கண்ணாலம் 11
“விளையாட்டுக்குப் பண்ணன்னு உனக்கே தெரியும் தான. அப்புறம் எதுக்கு இவ்ளோ சீரியஸா எடுத்துக்குற.”
வீம்போடு விலகி நின்றவள், வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “என்னை வெறுப்பேத்திப் பாக்குறதுல அப்புடி என்னா சந்தோஷம் உனக்கு.” மூக்கை உறிஞ்சினாள்.
“ஹா ஹா… அப்புடி இல்லடி லாலா. உன் முன்னாடி வந்து நிக்கச் சின்ன சங்கடம். ஆனாலும், பார்க்காம இருக்க முடியல. நானா வந்தா ஏதாச்சும் சொல்லிடுவேன்னு பயம். அதான் தலையச் சுத்தி மூக்கத் தொட்டேன்.”
அவன் சொன்னதில் உள்ளம் கசங்கியது. தன் நாக்கின் கத்தி, நேராக அவன் நெஞ்சைக் கிழித்திருப்பதை அறிந்து வருந்தினாள். தன்னவளின் முகத்தில் வாட்டத்தை அறிந்துகொண்டு, “அட ஒன்னும் இல்லடி. மனசப் போட்டுக் குழப்பிக்காத.” சமாதானம் செய்து ஆதரவாக அணைத்தான்.
நிதானம் ஆகும் வரை அவன் ஆறுதலை ஏற்றுக் கொண்டவள் வெடுக்கென்று தள்ளிவிட்டு, “உனக்குத் தான் ஆள் இருக்கில்ல, எதுக்கு என்னைக் கட்டிப்பிடிக்கிற…” கண்களைச் சுருக்கிக் கேட்க, “நீதான்டி அந்த ஆளு!” பல்லைக் காட்டினான் சிங்காரவேலன்.
“நடிக்காத. அதான் பார்த்தனே, நல்லாப் பல்லக் காட்டிகிட்டு அவ கூட நின்னதை.”
“அட மடச்சி! அந்தப் பொண்ணு நீதான்டி.”
தான் சொல்லுவதை நம்பாதவள் தலையில், நங்கென்று கொட்டு ஒன்றை வைத்து, “நல்லாப் பாரு. போன திருவிழால நீயும், நானும் ஜோடியா எடுத்த போட்டோ இது… ஏ ஐ மூலமாக ரீகிரியேட் பண்ணி இருக்கேன்.” என்று கூறியும் நம்பவில்லை பூங்கொடி.
“இப்புடி ஒரு மக்குப் பொண்டாட்டியை வச்சுக்கிட்டு என்னா பண்ணப் போறனோ.”
“உனக்கு எதுக்கு அந்தக் கவலை? உன் ஆளை மட்டும் நீ போய்ப் பாரு.” என்றதும் அவள் தோள் மீது கை வைத்துத் தன்னை மோத நிறுத்தியவன்,
“என் ஆளைத் தான் பார்த்துட்டு இருக்கேன்.” கண்ணடித்தான்.
“ப்ச்! தள்ளு”
“கோபப்பட்டா ரொம்ப அழகா இருக்கடி.”
“ஐயோ ராசா, கொஞ்சாதீங்க.”
“நான் கொஞ்சாம…”
“உங்க ஆளுக்குத் தெரிஞ்சா கோபப்படப் போறாங்க. அவங்க தான் ரொம்ப பொசசிவ் ஆச்சே.”
சத்தம் வராமல் சிரித்தவன் அவள் கன்னம் உரசி, “என் லாலாக்கு என் மேல ரொம்ப பொசசிவ் தான.” கிறக்கமாகக் கேட்க, அதை ரசிக்கும் நிலையில் இல்லை அவன் காதலி.
“ஏய்… என்னைப் பாருடி!”
மிச்சம் மீதி இருக்கும் கண்ணீரை அடிக்கடி சிந்திக் கொண்டிருக்கும் அத்தை மகளின் கன்னத்தைப் பிடித்தவன், பொட்டுக்கு மேல் குங்குமமாகத் தன் இரு இதழ்களை ஒட்டி எடுத்தான். அதுவரை இருந்த வீம்பு விலகியது அவளிடம். அமைதியாக நிற்கும் காதலிக்கு, இன்னொரு முத்தத்தை இலவசமாகக் கொடுத்தவன்,
“உன்னை விட்டு வேற பொண்ணுகிட்டப் போயிடுவனா?” ஒவ்வொரு வார்த்தையும் அவள் இதழ்களை உரசிக்கொண்டு வெளிவந்தது.
உப்பு நிறைந்த அந்த இதழை உரசி, உயிர் நோகத் துடித்தவன் நெற்றி முட்டி, “நீ என் உசுருடி! ஒரு தடவை பண்ண முட்டாள் தனத்தைத் திரும்பப் பண்ண மாட்டேன். இந்த ஆயுசு உனக்காக. உனக்காக மட்டும். மண்ணுக்குள்ள போற வரைக்கும் என் லாலாக்கு மட்டும் சொந்தம்!” என்றதும் விழி உயர்த்திப் பார்த்தாள்.
காதல் ததும்பிய காதலியின் பார்வையில் புத்தி கரைந்து முத்தம் கேட்டது. அவளிடம் உத்தரவைக் கேட்காமல், பிடித்த கன்னத்தை இன்னும் அழுத்திப் பிடித்து நெற்றியில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமாக முத்தம் பதித்தான். அத்தனைக்கும், வழிவிட்டு அமைதியாக நின்றவள் உதட்டின் மீது பார்வை சென்றதும் சற்று முறைக்க, கண்ணடித்து அதைச் சரி செய்து கவர்ந்தான் கள்ளன்.
சட்டென்று சிரிப்பு உதயமானது அவள் முகத்தில். அள்ள அள்ளக் குறையாத அவள் புன்னகையில், மதி மயங்கிக் கட்டி அணைத்தவன் உச்சந்தலையில் முத்தமிட்டு, “லவ் யூ டி!” என்றிட, பூங்கொடியின் கைகள் அவன் இடையைச் சுற்றிக் கொண்டது.
சிறைப்பட்ட கைகளை விலக்கி உள்ளங்கையில் முத்தமிட்டு மீண்டும் தன்னைப் பிடித்துக் கொள்ள வைத்தவன், “கட்டிக்கலாமா?” கேட்டான். அவள் விழி அவன் விழிகளைச் சந்தித்தது.
“நான் கட்டிக்கிட்டேன்!”
“கண்ணாலம் கட்டிக்கலாமான்னு கேட்டேன்?”
“உன் ஆள் கோச்சுக்காது…”
விலகியிருந்த சனியைத் தன் வாய்க்குள் நுழைத்தது அறியாமல், “கண்ணாலம் கட்டலன்னு தான் என் ஆளு கோச்சிக்கிட்டுப் போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்கா. இந்நேரம் தாலி கட்டிக் கட்டில்ல கட்டிப் போட்டுக் கவி பாட வேண்டியவன்… எல்லாம் என் அப்பனும், உன் அப்பனும் பண்ண வேலை.” என்றான்.
அதுவரை, அவனைச் சுற்றி வலம் வந்த மனது உச்சிக் கொம்பில் ஏறி அமர்ந்தது. நடந்த அனைத்தையும் வேகமாக ஓட்டிப் பார்த்தவள், திருமணக் கோலத்தில் நின்ற தருணத்திற்கு வந்தாள். தன்னை வேண்டாம் என்று உதறிச் சென்ற சிங்காரவேலன் கண் முன் தோன்றினான். மலர்ந்த இதழ்கள் இறுகியது. காதலித்த கண்கள் கோபத்தை உமிழ்ந்தது. அவனைச் சிறைப்பிடித்த கைகள் பாறையானது.
காதலியின் மறு உருவத்தை அறியாதவன் உதட்டில் ‘உம்மா’ பதிக்க நெருங்க, மார்பில் கை வைத்துத் தள்ளி விட்டதில் மண்டை சுவரில் இடித்துக் கொண்டது. ஒரு நிமிடம் உலகமே சுற்றியது சிங்காரவேலனுக்கு. பின்தலையில் கை வைத்துத் தன் உயிரை உறுதி செய்து கொண்டவன் பாவமாகப் பார்த்தான்.
மூக்கு வழியாக வந்த மூச்சு, பாதத்தைத் தொட்டுத் தலைக்கு மேல் நாகப் பாம்பாக நிற்பது போல் பிரம்மை பார்த்தவனுக்கு. பாவமாகப் பார்ப்பவனை நெருங்கி நின்ற அவன் காதலி, “எங்கப்பனும், உங்கப்பனும் போட்ட சண்டைல என்னை எதுக்குடா வேணாம்னு சொல்லிட்டுப் போன. அந்த நிமிஷம் தெரியலையா, நான் உன் உசுருன்னு… என்னை விட வீம்பும், ரோஷமும்தான பெருசு. நீ பாட்டுக்கு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டு இப்ப வந்து கொஞ்சிட்டு நிக்கிற. அன்னைக்கும் உன்னை நம்பி ஏமாந்தேன். இன்னைக்கும் உன்னை நம்பி ஏமாந்து நிக்கிறேன். இது இத்தோட முடியட்டும். எதிர்காலத்துலயும் உன்னை நம்பி ஏமாந்து நிக்க நான் விரும்பல.” என அறைக்குள் சென்றவளை அலுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்காரவேலன்.
வாங்க வேண்டிய முத்தத்தை வாங்கித் தவமிருந்த விரதத்தைக் கலைக்காமல், மீண்டும் சன்யாச வேஷம் போட்டுக் கொண்ட தன் வாயை எண்ணிக் கண்ணீர் வடித்தான். இன்றைக்கும், கடவுள் படைத்த வாய் தான் தனக்கு எதிரி என்பதை இந்த நொடி கூட உணராது, “அங்க இங்க முத்தம் குடுக்குற வரைக்கும் சும்மா இருந்துட்டு, குடுக்க வேண்டிய இடத்துக்குக் குடுக்க வரும்போது மக்கார் பண்ற. அதெல்லாம் எனக்குத் தெரியாது. உம்மா வேணும், குடுத்துட்டுச் சண்டை போடு.” உதட்டைக் குவித்துக் கொண்டு அவளை நெருங்கினான்.
நன்றாகக் காதலித்துக் கொண்டிருந்தவள், திருமணம் நின்ற நினைப்பில் மனம் நோகச் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தாள். தன் உணர்வுகள் புரியாமல் ஆசைக்கு நெருங்கி வரும் தன்னவன் மீது உண்மையாகவே கோபம் மூண்டது. அதை அறியாதவன் அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி நின்று, “சாரிடி லாலா, இனி எவனும் நம்பளை எதுவும் பண்ண முடியாது. நல்ல நாள் பார்த்துக் கண்ணாலத்த முடிச்சுட்டு, நிறைய உம்மா குடுத்துக்கலாம்.” உதட்டை அவள் உதடு நோக்கித் தீவிரமாகக் கொண்டு சென்றான்.
“எவனும் எதுவும் பண்ணிட முடியாதுன்னு சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நீ பண்ணிட்ட. கொஞ்சம் கூட என் கஷ்டம் புரியாம முத்தம் குடுக்க வர…”
ஓங்கி உதட்டில் அடிக்க, மரண வேதனைக்கு மேல் மரண வேதனை. உதட்டில் கை வைத்து, “ஸ்ஸ்ஆஆ…” எனக் கூச்சலிட்டவனைத் தள்ளி விட்டு நகர்ந்தாள்.
“இந்தாடி! இப்ப என்னா உனக்குப் பிரச்சினை? அதான், சமாதானம் ஆகி இவ்ளோ தூரம் வந்துட்டல்ல. சும்மா முடிஞ்சதையே பேசிக்கிட்டு இருக்க. ஆனது ஆகிப்போச்சு, இனி அதைப்பத்திப் பேச ஒன்னும் இல்ல. நடக்க வேண்டியதை மட்டும் பார்க்கலாம்.”
“எவ்ளோ சுளுவாச் சொல்லுற. ஊருக்கு முன்னாடி மாலையும் கழுத்துமா அனாதையா நின்னுட்டு இருந்தது நான் தான…”
“அது என்னையும் மீறி நடந்த விஷயம் லாலா.”
“இனி ஒரு தடவை அதே மாதிரி நடக்காதுன்னு என்னா நிச்சயம்?”
“என்னா தான்டி பண்ணச் சொல்ற என்னை… சொன்னதையே சொல்லிட்டு இருக்க. நான்தான் தப்புப் பண்ணிட்டேன்னு சொல்றேன்ல. இனி அந்தத் தப்பைப் பண்ண மாட்டன்னும் சொல்றேன். இதுக்கு மேல என்னாதான் வேணும். சும்மா போட்டு மனுஷன் உசுர வாங்கிட்டு இருக்க.”
“நான் தப்புப் பண்ண மாதிரிப் பேசுற. நீதான என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போன…”
“ஆமாடி! நான்தான் உன்னை வேணாம்னு சொல்லிட்டேன், போதுமா? எனக்கு உன்னைச் சுத்தமாப் பிடிக்காது. உன்னைக் கழற்றி விடத்தான் கடைசி நிமிஷத்துல கண்ணாலத்தை நிறுத்திட்டேன். இதுதானே என் வாயில இருந்து வரனும்னு நெனைச்ச… வந்துடுச்சு. நிம்மதியா இரு.” எனச் சத்தமிட்டுக் கூறியவன்,
“ஒரு வாரமா இருந்த மாதிரி இருந்திருக்கணும். வெக்கங்கெட்டு உன் பின்னாடி வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். எப்பப் பாரு, சொன்னதையே சொல்லிக் கடுப்பேத்துறா.” வாய்க்குள் புலம்பினான்.
“அதான் கடுப்பேத்துறன்னு தெரியுதுல்ல. இனி இந்தப் பக்கம் வராம பார்த்த பொண்ணைக் கட்டிக்க.”
“கட்டிக்கத் தான்டி போறேன். உன் கூட மல்லுக் கட்ட இனி என்னால முடியாது.” என வேகமாக அவ்வீட்டை விட்டு வெளியேறியவன் வண்டியைக் கூட எடுக்காமல் நடந்தே வீடு வந்தான்.
வேகத்தடை இன்றி நடந்து வந்தவன் கால்கள் நடையைக் குறைத்தது. காதலி மீதிருந்த கோபம் தளர்ந்து, அவள் தகப்பனார் மீது கவனம் திரும்பியது. திண்ணைத் தூணில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தார். முகம் முழுவதும் வேர்வைத் துளிகள். கண்கள் மூடி இருந்தாலும், இமைகள் படபடத்துக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்தவன், ஒரு நிமிடம் நின்று உற்றுக் கவனித்தான்.
அவரிடம் ஏதோ ஒன்று சரி இல்லை என்பது மட்டும் அவன் புத்திக்குப் புரிந்தது. அதையெல்லாம் அடுத்த நொடியே துடைத்து எறிந்தவன், கண்டும் காணாமலும் அவரைத் தாண்டி தன் வீட்டு வாசலுக்குச் சென்றான். வாசற்படியில் கால் வைத்து உள்ளே நுழைந்தவன் மனம் கேட்காமல் அவரைத் திரும்பிப் பார்த்தான். இவன் வந்ததையோ, பார்ப்பதையோ அறியாது அமர்ந்திருந்தார்.
நெற்றியில் விழுந்த பல சுருக்கங்களோடு, வந்த வழியே திரும்பியவன் தன் மாமன் முன் நின்று, “உடம்புக்கு எதுவும் முடியலையா?” விசாரித்தான்.
மருமகன் குரல் கேட்டு விழி திறந்தவருக்கு மயக்க நிலை. அதைக் கண்டு இன்னும் தன் சுருக்கங்களை அதிகரித்துப் பலத்த குழப்பத்தோடு, “என்னாச்சு?” கேட்டான்.
தெளியாத கண்களைத் தெளிய வைக்கச் சிரமப்பட்டவர், “ஒன்னும் இல்ல.” என்றார் ஸ்ருதி இல்லாமல்.
“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்புக்கு எதுவும் முடியலன்னா சொல்லுங்க, ஆஸ்பத்திரி போவோம்.”
கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டார் சேதுராமன். மாமனின் கண்ணீரில் பதறியவன், இருந்த அனைத்துக் கோபத்தையும் உடைத்து எறிந்து, “மாமா…” என அருகில் சென்று அமர்ந்தான்.
“நான் நல்லா இருக்கேன்.”
“பொய் சொல்லாதீங்க.”
“சத்தியமா நல்லா இருக்கேன்.”
“அப்புறம் ஏன் இப்புடி ஒக்காந்து இருக்கீங்க?”
“மனசுக்குச் சங்கடமா இருக்கு.”
“எதுக்கு?”
“என்னால உங்க ரெண்டு பேரோட சந்தோசம் கெட்டுப் போயிடுச்சுன்னு.”
அனுசரணையாக விசாரித்தவன் உள்ளம் குறுகுறுத்தது. ஒரு நொடி அவர் முகம் பார்க்கத் தடுமாறியவன் தத்தித் தவழ்ந்து, “அ..அதெல்லாம் ஒன்னும் இல்ல.” என்றான்.
“வாய் தான் ஒன்னும் இல்லன்னு சொல்லுது. உன் கண்ணு என்னைச் சாட்டை அடி அடிக்குது மாப்ள.”
முதல் முறையாகச் சிங்காரவேலனை, ‘மாப்பிள்ளை!’ என்று அழைத்திருக்கிறார் சேதுராமன். அவர் அழைத்த அந்த நொடியோடு உறைந்து அமர்ந்து விட்டான் அவர் மருமகன். எப்போது பார்த்துக் கொண்டாலும் விழிகள் சண்டையிட்டுக் கொள்ளும். முகம் சிடுசிடுப்பைக் கொடுக்கும். வாய் தகாத வார்த்தைகளை அள்ளி வீசும். அப்படிப்பட்ட இருவருக்குள் இந்தத் தருணம் மிகவும் புதிது.
சில நாள்களாக மாமனாரை அணுவணுவாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான் மருமகன். எதுவோ, அவன் மனத்தின் ஓரம் சரி இல்லை என்ற எண்ணம் உதித்துக் கொண்டே இருந்தது. என்றும் பிடிக்காது என்றவனை, மாப்பிள்ளை என அன்போடு அழைத்திருக்கிறார் மாமனார். தனிமையில் தன் சுகம் கெட்ட நிலையில் அமர்ந்திருந்தவ,ர் அவன் உருவத்தைக் கண்டதும் கண் கலங்குகிறார். இதையெல்லாம், சுற்றி இருக்கும் எவர் பார்த்தாலும் நம்ப மாட்டார்கள். அப்படியான தருணம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.
“நீங்க மட்டுமா தப்புப் பண்ணீங்க, நானும்தான் தப்புப் பண்ணேன். நீங்க என்னை ஆயிரம் பேசலாம். நான் சின்னப் பையன், அதைவிட உங்க மருமகன்! உங்களுக்கு என்னைத் திட்ட, அடிக்க முழு உரிமை இருக்கு. நான்தான் அவசரப்பட்டு உங்க மேல கை வச்சுட்டேன். உங்களை அடிச்சதுக்காக மன்னிச்சிடுங்க மாமா…”
“இல்ல மாப்ள, நீ என்னைக் கை ஓங்குனதுக்கு என்னோட பேச்சுத் தான் காரணம். அன்னைக்கு நான் மட்டும் அமைதியா இருந்திருந்தா, எந்தப் பிரச்சினையும் நடந்திருக்காது. என் பொண்ணும் வீட்டை விட்டுப் போயிருக்க மாட்டா. நானும் இப்புடி அனாதையா ஒக்காந்து கெடக்க மாட்டேன்.”
“என்னா மாமா, நீங்க இம்புட்டுப் பெரிய வார்த்தையா சொல்றீங்க. நாங்க சுத்தி எத்தனைப் பேர் இருக்கும்போது நீங்க எப்படி அனாதை? சும்மா வாய்க்கு வந்ததைப் பேசிட்டு இருக்காதீங்க. உடம்புக்கு என்னா பண்ணுதுன்னு சொல்லுங்க.”
“என் பொண்ணு ஏக்கமா இருக்கு மாப்ள… எத்தனையோ தடவை பேசப் போனேன். என் மொகத்தைக் கூடப் பார்க்க மாட்டேங்கறா. இப்புடியே காலம் போயிடுமோன்னு பயமா இருக்கு.”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. அவ கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது. சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துடுவா.”
“அதைப் பார்க்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்னு தோணுது மாப்ள.”
“இப்புடிப் பேசாதீங்கன்னு இப்பத்தான சொன்னேன். உங்களுக்கு எதுவும் ஆகாது. மனசுல கண்டதையும் போட்டுக் குழப்பிப் பயந்துட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். உங்க பொண்ணைச் சீக்கிரம் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வருவேன். அதுவரைக்கும் கொஞ்சம் தைரியமா இருங்க.”
“உன்னையும், என் பொண்ணையும் பிரிச்சதுக்காக மன்னிச்சிடு மாப்ள.”
“நீங்கதான் மாமா என்னை மன்னிக்கணும். நீங்க எப்பவும் போல தான் சண்டை போட்டீங்க. அதை அப்புடியே விட்டுட்டுப் போகாமல், தட்டிக் கேக்குறன்னு பெருசு பண்ணது நான்தான். கோபத்துல லாலாவ மறந்து தப்புப் பண்ணது நான் தான். என்னால நடந்த பிரச்சினைய நானே சரி பண்றேன் மாமா…”
“உங்க ரெண்டு பேரையும் ஒன்னாப் பார்க்கறவரை என் குற்ற உணர்ச்சி என்னைச் சும்மா விடாது. சீக்கிரம் ரெண்டு பேரும் சேரணும்.”
“அதெல்லாம் நல்லபடியா நடக்கும். ரொம்ப யோசிக்காம உள்ளார போங்க.” என்றவன் அன்னத்தை அழைத்தான்.
“அவ வீட்ல இல்ல மாப்ள…”
“எங்க மாமா?”
“பக்கத்து ஊர்ல யாரோ குறி சொல்றவங்க இருக்காங்களாம். அவங்ககிட்ட, எப்ப இந்தப் பிரச்சினை எல்லாம் சரியாகும்னு கேட்கப் போயிருக்கா.”
“அத்தைக்கு வேற வேலையே இல்லை.” எனப் புலம்பிக் கொண்டே மாமனாரை எழ வைக்க முயற்சித்தான்.
“நான் பார்த்துக்குறேன் மாப்ள…”
“உள்ள விட்டுட்டுப் போறேன் மாமா”
“அந்த அளவுக்கு ஒன்னும் இல்ல மாப்ள, நீங்க வீட்டுக்குப் போங்க.”
“ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க.”
“ம்ம்” என்றவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வாசல் வரை சென்றவன், பலத்த பெருமூச்சை வெளியிட்டு விட்டு உள்ளே சென்றான்.
***
“சாப்பிட வாடா…”
“பசிக்கல!”
“மணி பத்து ஆகுது.”
“பசிக்கலம்மா…”
“என்னாடா முகம் ஒரு மாதிரி இருக்கு.”
“ப்ச்!”
“சிங்காரா…” என்ற அன்னையைத் தெளிவில்லாது பார்த்தவன், “மாமா முகமே சரியில்லம்மா, அவருக்கு ஏதோ பிரச்சினைன்னு மனசு சொல்லுது.” என்றான்.
“என்னாடா சொல்ற?” எனப் பதறும் அன்னையைச் சமாதானம் செய்தவன்,
“உடம்புக்கு முடியலன்னு நெனைக்கிறேன். பார்க்கறப்போலாம் ரொம்பச் சோர்வாவே இருக்காரு. வரும்போது கூடத் திண்ணையில சோர்ந்து ஒக்காந்து இருந்தாரு. ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு கூப்பிட்டேன். நல்லா இருக்கன்னு சொல்லித் தட்டிக் கழிச்சிட்டாரு.” என்றதைக் கேட்ட கோமளத்திற்கும் பயம் தொற்றிக் கொண்டது.
“ஒரு எட்டுப் போய் என்னான்னு கேட்டுட்டு வந்துடவா?”
“வேணாம்மா. அவரே நல்லா இருக்கன்னு சொல்லும்போது நம்ம போய் நோண்டக் கூடாது.”
“பயந்துட்டுக் கூட அப்புடிச் சொல்லலாம்ல.”
“அது எனக்கும் புரியுதும்மா. நம்மகிட்டச் சொல்லச் சங்கடப்படுறாரோ என்னாவோ?”
“நல்லா இருந்த குடும்பத்து மேல யாரு கண்ணு பட்டுச்சோ, இப்புடி கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வருது. எவ்ளோ சண்டை போட்டாலும் உன் அப்பாவும், மாமாவும் அடுத்த நாளே பேசிப்பாங்க. இப்புடி இருக்கிறது இதுதான் முதல் தடவை. அந்தக் கஷ்டத்துலயே அவர் பாதி நொந்து போயிட்டாரு. போதாக்குறைக்குப் பூங்கொடியும் வீட்டை விட்டுப் போய் ரொம்ப நோகடிச்சுட்டா…” எனப் புலம்பித் தள்ளியவர் தளர்ந்த மூச்சோடு,
“அவ மட்டும் என்னா பண்ணுவா? அவ இடத்துல இருந்து பார்த்தா தான் அவ கஷ்டம் புரியும். தன்னைப் பெத்தவனும், நம்பி வந்தவனும் கை விட்டுட்டாங்களேன்னு வலி அவளுக்கு.” என்றார்.
“நான் அவளை விடமாட்டம்மா…”
“வார்த்தையை விடச் செயலுக்கு வீரியம் அதிகம் சிங்காரா… வாய் ஓயாம விடமாட்டன்னு எத்தனைத் தடவை சொன்னாலும், விட்டுட்டுப் போன அந்த நிமிஷம்தான் அவளுக்கு ஞாபகம் வரும்.”
“இதுக்கு என்னா தான்மா தீர்வு?”
“அவ மனசு மாறுற வரைக்கும் ஒரு தீர்வும் கெடைக்காது. கடவுள்கிட்ட மனசார வேண்டிக்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என அவர் அங்கிருந்து நகர, யோசனைக்கு மேல் யோசனை சிங்காரவேலனுக்கு.
இரவு உணவைத் தாமதமாக முடித்தவன், வெளியில் வந்து மாமன் வீட்டை எட்டிப் பார்த்தான். வீடு நிசப்த அமைதியில் நிறைந்திருந்தது. ஐந்து நிமிடங்களாக, அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் நடையாக நடந்து கொண்டிருந்தவன் ஒரு முடிவெடுத்து அன்னத்தின் வீட்டிற்குள் நுழைந்தான். டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
“அத்த…”
“சொல்லுப்பா…”
“மாமா எங்க?”
“சாப்பிடக் கூப்பிட்டேன், வேணாம்னு சொல்லிப் படுத்துட்டாரு.”
“ரொம்ப சோர்வா இருந்த மாதிரி இருந்துச்சு.”
“ஆமா சிங்காரா, ரெண்டு நாளா அப்புடித்தான் இருக்காரு. வாங்க, டாக்டரைப் பார்த்துட்டு வரலாம்னு கூப்பிட்டா வர மாட்டேங்குறாரு.”
“நானும் கூப்பிட்டுப் பார்த்தேன் அத்தை. எங்கிட்டயும் அதே பதிலைத் தான் சொன்னாரு.”
“கொஞ்ச நேரம் கழிச்சுதான் சாப்பிட எழுப்பனும்.”
“சரி அத்தை. ஏதாச்சும் ஒன்னுனா கூப்பிடுங்க.”
“ஏன்டா, இப்படிச் சொல்ற?”
“பயப்படாத அத்தை. ஒரு சேஃப்டிக்குச் சொல்றேன்.”
“ம்ம்” என்றவருக்கு லேசான பயம்.
அத்தையின் கண்களில் பளிச்சிடும் பயத்தைக் கவனித்துக் கொண்டே மாமன் அறையை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றான். காதலியின் நினைவைச் சிறிதும் எண்ணாது மாமனாரின் எண்ணத்தில் நிமிடங்களைக் கடத்தினான்.
“சிங்காரா…” என்ற சத்தம் ஆங்காரமாக ஒலித்தது.
அத்தையின் குரல் கேட்டதும் அரக்கப்பறக்க ஓடி வந்தான். அதற்குள் வீட்டிலிருந்து அனைவரும் ஒன்று கூடி வாசலை நோக்கி ஓட, அவர்களை எல்லாம் தாண்டி அத்தையின் வீட்டிற்குள் நுழைந்தவன், சிலையாகப் படுத்திருக்கும் மாமனாரைக் கண்டு அதிர்ந்தான்.
“ரொம்ப நேரமா எழுப்புறேன், எந்திரிக்க மாட்டேங்கிறாருடா.”
“மாமா… மாமா”
“மச்சான்…”
“அண்ணா…
“மாமா…”
“அப்பா…” என அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் அவரை அழைத்துப் பார்த்து விட்டனர். எதற்கும் பதில் கொடுக்காமல் அமைதியாகப் படுத்திருந்தார் சேதுராமன்.
“டேய்! உடம்பு ரொம்பச் சில்லுன்னு இருக்க மாதிரி இருக்கு. உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்.” என்ற சரவணனுக்குச் சம்மதமாகத் தலையசைத்தவன் மாமனைத் தூக்கிக் கொள்ள, காரை எடுத்து வந்தான் கண்ணன்.
மூன்று மருமகன்களோடு காரில் புறப்பட்டார் சேதுராமன். அவருக்குப் பின்னால் மொத்தக் குடும்பமும் பறந்து ஓடியது. விரைந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். தீவிர சிகிச்சை நடைபெற்றது. வெளியில் இருந்த எவருக்கும் எதுவும் புரியவில்லை. இருக்கையில் அமர்ந்திருந்த அன்னம் விடாது அழுது கொண்டிருந்தார். தங்கையைப் பார்க்க மனம் கனத்தது நீலகண்டனுக்கு. அவரை அரவணைத்துக் கொண்டு, கோமளமும் சீதாலட்சுமியும் கதறினார்கள்.
மாமன் மீதான எண்ணத்தை மாற்றாது, ஒரே இடத்தில் அழுத்தமாக நின்றிருந்தான் சிங்காரவேலன். தந்தையை எண்ணி அழுது கொண்டிருந்தாள் புவனா. பிரச்சினை நடந்த நாளிலிருந்து அவரிடம் பேசவில்லை. அதை எண்ணி இன்னும் துடித்துப் போனவள், எதுவும் ஆகி விடக்கூடாது என்ற பிரார்த்தனையை நொடிக்கு ஒருமுறை வைத்தாள்.
திண்ணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததுமே, அள்ளித் தூக்கி வந்து சேர்த்திருக்க வேண்டும் என்று தாமதமாக வருந்திக் கொண்டிருந்தான் சிங்காரம். அப்போது அவர் பேசிய பேச்சும், இப்போது அமைதியாகப் படுத்திருப்பதும் அவன் பயத்தை அதிகரித்தது. நிறுத்தாது அழுது கொண்டிருக்கும் அத்தையின் கண்ணீரில் உள்ளம் கரைந்தது.
“அத்த…”
“அந்த மனுஷன் ஓயாமல் குடிச்சிட்டு வந்து சண்டை போட்டாலும், என்னை விட்டு எங்கயும் நகர மாட்டாரு. என்னா கோபப்பட்டாலும் பேசிடுவாரு. இப்ப மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்காரே.” தலையில் அடித்துக் கொண்டு அழுதவரைப் பார்க்க அங்கு யாருக்கும் தெம்பில்லை.