°மாபெரும் யுத்தங்கள் யாவும் நாம் அன்பு வைத்திருப்பவர்களிடமும் நம்மை அதிகமாக நேசிப்பவர்களிடமுமே.°
JOURNEY OF FRIENDSHIP AND LOVE.
RIDE WITH POLICE.
தூவானமாய் சிதறி, இதமென அகம் நிறைக்கும் நட்பு/காதல்.
அத்தியாயம் 1 :
ಬೆಂಗಳೂರು (பெங்களூரு.)
ಆಯುಕ್ತರ ಕಚೇರಿ (ஆயுக்தரா கச்சேரி – ஆணையர் அலுவலகம்.)
காலை நேரம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
காவலர்கள் யாவரும் தங்களுக்கான பணியை ஒருவித வேகத்துடன் செய்து கொண்டிருந்தனர்.
காவலர் ஒருவர் கம்பிகள் நிறைந்த கதவிற்கு பின்னால் ஒருவனை அடி வெலுத்துக்கொண்டிருக்க… அங்கிருந்த ரைட்டர் தனக்கு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து கண்ணீரோடு சொல்லும் பெண்ணின் வார்த்தைகளை தாளில் எழுதிக்கொண்டிருந்தார்.
“முன்ஜானேயல்லி பெல்லகே வரதக்ஷனே… மொதல பிரகரன… சீர்ஷிக்கே.” (காலையிலேயே முதல் கேசு வரதட்சணை கேஸா… தலையெழுத்து.)
காக்கி உடையில் தன் முழு உயரத்திற்கு நிமிர்வுடன் வேங்கையென உள்ளே நுழைந்த ஒருவன் ரைட்டரிடம் கேட்க அவரின் தலை ஆமென்று அசைந்தது.
காலம் எவ்வளவு வேகமாக முன்னேறினாலும் பெண்களுக்கான அநீதிகள் மட்டும் குறைவதில்லை என்ற ஆதங்கமே அவனின் சலிப்பான கேள்விக்கு காரணம்.
“பரஹகாரரே ஹஸ்டபிரத்தியானு கொல்லுவ முன்ன விசாரிச்சிரி! இக கண்டன ஹொடேடதா நோவினிண்டா கொல்லடுதிடிதானே… எறடு தினா அலேதாதுதிடிதானே. அதரு கல்லு கண்டனோதனே பண்டு பத்யா ஹேலாளித்தாலே.”
(கையெழுத்து வாங்குவதற்கு முன்னர் நல்லா விசாரிச்சிக்கோங்க ரைட்டரே! இப்போ புருஷன் அடிச்ச வலியில் கேசு கொடுத்துட்டு… ரெண்டு நாள் நாமளும் அலைஞ்சு திரிஞ்ச பின்னர். கல்லானாலும் கணவன்னு வந்து வசனம் பேச போகிறாள்.)
அச்சுற சுத்தமாக கன்னடம் பேசியவன் அக்மார்க் தமிழன். தமிழின் சாயல் துளியுமில்லாது இயல்பான கவனமும் தெளிவும் அவனது பேச்சில்.
ரைட்டரிடம் மீண்டும் ஆமோதிப்பாக ஒரு தலையசைப்பு.
அப்பெண்ணிற்கும் அவன் சொல்லியது புரிய… “நானு கேசு ஹிம்படையாலு பருவதில்லா” (வழக்கை திரும்ப பெற வரமாட்டேன்) என்று அவனைப் பார்த்து சத்தியம் செய்திடாதக் குறையாகக் கூறினாள்.
அதற்கு அவனின் இதுபோன்று எத்தனை வழக்குகளை பார்த்திருப்போம் என்கிற எண்ணவோட்டம் தானாக இதழை வளைய வைத்தது.
தன்னுடைய பகுதிக்குச் சென்றவன் இருக்கையில் அமர்ந்தான்.
“புனித்.”
அவனின் ஒற்றை அழைப்பிற்கு வேகமாக அவனது அறைக்குள் ஓடிவந்தவன், அவன் முன்னே ஒரு கோப்பினை வைத்தான்.
அவனின் பார்வையை உணர்ந்த புனித் அடுத்த நொடி சென்றிருந்தான்.
எதையும் பார்வையாலேயே எதிராளிக்கு விளங்க வைத்திடுவான். அவசியமற்று அழுந்த மூடி வைத்திருக்கும் உதடுகளை பிரித்திடமாட்டான். அவன் நினைத்ததை மட்டும் பேசும், செய்யும் குணம் கொண்டவன்.
கால்சட்டை பையில் கையை விட்டவன்… தான் தேடியது இல்லாததும், மேசை இழுவையை இழுத்து அதிலிருந்த மிட்டாய் வகை சாக்லேட் ஒன்றை பிரித்து வாயில் போட்டான்.
புனித் கொண்டு வந்து வைத்த கோப்பினை திறந்தான். மூன்று மாதங்களாக தன் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த போதும் முதல் முறை ஆராயும் தீவிரம் அவனது பார்வையில்.
இதுவரை அவ்வழக்கிற்காகச் சேர்த்த அனைத்து ஆதாரங்களும் அதிலிருக்க… ஒருமுறை சரிபார்த்துக்கொண்டான்.
கோப்பு திறந்திருக்க…
நாற்காலியில் சரிந்து நன்கு பின் சாய்ந்தவன்… கண்களை மூடிட… தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். கேண்டியின் சுவை அவனது தொண்டையில் இறங்கிக்கொண்டிருந்தது.
கதவு திறக்கும் சத்தத்தில் இமை திறந்து பார்த்தான்.
எதிரே தலைமை ஆணையர் செக்ரி.
உயர் அதிகாரியின் முன்பும் அவனது நிலையில் எவ்வித மாற்றமுமில்லை. இன்னும் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.
அவனுக்கு முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தவர்…
“உன் பேருக்கனா மிடுக்கு உனக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு. கூடவே திமிரும்.”
சொல்லியவர் மேசை மீது அவனின் பெயரைத் தாங்கி ஒய்யாரமாக வீற்றிருந்த பெயர் பலகையை பார்வையால் தொட்டு மீண்டார்.
‘பாரி வேந்தன் IPS. துணை ஆணையர்.’
“உனக்கு ட்ரான்ஸ்ஃபெர் வந்திருக்கு.”
பாரியின் முன் காக்கி உறையை வைத்தார்.
“நானு கேளலில்லா.” (நான் கேட்கவில்லையே!)
வந்ததிலிருந்து, தான் தமிழ் பேசிக்கொண்டிருக்க… அவனோ கன்னடத்தில் பதில் அளித்தான். செக்ரி கடுப்பாகிவிட்டார்.
“நானும் தமிழ், நீயும் தமிழ் அப்புறம் எதுக்குடா கன்னடத்தில் பேசுற. இந்த கன்னடத்தை பேசுனாலே நாக்கு சுளிக்கிக்குது. முதலில் சீரியஸா பேசும்போது கேண்டி சாப்பிடுறதை நிறுத்து.” முறைத்துக்கொண்டே கூறினார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக செக்ரி அங்கு ஆணையராக பதவி வகிக்கிறார். கன்னடம் பேசத் தெரிந்த போதும் முயன்றவரை தமிழ் பேசிடவே விரும்புவார். அதுவும் தமிழர்களை கண்டுவிட்டால் போதும் அவர்கள் காது வலிக்கும்வரை தமிழில் பேசி தன் மொழிப்பற்றை காண்பித்துவிடுவார்.
ஆனால் பாரியிடம் மட்டும் அது முடியாமல் போனது.
பாரியின் முதல் பணியிடமே பெங்களூர் தான். அவனின் வேலையை பாராட்டி பலமுறை உயர் பதவியுடன் தமிழகத்திற்கு மாற்றல் கிடைத்த போதும் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான்.
பாரியை முதல் பணி நாளிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். யாருக்கும் அடங்காதவன். அஞ்சாதவன். எதிராளியை பார்வையாலேயே குற்றத்தை ஒப்புவிக்க வைத்துவிடுவான். அவனின் நேர்மை தந்த மிடுக்குடன் எப்போதும் நேர்கொண்ட பார்வை தான் அவனிடத்தில்.
பாரியின் நேர்மையை கண்டு செக்ரியே பலமுறை வியந்திருக்கிறார். அதனாலே அவனிடம் மரியாதை மற்றும் இன்னும் பிறவற்றை அவர் எதிர் பார்த்திடமாட்டார். அவருக்குள் அவன்மீது ஏதோவொரு ஒட்டுதல். அவருக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவனுக்கும் அவரென்றால் பிடித்தம் மரியாதை எல்லாம் உண்டு. இருப்பினும் எளிதில் வெளிக்காட்டிடமாட்டான். தான் செய்யும் வேலையில் மட்டுமே என் கவனம் எனும் நிலையில் அனைத்திலும் எட்ட நின்றிடுவான்.
பாரியின் பெயரைத் தவிர வேறொன்றும் அங்கிருக்கும், யாருக்கும் தெரியாது. செக்ரி உட்பட.
தேவையென்றால் மட்டுமே இதழ் பிரிப்பவன்… மற்றவர்களின் அசைவுக்கான காரணங்களையும் தெரிந்து வைத்துக்கொள்வான். தன் வேலையில் மட்டுமே எப்போதும் கண்ணாக இருப்பான். அர்ஜுனனுக்கு இலக்கு ஒன்றே குறி என்பதைப்போல் பாரி வேந்தனுக்கு குற்றங்களும் அதன் தீர்வுகள் மட்டுமே குறி.
அதனாலே செக்ரி அவனிடத்தில் இலகுவாக இருப்பார். மற்றவர்களிடம் மேலதிகாரியாக நடந்துகொள்பவர் பாரியிடம் மட்டும் விதிவிலக்கு.
செக்ரி தமிழ் என்று சொல்லியதுமே பாரியின் நரம்புகள் புடைத்தெழுந்தன.
செக்ரி சொல்லிய தமிழ் வேறு… அந்நொடி பாரியின் நினைவுகளை ஆக்கிரமித்த தமிழ் வேறு. தமிழிலிருந்து தூரம் சென்றிடவே தமிழையே மறந்தானோ. அவன் மட்டுமே அறிந்த ஒன்று.
பாரி நினைத்தால் தமிழ் அவனை விலகிடுமா. இல்லை அவனால் தான் பிரிவை ஏற்றிட முடியுமா? முடியுமே! கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக முடியுமென்று நிருபித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றானே!
ஆனால் பாரிக்கும் தமிழுக்கும் இடையேயான பந்தம் எளிதில் விட்டுபோகக் கூடியதல்ல. அதனை அவன் உணரும் நாளும் அருகில்.
“என்னடா யோசனை?”
எப்போதும்போல் இப்போதும் தமிழ் என்ற வார்த்தை அவனின் சிந்தை கலைத்திருந்தது.
‘தமிழை மறப்பதற்கு தமிழை துறந்தானோ!’
செக்ரியின் கேள்வியில் மீண்டிருந்தான்.
“ஈ பதலாவனேயன்னு நானு ஒப்பிக்கொள்ளலாறே.” (என்னால் இந்த மாற்றலை ஏற்றுக்கொள்ள முடியாது.)
“நீ போய் தான் ஆகணும்.”
“சாத்யவில்லா.” (முடியாது.)
“ஏன் மூணு வருசமா என் தாலி அறுத்தது போதாதா. உன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை கொடுடா.” அவர் விளையாட்டாகக் கூறுகிறார் என்பது அவனுக்கு தெரியாதா என்ன?
“கல்லெத பாரியன்ட்டே தயவிட்டு கேளவு காரண நீதி மட்டு ஈ வார்கவானே ஆதேஷவன்ன ரட்டுகொலிஷி.” (போனமுறை மாதிரி நீங்களே எதாவது காரணம் சொல்லி இந்த டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் பண்ணிடுங்க.)
“முடியாது… இனி நீயே பேச மறுத்தாலும் தமிழ் பேசிதான் ஆகணும். தமிழ்நாட்டுக்கு சென்னைக்கு போய் தான் ஆகணும்.”
“ஒய்?” (Why?) கேட்ட பாரி அவரை கடுப்புடன் பார்த்தான்.
“ஒரு கேஸ் இன்வெஸ்டிகேஷன்காக உனக்கு டிரான்ஸ்பர் கொடுத்து இருக்காங்க. தமிழ்நாடு ஹோம் மினிஸ்டர் பொண்ணு ரீசன்ட்டா இறந்துட்டாங்க. சூசைட்.”
செக்ரி சொல்லும்போது பாரியிடம் சிறு அதிர்வு ஓடி மறைந்தது.
“அறநிலையத்துறை அமைச்சரோட மனைவி வேறு அவங்க. அவங்க சூசைட்டில் மர்மம் இருப்பதா அவங்களோட வீட்டில் நினைக்கிறாங்க. இதுக்கு முன்பு கேஸ் நேர்மையா விசாரிக்கலன்னு அங்கிருந்த அதிகாரியைத் தூக்கிட்டு உன்னை போட்டிருக்காங்க.”
“ஹாகாகி நானு விசேஷா?” (அப்படியென்ன நான் ஸ்பெஷல்.)
“இப்பவும் தமிழ் பேசமாட்டியா நீ?” உச்சபட்ச கடுப்பில் வினவினார்.
“அல்லிகே ஹோகி பரிசிலிசி.” (அதை அங்கு போய் பார்த்துக்கலாம்.)
பாரியின் பதிலிலேயே அவன் சென்னை செல்ல ஒப்புக்கொண்டான் என்பதை செக்ரி புரிந்து கொண்டார்.
“ஒத்துக்கிட்ட போல…” என்றவர் “இனி தமிழ் பேசித்தானே ஆகணும். என்ன செய்யப்போற?” என்று நக்கலாக வினவினார்.
அவரிடம் ‘நான் வெறுக்கும் தமிழே வேறு’ என்று ஏனோ அவனால் சொல்லிட முடியவில்லை. அவனின் தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரிவதையும் அவன் விரும்பவில்லை.
‘எப்படியும் தான் கேட்டதற்கு அவனிடம் பதிலிருக்காது’ என அறிந்த செக்ரி மேற்கொண்டு பேசினார்.
“ஹோம் மினிஸ்டர் உனக்கு தெரிந்தவரோ! நீதான் வேணுன்னு நிலையா நின்னு உன்னை அங்க தூக்கியிருக்கார்” என்றார்.
…..
“என்ன கேட்டாலும் பதில் மட்டும் சொல்லிடாதே” என்று சலிப்பாக முணுமுணுத்தபடி இருக்கையிலிருந்து எழுந்துகொண்டவர், “நெக்ஸ்ட் வீக் நீ சென்னையில் சார்ஜ் எடுத்திருக்கணும்” என்றார்.
பாரியிடம் சன்னமான தலையசைப்பு.
“போறதுக்குள்ள அந்த கேஸை முடிச்சிட்டு போயிடுடா. இல்லைன்னா எனக்கு மேலிருக்கும் அந்த ஆபீசர் என் தலையை உருட்டுவான்” என்று கூறிட, பாரியின் இதழோரம் புன்னகைத் தோன்றி மின்னலென மறைந்தது.
“உன் சிரிப்புக்கு என்னடா காரணம். முடியுமா? முடியாதா?” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே “புனித்” என்று அழைத்திருந்தான் பாரி.
புனித் வேகமாக வந்ததும்…
நகரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றின் பெயரைச் சொல்லியவன்… அங்கு என்ன திரைப்படம் என்று கேட்டதோடு கேண்டி ஒன்றை பிரித்து வாயில் போட… அவனைப்பற்றி தெரிந்தும் பதில் கேட்டு நின்ற தன்னை தலையில் தட்டியவாறு வெளியேறினார் செக்ரி.
“யாவுதோ தமில் சினிமா சார்.” (ஏதோ தமிழ் மூவி.) என்றவன் அலைபேசியில் அந்த திரையரங்கு விவரத்தை ஆராய்ந்து படத்தின் பெயரையும் கூறினான். சொல்லும்போதே புனித்தின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
பார்வையாலேயே என்ன என்பதைப்போல் வினவினான் பாரி.
“நானகே தமிலு பருவுதில்லா சார்.” (எனக்கு தமிழ் தெரியாது சார்.)
“சைட் ஹொடேயுவுது ஹெகே கோட்டா?” (சைட் அடிக்கத் தெரியுமா?)
வேகமாக ஆமென்று தலையாட்டினான். முகமெல்லாம் ஒளியுடன்.
“த்ரீ ஹீரோயின்ஸ்… ஆனந்தசி.” (என்ஜாய் பண்ணு)
மேலதிகாரி கூப்பிடும் போது அவனால் மறுக்க முடியவில்லை. செக்ரியிடம் சொல்லிவிட்டு போக வேண்டுமே இதையெப்படி அவரிடம் சொல்வதென்று புனித் முழித்து நிற்க… பாரி காவல் நிலையம் விட்டு வெளியேறி காவல் துறை வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.
பாரியின் வேகம் புனித்திற்கு அப்போதே கண்ணைக் கட்டியது.
முழித்து நின்றிருந்த புனித்தின் முதுகில் தட்டிய செக்ரி…
“போடா விட்டுட்டு போயிடப்போறான். அந்த மூவி ரிவியூ வேற நல்லாயிருந்துச்சு. நமக்கெல்லாம் லீவு உண்டா என்ன. அப்பப்போ இப்படி எதாவது என்ஜாய்மெண்ட் கிடைத்தாதான் உண்டு” என்று அவர் கூறிட… அவர் தன்னை போக சொல்கிறார் என்பது மட்டும் தான் புனித்திற்கு புரிந்தது. மற்ற ஒன்றும் விளங்கவில்லை.
‘இந்த நாலு வரி தமிழுக்கே தலை சுத்துது இதுல இரண்டரை மணிநேர படம்… சுத்தம்.’ இதுதான் புனித்தின் மனநிலை.
உதடுகள் இழுத்து வைத்து சிரித்தவன், மண்டையை ஆட்டியபடி பாரியை நோக்கிச் சென்றான்.
‘இன்னைக்கு அந்த கேஸ் முடிஞ்சிடும்.’ பாரி சொல்லாமலேயே சற்று நேரத்திற்கு முன் அவர் கேட்ட கேள்விக்கு பதிலை அந்நொடி தானாக கண்டறிந்தார் செக்ரி.
******
திரையரங்கிற்கு முன் நின்றிருந்த பாரியும், புனித்தும் காக்கி உடையை தவிர்த்திருந்தனர்.
“நிவ்வு தனுஷ் அபிமானியா சார்?” (நீங்க தனுஷ் ரசிகரா சார்.)
திரையரங்கின் முன் வைக்கப்பட்டிருந்த படத்தின் விளம்பர பலகையிலிருந்த தமிழ் நடிகர் தனுஷின் மீதே பாரியின் பார்வை நிலைத்திருக்க… தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் புனித் வினவினான்.
‘அவளுக்கு இவரை ரொம்ப பிடிக்கும்.’ தன்னைப்போல் பாரியின் மனம் சொல்லிக்கொண்டது.
‘இவரின் படமென்றால் முதல் நாள் முதல் காட்சி பார்த்திட அவள் செய்யும் அலப்பறைகள் நினைவுவர கூடவே அவன் மறக்க நினைக்கும் நிகழ்வுகளும் காட்சிகளாய் விரிய உடல் விறைத்து நின்றான்.
‘மூவி நேம்.’ புனித்தால் படத்தின் பெயரை படிக்க முடியவில்லை.
“சார் மூவி நேம்?”
வழக்கம் போல் பதில் சொல்லாது உள்ளே சென்றவன்… இருக்கையின் எண் பார்த்து அமர்ந்தான். புனித்தும் தன்னிலை நொந்தவாறு பாரியை பின்பற்றினான்.
அரங்கில் அளவானக் கூட்டம். பெங்களூரில் வசிக்கும் தமிழர்களுக்காக வாரம் இரு நாட்கள் மட்டும் அத்திரையரங்கில் தமிழ் திரைப்படம் காட்சியிடப்படும்.
படம் ஆரம்பித்தது. பாரி திரையில் மூழ்கி விட்டான்.
புனித்தான் தலையும் புரியாது, வாலும் புரியாது அடுத்த பத்தாவது நிமிடம் உறங்கிவிட்டான்.
ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நட்பின் உறவை இயல்பாக எடுத்துக்காட்ட…
பாரியின் மனம் எதற்கோ ஏங்கி தவித்தது.
‘மடிந்துபோன நட்பு மீண்டும் கிடைக்காதா.’ அரற்றினான்.
‘தமிழ்நாட்டில் போன வாரமே ரிலீஸ். இந்நேரம் அவளும் இப்படத்தை பார்த்திருப்பாள். அவளது தலைவர் படமாச்சே! முதல் ஷோ பார்த்திருந்தாலும் ஆச்சர்யம் இல்லை.’ அவளை நினைத்தும் கடுமையான அவனின் முகத்தில் மெல்லிய இளக்கம்.
“பூ” பாரியின் இதழ்கள் மூன்று வருடங்களுக்குப் பிறகு, தன் நட்பின் பெயரை உச்சரித்தது. நட்பில் திளைத்த நிகழ்வுகள் மூழ்கிய அதே கணம் அவன் வெறுக்கும் நிகழ்வுகளும் வரிசை கட்டிட… இளகிய மனம் கற்பாறையென இறுக்கம் பெற்றது.
செக்ரி அவனின் மாற்றலை சொல்லிய நொடி முதல் அமிழ்ந்து போயின என்று அவன் நினைத்திருக்கும் அவளின் நினைவு நொடிக்கு ஒருதரம் வருவதை பாரியால் தடுக்க முடியவில்லை.
வெறுக்கும் ஒன்று எண்ணத்தில் நினைவாகக்கூட எழக்கூடாது என்பதற்காக தமிழ் பேசுவதையே தவிர்த்திருந்தவனால்… தன் மாற்றலுக்கான காரணம் அறிந்த பின்னர் பின்வாங்கிட முடியவில்லை.
இறந்த நபர் ஒருகாலத்தில் அவனுக்கு வேண்டியவராயிற்றே… மறந்தாலும் சிலரின் உறவுகளை அழிக்க முடியாதே. அதற்கு பாரியும் விதிவிலக்கல்ல.
மறக்க நினைக்கும் ஒன்று. அதில் வெற்றி பெற்றுவிட்டான். அடியோடு மறந்துவிட்டான். ஆனால் அதன் வலியின் மிச்சம் புள்ளியேனும் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. அதற்காகவே செக்ரியிடம் முதலில் மாற்றலை மறுத்தவன்… விடயமறிந்து ஏற்றுக்கொண்டான்.
வெறுக்க நினைக்கும் ஒன்று. முடிந்ததா? நிச்சயம் இல்லையென்று அவனின் மனமே அவனுக்கு எதிராக பதில் கூறிடும். உயிரானதை யுகங்கள் கடந்தும் வெறுத்திட முடியாதே! அதனை நித்தமும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறான். ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் மனமில்லை அவனுக்கு.
சென்னை செல்ல வேண்டும் என்பதே கசந்தது.
இடைவேளையின் போது…
புனித்தை எழுப்பியவன் “பாப்கார்ன்” என்றதோடு, அலைபேசியில் மூழ்கினான்.
அவனை பார்த்தவாறு நகர்ந்தவனிடம்…
“பிக் சைஸ்” என்று புனித்தை பாராது கூறினான்.
தொடுதிரையில் அவனோடு சிரித்த முகமாக அவனது பூ.
‘என் கண்ணு முன்னாடி வந்துடாதடி.’ இறுதியாக அவளிடம் அவன் பேசிய வார்த்தைகள். இப்போதும் அவ்வார்த்தைகளே அவனின் அகத்தில்.
அலைபேசியை அணைத்து சட்டை பையில் போட்டவனின் பார்வை தனக்கு முன்பிருந்த இருவரில் நிலைத்தது. அந்நொடி மீண்டும் முழு காவலானாக மாறியிருந்தான். அரங்கை பார்வையால் வட்டமடித்தான்.
இருந்த அளவான கூட்டமும், இடைவேளையில் வெளியேறியிருந்தனர். அங்கொன்று இங்கொன்றுமாக சிலர் அமர்ந்திருந்தனர்.
அரங்கு இருள் பூசி… படம் ஆரம்பித்ததும் கையில் பாப்கார்னோடு திரும்பி வந்த புனித்… பாரியின் கையில் கொடுக்க கையை நீட்டிட… கீழே ஏதோ தட்டி இருக்கையில் சரிந்தான். அவனோடு சேர்ந்து கையிலிருந்த பாப்கார்னும் சிதறியது.
புனித் பாவமாக பாரியை பார்த்திட… அவனோ தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் காட்சியில் நிலைத்திருந்தான்.
‘யேனு தடேயிது?’ (எது தடுக்கியது?) யோசித்தவாறு காலுக்கு கீழ் பார்த்தவன்… இருட்டில் ஒன்றும் தெரிந்திடாது அலைபேசியில் வெளிச்சம் வைத்து பார்த்தவன், பாரியை அதிர்ந்து ஏறிட்டான். அவனது கண்கள் இரண்டும் தெறித்து விடுமளவிற்கு விரிந்தது.
“சார்…”
“சினிமா சென்னாகிதே. மாட்டு முகிசோனா.” (படம் நல்லாயிருக்கு. முடிச்சிட்டு பேசுவோம்.)
பாரியின் அமைதியான அதிரடி புனித்தை அதிசயித்தது. காலை தரையில் வைக்கவே பயந்தவன் இருக்கையில் குறுக்கி அமர்ந்தான்.
இரண்டு தடியர்கள் முகத்தில் ரத்தம் சொட்ட மயங்கி சரிந்திருந்தனர்.
படம் முடிந்ததும் ஒருவித அழுத்தத்தில் மூழ்கிய பாரி… மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனரா என்று ஆராய்ந்துவிட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வண்டியோடு வர சொல்லி தகவல் கொடுத்தான்.
இன்னமும் புனித் அதிர்ந்தவாறே இருக்கையில் சுருண்டு அமர்ந்திருந்தான்.
அவனை கவனிக்கும் நிலையில் பாரியில்லை. படத்தின் முடிவு அவனை வெகுவாகத் தாக்கியிருந்தது.
‘நட்பு நட்பாகத் தொடர வாய்ப்பேயில்லையா? இல்லை நட்புக்குள் மலரும் காதல் அவ்வளவு அழகானதா?’ தனக்குத்தானே கேள்விகேட்டு மேலும் குழம்பிப்போனான்.
நட்பாய் மலர்ந்த முகம் வேறொரு நிகழ்வை சிதறவிட தானாக இரும்பென கடினமாகினான்.
ஒரே முகம்… இருவேறு நினைவுகளாக. சுழன்றடிக்கப்பட்டான்.
வெறுப்பு எதனால்?
ஏங்கும் நட்பை பிரிந்திட காரணம்?
அம்முகம் யார்?
இறந்த பெண் அவனுக்கு யார்?
தூவானம் சிதறும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
44
+1
1
+1
1