கண்ணாலம் 10
வானமெனும் தராசில் உயர்ந்து நின்ற நிலவைப் பின்னுக்குத் தள்ளி உயர்ந்து நின்றது சூரியன். ஒரு வாரத்திற்குப் பிறகு, நிம்மதியாகத் தூங்கி எழுந்தாள் பூங்கொடி. பேத்தியின் முகத்தில் தெரிந்த தெளிவில் மனம் நிறைந்தது ரங்கம்மாளுக்கு. எழுந்ததிலிருந்து ஒருவிதப் பரவசப் புன்னகையோடு உலாவிக் கொண்டிருக்கிறாள். அத்தோடு நிறுத்தாமல், நொடிக்கு ஒரு முறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளை எண்ணிச் சிரித்தவர்,
“யாரைத் தேடுற?” கேட்டார்.
“ஹான்!”
“எட்டி எட்டிப் பாத்துட்டுக் கெடக்குறியே, அதான் யாரைத் தேடுறேன்னு கேட்கிறேன்.”
“நான் யாரைத் தேடப் போறேன், வெயில் எப்புடி அடிக்குதுன்னு எட்டிப் பார்த்தேன்.”
“என்னாத்துக்கு…”
“இதென்ன பாட்டி கேள்வி. வேலைக்குப் போக வேணாமா? கொளுத்துற வெயில்ல எப்புடி நடந்து போறதுன்னு நானே யோசனைல கெடக்குறேன். நீ வேற…”
தனக்குள் தலையாட்டிச் சிரித்துக் கொண்டவர், “மகாராணி மேல வெயில் பட்டுடக் கூடாதுன்னு தான, ஒரு கிறுக்குப் பையன் பந்தலப் போட்டு விட்டுக் கெடக்கான். அப்புறம் உனக்கு எதுக்குக் கவலை?” என்றவரை எவ்வித முகபாவனையில் பார்ப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றாள்.
இந்த முறை மனத்திற்குள் சிரிக்காமல் சத்தமிட்டுச் சிரித்தவர், “சோத்த எடுத்துக்கிட்டுக் கெளம்பு. பின்னாடியே வந்தாலும் வருவான்.” என்றார்.
“அவன் எதுக்கு வரப்போறான்? ஒரு வாரமா அவனை எதிர்பார்த்தா வேலைக்குப் போயிட்டு இருக்கேன்.”
“எது நெசமுன்னு ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!”
“என்னா நீ… ஒரு மார்க்கமாவே பேசுற.”
“யாரு நானா? நீதான்டி எந்திரிச்சதுல இருந்து ஒரு மார்க்கமா கெடக்க.”
“எனக்கென்ன, நான் எப்பவும் போல தான் இருக்கேன்.”
“இருந்தா சரி!”
“ஆமா, எதை வச்சு இன்னைக்கு அவன் என் பின்னாடி வருவான்னு சொல்ற.”
“என்னைக் கேட்டா…”
“நீதான சொன்ன?”
“என்னைக்கும் இல்லாத அதிசயமா இன்னைக்கு மினுக்கு, மினுக்குன்னு இருக்கியே, ஒரு வாரமா வராதவன் வரப்போறதால அப்புடி இருக்கியோன்னு நெனச்சுச் சொன்னேன்.”
“அவனுக்காக ஒன்னும் நான் இப்புடி இல்லை. நீயா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காம அந்தக் கூடையைக் குடு.”
“கத்திரிக்காய் முத்துனா விதை போட்டவன் கைக்கு வந்து தான் ஆகணும்.”
“ம்ம்… அது வரும்போது பார்த்துக்கலாம்.” எனச் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள் விழிகள் இரண்டும், 360 டிகிரி கோணத்திற்குச் சுற்றி வளைந்தது. தலையை அசைக்காமல் பார்வையை மட்டும் சுழற்றியவளுக்கு அவன் உருவம் தென்படவில்லை.
மெல்ல நான்கு அடி முன்னே எடுத்து வைத்தவள் திரும்பி ரங்கம்மாளைப் பார்த்தாள். பேத்தி மீது தான் அவர் கண்கள் இருந்தது. மெல்லச் சிரித்துக் கை அசைத்தவள், அவர் அறியா வண்ணம் தலையைத் திருப்பிச் சோதனையிட்டாள். இல்லாதவனை எத்தனை முறை தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம். அந்தக் கடினம் புரியாமல் பேருந்து நிலையம் வரை தேடிக்கொண்டே சென்றாள்.
தனக்கு முன்னால் வந்து நின்ற பேருந்தில் ஏறியவள், கனத்த சோகத்தோடு இருக்கையில் அமர்ந்தாள். எண்ணம் முழுவதும் அவனே! இன்னும் ஏன் வரவில்லை? என்ற கேள்விக்கு விடை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறாள். தன் மீதான கோபம் குறையவில்லையோ, தன்னைப் பிடிக்கவில்லையோ, என்றெல்லாம் கூட அவள் ஆராய்ச்சி நீண்டது. எங்கிருக்கிறோம்? பேருந்து எங்குப் பயணப்படுகிறது என்பதைக் கூட அறியாது, அவன் சிந்தனையில் வந்து கொண்டிருந்தவள் செவியில் பலத்த சிரிப்புச் சத்தம்.
பேருந்து நிற்பதை வைத்து ஏதோ ஒரு பேருந்து நிறுத்தம் என்பதை மட்டும் அறிந்து கொண்டாள். சிந்தனைகளுக்கு நடுவில் புருவம் நெளிந்தது. அவளுக்குப் பழக்கப்பட்ட குரலாக அந்தச் சிரிப்புச் சத்தங்கள் இருந்தது. புத்திசாலியான மூளை, சிரிப்புக்குச் சொந்தக்காரர்களை நினைவூட்டியது. தன்னுடன் பணியாற்றுபவர்களின் சிரிப்புச் சத்தம் என்றறிந்து தலையைத் திருப்பி வெளியே பார்த்தாள். உடல் வெடித்துச் சிதறியது போல் இருந்தது.
நான்கு தோழிகளுக்கு நடுவில் அமர்ந்திருந்தான் சிங்காரவேலன். அதுவும் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளையாக ஜொலித்துக் கொண்டிருந்தான். அவனைத்தான் தோழிகள் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அக்காட்சியைப் பார்த்ததும், கொள்ளிக் கட்டையைத் தன் மேனியில் சொருகிக் கொண்டது போல் திகுதிகுவென்று எரிந்தது.
‘காலையிலிருந்து வலை போட்டுத் தேடியவளைச் சிறிதும் சிந்திக்காது, யாரென்று தெரியாதவர்களுடன் அமர்ந்திருக்கும் தன் மாமன் மகனைக் கொலை செய்தால் என்ன?’ என்ற எண்ணம் தான் அவளுக்குள். வெட்கம் ததும்பிய முகத்தோடு அமர்ந்திருந்தவன் எதார்த்தமாகப் பார்ப்பது போல் அவளைப் பார்த்தான். பற்களில் அவன் இருப்பதாக எண்ணி நொறுக்கிக் கொண்டிருந்தாள் பூங்கொடி. அதைக் கண்ணார ரசித்தவன் கூலிங் கிளாஸை மெல்ல உயர்த்திக் கண்களைச் சுருக்கி,
“அது உங்க ஃப்ரெண்ட் மாதிரி இல்ல?” சந்தேகத்தோடு கேட்டான்.
பேருந்துப் பக்கம் திரும்பிய தோழிகள் அவளைக் கண்டுவிட்டு, “அய்யய்யோ! உங்க கூடப் பேசிட்டு இருந்ததுல, பஸ் வந்ததைக் கூடப் பார்க்கல.” அரக்கப் பறக்க நால்வரும் ஓடினார்கள்.
“ஹாய்!”
‘மூஞ்சி மொகரையப் பாரு.’
“ஹாய் சொல்ல மாட்டிங்களா தோழி…”
‘தனியா சிக்குனா இருக்கு உனக்கு!’
“நீங்க ஏதோ மைண்ட் வாய்ஸ்ல திட்டறீங்க தோழி. ஆனா, சரியா எனக்குக் கேட்கல. இருங்க, பக்கத்துல வந்து கேட்டுட்டுப் போறேன்.”
கடுகடுத்த முகத்தோடு தன்னைச் சுற்றி நின்ற தோழிகளை வரவேற்றவள், அவர்களுக்கு நடுவில் வந்து நிற்கும் காதலனைக் கண்டு உள்ளம் கொதித்தாள். அவனோ, சாவகாசமாக அவர்கள் நால்வர் மீதும் சேர்த்துக் கை போட்டு, “மறக்காம கண்ணாலத்து வந்துடனும்.” என்றான்.
நெற்றிச் சுருக்கங்களோடு அவனைப் பார்த்தாள் பூங்கொடி. அதைக் கண்டு அவள் தோழிக்குக் கண்ணைக் காட்டினான். அந்தப் பெண்ணோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டது போல் வாய் பொத்திச் சிரிப்பை அடக்கத் தொடங்கினாள். சுற்றி நடக்கும் நாடகத்தைப் பார்த்தவளால் அமர முடியவில்லை.
“எதுக்குடி இப்புடிச் சிரிக்கிற?”
“ஐயோ பூவு, நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கல.”
“அது தெரியுது. நீ இப்புடிக் கெக்க பெக்கன்னு சிரிக்கிற அளவுக்கு அவன் என்னா காமெடி பண்ணான்…”
“அண்ணனுக்கு அடுத்த மாசம் கண்ணாலம்!”
“எது?”
“இப்பத்தான் பொண்ணு பார்த்துட்டு வராரு. அங்க அண்ணி, இவரைப் பயங்கரமா இம்ப்ரஸ் பண்ணிட்டாங்களாம். அதைச் சொல்லிக்கிட்டு இருக்காரு.”
“அண்ணியா?”
“என்னாண்ணா, இவகிட்ட எதுவும் சொல்லலையா?”
“முன்னப் பின்னத் தெரியாதவங்க கிட்ட எதுக்குமா நம்ம விஷயத்தைச் சொல்லிக்கிட்டு. நீங்க நாலு பேரும், என் கூடப் பொறக்காத உடன்பிறப்புகள். உங்ககிட்டச் சொன்னா சந்தோஷப்படுவீங்க. சில பேரோட கண்ணெல்லாம் கொள்ளிக் கண்ணு. என் பொண்டாட்டி கழுத்துல மூணு முடிச்சுப் போட்டு என் வீட்டுக்குக் கூட்டிட்டு வர வரைக்கும், அந்தக் கண்ணு எங்க மேல படாம இருக்கணும். அவ வேற ரொம்ப அழகா இருக்கா… படக்கூடாத கண்ணு பட்டு அந்த அழகுக்கு ஏதாச்சும் ஆகிடுச்சுன்னா என்னா பண்றது?”
வகை வகையாக வசைபாட, வாய் துடித்தது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் துடிதுடித்துக் கொண்டிருந்தவளை இன்னும் கொதிக்க வைத்தான், “அடுத்த முகூர்த்தத்துலயே தேதியப் பார்த்து இருக்கணும். அவளைப் பார்த்துட்டு வந்ததுல இருந்து, நெனைப்பு எங்கயும் போக மாட்டேங்குது.” என்று.
“சார் யாரைப் பொண்ணு பார்த்துட்டு வராராம்?”
“அதை எங்க அண்ணன் கிட்டயே கேளு.”
“இன்னொரு தடவை அண்ணன், நொண்ணன்னு சொன்ன… பல்லைக் கழற்றிடுவேன். இவன உனக்கு எத்தனை நாளாத் தெரியும்? ஏதோ காதுல பூ சுத்திட்டுக் கெடக்கான், அதைப் போய் நம்பிச் சிரிக்கிறீங்க.”
“ஹலோ தோழி, நான் பூ சுத்தல. சத்தியமா வெள்ளன எழுந்து 6 மணிக்கு எல்லாம் பொண்ணு பார்க்கப் போயிட்டேன். இப்பத்தான், என் வீட்டு ஆளுங்க எல்லாரையும் அனுப்பி விட்டுட்டுத் தங்கச்சிங்களைப் பார்க்க வந்தேன். வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும், நான் பார்த்துட்டு வந்த பொண்ணு என் தங்கச்சிங்களுக்குத் தெரியும்னு. அதான், அவளுக்கு என்னா புடிக்கும், புடிக்காதுன்னு தெரிஞ்சுக்கப் பேச்சுக் குடுத்து அப்புடியே ஒக்காந்துட்டேன்.”
“ஓஹோ!”
“அண்ணி சூப்பரா இருக்காங்க அண்ணா…”
“நீ பார்த்தியா நிசாந்தி?”
“ம்ம். ரெண்டு பேரும் ஜோடியா எடுத்த போட்டோவைக் காட்டுனாங்க.”
“ஜோடியாவா?”
“ஆமா பூவு…”
“நானும் பார்க்கலாமா சார்?”
“தாராளமா…” என்றவன் கைபேசியை அவளிடம் நீட்டினான். யாரோ ஒரு பெண்ணுடன் உரசிக்கொண்டு நின்றிருந்தான். அப்படியே எகிறி அவன் தலை முடியைப் பிடித்து, குனிய வைத்து வயிற்றில் நான்கு குத்துக் குத்தி, மல்லாக்கச் சாய்க்க வேண்டும் போல் இருந்தது பூங்கொடிக்கு.
“ஆத்தாடி! என்னா தோழி என் ஆளை இப்புடிப் பாக்குறீங்க?”
“யாரு இவ?”
“வண்டியைக் கொஞ்சம் நிறுத்துங்க.”
“எதுக்குண்ணா?”
“இந்தத் தோழி என் ஆளைப் பார்த்த பார்வையே சரியில்ல. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகி, என் மனசுக்குள்ள இருக்க அவளுக்கு ஏதாச்சும் ஆகுறதுக்கு முன்னாடி சுத்திப் போட்டுட்டு வந்துடுறேன்.”
“அண்ணி மேல எவ்ளோ பாசம், அண்ணி ரொம்ப ரொம்பக் குடுத்து வச்சவங்க.”
“இல்லம்மா… அவ கெடைக்க நான்தான் ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும். எது நடந்தாலும் நல்லதுக்குன்னு சொல்லுவாங்க. எனக்கு நடக்க இருந்த கண்ணாலம் நின்னு போனதுக்குக் கூட, இப்புடி ஒரு நல்லது நடக்கப் போறது காரணமா இருக்கும்.”
“எந்த ஊர்க்காரி இவ…”
“பக்கத்துல தேனிப்பட்டி தோழி!”
“எல்லாம் முடிவாகிடுச்சா?”
“போன் நம்பரையே குடுத்துட்டாங்க.”
“ஓ…”
“கண்ணாலத்துக்குப் பத்திரிகை வைக்கிறேன் தோழி. மறக்காம மொய் வச்சுட்டுச் சாப்பிட்டுப் போங்க.”
“நடந்தா தான சார்…”
“புரியல தோழி.”
“இல்ல சார், மறக்காம வந்துடுறேன்னு சொன்னேன்.”
“ரொம்பச் சந்தோஷம் தோழி.”
“உங்க கூட யாரெல்லாம் வந்தாங்க சார்?” எனக் கேட்கும் பொழுது அவள் பார்வையே சரியில்லை. அதை உணர்ந்தவன் நாசூக்காக, “எங்க குடும்ப விஷயம் உங்களுக்கு எதுக்குத் தோழி?” நழுவினான்.
“எனக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு சொல்றீங்களா சார்.”
“ஆமா தோழி. அந்தப் புல்லு, தண்ணியோட முடிஞ்சு போச்சு எல்லாமே.”
“அப்புறம் எதுக்கு என் பின்னாடி வந்துட்டு இருந்தீங்க?”
“புத்தி கெட்டுப் போச்சு தோழி. இப்பதான், அந்தப் புத்தி தெளிஞ்சு இருக்கு. என் தேவதையைப் பார்த்ததுக்கு அப்புறம், அவதான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன் தோழி. உங்க பின்னாடி வந்ததுக்கும், என் வாழ்க்கைய நானே சீரழிக்கப் பார்த்ததுக்கும் மன்னிச்சிடுங்க.”
“சந்தோஷமா கண்ணாலம் பண்ணிக்கிட்டு வாழுங்க சார்…” என்றவள் பிடித்தமில்லா ஏளனப் பாவனையோடு, “அந்தப் பொண்ணு கழுத்துலயாது தாலி கட்டுங்க.” என்றாள்.
தன்னவள் முகத்தில் வந்து மறைந்த மாற்றத்தைக் கண் கண்ணாடிக்குள் மறைத்து வைத்தவன், “நான் அவளுக்குன்னு பொறந்தவன் தோழி, மூணு முடிச்சுப் போடாம விட மாட்டேன்.” என்றான்.
***
வேலையில் இருந்தவளிடம் பேச்சுக் கொடுத்த அனைவரிடமும் குடுமிப்பிடி சண்டை. வாயில்லாத் துணிகளின் மீது கூடக் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தாள். அவளைப் பற்றித் தெரிந்து அவள் பக்கம் திரும்பாது இருந்த தோழிகளை, வேண்டுமென்றே சீண்டிப் பார்த்தாள். அவன் பார்த்த பெண்ணைப் பற்றி விடாமல் நச்சரிக்க, அகப்பட்ட கோழியின் நிலை அந்த நால்வருக்கும்.
“என்னாத்துக்கு அப்புடிச் சிரிக்கிறீங்க. அவன் பொண்ணு பார்த்துட்டு வந்தது உங்களுக்கு அவ்ளோ பெரிய காமெடியா? ஊர் உலகத்துல எவனுமே பொண்ணு பார்த்துட்டு வரலையா… கண்ணாலமே ஆகல, அதுக்குள்ள அண்ணி நொண்ணின்னு. இன்னொரு தடவை அவன் கூடச் சிரிச்சுப் பேசறதைப் பாஎத்தேன், மண்டைய ஒடச்சிடுவேன்.”
“அவரை நீ வேணாம்னு சொல்லிட்ட, அவர் வேற பொண்ணப் பார்த்துட்டாரு. இதுக்கு எதுக்குடி எங்களை மிரட்டிக்கிட்டுக் கெடக்க.”
“நான் வேணாம்னு சொன்னா, வேற பொண்ணப் பார்ப்பானா? பெரிய இவன் மாதிரிப் பக்கம் பக்கமா டயலாக் பேசினான். இப்புடி ஒரு வாரத்துல, மனசை மாத்திக்கிட்டு வேற பொண்ணப் பார்த்தன்னு சொல்றான். அதுக்கு நீங்க எல்லாரும் சப்போர்ட்.”
“அவர்தான் வேணும்னா அவர்கிட்டப் பேசிப்பாரு. ஏதோ ஒரு பொண்ணுக்கு அவரை விட்டுக் குடுக்காத.”
“அவன் வேணும்னு நான் சொன்னனா? அவன் யாரைக் கட்டிக்கிட்டா எனக்கென்ன? அவன நான் எப்பவோ விட்டுட்டேன், இனி யார் எடுத்துக்கிட்டா எனக்கு என்னா…”
“அப்புறம் என்னாடி உனக்குப் பிரச்சினை? உனக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்க அவர்கிட்டப் பேசிட்டுப் போறோம், விடு.”
“அப்படியெல்லாம் விட முடியாது. நீங்க அவன்கிட்டப் பேசக்கூடாது.”
“இது என்னாடி வம்பா இருக்கு.”
“பேசக் கூடாதுன்னா பேசக்கூடாது. இனி அவன் என் கண்ணுலயே படக் கூடாதுன்னு சொல்லிடுங்க. பட்டான், என்னா பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”
“அவர்கிட்டச் சொல்லவா, அண்ணிகிட்டச் சொல்லவா?” என்றதும் வெறி கொண்ட வேங்கையாக மாறியவள், கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கிப் போட்டு அடிக்க, சூப்பர்வைசரிடம் ஐவரும் தொக்காக மாட்டிக் கொண்டனர்.
***
வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் கையும், வாயும் ஓயவில்லை. வந்தவளை வாவென்று அழைத்த ரங்கம்மாளைப் பிடிபிடி என்று பிடித்து விட்டாள். ஒன்றும் புரியாமல் ‘பே’ என முழித்தார் பெரியவர்.
“எதுக்கு என்னை அப்புடிப் பார்க்குற? உனக்கும் என்னைப் பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா… இருக்கும்! அவனுக்கே நான் அப்புடி இருக்கும்போது உனக்கு இருக்க மாட்டேனா… கட்டிக்கச் சொல்லு. எவளை வேணா கட்டிக்கச் சொல்லு. அவன்தான் இல்லன்னு முடிவாகிடுச்சே. அன்னைக்கே, என்னை விட்டா வேற பொண்ணே இல்லையான்னு கேட்டவன் தான அவன்…”
“யாரடி பேசுற?”
“யாரப் பேசறன்னு தெரியாதா? இன்னும் உனக்கு விஷயம் தெரியல. அப்புடித்தான…”
“சிங்காரமா?”
“சொல்லாத. அவன் பேரை இன்னொரு தடவை சொல்லாத. அவன் மட்டும் இல்ல, அவன் பேரைக் கேட்கக் கூட எனக்குப் புடிக்கல.”
“காலையில நல்லாத் தானடி போன…”
“ம்ம்… போனாங்க நல்லா. உன் பேரன் கூடத்தான், பொண்ணு பார்த்துட்டு வரப் போனான்.”
“பொண்ணு பார்க்கப் போனானா?”
“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத பாட்டி. இப்பவும் சொல்றேன், அவன் எனக்கு வேணாம். யாரைக் கட்டிக்கிட்டாலும், மூக்கைச் சிந்திக்கிட்டு மூலையில ஒக்கார மாட்டேன். அவனுக்கே ஒரு பொண்ணு கெடைக்கும்போது எனக்கு ஒருத்தன் கெடைக்க மாட்டானா?”
“அடியே பைத்தியக்காரி! என்னாத்தடி வாய்க்கு வந்ததை உளறிட்டுக் கெடக்க.”
“ஆமா நான் பைத்தியக்காரி தான்! அதனாலதான உன் பேரன் என்னைக் கழற்றி விட்டுட்டு, வேற பொண்ணு பின்னாடி தொத்திக்கிட்டுக் கெடக்கான்.” என அவள் குதிகுதி என்று குதித்துக் கொண்டிருக்கும் பொழுது யாரோ அழைத்தார்கள்.
எட்டிப் பார்த்தவள், “சொல்லுங்கக்கா…” குரல் கொடுத்தாள்.
“செத்த இங்க வாயேன்.”
“என்னா விஷயம் க்கா.”
“அட வாம்மா, முக்கியமான விஷயம் பேசத்தான் நாங்க எல்லாரும் சேர்ந்து வந்திருக்கோம்.”
பலத்த யோசனையோடு வாசலில் வந்து நின்றவள், பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருப்பதால் குழம்பினாள். அவள் குழப்பத்தை மதிக்காத அவ்வூர் பெண்கள், “மதியம் ஆனா கரண்ட் கட் ஆகிடுது. எத்தனைத் தடவை புகார் சொன்னாலும், சரி செய்ய மாட்டேங்கிறாங்க.” என்றதோடு அந்தப் பெண்கள் கூட்டம் தயங்கியது.
“சொல்லுங்கக்கா. அதுக்கு நான் என்னா பண்ணனும்? ஈபிகாரன் கிட்ட கம்ப்ளைன்ட் எழுதிக் குடுக்கணுமா?”
“அய்யய்யோ! அதெல்லாம் வேணாம் பூங்கொடி.” என மீண்டும் அந்தக் கூட்டம் தயங்கியது.
“எதா இருந்தாலும் சொல்லுங்கக்கா…”
“ஈபி காரன் கிட்டச் சொன்னா நடக்காது. சிங்காரத்து கிட்டச் சொன்னா நடக்கும். அவன்தான் உனக்காக ரோடு போடுறான். தண்ணிக் குழா போடுறான். பந்தல் கூடப் போட்டு வச்சுப் பத்து நாளுக்கு மேல கெடக்கு.” என ஒரு பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடைப்புகுந்த மற்றொரு பெண்,
“பஸ் கூட விட்டு இருக்கானாம் அக்கா…” என்றிட, அவர்கள் எதிரில் நின்று கொண்டிருந்தவள் மெல்ல மெல்லப் பத்திரகாளியாய் உருவாகிக் கொண்டிருந்தாள்.
அதை அறியாத மகளிர் அணி, “கரண்ட் இல்லாம என்னால தூங்க முடியலன்னு நீ ஒத்த வார்த்தை சொன்னா, அடுத்த செகண்ட் உலகத்துலயே கரண்ட் கட் ஆகாத ஒரே ஒரு ஊரா, நம்ம ஊரு ஆகிடும் பூங்கொடி. எங்களுக்காகக் கொஞ்சம் சிங்காரத்து கிட்டச் சொல்றியா.” என்றனர்.
“சிங்காரத்து கிட்ட தான… தாராளமா சொல்றேன் அக்கா.”
“ரொம்பச் சந்தோஷம், பூங்கொடி”
கடுப்போடு புன்னகைத்தவள், “வேற ஏதாச்சும் சொல்லனுமா?” கேட்க,
“இந்த சேகர் பையன் அதிக வட்டிக்குத் தண்டல் விடுறான். அவனையும் கொஞ்சம் என்னான்னு கேட்கச் சொல்லு.” என்றதில் ஆரம்பித்து,
“டவுனுக்குப் போயிட்டு வர ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஊருக்குள்ளேயே ஒரு கடை போடச் சொல்லிடு.” என்றது வரை பட்டியல் நீண்டது.
“எல்லாத்தையும் சொல்லிடுறேன். நீங்க உங்க வீட்டு வேலையப் போய் கவனிங்க.” எனச் சிறப்பாக வழி அனுப்பி வைத்தவள், நடுக்கூடத்தில் இருந்த குழம்புச் சட்டியை, வலது காலால் எட்டி உதைத்து ஓடிக் கொண்டிருந்த காற்றாடிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தாள்.
காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கும் பாட்டியிடம், “அவனுக்கு ஃபோனைப் போட்டு வரச் சொல்லு.” என்றாள்.
“உங்க விளையாட்டுக்கு நான் வரல.” என நழுவப் பார்க்கும் முதியவரைத் தடுத்துச் சிறைப்பிடித்தவள் போன் செய்த பிறகே விடுவித்தாள்.
அவன் வரும் வரை அவள் அவளாக இல்லை. நடப்பதும், பல்லைக் கடிப்பதுமாகத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாள். தூக்கி வளர்த்த பேத்தியை, அரிய வகை ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தார் ரங்கம்மாள்.
“என்னாத்துக்கு என் மூஞ்சப் பார்த்துட்டு இருக்க, எதுனா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுதா?”
“நீதான்டி குரங்கு கணக்கா ஆடிக்கிட்டு இருக்க.”
“வாயில ஏதாச்சும் வந்துடும். போனப் போட்டு எம்புட்டு நேரம் ஆகுது. உன் பேரனால வர முடியாதா? திரும்ப போனப் போட்டு வரச் சொல்லு.” எனும் பொழுதே வசீகரக் குரலில், “ஹாய் தோழி!” கையசைத்துத் திண்ணையில் அமர்ந்தான்.
“அவனைத் தோழின்னு சொல்ல வேணாம்னு சொல்லு பாட்டி.”
“கோழின்னு சொல்லவா தோழி?”
“அப்புடியே சட்டிய எடுத்து மூஞ்சில இடிச்சிடுவேன்.” என உடைந்த சட்டியைத் தூக்கிக் கொண்டு வர, “கண்ணாலத்துக்குத் தேதி ரொம்பக் கம்மியா இருக்கு தோழி. முக அழகு ரொம்ப முக்கியம்!” அப்பட்டமாக வெறுப்பேற்றினான்.
தாவி அவன் சட்டையைப் பிடித்து, வீட்டிற்குள் தரதரவென்று இழுத்து வந்தவள், “எவடா அவ? உன் மூஞ்சி மொகரையைப் புடிச்சி இருக்குன்னு சொல்லி, கண்ணாலத்துக்குத் தேதி குறிச்சவ… உனக்கு எம்புட்டுத் தைரியம் இருந்தா, பொண்ணு பார்த்துட்டு வரேன்னு என்கிட்டயே சொல்லுவ. அதுவும் அவளுங்க கூடச் சேர்ந்துட்டு… என்னாடா வெறுப்பேத்துறியா?” என உலுக்க ஆரம்பித்தாள்.
“தோழி, தோழி…”
அந்த வார்த்தையைக் கேட்க முடியாது, எகிறி அவன் வாயில் ஒரு குத்து விட்டவள், “நான் உனக்குத் தோழியா? சொல்லுடா, நான் உனக்குத் தோழியா.” கேட்க, பதில் சொல்ல வாய் நன்றாக இல்லை சிங்காரவேலனிடம்.
வலி பொறுக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்தவன் தலை முடியைப் பிடித்து, “நான் இருக்கும் போதே வேற எவளையாவது பார்த்திடுவியா நீ. உன்னையும், அவளையும் மணவறைல சேர்த்து நிக்க வச்சு எரிச்சிடுவேன்.” எனத் தீவிரமாக மிரட்டிக் கொண்டிருக்க,
“சேர்த்து எரிச்சிடுங்க தோழி. நாங்க சொர்க்கத்துல போய் வாழ்க்கையைத் தொடங்கிக்கிறோம்.” என்றான்.
அடக்க முடியவில்லை பூங்கொடியை. வானத்திற்கும், பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கும் பேத்தியை அடக்க முடியாது அரண்டு நின்றவர், கதி கலங்கிப் போனார், சிரித்த முகமாக அவள் கொடுக்கும் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருக்கும் பேரனைக் கண்டு. அவள் ஆத்திரத்தில் குளிர் கண்டவன், அதில் தீ மூட்டிச் சுகம் கண்டு கொண்டிருக்கிறான்.
“ஏண்டா, அவ இம்புட்டு அடி அடிச்சிட்டுக் கெடக்கா… சிரிச்சுகிட்டு நிக்கிற.”
“லவ் பண்ணிட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாத, கெழட்டுக் கெழவி.”
“இந்த எழவா லவ்வு?”
“ம்ம்…” என வெட்கப்படும் அவன் மீது காறித் துப்பியவர், “போங்கடா, மானங்கெட்டவங்களா…” என்ற விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் சென்றதைக் கூட அறியாது மூச்சு வாங்க, “அந்த போட்டோவக் காட்டு.” என்றாள்.
“எதுக்குடி?”
“மரியாதையா காட்டு!”
“கண்ணு வச்சுடுவ…” என்றதும் அவன் கண்ணைக் குத்தச் சென்றாள். நகர்ந்து தன் இரு விழிகளையும் குருடாகாமல் பார்த்துக் கொண்ட சிங்காரம்,
“எதுக்குடி, இப்புடி ஆடிக்கிட்டு கெடக்க…” அவளை அடக்கிப் பிடித்து ஒரு கையில் சுருட்டிக் கொண்டு கேட்டான்.
“விடு என்னை…”
“என்னா நடந்து போச்சு? நீ இப்புடித் தையத்தக்கான்னு ஆடிக்கிட்டு இருக்க.”
“நீ பொண்ணு பார்த்துட்டு வருவ, நான் சும்மா இருக்கணுமா?”
“உருண்டு பிரண்டு அங்கப்பிரதட்சணம் பண்ணப் போறியா?”
“என்னை வெறி ஆக்காத…”
“இப்பவே அப்படித்தான்டி கெடக்க.”
“கைய விடு.”
“கண்ணாலத்துக்கு அப்புறம் புடிக்க முடியாது. என் ஆளு ரொம்ப பொசசிவ். அதனால இப்பவே புடிச்சுக்குறேன்.” என்றதற்குப் பின் அங்கு அடிகள் மட்டுமே பேசியது.
அடித்தடித்து ஓய்ந்து போனவள், வெறுப்பாகி ஒன்றும் செய்ய முடியாமல் அழ ஆரம்பித்து விட்டாள். அதுவரை விளையாடிக் கொண்டிருந்தவன், சமாதானம் செய்யக் கன்னம் தொட, “தள்ளிப்போ… என்னை எதுக்குத் தொடுற. அதான் உன் ஆளு இருக்கால்ல, என்னைத் தொட்டதெல்லாம் போதும். இனி அவளைத் தொட்டுச் சந்தோஷமா இரு.” கலங்கி நிற்கும் காதலியை அணைக்க முயன்றான்.
இடம் கொடுக்காது நழுவிக் கொண்டிருந்தாள். விடாது கெஞ்சிக் கொஞ்சி இடையைச் சுற்றிக் கொண்டான். அழுது கொண்டே அவனிடம் சரண் அடைந்தவள், துக்கம் தாங்காது மார்பில் சாயச் சிரித்துக் கொண்டு அணைத்தவனுக்கு அவ்வளவு சுகம்.