Loading

கண்ணாலம் 12

 

பூங்கொடிக்குத் தகவல் சொல்லினாள் மீரா. செய்தியைக் கேட்டவள் தேங்கிய கண்ணீரோடு கிளம்பினாள். சுமை தாங்கிப் பெற்று, அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கியதோடு, அவர் பெற்ற மகளை இன்று வரை தாங்கிக் கொண்டிருக்கும் ரங்கம்மாள் நிலை சொல்லித் தெரிவதற்கு இல்லை. அந்த முதியவரிடம் முக்கி அழத் தெம்பும் இல்லை. 

 

அன்னத்தின் புலம்பல் குறைந்த பாடில்லை. யார் ஆறுதலுக்கும், அவர் மனம் செவி சாய்க்கவில்லை. ஒதுங்கி இருந்த நீலகண்டன் கூடத் தாவி அணைத்துக் கொண்டார் தங்கையை. அண்ணன் மார்பில் தலை சாய்ந்தவர் தன் துக்கத்தைக் கொட்டினார். அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஜடமாக நின்றிருந்தவன், மருத்துவர் வெளியில் வருவதைக் கண்டு வேகமாக ஓடினான். 

 

“மாமா இப்ப எப்புடி இருக்காங்க?”

 

“பீபி ரொம்ப லோ ஆகியிருக்கு. அவர் சரியா சாப்பிடாமல் தண்ணி கூடப் போதுமான அளவு குடிக்காம இருந்திருக்காரு. வயிறு கொஞ்சம் புண்ணா இருக்கு. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாரு. நார்மல் வார்டுக்கு மாத்துனதும் நீங்க எல்லாரும் போய் பார்க்கலாம்.” 

 

அங்கிருந்த அனைவருக்கும் அந்த மருத்துவர் தெய்வமாகத் தெரிந்தார். போதும் என்ற வரை நன்றி உரைத்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு மனநிம்மதி அடைய, அன்னத்தின் மனம் சாந்தி அடைந்தது. கணவனைப் பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தவரைப் பெரும் அளவு சோதித்துப் பார்க்க அனுமதித்தனர். 

 

கண்மூடி அமைதியாகப் படுத்திருந்தார். நிறுத்தி வைத்த கண்ணீர் மீண்டும் படையெடுத்தது. கட்டியவரின் தலைகோதி, கண்ணீரைச் சிந்திய அன்னம், “என்னங்க…” என மெதுவாக அழைத்தார்.

 

மனைவியின் குரல் கேட்டு விழிகள் திறந்தது. அன்னத்தின் கண்ணீர், பாகுபாடு இன்றி அவர் மீது கொட்டியது. இருவரின் உணர்வுகளும் பேசிக் கொண்டது. கண்மூடித் தான் சுகம் என்பதைக் கூறி மனைவியை நிம்மதி அடையச் செய்தவர் பார்வையைச் சுழற்றினார். 

 

வதங்கிய முகத்தோடு சிங்காரவேலன் நின்றிருந்தான். தான் எழவில்லை என்றதும் மனைவி கதறியதையும், ஓடி வந்த மருமகன் துடித்ததையும் உணர்ந்து கொண்டு தான் இருந்தார். உணர்வுகள் அப்பொழுதே அவர்களைத் தாவியணைக்கப் பரபரத்தது. ஒன்றும் செய்ய முடியாதவரை இன்னும் சோதித்தனர் மொத்தக் குடும்பமும் சூழ்ந்து. தன் மீது கொண்டுள்ள அன்பைக் கண் முன்னே கண்டும், ஒன்றும் செய்ய முடியாமல் மருமகன் மீது நிலை குத்திய பார்வையைச் செலுத்தினார். 

 

அடி மீது அடி வைத்து மாமனாரை நெருங்கியவன், “உங்களுக்கு ஒன்னும் இல்ல மாமா, நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க.” என்றான். 

 

கண்கள் பூத்தது அவன் அன்பில். மனம் பொறுக்க முடியாமல் வலது விழியிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதயமானது. அதைக் கண்டதும் ஓடிவந்த நீலகண்டன்,

 

“என்னை மன்னிச்சிடுயா. என்னால தான் உனக்கு இந்த நிலைமை. மனசு நோகுற மாதிரி உன்னை ரொம்பப் பேசிட்டேன். எல்லாத்தையும் மனசுல வச்சு இங்க வந்து படுத்துக் கெடக்க… நான் செஞ்ச பாவத்தால, என் கூடப் பொறந்தவ ரொம்பத் துடிச்சுட்டா… என் மனசாட்சி என்னைக் குத்துது. என் மேல இருக்கற கோபம் மொத்தத்தையும் கொட்டிடு சேதுராமா. இப்புடி மட்டும் படுத்துக் கெடந்து என்னைக் குற்றவாளி ஆக்கிடாத.” என அவர் கைபிடித்துக் கதறினார். 

 

“என்னையா நீ… தப்புப் பண்ணது நான், நீ போய் மன்னிப்புக் கேக்குற. என்னால தான் உன் புள்ள இப்புடித் தனியா நிக்கிறான். நான் பெத்த பொண்ணு உறவே வேணாம்னு போயிட்டா…”

 

“உங்களுக்கு இப்பதான் உடம்பு சரியாகி இருக்கு அண்ணா… இந்த மாதிரி நேரத்துல பழசு எதையும் பேசாதீங்க. நடந்தது நடந்து போச்சு. இனியாவது நல்லபடியா நடக்கணும்னு கடவுளை வேண்டிக்குவோம்.” 

 

இருக்கும் சூழ்நிலையைக் கோமளத்தின் வார்த்தை சற்றுத் தளர்த்தியது. ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேதுராமன் மீதுள்ள அன்பைப் பொழிந்தார்கள். மாமனாரிடம், கண்ணன் மனதார மன்னிப்புக் கேட்க, தந்தை மார்பில் படுத்துத் தன் துக்கத்தைக் கரைத்தாள் புவனா. சில நாள்கள் பேசாமல் இருந்த தங்கையிடம்,

 

“மன்னிச்சிடுமா…” எனச் சரணடைந்தார் நீலகண்டன். 

 

மன்னிப்பும் கண்ணீரும், கோபத்தாலும் வீம்பாலும், உண்டான பிரச்சினையை ஓரம் கட்டியது. உறவும் அன்பும் பேசிக் கொண்டது. மனமும், பரிவும் ஆறுதலளித்துக் கொண்டது. வெகு நாள்கள் கழித்து அங்கிருந்த அனைவரின் மனத்திலும் இருந்த அழுத்தம் நீங்கியது. இலகுவான சூழ்நிலையில் நிம்மதி கண்டனர். 

 

முடிந்துபோன தருணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள், இந்த தருணத்தை மகிழ்வாகக் கையாண்டார்கள். சேதுராமன் சற்று நேரத்தில் எழுந்து அமர்ந்து விட்டார். தங்கை கணவனுக்கு உணவு வாங்கி வந்த நீலகண்டன், சகஜமாகப் பேச்சுக் கொடுக்க சேதுராமனும் பழையபடி பேசினார். சண்டைக்குக் காரணமான அவர்களே சமாதானம் ஆனபின் அங்கு என்ன குறை? ஆளாளுக்குத் தங்கள் பேச்சுக்களை உள் நுழைத்துச் சிரிக்க ஆரம்பித்தனர். கிடைத்த இடத்தில் அமர்ந்து கதை பேசினர். 

 

“ங்ஙே…ங்ஙே… ஆ…ங்ஙே. அவ்அஅஅ… ங்ஙே…” என்ற அழுகைச் சத்தம் நாராசமாகக் கேட்டது. மகிழ்வாக இருந்த மொத்தக் குடும்பமும் சத்தம் வரும் பக்கம் திரும்பியது. 

 

தரையில் அமர்ந்து ஒரு காலை மடக்கி, அதில் முழங்கையை ஊன்றி வைத்துத் தலைக்குத் தாங்கி அமர்ந்திருந்த சிங்காரவேலன் தான், மூக்கைச் சுருக்கிச் சுருக்கி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தான். கண்ணன், சரவணனின் பிள்ளைகள் நால்வரும் சிறிய தகப்பனைச் சூழ்ந்து கொண்டு, “ஏன் சித்தப்பா, அழுறீங்க? அதான் தாத்தாக்குச் சரியாயிடுச்சுல்ல.” புரியாது கேட்டனர். 

 

“ங்ஙே.… ம்ம்… ங்ஙே… நான் அதுக்கு அழல.”

 

“வேற எதுக்கு அழுறீங்க?”

 

“இப்புடி ஒரு மானங்கெட்ட குடும்பத்துக்காக என் லாலாவ விட்டுட்டனே… ங்ஙே… படுபாவிங்களா, எத்தனை நாள் திட்டம் போட்டு என் கண்ணாலத்த நிறுத்துனாங்களோ?” கேவிக் கேவி அழ ஆரம்பித்தான்.

 

அவன் அழுகையும், தோரணையும் ‘பக்’ என்ற சிரிப்பைத் தான் கொடுத்தது அனைவருக்கும். எல்லாம் அழகாக நடந்தேறியது அவள் வரும் வரை. 

 

மருத்துவமனை வரும் வரை அவள் அவளாக இல்லை. திக்! திக்! ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. பெற்றவர் நிலையை அறிய எண்ணி அவர் இருக்கும் அறையை விசாரித்தவள், மனத்தை ஒரு கையிலும் ரங்கம்மாளை மறுகையிலும் பிடித்துக் கொண்டு ஓடி வந்தாள். 

 

இன்னும் இரண்டு அறை தாண்டி விட்டால் சேதுராமன் இருக்கும் அறை வந்துவிடும். அதுவரை கூடத் தன் ஓட்டத்தை நிறுத்தாமல், புயல் போல் வந்து கொண்டிருந்தவள் படுகுழியில் விழுந்தது போல் ஏமாந்து நின்றாள். இரு குடும்பத்தாரின் பேச்சுச் சத்தங்களும், மிதமான புன்னகையும் அவளை ஏமாற்றியது. பயமும் துக்கமும் பறந்தோடி, ஆத்திரமும் எரிச்சலும் தலைக்கு மேல் ஏறி அமர்ந்தது. 

 

“போதும் போதும், இன்னும் கிளைமாக்ஸ் வரல.”

 

“எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டாலே கிளைமாக்ஸ் தானடா.”

 

“அட கூறுகெட்ட குப்பா… அண்ணி உன்னை மன்னிச்சிட்டாங்க. என் லாலா என்னை மன்னிச்சு ஏத்துக்க வேணாம்?”

 

“அதுக்கு எங்களை என்னா பண்ணச் சொல்ற?”

 

“உங்களை ஒன்னும் பண்ணச் சொல்லல.” என்றவன் பார்வை சேதுராமன் மீது திரும்பியது. மருமகன் திட்டம் புரியாது அப்பாவியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்தவனுக்கு நகைப்பு மிளிர்ந்தாலும், 

 

“உங்களை உசுரக் குடுக்காத குறையா காப்பாத்துனதுக்குக் காரணம் என் லாலா தான். நீங்க குடுக்கப் போற பர்பாமென்ஸ்ல அவ மனசு உருகிக் கரைந்து ஊத்திடனும்.” என்றான்.

 

“நான் என்னாப்பா பண்றது?”

 

“ஒன்னும் பண்ண வேணாம். அவ வந்து வாசல்ல நிக்கிற நேரம், லொடக்கு லொடக்குன்னு வாந்தி எடுக்கணும். அதை நான் உள்ளங்கைல தீர்த்தமா புடிக்கணும். அதைப் பார்க்கற உங்க பொண்ணு இப்புடி ஒரு நல்லவன் கிட்ட சிக்கிட்டோமேன்னு வெடுக்கு வெடுக்குன்னு ஓடி வந்து பச்சக், பச்சக்குன்னு உம்மா குடுத்து, இத்தனை நாளா உங்க அன்பைப் புரிஞ்சுக்காம அலைய வச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க மாமான்னு ஒட்டிக்கணும்.” 

 

“அது என்னா வாயா, இல்ல கார்ப்பரேஷன் குழாயாடா? நீ கேட்டதும் வாந்தி வர…”

 

“ஆமாப்பா, எனக்கு அப்புடியெல்லாம் வாந்தி வராது.”

 

“ஏன் வராது, இப்ப வரும் பாருங்க.”

 

பறந்தோடி வந்தவள், பாதம் நோகாது அடியெடுத்து வைத்தாள். பூங்கொடியின் வருகை அறியாத குடும்பத்தார்கள், இன்னும் பேச்சை நிறுத்தாது உரையாடிக் கொண்டிருந்தனர். அறைப் பக்கம் நின்றவள் மெல்லத் தலையை மட்டும் முன் நீட்டிப் பார்த்தாள். 

 

கீழ்த்தாடையை இடது கையால் பிடித்துக் கொண்டவன், வலது கை இரு விரல்களை அடித்தொண்டை வரை விட்டுக் குடைய ஆரம்பித்தான். இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காத சேதுராமன் அரண்டு துடிக்க, சுற்றி இருந்தவர்கள் பதற ஆரம்பித்தனர். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாதவன் வாந்தி வர வைப்பதில் குறியாக இருந்தான்.

 

விட்டு விடும்படி அவரால் முடிந்தவரை கெஞ்சிக் கூத்தாடி விட்டார். சிறிதும் இரக்கம் வரவில்லை மாமன் மீது. தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும் குடும்ப ஆள்களிடம், தன் தேகத்தை விட்டுக் கொடுக்காதபடி திடமாக வைத்துக் கொண்டவன் அவசரத்திற்கு வர மறுத்த வாந்தியை, 

 

“கொல்லிமலை முனீஸ்வரா! என் மாமா வாயில இருந்து வாந்தி வர வச்சிருப்பா…” என ஒரே சுழற்றாகச் சுழற்ற, அடைப்பட்டிருந்த குழாய் வெடித்துச் சிதறுவது போல் வாந்தி அவன் முகத்தில் தெறித்தது. 

 

“அய்ய… ச்சீ!” முகத்தைத் துடைக்கத் திரும்பியவன் காதலியைக் கண்டு முழி பிதுங்கி நின்றான்.

 

“பெர்ஃபார்மன்ஸ் கரெக்ட், டைமிங் தப்பு.” என்றான் கண்ணன்.

 

“வாய மூடுடா…”

 

“உன் வாய மூடி இருந்திருந்தா, இப்புடி ஏடாகூடமான நெலமைல நின்னுருக்க மாட்ட.” சரவணன். 

 

“ரெண்டு பேரும் பேசாமல் போயிடுங்க. இல்ல அந்த ஆள் கூடச் சேர்ந்து நீங்களும் வாந்தி எடுக்க வேண்டியது இருக்கும்.” என்றதும் உடன்பிறப்பு இருவரும் விலகி விட்டார்கள்.

 

திருமணத்தை நிறுத்திவிட்டுத் தன்னைத் தனிமரமாக நிற்க வைத்த அனைவரும், ஒன்றாகக் கூடிப் பேசிச் சிரிப்பதை ஏற்க முடியவில்லை அவளால். திருமணம் நின்ற நாளிலிருந்து ஒவ்வொரு நொடியையும் கடக்க அரும்பாடுபட்டு இருக்கிறாள் பூங்கொடி. மன்னிப்பை யாசகமாகக் கேட்டு நிற்பவனை நெருங்கவும் முடியாது, வேண்டாம் என்று வெறுக்கவும் முடியாது ஒவ்வொரு நாளையும் அவனோடு கழித்தவளுக்கு, இரவெல்லாம் தூக்கம் என்பது சிறிதும் இருக்காது. 

 

அன்னையின் கண்ணீரும், குடும்பத்தின் பிரிவும், காதலின் துரோகமும், தனிமையும், ஏக்கமும் எந்தத் தவறும் செய்யாதவளை வாட்டி வதைத்திருக்கிறது. அத்தனைக்கும் காரணமானவர்கள், எதுவுமே நடக்காதது போல் ஒன்று கூடி இருப்பதைக் காணச் சகிக்கவில்லை. தந்தையின் மீதுள்ள பாசத்தில் திறந்த கண்ணீர் ஏமாற்றத்தில் வற்றிப் போனது. 

 

அவளைத் தாண்டி உள்ளே சென்ற ரங்கம்மாள், “ராசா…” எனப் பரிதவிப்பாகக் கட்டியணைத்து அழுதார். 

 

அன்னையை அணைத்து ஆறுதல் கூறிய சேதுராமன் வாசலைப் பார்த்தார். அவளைக் கண்ட இரு குடும்பத்தார்களும் நிம்மதியாகச் சிரித்தனர். ஆனால், சிங்காரத்தின் பார்வை எட்டிப் பார்க்கும் அவள் விழிகளை விட்டு நகராமல் இருந்தது. அந்த விழிகளில் இருக்கும் ஆதங்கம் அவனுக்கு மட்டுமே புரிந்தது. தவறாக எண்ணிக் கொண்டு பார்க்கும் காதலிக்குப் புரிய வைக்கும் நோக்கோடு நெருங்கியவன், அப்படியே நின்றான். அவளே உள்ளே நுழைந்ததில். 

 

மகள் பேசப்போகும் வார்த்தைக்காகத் தந்தையானவர் பரபரப்பாக அமர்ந்திருந்தார். சுற்றி இருந்தவர்களும் அதைக் காண ஆசையாக நின்றிருந்தனர். தன்னிடம் வந்து சேர்ந்த மகளை எண்ணி மகிழ்வில் அழுது கொண்டிருந்தார் அன்னம். இத்தனைப் பேரையும் தாண்டித் தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அவன் விழிகளைச் சந்தித்து விட்டு, 

 

“என்னாமோ, உடம்பு முடியலன்னு சொன்னாங்க. இங்க என்னாடானா கூடிப் பேசிச் சிரிச்சிட்டு இருக்கீங்க. அந்தப் பைத்தியக்காரி பூங்கொடி கண்ணாலத்த நிறுத்திட்டோம். இனி அவ நம்ம பக்கம் வரமாட்டா. அடிச்சிக்கிட்டுச் சண்டை போட்ட மாதிரி நடிச்சதெல்லாம் போதும், சேர்ந்துக்கலாம்னு சேர்ந்துகிட்டிங்களா?” கேட்க, மூச்சைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கு உலா வரவில்லை. 

 

“என்னாடி பேசுற? பெத்த அப்பன் உடம்பு முடியாமல் கெடக்கான். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுற.”

 

“இங்க இருக்க யாருக்காவது மனசாட்சி இருக்காம்மா. எல்லாம் ஒன்னு கூடி என் கண்ணாலத்த நிறுத்திட்டு, இப்புடி எதுவுமே செய்யாத மாதிரி சிரிச்சுப் பேச எப்புடி முடியுது? நீங்கெல்லாம் மனுஷங்க தானா? நான் உங்களுக்கு என்னா பாவம் பண்ணேன்? என் வாழ்க்கையைக் கெடுத்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் இப்புடிச் சந்தோஷமா சிரிக்கிறீங்க.” 

 

“லாலா…”

 

“தயவு செஞ்சு கிட்ட வராத. பார்த்தியா? இவங்க ரெண்டு பேரும் எப்புடிப் பேசிக்கிறாங்கன்னு. இவங்களுக்காகவா என்னை வேணாம்னு சொன்ன?”

 

“நடந்ததுக்காக, ஒருத்தருக்கு ஒருத்தர் மன்னிப்புக் கேட்டுச் சமாதானம் ஆகிட்டாங்கடி.”

 

“ஓஹோ! அப்போ நீங்க எல்லாம் சேர்ந்து எனக்குக் கொடுத்த வலிக்கு மன்னிப்பு தான் ஒரே தண்டனை. எல்லாரும் நடந்ததை மறந்துட்டுச் சந்தோஷமா இருக்கீங்க. எந்தத் தப்பும் பண்ணாம, கஷ்டத்தை அனுபவிச்ச நான் முட்டாள்!” 

 

“இந்தா லாலா, உன் வலி எனக்குப் புரியுது. அதுக்காக, எல்லாரும் திட்டம் போட்டுப் பண்ண மாதிரிப் பேசாத. நடந்ததுக்காக இப்ப வரைக்கும் எல்லாரும் வருத்தப்பட்டுட்டு தான் இருக்காங்க. மாமா இப்புடிப் படுத்துக் கெடக்குறது கூட உன்னை நெனைச்சுத் தான்.”

 

“என்னை நெனச்சா? ம்ம்… மாமனும், மருமவனும் ஒன்னாகிட்டீங்க. அவருக்குப் பொறந்த பாவத்துக்கும், உன்னைக் காதலிச்ச பாவத்துக்கும் நான் தனியா நிக்கிறேன். நல்லாருக்குடா உங்க நாடகம்!” 

 

“நடந்த எல்லாத்துக்கும் இந்த அப்பா தான்மா காரணம். நீ உறவே வேணாம்னு சொல்லிட்டுப் போனதுக்கு அப்புறம் தான், எவ்ளோ பெரிய பாவத்தைப் பண்ணி இருக்கோம்னு புரிஞ்சுது. இப்ப எல்லாரும் பேசிச் சமாதானம் ஆகிட்டோம். உனக்கும், சிங்காரத்துக்கும் கண்ணாலத்தைப் பண்ணிடலாம்.” 

 

“யாருக்கு வேணும், நீங்க போடுற கண்ணாலப் பிச்சை! இன்னைக்கு ஒன்னு கூடிக் கண்ணாலம் பண்ண முடிவெடுப்பீங்க. நாளைக்குச் சண்டை போட்டு என்னை வேணாம்னு உதறித் தள்ளிட்டுப் போவீங்க. இன்னும் உங்களை நம்ப, நான் பைத்தியக்காரி இல்லை. பெத்தவனாச்சேன்னு பதறி ஓடி வந்ததுக்கு, திரும்பவும் என்னை ஏமாத்திட்டீங்க. இனி ஜென்மத்துக்கும் யாரும் என் மூஞ்சில முழிச்சிடாதீங்க.”

 

“நீ தப்பாப் புரிஞ்சுட்டுப் பேசுற லாலா.”

 

“இப்பதான் உங்க எல்லாரையும் சரியாப் புரிஞ்சுகிட்டேன். இனி இந்தக் குடும்பத்துல இப்புடி ஒருத்தி இருந்தான்னு மொத்தமா மறந்துடுங்க.” 

 

 

“எங்க ஆம்பளப் புத்தியால, நீ ரொம்பக் கஷ்டப்பட்டுட்ட. அந்தத் தப்புக்கு மன்னிப்பைத் தவிர வேற ஒன்னும் கேட்க முடியாது லாலா‌. எந்த மாதிரிச் சூழ்நிலை வந்தாலும், அன்னைக்கு மாதிரி நிக்க வைக்காம கண்ணுக்குள்ள வச்சுத் தாங்க ரெடியா இருக்கேன்டி. கொஞ்சம் மனசு இறங்கி என்னை ஏத்துக்க. நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம், நான்தான்டி மருந்தா இருக்க முடியும். நான்தான் லாலா உன்னைச் சந்தோஷமா வச்சிருக்க முடியும். உங்க அப்பா மேல எனக்கும் நிறையக் கோபம் இருந்துச்சு. ஆனா, அது எல்லாமே அவர் உடம்பு முடியாமல் படுத்த அந்த நிமிஷத்தோட மறைஞ்சிடுச்சு. தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வர வரைக்கும் அம்புட்டுப் பதட்டம். அப்பதான் உறவுன்னா என்னா, பாசம்னா என்னான்னு முழுசாப் புரிஞ்சுகிட்டேன்.” 

 

“ஓஹோ! அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தது நீதானா?” 

 

“ம்ம்” 

 

“என்னா, எங்க அப்பா உயிரோட ஒக்காந்து கெடக்காரு?” என்ற வார்த்தைக்குப் பின்னான பொருளை உணர முடியாது குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் சிங்காரத்தைக் கண்டு ஏளனமாகச் சிரித்தாள் பூங்கொடி. 

 

“எத்தனைத் தடவை எனக்கு ஒரு சான்ஸ் கெடச்சா, உங்கப்பனைப் போட்டுத் தள்ளிடுவேன்னு சொல்லி இருக்க. இப்புடி அருமையான சான்ஸ் கெடைச்சும், கை நழுவ விட்டுட்டு நிக்குற. இதுதான் உன் வீரமா?” 

 

என்ன சொல்வதென்று தெரியாமல் சிங்காரவேலன் அதே குழப்பத்தோடு நின்றிருக்க, “இவரைக் காப்பாத்துனதுக்குப் பதிலா சொன்னதைச் செஞ்சுருந்தா, நீ பெரிய இவன்னு நம்பி இருப்பேன். இல்லையா, எனக்கும் என் லாலாக்கும் உன்னால தான்யா கண்ணாலம் நின்னு போச்சுன்னு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வராம இருந்திருந்தா, என் மேல உண்மையான பாசம் இருக்குன்னு நம்பியிருப்பேன். இப்புடி எதையுமே பண்ணாம நான்தான் உன்னைச் சந்தோஷமா வச்சிருப்பேன், மருந்து மண்ணாங்கட்டின்னு பேசிட்டு இருக்க…” என்றவள் பேச்சைக் கேட்ட அந்தக் கூட்டம் அதிர்ந்து நின்றது. 

 

அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாதவள், “மனுச ஜென்மமே இல்லாத உங்களை மனுஷங்களா மதிச்சுத் திரும்பி வந்தேன் பாரு, என்னைச் செருப்பாலயே அடிக்கணும்.” என்று விட்டு அங்கிருந்து வெளியேறினாள். 

 

அவள் பேசிவிட்டுச் சென்ற தாக்கம், சூறாவளியாய் சுழற்றி அடித்தது அனைவரையும். அவரவர் இடத்தில் அப்படியே நின்று கொண்டு அவள் பேசிய வார்த்தையை நினைத்துக் கொண்டிருந்தனர். நிமிடமும், நேரமும் ஓடியதே தவிர எந்த மாற்றமும் இல்லை அங்கு. காதலியின் பேச்சைக் கேட்டவன் சிலையாக மாறிவிட்டான். உடலுக்குள் இருந்த உயிர், அவள் சென்ற பாத வழியோடு சென்றுவிடக் கேட்பாரற்று நின்றான் சிங்காரவேலன். 

 

“என் பொண்ணு என்னைக் கடைசி வரைக்கும் மன்னிக்க மாட்டா போல…” என்ற சேதுராமன் பேச்சில் தான் உயிர் பெற்றான். 

 

அவரைச் சமாதானம் செய்த அனைவரும், பூங்கொடி சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருக்கும் சிங்காரத்தின் மீது பார்வையைத் திருப்பினர். அவன் மனவலி அனைவருக்கும் புரிந்தது. உடன்பிறப்புகள் இருவரும் அவன் இரு பக்கமும் நின்று ஆதரவாகத் தோள் தட்டினார்கள். 

 

உடலைத் திருப்பாது, முகத்தை அசைக்காது, “அந்தத் தலகாணிய எடு!” என்றான். 

 

புரியவில்லை என்றாலும், அவன் கையில் தலையணையைத் திணித்தான் சரவணன். நேராக மாமனார் பக்கம் திரும்பியவன், “இன்னொரு தலகாணி எடுடா.” எனக் கட்டளையிட்டான். 

 

என்னவென்று புரியாது எடுத்துக் கொடுத்தான் கண்ணன். கொடுத்ததை அவன் கையில் திணித்து விட்டு, சேதுராமன் பக்கம் திரும்பினான். தொப்பென்று தலையணையை அவர் முகத்தில் வைத்து அழுத்த ஆரம்பித்தான். அனைவரும் பதறி விலக்க முயல, “என்னாடா, பார்த்துட்டுச் சும்மா நிக்குற. இந்தத் தலகாணியை மூஞ்சில போட்டு, என் கூடச் சேர்ந்து அழுத்து…” என்றான் கண்ணனைப் பார்த்து.

 

“கிறுக்குப் பயலே, என்னாடா பண்ற?”

 

“அட, மடச் சாம்பிராணிப் பயலே! இந்த ஆளைப் போட்டுத் தள்ளப் பார்க்குறன்னு கூடவா புரியல உனக்கு.”

 

“அதைத் தான்டா நானும் கேட்குறேன், என்னா பண்ற?”

 

“என் ஆளு சொல்லிட்டுப் போனதைக் கேட்டல்ல. எனக்கு அவளா, இந்த ஆளான்னு கேட்டா லாலா தான் முக்கியம்! இவரு பாட்டுக்குத் திரும்பக் குடிச்சுட்டு வந்து ஏதாச்சும் பிரச்சினை பண்ணி, என்னை நிம்மதியா வாழ விடாமல் பண்ணிட்டா… அதுக்குப் பேசாம லாலா விருப்பப்படி போட்டுத் தள்ளிட்டா…” எனக் கண்ணனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவன் கைகள் அவர் முகத்தில் இருந்தது. 

 

அவன் கொடுக்கும் அழுத்தத்தில், மூச்சு முட்ட ஆரம்பித்தது சேதுராமனுக்கு. குடும்பத்தார்கள் கத்திக் கூச்சலிட ஆரம்பித்தனர். அந்தச் சத்தம் கேட்டு அந்த மருத்துவமனையே பதறியது. யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, கண்ணனிடம் இருந்த தலைகாணியைப் புடுங்கி முகத்தில் வைத்துப் பலமாக அழுத்த ஆரம்பித்தான். 

 

“விடுடா மாமாவ…”

 

“உனக்கு என்னாப்பா, நீ கல்யாணம் பண்ணி ரெண்டு குட்டியப் போட்டுட்ட. நான் ஒன்னாது போட வேணாம்? இந்த ஆளைப் போட்டுத் தள்ளிட்டு, மொத்தமா நம்மளைப் புடிச்ச பீடையை ஒழிச்சுத் தள்ளிடலாம். நீ யாராது வராங்களான்னு எட்டிப் பாரு.” 

 

“எங்க அப்பா பாவம் கொழுந்தனாரே, அவர விட்டுடுங்க.”

 

“அடப்போங்க அண்ணி, உண்மையாவே இங்க நான் தான் பாவம்! உங்க தங்கச்சி எனக்கு ரெண்டு ஆப்ஷன் குடுத்திருக்கா… செகண்ட் ஆப்ஷனைத் தப்பா யூஸ் பண்ணிட்டேன். முதலயாவது சரியா யூஸ் பண்ணி, உனக்காகத் தான் உங்கப்பனைப் போட்டுத் தள்ளுனன்னு சொல்லி அவளைக் கட்டிக்கப் போறேன்.” என்று அவரைக் கொல்வதில் குறியாக இருந்தவன், தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும் அன்னத்திடம் திரும்பி, 

 

“இதையெல்லாம் நீங்க பார்க்கக் கூடாது அத்தை. வலிக்காம கொள்ளாம இவரை மேல அனுப்பி வைக்கிற வரைக்கும் அப்புடித் திரும்பி நில்லுங்க.” என்றான்.

 

“அடப்பாவி டேய்! கூட்டிட்டு வந்து காப்பாத்துன நீயே கொல்லப் பாக்குறியே.”

 

“என்னா அத்தை பண்றது? உங்க பொண்ணு ஓடி வந்து கட்டிப்பிடிச்சு, அப்பான்னு கதறுவான்னு பார்த்தா ஏன்டா காப்பாத்துனன்னுல கேட்டுட்டா… என் லாலா ஆசையை நிறைவேத்தாத நானெல்லாம் என்னா காதலன்? இன்னைக்கு இவரு கதையை முடிக்கிறேன், என் காதலை வளர்க்கறேன்.” என்றவன் பார்வை எதார்த்தமாக வாசல் பக்கம் திரும்பியது. 

 

அங்கு அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள் பூங்கொடி. காதலியைப் பார்த்ததும் அரண்டு, மாமனாரை விடுதலை செய்தான். கணவன் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்குக் கோடான கோடி நன்றியைத் தெரிவித்தார் அன்னம். எமதர்மன் கையில் இருந்த மூச்சை வெடுக்கென்று புடுங்கி வேக வேகமாகச் சுவாசிக்க ஆரம்பித்தார் சேதுராமன். 

 

கழற்றி விட்டுச் சென்ற காலணிகளை அணிய வந்தவள், இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தாள். தன்னைப் பழி வாங்கிய அந்தக் காலணிகளையும் முறைத்தவன், “நீ ஆசைப்பட்டா, மலப்பாம்பு வாயன் உங்கப்பன் உசுர மட்டும் இல்ல, நாக்குப்பூச்சி மூஞ்சி எங்கப்பன் உசுரக் கூட எடுப்பேன்.” எனப் பச்சையாக இளிக்க,

 

“த்தூ…” கேவலமாகத் துப்பி விட்டுச் சென்றாள் பூங்கொடி. 

 

ரோசம் பார்க்காது அதைத் துடைத்தவன், “காதல்னு வந்துட்டா, துப்புனா தொடச்சிக்கணும். அப்புனா வாங்கிக்கனும்…” தத்துவம் பேசியவனை இப்போது மொத்தக் குடும்பமும் காறித் துப்பியது. 

 

“துப்புங்க! எல்லாரும் இந்தச் சிங்காரவேலனைத் துப்புங்க! இதுக்கெல்லாம் மனம் கலங்கிட மாட்டேன். அடுத்து நான் எடுக்கிற அவதாரத்துல, என் லாலா துப்புன அதே வாயில உம்மா கொடுக்கப் போறதை மட்டும் பாருங்க.” எனச் சபதமிட்டவன் தன்னைத் தானே உயர்த்திப் பார்த்துக் கொண்டான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்