அத்தியாயம் 16
அந்த இரவே மாடசாமி, ஐங்கரனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க, அவர் அடித்துப் பிடித்து காட்டுக் கோவிலுக்கு வந்திருந்தார்.
அங்கு தேவா ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டிருக்க, அவனை சூழ்ந்திருந்திருந்தனர் ஊரிலுள்ள பெரிய ஆட்கள்அனைவரும். அவர்களுள் ஐங்கரனும் அடக்கம்!
வசுந்தராவின் மோதிரம் வெளியே வந்த தகவல் ஐங்கரனுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு தேவா தடை செய்யப்பட்ட மாந்திரீக பூஜையில் ஈடுபட்டதும், அதற்கு வானதி உதவியதும் மட்டுமே சொல்லப்பட்டது.
தேவாவிடம் அனைவரும் விசாரிக்க, பயத்திலும் பதற்றத்திலும் இருந்தவனோ, “காசுக்கு ஆசைப்பட்டு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க.” என்று கதறினான்.
“இந்த ஊருக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு. அது உனக்கு தெரிஞ்சுருந்தும், அதை மீறி இருக்கன்னா, அது இந்த ஊரு மேல உனக்கு இருக்க அக்கறையின்மையையும், அதை வழிநடத்துற எங்க மேல இருக்க மரியாதையின்மையையும் தெளிவாவே எங்களுக்கு உணர்த்துது.” என்று ஒருவர் தேவாவை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்தபடி கூற,
“இவனுக்கான தண்டனையை நாளைக்கு ஊர் மக்கள் முன்னாடி அறிவிக்கலாம். அப்போதான், இதே தப்பை இன்னொருத்தர் செய்ய யோசிப்பாங்க.” என்ற மற்றொருவர், மாடசாமியை பார்த்துக் கொண்டே கூறினார்.
அதை எல்லாம் மாடசாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“அப்படியே அந்த பொண்ணுக்கும் நாளைக்கு தண்டனையை சொல்லிடனும்.” என்றபடி கூட்டம் களைய, ஐங்கரன் சற்று தள்ளி நின்றிருந்த மகளிடம் விரைந்தார்.
அதுவரை மூடியிருந்த அம்மனின் கருவறையை வெறித்திருந்த இராவோ, தந்தையை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ள, “இரா, உனக்கு எதுவும் ஆகலையே?” என்று வினவினார் ஐங்கரன்.
‘இதெல்லாம் கூட நீங்க கேட்பீங்களா?’ என்ற ரீதியில் அவரைக் கண்டவள், அதற்கு பதில் சொல்லாமல், மற்றொரு கேள்வியைக் கேட்டு, அவரை திடுக்கிட வைத்தாள்.
“சோ, நீங்கதான் வசுந்தராம்மாவோட இறந்த உடலை தோண்டி எடுத்ததா?” என்று இரா வினவ, அதிர்ச்சியுடன் மகளைக் கண்ட ஐங்கரனோ, “என்ன சொல்ற இரா? நான் எதுக்கு… எனக்கு புரியல!” என்று பதறினார் அவர்.
“வசுந்தராம்மாவோட உடல் கோவிலுக்குள்ள புதைக்கப்பட்டிருக்க விஷயம் கண்டிப்பா நம்ம குடும்பத்துக்கு வழிவழியா சொல்லப்பட்டிருக்கும். அப்படின்னா, அந்த விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும்ல?” என்றாள் அவள்.
“அதுக்காக… நான் அவங்க உடலை தோண்டி எடுப்பேனா? அப்படின்னு நீ நினைக்கிறியா இரா?” என்ற ஐங்கரனின் குரலில் வேதனை எட்டிப் பார்க்க, இராவோ ஒரு பெருமூச்சுடன், “இதுல நான் நினைக்க என்ன இருக்கு?” என்று விட்டேற்றியாகக் கூறியவள், “நீங்க அவங்க உடலை எடுக்கலைன்னா… வேற யாருக்கு எல்லாம் இந்த விஷயம் தெரியும்?” என்று சத்தமாகவே சிந்தித்தாள்.
*****
அதே சமயம், தாரணியின் இல்லத்தில், “அந்த மோதிரம் எங்க தேடியும் கிடைக்கல தாரணி.” என்று விநாயகம் கூற, “இதே பதிலை அவன்கிட்ட சொல்லுவீங்களா நீங்க?” என்று எரிந்து விழுந்தார் அவரின் மனைவி.
“ப்ச், நீ உன் அண்ணன் கிட்டயே கேட்க வேண்டியதுதான?” என்று விநாயகம் சலிப்புடன் கூற, “எதுக்கு? என் அண்ணன் என்மேல சந்தேகப்படவா? ஏற்கனவே, அவன் பொண்ணு விஷயத்துல முட்டிட்டு இருக்கு! நானே ஷ்ரவன் – அவனி கல்யாணத்தை நம்பித்தான் இருக்கேன். இதுல, நாம அந்த உடம்பை தோண்டி எடுத்த விஷயமோ, இல்ல மோதிரத்தை தேடுற விஷயமோ தெரிய வந்தா, சொந்த தங்கச்சின்னு கூட பார்க்காம ஒதுக்கி வச்சிடுவான்.” என்றார் தாரணி.
“எனக்கென்னவோ நாம மாட்டிட்டு இருக்கிறதை உன் அண்ணன் கிட்ட சொல்லிடலாம்னு தோணுது.” என்று விநாயகம் பம்மியபடி கூற, “உங்களுக்கு அறிவுன்னு ஏதாவது இருக்கா? நம்ம பசங்களோட வாழ்க்கையை பணயமா வச்சுருக்கோம். இது அவனுக்கு தெரிஞ்சா என்னவாகும்? சரி, அப்படியே என் அண்ணன் கிட்ட சொன்னா மட்டும், இந்தான்னு தூக்கி குடுத்துடுவானா? ஊருக்காக நம்ம பசங்களை அம்போன்னு விட்டுடுவான். இராவோட நிலைமை ஞாபகம் இருக்குல?” என்று மிரட்டும் குரலில் சொன்னார் தாரணி.
‘அதுவும் ஞாபகம் இருக்கு, அந்த முடிவுக்கு உன் அண்ணனை தள்ளுனது நீதான்னும் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு!’ என்று மனதிற்குள் மட்டும் எண்ணிக் கொண்டார் அந்த நியாயவான்!
விநாயகத்திற்கு இரா மற்றும் அவனி மீது பாசம் அதிகம்தான். தங்கை மகள்கள் ஆகிற்றே!
ஆனால், அந்தப் பாசத்தைக் கூட வெளிப்படையாக அவரால் காட்டத்தான் முடிந்ததில்லை, எப்போதுமே!
காரணம், அவரின் மனைவி தாரணி!
தாரணி ஒரு சுயநலவாதி. அனைவரின் கவனமும் அவரிடமே இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அவருக்கு அவரின் நலனும், மரியாதையும் மிகவும் முக்கியம். அதற்குப் பிறகுதான், குடும்பம், சொந்தம், பாசம் எல்லாம்!
அதை அவரின் குடும்பத்தினர் யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டதே, இந்த நிலைமைக்கு காரணமாகி விட்டது.
இதோ, அவரின் சுயநலத்தால் அண்ணனுக்குக் கூட தெரியாமல், பெரிய தவறை அவர் செய்ய எத்தனிக்க, விதியே அதைத் தடுத்திருந்தது போலும்!
ஆனால், தாரணியிடமிருந்து வாக்கு பெற்றவன் சும்மா விடுவானா என்ன?
*****
நடுநிசி என்பதைக் குறிக்கும் விதமாக எங்கும் இருள் மயமாகி இருந்தது. இருளுக்கு ஏதுவாக பனியும் அந்த ஊரை ஆட்கொண்டு விட, அதை அறிந்திடாத மக்களோ நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.
மற்ற நாட்களைக் காட்டிலும், அன்றைக்குப் பனியும் இருளும் சற்று அதிகமாகவே இருந்தது.
கட்டிலில் படுத்திருந்த இரா, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்து பட்டென்று கண் விழித்தாள்.
என்ன சம்பவம் என்று புரிப்படா விட்டாலும், ஏதோ ஒன்று தவறாக நடக்கப் போவதாக அவளின் உள்மனம் அடித்துக் கூறியது.
நடுஇரவு என்றும் பாராமல், வீதிக்கு வந்து விட்டவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.
சட்டென்று அவளுக்கு அத்வைத்தின் நினைவு எழ, வேகமாக அலைபேசி வழியே அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாள்.
இங்கு அத்வைத்தோ ரக்ஷனுடன் அத்தனை நேரம் பழங்கதைகளை பேசிவிட்டு, அப்போதுதான் நித்திரைக்கு தன்னை அற்பணித்திருந்தான்.
அதே சமயம், அவனின் அலைபேசி அலற, அந்தச் சத்தம் அவனின் செவிகளை அடைவதற்குள் பலமுறை அழைப்புகளை விடுத்திருந்தாள் அவனின் காதலி.
தட்டுத்தடுமாறி ஒருவழியாக அலைபேசியை எடுத்தவன், “ஹ…ல்…லோ…” என்று கரகரப்புடன் பேச, “ஹலோ அத்து, எவ்ளோ நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுமா? அங்க எல்லாம் ஓகே…” என்று மறுமுனையில் இரா பேசி முடிப்பதற்குள், அத்வைத்தின் அலைபேசி சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருந்தது.
“ப்ச், இன்னைக்கும் சார்ஜ் போட மறந்துட்டேனா?” என்று உறக்கத்திலேயே கூறியவன் மீண்டும் கண்களை மூடும் இடைவெளியில் அந்தக் காட்சியைப் பார்த்தான்.
முதலில், தூக்கக் கலக்கத்தில் ஏதோ பார்ப்பதாக எண்ணியவனின் மனம் முரண்ட, விழிகளை மெதுவாகப் பிரித்தான்.
ஆனால், அங்கு அவன் கண்ட காட்சியில் மற்ற உணர்வுகள் எல்லாம் உடனே விழித்துக் கொள்ள, “ரக்ஷன், அங்க என்ன பண்ற?” என்று படபடப்பில் தடுமாறிய குரலுடன் வினவினான்.
அவன் பதற்றத்திற்குக் காரணமான ரக்ஷனோ, பயமோ பதற்றமோ இல்லாமல் சாதாரணமாக அந்த ஜன்னல் திட்டில் நின்றிருந்தான்.
ஜன்னலில் போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள் மொத்தமாக கழட்டப்பட்டு கீழே வைக்கப்பட்டிருந்தன.
அதைக் கவனித்த அத்வைத்தோ, எதுவோ சரியில்லை என்பதை சடுதியில் உணர்ந்தவனாக, ரக்ஷனிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவனை மெல்ல நெருங்கினான்.
“உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல மொபைலுக்கு சார்ஜ் போட மறந்துட்டேன். அது எப்பவும் போல ஸ்விட்ச்-ஆஃப்பாகிடுச்சு. உன் மொபைல் எங்க இருக்கு? உன் கசின்தான் இப்போ கூப்பிட்டா. அவளுக்கு திரும்ப கூப்பிடலன்னா, பெரிய சம்பவமே நடந்துடும்.” என்றபடி ரக்ஷனை நெருங்கி விட்டான் அத்வைத்.
அப்போதுதான் ரக்ஷன் ஏதோ முணுமுணுப்பது அத்வைத்திற்கு கேட்டது.
உற்று கவனித்த போதுதான், அவன் தொடர்ந்து இராவின் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது அத்வைத்தால்.
ரக்ஷனை திசை திருப்ப வேண்டி, “ஆமா இராதான்.” என்று அத்வைத் சொல்லியவுடன், அவன் எதிர்பார்த்தபடியே திரும்பினான் ரக்ஷன்.
அதுவரை மட்டும்தான் அத்வைத் நினைத்ததை போல நிகழ்ந்தது. அதன் பிறகு?
அத்வைத்தை திரும்பிப் பார்த்த ரக்ஷனோ, இதுவரை பேசிடாத குரலில், “இரா…” என்று அழுத்தத்துடன் கூறியபடி, இதழை விரித்து விசித்திரமாக சிரித்தவன், அடுத்த நொடி பின்னோக்கி சரிந்திருந்தான்.
சரியாக அதே சமயம் உள்ளே நுழைந்த இரா கண்டதும் இதைத்தான்.
“ரக்ஷா…” என்று அவள் கத்தியது எதுவும் அத்வைத்தின் செவிகளுக்குள் நுழையவில்லை. அத்தனை திகைப்பில் உறைந்து நின்றிருந்தான் அவன்.
கண்ணிமைக்கும் நொடிக்குள் நடந்ததை மீண்டும் எண்ணிப் பார்த்த அத்வைத் கீழே பார்க்க, அங்கு உணர்விழ்ந்த ரக்ஷனை ஒற்றைக் கரத்தில் பிடித்திருந்தான் அவன்.
அதற்கும் கீழே பார்த்தவனின் கண்களில் பட்டது, விலங்குகள் உள்ளே நுழையக் கூடாது என்று போடப்பட்டிருந்த முள்வேலிதான், அதுவும் சரியாக ரக்ஷன் விழப் போகும் இடத்தில்!
‘விழுந்திருந்தால்?’ என்ற சிந்தனையைக் கூட முழுதாகக் கடக்க விடவில்லை அத்வைத்.
அதற்குள் இராவும் உதவிக்கென்று வர, இருவரும் சேர்ந்து மயங்கிக் கிடந்த ரக்ஷனை அறைக்குள் இழுத்திருந்தனர்.
இரா பதற்றத்துடன் ரக்ஷனை சோதித்துக் கொண்டிருக்க, அத்வைத்தோ நடந்த நிகழ்வின் தாக்கத்தில் உறைந்து போய் கீழே அமர்ந்து விட்டான்.
அவன் நினைவடுக்கில், ரக்ஷன் இராவின் பெயரை உச்சரித்து சிரித்ததும், அடுத்த நொடி கீழே விழப் போனதும் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
தன் நினைவில் மூழ்கி இருந்தவனை உலுக்கிய இராவோ, “அத்து… ரக்ஷன்…” என்று அழுகையுடன் கூற, அவனுக்கு என்னவாகியதோ என்று ரக்ஷனிடம் ஓடினான் அத்வைத்.
மூச்சின்றி இருந்த ரக்ஷனை நோக்கிய அத்வைத் சிறிதும் காலதாமதமின்றி அவனுக்கு முதலுதவிகளை செய்ய ஆரம்பிக்க, இராவும் அவனுக்கு உதவியாக இருந்தாள்.
சில கடின முயற்சிகளுக்குப் பிறகே ரக்ஷனின் மூச்சு சீரானது. எனினும், அவன் மயக்கத்திலிருந்து விழிக்காமல் இருக்க, “இரா, நாம ஹாஸ்பிடல் போறது பெட்டர்.” என்று அத்வைத் கூற, அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் ரக்ஷன்.
மருத்துவர்கள் ரக்ஷனை பரிசோதிக்க, அத்வைத்தும் இராவும் வெளியில் காத்திருந்தனர்.
இருவருமே அதிர்ச்சியின் பிடியிலிருந்து முழுதாக மீளவில்லை என்பதால் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆயினும், இருவரின் கரமும் ஒன்றோடொன்று கோர்த்தபடி இருந்தது.
மேலும் சில நிமிடங்களில் ரக்ஷனை சோதித்த மருத்துவர் வெளியே வர, சட்டென்று எழுந்து கொண்ட இரா அவரை நெருங்க, “நோ வொரீஸ். இப்போ நார்மலா இருக்காரு.” என்று கூறி அவர்களை ஆறுதல் படுத்தினார் அந்த மருத்துவர்.
“டாக்டர், ரக்ஷன் எதனால இப்படி மயங்கி இருக்கான்?” என்று அத்வைத் வினவ, “டீஹைடிரேஷன்தான் காரணம்.” என்றார் மருத்துவர்.
“டாக்டர், இன்னொரு டவுட்… டீஹைடிரேஷனால ஹாலுசினேஷன் ஏற்படுமா?” என்று அத்வைத் வினவ, மருத்துவர் மட்டுமல்ல இராவும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“ம்ம்ம் சான்ஸ் இருக்கு.” என்ற மருத்துவர், அந்த இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றார்.
“அத்து, என்ன இது?” என்று இரா வினவ, “ஹாலுசினேஷன்… ரக்ஷன் சிவியர் டீஹைடிரேஷனால பாதிக்கப்பட்டு அந்த விண்டோ எட்ஜ்ல போய் நின்னுருக்கணும் ஸ்டார்லைட்.” என்றான் அவன்.
அவனை முறைத்த இராவோ, “உங்களை நீங்களே ஏமாத்திக்க டிரை பண்றீங்களா அத்து?” என்று வினவிய இரா அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து விட, பதில் தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ள விரும்பாத அத்வைத்தும் அமைதியாக வந்து அமர்ந்து கொண்டான்.
*****
மறுநாள் காலை…
தேவா விஷயமாகக் கூடும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐங்கரன் கிளம்பிக் கொண்டிருந்தார்.
முதல் நாள் இரவு மகள் கேட்ட கேள்வி இன்னமும் அவரின் மனதைக் குடைந்து கொண்டே இருக்க, அதே சிந்தனையுடன் இரா தங்கியிருந்த வீட்டைக் கண்டார்.
அதுவோ கதவு திறந்தபடி காட்சியளிக்க, திடீரென்று ஏற்பட்ட பதற்றத்துடன் அங்கு சென்று பார்த்தவரின் பயத்தை அதிகரிக்கும் விதமாக இரா அங்கில்லை என்பது தெரிய வர, வேகமாக அவரின் வீட்டிற்கு வந்தவர், முன்தினத்திற்கான சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டார்.
அதற்குள் ரூபிணியும் அங்கு வர, “இரா நடுராத்திரி வெளிய போயிருக்கா. இன்னமும் வீட்டுக்கு வரல.” என்று ஐங்கரன் கூறியதைக் கேட்டு, அவரும் பீதியில் உறைந்தார்.
ஒரு நொடி யோசித்த ஐங்கரன், மறுநொடியே இராவின் அலைபேசிக்கு அழைக்க, அவளோ மருத்துவமனையிலேயே அத்வைத்தின் தோளில் சாய்ந்து உறங்கி இருந்தாள்.
அலைபேசி சத்தத்தில் முதலில் கண்விழித்தது அத்வைத்தே.
விழிகளைத் திறந்ததும் தேவதையைக் கண்டது போல அவனவளை பார்வையை கொஞ்சம் கூட விலக்காமல் ரசித்துத் கொண்டிருந்தவனை இம்சைப்படுத்தியது இராவின் அலைபேசியிலிருந்து வந்த ஒலி.
அவனின் ரசிப்பு பாழான கடுப்பில், நன்றாக விழித்தவன், அப்போதுதான் இருக்கும் இடமும் சூழலும் உணர்ந்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான், மனதிற்குள்தான்!
மூன்றாவது முறையாக அலைபேசி ஒலியெழுப்பிய போதுதான் விழிகளை அசைத்தாள் பாவை.
அதற்குள் அவளின் உறக்கம் முழுமையாக களையாத வண்ணம், அலைபேசியை எடுத்துக் கொண்டு தள்ளி நின்று கொண்டான் அத்வைத்.
அழைப்பவரின் எண் சேமிக்கப்படாமல் இருக்க, புருவச்சுழிப்புடன் அதை ஏற்றிருந்தான் அத்வைத்.
மறுமுனையில் இருந்த ஐங்கரனுக்கோ அத்வைத்தின் குரல் கேட்டு பதற்றம் சற்று தணிந்தாலும், குழப்பம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.
பின்பு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், இராவைப் பற்றி விசாரிக்க, ரக்ஷனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதற்காக மருத்துவமனையில் இருப்பதாகவும் முழு உண்மையைக் கூறாமல், பாதியை மட்டும் கூறினான்.
தங்கை மகனுக்கு என்னவாகிற்று என்று அடுத்த பதற்றம் ஐங்கரனைத் தொற்றிக் கொள்ள, “இப்போ தூங்கிட்டுதான் இருக்கான் அங்கிள். ஹீ ஐஸ் ஃபைன்.” என்று ஆறுதலளித்தான் அத்வைத்.
மீண்டும் அவர் எதற்கோ தயங்க, அத்வைத்தே அதை என்னவென்று விசாரிக்க, “தேவா விஷயத்தைப் பத்தி பேசப் போறாங்க. அதுக்கு இரா இங்க வரணும்.” என்று கூற, “ஓகே அங்கிள், நான் ஸ்டார்லை… இரா கிட்ட சொல்லிடுறேன்.” என்றவன், “வேற எதுவும் சொல்லணுமா?” என்று சாதாரணமாக வினவ, அது மகளைப் பெற்ற தந்தைக்கோ உரிமைப்பேச்சாக தோன்றியது.
ஆயினும், என்ன சொல்வார் அவர்?
“வேறு எதுவுமில்ல.” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
சரியாக அதே சமயம் இராவும் எழுந்து வர, அவளிடம் விவரத்தைப் பகிர்ந்தான் அத்வைத்.
“அட, இதை மறந்துட்டேன். நான் அங்கப் போறேன். நீங்க ரக்ஷனோட இருங்க.” என்ற இராவைத் தடுத்த அத்வைத்தோ, “நானும் உன்னோட வரேன்.” என்றான் தளம்பலான மனநிலையுடன்.
ஏனோ, முன்னிரவு கண்ட காட்சி அவன் மனதை அலைகழித்தது. அவளை தனியே அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியது.
“அத்து, என்னை விட இப்போ ரக்ஷனுக்குத்தான் ப்ரோடெக்ஷன் அவசியம். நீங்க அவனோட இருங்க. மீட்டிங் முடிஞ்சதும் நான் இங்கதான் வருவேன்.” என்றபடி கிளம்பினாள் இரா.
செல்லும் அவளை கையாளாகத்தனத்துடன் பார்த்தான் அத்வைத்.
*****
இரா அந்த கூட்டத்திற்கு சென்றபோது, தேவாவும் வானதியும் நடுவில் நிற்க, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.
இராவைக் கண்டதும் அனைவரும் மௌனமாகினர்.
ஊர் தலைவராக இருந்தவர் இப்போது இராவிடம் பேச ஆரம்பித்தார்.
“இதோ இங்க நிக்கிற தேவா ஊரால தடை செய்யப்பட்ட மாந்திரீக பூஜையை செஞ்சதாகவும், அதை நீயும் மாடசாமியும் பார்த்ததாகவும் புகார் குடுத்துருக்கீங்க. நீங்க சொன்னது உண்மையா?” என்று கேட்க, அதற்கு வசுந்தராவின் மோதிரக் கதையை தவிர்த்து மற்றவற்றைக் கூறினாள் இரா.
அதன்பிறகு, அவர்களின் ஊரின் நியதிப்படி, தேவா மற்றும் வானதியை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும்படி தீர்ப்பு கொடுக்கப்பட்டது.
மேலும், தேவாவை தொடர்பு கொண்டு மந்திர உதவி செய்யக் கோரிய நபரை விசாரித்து, அவருக்கு எச்சரிக்கை தரவும் அங்கிருந்தவர்களால் முடிவு செய்யப்பட்டது.
அப்போது இராவோ, “நீங்க ஊர் சட்டத்தை மீறுனதுக்காக தண்டனையை சொல்லிட்டீங்க. என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் துன்புறுத்த நினைச்சதுக்காக, போலீஸ்ல இவங்க மேல கம்ப்லைண்ட் குடுக்கப் போறேன்.” என்று அறிவிக்க, அங்கிருந்தவர்கள் அதற்கு மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
அங்கிருந்த வானதிக்கோ, இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போலிருக்க, “நீ மட்டும் ஒழுங்கா? இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும், நீ ஒரு சூனியக்காரின்னு! ஆனா, உன்கிட்ட இருக்க பணத்தாலயும், உன் குடும்ப செல்வாக்காலயும் எல்லாரையும் வாயடைக்க வச்சுட்டேல? உனக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? இந்த ஊரும், ஊரோட சட்டமும் ஏழைங்களுக்குத்தானா?” என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.
“ஏம்மா, சும்மா இருக்க மாட்டியா? நீ தப்பு பண்ணிட்டு, அந்தப் பொண்ணை எதுக்கு தேவையில்லாம பேசுற?” என்று ஒரு பெரியவர் கேட்க, “ஓஹ், நாங்க பண்ணது மட்டும்தான் தப்பு… அப்போ இது என்ன?” என்று அவள் அலைபேசியிலிருந்த காணோளியைக் காட்டினாள்.
அது முந்தின இரவு, தேவாவை பூஜையை முடிக்க விடாமல் தடுத்தபோது எடுக்கப்பட்ட காணொளி.
அதில் ஒருபுறம் தேவாவுடன் ரக்ஷனும் அத்வைத்தும் போராடுவது தெரிய, மறுபுறம் இரா மந்திர உச்சாடனம் செய்வதும், அவளிலிருந்தும் அவள் அணிந்திருந்த மோதிரத்திலிருந்தும் வெளிப்படும் ஒளியும் தெளிவாகத் தெரிந்தது.
அதைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஐங்கரனோ, இராவின் கையிலிருந்த மோதிரத்தைக் கண்டும், அந்த காணொளியில் நொடிக்கும் குறைவாக நிழலாக பதிவாகியிருந்த உருவத்தைக் கண்டும் திகைத்து நின்றார்.
அப்போது வானதியின் கண்ஜாடையைக் கண்ட, அவளின் ஆதரவாளர்கள் சிலர், “இவ ஒரு சூனியக்காரி. இவளை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கணும்.” என்று ஆரம்பித்து, “இவளை விடக்கூடாது… கொல்லணும்!” என்று கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.
இராவோ அனைத்தையும் கண்டு வழக்கம் போல விரக்தியாகப் புன்னகைக்க, பொறாமையில் வெந்து தவித்த வானதி அத்துடன் விடாதவளாக, கீழிருந்த கல்லை எடுத்து இராவை நோக்கி வீசினாள்.
அது சரியாக இராவின் நெற்றியில் கோடு போட, அதிலிருந்து குருதி வழிய ஆரம்பித்தது.
அந்த ஒரு செயல் தொடக்கப்புள்ளியாக மாற, ஏற்கனவே இராவைப் பற்றி பரவியிருந்த புரளிகள் இப்போது உண்மை என்ற மாயத்தோற்றத்தை பெற, பயத்திலும் பீதியிலும் வேறு எதையும் யோசிக்காத மற்றவர்களும் இராவை தாக்க ஆரம்பித்தனர்.
அதை எதிர்பார்க்காத இரா தடுமாறி விழ, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தேவாவும் வானதியும் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
அவர்களைப் பிடிக்க சிலர் ஓட, புழுதி பறக்க, மக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த இராவினால் எழக் கூட முடியவில்லை.
அப்போது ஒரு கரம், அவளைத் தூக்கி அந்த களேபரத்திலிருந்து வெளியே கூட்டி வந்தது.
அது அத்வைத்தான் என்பது அவனின் தொடுகையிலேயே தெரிய, எதுவும் சொல்லாமல் அவனுடன் சென்றாள் இரா.
சற்று தள்ளி வந்ததும், “ச்சே மனுஷங்களா இவங்க? இந்த ஊரே வேண்டாம். முதல்ல இங்கயிருந்து கிளம்புவோம்.” என்று அத்வைத் இராவின் குருதியை துடைத்தபடி பொங்க, அவளோ அந்த வலியைக் கூட வெளிப்படுத்தாமல், “உங்களை ரக்ஷனோடதான இருக்க சொன்னேன்?” என்று வினவினாள்.
“ஹலோ மேடம், இங்க வந்ததாலதான், உங்களை காப்பாத்த முடிஞ்சது.” என்று காட்டமாகக் கூறியவன், காயத்தில் தனது மூச்சுக்காற்றை ஊதி, கைக்குட்டையை ஒத்தி எடுத்தபடி, “என்கிட்ட மட்டும்தான் மேஜிக் தெரியும்னு பீலா விட வேண்டியது. அங்க, என்னை அடிச்சுக்கோன்னு அப்படியே நிக்கிற?” என்று படபடத்தான்.
“இப்போ என்ன? ஏற்கனவே, என்னைப் பார்த்து பயப்படுறவங்களை தூக்கிப் போட்டு மிதிக்கவா?” என்றாள் அவளும் எரிச்சலுடன்.
“ஹ்ம்ம் இல்ல, அன்னைக்கு மாதிரி சுத்தி பூ பூக்க வச்சு, சமாதான உடன்படிக்கை வாசிக்க வேண்டியதுதான?” என்று அவன் நக்கலாக வினவ, அன்றைய நினைவில் சிவக்க ஆரம்பித்த முகத்தை கட்டுப்படுத்தியபடி பக்கென்று சிரித்தாள் இரா.
“அடி வாங்கிட்டு வந்து என்ன சிரிப்பு? பெரிய அகிம்சைவாதின்னு நினைப்பு!” என்று அவன் கூற, காயத்தை வருடிக் கொண்டிருந்த அவனின் கரத்தை தட்டி விட்டவள், “நீங்க தேய்ச்சு தேய்ச்சு அந்த இடம் பள்ளமாகாம இருந்தா போதும்!” என்றவள், “ஹாஸ்பிட்டல் போலாம்.” என்றாள்.
உடனே கோபத்தைக் கைவிட்டு, “எங்கயாவது வலிக்குதா ஸ்டார்லைட்?” என்று அவன் பரிவுடன் வினவ, “இந்த வலியெல்லாம் சாதாரணம் அத்து. இதை விட எத்தனையோ வலிகளை கடந்து வந்துட்டேன்.” என்று சோபையாக புன்னகைத்தாள்.
அவளின் கன்னத்தை மென்மையாக வலித்து விடாதவாறு பற்றியவனோ, “இனிமே உனக்கு எந்த வலியும் ஏற்படாம பார்த்துப்பேன். இது பிராமிஸ்.” என்றான்.
“இப்போ எனக்கு கால்தான் வலிக்குது. சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்கு போலாமா?” என்று அவள் வினவ, “வா உன்னைத் தூக்கிட்டுப் போறேன்.” என்று அவள் எத்தனைக் கூறியும் மறுத்து, அவன் முடிவில் உறுதியாக நின்று, அவளை அலேக்காக கரத்தில் தூக்கியபடி வீதியில் நடந்து சென்றான்.
ஊரில் முக்கால்வாசி நபர்கள் கலவரத்தில் சிக்கிக் கொண்டதால், இந்த பொன்னான காட்சியைக் காணும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
“அத்து…” என்று இரா பல்லைக் கடிக்க, அவனோ, “வேற எங்கயும் வலிக்குதா ஸ்டார்லைட்? எனக்கென்னவோ பேசி பேசி உன் லிப்ஸ்தான் வலிக்குதுன்னு தோணுது. அதுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டான்.
அதில் தலையிலடித்துக் கொண்ட இராவோ, “நான் பேசவே இல்ல.” என்று மௌனமாக, அவர்கள் இருவர் மட்டுமே செல்லும் ஊர்வலத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.
பகல் முடிந்து இரவு என்பது போல, அவர்களின் சிறிய இனிய தனிமைப் பொழுது கடந்ததும், அடுத்த வெடிக்குண்டாக, ரக்ஷன் அந்த மருத்துவமனையில் இல்லை என்ற தகவல் அவர்களை வந்தடைந்தது.
தொடரும்…