Loading

அத்தியாயம் 13

 

காலை ஒன்பது மணிக்கு கார்த்திகைசெல்வன் எழும்போது அறையில் தேவதர்ஷினி இல்லை.

 

“ம்மா! காபி!” என அவன் கீழே வர,

 

“எந்திரிக்க நேரமா டா இது? அப்படி என்ன தூக்கமோ?” என கண்ணகி கொண்டு வந்து கொடுக்க, 

 

“அப்பவே எழுப்பி இருக்கலாம்ல?” என்றவன் பார்வை நேற்றை போல சுற்றி வந்தது.

 

“குளிச்சுட்டு வந்துடு. சாப்பிட்டு கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்!” என கண்ணகி சொல்ல, 

 

“தேவா எங்க?” என கேட்டுவிட்டான்.

 

“பூரி போட்டுட்டு இருக்கா டா!” என அவர் சொல்லவும்,

 

“கூப்பிட்டீங்களா த்தான்?” என அவள் வரவும் சரியாய் இருந்தது.

 

“அது சரி!” என கண்ணகி புன்னகையுடன் உள்ளே செல்ல, அவனுமே சிரித்துவிட்டான்.

 

“ஒண்ணுமில்ல. கேட்டேன்!” என்று சொல்லி அவள் புடவையில் தயாராகி இருப்பதையும் பார்த்துவிட்டு எழுந்து சென்றான்.

 

நிரஞ்சன் சனிக்கிழமை மதியம் வரை கல்லூரி என கிளம்பிவிட, பரமேஸ்வரணும் வேலைக்கு சென்றிருந்தார்.

 

“சொன்னா கேட்டியா நீ! அதான் நான் பன்றேனே. உதவி வேணும்னா எனக்கு கேட்க தெரியாது. இப்ப யாருக்கு வலி?” என புலம்பியபடி கண்ணகி பூரியை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டிருக்க, கார்த்திகைசெல்வனும் வந்துவிட்டான்.

 

“ம்மா!” என அவன் வந்து அமர,

 

தேவதர்ஷினி அவன் குரல் கேட்டு எழவும் கண்ணகி முறைத்ததில் மீண்டும் சமையலறையிலேயே அமர்ந்துவிட்டாள்.

 

“சாப்பிடு!” என பூரியை வைத்துவிட்டு அவர் நகர,

 

“நீங்க எப்ப கோவிலுக்கு கிளம்ப போறீங்க? மணி பத்தாக போகுதே!” என்றான்.

 

“நான் எங்க கிளம்ப? நீயும் தேவாவும் போய்ட்டு வாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் அவளை எங்கயும் கூட்டிட்டு போகல தானே?“ என அன்னை சொல்லவும் தான் அவனுமே அதை நினைத்தான்.

 

“நல்லா தலையை வாரிவிட்டு சோக்கேஸ் பொம்மை மாதிரி ரெடியா வச்சிருந்தேன் அவளை. ஹெல்ப் பன்றேன்னு உள்ள எண்ணெய் பக்கத்துல வந்து நின்னு கையில தெரிச்சிடுச்சு எண்ணெய்” என போகிற போக்கில் அவர் சொல்லி செல்ல,

 

“தேவா!” என சத்தமாய் அழைத்தான் அவளை அவன் வீட்டில் முதல் முறையாய்.

 

கண்கள் மின்ன அவன் குரலைக் கேட்டவள் கண்ணகியைப் பார்க்க,

 

“கூப்பிடுறான்ல போ!” என சிரித்தார் அவள் முகம் பார்த்த கண்ணகியும்.

 

“சொல்லுங்க த்தான்!” என வந்து நின்றவள் கையை மறைத்து வைக்க,

 

“கை நீட்டு! என்னாச்சு?” என கேட்கவும் அவள் காட்டிட, மணிக்கட்டின் அருகே வலது கையில் மருந்தைப் பூசி இருந்தாள்.

 

அதைப் பார்த்தவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்து, “சமைக்க தெரியுமா?” என கேட்க,

 

“தெரியும் த்தான். இது கவனிக்காம நின்னதால தான்!” என சொல்லி நின்றாள்.

 

“உக்கார்!” என அருகிருந்த நாற்காலியைக் காட்ட,

 

“எதாவது வேணுமா? எடுத்துட்டு வரவா?” என கேட்டு தேவதர்ஷினி அங்கிருந்தவற்றைப் பார்க்க, கண்ணகி எல்லாமே அங்கே வைத்திருந்தார்.

 

“உக்காரேன் டி. நின்னுட்டே இருக்க சொன்னானா அவன்?” எனக் கேட்டு இன்னும் பூரிகளை கொண்டு வந்து வைத்தவர்,

 

“நீயும் சாப்பிடு. நேரமாகுது இல்ல. சாப்பிட்டு கிளம்புங்க!” என்ற கண்ணகி சமையலறை உள்ளே சென்றபடி,

 

“கார்த்தி! அப்படியே கோவிலுக்கு போய்ட்டு தேவா வீட்டுக்கும் போய்ட்டு வாங்க. லீலா சந்தோஷப்படுவா!” என சொல்ல, நிமிர்ந்து தேவதர்ஷினியைக் கண்டான் கார்த்திகைசெல்வன்.

 

சாப்பிட தனக்கு வைத்துக் கொண்டவள் கையையும் தேய்த்துக் கொள்ள,

 

“வலிக்குதா?” என கேட்டான் கணவன்.

 

“ஹ்ம்! லைட்டா எரியுது. மருந்து தான் எரிச்சல் குடுக்குது. போடும் போதே சொன்னேன் இந்த மருந்து எரியும் வேண்டாம்னு அத்தை தான் கேட்கல!” என சொல்லி பூரியை எடுத்து வைக்க, அவள் சாப்பிடுவதை பார்த்தபடி தானும் சாப்பிட்டு முடித்தான்.

 

“நேத்து பூ விக்குற பாட்டி வர்ல கார்த்தி. அங்கேயே அவளுக்கு பூ வாங்கி வச்சுட்டு கூட்டிட்டு போய்ட்டு வா!” என சொல்ல, தலையாட்டி இருவருமாய் கிளம்பி இருந்தனர்.

 

வழியிலேயே பூக்கைடையில் நிறுத்தி அவன் வாங்கிக் கொடுத்து தான் கோவிலுக்கு அழைத்து சென்றான்.

 

திருமணத்தன்று கூட இல்லாத திருமணக் களை என்பதை இன்று தேவதர்ஷினியின் முகம் பிரதிபலித்து இருந்தது.

 

என்னவோ இப்பொழுது தான் அனைத்தும் சுமூகமாய் செல்வதாய் ஒரு எண்ணம். 

 

திருமணத்தின் பின் அன்று விருந்துக்கு தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தவன் அப்படியே ஊருக்கு கிளம்பி இருக்க, தானாய் தான் அழைத்து பேசி என தேவதர்ஷினி உறவை நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள் இருவருக்கும் சேர்த்து.

 

ஒரு மாதம் கடந்து இப்பொழுது கார்த்திகைசெல்வனின் இப்பொழுதைய நடவடிக்கைகள் பெரிய மாற்றம் தான். அதற்கே மனம் அப்படி மகிழ்ந்தது தேவதர்ஷினிக்கு.

 

கோவில் உள்ளே செல்லும் நேரம் கார்த்தியின் அலைபேசி சத்தம் கேட்க, “நீ உள்ள போ. நான் வர்றேன்!” என்றான்.

 

“ம்ம்!” என தலையாட்டி அவள் செல்ல,

 

“சொல்லு டா!” என காதில் போனை வைத்திருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“கார்த்தி! எப்ப வர்ற?” என கேட்டது அவனது நண்பன் நந்தன்.

 

“நாளைக்கு இல்லைனா நாளன்னைக்கு கிளம்பிடுவேன். ஏன் டா?”

 

“இங்க எங்க வீடு பக்கத்துல ஒரு வீடு காலியா இருக்குன்னு அம்மா சொன்னாங்க. அதான் உனக்கு பார்க்கலாமானு கேட்க கூப்பிட்டேன்” 

 

“பாரு மச்சி! எனக்கு போட்டோ சென்ட் பண்ணு. ஓகேன்னா பேசிடலாம்!” என்றான்.

 

“ம்ம் டா! நான் அமௌன்ட் எல்லாம் பேசிட்டு கூப்பிடுறேன். உனக்கு இந்த ஏரியா ஓகேவான்னு கேட்க தான் கூப்பிட்டேன்!”

 

“ஆபீஸ் பக்கம் தானே? எனக்கு ஓகே தான்! நீ பாரு!” என்று சொல்லி வைத்து விட்டான் கார்த்தி.

 

கார்த்தி! எப்படி டா இருக்க?” என்ற குரலில் அவன் திரும்ப, சுந்தரி அஷ்வினியோடு நின்றிருந்தார்.

 

“அத்தை!” என்றவன் அஷ்வினியைப் பார்க்க, 

 

“எப்படி இருக்கீங்க த்தான்?” என்றாள்.

 

“ஹ்ம்ம்!” என்றவன், 

 

“நீங்க எப்படி இருக்கீங்க த்தை?” என கேட்டு பேச,

 

“அம்மா வந்திருக்காங்களா கார்த்தி?” என்றார் சுந்தரி.

 

“இல்ல த்தை. தேவாவோட வந்தேன்!” என்று சொல்ல,

 

“தேவா வந்திருக்காளா? உள்ளேயா இருக்கா?” என கேட்டபடி மூவருமாய் உள்ளே சென்றனர்.

 

பிரகாரம் அருகே கணவனுக்காக காத்து நின்றவள் அஷ்வினியும் சுந்தரியும் வரவே, அவர்களோடு பேசி அஷ்வினியோடு நிற்க, கார்த்திகைசெல்வன் அவர்கள் பேசிவிட்டு வர காத்திருந்தான்.

 

“அங்கே தான் சாமி கும்பிட்டு வரலாம்னு இருந்தோம் பெரியம்மா!” என தேவதர்ஷினி சொல்ல,

 

“அப்போ இன்னைக்கே நம்ம வீட்டுல உங்களுக்கு விருந்து செஞ்சிடுறேன். கல்யாணத்தப்பா செய்ய முடியாம போனதே இன்னும் கஷ்டமா இருக்கு!” என சுந்தரி சொல்ல, கணவனைப் பார்த்தாள் அவள்.

 

கார்த்திகைசெல்வன் தலையசைக்கவும் தேவதர்ஷினி சம்மதம் சொல்ல, “ம்மா! அவங்க சாமி கும்பிடட்டும். வாங்க நீங்க!” என அஷ்வினி அழைக்க,

 

“ஆமா! நான் ஒருத்தி!” என அவர்களை முன்னே அனுப்பி வைத்து இருவருமாய் பின்னே சென்றனர்.

 

“இன்னும் வலிக்குதா? அழுத்திட்டே இருக்கியே!” என தனியே வந்ததும் கார்த்தி கேட்க,

 

“ம்ம் லைட்டா!” என்றவளுக்கு அவனின் இந்த கவனிப்பும் சிறு தூறலை மனதில் கொடுத்திருந்தது.

 

சாமியை கும்பிட்டு பிரகாரம் சுற்றி வந்து “இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கலாமா த்தான். பெரியம்மா வருவாங்க!” என தேவதர்ஷினி கேட்க,

 

“ஹ்ம்! நீ இரு. நான் பிரண்ட்கிட்ட போன்ல பேசிட்டு வர்றேன். அத்தை வரவும் அப்படியே உள்ள வந்திட்டேன்!” என்றவனுக்கு சுந்தரியோடு அஷ்வினியின் அந்த நேர வரவு என்னவோ போல தான் இருந்தது.

 

விருந்துக்கு அங்கே செல்லும் எண்ணம் இவ்வளவு நாளும் இருந்ததே இல்லை. இப்பொழுது சுந்தரி கேட்டதும் தேவாவின் பார்வை மட்டும் தான் அவனை சம்மதம் சொல்ல வைத்தது.

 

என்னவோ ஒரு அல்லாடல் அஷ்வினியைப் பார்க்கும் சமயத்தில் மனதை பிசைந்தது. அவளுக்கு தான் அநீதி செய்துவிட்டதாய் தான் மனம் இன்னும் அரற்றி எடுத்தது அவனை.

 

நீண்ட நேரமாகியும் கார்த்திகைசெல்வன் உள்ளே வரவில்லை என்றதும் தேவதர்ஷினி அவனுக்கு அழைக்க, நேரமாவதை உணர்ந்தவனும் 

 

“இதோ வந்துட்டேன் தேவா!” என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

 

அப்போது தான் தேவதர்ஷினியிடம் விடைபெற்று சுந்தரி அஷ்வினியோடு எழுந்திருந்தாள்.

 

கார்த்திகைசெல்வன் வர, “நான் போய் சமையலை பாக்குறேன். நீங்க மெதுவா வாங்க!” என சொல்லி அவனிடமும் விடைபெற,

 

“கிளம்புவோமா தேவா?” என்றான் அவளிடம்.

 

“நீங்க கோவிலுக்கு வந்து உக்காரவே இல்லையே?” என கேட்க, தலையசைத்து அமர்ந்தான் அவளுடன்.

 

“அஷ்வினி இப்பலாம் முன்னாடி மாதிரி பேசுறதே இல்ல த்தான்!” என செல்பவர்களைப் பார்த்து தேவதர்ஷினி சொல்ல, அவளைக் கண்டான் இவன்.

 

“கயலை விட அஷ்வினி தான் வாயாடி. ஆனா என்னவோ அவகிட்ட இப்ப மிஸ் ஆகுது. முன்னாடி மாதிரி பேசுறதே இல்ல அவ. இப்ப ரெண்டு நாள் அம்மா வீட்டுல இருந்தேனே அப்பவும் அப்படி தான்” என தேவதர்ஷினி தொடர்ந்து பேச, யாருக்காக பார்ப்பது யாருக்காக பேசுவது என தெரியவில்லை கார்த்திகைசெல்வனுக்கு.

 

“நம்ம பேமிலி வாட்சப் குரூப் கூட முன்னாடி ரொம்ப ஆக்ட்டிவா இருக்கும். இப்ப டல்லான மாதிரி இருக்கு. எனக்கு தான் அப்படி தெரியுதா?” என தேவதர்ஷினி கேட்க, எதற்கும் பதிலில்லை அவனிடம்.

 

நிரஞ்சன் எதாவது குழுவில் பேச, அதற்கு அஷ்வினி பதிலுக்கு பேச என குழுவே அடிதடியாய் தான் இருக்கும். அதில் கயல் உடன் கார்த்திகைசெல்வன் கூட அவ்வபோது அரட்டை அடிப்பது உண்டு.

 

இப்பொழுதும் நிரஞ்சன் எதாவது அனுப்புகிறான் தான். அஷ்வினிக்கு தான் பதில் அனுப்ப முடியவில்லை இப்பொழுதெல்லாம்.

 

ஏற்கனவே அஷ்வினி பற்றிய குழப்பம் மனதை அறிக்க, மனைவியின் இந்த பேச்சு இன்னுமே மனதில் முணுமுணுவென்ற வழியைக் கொடுத்தது கார்த்திகைசெல்வனுக்கு.

 

“என்னாச்சு த்தான்?” என அவனின் சிந்தனை படிந்த முகம் கண்டு தேவதர்ஷினி கேட்க,

 

“ஹ்ம்! நத்திங்! போலாம் தேவா!” என்று எழுந்து கொண்டான்.

 

வழியில் புதிதாய் பார்க்க இருக்கும் வீடு பற்றி அவளுடன் பேசிக் கொண்டு பசுபதியின் வீட்டு வாசலுக்கு வந்திருந்தனர்.

 

“ஹாய் அக்கா! ஹாய் அத்தான்!” என கயல்விழி வண்டியின் சத்தத்தில் வந்து பேச்சு கொடுக்க,

 

“அஷ்வினியையும் கூப்பிடு கயல். கொஞ்ச நேரம் எல்லாரும் பேசிட்டு இருக்கலாம். அத்தானும் வந்திருக்காங்களே!” என தேவதர்ஷினி அழைக்க,

 

“அக்கா கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் வெளில போய்ட்டா. அவ பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கனு சொல்லிட்டு போனா!” என சொல்ல, கார்த்திகைசெல்வனுக்கு இதை இப்படியே விட மனதில்லை.

 

அவரவர் வாழ்வை அவரவர் பார்த்து சென்று தான் ஆக வேண்டும் என்ற தெளிவு அவனிடம் இருக்க, அஷ்வினியைப் பற்றிய தன் எண்ணவோட்டத்தை மாற்றிட முயன்றான்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்