், பள்ளி நேரம் முடிந்து படிப்பதற்காக கொடுக்கப்படும் நேரத்தில் நூலகத்திலும் சந்தித்துக்கொள்வர். ஒரே பாடம் என்பதால் அந்நேரம் சந்தேகம், குறிப்புகள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வர்.
இருவரும் பத்தாம் வகுப்பில் இருந்தனர்.
பள்ளியின் அந்த ஆண்டிற்கான விளையாட்டு நாள் ஆசிரியர்களுக்கிடையே மிகுந்த பரபரப்பாகவும், மாணவர்களுக்கு உற்சாகமாகவும் நடந்து கொண்டிருந்தது.
பத்து மற்றும் பனிரெண்டு மாணவர்களுக்கு போதுத்தேர்வு இருப்பதால் ஒரு நாளையும் வீண் செய்திடக்கூடாது என்பதால் அவர்களுக்கு அந்நாளிலும் வகுப்புகள் இருந்தன.
மதியத்திற்கு மேல் அவர்களது ஆசிரியர்களும் ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியை காண சென்றிட வகுப்பில் மாணவர்கள் மட்டும் அமைதியாக தத்தம் வேலைகளை செய்தபடியும் விருப்பமுள்ள மாணவர்கள் நூலகத்திற்கும் சென்றிருந்தனர்.
திடீரென முதுகுத்தண்டில் மெல்லிய வலி பரவிட… அடிவயிற்றில் ஏதோ உருண்டை உருள்வதைப்போல் உணர்ந்த பூவிற்கு சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றில் வலி ஏற்பட்டது.
அவ்வூர் பிள்ளைகளாகவே இருந்தாலும் விடுதியில் தான் தங்க வேண்டும் என்பது அப்பள்ளியின் விதி. அதனால் வயது வரும் பெண்களுக்கு வயதிற்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பள்ளியிலேயே தனி வகுப்பின் மூலம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க பூவிற்கு தன்னிலை தெளிவாகப் புரிந்தது.
ஆனால் வகுப்பில் ஆசிரியையும் அற்ற நிலையில் யாரிடம் சொல்வதென்று தெரியாது அவஸ்தையாக உணர்ந்தது ஒரு நொடி தான்… அடுத்த கணம் இரண்டு வகுப்புகள் தள்ளியிருக்கும் வேந்தனின் வகுப்பின் முன் நின்றிருந்தாள் பூ.
அத்தனை ஆண்கள் முன் தனியாக அவனைத்தேடி வருவதற்கு அஞ்சி எப்போதும் வேந்தன் தான் பூவைத்தேடி அவளது வகுப்பின் பக்கம் செல்வான். இன்று அவளே வந்ததும் என்னவோ ஏதோவென்று வெளியில் வேகமாக வந்தான் வேந்தன்.
“பூ என்னடா என்னாச்சு?” அவஸ்தையாய் சுருங்கியிருந்த அவளின் முகம் கண்டு பதறியவனாகக் கேட்டுக்கொண்டே உடல்நிலை சரியில்லையோ என அவளின் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்த்தான்.
“ஃபீவரெல்லாம் இல்லை” என்றவள்,
“காட் மை ஃபர்ஸ்ட் பீரியட்” என்று எவ்வித தடையுமின்றி அவனிடம் கூறினாள்.
முதலில் சில கணங்கள் அவள் சொல்லியது அவனுக்கு விளங்கவில்லை. புரிந்ததும் “பெயின் இருக்காடா?” என்று கனிவாகக் கேட்டான்.
“லைட்டா. பட் இப்போ யார்கிட்ட சொல்லுறது என்ன செய்யனும் ஒன்னும் தெரியலடா” என்றவளின் கண்கள் கலங்கின.
“ஹேய் பூ. இது நார்மல். உங்களுக்கு கிளாஸ் எடுத்திருப்பாங்களே. இதுக்கு எதுக்கு அழற?” என்று கேட்டுக்கொண்டே அவளின் கண்கள் துடைத்தவன், “என்னோட வா” என்று அழைத்துச்சென்று அவர்களது வகுப்பிற்கு முன்னிருந்த மரத்தடி மேடையில் அமர வைத்தான்.
“ஐ வில் பீ பேக் இன் பியூ மினிட்ஸ் பூ” என்று ஓடியவன், விடுதிக்கு வந்து வார்டனிடம் சொல்லி அவரை பூ இருக்குமிடம் அழைத்து வந்தான்.
“இதையும் அவன்கிட்ட தான் சொல்லுவியா” என்று மேரி கேட்டபோதிலும் அவர்களுக்கு இடையேயான நட்பை நான்கு வருடங்களாக பார்த்துக் கொண்டிருப்பவரின் மனதில் எவ்வித தவறான எண்ணவோட்டமும் இல்லை.
“இதுல என்னயிருக்கு மேம். இட்ஸ் நேச்சுரல். கேர்ள்ஸ் விட பாய்ஸ்க்கும் இது தெரிஞ்சிருக்கணும் மேம். இதுல தப்பில்லையே. உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றம்” என்றான். அவர் பூவை கடிந்துகொண்டதாக எண்ணி.
“ஹீ இஸ் மை ஃபிரண்ட் மேம். ஐ ஃபீல் சேஃப் வித் ஹிம்.” பூவும் வேகமாகச் சொல்லியிருந்தாள்.
“நீங்க இப்படி பதில் சொல்லாமலிருந்தால் தான் ஆச்சரியம்” என்று சிரித்தவர், “ஐ வில் டேக் கேர் ஹெர்” என்று பூவை அழைத்துச் சென்றுவிட்டார்.
அன்றைய நிகழ்வு இன்றும் பாரியின் மனதில் பதிந்து போயிருந்தது.
‘எந்தளவிற்கு தன்மீது அன்பும் நம்பிக்கையும் இருந்திருந்தால் பூ தன்னிடம் முதலில் கூறியிருப்பாள்.’ அவனால் அவனின் பூவின் நட்பின் மீது கர்வம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
ஒரு பெண் அவ்வளவு எளிதில் தாயிடமே பகிர்ந்துகொள்ளத் தயங்கும் விடயத்தைக்கூட தடையின்றி வேந்தனிடம் சொல்லுமளவிற்கு நெருக்கமாக இருந்த பூ… இப்போது பிரிந்திருக்க காரணம்? நினைவுகளோடு பாரியின் எண்ணத்தில் சுழல… தமிழை அடியோடு வெறுத்தான் பாரி வேந்தன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
44
+1
+1