Loading

அத்தியாயம் 14

ஆணையர் மகேஷின் முன்பு உதவி ஆணையர் அகனிகா, ஆய்வாளர் சுகன் மற்றும் தடயவியலாளர் பெஞ்சமின், உதவியாளர் சுனில் ஆகிய நால்வரும் அமர்ந்திருந்தனர்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க அகனிகா? ஒரு ஸ்டெப் கூட இந்த கேஸில் முன்ன போகல. இப்படியே இருந்தா கேஸ் நம்ம டிபார்ட்மெண்ட் விட்டுப்போயிடும்” என்றார். அத்தனை காட்டம் அவரிடம்.

“இந்த மாதிரி இங்க மட்டுமில்ல… தமிழ்நாடு முழுக்க நடந்திட்டு இருக்கு. எல்லா பெரு நகரங்களிலும் நடந்திருக்கு” என்ற மகேஷ், அவளின் முன் சில தாள்களை வைத்தார்.

மாநிலம் முழுக்க இம்மாதிரியான கொலைகள் நடைபெற்றிருக்க, இவ்வழக்கு முதல்வரின் பார்வைக்குச் சென்று அவரிடமிருந்து கேள்விகள் பலவர காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாது போனது. அந்த கோபத்தை தற்போது இங்கு அவ்வழக்கை கையாளும் அகனிகாவிடம் காண்பித்தார்.

“டிஜிபி ஆபிசிலிருந்து வந்த ஃபாக்ஸ் இது. இதுல தமிழ்நாடு முழுக்க இதே மாதிரி பல டீச்சர்ஸ் கார்டியாக் அரெஸ்ட்டால் அவங்கவஙக வொர்க் பிளேசிலே இறந்திருக்காங்க” என்றார்.

மகேஷ் முன் வைத்த தாள்களை பார்வையிட்ட அகனிகா, கண்கள் விரித்து அதிர்ந்தாள்.

அதில் அவளது நகரத்தையும் சேர்த்து, மாநிலம் முழுக்க கடந்த நான்கு தினங்களில் இருபத்தியோரு ஆசிரியர்கள் இறந்ததாக பெயர் வரிசைக் குறிப்பிட்டது.

“ஹவ் இஸ் திஸ் பாசிபில்?” என்ற அகா, “எங்க விசாரணையிலேயே இது கொலைதான்னு ஃபைண்ட் பண்ணிட்டோம் சார். கொலைக்கான மோட்டிவ் என்னன்னு கூட ஒரு கெஸ் இருக்கு. இப்போ கொலையாளின்னு யாருன்னு கண்டுபிடிக்கணும்” என்றாள்.

“அதுதானே முக்கியம்” என்ற மகேஷ், “குணசீலன், ஜார்ஜ், மகேந்திரன் இவங்க லிஸ்டில் இப்போ பழனியப்பன். அவர் மட்டும் வீட்டில் இறந்திருக்கார். அதுக்கான காரணம் தெரிஞ்சுதா?” எனக் கேட்டார்.

“கில்லர் ஸ்பாட்டுக்கு வராமலே கொலை பண்ணிட்டு இருக்கான். முக்கியமானது நேரம். கில்லர் எதோ அனுப்புறான். அதை விக்டிம்ஸ் திறந்து பார்க்க, பார்த்த இத்தனை மணி நேரத்தில் இறக்கிறாங்க. பழனியப்பன், அந்த நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்குப் போயிருக்கலாம். சோ, வீட்டில் இறந்திட்டார்” என்றாள்.

“டைம் பிக்ஸ்சிங்கில் மர்டர் நடக்குதுன்னு எப்படி சொல்றீங்க?” என்ற மகேஷுக்கு, “சஸ்பெக்ட் ஸ்பாட்டுக்கே வரலங்கிறப்போ, கில்லர் டெக்னாலஜியை தான் யூஸ் பண்ணி கொலை பண்றான்னு ஈசியா சொல்ல முடியுமே சார்” என்றான் பெஞ்சமின்.

“ஓகே” என்ற மகேஷ், “அந்த பாக்ஸ்குள்ள என்னயிருந்ததுன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா?” எனக் கேட்டார்.

“அதுல என்னன்னு தெரியல சார். ஆனால் இறந்தவங்க எல்லாரோட கையிலும் வாட்ச் மார்க் இருக்கு. குணசீலன், ஜார்ஜ் கையில் அந்த மார்க் இல்லை. மே பீ அவங்க இறந்து பல மணி நேரத்துக்கு அப்புறம் தான் நமக்குத் தெரிஞ்சுது. சோ, மறைஞ்சிருக்கலாம். ஆனால் மகேந்திரன் அண்ட் வேலூரில் இறந்துபோன மார்த்தாண்டம் கையில் வாட்ச் மார்க் இருந்தது. கில்லர் வாட்சை ஒரு டூலா பயன்படுத்துறான்னு தெரியுது. ஆனா எப்படின்னு தெரியல. அந்த பாக்ஸில் வாட்ச் கூட இருந்திருக்கலாம்” என்றாள் அகனிகா.

“இப்போதான் வாட்சிலே மொபைலுக்கு இக்குவலா நிறைய அப்டேட் வருதே அகா. விது அண்ணா அண்ட் ஆருஷ்கிட்ட கேட்டாலே தகவல் கிடைக்குமே” என்றான் பெஞ்சமின்.

“அது வாட்ச் தான் அப்படிங்கிறதுக்கு அழுத்தமான ஆதாரம் எதுவும் இல்லையே” என்றாள்.

“பழனியப்பன் பற்றி அவரோட பள்ளியில் இன்னும் விசாரிக்கல. அங்க விசாரிச்சா வேறெதுவும் தகவல் கிடைக்கலாம்” என்றான் சுகன்.

“ம்ம்” என்ற மகேஷ், “கொலைக்கான மோட்டிவ் இதுதான் யூகம் இருப்பதா சொன்னீங்களே. என்ன அது?” என்று அகாவிடம் வினவினார்.

“இறந்துபோன யாரும் பொண்ணுங்க விஷயத்தில் ஒழுங்கு கிடையாது சார்” என்றாள். வார்த்தையை பற்களால் கடித்துத் துப்பியவளாக. சட்டென்று அப்படியொரு சினம் தெறித்தது அவளது முகத்தில்.

அகனிகாவின் அருகில் அமர்ந்திருந்த பெஞ்சமின், அவளின் கரத்தை அழுத்திப் பிடித்து அவளின் கோபத்தை கட்டுப்படுத்தினான்.

அவளின் சமநிலை தவறுவதற்கான காரணம் அவனறிவானே!

“அம் ஓகேண்ணா” என்ற அகா, “தன்னோட கிளாஸ் கேர்ள்ஸ்கிட்டவே மறைமுகமா மிஸ்பிகேவ் பண்ணியிருக்காங்க. இதுல வருத்தமான விஷயம் என்னன்னா… எந்தவொரு பொண்ணும் தப்புன்னு தெரிஞ்சும் யார்கிட்டவும் அவனுங்களைப் பற்றி சொல்லல” என்றாள்.

“சொன்னா மார்க்கில் கை வைப்பேன்னு மிரட்டுவானுங்க. அவனுங்களுக்கு இது ஒரு வெப்பன். பிள்ளைகளுக்கும் மார்க் தானே இந்த வயசில் பெருசா தெரியுது. வீட்லையும் அதிக மார்க் வேணும்னு சொல்லிட்டே இருந்தா அவங்களுக்கு அதுதானே பெருசா தெரியும்” என்று உதட்டை சுளித்தான் சுகன்.

“செத்தவங்களோட கிளாஸ் கேர்ள்ஸை தனியா விசாரிச்சதில் தெரிஞ்சது இது. குணசீலன் மிரட்டிய பொண்ணு ஸ்கூலுக்கே வரல. மாலதி தான் வீட்டுக்கே போய் விசாரிச்சுட்டு வந்தாங்க. மாலதி விசாரணைக்குன்னு போனபிறகு தான் அந்தப்பொண்ணோட வீட்டுக்கே இது தெரிஞ்சிருக்கு” என்ற அகனிகா, “வேலூர், காஞ்சிபுரத்தில் விசாரணை செய்ததிலும் இப்படியொரு விஷயம் தெரிய வந்திருக்கு” என்றாள்.

“இப்போலாம் படிக்கிற இடத்தில் தான் அதிக கவனமா இருக்க வேண்டியதா இருக்கு. கடவுளுக்கும் மேலான இடத்தில் இருந்துட்டு இவனுங்க செய்யுற செயல் கொஞ்சமும் சரியில்லை” என்று சுனில் ஆதங்கமாகக் கூறிட, “அதில் நல்லவங்களும் இருக்காங்க சுனில்” என்றான் பெஞ்சமின்.

“ஆமாம்” என்றிருந்தாள் அகனிகா. தன்னைப்போல்.

அவள் ஆமென்றதில் பெருத்த ஆச்சரியம் பெஞ்சமனிடத்தில்.

உயிர் பிரியும் வலியை அனுபவத்திட்ட அன்றைய நிகழ்வுக்குப் பின்னர் ஆசிரியர்கள் என்றாலே கொலை செய்யும் வெறியில் இருந்தவள், இன்று அவர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்ற கருத்துக்கு ஆமோதிப்பது அவளைச் சார்ந்தோருக்கு ஆச்சரியம் தான்.

அந்த வகையில் ஆச்சரியம் கொண்ட பெஞ்சமின் அகாவை ஏறிட,

“புவியும் டீச்சரா இருக்கும்போது எல்லாரையும் எப்படி என்னால அப்படி சொல்ல முடியும்?” என அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கேட்டிருந்தாள்.

பெஞ்சமின் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“நமக்கு இதுதான் காரணம்னு தெரிஞ்சாலும்… இறந்துப் போனவர்களை அக்யூஸ் பண்ணி அவங்க இறப்பை நியாயப்படுத்த முடியாது. இப்போ தைரியமா விசாரணையில் உங்ககிட்ட சொல்ற பொண்ணுங்க நாளைக்கு எல்லார் மத்தியிலும், கோர்ட்டிலும் உண்மையை சொல்லுவாங்கன்னு நம்ப முடியாது. நேரடியா வீட்டுக்குப் போயி விசாரணை செய்த மாலதியே திரும்பப்போனாலும், இன்னொருமுறை உண்மையை சொல்றது சந்தேகம் தான்” என்ற மகேஷ், “முதலில் கில்லர் யாரு? அவனுக்கான மோட்டிவ் என்ன? இதை கண்டுபிடிங்க” என்றார்.

“அவனோட மோட்டிவ் தான் கண்ணுக்கு முன்ன நல்லாத் தெரியுதே சார்” என்ற அகனிகா, “ஒருத்தரோட எதிர்காலத்தையே வடிவமைக்கக்கூடிய தொழிலில் இருந்துட்டு பொண்ணுங்களை மிஸ்பிகேவ் பண்றவங்களா பார்த்து கொலைப்பண்ணிட்டு வரான். அவனோட டார்க்கெட் என்னன்னு இதுலே தெரியலையா?” என்றாள்.

“இது உங்களோட அனுமானம் தான அகனிகா… அனுமானத்தில் எதையும் நம்ப முடியாது” என்றார் மகேஷ்.

“வேறென்னவா இருக்கும் நீங்க நினைக்கிறீங்க சார்?”

மகேஷின் பக்கமே கேள்வியைத் திருப்பிவிட்டாள் அகனிகா.

“கொலையாளி யாருன்னு கண்டுபிடிச்சா தான அது தெரிய வரும்” என்ற மகேஷ், “அதுவுமில்லாம இங்க நம்மளை சுத்தி இறந்துபோன ஒரு நாலு பேரோட கேரக்டர் மட்டும் வச்சு இதை தீர்மானிக்க முடியாது. இருபத்தியோர் பேரு இறந்துப்போயிருக்காங்க… மத்த இடத்திலெல்லாம் இப்படி ஒரு தகவல் வரலையே” என்றார்.

“இந்த கோணத்தில் அவங்கெல்லாம் கேஸ் விசாரணை பண்ணியிருக்கமாட்டாங்களே சார்” என்ற சுகன், “மத்த மர்டர் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு நாம ஒரு முடிவுக்கு வருவோம் மேம்” என்றான். அகனிகாவிடம்.

அகனிகாவின் அமைதி பெஞ்சமினுக்கு அவளுக்குள் ஏதோ ஓடுகிறது என்பதை வலியுறுத்தியது.

“ரொம்ப சீரியஸா போகும் போலிருக்கு. இந்த கேஸ்க்கு தனி டீம் ஏதும் அரேஞ்ச் பண்ணட்டுமா அகனிகா?” என்று மகேஷ் கேட்டிட,

“கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும் சார்” என்றாள்.

“ஹவ் இட் இஸ் பாசிபிள்?” மகேஷின் அதிர்வு தான் அங்கிருந்த மற்றவர்களுக்கும்.

“சஸ்பெக்ட் யாருன்னு சின்ன ஐடியா கூட இல்லாம எப்படி மேம்?” என்ற சுகன், “நீங்க யாரையாவது சந்தேகப்படுறீங்களா?” எனக் கேட்டான்.

“இப்போ என்கிட்ட பதிலில்லை. ஆனா இந்த கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும்” என்றவள், விறைப்பாக சல்யூட் வைத்தவளாக அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்ற பெஞ்சமின் அகாவின் பின் எழுந்து ஓடினான்.

“அகா ஸ்டாப்” என்று பெஞ்சமின் பக்கம் வரும்முன், அலுவலகக் கட்டிடம் விட்டு வெளியில் வந்து வாகனத்தில் ஏறியிருந்தாள் அகனிகா.

“அகா நில்லு…”

அவள் வண்டியில் அமர்ந்திருந்த பக்கம் வந்து நின்றான் பெஞ்சமின்.

“வெறும் அட்டை பாக்ஸ் வச்சு இந்த கேஸ் முடிக்க முடியும் எப்படி சொல்ற?” எனக் கேட்டான்.

“எதுக்கு இவ்வளவு பதட்டம் பெஞ்சமின் அண்ணா” என்று அண்ணா என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுத்தாள் அகா.

“மகேந்திரன் இறப்பில் மிதுன் ஏதும் லீட் கொடுத்தானா?” எனக் கேட்டான். அவள் குற்றவாளி யாரென விரைந்து பிடித்துவிடுவதாகக் கூறியதில் எதுவும் கண்டுபிடித்துவிட்டாளோ என நினைத்து வினவினான்.

“ம்ப்ச்…” என்று தோள்களை உயர்த்தி இறக்கி, கண்கள் சிமிட்டிய அகா, “எங்க கம்பெனி வாட்ச் பேக் பண்ற பாக்ஸ் எனக்குத் தெரியாதா?” எனக் கேட்டாள்.

பெஞ்சமினின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, அவனது சட்டைப் பையில் உயிர்ப்புடன் இருந்த அலைபேசி வழி அங்கு நடந்தப் பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு இதழில் மென் முறுவல் பூத்தது.

“ரொம்ப ஷாக் ஆகாதீங்க… எனக்கு தெரியணுங்கிறதுக்காகத்தான அந்த பாக்ஸ்… ஐ மீன் ராயல்டி டைம் பாக்ஸ். அதுவும் நெக்ஸ்ட் மன்த் லான்ச் பண்ணப்போற புது லோகோவோட பாதி லோகோ இமேஜ் தெரியுற மாதிரி” என்றாள்.

“அகா!”

“என்கிட்ட விதார்த் மாமா கம்பெனி பத்தி எல்லாம் பேசமாட்டங்க… இதுவரை பேசினதுமில்லை. ஆனால் அன்னைக்கு அவசரமா ஸ்டேஷன் கிளம்பினப்போ என்னை தடுத்து நிறுத்தி இந்த டிசைன் பிடிச்சிருக்கா கேட்டார். ஸ்பாட்டுக்கு வந்தா அந்த பாக்ஸ்ல பாதி லோகோ ஏதோ இருக்குன்னு நீங்க காட்டுறீங்க… கில்லர் யாருன்னு நான் கண்டுபிடிக்க நீங்கெல்லாம் இவ்ளா மெனக்கெடல் பண்ணும் போது நான் சரியா கேட்ச் பண்ணலன்னா எப்படி?” என்றவள்,

“உங்க ஃபிரண்டுக்கு நல்லாவே ஹெல்ப் பண்றீங்க” என்று வண்டியை செலுத்தியிருந்தாள்.

அகனிகா தன்னுடைய காவல் நிலையம் வந்து சேர, தலைமை டாணாக்காரர் அவளது பெயருக்கு கூரியர் வந்ததாக பார்சலை நீட்டினார்.

என்னவென்று பிரித்துப் பார்க்க, இறந்துபோன இருபத்தியோர் பேரின் விவரங்கள், அவர்கள் ஆசிரியர் என்ற போர்வையில் மாணவியரிடம் தவறாக நடந்துக் கொண்டதற்கான ஆதாரங்கள் என அவர்களின் இறப்பிற்கு காரணமான அனைத்து ஆதாரங்களும் அதிலிருந்தது.

அவளுக்கு கொஞ்சமும் சிரமம் வைக்கவில்லை.

பல வருடங்களுக்குப் பின்னர் அவளின் இதழ் புன்னகையில் விரிந்தது. கணப்பொழுதில் மறைந்தும் போனது.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்