கண்ணாலம் 14
என்றும் நேர்மை தவறாத பகலவன், இன்று சதி செய்கிறான். எப்போது விடியும் என்று ராக்கோழியாகக் காவல் காத்துக் கொண்டிருந்தவன் வெறுப்பான மூச்சு ஒன்றை இழுத்து வெளியிட்டான். அதன்பின்னும், வர மறுத்த சூரியனைக் கண்டு நாக்கைக் கடித்த சிங்காரவேலன்,
“ஏன்டா ஏன்டா… கன்னிப்பையன் சாபம் சும்மா விடாது.” திட்டத் தொடங்கினான்.
“யாரடா திட்டுற?”
“ஹான், ஆட்டுக்கல்லு வாயன் உன் மாமனார.”
“ரொம்ப எகத்தாளம்!”
“இருக்கட்டும். போய் பாட்டப் போட்டு விடு.”
“முடியாதுன்னு சொன்னா?”
“பொண்டாட்டி கூடச் சேர்ந்துட்டன்ற மிதப்புல பேசுறியா? பக்கத்து வீட்டுக்காரர் மண்டையில கல்லத் தூக்கிப் போட்டுக் கலவரம் பண்ணிடுவேன்.”
“செஞ்சாலும் செய்வடா…” எனப் புலம்பிக் கொண்டே கண்ணன் பாட்டைப் போட்டு விடத் திரும்ப, அவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் சேதுராமன்.
“டேய்!”
“என்னாடா?”
“இந்த ஜென்மத்துல உனக்கும், பூங்கொடிக்கும் கண்ணாலம் நடக்காது.”
“அண்ணன்னு கூடப் பார்க்க மாட்டேன். பிஞ்ச செருப்புப் பிஞ்சு போற அளவுக்கு அடிப்பேன்.”
“சத்தியமா தான்டா சொல்றேன்.”
“நீ சரிப்பட்டு வர மாட்ட, எங்க அந்தக் கல்லு…”
“கல்லெடுக்கறதுக்கு முன்னாடி, அந்த ஆட்டுக்கல் மண்டையன் நிக்கிற போஸைப் பார்த்துக்கடா.”
விரிந்த கண்களோடு மாமனார் வீட்டுப் பக்கம் திரும்பியவன், அய்யனார் கணக்காக நின்று கொண்டிருக்கும் சேதுராமனைக் கண்டு பதறினான். அவரோ, இரண்டு மருமகன்களையும் முறைத்துப் பஸ்பம் ஆக்கிக் கொண்டிருந்தார். சாம்பலாகும் தங்கள் உடல்களின் வெப்பத்தை, அவர் விழி மூலம் அறிந்து கொண்டவர்கள் முழி பிதுங்கி நின்றனர்.
“உங்களுக்குப் பொண்ணு குடுக்குறேன்ல, அப்புடித் தான்டா பேசுவீங்க.”
“ஐயோ மாமா… நீங்க வேற.” என வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மாமனாரை நோக்கி நடை போட்டவனைப் புரியாது பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
“ஆட்டுக்கல் மண்டையன், உன் மாமனார்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க.”
“உங்க அண்ணன் மாமனார் நான்தானடா…”
“அய்யய்யோ!” என நெஞ்சில் கை வைத்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அண்ணன் பக்கம் திரும்பி, “அப்போ மாமனுக்கு அந்த விஷயம் தெரியாதா?” அதிர்வோடு கேட்டான்.
“எந்த விஷயம்?”
“அதுவா மாமா…”
“இவன் முருகர் பக்தர் மட்டும் இல்ல, முருகராவே வாழ்ந்துகிட்டு இருக்கான்.”
“புரியல!”
அவரை நெருங்கிக் காதிற்குள், “சித்தாமூர் சிவகாமிய சின்சியரா…” என்றதற்குப் பின் அனைத்தும் காதோடு காதாக ரகசியமாகப் பகிரப்பட்டது.
அவன் சொல்லச் சொல்ல, சேதுராமனின் மூச்சு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. மாமனின் பலமான மூச்சையும், காதை விட்டுப் பிரியாத தம்பியின் வாயையும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனின் தோளைத் தட்டிய சரவணன்,
“பசை எதுவும் ஒட்டிக்கிச்சாடா. ரொம்ப நேரமா ஒரே இடத்துல நின்னுட்டுக் கெடக்க…” என்றான்.
“இவன் என்னாமோ மாமாகிட்டச் சொல்றான்டா. அவர் என்னை புஸ்ஸுக்கு, புஸ்ஸுக்குன்னு மூச்சு வாங்கப் பார்க்குறாரு.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கண்ணனை நெருங்கிய சேதுராமன், சட்டைக் காலரைத் தூக்கிப் பிடித்து, “என் பொண்ணு இருக்கும்போதே இன்னொருத்தி கேக்குதா உனக்கு? என்னா தைரியம் இருந்தா என் பொண்ணு இருக்கும்போது இன்னொரு கண்ணாலம் பண்ணி வாழ்வ. என் பொண்ணு தாலி அறுத்தாலும் பரவால்லடா, நீ உயிரோட இருக்கக்கூடாது.” என அவனைப் பிடித்துக் குலுக்க ஆரம்பித்தார்.
“சத்தியமா இல்ல மாமா, நான் என் புவனாக்குக் கனவுல கூட துரோகம் பண்ண மாட்டேன்.”
“கனவுல பண்ண மாட்டான், நிஜத்துல பண்ணுவான்.”
“அடப் பரதேசிப் பயலே! ஏண்டா என் வாழ்க்கையில விளையாடுற? சத்தியமா சொல்றேன், உனக்குக் கண்ணாலமே நடக்காதுடா.”
“உனக்கே ரெண்டு கண்ணாலம் நடக்கும் போது எனக்கு ஒன்னு நடக்காதா?”
“இவன் சொல்றதை நம்பாதீங்க மாமா.” என்பதைக் கேட்காமல் குதிக்க ஆரம்பித்தார் சேதுராமன்.
“இவன் பொய் சொல்றான் மாமா. நம்ம கண்ணன் அப்படிப் பண்ற ஆளா? அப்படியே ஏதாச்சும் பண்ணி இருந்தா நாங்க சும்மா இருப்போமா?”
“மீரா அண்ணி…”
“இப்ப எதுக்குடா அவளைக் கூப்பிடுற?”
“இல்ல, நீ ஸ்கூல் படிக்கும்போது ஏதோ ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தல்ல. அதைப் பத்தி அண்ணிகிட்ட டிஸ்கஸ் பண்ணனும்.”
தம்பியைக் காப்பாற்றச் சென்று, தன் வாழ்க்கை படுகுழியில் விழுந்து விடுமோ என்ற பயத்தில், “நல்லாப் போட்டு அடிங்க மாமா, பொண்டாட்டி இருக்கும் போது இன்னொன்னு கேக்குது. நம்ம புவனா வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். இனி புவனாவைத் தவிர எவகிட்டையும் போகாத அளவுக்குக் கால ஒடச்சுப் போடுங்க மாமா.” என்றதும்,
“ஹா ஹா ஹா…” வானம் பார்க்கச் சிங்காரவேலன் சிரிக்க, அலறியடித்து உதயமானது சூரியன்.
அண்ணனின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிய குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல், ஊரே அதிரும்படி பாட்டைப் போட்டான். அனைவரும் எழுந்து விட்டதைப் புலம்பல்களை வைத்தே கண்டு கொண்டவன், அதை நிறுத்திவிட்டு மேடை மீது ஏறி நின்றான். போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் யாரும் அமராமல் காலியாக இருந்தது. அதற்கெல்லாம் வருந்தாத நம் நாயகன் ஊரே கூடி இருப்பது போன்று, “மொய் எழுத வந்திருக்கும் என் அன்பு உள்ளங்களுக்குக் காலை வணக்கம்!” என அமோகமாக விழாவை ஆரம்பித்தான்.
‘அப்படி என்னதான் செய்யப் போகிறான்?’ என்ற குறுகுறுப்பில் இரவெல்லாம் தூங்காமல் ரங்கம்மாளைத் தொந்தரவு செய்தவள் செவியில், காதலனின் வார்த்தை விழுந்தது. கட்டை விரலில் தேள் கொட்டியது போல் அலறி அடித்து எழுந்தமர்ந்து, “ஆரம்பிச்சிட்டான் பாட்டி!” என எழுப்பினாள்.
“உன் தொல்லையால ராத்திரி எல்லாம் தூங்காம, இப்பத்தான் செத்தக் கண்ண மூடுனேன். அதுக்குள்ள எழுப்புற.”
“அவன் ஸ்டார்ட் பண்ணிட்டான்.”
“பண்ணிட்டுப் போகட்டும்.”
“என்னான்னு போய் பார்த்துட்டு வா…”
“நீ வரணும்னு தான் பண்றான். அவ்ளோ ஆர்வமா இருந்தா நீயே போய்ப் பாரு.”
“நான் போக மாட்டேன்.”
“அப்போ உக்காருடி.”
“ப்ச் பாட்டி.” என அந்த முதியவரைப் பாடாய் படுத்தி எழுப்பியவள், “அங்க போயிட்டு என்னா நடக்குதுன்னு தகவல் சொல்லு.” அனுப்பி வைத்தாள்.
புலம்பிக் கொண்டே அவர் எழுந்து செல்ல, ‘என்னா நடந்தாலும், நான் வரமாட்டேன்.’ தனக்குள் சபதம் செய்து கொண்டவளுக்குத் தெரியாது. இரண்டாவதாகக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு, மீண்டும் அவனிடம் சிக்கப் போகிறோம் என்பது.
***
மணி எட்டு ஆகியும் இன்னும் சபை நிறையவில்லை. அதற்கு மேல் பொறுமை இல்லை நம் சிங்காரத்திடம். வீட்டிற்கு வெளியே சுடு தண்ணீர் காய வைக்க இருந்த பெரிய விறகை ஸ்டைலாகத் தூக்கிப் பிடித்து வீட்டிற்குள் நுழைந்தான். பெண்கள் பரபரப்பாகச் சமையலறையிலும், ஆண்கள் வேலைக்கும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சீதாலட்சுமி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
சுழன்று பார்த்தவன், கடுக்கண் கோபத்தோடு ஆண்டாண்டு காலமாக இருந்த பெரிய பானைச் சட்டியை நடுக்கூடத்தில் போட்டு உடைத்தான். அந்தப் பானை அவன் இடுப்பு உயரத்திற்குப் பெரியதாக இருக்கும். சத்தம் கேட்டு அவரவர் கூடிவிட,
“என் கண்ணாலத்துக்குச் சீதனமா எடுத்து வந்த பானையை, இப்புடி உடைச்சிட்டியேடா.” பேரனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தார் சீதாலட்சுமி.
“உன்னதான் தூக்கிப் போடலாம்னு நெனச்சேன். பானை காப்பாத்திடுச்சு.”
“ஏன்டா உடைச்ச?”
“ஒண்ணுமே தெரியாத மாதிரி ஆளாளுக்கு உலாவிட்டு இருக்கீங்க. இந்த சிங்காரத்தப் பார்த்தா அப்புடித் தெரியுதா, இல்ல எப்புடித் தெரியுதாம்? இன்னைக்கு என் லாலா இங்க வந்தே ஆகணும். இதுக்கு மேலயும் பிரிஞ்சு இருக்க என்னால முடியாது. அவளை என்கூடச் சேர்த்து வச்சுட்டு எக்கேடோ கெட்டுப் போங்க.”
“அதுக்கு எங்களை என்னாடா பண்ணச் சொல்ற?”
“இன்னைக்குச் சோறு, தண்ணின்னு எதுவும் இல்ல. என் லாலா தேடி வர வரைக்கும், யாரும் பந்தலை விட்டு நகரக்கூடாது.” என எடுத்து வந்த உருட்டுக் கட்டையைத் தூக்கி மிரட்டியவன்,
“அந்த நெத்திலி மீசை வாயன்கிட்டப் போயிட்டு வரேன். அதுக்குள்ள எல்லாரும் வரிசையா வந்து ஒக்காந்து இருக்கணும்.” மிரட்டி விட்டுச் சென்றான்.
துணி துவைத்துக் கொண்டிருந்த அன்னத்தின் முன் நின்றவன், வாளியில் இருந்த தண்ணீர் அனைத்தையும் கீழே ஊற்ற, “பைத்தியக்காரா, எம்புட்டுக் கஷ்டப்பட்டுத் தண்ணி அடிச்சிட்டு வந்திருக்கேன்.” என்றவர் முன் கட்டையை நீட்டியவன்,
“வம்பு பண்ணாம எழுந்திருங்க.” என்றான்.
“உங்கள நம்பி நிக்க நான் தயாரா இல்ல. நாளைக்கு என் தலையைத் தான் போட்டு உருட்டுவீங்க.” என்றவரைக் கதறக் கதறக் கையில் ஏந்தியவன்,
“யோவ்! பொண்டாட்டி வேணும்னா வந்து சேரு.” என முறைத்து விட்டுச் செல்ல, சின்னப் புன்னகை அவர் உதட்டில்.
சிங்காரத்திற்குப் பயந்து அவன் வீட்டு ஆள்கள் முன்வரிசையில் நொந்து அமர்ந்திருக்க, அத்தையை அமர வைத்துவிட்டு அனைவரும் இருக்கிறார்களா என எண்ணிப் பார்த்தான். அவன் வீட்டு இளைய வாரிசு நால்வரும் இல்லாமல் இருக்கத் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளைப் பாவம் பார்க்காமல் தூக்கி வந்து அமர வைத்தான்.
கண்டபடி வசை பாடும் குடும்பத்து ஆள்களின் பேச்சைச் சிறிதும் காதில் வாங்காதவன், உருட்டுக் கட்டையோடு ஊரில் உலா வரத் தொடங்கினான். சித்தப்பன், பெரியப்பன், அண்ணன், மாமன், என அனைத்துச் சொந்தங்களின் வீட்டுக் கதவையும் தட்டியவன், அவர்கள் இருக்கும் நிலையைக் கருத்தில் கொள்ளாது இழுத்து வந்து விட்டான். பாதிப்பேர் தூக்கக் கலக்கத்திலும், பாதிப்பேர் வாயில் வைத்த பல் துலக்கியுடனும் அமர்ந்திருந்தனர். அதிலும் சிறப்பு, வீட்டுப் பெண்கள் தான். ஒரு சிலர் தண்ணீர் குடத்தோடு வந்து அமர்ந்திருக்கின்றனர்.
ஓரிரு இருக்கைகள் காலியாக இருப்பதைக் கண்ட சிங்காரம், நடமாட முடியாமல் இருந்த பெருசுகளை அள்ளிக் கொண்டு வந்து சபையை நிறைத்து விட்டான். இந்நேரம்தான், ரங்கம்மாள் பாட்டி உள்ளே நுழைந்தது. தன்னவள் வருகிறாளா என்று எட்டிப் பார்த்தவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு,
“தனியா வரவங்களுக்கு எல்லாம் சீட்டு இல்ல, ஓடு.” விரட்டி அடித்தான்.
“உங்க கூட ஒரே அக்கப்போராய் போச்சு. அவ என்னாடானா பார்க்கச் சொல்லித் துரத்துறா… நீ என்னாடானா போகச் சொல்லித் துரத்துற. எல்லாம் என் தலையெழுத்து! என்னைக்குத் தான் என் புருஷன் மனசு வந்து என்னைக் கூப்பிடப் போறானோ.” வானம் பார்த்துப் பேசியவரின் தோள் மீது கை போட்டவன்,
“லாலா அனுப்புச்சா…” கன்னத்தைப் பிடித்து இழுத்தான்.
அவரோ கேவலமாகப் பார்க்க, “மேடை மீது வந்து அமருங்கள் பாட்டி. உங்களுக்காகவும், உங்கள் அழகுப் பேத்திக்காகவும் மட்டுமே இந்த விழா. சிறப்பு விருந்தினர் வரும் வரை, துணை விருந்தினர் விழாவை நடத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” தூய தமிழில் பேசுகிறேன் என்று அவர் காதை அடைத்தவன் அமர்ந்த பின்னே விட்டான்.
ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்கும் அவன் குரலைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ஆர்வத்தின் எல்லை அதிகரித்திருந்தது. ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் அவன் குரலுக்கு இடையில், அடிக்கடி நொடித்துக் கொண்டிருக்கும் சொந்த பந்தங்களின் குரலும் ஒலித்தது. நேரில் பார்க்காமலே அங்கு நடக்கும் அவஸ்தைகளை உணர்ந்தவளுக்குச் சிரிப்பு.
“நல்ல நேரத்தில் விழா தொடங்கி விட்டது. தொடக்க உரையாக என் மாமனார் உரையாடப் போகிறார்.” என்றதும் நெஞ்சில் கை வைத்தார் சேதுராமன்.
அவர் அதிர்வைத் துச்சமென எண்ணித் தரதரவென்று இழுத்து வந்து அவர் உயரத்துக்கு இருந்த மைக் முன்பு நிறுத்தினான். என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்தவரிடம், ஒரு காகிதத்தைக் கொடுத்து அப்படியே ஒப்பிக்கச் சொன்னான். மருமகனின் எண்ணம் புரியாது,
“இனி என் மகள் சிங்காரத்தின் மனைவி! என் மகளிடத்தில் எந்த உரிமையும் எனக்கு இல்லை. அவள் திருமண வாழ்வில் என்னால் எந்தப் பிரச்சினையும் வராது. அப்படி வந்தால்…” பேச்சை நிறுத்தினார்.
“படிங்க!”
“அப்படி வந்தால் பாதி மொட்டைத் தலையும், பாதி மீசையோடும் வாழ்நாள் முழுவதும் இருப்பேன் என்று குலதெய்வத்தின் மீது சத்தியம் செய்கிறேன். அதுவும், அதை என் மருமகனே எனக்குச் செய்வான் என்றும் உறுதியளிக்கிறேன்.”
அவர் பேச்சைக் கேட்டவள், ‘களுக்’ என்று சிரிக்க, “அதற்கு ஒரு முன்னோட்டமாக, வாக்குக் கொடுத்ததைச் செய்து காட்டப் போகிறார் என் மாமனார்.” அதிரவிட்டான் அவரை.
சிரித்தவளுக்குப் பதறிவிட்டது.
ஒரே ஓட்டமாக ஓடும் மாமனைத் துரத்திப் பிடிக்க இரண்டு காளைகளை அனுப்பி வைத்தவன், “வாப்பா…” தந்தையை அழைத்தான்.
சேதுராமன் செயலுக்குச் சிரிப்புச் சத்தங்கள் காதை நிறைக்கிறது. இதில் தனக்கு என்னவோ எனப் பயந்துகொண்டே வந்தவரிடம், சின்னக் காகிதத்தைத் தான் கொடுத்திருந்தான். மகனை நம்பிக் கையில் வாங்கியவர் உடனே முறைக்க, பேசுமாறு கண்ணைக் காட்டினான். அவரோ முடியாது என்று மறுத்தார்.
“என்னைப் பெற்றவருக்குக் கூச்சமாம். அதனால், நான் சொல்ல அவர் செய்யப் போகிறார்.” என்றதும்,
“போகிறாரா…” சத்தமாகக் கூறினார் கோமளம்.
அதிர்வில் வாய் பிளந்து பார்த்திருக்கும் அன்னையைக் கண்டு சிரித்தவன்,
“போடுடா பாட்ட!” என்றான் சத்தமாக.
“எனக்குன்னு ஊருக்குள்ள மானம் மருவாதி இருக்குடா. இப்படிக் கேவலமா ஆடச் சொல்ற.”
“குடிச்சிட்டு எத்தனைத் தடவை வீட்டு வாசல்ல நின்னு ஆடி இருப்ப. அப்பப் போகாத உன் மானம், என் லாலாக்காக ஆடும் போது போகுமா? எப்படியும் மாமனும், மச்சானும் குடிச்சுட்டுக் கண்ணாலத்துல ஆடத்தான் போறீங்க. அதுக்கு ஒரு ஒத்திகை பாத்திடுப்பா…”
நீலகண்டன் முடிவாக மறுத்து விட்டார். அவர் பேரப்பிள்ளைகள் நால்வரையும் அழைத்தவன், “தாத்தாவ ஆட வைங்கடா.” கோர்த்து விட்டான்.
“பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டு வண்ண ரவிக்கை போட்டு…”
பேரப்பிள்ளைகள் தாத்தாவைப் பிடித்துக் கொண்டு ஆட, வேறு வழியில்லாமல் உடலை லேசாக அசைக்க ஆரம்பித்தார். அதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிங்காரவேலன், நடுவில் புகுந்து கிளப்பி விடச் சிறுவயதிற்குச் சென்றாள் பூங்கொடி.
அன்னம் அடித்துவிட்டால், தாய்மாமன் மடியில் தஞ்சம் சேர்வாள். அப்பொழுதெல்லாம் இந்தப் பாடலை ஒளிபரப்பி ஆட்டமாடிச் சிரிக்க வைப்பார். அதை எண்ணியவளுக்கு அரும்புச் சிரிப்பு உதட்டின் ஓரம்.
நீலகண்டனைப் பெற்ற சீதாலட்சுமி முதல், தாத்தா என்றழைக்கும் பேரப்பிள்ளைகள் வரை அவர் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தனர். கூச்சத்தோடு ஆடிக் கொண்டிருந்தவர், இரண்டு பேர் இழுத்து வந்து மச்சானை உடன் சேர்த்ததும் குதூகலமாக ஆட ஆரம்பித்தார். தான் மட்டும் கோமாளி ஆகாமல், தங்கை கணவனும் கோமாளி என்றதில் பெரும் மகிழ்வு அவருக்கு. மனத்தின் ஓரம் வெகு நாள்களாக உரையாடாமல், இது போன்று மனம் விட்டு ஆடாமல் இருந்த ஏக்கத்தையும் தீர்த்துக் கொண்டார்.
மொட்டை அடித்து விடுவானோ என்ற பயத்தில், ஆடத் தொடங்கியவர் நேரமாக ரசித்து ஆடத் தொடங்கி விட்டார். மாமனாரின் ஆட்டத்தைக் கண்டு மருமகனே சிரித்தான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குக் கால்கள் பரபரத்தது. விசில் சத்தமும், பாட்டுச் சத்தமும் மதி மயக்கியது. அவ்விருவரையும், மூச்சு வாங்கும் வரை ஆட வைத்தவன் அன்னத்தைக் குறுகுறுவென்று பார்த்தான்.
“அத்த பாவம் டா…”
“பரவால்ல!”
பரிதாபமாக மேடை ஏறியவரிடம் உணவுத்தட்டை நீட்டியவன், “சின்ன வயசுல என் லாலாக்கு எப்படிச் சாப்பாடு ஊட்டி விட்டிங்களோ, அதே மாதிரி ஊட்டி விடுங்க.” என்றிட,
“இல்லாதவளுக்கு எப்புடிடா ஊட்டி விட?”
“அது உங்க பிரச்சினை!”
“நீங்க கொஞ்சிக் கெஞ்சிச் சாப்பாடு ஊட்டுற அழகுல அவ இங்க ஓடி வந்துடனும்.”
“நான் வேணா வீட்டுக்கே போய் ஊட்டிட்டு வரவா?”
“சரி…” என்றதும் அவர் சிரிக்க, “இங்க இருந்து ஒவ்வொரு வாயா ஊட்டிக்கிட்டே அவ வீடு வரைக்கும் போங்க.” என்றதில் அந்தச் சிரிப்பு நின்றது.
புருவம் சுருங்க இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குப் பலத்த சிந்தனை. கூடவே, அன்னை அன்பொழுக அரவணைத்து உணவளித்த நாள்கள் கண்முன். மீன் குழம்பு என்றால் சிறிதும் ஆகாது பூங்கொடிக்கு. அதை ஊட்டத்தான் படாத பாடுபடுவார். இரண்டு வீட்டையும் சுற்றிவரும் மகளைப் பிடித்து வயிறு முட்டச் சாதத்தைத் திணித்து விட்டுத் தான் மூச்சு விடுவார். நடுவில், ஏதேனும் மீன் முள் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான்! கலவரம் செய்து விடுவாள். சமாதானம் செய்து நொந்து போவார் அன்னம். அந்த அழகிய தருணத்தை நினைத்தவளுக்குக் கண் கலங்கியது.
மேடையில் நின்றிருந்த அன்னம், மகள் சிறுபிள்ளையாக இருப்பதாக எண்ணி, “ஒரு வாய் வாங்கிக்க பூவு. அப்பாகிட்டச் சொல்லி சாயந்திரம் வரும்போது இனிப்புப் பனியாரம் வாங்கிட்டு வரச் சொல்றேன். இந்த ஒரு வாய் மட்டும் வாங்கிக்க. துப்பாதடி! வாயைத் தெறக்கிறாளா பாரு.” ஓடிப் பிடித்து ஊட்டத் துவங்கினார்.
லேசாகக் கலங்கியிருந்த அவள் கண்ணில் இருந்து, சாரை சாரையாக கண்ணீர் ஊற்ற ஆரம்பித்தது. தன்னை மறந்து அமர்ந்து இருந்தவள் அதை வெகு தாமதமாக உணர்ந்து கொள்ள, நொந்து கொண்டு உணவைக் கையில் வாங்கிய அன்னத்திற்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. மகளைப் பிரிந்த ஏக்கம் கண்ணீர் விட வைத்தது அவரை.
சிரித்துக் கொண்டிருந்த அனைவரும் அன்னத்தின் தாய்ப் பாசத்தை உணர்ந்து சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்க, “ஓரமா ஒக்காந்து அழுவுங்க அத்த...” என ஒதுங்க வைத்தான்.
“கல் நெஞ்சமாடா உனக்கு?”
“உன் புள்ளைய வீட்டுக்கு வர வைக்கப் படாதபாடு பட்டுட்டு இருக்கேன். புருஷன் மாதிரிப் பேசாம, சோத்துல மூக்கச் சிந்திப் போடாம ஓரமாப் போடு.”
கழுத்தை வளைத்துக் கொண்டு திரும்பிய அன்னத்திற்குப் பின்னால் தாயை அழைத்தான். பதமாக வந்து நின்றவரிடம், “தல சீவி விடு.” என்றிடச் சிரித்த முகமாக மகன் கேசத்தில் சீப்பை நுழைத்தார்.
“அய்ய!”
“என்னா டா?”
“மருமகளுக்குச் சீவி விடு!”
“உன்னை எப்புடித் தான் பெத்தனோ?”
“சாவகாசமா நேரம் கெடைக்கும்போது யோசிச்சுப் பாரும்மா. நேரம் போகுது, என் லாலாக்குத் தல சீவி விடு!”
அன்னத்தின் நிலைக்குத் தன் நிலை தேவலாம் என்று மேடையில் அமர்ந்தவர், எண்ணெய் ஊற்றி இல்லாத மருமகளுக்குத் தலை பின்னி விட்டார். தன்னால் அவள் கைகள் இடுப்பு வரை வளர்ந்திருந்த கூந்தலைத் தொட்டது. எந்நேரமும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் தலை முடியைக் கட்டி வைப்பது கோமளத்தின் வேலை. முயல் ரத்தத்தைத் தனக்காக வாங்கி வரச்சொல்லி, வேலை மெனக்கெட்டுக் காய்ச்சித் தேய்க்கும் அத்தையின் அன்பில் உள்ளம் கனிந்தது.
சரவணனை மேடை ஏற்றி லாலாவை முதுகில் அமர வைத்து யானைச் சவாரி செய்ய வைத்தவன், கண்ணனை அழைத்து லாலாவோடு பட்டம் விட வைத்தான். ரங்கம்மாள் மடியில் படுக்க வைத்துத் தலை கோத, கதைகள் கூறி உறங்க வைத்தார் சீதாலட்சுமி. சிறு வயதிற்குச் சென்று வந்தாள் பூங்கொடி. அத்தனை இனிமையான தருணங்கள் அவள் வாழ்வில். திருமணத்துக்கு முன்பு வரை கூட அவை அப்படியேதான் இருந்தது. அதற்கெல்லாம் திருஷ்டியாக, மனம் கவர்ந்தவனே நிறுத்தி இத்தனைத் தூரத்திற்குக் கொண்டு வந்த ஆதங்கம் பெருமூச்சு விட வைத்தது.
கடைசியாகத் தங்கள் வீட்டு மருமகள்களை மேடை ஏற்றியவன், “என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் மூணு பேரும் சேர்ந்து எப்புடி வீட்டு வேலை எல்லாம் செய்வீங்கன்னு செஞ்சு காட்டுங்க.” என்றவனை வாய்க்குள் வசைபாடி,
“நான் சமையலப் பார்த்துக்குறேன் பூவு. நீ வாசலப் பெருக்கிக் கோலம் போட்டுடு.” என்றாள் மீரா.
“என்னாது கோலம் போடணுமா?”
“சரி பூவு, நீ கோலம் போட வேணாம். பாத்திரத்தை மட்டும் தேச்சுக் குடு.” என்றாள் புவனா.
“எது! அந்த ஒடஞ்ச சட்டி பானையை என் லாலா கழுவணுமா?”
“வீட்டப் பெருக்கச் சொல்லவா?” மீரா.
“வேணாம்!”
“தண்ணி புடிக்கச் சொல்லவா?” புவனா.
“கூடாது!”
“என்னாதான் கொழுந்தனாரே சொல்லச் சொல்றீங்க?” என்றதும் சுண்டு விரலைக் கீழ் உதட்டிற்கு மேல் வைத்துப் பற்களோடு உறவாட வைத்தவன், “ச்சீ… போங்க அண்ணி’ஸ்.” தலைகுனிந்து வெட்கப்பட்டான்.
முகத்தைச் சுளித்து அதைக் கடந்து வந்த மருமகள்கள் இருவரும், “நாங்க வேலையப் பார்த்துக்கறோம் பூவு. நீ போய் எங்க கொழுந்தனை மட்டும் பார்த்துக்க…” பாகற்காய் கசப்பாய் கூற,
“வெட்கமா வருது!” முகத்தை மூடிக்கொண்டான்.
அதுவரை வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தவள், வீடு அதிரச் சத்தமாகச் சிரித்தாள். தன்னவளின் மகிழ்வு புரிந்து விட்டதோ? அனைவரையும் கீழே இறக்கிவிட்டுத் தனி ஒருவனாக மைக் முன்பு நின்றான்.
“லாலா…” என்ற ஆழ்ந்த அழைப்பில் அவள் சிரிப்பு நிற்க, இரு நொடி அமைதியாக நின்றான் சிங்காரவேலன். அவன் அமைதியும், அழைத்த அழைப்பும் காதை உன்னிப்பாக மாற்றியது. கட்டிக் கொண்டிருந்த பூவை ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு அவன் வார்த்தைகளைக் கேட்க ஆரம்பித்தாள்.
“நான் பேசுறதைக் கேட்டுக்கிட்டு இருப்பேன்னு நம்புறேன். மனசு முழுக்க ஆசையோட நேசிச்ச உன்னை இழந்ததுக்கு அப்புறம், வாழ்க்கை எப்புடி இருக்கும்னு வாழ்ந்து பார்த்துட்டேன். திரும்ப அதே மாதிரிப் பண்ண மாட்டேன்னு என்னா நிச்சயம்னு நீயும், என்னைச் சுத்தி இருந்தவங்களும் கேட்ட கேள்விக்கு இதுதான் என் பதில்! நீ இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துட்டேன். எனக்கு இந்த வாழ்க்கை புடிக்கல, திரும்ப இப்புடி ஒரு வாழ்க்கையை வாழ நிச்சயம் துணிய மாட்டேன். என்னால முடியாது.” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது. மாமன் குரல் தழுதழுப்பதைக் கண்டு கொண்ட பூங்கொடியின் உடல் எழுந்து நின்றது.